”வீட்டைக்
கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார்…” என்பதை எல்லோருமே கேள்விப்பட்டு இருப்போம்..
இரண்டுமே சாமானிய காரியம் அல்ல… இரண்டிலுமே நாம் எதிர்பார்க்காத எத்தனையோ பிரச்சனைகள்
திடீர் திடீரென தலைதூக்கும்… அதிலும் கல்யாணம் என்றால் கூடுதல் சிக்கல்தான்.. இரண்டு
வீட்டையும் சமாளிக்க வேண்டுமே.. இப்படி ஒரு திருமணம் நிச்சயம் ஆகி அது எத்தனைப் பிரச்சனைகளை
கடந்து வருகிறது என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்… காலங்காலமாக கல்யாணத்தில்
என்னென்ன பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றது… பத்திரிக்கை அடிப்பதில் பிரச்சனை, மண்டபம்
பிடிப்பதில் பிரச்சனை, சீர் செய்வதில் பிரச்சனை, இரண்டு வீட்டு உறவினர்களின் புறணிகளால்
எழும்பும் பிரச்சனை, இது தவிர்த்து பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும்,
அதுபோல பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஈகோ பிரச்சனை… இந்தப் பிரச்சனைகளைத் தானே நாம்
காலங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. இந்தப் பிரச்சனைகளை மட்டும் பேசாமல், காலத்துக்கு
ஏற்றார் போல், நாம் சற்றும் எதிர்பார்க்காத… ஆனால் இன்றைய தலைமுறையில் வேர்விட்டிருக்கும்
மற்றொரு முக்கியமான பிரச்சனையையும் கலந்துகட்டி விருந்து படைத்திருக்கிறார்கள் இந்த
”கல்யாண சமையல் சாதம்” படக் குழுவினர்…
என்னளவில்
இந்த திரைப்படம், வணிக வசூலை குவிக்கக்கூடிய காமெடி திரைப்படங்களை விட உயர்ந்ததாகத்தான்
படுகிறது. சுவாரஸ்யமில்லாத திரைக்கதை ஆங்காங்கே சற்று சலிப்பூட்டினாலும், ஒரு முக்கியமான
சமூகப் பிரச்சனையை எளிய முறையில் ரசிக்கும் படி கையாண்டிருந்ததும், தலைமுறை இடைவெளியில்
மாறி வரும் கலாச்சார மாற்றங்களை சற்றே தொட்டுச் சென்றிருப்பதும்… இன்றளவும் பேசுவதற்கு
தயங்குகின்ற சில விசயங்களில் ஒன்றை மையமான பேசுபொருளாகக் கொண்டு படத்தை எடுத்த தைரியத்திர்க்காகவும்
தனிப்பட்ட முறையில் இந்தத் திரைப்படம் எனக்கு பிடித்திருக்கிறது..
உங்களுக்கு
இந்த திரைப்படம் பிடிக்கலாம்.. பிடிக்காமலும் போகலாம்…. உங்களுக்கு திரைப்படம் பிடித்திருந்தால்,
நீங்கள் உங்கள் காதலனோடோ, காதலியோடோ, கணவனோடோ அல்லது மனைவியோடோ அல்லது உங்கள் நண்பர்களோடு
பார்த்திருப்பீர்கள்.. உங்களுக்குப் படம் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு
படம் பார்க்கச் சென்று இருப்பீர்கள்.. அதில் பிரச்சனை என்னவென்றால், உங்கள் குழந்தைகளுக்கு
பெரும்பாலும் கதையில் வரும் மையப் பிரச்சனை என்னவென்று புரியாது… ஆனால் வக்கிரமான,
ஆபாசமான எந்தவொரு காட்சியும் படத்தில் கிடையாது… அதுமாதிரியான காட்சிகளுடன் வரும் பல
திரைப்படங்களை பார்ப்பதில் கூட உங்களுக்குப் பிரச்சனை இருந்திருக்காது.. ஏனென்றால்
அவற்றை உங்களது குழந்தைகள் உங்கள் உதவி இன்றி ஓரளவுக்காவது புரிந்து கொள்வார்கள்..
ஆனால் இந்தப் படத்தில் அது உடற்கூரியல் தொடர்பான ஒரு வசனமாக நம்மை கடப்பதால், அதுயென்னவென்று
புரியாத குழந்தைகள் உங்களை கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு உண்டு.. அதற்கான பதிலை சொல்வதற்கானப்
புரிதல் உங்களுக்கு இருந்தால் பிரச்சனை இல்லை… இல்லையென்றால் பிரச்சனைதான்… படம்
U/A சான்றிதழ் உடையது..
லேகாவிற்கு
இது தமிழில் உண்மையாகவே ஒரு நல்ல மீள்வரவு தான்.. ஒரு பெண்ணியப் பார்வையில் தான் பிறந்ததில்
இருந்து தன் கல்யாணம் வரை நடந்த நிகழ்வுகளின் ஒரு ஃபாஸ்ட் ரிவைண்ட் போன்ற திரைக்கதை
நடையில் தான் படம் பயணிக்கிறது.. பெற்றோரிடம் குலைவதும், கல்யாணத்திற்கு சம்மதிக்கவா
வேண்டாமா என்ற குழப்பத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு நாயை விட்டு எடுக்கச் சொல்வதும்,
“அம்மா அப்பா இல்லாட்டி எதனாலும் தொடலாம்னு.. நினப்பா… அடி வாங்குவ..” என்று சிறுவர்களை
அதட்டுவது போல் பிரசன்னாவை அதட்டுவதும், அந்த பரபரப்பான திருப்புமுனைக் காட்சியில்…
“டென்சனாகத… ரிலாக்ஸ்….” என்று பிரசன்னாவை சமாதானப்படுத்த முயற்சி செய்து, தன்னையும்
ரிலாக்ஸ் செய்து கொள்ள.. கட்டிலில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு சீட்டி அடிப்பதுமாக..
