Tuesday, 4 March 2014

வல்லினம்:

வல்லினத்தைப் பார்க்கும் போது, ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியோ அல்லது ஒரு மோசமான திரைப்படம் பார்த்த எரிச்சலோ இரண்டுமே கிடைப்பதில்லை கூடைப்பந்து விளையாட்டை பிண்ணனியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம். கிரிக்கெட் மட்டுமே பரவலாக கொண்டாடப்படும் விளையாட்டாக இருக்க… அதன் புகழில் சிக்கி மங்கிப் போய் கொண்டிருக்கும் பிற விளையாட்டுகள் மீதுள்ள கவன ஈர்ப்பை வலியுறுத்தும் நியாயமான கோரிக்கையை கோரி நிற்பதால் மட்டுமே கவனம் பெறுகிறது வல்லினம். மற்றபடி கதையிலோ திரைக்கதையிலோ அல்லது காட்சியமைப்பிலோ எந்தவிதமான புதுமையின் கலப்பும் இல்லாமல், மிகச் சாதாரணமான காட்சிகளால் கோர்க்கப்பட்டு வறண்டு போய் காட்சியளிக்கிறது வல்லினம்..


விளையாட்டு தொடர்பான வெகுசில படங்களே வந்திருந்தாலும், அந்த வெகுசில படங்களிலும் மறக்கமுடியாத குறிப்பிடத் தகுந்த சில படங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம்.. உதாரணமாக லகான், சக்தே, சென்னை 28, வெண்ணிலா கபடிக் குழு போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.. ஆனால் மேற்சொன்ன திரைப்படங்கள் எல்லாவற்றிலும் மையம் ஒன்று மட்டும் தான் இருக்கும்.. அதிகபட்சமாக காதலையும் சேர்த்து இரண்டு இருக்கும்.. ஊருக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய கிரிக்கெட் போட்டியில் ஜெயிக்க வேண்டும், தான் விளையாட்டு வீரனாக இருந்த போது தன் மீது ஏற்பட்ட களங்கத்தை, ஒரு பயிற்சியாளராக மாறி வெற்றியை தேடித் தருவதன் மூலம் துடைக்க முயலும் ஹாக்கி வீரன், ஊர் மெச்சுவது போல் ஒரு முறையாவது கபடி போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று போராடும் கபடி வீரர்கள் இப்படி வெற்றி பெற்ற அந்த திரைப்படங்கள் எல்லாமே ஒரே ஒரு மையத்தை மட்டும் வைத்துக் கொண்டு அந்த மையத்தை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்த திரைப்படங்கள். ஆனால் வல்லினம் தடுமாறுவது இந்த மையத்தில் தான்…


படத்தின் மையம் எது என்பதிலேயே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. கிரிக்கெட் மீது கொண்ட மோகத்தால் கண்டு கொள்ளாமல் விடப்படும் பிற விளையாட்டுகள் மீது மக்களின் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பதா…? நண்பனின் எதிர்பாராத மரணத்தால் கூடைப்பந்தாட்டத்தை விட்டு விலகும் நாயகன் மீண்டும் கூடைப்பந்தாட்டத்தை தேர்ந்தெடுத்தானா இல்லையா.. என்பதா..? கல்லூரியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் கிரிக்கெட் அணிக்கு இணையாக நாயகனின் கூடைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்றதா..? என்பதா…? அல்லது நாயகன் இறந்து போன தன் நண்பனின் கனவை நிறைவேற்றினானா…? என்பதா… அல்லது வழக்கமான சமூக அந்தஸ்தில் இடைவெளியுள்ள ஒரு காதல் கைகூடியதா…? என்பதா  அல்லது சசிக்குமார் பாணியில் நட்புதான் மையமா..? எனக் குழம்பிக் கொள்ளும் அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட மையங்கள்.. அதிலும் மற்றொரு சோகம் இவை எல்லாமே முக்கிய கதாபாத்திரமான நகுலையே சுற்றி வருகின்றன.. இது படத்திற்கு மிகப்பெரிய குறை…


