இராவணன் படத்தின் படுதோல்விக்கு பிறகு வரும் மணிரத்னத்தின்
அடுத்த படம் என்கின்ற எதிர்பார்ப்பு. மேலும் கார்த்திக் தன் மகன் கெளதமை மணிரத்னத்தின்
இயக்கத்தில் தான் வெளிப்படுத்த வேண்டும் என்று காத்திருந்து, அறிமுகப்படுத்தியது, முதலில்
கதாநாயகியாக சமந்தா புக் செய்யப்பட்டு பின்னர் தோல்வியாதி காரணமாக நீக்கப்பட்டார் என
சொல்லப்பட, அதெல்லாம் இல்லை ராதாவின் கைங்கர்யத்தால் தான் நாயகி மாற்றப்பட்டது, கார்த்திக்கின்
ஆதரவுடன் தன் இளைய மகள் துளசியின் அறிமுகத்தை மணிரத்னம் படத்திலேயே ஏற்படுத்திக் கொண்டார்
ராதா என படத்தைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் கோலிவுட்டில் வலம்வந்து கொண்டிருந்தன.
இந்த கதையெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்டீர்களானால்
நான் சொல்லிக் கொள்ளவிரும்புவது ஒன்றுதான். ஏனென்றால் இதிலெல்லாம் கதை இருக்கிறது.
அதையும் மீறி கதையை நம்புவதற்கு வலுவான அடிப்படையும் காரணமும் இருக்கிறது.. (வதந்தியிலும்
கூட..) பாருங்கள் தோல்விக்கு பின் வெற்றிபெற வேண்டும் என்கின்ற மணி சாரின் துடிப்பு,(ஒரு
கதை) நல்ல இயக்குநரின் படத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற கெளதமின் காத்திருப்பு(ஒரு
கதை), சமந்தாவுக்கு சூழ்நிலையால் பறிபோன அரிய வாய்ப்பு..(ஒரு கதை)!, துளசிக்கு நாயகி
வாய்ப்பு கிடைத்ததன் பிண்ணனியில் நடந்த காய்நகர்ததலோ அல்லது அதிர்ஷ்டமோ…(பல கதை)? இவையெல்லாமே
கதைகள் தான்.. இப்படி கடல் படத்தைப் பற்றியே பல கதைகள் இருக்க, படத்தில் கதையே இல்லாமல்
போனதுதான் பெரும் சோகம்…
கதையென்று ஒன்று உண்டு என்று யாரும் வாதிட முன்
வந்தால் அவர்கள் கதையென்று இதைத்தான் கூறுவார்கள். அர்ஜீன் அரவிந்தசாமி இருவருக்குமான
நீயா..? நானா..? என்கின்ற போர்தான் கதை. இருவருமே கிறிஸ்துவ மத போதகராவதற்குரிய பட்டம்
பயில வந்தவர்கள், அங்கு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெர்க்மான்ஸ்(அர்ஜீன்)சை, நேர்மையாக
இருக்கும் சாம்(அரவிந்தசாமி) கண்டிக்க.. இருவருக்குமான முட்டல் தொடங்குகிறது. என்னுடைய
சூழ்நிலைதான் என்னை கெட்டவனாகவும், உன்னுடைய சூழல் தான் உன்னை நல்லவனாகவும் வைத்திருக்கிறது.
உன்னுடைய சூழலையும் மாற்றி உன்னையும் பாவத்தின் குழியில் தலைகுப்புற தள்ளுகிறேன்..
என்று அரவிந்தசாமியிடம் சபதமிட்டு படிப்பையும் முடிக்காமல் பாதியிலேயே வெளியேறுகிறார்
அர்ஜீன். இதுதான் படத்தின் மையக்கரு. இதைக் கொண்டு அவர்கள் மிகச்சிறந்த ஒரு கதையை சொல்லியிருக்கலாம்.
ஆனால் ஜெயமோகனை வைத்துக் கொண்டும் அது சாத்தியப்படாமல் போனது எப்படி என்பதுதான் ஆச்சரியமாக
இருக்கிறது.
இப்படி
ஆரம்பிக்கும் படத்தை பாதியில் அநாதியாக விட்டுவிட்டு கடலோர கிராமத்தில் மற்றொரு கதையை
தொடங்குகிறார்கள். அங்கு பாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு பிறந்த தில்லை என்கின்ற சிறுவன்,
தன் தாயின் மறைவுக்கு பின்னர், தான் தகப்பன் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் ஒருவனை
அண்ட அவன் இவனை அடித்து துரத்த, அதே கிராமத்தில் இவன் அநாதையாக, ஒரு பொறுக்கியாக வளர்ந்து
நிற்கிறான். அந்த ஊருக்கு பாதிரியாராக வந்து சேரும் அரவிந்தசாமி அவனை அரவணைத்து, அவன்
வாழ்க்கையை மாற்ற, அவனுக்கு பியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. இப்போது மீண்டும்
இங்கு வந்து சேர்கிறார் அர்ஜீன். அடுத்து என்ன நடந்தது என்பதை ஒரு நீண்ட கப்பல் பயணம்
போல் ஆசுவாசமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு
படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே படத்தைப் பார்க்கின்ற பார்வையாளரின் மனது எதை நோக்கி
பயணிக்க வேண்டும் என்பதை இயக்குநர் தீர்மானித்துவிட வேண்டும். ஆனால் கடல் திரைப்படத்திலோ
பார்வையாளனின் மனது நடுக்கடலில் வழிதெரியாமல் அகப்பட்டவனைப் போன்றே திக்கு தெரியாமல்
பயணிக்கிறது.
