Showing posts with label சிவகார்த்திகேயன்.. Show all posts
Showing posts with label சிவகார்த்திகேயன்.. Show all posts

Saturday, 5 April 2014

மான் கராத்தே:

என் நண்பன் ஒருவன் அவனது ஆறு வயது குழந்தைக்கு இரவு நேரங்களில் தூங்க வைக்க கதை சொல்வதில் இருக்கின்ற சிக்கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.. அவன் சொல்கின்ற சில அசுவாரஸ்யமான கதைகள் பெரும்பாலும் அவனது குழந்தைக்கு பிடிப்பதில்லையாம்.. தினமொரு கதை என்கின்ற ரீதியில் புதிதுபுதிதாக சொல்வதற்கு இவனது கற்பனை கங்கையும் கைகொடுக்க வில்லையாம்… அதனால் தான் இப்போது தீவிரமாக குழந்தைக் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறான்… அவனிடம் நான் ஒரு கதையை சிபாரிசு செய்து, அவனது குழந்தைக்கு கூறச் சொன்னேன்.. அவனும் கதையைத் தொடங்கினான்… இப்படி


“அப்பாவ மாதிரியே கம்ப்யூட்டர் இஞ்சினியராக இருக்குற நாலு ப்ரெண்ட்ஸ் இந்தியால இருக்கிற ஒரு காட்டுக்கு பிக்னிக் போறாங்க… அங்கு ஒரு சித்தர் இருக்க, அவர்ட்ட வரம் கேக்குறாங்க… யாராவது ஒருத்தரோட வரத்த மட்டுந்தா நிறைவேத்துவேன்னு அவரு சொல்றாரு.. அப்ப அந்த நாலு ப்ரெண்ட்ஸ்ல இருக்குற ஒரு சேட்டைக்காரப் பையனுக்கு சித்தர் மேல நம்பிக்க இல்ல… அவர சோதிக்கிறதுக்காக நாலு மாசத்துக்கு அப்புறம் வர்ற ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பர் வேணும்னு கேக்குகிறான்…?”

”பேப்பர்தானப்பா கேக்குறாங்க..? இதுல என்ன சோதிக்கிறாங்க…?”

”இல்லம்மா.. ஆயூதபூஜைக்கு லீவு விடுறதால, அடுத்த நா தினத்தந்தி பேப்பர் வராதும்மா…”

”அப்ப பேப்பர சித்தர் குடுக்கலையாப்பா…?”

”இல்லம்மா… அவருதா.. சித்தர்ல.. அதனால பேப்பர வரவச்சிக்குடுத்துட்டு மறைஞ்சிடுறாரு… ஆனா அந்த பேப்பர்ல.. அவுங்க வேல பாக்குற கம்பெனிய மூடப் போறதா நீயூஸ் வந்திருக்கு… அதனால எல்லாருக்கும் வேல போயிடுமேன்னு பயப்படுறாங்க…”

”அச்சச்சோ…!! நீயும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்தான… உன் கம்பெனியவும் மூடிட்டா..? உனக்கும் அதுமாதிரி வேல போயிடுமாப்பா…?”

”குறுக்க கேள்வி கேக்கக்கூடாதும்மா…? கதைய கேளு… “ஆனா அவுங்க அத நம்பள… காட்டுல இருந்து கிளம்பி ஊருக்கு போய்டுறாங்க… அங்க போனா உண்மைலயே அவுங்களுக்கு வேல போயிடுது.. அதுமட்டுமில்லாம அந்த பேப்பர்ல சொன்ன தேதிலலெல்லா, மழை பெய்யுற அறிகுறியே இல்லாம இருந்தாலும், பேப்பர்ல சொன்னமாதிரியே ஆலங்கட்டி மழையெல்லா பெய்யுது…. இன்னொரு நீயூஸ்ல இவுங்க நாலு பேரோட பேரும் வந்திருக்கு… அதுல இந்த நாலு பேரோட உதவியால பீட்டர்ங்கிற ஆள் குத்துச்சண்ட போட்டியில பட்டம் ஜெயிச்சதோட, இரண்டு கோடி ரூபா பரிசும் வின் பண்றதா போட்டுருக்கு…? இவுங்களுக்கு பயங்கர ஷாக்… பீட்டர் யாருன்னே இவுங்களுக்கு தெரியாது… பீட்டர் யாருன்னு பாக்கப் போனா அவன் குத்துச்சண்டைனா என்னென்னே.. தெரியாத ஒரு ஆளு…!!!!”

”அவரு என்ன டாடி பண்ணிட்டு இருக்காரு….?”

”அவரு.. அவரு… டான்ஸ் ஆடிட்டு இருக்காரும்மா….”

”இல்லப்பா… அவுங்கெல்லா இஞ்சினியர்ல…. இவரு அதுமாதிரி என்ன வேல பாக்குறாரு….?”

”இரும்மா.. குறுக்க குறுக்க பேசக்கூடாது… அப்பாக்கு கத மறந்துரும்…. எங்க வுட்டே…”

”டான்ஸ் ஆடிட்டு இருந்தாரு…”

”ம்ம்ம்.. இருந்தாரா… அவரப் புடிச்சி எப்புடியாது பாக்ஸரா மாத்த முயற்சி பண்றாங்க….”

