Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Friday, 11 October 2013

நய்யாண்டி:

களவாணி என்னும் கலகலப்பான திரைப்படத்தைக் கொடுத்து, பின்னர் வாகை சூட வா என்னும் சமூக சிந்தனையுள்ள படத்தைக் கொடுத்த இயக்குநர் சற்குணத்தை, இரண்டாம் படத்திற்கு வணிகரீதியாக கிடைக்காத வரவேற்பும், இன்றைய காலசூழலில் காமெடி திரைப்படங்களுக்கு கிடைக்கின்ற ஆகப்பெரிய வரவேற்பும் சேர்ந்து நய்யாண்டி செய்திருக்கும் போலும். பெரிதும் குழப்பிப் போன இயக்குநர், நல்லப் பெயர், நல்ல திரைப்படம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வணிகரீதியிலான வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நய்யாண்டியில் காமெடி களப்பணி ஆற்றுவோம் என்று களமிறங்கி இருக்கிறார். ஆனால் பாவம், இயக்குநருக்கு, காமெடி சுத்தமாய் கைகொடுக்கவில்லை..


ஒரு நல்ல திரைக்கதை என்பது, இரண்டே காட்சிகளில் பார்வையாளனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்கான திறப்பைக் கொண்டிருக்க வேண்டும். அந்த திறப்பின் வழியே இருள் சூழ்ந்த மாயவெளிக்குள் நுழைகின்ற அவன் கதை என்னும் சரடின் சிறு ஒளியின் துணையோடு, தான் பார்த்திராத, பயணிக்காத, தான் மறந்து போன அல்லது தனக்கு மறக்கடிக்கப்பட்ட ஒரு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவான். பல இடங்களில் முட்டி மோதி, எதிர்பாராத இடங்களில் அதிசயித்து, ஆச்சர்யப்பட்டு, ஆனந்தப்பட்டு அதிர்ந்து போய், குற்ற உணர்வால் சுருங்கிப் போய், இப்படி ஏதேனும் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, தனக்குப் பரிச்சயமில்லாத இருள்வெளியில் அவனது கண்கள் அந்த இருளுக்குப் பழக்கப்படத் தொடங்கும்… அவன் கண்களுக்கு அந்த இருள் சூழ்ந்த கதையின் கண்ணிகள் புலப்படத் தொடங்கும் பட்சத்தில் அவனை ஒளிபாயும் புறவெளியில் தள்ளி திரைக்கதை அவனை வழியனுப்ப வேண்டும்… இப்போது அவனது மனம் கண்கூசும் ஒளியில் கூட இருள் சூழ்ந்த வாழ்க்கையை எண்ணத் தொடங்கி இருக்கும்… இது நல்ல திரைக்கதை எழுதுவதற்கான ஒரு பொதுவிதி…

ஆனால் நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் கதைக்கே பதினெட்டாம் நூற்றாண்டு பஞ்சம் பீடித்திருக்கும் துயரநிலையில் நாம் திரைக்கதை நுட்பங்களை அலசுவதென்பது அவர்களை நையாண்டி செய்வது போல் இருக்கும்.. இந்த பஞ்சகாலத்திலும் இவர்கள் எடுத்திருக்கும் கதை என்னவென்று பார்த்தால், பல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணை (நாயகி நஸ்ரியா), என்ன செய்கிறார் என்பதையே சொல்லிக்கொள்ளாத அல்லது இயக்குநர் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒரு கதாபாத்திரம் காதலிக்கிறது… அப்படியென்றால் அது கண்டிப்பாக நாயகனாகதானே இருக்க வேண்டும்.. நாயகன் தான் காதலித்துவிட்டாரே, அவர் என்ன வேலை செய்கிறார்…? என்று ஒரு பேச்சுக்கு கூட கேட்காமல் அவர்களை இரண்டு முறை முறைத்துவிட்டு மூன்றாம் முறை பார்க்கும் போது காதலிப்பதற்காகவே சபிக்கப்பட்டு இருக்கும் நாயகியும் வழக்கம் போல் காதலிக்கத் தொடங்குகிறார்… இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட இயக்குநர் வில்லனை அறிமுகப்படுத்துகிறார்.. வில்லனும் அதே பெண்ணுக்கு நூல் விட்டால் தானே சுவாரஸ்யம்.. அவர் பெண்ணின் தகப்பன் சம்மதத்துடன் கல்யாணமே பேசிவிட… அச்சச்சோ இன்னும் சுவாரஸ்யம் இல்லையே என்று உணர்ந்த இயக்குநர் வேறொரு முடிச்சையும் போடுகிறார்… நாயகனுக்கு 40 வயதாகியும் கல்யாணமாகாத இரண்டு அண்ணன்கள்… அவர்களுக்கு கல்யாணம் ஆனால்தான்… நாயகன் கல்யாணம் செய்யமுடியும் என்று ஒரு அற்புதமான சுவாரஸ்யத்தையும் சேர்த்து கதை பண்ணியிருக்கிறார்கள்…