அமர்களமான நடிப்பு…
இந்த
கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட காரணத்துக்காகவே பிரசன்னாவை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்… நடிப்பிலும் அவருக்கு இது சொல்லிக் கொள்ளும்படியான படம் தான்… ஆனாலும் அவரை
வெளியே தெரியவிடாதபடி, லேகா வாஷிங்டனின் நடிப்பும் அழகும் டாமினேட் செய்துவிடுகிறது.
தன்னுடைய பிரச்சனையை தீர்க்க, தன் நண்பர்களோடு சேர்ந்து அவர் படாதபாடு படுவதும், நடக்கின்ற
சம்பவங்கள் எல்லாம் அவரது பிரச்சனையை நினைவுபடுத்துவது போல் இருக்க.. ஒரு கட்டத்தில்
வேறு வழியில்லாமல் கல்யாணத்தை நிறுத்திவிட யோசிப்பதும், இறுதியில் எப்போதும் ஒரு ஸ்மைலி
பாலை கையில் வைத்து எக்ஸசைஸ் செய்து கொண்டே இருப்பதுமாக கலகலப்பும் துடிதுடிப்பும்
கலந்த கதாபாத்திரம்.. லேகாவைப் பார்த்தவுடன் அவரது அழகில் கவிழ்ந்து தன் பெற்றோரைக்
கேட்காமலே ஓகே சொல்வதும்… நெகோஸியேட் பவரே மாப்பிள்ளை வீட்டுக்கு இல்லாமப் பண்ணிட்டியேடா
என கோபிக்கும் பெற்றோரை இது என்ன பிஸ்னஸ் டீலிங்கா…? என்று சமாதானப்படுத்துவதும், பேஸ்புக்கில்
ப்ரெண்ட் ரிக்கொஸ்ட்டை அக்சப்ட் செய்யச் சொல்லி லேகாவிடம் கெஞ்சுவதுமாக…. வெரைட்டியான
நடிப்பு..
இது
தவிர்த்து பிரசன்னாவின் நண்பர்களாக வரும் புதுமுகங்களும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்..
அதிலும் குறிப்பாக அந்த ஒல்லி நபரும் அமெரிக்க நண்பரும் நிறைவான பாத்திரம்… தங்களது
நண்பனின் பிரச்சனையை தீர்க்க… அவனோடு ஒவ்வொரு இடமாக ஏறி இறங்குவதும், க்ளைமாக்ஸில்
தங்கள் நண்பனின் விருப்பப்படி கல்யாணம் நடப்பதற்காக மெனக்கெடுவதுமாக மனதில் நிற்கின்ற
கதாபாத்திரம்.. இது தவிர்த்து அதிகமாக ஈர்ப்பவர், லேகாவின் அப்பாவாக வரும் டெல்லிகணேஷ்..
அந்த மண்டபத்தை புக் செய்துவிட்டு.. அவர் வாயாலேயே காட்டும் நயனங்கள் அவரது நடிப்புக்கு
ஒரு எடுத்துக்காட்டு..
அரோராவின்
இசையை விட பிண்ணனி இசை நன்றாக இருந்தது.. பாடல்கள் ஏதுவும் பெரிதாய் மனதில் நிற்கவில்லை..
படத்துக்கு வசனம் மிகப்பெரிய பலம். இப்படி ஒரு இலைமறை காயான கதை தளத்தில் கைதட்டல்களை
வசனங்கள் தான் பெற்றுத் தருகிறது… உதாரணமாக “இது நம்ம கல்யாணம் இல்ல… நம்ம அப்பா அம்மா
பாட்டியோட கல்யாணம்.. ஏன்னா அவுங்க விருப்பப்படி தான அது நடக்குது” கல்யாணத்துக்கு
சம்மதிக்கவா வேண்டாமா எனக் குழம்பும் தன் மகளை அணைத்துக் கொண்டு “எது எப்புடியோ.. இந்த
பாசம் மட்டும் மாறாது…” என்று டெல்லிகணேஷ் பேசும் இடத்தையும் கூறலாம்..
இயக்குநர்
ஆர்.எஸ்.பிரசன்னாவுக்கு இது முதல்படம்.. ஒரு கல்யாணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன
மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை வரிசைப்படுத்தி, அதில் மிக முக்கியமான விசயத்தை
எடுத்துக் கொண்டு, போகிறபோக்கில் நம் உணவு முறை மாற்றத்தையும் கிண்டல் செய்து, சொல்ல
வந்த மையத்தை காமெடியாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்… அப்படி காமெடியாக சொல்ல முனைந்தது
ஒரு விதத்தில் ப்ளஸாக இருந்தாலும்.. காட்சிகளின் நகர்விற்கான சுவாரஸ்யத்தையும் பதட்டத்தையும்
குறைத்து படம் இப்படித்தான் முடியப் போகிறது என்கின்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும்
ஒரு மைனஸையும் கொண்டு இருக்கிறது… இருப்பினும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சிதான்…
எனக்குப் படம் பிடித்திருந்தது.. உங்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது..
எனினும் மேற்சொன்னபடி உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கலாம்… பிடிக்காமலும் போகலாம்….
என்பதை மீண்டும் சொல்லி முடிக்கிறேன்…