”ஏன்ப்பா…?”

”அப்பத்தான அவரு ஜெயிப்பாரு…”

”பேப்பர்லதா வந்திருக்குல… அப்ப அவரு கண்டிப்பா ஜெயிப்பாருல்ல…”
”ஆனா அவருதா பாக்ஸர் இல்லயே… அவர பாக்ஸர் ஆக்குனா தான அவரு ஜெயிப்பாரு… இரண்டு கோடி ரூபா கிடைக்கும்…”
”இவுங்க எதுவும் செய்யாம, மழ மட்டும் அதுவா பெஞ்சதுல்ல.. அப்ப இதுவும் அதுவா நடக்குமுல்ல.. அவுங்க ஏ கஷ்டப்படுறாங்க…”
”சீ… சும்மா… நொய்நொய்ன்னு….. அமைதியா கேளு… அப்பா கதைய மறந்துருவே…”

”சரி… அப்புறம்…”.

”அப்புறம்…. ஆ… அவரு லவ் பண்ணாரு….”


”லவ் பண்ணாரா…? ஏன் பாக்ஸர் ஆகாம லவ் பண்றாரு….?”

”ஏன்…. ம்ம்ம்.. ஆஆஆ.. ஏன்னா அந்த பீட்டர் அவரு லவ் பண்ற அக்கா இருக்காங்கல்ல… அவுங்க நல்லா வெள்ள வெளேர்ன்னு இருக்காங்களா… அதனால லவ் பண்றாரு… லவ் பண்ணா… அந்த அக்காவுக்கு இந்த பீட்டர பிடிக்கவே இல்ல… பீட்டரு அந்த அக்கா பின்னாடியே சுத்திட்டு இருக்காரு.. ”

”அவருக்கு வேற வேலயே கிடையாதா.. டாடி…?”

”இருக்கும்மா.. அதெல்லா பண்ணிட்டே… இதயும் பண்ணிட்டு இருக்காரு.. ஆனா பாக்ஸர் ஆகுறதுக்கு ப்ராக்டீஸ்க்கு மட்டும் போல… இதப்பாத்த அந்த நாலு ப்ரெண்ட்ஸும் இவனுக்கு லவ் சக்சஸ் ஆனாதா இவன் ப்ராக்டீஸ்க்கு வருவான்னுட்டு… அவனுக்கு ஹெல்ப் பண்ண… அந்த அக்காவுக்கும் பீட்டர் மேல லவ் வந்துருது….”
”பாக்ஸிங்க் மேட்ச் எப்பப்பா வரும்…?”

”வரும்மா… பொறுமையா கதைய கேளு…”

”சரி… அந்த அக்காவுக்கு ஏன் லவ் வந்துச்சி….”


”ம்ம்ம்… அதுவந்து அந்த அக்கா பைக் ரிப்பேராகி இருந்தப்ப… பீட்டருதா மெக்கானிக்கு கூட்டு வந்து சரி பண்ணி குடுத்தாரா… அதான்…. லவ் வந்திருச்சி…”

”அப்ப.. ஹெல்ப் பண்ணா லவ் வருமாப்பா…..”

”அது எப்டிம்மா வரும்.. இது கதை.. சரியா… லவ் வந்துருச்சா… அந்த அக்காவோட அப்பா என்ன சொன்னாரு… தெரியுமா…? பத்து திருக்குறள் சொன்னாத்தா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்குடுப்பேன்னு சொன்னாரு…”

”எங்க க்ளாஸ்ல எல்லாருக்கும் பத்து திருக்குறள் தெரியும்ப்பா…. ஆனா அந்த அக்காவோட அப்பா ஏன் இவ்ளோ ஈஸியா கொஸ்டீன் கேக்காரு….”

”ம்ம்ம்.. ஏன்னா அவரு தமிழ் வாத்தியாரு…”

”தமிழ் வாத்தியாருன்னா.. ஈஸியாத்தா கேள்வி கேப்பாங்களாப்பா….”

”ஆமாம்மா… அப்புறம் பீட்டருக்கு திருக்குறள் தெரியாதா… அதனால அந்த நாலு ப்ரெண்ட்ஸும் ஹெல்ப் பண்றாங்க….”

”அய்யய்யோ…!!! அவருக்கு திருக்குறளே தெரியாதாப்பா… அவருக்கு என்ன தெரியும்ணு அந்த அக்கா லவ் பண்றாங்க…?”

”அதெல்லா…. எனக்குத் தெரியாதுமா… லவ் பண்றாங்க அவ்ளோதா…”

”நீயும் பத்து திருக்குறள் சொன்னா என்ன கல்யாணம் பண்ணிக் குடுத்திருவியாப்பா…?”

”இது கதம்மா….”

”போப்பா.. அன்னைக்கி மட்டும் கதைல வந்தது மாதிரி பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்ன… இப்ப மட்டும் இது கதைங்கிற… அப்ப கதல உள்ளபடி நா பண்ணவா… வேணாமா…”

”போனவாரம் சொன்ன கதப்படி பண்ணனும்… இந்த கதப்படி கூடாது… சரியா… சரி.. இப்ப இவரு மேட்ச்ல கலந்துக்கப் போறாரு…. அங்க இன்னொரு பீட்டர் இருக்காரு…. அவரு பெரிய பாக்சரு…. ஏகப்பட்ட சாம்பியன்சிப் ஜெயிச்சவரு… இப்ப இந்த நாலு ப்ரெண்ட்சுக்கும் குழப்பம்… பேப்பர்ல போட்டுருந்த பீட்டரு… இந்த பீட்டரா… அந்தப் பீட்டரான்னு….”

”முத சொன்ன பீட்டர்தாம்ப்பா…”

”எப்டி…?”

”ஆமா அவருக்கு தா பாக்ஸிங்னா என்னென்னே தெரியாது…. அவரு ஜெயிக்கதா ஹெல்ப் வேணும்…. இவருதா ஏற்கனவே நிறைய ஜெயிச்சார்ல.. இவருக்கு எதுக்கு அவுங்களோட ஹெல்ப்….”

”ஆமால்ல… சரி… ஆனா அவுங்களுக்கு குழப்பம்… ஏன்னா… அவுங்க உன்ன மாதிரி பிரில்லியண்ட் கிடையாது பாரு…. இவுங்களுக்கு இப்டி குழப்பம் இருக்கும் போதே… இவுங்களோட பீட்டரு…. லீக் போட்டிலெல்லா ஜெயிச்சி பைனல் வந்திருறாரு….”

”அவருக்குதா பாக்ஸிங் தெரியாதே…? அவரு ப்ராக்டீசும் போல… பின்ன எப்டி…?”

”அது அப்டிதாம்மா… பைனல் வந்திருறாரு…. வந்தா எதுக்க மோத வேண்டிய இன்னொரு ஆளு அந்த பீட்டரு…. அந்த பீட்டரு… நம்ம பீட்டர்ட்ட போட்டிக்கு முன்னாடியே என்ன சொல்றாரு தெரியுமா…? போட்டி நடக்குற ரிங்குல உன்ன அடிச்சே நா கொன்னுடுறேங்கிறாரு… பயந்து போன நம்ம பீட்டரு.. நா பாக்ஸர் கிடையாது…. என் லவ்வர்ட்ட நல்ல பேரு வாங்கிறதுக்கா… அப்டி நடிச்சே… இந்த ஒரு போட்டில என்ன ஜெயிக்கவிடுங்கன்னு கேக்குறாரு…. அவரு முடியாதுன்னு சொல்லிடுறாரு… பைனல் மேட்ச்ல அந்தப் பீட்டர நம்ம பீட்டரு அடிஅடின்னு அடிச்சிட்டு நா உனக்கு விட்டுத்தாரே… நீ உன் லவ்வர எனக்கு விட்டுத்தாரீயான்னு கேக்குறாரு… உடனே நம்ம பீட்டருக்கு கோபம் வந்து அடிஅடின்னு அந்த பீட்டர அடிச்சி ஜெயிச்சிடுறாரு…. எப்டி கத….”

க்க்க்க்குர்… குர்கொர்…கொர்….கொர்…..க்க்கொர்…..

”ஓ… தூங்கிட்டியாடா… செல்லம்….”

இப்படி, குழந்தைகளிடம் சொல்வதற்குக்கூட கதைகள் இல்லாத அளவுக்கு நம் வாழ்க்கை நம்மிடம் கற்பனை வறட்சியை உண்டாக்கி இருக்கிறது… ஏன் என்று யோசித்தால், ஒருவேளை குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான கதைகளாக மாறி பிறழ்சுழற்சி அடைந்துவிட்டது தான் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.. மேற்சொன்னபடி குழந்தையை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட இல்லாத ஒரு கதையாடல், மூத்தகுடிகளின் களிப்பிற்கான கதைக்களனாக மாறிநிற்கும் முரண்நகை காலத்தின் கொடுமை…

அதுசரி… இந்த மான் கராத்தேக்கும் முந்தைய பத்திகளுக்கும் என்ன சம்பந்தம்…? இருக்கிறது… முன்பே சொன்னேன் அல்லவா… குழந்தைகளுக்கான இரவுநேர தூக்க கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான கதைகளாக மாறிவிட்டது என்று, அதற்கான சமீபத்திய உதாரணம் தான் இந்த மான் கராத்தே.. தமிழ் பேரினத்தின் ஆறிலிருந்து அறுபது வரையுள்ள பெருங்குழந்தைகளை எல்லாம் அற்ப தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கச் செய்யும் அற்புதமான ஆவணப் படைப்பு தான் இந்த ”மான் கராத்தே..” ஏன் இவ்வளவு காட்டமான வார்த்தை ஜோடைனைகள்…? என்றால், என்ன செய்ய, காட்டத்தை காட்டாமல் இருக்க முடியவில்லை… திரைப்படங்கள் கேளிக்கையின், நகைச்சுவையின் பொழுதுபோக்கின் ஒரு வடிகாலாக இருப்பது பெரும்பிழையா என்று கேட்டால்…? இல்லை கண்டிப்பாக இல்லை என்பதே என் பதில்.. ஆனால் நம் வாழ்க்கையின் கேளிக்கை மற்றும் நகைச்சுவையின் வடிகாலாக திரைப்படம் மட்டுமே இருக்கின்றது என்பது தான் பெரும் பிழை.. திரைப்படம், அரசியல் இந்த இரண்டுமே நம் சமூகத்தின் சமகால மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு பார்க்கும் பொருளாக மாறிவிட்டது.. என்ன செய்ய..?

