Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Wednesday, 6 December 2017

மெர்சல்:

தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ஆயிரம் வாலா பட்டாசு. (நீ…ளத்தில் சொன்னேன். 2 மணி நேரம் 50 நிமிடம்) அட்லி விஜய் கூட்டணியில் இது இரண்டாவது படம். பழைய தமிழ்ப்படங்களையே புதிதாக ரீமேக் செய்கிறார் என்று இரண்டே படங்களில் பாராட்டுப் பத்திரம் பெற்ற அட்லி, தனது மூன்றாவது படத்தில், அந்தப் பாராட்டுப் பத்திரத்துக்கு தான் பாத்தியமானவன் என்பதை மீண்டும் நிருபீத்திருக்கிறார். கதையாகப் பார்த்தால் பல தமிழ் திரைப்படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த கதை தான். அப்பாவைக் கொன்ற வில்லனை, மகன்கள் இரட்டையராக வந்து பழிவாங்கும் கதை. ஆனால் மெர்சல் பழைய படங்களின் காப்பி என்பதை அப்பட்டமாக காட்டுவதில்லை. ஏனென்றால் முந்தைய இரு படங்களைப் போல் கதை, திரைக்கதை என இரண்டையுமே ஜெராக்ஸ் செய்யாமல், திரைக்கதையில் சற்று(சற்றே) மெனக்கெட்டு இருப்பதால், மெர்சலில் இருக்கும் பழைய படங்களின் சரத்துகள் துருத்திக் கொண்டு பளீச்சென கண்ணில் தெரிவதில்லை.


ஏழை எளிய மக்களிடம் வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கிக் கொண்டு, மருத்துவம் செய்யும் சென்னை மருத்துவரான மாறன், தன் மருத்துவ சேவைகளுக்காக ப்ரான்ஸ் நாட்டில் உலக அமைப்புகளிடம் இருந்து விருதும் பெறுகிறார். பொழுதுபோக்காக மேஜிக்கும் செய்கிறார். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மேஜிக் ஷோவில் பதட்டமின்றி அனைவரின் கண் முன்னே ஒரு கொலையும் செய்கிறார். அவர் மருத்துவரா..? மேஜிஷியனா..?? கொலைகாரனா..?? ஏன் அந்தக் கொலையை செய்தார்..? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் படத்தின் கதை. இதை மூன்று காதல் எபிசோடுகளாகவும், மூன்று மோதல் எபிசோடுகளாகவும் பிரித்துக் கதை சொல்லி இருக்கிறார் அட்லி.


தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இது ஒரு முக்கியமான திரைப்படம். தமிழுக்கான மற்றும் தமிழர்களுக்கான விசயங்களைப் போகிறப் போக்கில் பேசி இருப்பதோடு, அரசியலுக்கான அர்ச்சதைகளையும் ஆங்காங்கே தூவி இருக்கிறார்கள். தளபதியாக வரும் மதுரைக்காரன் கதாபாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் உடல்மொழி, சிட்டுகுருவி கிழவியிடம் அவர் காட்டும் அடாவடிகள் எல்லாம் அவர் திரை வாழ்க்கையில் சற்றே புதிது. அது மட்டுமன்றி தோற்றத்தில் பல இடங்களில் குஷி காலத்து விஜயைப் பார்க்க முடிந்தது. ஆனால், தோற்றத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் குஷி காலத்து விஜயை அண்ணன் தம்பி இணையும் போதும், அதற்கு பிந்தையக் காட்சிகளிலும் காண முடிவதுதான் பரிதாபம். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் நித்யாமேனனுக்கு மட்டும் தான். நிறைவாக செய்திருக்கிறார். சமந்தா ஓரிரு காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு அலட்டிக் கொள்ளாத வில்லன் வேடம் அசால்ட்டாக செய்திருக்கிறார்.


பெரிய நடிகர்களுக்கான கமர்ஸியல் திரைப்படத்தை எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அது ஒரு மிகப்பெரிய கலை. அது அட்லிக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் என்னென்ன எந்தெந்த அளவு இருக்க வேண்டும் என்பதிலும் நல்ல தெளிவு இருக்கிறது. எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்னும் ஒற்றை வரிக் கதையின் மீது ஒரு அரண்மனையையே கட்டி இருக்கிறார். எளிய முறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், உடைகளைக் கொண்டும், உடல் நிறங்களைக் கொண்டும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால அவமானப்படுத்தப்படும் மனிதர்கள் என ஆங்காங்கே உண்மையான சம்பவங்களை கதைகளில் காட்சிகளாகக் கோர்த்திருப்பது படத்திற்கு வலுசேர்க்கிறது. ரஹ்மானின் இசையும் பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. அது போல் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் இடங்களுக்கு ஏற்றார் போல வண்ணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங்கில் இன்னும் பல காட்சிகளை வெட்டியிருந்தால், படத்தில் அலுப்பு தட்டி இருக்காது என்று தோன்றுகிறது..