பெரும்பாலும்
மணிரத்னம் படங்களில் ஒரு கதாபாத்திரத்தின் இயல்பு எத்தகையது என்பதும், அவனது தேவை என்ன
என்பதும் மிக தெளிவாக ஆடியன்ஸ்க்கு புரிந்துவிடும். ஆனால் இதில் அர்ஜீனின் கேரக்டரைஷேசன்
அதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அவர் எதற்காக மிஷினரி ஊழியம் சார்ந்த படிப்பு
படிக்க வந்தார்..? அவரது குடும்ப சூழ்நிலையிலுள்ள பிரச்சனை என்ன…? ஏன் அவர் அப்படிபட்ட
ஒரு மனிதனாக வளர்ந்தார்..? அரவிந்தசாமி புகார் கூறாத நிலையிலும் அவர் ஏன் படிப்பை பாதியில்
நிறுத்திவிட்டு வெளியேறுகிறார்..? அது அவராக எடுக்கும் முடிவுதானே..? அப்படி இருக்கையில்
குடும்பத்தில் உள்ள நபர்களின் மரணத்துக்கு அரவிந்தசாமி எப்படி காரணமாக முடியும்..?
அரவிந்தசாமிதான் காரணம் என்று அர்ஜீன் நினைக்க தொடங்கினாலும் அவர் எங்கு இருக்கிறார்
என்று தேடும் முயற்சியில் கூட அர்ஜீன் ஏன் இறங்குவதில்லை..? படத்தில் அர்ஜீன் செய்யும்
சில தந்திரங்கள்…!? உங்கள் சபதத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இவ்வளவுதானா
என்னும் சளிப்பையே ஏற்படுத்துகின்றன. இவைகள் ஆரம்பத்தில் அர்ஜீன் விட்ட சவாலுக்கு தர்க்க
ரீதியிலாக சரியான பதில் சொல்லும் காட்சிகள் இல்லையே..? இப்படி பல உறுத்தல்கள்.
படத்தில்
தில்லை என்னும் தாமஸாக வரும் கெளதமின் பின்புல வாழ்க்கையை ஆடியன்ஸ் மனதில் பதிய வைத்ததைப்
போல் அர்ஜீனின் வாழ்க்கையை பதிய வைத்திருந்தால் அவரது கேரக்டருக்கான நியாயமாவது கிடைத்திருக்கும்.
தில்லை மற்றும் பியாவின் காதல் எபிசோட் அர்ஜீனின் சபதத்திற்கு எப்படி உதவியது என்றே
தெரியவில்லை. திரைக்கதையில் இந்த இரண்டுக்குமான முடிச்சி ஏனோ துருத்திக் கொண்டு இருப்பதை
தவிர்க்க முடியவில்லை.
கெளதமின்
நடிப்பு ஓகே ரகம்தான். இவரும் யாரிடம் இருந்து கத்துக் கொண்டாரோ பல இடங்களில் பெருங்குரல்
எடுத்து கத்துவதையே நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நடனத்தில் மட்டும்
கார்த்திக்கை மிஞ்சுகிறார். நடிப்பில் இல்லை. துளசி(பியா) இளவயது ராதாவை ஞாபகபடுத்துகிறார்.
சில ப்ரேம்களில் அழகாகவும், சில ப்ரேம்களில் அசிங்கமாகவும் தெரிகிறார். உடம்புதான்
பீப்பாய் போலத் தெரிகிறது. குழந்தைதனமான கதாபாத்திரம் என்பதால் சில இடங்களில் நடிப்பு
சிறப்பாக அமைந்திருக்கிறது. அர்ஜீனின் நடிப்பும்
அரவிந்தசாமியின் நடிப்பும் திருப்தி கொடுத்தாலும் அவர்களது கேரக்டரைஷேசன் நெருடுவதால்
மனதில் நிற்கவில்லை.
படத்திற்கு
பாடல்களும், பிண்ணனியிசையும் பெரிய ப்ளஸ். படத்தில் ஏற்படும் தொய்வை ஆங்காங்கே வரும்
பாடல்கள் ஈடுசெய்வதுடன் ஆறுதலாகவும் இருக்கிறது. யூ டியூபிலும், பேஸ் புக்கிலும் அதிகமாக
ஹிட்டடித்த ”அடியே” சாங்கின் பிக்சரேஷன் படுமோசம். ராஜீவ் மேனனின் கேமரா வழக்கம் போல்
கடலோர அழகை அள்ளி வந்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி. ஆரம்பத்தின்
சில காட்சிகளில் வசனத்திலும் கதையிலும் பெரிதாக எதிர்பார்க்க வைத்த மணிரத்னமும் ஜெயமோகனும்
கடைசியில் ரொம்பவே ஏமாற்றிவிட்டார்கள்.