கதையும் இல்லாத, மையமும் இல்லாத வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் கூட மக்களின் ஏகோபித்த கருணையால் வெற்றி பெற்றுவிடும்.. ஆனால் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையோ மையங்களையோ கொண்டிருக்கும் படம் வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம்.. படம் ஆரம்பித்த ஒரு அரைமணி நேரத்திலாவது படத்தின் மையம் எதைப்பற்றியது என்பதை பார்வையாளனுக்கு தெளிவாக விளக்கிவிட வேண்டும்.. படத்தின் ஆரம்பகாட்சியே பேஸ்கட் பால் விளையாடுவது தானே…? அதிலேயே நிருபணம் ஆகிவிடுகிறதே.. படத்தின் மையம் கூடைப்பந்தாட்ட விளையாட்டுதான் என்று.. என நீங்கள் கேட்கலாம்.. அப்படி அல்ல.. ஆரம்ப காட்சியில் முக்கிய கதாபாத்திரமான நகுலுக்கு எந்த லட்சியமோ தேவையோ இருப்பதில்லை… விளையாடுகின்ற போட்டியில் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே அவனது எண்ணம்.. ஆனால் அவனது நண்பனுக்கு ஒருகனவு இருக்கிறது… அந்த கனவோடே அவன் மரித்தும் போகிறான்… இந்த இடத்தில் நம்மால் அறுதியிட்டு சொல்லமுடியாது படத்தின் மையம் கூடைப்பந்தாட்ட விளையாட்டுதான் என்று.. அடுத்து முக்கிய கதாபாத்திரம் கூடைப்பந்து விளையாட்டை விட்டு விலக முற்படுகிறது.. புதிய கல்லூரிக்கு செல்கிறது… புதிய நட்பை தேடிக் கொள்கிறது… அந்த புதிய நண்பனும் ஒரு கூடைப்பந்தாட்ட வீரன்.. அந்த நண்பனுக்கும் கிரிக்கெட் அணியினருக்கும் ஒரு பிரச்சனை… முக்கிய கதாபாத்திரமான நகுல் மீண்டும் பந்தை கையில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது… இந்த இடத்தில் இருந்துதான் படத்தின் மையம் மாறாமல் நிலை கொள்ளத் தொடங்கிறது… இதுதான் இப்படத்தின் பிரச்சனை.. அவர்கள் இதுதான் மையம் என்பதை முன்னமே ஆடியன்ஸ்க்கு உணர்த்தி இருக்க வேண்டும்… ஒரு உதாரணத்துக்கு படத்தின் ஆரம்பமே கல்லூரியில் கூடைப் பந்தாட்ட அணிக்கும் கிரிக்கெட் அணிக்குமான பிரச்சனை.. கூடைப்பந்தாட்ட அணி கல்லூரி நிர்வாகத்தாலும் உதாசீனப்படுத்தப்படுகிறது.. அவர்களுக்கு ஒரு நல்ல கூடைப்பந்தாட்ட வீரன் தேவை.. ஆனால் நகுல் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை… அது நண்பர்களுக்கு ஒரு கட்டத்தில் தெரியவர, அவர்கள் அவனை சம்மதிக்க வைத்து கூடைப்பந்தை கையில் எடுக்க வைக்கின்றனர்… என்று மையத்தை முதலிலேயே தெரிவித்து கதையை தொடங்கி இருக்கலாம்… இதனால் என்ன மிகப்பெரிய வித்தியாசம் என்று கேட்டால் ”பார்வையாளர்களின் மனதில் பத்தில் ஒரு படமாக மிக அலட்சியமாக அமர்ந்திருக்கும் வல்லினம்… இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அமர்ந்திருக்கும் என்பதே…” அந்த வித்தியாசம்…


லகானின் மையம் கிரிக்கெட் அல்ல… முதல் காட்சியில் கிராமமே திரண்டு மழை இல்லாததால் வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிடும் காட்சி வரும்.. அதுதான் படத்தின் மையம்… சக்தேவில் மையம் கேப்டனாக இருக்கும் ஷாருகானுக்கு போட்டியில் ஏற்பட்ட தோல்வியும் அதனால் ஏற்பட்ட களங்கமும் தான்… ஹாக்கி விளையாட்டு மையம் அல்ல… அது அந்த மையத்தை நெருங்குவதற்கான பிண்ணனி மட்டுமே… இதுமட்டுமே வல்லினம் திரைப்படத்தின் குறையல்ல… இரவு நேரத்தில் குல்பி ஐஸ் சாப்பிடும் கதாநாயகி, நட்புக்கு நாயகன் தரும் முக்கியத்துவத்தை கண்டு அவன் மீது காதலில் விழுவது, அவர்கள் காதலை எதிர்க்கும் பணக்கார அப்பா, காலம் காலமாக கண்டு வரும் நட்பின் மகத்துவத்தை விளக்கும் மிகச் சாதாரணமான வசனங்கள், நகுலின் அணியினர் விளையாட்டில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வில்லனாக சித்தரிக்கப்படும் அந்தக் கதாபாத்திரம் கையாளும் அற்பமான சூழ்ச்சிகள்… அதை முறியடிக்க இவர்கள் மேற்கொள்ளும் அதைவிட அற்பமான நடவடிக்கைகள் இப்படி வேறு எந்தவிடயத்திலும் கூட மனம் ஒன்றுவதே இல்லை…

மிகவும் பிரமாதப்படுத்திய ஈரத்தின் ஒளிப்பதிவை ஒப்பிடும் போது இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவும் சாதாரணமாகவே தெரிகிறது… இசையை விட பிண்ணனி இசையில் ஓரிரு இடங்களில் தமன் ஓகே.. நாயகனாக நகுலிடம் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது… ஆனால் அவர் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதை க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் இடம் உணர்த்திவிடுகிறது.. கதையை தேர்ந்தெடுப்பதில் இயக்குநர் அறிவழகனுக்கு முதிர்ச்சியும், சமூக அக்கறையும் இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அந்த கதையின் சாரத்தை பார்வையாளனுக்கு கடத்துவதில் தான் அவர் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற தவறுகிறார்.. ஈரம் திரைப்படத்திலும் கதையின் மையம் சார்ந்த பிரச்சனை இருப்பதை காணமுடியும்.. இருப்பினும் இன்னும் இயக்குநர் அறிவழகனின் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை… எல்லா தரப்பிலும் வெற்றியை ஈட்டும் அளவிற்கு ஒரு அற்புதமான படத்தை எதிர்காலத்தில் கொடுப்பார் என்று நம்பலாம்…

ஆக வல்லினம் மேற்சொன்னதைப் போல் அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சில அங்கங்களை தனக்குள் கொண்டிருந்தாலும், சமூகத்தை கெடுப்பதற்கான காரணிகளை கொண்டில்லாமல் இருப்பதாலும், பிற விளையாட்டுகள் மீது நமக்கு ஏற்பட வேண்டிய, ஒரு விழிப்புணர்ச்சியை நினைவுகூறுவதாலும், ஒரு முறையாவது பார்ப்பதற்கான தகுதியை பெற்றுவிடுகிறது….

1 comment: