என் நெருங்கிய நண்பன் ஒருவன் அடிக்கடி என்னிடம்
ஒரு கேள்வி கேட்பான்… ஏன் எந்த தமிழ்படமும் ஒரு நடுத்தர வயதுள்ள அல்லது வயதானவர்களை
நாயகர்களாக முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுவதில்லை என்று. இந்தக் கேள்விக்கு அதற்கான
வணிகசூழல் நம் தமிழ் சினிமாவில் இல்லை என்பதே பெரும்பாலும் என் பதிலாக இருந்திருக்கிறது..
இருப்பினும் அப்படி ஒரு தமிழ்ப்படம் ஏன் வரவில்லை என்ற ஏக்கமும் என் அடிமனதில் அப்படியே
படிந்துவிட்டிருந்தது… அந்த ஏக்கத்தை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த தலைமுறைகளைத் தொடர்ந்து
வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த பண்ணையாரும் பத்மினியும்..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கை விட்டு
மிகுந்த மனநிறைவுடன் வெளிவந்தது இந்த பண்ணையாரையும் பத்மினியையும் பார்த்துத்தான்..
சமீபத்திய தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இயங்கி இருக்கும்
படம்.. மிகச் சிறப்பான ஆரம்பம்.. மிகச் சிறப்பான முடிவு.. மிக அற்புதமான தனித்தன்மை
கொண்ட கதாபாத்திரங்கள்… மிக நேர்த்தியான நடிப்பு… காட்சிகளோடு இணைந்த மிகச் சரியான
பிண்ணனி இசை.. என எல்லாமே செய்நேர்த்தியோடு இருந்த படம் இந்த பண்ணையாரும் பத்மினியும்..
குறும்பட இயக்குநர்களின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் இயக்குநர்களின் படைப்புகளில்
பீட்ஷாவிற்கு அடுத்து என்னை சலனப்படுத்திய படம் இந்த பண்ணையாரும் பத்மினியும்..
படத்தின் தலைப்பிலேயே பண்ணையார் மற்றும்
பத்மினி இருப்பதால் கதையின் நாயகன் நாயகி யார் என்பதை சொல்லத் தேவையில்லை.. நடுத்தர
வயதுள்ள பண்ணையாரான ஜெயப்பிரகாஷ் தான் கதையின் நாயகன்.. அவருக்கு நெருக்கமான ஒரு நண்பரின்
வாயிலாக ஜெயப்பிரகாஷ்க்கு அறிமுகமாகிறது அந்த பத்மினி கார்.. பார்த்தமாத்திரத்திலேயே
பண்ணையார் பத்மினியின் மீது மையம் கொள்ள அதிலிருந்து அவர் பேசும் எல்லா சம்பாஷனைகளும்
பத்மினியையே சுற்றி சுற்றி வருகிறது, அந்தக் காருக்கு சொந்தக்காரரான ஜெயப்பிரகாஷின்
நண்பரே ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், “ஏம்ப்பா… காரத்தவிர பேச வேற விசயமே இல்லையாப்பா…”
என்று கேக்கும் அளவுக்கு போய்விடுகிறது நிலை.. இருப்பினும் தன் நண்பனுக்கு காரின் மீது
ஒரு கண் இருப்பதை தெரிந்து கொண்டு, தன் மகளைக் காண வெளியூர் செல்லும் அவர், தன் காரை
பண்ணையார் ஜெயப்பிரகாஷிடம் கொடுத்து தான் வரும் வரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு
செல்ல… பண்ணையாருக்கு சந்தோசம் தாளவில்லை.. கார் தன்னோடு இருக்கும் போது கார் மீதான
காதல் பண்ணையாருக்கு அதிகமாக, அதைக் கண்டு பண்ணையாரின் மனைவி துளசி “அது நம் பொருள்
இல்லை.. அதன் மீது அதிகமாக ஆசை வைக்காதே…” என்று தன் கணவனை எச்சரிக்க.. அதை பண்ணையார்
கண்டுகொள்ளாமல் விடுகிறார்.. ஒரு கட்டத்தில் காரை இழக்க வேண்டிய சூழல் நெருங்குகிறது….
செய்வதறியாமல் பண்ணையார் திகைக்க… தன் கணவனின் நிலைகண்டு மனைவியும் கலங்கிறார்… பண்ணையார்
காரை இழந்தாரா…? இல்லையா என்பது க்ளைமாக்ஸ்… இது மிகச் சுருக்கமான கதை.. இதைவிட விரிவான
அழகான காட்சிகளுடன் கூடிய கதை திரையில் காத்திருக்கிறது.. கண்டிப்பாக கண்டு களியுங்கள்..
ஜெயப்பிரகாஷ். ஊர் பண்ணையார் என்பதால் வழக்கம்
போல் ஊருக்கே இவர்தான் கடவுள்… இவர் முதன்முதலாக தன் வீட்டில் வாங்கி வைக்கும் எல்லா
உபகரணங்களும் அந்த ஊருக்கே பயன்படும்.. உதாரணம் டெலிபோன் மற்றும் டிவி.. ஊரே கூடி அவர்
வீட்டில் தான் டிவி பார்க்கும்.. அதுபோல அர்த்தசாமத்தில் இழவு செய்திக்காக காத்திருக்கும்
ஒரு கூட்டம் பண்ணையார் வீட்டில் போனுக்கு அடியில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும்,
பண்ணையார் வந்ததும் அனைவரும் ஒப்பாரியை நிப்பாட்டுவதும், அவர் அனுமதி அளித்ததும் அழத்
தொடங்குவதும் மிகுந்த நகாஸான காட்சி.. அவர்கள் அழுது கொண்டு இருக்கும் போது பண்ணையார்
சேரின் பின்னால் தன் தலையை சாய்த்து அமர்ந்து கொள்ள உள்ளே வரும் பீடை.. பண்ணையார் தான்
இறந்துவிட்டாரோ என்று எண்ணி கத்தி அழத் தொடங்கி அவர் கண் விழித்துப் பார்த்ததும்… தன்னை
சமாளித்துக் கொண்டு “யார் செத்தது..?” என்று கேட்டுக் கொண்டே அழும் இடமும் சிம்ப்ளி
சூப்பர்…
பண்ணையாராக ஜெயப்பிரகாஷ்.. இவருடைய கேரியரில்
கடைசி வரை நினைவில் நிற்பது போல ஒரு படம்.. மிக அற்புதமாக நடித்திருக்கிறார்…. கார்
தனக்குக் கிடைத்துவிட்ட குஷியில் ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து வருவதும்,
தன் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிச் சென்று முன்னால் நிற்பதும், காரை ஓட்டிக்
காட்டுகிறேன் என்று தன் மனைவியிடம் சவால் விடுவதும், தன் மனைவி மீது கொண்ட காதலில்
குழைவதும், தன்னை தவறாக புரிந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், “கோயிலுக்குப் போற அந்த
நாளத் தவிர வேற நாள்… நான் காரையே தொடலடா… போதுமா…” என சேதுபதியை சமாதானம் செய்வதும்,
மகளை திட்டும் தன் மனைவியை அதட்டி “உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டுப் போமா.. இது உன்
வீடு..” என்று பாசம் காட்டுவதும், மகள் வீட்டிலிருந்து வந்து “உனக்காகவாது ஒரு தடவை
நா கார கேட்டுப் பாத்துருக்கலாம்ல…” என்று மனைவியிடம் மருகுவதுமாக மிக அற்புதமான நடிப்பு..
படத்தின் இரண்டாவது ஹீரோ அந்த பச்சை நிற
பத்மினி காரே தான்… அது முதன் முதலில் பண்ணையார் கண்ணில் படும் போது அதற்கு கொடுக்கப்படும்
அறிமுக இசையும் கேமரா கோணமும், அதே போல ஃப்ரீ க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கப்படும்
இசையும் மிக அலாதியானது… பண்ணையாரின் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த
பச்சை நிற காரின் மீது மஞ்சள் நிறப் பூக்கள் சொறிந்து கொண்டே இருக்கும் காட்சிகள் சற்றே
செயற்கையாக தெரிந்தாலும் கண்டிப்பாக அருமையான காட்சிகள் தான்..
பத்மினியை பண்ணையாருக்கு ஓட்டத் தெரியாததால்,
அதன் டிரைவராக வருபவர் விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதியை கண்டிப்பாக பாராட்டியே தீர
வேண்டும்.. இது போன்ற படங்களில் இவரை தவிர்த்து வேறு யாரும் நடிக்க முன்வர மாட்டார்கள்..
அதற்காகவே அவருக்கு ஸ்பெசல் பாராட்டு.. ரம்மியில் விட்ட இடத்தை இதில் தன் பிரத்யேகமான
நடிப்பால் மீட்டெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.. அடுத்த கியர் எப்படி போடுவது என்று
கேட்கும் பண்ணையாரிடம்… “எதுக்கு…? கோயிலுக்குத் தான செகண்ட் கியரிலயே போய்ட்டு செகண்ட்லயே
வாங்க… இப்பவே என் காருன்னு பேசுறீங்க… அப்புடியே என்ன பொட்டிய கட்டி அனுப்பலாம்னு
பாக்குறீங்களா…? என்று வெடிக்கும் போதும், தன் காதலை பட்டென்று போட்டு உடைக்கும் போதும்,
பண்ணையாரின் மனைவி துளசி, “கார் இல்லைங்கிறதால் இங்க வராம இருக்கக்கூடாது எப்பவும்
போல வரணும்… நாம சீக்கிரமே புதுக்கார் வாங்குவோ…” என தேற்றும் போது பதிலுக்கு அவரை
எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் கண் கலங்கும் போதும், காரை காப்பாற்றும் எண்ணத்தில்
காரை வைக்கோலுக்குள் நிறுத்தி வைப்பதுமாக எக்ஸலண்ட் ஆக்டிங்க்…. சூப்பர்ஜி… சூப்பர்ஜி..
சூப்பர்ஜி..
அடுத்ததாக பண்ணையாரின் மனைவியாக நடித்திருக்கும்
துளசியின் நடிப்பு.. தன் கணவன் மீதுள்ள அன்பை அவர் வெளிக்காட்டும் இடங்கள் அத்தனை அழகு..
”தன் கணவனுக்கு கார் ஓட்ட வரவில்லை என்றாலும் பரவாயில்லை.., நீ அருகிலிருந்து காரை
ஓட்ட… நான் அவர் ஓட்டுனதாகவே நம்புவது போல நடிக்கிறேன்… என்று விஜய் சேதுபதியுடன் திட்டம்
தீட்டுவதும், கார் மீது கொண்ட மோகத்தால் பொய் சொல்லத் துணியும் தன் கணவனை தடுத்து நல்வழிப்படுத்துவதும்,
தன் கணவனுக்குப் பிரியமான காரை ஏது தன் மகள் வழக்கம் போல புக்ககம் கொண்டு போய் விடுவாளோ
என்ற பதட்டத்தில் அவளை திட்டித் தீர்ப்பதும், தன் வீட்டு வேலைக்காரர்களின் மீது அன்பை
பொழிவதுமாக அற்புதமான நடிப்பு…
இது தவிர்த்து பீடையாக வரும் அந்த இளைஞரின்
நடிப்பு, வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஏதோ ஒன்றை எடுத்துச் செல்லும் மகளாக வரும் நீலிமா
ராணி, விஜய் சேதுபதியின் காதலியாக வரும் ஜஸ்வர்யா என எல்லோருமே சொல்லிக் கொள்ளும் படி
நடித்திருக்கிறார்கள்… பிணத்தை காரின் மீது வைத்து எடுத்துச் செல்லும் காட்சியும் மறக்கமுடியாத
ஒன்று… இது தவிர்த்து படத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமாக நான் கருதுவது, காரின்
முன் சீட்டில் உட்கார ஐந்து ரூபாய் காசு சேர்க்கும் அந்த சிறுவனின் கதாபாத்திரத்தை…
அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உள்ளார் இயக்குநர்.. அவனுடைய பார்வையில்
இருந்து கதை தொடங்குவதும், அவனுடைய பார்வையிலேயே கதை முடிவதும் படத்திற்கு வேறொரு வண்ணத்தைக்
கொடுக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை..
எனக்கும் இது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தியது..
1992ல் இருந்து 1996 கால கட்டத்துக்குள் இருக்கும்.. நான் சிறுவனாக இருந்த போது எனக்கு
திண்பண்டத்துக்காக கொடுக்கப்படும் காசு வெறும் ஜம்பது பைசா.. அப்பொழுதுதான் ஃப்ரூட்டி
அட்டை வடிவ மாம்பழ ஜீஸ் அறிமுகமாகி இருந்த காலகட்டம்.. அதை வாங்கி சுவைக்க வேண்டும்
என்பது என் தீராத ஆசை.. ஆனால் அப்போது அதன் விலையோ 5லிருந்து 8 ரூபாய்க்குள் என்று
நினைக்கிறேன்… இரண்டு மூன்று நாட்கள் எப்படியோ மனதை கட்டுப்படுத்தி ஒரு ரூபாய் வரை
சேர்த்து விடுவேன்… ஆனால் நண்பர்கள் திண்பண்டம் சுவைப்பதைப் பார்த்து அடக்க முடியாமல்
அடுத்த நாளே அந்தக் காசை செலவழித்துவிடுவேன்… இப்படி சேர்த்து வைப்பதும் செலவழிப்பதுமாக..
நீண்ட நாள் எனக்கு அந்த ஆசை நிறைவேறவே இல்லை.. பின்பு கால ஓட்டங்களில் வாழ்க்கையில்
கடந்த வந்த கரடுமுரடான பாதையினால், அப்படி ஒரு ஆசை இருந்ததே எனக்கு அடியோடு மறந்துவிட்டது…
பின்பு பெங்களூருவில் பணியில் இருந்த சமயத்தில் ஒரு நாள் ஃப்ரூட்டியின் விளம்பரத்தைக்
கவனிக்க நேர்ந்த போது, என் பால்யகால ஆசை நினைவுக்கு வந்தது… அன்று இரவு நான் ஃப்ரூட்டியை
சுவைக்கும் போது எனக்கு ஏதோ விவரிக்க இயலாத ஒரு பரவசம் கிடைத்தது உண்மை.. இதைப் போன்ற
ஒரு சிறுவனின் நிறைவேறாத கனவும் இந்தத் திரைப்படத்தில் இருக்கிறது… மேலும் எனக்கும்
என் சைக்கிளுக்குமான பந்தத்தின் நாஸ்டால்ஜியாவையும் இத்திரைப்படம் தீண்டிவிட்டது… உங்களுக்கும்
உங்களது இரு சக்கர வாகனத்தின் உடனோ அல்லது நான்கு சக்கர வாகனத்துடனோ பந்தம் இருக்குமானால்
உங்களுக்கும் இப்படம் பிடிக்கும்.. காதலன் காதலிக்கு இடையிலான காதலையே பார்த்த நமக்கு,
காருக்கும் கனவானுக்குமான இந்த காதல் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
இது தவிர்த்து இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு
கதாபாத்திரமுமே மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது… உதாரணமாக
காரின் முன் சீட்டில் அமர காசு சேகரிக்கும் சிறுவன், வரும் போதெல்லாம் தன் வீட்டில்
இருந்து ஏதேனும் பொருளை புக்ககம் கொண்டு செல்லும் மகள், தான் ஓட்டுகின்ற வாகனத்தை எதிராளி
ஓட்டும் வாகனத்தை விட வேகமாக முந்திக் கொண்டு செல்வதை சாகசமாக கருதும் டிரைவர், அவன்
பேசும் போதெல்லாம் ஏதாவது அபசகுணமாக நடந்துவிட.. அதனாலயே பீடை என்னும் பெயரை சுமந்து
கொண்டு ஊரில் வளைய வரும் அந்த வேலைக்கார இளைஞன், எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்துக்
கொண்டிருக்கும் பண்ணையாரின் மாப்பிள்ளை, காரை ரிப்பேர் செய்ய வரும் மெக்கானிக் என அனைவரின்
கதாபாத்திரமும் ஒரு சிறுகதையைப் போல் காட்சியளிப்பதும் சிறப்பு..
ஜஸ்டின் பிரபாகரன் வரவு நம்பிக்கை அளிக்கிறது..
இசையைவிட பிண்ணனி இசை பிரமிக்க வைத்தது… அதிலும் மேற்சொன்னபடி குறிப்பிட்ட சில காட்சிகளில்
பிண்ணனி இசை மிக பிரமாதமாக இருந்தது.. அது போலத்தான் கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும்
கண்ணுக்கு உறுத்தலாக, கதையை விட்டு துறுத்திக் கொண்டு இல்லாமல் கதையொடு இயைந்ததாக மிகையில்லாமல்
தெரிந்த சப்ஜெக்டிவ் வகை ஒளிப்பதிவு.. இயக்குநர் அருண்குமார்… தனது குறும்படத்தையே
முழுநீளத் திரைப்படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்… வாழ்த்துக்கள்..
இப்படி பாராட்டுவதற்கு அநேக விசயங்கள் இருந்தாலும்
தலைமுறைகளின் மீது வைக்கப்பட்ட அதே குற்றச்சாட்டு இந்த பண்ணையாரும் பத்மினியும் மீதும்
வைக்கப்படுகிறது.. அது என்னவென்றால் படம் மிகவும் மெதுவாக செல்கிறது என்பதே.. எனக்கு
இதை புரிந்துகொள்வது மிக கடினமானதாக இருக்கிறது… மிக மெதுவாக நகரும் எந்த பொருளின்
மீதும், எந்த உயிரின் மீதும் இனி மக்களுக்கு நாட்டமே இருக்காதோ என்று தோன்றுகிறது..
நம் வழித்தோன்றிகள் ”எனக்கு நத்தையை பிடிக்காது… ஏனென்றால் அது உலகம் போகின்ற வேகம்
புரியாமல் மிக மெதுவாக நடந்து வருகிறது..” என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்களோ
என்று ஐயமாக இருக்கிறது.. சமைப்பது மிக மெதுவாக
நடக்கிறது என்று குற்றம் சாட்டி, பாஸ்ட் புட்டுக்கு மாறிவிட்டோம்… அதை அமர்ந்து சாப்பிட
நேரமில்லாமல் நின்று கொண்டே புசிக்கத் தொடங்கிவிட்டோம்… உண்ட உணவு மெதுவாக ஜீரணிக்கிறது
என்று கையில் கோக் மற்றும் 7-அப் ஏந்திக் கொண்டோம்… இப்படி மெதுவாக நடக்கின்ற எந்த
நிகழ்வையுமே ஜீரணிக்க முடியாதவர்களாக மாறி வரும் நாம் நொடி முட்களையும் குற்றம் சாட்டுவோமோ…?
”நீ மெதுவாக ஓடுகின்றாய் என்று…” வீட்டில் எப்போதாவது கடிகாரம் கூட நின்றுவிடுகிறது..
ஆனால் என் மக்கள் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.. எதை நோக்கி…? என்று தான்
தெரியவில்லை… நீங்களும் எப்போதாவது கடிகாரம் போல் பேட்டரி தீர்ந்து போய் நின்றுவிட்டால்
அப்போதாவது பண்ணையாரை பாருங்கள்…. மெதுவாக ஓடுவது உங்களுக்கும் பிடிக்கலாம்….!!!!
No comments:
Post a Comment