இப்படிப்பட்ட ஒரு கதையில் எதுதான் பார்வையாளனை கவரும்… எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும், அவளை நாயகனின் மனைவியாக மட்டுமே பார்க்கும் அக்மார்க் நண்பர்களும், தான் டாக்டருக்கு படித்திருந்தாலும், என்ன செய்கிறான், என்ன படித்திருக்கிறான் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் அவனை உருகி உருகி காதலிக்கும் மறை கலன்ற நாயகிகளும், நாயகனிடம் அடி வாங்குவதற்கென்றே சிக்ஸ்-பேக் உடம்பை வளர்த்துக் கொண்டு வரும் வில்லன்களும், கல்யாணத்துக்குப் பின்னரும் பொறுப்பாக நடந்து கொள்வதென்பதை நாயகியை கருவுறச் செய்வதில் மட்டுமே காட்டும் நாயகனையும், இவ்வளவு நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல், இறுதிக் காட்சியில் கூட்டமாய் வந்து அரவணைக்கும் குடும்பத்தையும் காலம் காலமாக காட்டி நம் தமிழ் சினிமா நமக்கு என்னதான் சொல்ல முயற்சிக்கிறது….

நண்பர்களுக்கு இடையிலான காட்சிகள், காதலர்களுக்கு இடையேயான காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான காட்சிகள் என்று எதிலுமே சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சிகூட அமையாமல் போனது இவர்களின் கற்பனை வறட்சியை காட்டுகிறது… பின்புலங்களில் பழைய பாடல்களை சூழ்நிலைக்கு ஏற்ப பாடவிடுவதை, வாரத்துக்கு ஒரு முறை விகடனே "இந்தப் பாட்டை இவர்களுக்கு டெடிகேட் செய்கிறோம்னு போடும் போது, படம் எடுத்து இவர்களுமா நையாண்டி செய்ய வேண்டும்… திரையில் அழகிய நஸ்ரியாவே இருக்கும் போதும் அவருக்கு முதுகைக் காட்டி திரும்பிக்கொள்ளும் அதிசயிக்கத்தக்க சூழலை உருவாக்கியது மட்டுமே இப்படத்தின் வெற்றி..



இப்படி குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்க எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய பாராட்ட எந்த தரப்பிலும் எந்த விசயமும் இல்லையே.. வேண்டுமென்றால் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத காரணத்துக்காகவும், இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது என்ற உண்மையை டைட்டில் கார்ட்டில் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டதற்காகவும், இந்த இரு காரணங்களுக்காக மட்டும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. அது தவிர்த்து தனுஷ், நஸ்ரியா, சற்குணம், ஜிப்ரான், நரேன், சிங்கம் புலி என அனைவருக்குமே அவர்களது கேரியரில் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கும் இந்தப் படம்… சற்குணம் அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி, காமெடிப் படம் என இது போன்ற விபரீத முயற்சிகள் எடுக்காமல், வாகை சூட வா போன்ற ஓடாத நல்ல திரைப்படங்களை எடுத்தால், நல்ல இயக்குநர் என்ற பேராவது மிஞ்சும் என்பது என் எண்ணம்.