மேலே என் நண்பன் தன் மகளுக்கு சொன்ன கதைதான்… இம்மிகூட பிசகாமல் மான் கராத்தேவின் கதை… என்ன நடந்தாலும் “ஏன்” என்று கேட்டுப் பழகு… என்று சொன்ன பெரியாரின் வழி வந்த நம் தமிழ் சமூகம் தான் இன்று “அது இது எது” என்று எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் சிவகார்த்திகேயனின் சிரிப்பலைகளில் சிக்கி சீரழிந்து போக தயாராக காத்துக் கொண்டிருக்கிறது… 24 மணி நேரமும் திறந்திருக்கும் படி ஒரு டாஸ்மாக் கடை கேட்கும் அவரது விண்ணப்ப பாடலுக்கு விண்ணதிர கரகோஷம் கொடுக்கிறது…. பெண்களை ஆண்களுக்கேயான தனியுடைமை சொத்துக்கள்… அவர்களை இன்னொருவன் உன்னிடம் இருந்து கவர்ந்து கொள்ள முயன்றால், மட்டும் உன் கண்ணியம் தளர்த்தி, நீ கோபம் காட்டு, கொலை செய்… இளைஞனான உனக்கு காதலில் ஜெயிப்பதை தவிர வேறு எண்ணம் இருக்கவே கூடாது, பெண்கள் காதலை கலட்டிவிட பொய் சொல்பவர்கள், ஆண்கள் பொய் சொல்லியாவது காதல் கைகூட முயற்சிப்பவர்கள் என்கின்ற ரீதியில் இவர்கள் தொன்றுதொட்டு தூவி வரும் நஞ்சுக்கு மான் கராத்தே மயிலிறகு வீசுகிறது…. முதல்பாதியாவது ஏதாவது ஒப்பேத்துகிறார்கள்…. இரண்டாம் பாதியின் இழுவை இந்தியன் ரயில்வே தண்டவாளத்தை விட நீள…ம்.

கதையின் கரு என்று பார்த்தால், மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்கரு… ஆனால் அதையும் வழக்கமான காதல் சாயம் பூசி, ஹீரோயிச வேசம் இட்டு கருக்கலைப்பு செய்துவிட்டார்கள்… நான் கூட முதல் பத்து நிமிடங்களில், கதைவேறு ஏ.ஆர்.முருகதாஸின் கதை என்பதாலும், ஐடி நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலை இழக்கும் இளைஞர்களிடம் இருந்து கதை தொடங்குவதாலும், உலகமயமாக்களின் அழிவைச் சொல்லும் படமோ என்று அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்… உணர்ச்சிவசப்படுதல் குற்றத்தின் ஆரம்பம் தானே… அதற்கான தண்டனையையும் அனுபவித்தேன்…

தனிப்பட்ட நபர்களின் உழைப்பு என்று பார்த்தால், சிவகார்த்திகேயன், ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் இவர்களின் உழைப்பைப் பற்றி நிச்சயம் சொல்லலாம்…. சிவகார்த்திகேயன் நடனங்களில் காட்டும் அங்க அசைவுகளும், வேகமும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது… அதுபோலத்தான் அவரது வழக்கமான பாடி லாங்க்வேஜ் மேனரிசங்களும், ஆனால் உருக்கமான நடிப்பு என்பது மனிதருக்குள் இன்னும் உருப்பெறவே இல்லை என்பதற்கு இவர் வில்லனின் காலில் விழுந்து அழும் அந்த காட்சியே சாட்சி… மனிதர் கதாபாத்திரத்துக்கு மட்டும் தேவையான பீட்டரிசங்களை கடைபிடித்து, தனிப்பட்ட மனிதருக்கான பீட்டரிசங்களை கைவிடுவது அவரது வளர்ச்சிக்கு நலம் பயக்கும்…. ஐந்தாவது படத்திலேயே ஓபனிங்க் சாங்க் என வேறு தளத்தை நோக்கி நகல முற்படுவது தெரிகிறது… ஹன்சிகாவின் முகத்தில் ஏக தெளிச்சி… பாடல்களிலும் இந்த அம்மணி காட்டும் முக குறிப்புணர்ச்சிகள் வசீகரிக்கின்றது… அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாமே தாளம் போடவைக்கின்றன…. இளைய சமுதாயத்தின் இதயத்துடிப்பை அறிந்த இசையமைப்பாளர்.. ஆனால் பிண்ணனி இசையில் இரைச்சல் தான் அதிகம்…. மைனா சுகுமாரின் கேமரா பிண்ணனியில் எல்லாமே கதையின் காட்சியை கெடுத்துவிடாத அழகு.. அதுபோல் சதீசின் காமெடிகள் கொஞ்சம் புத்துணர்ச்சி தருகிறது…

மொத்தத்தில் இந்த மான் கராத்தே, கேள்வி கேட்கவோ யோசிக்கவோ திராணியில்லாத, அல்லது அதுபோன்ற ஆபாசங்களை அடியோடு வெறுக்கின்ற ஆறிலிருந்து அறுபது வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான கூத்து….


Tuesday, 17 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:

தமிழ் சினிமாவின் வியாபாரத்திற்கு தற்போதைய நிலையில் அதிக அளவில் ஊட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் படம். வசூல் பட்டையை கிளப்புவதாக விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, ஆடியன்ஸும் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்த குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிகுந்த ஆர்வமாக அப்படியென்னதான் இந்தப் படத்தில் புதுமையாக இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று தியேட்டரில் சென்று பார்த்தால், சலித்தெடுத்த அதே பழைய கதை, அதில் சற்றே சுவாரஸ்யமான ஆனால் முழுக்க முழுக்க நம்பகத்தன்மையே இல்லாத ஒரு திரைக்கதை, அதில் அது இது எது வில் சிவகார்த்திகேயனின் டைமிங்க் காமெடிகளுக்கு நடுவே வந்து சிலர் கதை சொல்வதைப் போல் இங்கும் கதை சொல்கிறார்கள். கடைசியில் பெற்றவர்கள் எல்லாரும் நல்லவங்கதா… ஊர்ல நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு பயந்துதா.. காதல எதுக்குறாங்கன்னு.. கருத்து சொல்லி முடிக்கிறாங்க…. இப்படி எந்தவிதத்திலும் புதுமையாக இல்லாத ஒரு திரைப்படத்தை ஆகா ஓஹோ என்று கொண்டாடி வசூல் மழை பொழியச் செய்யும் இந்த ஆடியன்ஸை பார்ப்பதுதான் நம் நாட்டில் புதுமை போலும்..


சிவணாண்டி என்று ஊர் பெரியவராக சத்தியராஜ், மூன்று பெண்களைப் பெத்திட்டு கவலைப்படாம சிரிக்கிறாயே… ஏதாது பொண்ணு காதலிச்சி ஓடிப் போயிருச்சின்னா.. என்னய்யா பண்ணுவே..? என்று கேட்டதற்காகவே அவனின் காதை அறுத்துவிடும் இவருக்கு, எம்.ஏ எம்.பில் படித்துவிட்டு, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தொடங்கி, அங்கு காதல் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புமிக்க போஸ் பாண்டி என்னும் சிறியவர் சிலபல காதல் தோல்விகளுக்குப் பிறகு தனது பெண்ணை காதலித்து ஓடிப் போகும் தருணத்தில் அவர்களை சிரித்துக் கொண்டே சேர்த்து வைக்கும் படு சீரியஸான கதாபாத்திரம், அவரது மனமாறுதலுக்கு காரணம், ”கிணத்துக்குள்ள விழுந்த பசுமாட்டையே காப்பாத்திட்ட… இந்த பசுமாட்ட(திவ்யா) காப்பாத்த மாட்டியா” என்பதுதான்..


வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக, ஊர் சிறியவர் போஸ் பாண்டியாக சிவகார்த்திகேயன். இவர் ஏன் எம்.ஏ எம்.பில் படித்தார்..? தெரியாது, ஏன் வேலைக்கு போகவில்லை…? தெரியாது ஏன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்குகிறார்..? தெரியாது. போலீஸ்காரர், ஊரில் ஆற்று மண் கடத்துபவர்கள், ஊர் பெரியவர் என எல்லோரையும் பிரச்சனையில் மாட்டிவிடும் இவரை ஏன் எவரும் கண்டு கொள்வதே இல்லை..? தெரியாது.. இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் தெரிவது இவரது வழக்கமான அக்மார்க் டைமிங்க் காமெடி மட்டுமே… இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் இவரது காமெடி மட்டும் எப்படி தெரிகிறது… ஏனென்றால் இது காமெடிப் படம்தானே… எதிர்நீச்சலில் வருவதைப் போல் இதிலும் டீச்சரை காதலிப்பவர், டீச்சர் கிடைக்கவில்லை என்றதும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தனுப்பிய ஸ்டூடண்டையே கரெக்ட் செய்துவிடுகிறார்…. அந்தக் காதலுக்குத் தான் சிவணாண்டி பிரச்சனை செய்ய.. பசுமாட்டைக் காப்பாற்றி படத்துக்கு சுபம் போடுகிறார்கள்…

சிவகார்த்திகேயனை மட்டுமே வைத்து காமெடி செய்து கொண்டிருந்தால் இது திரைப்படமா இல்லை…? அதுஇது எது? அரிஹிரி அசெம்பளி, லொள்ளு சபா, அல்லது ஆதித்யா சேனலின் காமெடி டைமா என்று ஆடியன்ஸ்க்கு குழப்பம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் புரோட்டா சூரியும் வந்து ஆங்காங்கே காமெடி கரகம் ஆடுகிறார்… ஆனால் நடிப்பு என்று பார்க்கும் போது சிவாவும் சரி சூரியும் சரி பல படிகள் முன்னேறி வருகிறார்கள் என்பதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள வேண்டும்… ஆனால் என்ன இவர்கள் அடிக்கின்ற காமெடி எல்லாம் அடுத்த சீன் வந்தவுடன் மறந்து போவதுதான் மகாகொடுமை….