Sunday, 21 July 2013

மரியான்:

தனுஷ், ரஹ்மான், பரத்பாலா, பார்வதி மேனன் என்று மிரள வைக்கும் கூட்டணி. ஆனால் நம்மை அரள வைப்பது போல் ஒரு படத்தைக் கொடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் பரத் பாலா “வந்தே மாதரம்” மூலம் தானும் பிரபலமாகி தன் நண்பர் எ.ஆர்.ரஹ்மானையும் புதிய உச்சம் தொட வைத்த டாக்குமெண்டரி இயக்குநர். அவரது முதல் பரிசோதனை முயற்சிப் படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த மரியான். முதல் முயற்சி என்றாலும் வெகுஜன ஊடகமான சினிமாத் துறையுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால் படத்தில் தென்படும் தவறுகளை புறந்தள்ள மனம் ஒப்பவில்லை. இயக்குநர் சில டாக்குமெண்டரி படங்களில் என் மனம் கவர்ந்தவர்தான், இருந்தாலும் மரியானின் கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருந்தால் மரியான் சாகா வரம் பெற்றிருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது…


படம் வெளிவருவதற்கு முன்பே க்ளிப்பிங்க்ஸ் மற்றும் ட்ரைலர் மூலம் படம் எது தொடர்பான படமென்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. அதற்கேற்றாற் போல் இயக்குநரும் நேர்காணல்களில் “இது பத்திரிக்கையில் வந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை, இதில் கடல் மீனவர்களின் பிரச்சனையை அலசி இருக்கிறோம் என்று கூறி இருந்தார். அந்த உண்மைச் சம்பவம் “தமிழ்நாட்டில் இருந்து சூடானுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனியில் கூலி வேலை செய்யச் சென்ற தொழிலாளிகளை ஒரு தீவிரவாத அமைப்பு தங்கள் போராட்டத்தின் பணத் தேவைகளுக்காக கடத்திச் சென்று சிறை வைத்தது…” இதுதான் இயக்குநரைப் பாதித்த அந்த உண்மைச் சம்பவம்… இனி கதைக்கு வருவோம்..

நீராடி என்னும் கடல்புற கிராமத்தின் மீனவன் மரியான்… தன் இரண்டு ஆண்டுகாலப் பணியை தென் ஆப்பிரிக்க நாடான சூடானில் கழித்துவிட்டு சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகிறான்… அவனது பின்னோக்குப் பார்வையில் அவனுக்கும் அந்த கிராமத்தில் உள்ள மீனவப் பெண்ணான பனிமலருக்குமான காதலும், அவன் மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு எதற்காக சூடான் வந்தான் என்பதான காரணமும் ப்ளாஸ்பேக்காக முதல்பாதியில் சொல்லப்பட.. அதன் முடிவில் மரியான் தீவிரவாத கும்பலால் கடத்தப்பட… அவன் அந்த கும்பலிடம் இருந்து உயிரோடு மீண்டானா..? இல்லையா…? என்பது இரண்டாம் பாதிக் கதை….


மரியானாக தனுஷ். குற்றம் குறை கண்டுபிடிக்கமுடியாத அற்புதமான நடிப்பு… வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் தனுஷ் அபாரம்… படத்திற்குப் படம் தனுஷ் என்னும் மனிதருக்குள் உள்ள நடிகன் மென்மேலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.. பனிமலராக “பூ” பார்வதி.. வழக்கமான மாசு, மரு கலக்காத அச்சு அசல் தமிழ்சினிமா கதாநாயகிக்கான கதாபாத்திரம்.. நாயகனின் காதலுக்காக ஏங்கி, அவனைக் கைப்பிடிக்க காத்திருந்து, அவனது பிரிவின் போது வருந்தி நம்மையும் வருத்தும் கதாபாத்திரம்…. இதில் என்ன புதுமையைக் கண்டு நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்… ஆனால் முதல்பாதி முழுவதும் கொஞ்சமாவது சுவாரஸ்யமாக செல்வதற்கு பார்வதியின் மிகையில்லாத க்ளாமரும், வசீகரமான நடிப்பும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை…

இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் இன்னும் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் எதுவும் மனதில் நிற்கவில்லை.. அதிலும் குறிப்பாக உமா ரியாஸ் கதாபாத்திரம்.. தனுஷ்க்கு அம்மா வேடத்தைக் கொடுத்து ஒரு சிறப்பான நடிகையை வீணடித்து இருக்கிறார்கள்.. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை துள்ளல்… சில பாடல்களின் போது நம்மையும் அறியாமல் கால்கள் ஆடத் தொடங்குகின்றது… பிண்ணனி இசை ஒன்றுமில்லாத சில காட்சிகளுக்குக் கூட ஜீவனைக் கொடுக்க உதவி இருக்கிறது.


முதல்பாதியில் கதை நகர்வு என்பது காதலைத் தவிர்த்து வேறெதும் இல்லை என்றாலும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், தனுஷ் பார்வதி இருவரது ஸ்கிரின் ப்ரசன்ஸும் அந்தக் குறையை ஈடுசெய்கின்றது. ஆனால் இரண்டாம் பாதிதான் படத்தின் மிகப்பெரிய குறை… சூடானில் மாட்டிக் கொண்டு தனுஷ் படும் கஷ்டத்தை விட திரையரங்கில் மாட்டிக் கொண்டு நாம்தான் அதிகமான கஷ்டத்தை அனுபவிப்பதாய் எண்ணத் தோன்றும் காட்சி அமைப்புகள். நீளமும் மிக…மி..க.. அதிகம்…. திரைக்கதையில் இருவரது உழைப்பு இருந்தும் எப்படி இந்த தவறை அனுமதித்தார்கள் என்பது ஆச்சர்யமே…

இதே போன்ற கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படம் தான், “Rabbit proof fence” என்னும் ஆஸ்திரேலிய மொழித் திரைப்படம். அங்கு குழந்தைகள் கடத்தப்படுவார்கள். ஆனால் சட்டப்படி. தீவிரவாதிகளால் அல்ல… அரசாங்கத்தால்… அந்த கும்பலிடம் இருந்து அந்த சிறுவர்கள் மீண்டு தங்கள் தாய் தந்தையரை அடைந்தார்களா என்பதே அதன் கதை.. அதன் திரைவிமர்சனத்தை படிக்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை அழுத்தவும்.. http://kanavuthirutan.blogspot.in/2012/12/rabbit-proof-fence.html  அந்த திரைப்படம் தந்த ஒரு அனுபவம் இதில் ஏற்படவே இல்லை என்பது வருத்தமே… அது போல் ஒரு சாதாரண மீனவனான மரியான் என்னும் கதாபாத்திரத்திற்கான வடிவமைப்பைத் தாண்டி பல இடங்களில் இண்டெலக்சுவல் ஹீரோவுக்கான வடிவமைப்பை அந்த கதாபாத்திரத்தில் திணித்து இருப்பதால், அந்த கதாபாத்திரம் இயல்பாக இல்லாமல் சிதைந்து விடுகிறது. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் அவை படத்தில் வரக்கூடிய இடங்கள் நம் பொறுமையை சோதிக்கும் இடங்களாக இருப்பதால் அதை ரசிக்கவும் முடியவில்லை..

ஹாலிவுட்காரரான மார்க் கோனின்ங்க்ஸ்தான் கேமரா. ஒவ்வொரு ப்ரேமும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் அத்தனை அழகாக வந்திருக்கிறது…. க்ளாசிக்கல் வொர்க்.. வசனம் ஜோ.டி.குரூஸ் அவர்கள்.. பல இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் வசீகரமாகவும் இருந்தது. குறிப்பாக “எம்ட்டி க்ரவுண்டுன்னு சொன்ன….” “அதான் பட்டா போட்டுட்டேல்ல… அப்புறமென்ன…” என்ற வசனம் வரும் சூழல் அலாதியானது…


படம் ஒரு மீனவனின் காதல் வாழ்க்கையை சொல்ல வருகிறதா, அல்லது மீனவர்களின் வாழ்வியல் பிரச்சனையை பேச வருகிறதா…? அல்லது சூடானின் உள்நாட்டு அரசியல் சூழலைப் பேச வருகிறதா…? அல்லது மரணப் பிடியில் மாட்டிக் கொண்ட ஒரு சாதாரண மனிதனின் வலி நிறைந்த உணர்வுகளை கடத்த முயல்கிறதா…? என்பதில் தெளிவில்லாமல் செல்லும் திரைக்கதையால்  எல்லா சாயத்திலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பூசிக் கொண்டு கடைசியில் பார்த்தால் கருமையாக காட்சி அளிக்கிறது இந்த மரியான்…

உங்களது பொறுமை மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் “மரியான்” பார்த்து அதை பரிசோதித்துக் கொள்ளலாம். பொறுமை தேர்விலும் ஜெயித்து படமும் உங்களுக்குப் பிடித்திருப்பது போல் தோன்றினால் நீங்கள் இந்த மூன்றில் ஏதோ ஒன்றுக்கு அடிமை என்று அர்த்தம்.. 1) தனுஷின் நடிப்பு 2)பார்வதி மேனனின் அழகு 3)ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.

Saturday, 29 June 2013

அம்பிகாபதி:

அம்பிகாபதி அமராவதி இதிகாசம் நான் படித்ததில்லை. அதனால் இந்த அம்பிகாபதிக்கும் அந்த இதிகாசத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதை நான் அறியேன். காசியில் வாழ்ந்து வரும் ஒரு இந்து அய்யர் குடும்பத்து பையன் ஒருவன் தன் முஸ்லீம் காதலிக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறான் என்பதே இந்த அம்பிகாபதியின் திரைக்கதை.


தனுஷ் காசியில் வாழ்ந்து வரும் குந்தன் என்னும் அய்யர் குடும்பத்துப் பையன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். ராவண வதம் செய்ய பணம் வசூலிக்கும் வேட்டையில் தன் குட்டி வானரப் படையுடன் அருகிலிருக்கும் முஸ்லீம் வீட்டுக்குள் நுழையும் தோராயமாக 8 வயது நிரம்பிய குந்தனுக்கு, அங்கு தொழுகையில் இருக்கும் அதே 8 வயது நிரம்பிய ஸோயா என்ற பெண்ணைப் பார்த்தவுடனே காதல் துளிர்க்கிறது.


10ம் வகுப்பு படிக்கும் போது விடலைப் பருவ வேகத்தில் அவளிடம் தன் காதலைச் சொல்ல.. அவள் இவனைக் கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறாள். இவன் காதலைச் சொல்வதும் அவள் கன்னத்தில் அறைவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் 15 முறை தொடருகிறது. குந்தனின் பிடிவாதத்தால் அவனைச் சந்திக்க ஒத்துக் கொள்ளும் ஸோயா அவனது பெயரைக் கேட்க அவன் ஒரு முஸ்லீம் பெயரைச் சொல்லி விலகுகிறான்.
சந்திப்பின் போது அவன் படிக்கின்ற கவிதையில் மயங்கி ஸோயாவுக்கும் காதல் மலர.. அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் மார்பைத் தடவ, நெஞ்சோடு ஒட்டிக் கொண்டிருந்த கயிறு, அவன் அய்யர் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட.. கண நேரத்தில் மலர்ந்த காதல், ”கயிற்றால்” கண நேரத்தில் கருகிவிடுகிறது. 16ம் முறையாக அவனை அறைந்துவிட்டு செல்கிறாள் ஸோயா. அடுத்த இரண்டு காட்சிகளில் குந்தனின் வன்முறையால் மீண்டும் அவர்களுக்கும் காதல் அரும்ப… அடுத்த காட்சியிலேயே அது ஸோயாவின் பெற்றோருக்குத் தெரிந்து மீண்டும் கருகிவிட.. ஸோயாவின் குடும்பம் அவளை ஆக்ராவுக்கு படிக்க அனுப்புகிறது. நான் உனக்காக காத்திருப்பேன் என்று வாக்களிக்கும் குந்தனை வேறு வழியின்றி பிரிந்து செல்கிறாள்.


முதல் முப்பது நிமிடக் கதை இது. பெரிதாக எதுவும் இல்லாமல் காதலை மட்டுமே பெரிதாகக் காட்டும் காட்சிக் கலவைகளால் பின்னப்பட்டு காதலை கற்றுக் கொடுக்க வந்த நம் கலாச்சாரப் படமாகவே அது எனக்கு தென்பட்டது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அதன் கதை யதார்த்தத்தின் சூழலை தன்னைச் சுற்றி சுற்றிக் கொண்டது போல் ஸோயாவின் கதாபாத்திரம் பேசத் தொடங்கிய போதுதான் சற்று ஆசுவாசம் கிடைத்தது. ஆனால் அதை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்ப முடிச்சுகள், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதையை மேடு பள்ளங்கள் நிரம்பிய கிராமத்து சாலைகளில் பயணிக்கச் செய்துவிடுவதால், பயணம் செய்த நமக்கு களைப்பே மிஞ்சுகிறது.

ஆக்ராவில் இருந்து 8 வருடம் கழித்து திரும்பி வரும் ஸோயாவுக்கு குந்தனை அடையாளமே தெரிவதில்லை. தன்னை அவளுக்கு நினைவு கூரவே குந்தன் பல பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. குந்தன் தன் நினைவு மீட்டல்களைத் தொடர்ந்து தன் காதல் வீணையை மீட்டத் தொடங்க ஸோயா பயங்கர அதிர்ச்சியுடன், மிக பக்குவமாக ”அது தன் அறியா பருவத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. எனக்கு இப்போது உன்மீது காதல் இல்லை” என்பதை தெரிவிக்கிறாள். ஸோயாவின் பதிவு குந்தனிடம் மட்டும் தான் கனிவாக இருக்கிறது. தனக்கு விருப்பமில்லாத ஒருவனை திருமணம் செய்ய பெற்றோர் வலியுறுத்தும் போது அவளது பதிவு சற்று காட்டமாகவே இப்படி வெளிப்படுகிறது. ”நீங்க சொல்ற பையனைக் கல்யாணம் செஞ்சாலும், குந்தன் மாதிரி பிச்சைக்காரப் பயல கல்யாணம் செஞ்சாலும் ஒண்ணுதா…”

இப்படி பயணிக்கும் கதையில் ஒரு கட்டத்தில் தான் டெல்லியில் படிக்கும் போது தன்னோடு படித்த ஒருவன் தன் மனதை கவர்ந்ததாகவும், அவனைத் தான் காதலிப்பதாகவும் சொல்லும் ஸோயா குந்தனிடமே உதவி கேட்க… மீதி என்ன நடந்தது என்பதை விருப்பமிருந்தால் வெண் திரையில் கண்டு கொள்ளுங்கள்….


இயல்பாகவே மனித ம(இ)னம் சுயநலமிக்கது. தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தனக்கு விருப்பமில்லாத நபர்களிடம் கூட அவர்கள் விரும்புவது படி நடந்து கொள்ளவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் நாம் எல்லாருமே. இந்த உளவியல் சார்ந்த கருத்துப் பொதிவு அம்பிகாபதியில் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸோயாவுக்கு குந்தன் மீது காதல் இல்லாவிட்டாலும், தன் காதலில் வெற்றிபெற குந்தனை அவள் அழகாக பயன்படுத்திக் கொள்கிறாள். குந்தன் மட்டும் அதற்கு சற்றும் இளைத்தவனும் இல்லை. ஸோயா மீதான தன் காதல் நிறைவேற, குந்தன் தன்னை காதலிப்பதாக சொல்லிக் கொண்டு, தன்னுடனே சிறுவயதில் இருந்து சுற்றிக் கொண்டு திரியும் தன் தோழி பிந்தியாவை பயன்படுத்திக் கொள்வதில் அவனும் தவறுவதில்லை.

இப்படி முதல்பாதியில் கதாபாத்திரங்களில் இருக்கும் ஒரு தெளிவும் நேர்த்தியும் இரண்டாம் பாதியில் இருப்பதில்லை என்பது படத்துக்கு மிகப்பெரிய தொய்வு. அதற்கு மிகப்பெரிய காரணம் படம் வாழ்வியல் தளங்களை விடுத்து அரசியல் தளங்களில் சமூக சேவைகளில் பயணிக்கத் தொடங்குவதுதான். ஒரு கட்டத்தில் “உன் பேரக்கூட நான் சொல்லமாட்டேண்டி… உன்ன விட்டா எனக்கு பொண்ணே கிடைக்காதா…” என்று ஸோயாவை விலகிச் செல்லும் குந்தன் அவன் பேசுவதற்கு ஏற்ப நடந்து கொள்வதும் இல்லை… ஸோயாவின் தேவை என்ன..? அந்த கதாபாத்திரம் எதை நோக்கி தன்னை நகர்த்துகிறது..? என்பதில் பெரும் குழப்பமே நிலவுகிறது. அவள் குந்தனை பழிவாங்க நினைக்கிறாளா…? தன் காதலனின் கனவை நிறைவேற்ற நினைக்கிறாளா…? இல்லை உண்மையாகவே சமூக சேவைகளில் நாட்டம் கொண்டவளாக மாறி இருக்கிறாளா..? இது எதுவுமே தெளிவாக இல்லை…


குந்தனாக தனுஷ்க்கு ஹிந்தியிலும் இது சொல்லிக் கொள்ளும்படியான படம். அவருக்கு தமிழ்படங்களில் ஏற்கனவே பரிச்சியமான கதாபாத்திரம் என்பதால் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸ் காட்சியின் போது வாயில் இருந்து ரத்தம் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்களின் தொனியில் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை வெளிக்காட்டுகிறார். வாழ்த்துக்கள் தனுஸ்.. ஆரம்ப காட்சிகளில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கொண்டு சின்ன சின்ன முக பாவனைகளில் வசீகரிக்கும் சோனம் கபூர், கையை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் போது தனுஸை அருகே அழைத்து முகத்தில் எச்சில் துப்பும் காட்சியை தவிர்த்து வேறெங்கும் பெரிதாக ஜொலிக்கவில்லை..

தோழி பிந்தியாவாக வரும் ஸ்வரா பாஸ்கரின் நடிப்பு கவனிக்க வேண்டிய ஒன்று. தன்னை விரும்பவில்லை என்பது தெரியும் போதெல்லாம் வெடிப்பதும், தன்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ்சுவதும், ஸோயாவைத் தேடிப் போகும் போதெல்லாம் “அவள நினைச்சே சாகப் போற…” என எச்சரிப்பதுமாக அருமையான நடிப்பு. சில கோணங்களில் சோனம் கபூரைவிட இவரே அழகாகவும் தெரிகிறார்.  நண்பனாக வரும் “மொகம்மத் ஆயூப்” சிறப்பாக நடித்திருக்கிறார். டைரக்டோரியல் டச் சென்று சொல்ல வேண்டும் என்றால், “குந்தனை திருடன் என்று எண்ணி பிடித்துவிட்டு அவனை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் நடுவே அமர்த்தி கல்லூரி தரப்பு மாணவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டு அவன் ஏன் திருடனாக மாறினான் என்று விவாதிக்கும் காட்சியை சொல்லலாம். அதில் இருக்கும் நக்கல் மிக அருமை. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை விட பிண்ணனி இசை அருமை.. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. நடராஜன் சுப்ரமணியம் மற்றும் விசால் சின்ஹாவின் ஒளிப்பதிவில் காசியும் ஆக்ராவும் அத்தனை அழகு..



மொத்தத்தில் ஆனந்த் எல்.ராய் ஒரு காதல்கதையை உணர்ச்சிபூர்வமாக சொல்ல முயன்று அதில் பாதி வெற்றியும் அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது ஒன்றும் லாயக்கில்லை என்று ஒதுக்கிவிட முடியாத படம். அதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்.