சில காட்சிகளில் வந்து போகும் பிந்துமாதவியும் சரி, சேலை, தாவணி, ஸ்கூல் யூனிபார்ம் என விதவிதமாக வந்து போகும் திவ்யாவும் சரி அத்தனை அழகு. திவ்யா படிப்பின் மீது உள்ள காதலால், கல்யாணத்தையே வெறுக்கின்றவர், தன் கல்யாணத்தை நிறுத்தி தான் படிக்க காரணமாக இருப்பவன் இந்த போஸ் பாண்டி தான் என்பதை அறிந்து அவரைக் காதலித்து அடுத்த வருடமே படிப்புக்கு முழுக்கு போட்டு கல்யாணம் செய்து கொள்ளும் கண்ணியமான கதாபாத்திரம். அதுசரி, கணவர்தான் எம்.ஏ எம்.பில் அல்லவா அவரிடமே பாடம் படிக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும்.. திவ்யாவின் அப்பா சிவணாண்டியாக சத்யராஜ் தன் வழக்கமான நடிப்புப் பாணியில் இருந்து விலகி வித்தியாசம் காட்டி இருக்கிறார்… தன் மகன் போஸ் பாண்டி காதல் தோல்வியால் கஷ்டப்படும் போது காசு கொடுத்து “சரக்கடிடா மவனே, மறந்துடும்..” என்று பாசம் பொழியும் அப்பாவாக யார் கண்ணன். வாழ்த்துக்கள்…


படத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்றால், காதலுக்கு தூது போன பெண்ணையே கடைசியில் கரெக்ட் செய்யும் அந்த ஒன் லைன்னர், அது ஏதோ சொந்த அனுபவமாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் உண்டு. அது தவிர்த்துப் பார்த்தால் சூரியின் அப்பாவாக வரும் அந்த பூசாரி மந்திரவாதியின் நடிப்பு..

பாலசுப்ரமணியத்தின் கேமரா வழக்கம் போல் தேவையானது மிகக்கச்சிதமாக செய்திருக்கிறது. இமானின் இசையில் “ஊதா கலரு ரிப்பனுக்கும்” எதிர்பார்த்ததைப் போல் “இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..” பாடலுக்கும் தியேட்டர் குலுங்குகிறது. இயக்குநர் பொன்ராம் அவர்களுக்கு இது முதல்படம். தமிழ்சினிமாவின் எதிர்காலத்தைப் பற்றி வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வந்திருப்பார் போலும்… அப்படி பொத்தாம் பொதுவாகவும் சொல்லிவிட முடியாது.. முதல் படம் எடுப்பதென்பது இங்கு தலைகீழாக நடப்பதற்குச் சமம்.. எத்தனை சமரசங்கள் செய்தாரோ..? இவரது இரண்டாவது படத்திலாவது இந்த வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று நம்புவோமாக…


மொத்தத்தில் பார்த்தால் பெற்றோர்களைவிட காதலர்களுக்கே, அதிலும் குறிப்பாக காதலனே அதிக பொறுப்புணர்ச்சியுடனும், கவனமுடனும் நடந்து கொள்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்ன என்னங்க…? ஏது நாம் ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு தன் காதலியை அழைத்துச் சென்றால் அவள் உஷாராகிவிடுவாளோ என்று காதலனும், இது காதலை கொச்சை படுத்துகிறது………..!!! என்று ஒட்டுமொத்த காதலரும் ஆதலால் காதல் செய்வீரை புறக்கணித்து கண்ணியம் காக்கும் போது, பொறுக்கிகளை காதலிப்பது எப்படி என்று பாடம் எடுத்து, ஓடிப் போவதற்கும் சொல்லிக்கொடுக்கும் இது போன்ற படங்களுக்கு தங்கள் பிள்ளைகளை கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லும் பெற்றோரின் பொறுப்புணர்ச்சியை என்னவென்று சொல்வது….?

காமெடி படம் எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அதற்காக படத்தில் வரும் எல்லோரையுமே காமெடியாக காட்டினால் எப்படி..? நம் வாழ்விலும் காமெடியான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் அவை எதுவுமே உங்களது காமெடிப் படம் போல் இல்லையே என்பதுதான் எனது வருத்தம். மொத்தத்தில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சில் பிரகாஷ்ராஜ் சிரிப்பதைப் போல் சிரிக்க மட்டும் வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்தப் படத்துக்கு செல்லலாம்… ஆனால் என்னைக் கேட்டால் அதற்கு பதிலாக காமெடி டைம் பார்க்கலாமென்றே பரிந்துரைப்பேன்… என் பரிந்துரையை யார் கேட்கப் போகிறீர்கள்.. அதனால்தான் எல்லோரும் படம் பார்த்தப்பின்பு எழுதுகிறேன் இந்தப் பதிவை…


Monday, 6 May 2013

எதிர் நீச்சல்:

வெற்றிமாறனின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றொரு இயக்குநரான துரை செல்வக்குமாரின் முதல்படம். கேடி பில்லா கில்லாடி ரங்காவின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு, தனுஷ் தயாரிக்கும் படம், பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே எஃப் எம்மில் ஹிட், என எதிர் நீச்சலின் மீது எதிர்பார்ப்புக்கான காரணங்கள் ஏராளம். ஒரே நாளில் மூன்று படங்கள் வேறு ரீலீஸ். இதில் மூன்று பேர் மூன்று காதல் ரேஸில் பின் தங்க.. இப்போது ரேஸில் சூது கவ்வும் மற்றும் எதிர் நீச்சல் மட்டுமே. இரண்டுமே விட்டுக் கொடுக்காமல் ஓடிக் கொண்டிருப்பது திரையுலகுக்கு நல்ல செய்தி.


சிறுவயதில் பாடப்புத்தகத்தில் துணைப்பாடம் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை படித்ததாக நினைவு. ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு எல்லாருக்கும் அமைவதில்லை. திரைப்படத்திலும் அதுதான் மையப்பிரச்சனை. குஞ்சுதபாதம் என்ற தன் பெயரை பொதுவெளியில் சொல்ல நாயகனுக்கு கூச்சம். நேர்காணல் நடக்கும் போதுகூட, அந்தப் பெயரால் தான் படும் அவமானங்களுக்குப் பயந்து தன் பெயரை மாற்றிக் கொள்கிறான். இதை தன் காதலியிடம் இருந்தும் மறைக்கிறான். உண்மை தெரியவரும் போது, “ஒரு சின்ன விசயத்தைக் கூட எதிர் நோக்க தைரியமில்லாமல் ஓடி ஒளிகிறாயே.. எதிர்காலத்துல ஏதாது பிரச்சனை வந்தா அத எப்டி நீ சமாளிப்ப.. உன்ன நம்பி எப்டி நான் உங்கூட வர்றது..” என்று நாயகி எதிர்கேள்வி கேட்க.. ஞாநோதயம் பெற்ற கதையின் நாயகன்.. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முடிவு எடுக்கிறான்…?

ஒரு நிமிசம்… அப்டியே பின்னாடி போங்க… காதலி என்ன சொல்லி திட்டுறா…? 100 மீட்டர் பந்தயத்துலயே ஜெயிக்க முடியலயே நீ எப்டி 200 மீட்டர்ல ஜெயிக்கப் போற அப்டின்னா திட்டுனா…? ஒரு வேல அப்டி திட்டிருந்தா..? 200 மீட்டர் என்ன உனக்காக நான் மாரத்தான் போட்டிலயே கலந்து ஜெயிக்கிறேன் பார்ன்னு சொன்னா…? ஓகே.. ஆனா அவ அப்டி திட்டவே இல்லயே.. அப்டின்னா பிரச்சனைக்கும் அவன் எடுக்குற முடிவுக்கும் என்ன சம்பந்தம்….? சத்தியமாக எனக்கும் தெரியலங்க… கடைசியில அதப்பத்தி பேசுவோம்….


மேற்சொன்னவாறு முடிவு செய்து க்ளைமாக்சில் மாரத்தான் களத்தில் குதிக்கும் நாயகன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா…? என்பது சஸ்பென்ஸ் நிறைந்த மீதி ஐந்து நிமிடக் கதை.

முதல்பாதி முழுவதும் மக்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்துடன் எழுதப்பட்ட திரைக்கதை என்று நினைக்கிறேன். “குஞ்சுதபாதம், பாவாடைராயன்” என்னும் இரண்டு பழமைவாத குலதெய்வங்களின் பெயர்களை பயன்படுத்தி எவ்வளவு காமெடி பண்ண முடியுமோ…? அதற்கு குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் ஏது வசனங்கள் விரசத்துக்குள் போய்விடுமோ என்று நம்மை கொஞ்சம் அஞ்ச வைத்து பின்பு கொஞ்ச வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு மனதில் நிற்பது போல் ஒரு படம். தன் பெயரால் ஏற்படும் அவமானங்களால் தலைகவிழ்வதாகட்டும், தன் காதலி டீச்சர் என்பதை தெரிந்து கொண்டு, வீட்டு ஓனர் பையனை தினமும் இவரே ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு செல்ல ஸ்கூல் போக அடம் பிடிக்கும் பையனைப் போல் அடம் பிடிப்பது, லேட்டானாத்தான் பேரண்ட்ஸ ஸ்கூல்குள்ள அலவ் பண்ணுவோம் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அந்தப் பையனை லேட்டாக ஸ்கூலுக்கு கூட்டிச் சென்று தன் டீச்சர் காதலி முன்பு அட்டெண்டன்ஸ் கொடுப்பது என ஜாலி சடுகுடு ஆடுகிறார். தன் நண்பன் சதீஸுடன் சென்று, தன் மாஜி கம்பெனி எம்.டியான மதன்பாபை வம்புகிழுத்து உதார் விடுவதும், காதலியை பெண் பார்க்கும் படலம் நடக்கிறது என்பதை அறிந்து துவளுவதும், தன் கோச்சாக வரும் வள்ளி(நந்திதா)க்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி பொங்குவதுமாக ஆங்காங்கே க்ளாஸ் ஆக்டிங்.


நண்பராக வரும் சதீஷ்க்கு காமெடியில் முக்கியமான ரீச் இந்தப்படம். “வள்ளிக்கு நீ ஓடுவியான்னு டவுட்டு, திவ்யாவுக்கு நீ வள்ளிகூட ஓடிடுவியோன்னு டவுட்டு..” என்று சொல்லும் அந்த இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. இது போக ஆங்காங்கே சரக்கு சார்ந்த காமெடியும் சைடிஸ்க்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் நடிப்பும் வழக்கம் போல் சூப்பர்…

படத்தில் முக்கியமான அர்த்தமுள்ள நிமிடங்கள் என்று பார்த்தால் இரண்டாம் பாதியில் வரும் வள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான். அட்டகத்தியில் வெறும் கண்ணழகியாக வந்து சென்ற நந்திதாவுக்கு இங்கு வள்ளியாக சற்று கனமான பாத்திரம். அதை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது தந்தையாக வருபவரின் நடிப்பு கச்சிதம். தன் மகளை ஒரு சிறந்த தடகள வீராங்கனையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் அந்த தகப்பனின் உழைப்பு அவ்வளவு உருக்கம்.


நாமெல்லாம் மறந்து போன நிகழ்வு இது. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக தடகள வீராங்கனையாக பதக்கம் பெற்ற திரு. சாந்தி என்னும் தடகள வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டது. காரணம் ஊக்கமருந்து சாப்பிட்டது அல்ல. அவர் உடலில் சுரந்த ஹார்மோன்கள். பெண் தன்மையை விஞ்சுகிற அளவுக்கு அவரது உடலில் ஆண் தன்மை கொண்ட ஹார்மோன்கள் சுரப்பதால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டியவர், அவர் பெண்கள் பிரிவுக்கான போட்டியில் பங்குபெற தகுதியில்லாதவர் என்று சொல்லி பதக்கத்தைப் பறித்து ஊர்கூடி அவர் முகத்தில் சாணி அடித்த நிகழ்வு அது என்பதால் நாம் அதை எளிதில் மறந்துவிட்டோம். இப்பொழுது அந்த சாந்தி என்னும் முன்னால் வீராங்கனை தன் வாழ்நாள் ஜீவியத்தைக் கழிக்க கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை அப்படியே வள்ளி என்னும் கதாபாத்திரமாக வடித்திருக்கிறார்கள். இந்த வள்ளிதான் நம் குஞ்சுதபாதத்துக்கு கோச்சாக இருந்து வழிகாட்டுகிறாள். இந்த கதாபாத்திரத்தை நினைவு படுத்திய இந்த உத்திக்காகவே படக்குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழக வீராங்கனை சாந்தி விசயத்தில் நடந்த அரசியல் குளறுபடிகள் என்னென்ன என்பதை நாம் அறியோம். ஆனால் அவர் நிராகரிக்கவோ ஒதுக்கப்படவோ வேண்டியவர் இல்லை என்பதே நம் கோரிக்கை.

நினைத்துப் பாருங்கள். இந்த உடலில் மீது தற்காலிகமாக ஒட்டிக் கொண்ட ஒரு சாதாரண பெயரால் ஏற்படும் அவமானத்தையே துடைத்து எறிய முடியாமல் துவண்டு போகும் இது போன்ற கதாநாயக பிம்பங்களான நமக்கு மத்தியில், ஒரு பெண்ணை அதிலும் குறிப்பாக அவள் உடலை பொதுவெளியில் நின்று இது பெண் தன்மை இல்லாத உடல், இதில் ஆண் தன்மை கலந்திருக்கிறது என்று பரிகசிக்கும் நம் சமூகம் எவ்வளவு ஊனமாக இருக்கிறது. இதற்கு சட்டமும் காவல் இருக்கிறது. இப்படி மனிதாபிமானமற்ற சட்டங்கள் இயற்றப்படுவதும் மனிதர்களுக்காகத்தான் என்பது எத்தகைய முரண்பாடு. இந்த உடல் சார்ந்த அவமானங்களோடு தன் எஞ்சிய காலத்தை வாழ்வதற்கு அவள் செய்த தவறுதான் என்ன…?

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ…? பெயர் சார்ந்த அவமானத்தோடு வரும் இந்த வாழ்க்கையில் இந்த உடல் சார்ந்த அவமானத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.. உடல் சார்ந்த அவமானத்தையே நான் சகித்துக் கொண்டு வாழும் போது, சாதாரண உன் பெயர் சார்ந்த அவமானமா உன்னை துரத்துகிறது என்று மைய கதாபாத்திரத்தை நோக்கி வள்ளி கேள்வி எழுப்புகிறாளோ..? என்னும் கேள்வி எழுகிறது. இருப்பினும் இது தொடர்பான காட்சிகள் மிகையான விளைவுகளை பார்வையாளன் தரப்பில் ஏற்படுத்தாமல் கடந்து செல்வது ஒரு குறையே..

இதை தவிர சிறப்பான பாடல்கள், சிறப்பான காமெடி என குடும்பத்தோடு வருபவர்களை மகிழ்விக்கும் எல்லாத் தகுதிகளோடு எதிர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது இந்த எதிர் நீச்சல்  அதன் இலக்கை நோக்கி……