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு திருப்தியைக் கொடுக்கும் படமாகவே அமைந்திருக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படம் ஏமாற்றத்தையே தரக் கூடும். திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொல்லியிருந்தாலும், அது மிகப்பெரிய மெனக்கெடல் இல்லை, ஒரு மிகச்சிறிய மெனக்கெடல் தான்.. கதாபாத்திரத்தின் அடையாளத்தை குழப்பவதன் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும் டெக்னிக்கை நான்-லீனியர் கதை சொல்லலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் அதுவே தான் திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது குழப்பத்தையும் கொடுக்கிறது. மருத்துவமும், மேஜிக்கும் தெரிந்த ஒருவன் தான் கொலை செய்திருக்கிறான் என்பது தான், போலீஸ்க்கு கிடைக்கும் க்ளூ. இதைக் கொண்டு தான் ஆடியன்ஸுக்கும் இருவரும் ஒருவரே என்பது போன்ற பிம்பத்தைக் கொடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்தர் பல்டி அடித்து, இருவருமே வேறு வேறு என்று சொல்லி, கதைக்குள் சென்று விடுகின்றனர். மேஜிக் தெரிந்வனுக்கு மருத்துவம் எப்படி தெரிந்தது என்ற கேள்வி கடைசி வரை தொக்கி நிற்கிறது. ஃபிரான்சில் அந்த மாடலிடம் விஜய் பணம் கொடுப்பது எதற்கு...? பின்பு ஏன் காஜலிடமும் உதவி கேட்கிறார்..? மேஜிசியன் விஜய் கதை சொல்ல ஆரம்பிக்கிறார், ஆனால் அவர் சொல்வதெல்லாம் டாக்டரைப் பற்றிய கதை இப்படி படம் முடிந்தப் பின்னர் யோசித்தால் ஆயிரம் கேள்விகள்.. இதுதான் படத்தின் மைனஸ். ஆனால் படம் பார்க்கும் போது, இந்த கேள்விகள் எதுவுமே நமக்குத் தோன்றாமல் இருப்பது தான் படத்தின் ப்ளஸ்..



Friday, 10 January 2014

ஜில்லா:

ஜில்லா படத்தின் இயக்குநர் நேசனுக்கு இது இரண்டாவது படம்.. முருகா என்னும் படம் கொடுத்தவர்.. வெகுநாட்களுக்குப் பின்னர் தன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி இருக்கிறார்.. எனக்கு முருகா படம் ஓரளவுக்கு பிடித்திருந்தது.. மேலும் விஜய், மோகன்லால் கூட்டணி வேறு என்பதால் படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததும் உண்மை.. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் வீரத்தை ஒப்பிடுகையில் ஜில்லாவின் கதை சற்று உசத்தி தான்.. ஆனால் அதைக் கொடுத்த விதத்தில் தான் ஜில்லா சற்றே பின்தங்குகிறது..


மிக சுவாரஸ்யமான ஒன்லைன் தான்… அடியாட்களின் ஆடுகளத்தில் ஒரு ஜில்லாவையே தங்களின் கண்ட்ரோலில் வைத்திருக்கும் வளர்ப்பு அப்பனும் மகனுமான மோகன்லால் விஜய் கூட்டணிக்கு இடையே.. மோதல் வருகிறது.. அந்த மோதல் உருவாவதற்கான ஆரம்பகட்ட சுவாரஸ்ய முரண்கள் அழகானது… அந்த மோதலுக்குப் பின் அவர்கள் இருவரின் உறவு என்னானது என்பது மீதிக்கதை… கதையை இன்னும் கூட கொஞ்சம் விரிவாகச் சொல்லலாம்.. ஆனால் முதல்பாதியின் சின்ன சின்ன சுவாரஸ்ய முடிச்சுகளை அது கெடுக்கக் கூடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்…

விஜய் ஏற்கனவே இதுபோல் சில படங்கள் செய்துவிட்டார் என்றாலும், தன் வளர்ப்பு அப்பாவை எதிர்க்க வேண்டிவரும் அந்த சூழல்தான் இவருக்கு புதிது.. தன் தகப்பனை எதிர்க்கும் போதும், தன் தங்கையின் கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் போகும் போதும் அளவான அழகான நடிப்பு.. அதுபோல் ஆக்சன் செண்டரிலும் வழக்கமான டான்ஸ் ஏரியாவிலும் ஏகமாக ஸ்கோர் செய்யும் விஜய் சறுக்கியது என்னவோ வழக்கம் போல் நடிப்பில் தான்.. எதையும் அலட்டிக் கொள்ளாத.. ஒரு ஊதாரித்தனமான நடிப்பு போக்கிரியில் கைகொடுத்தது என்றால், அதன் கதைக்களம் அப்படி.. இங்கு யார் சொன்னார்களோ..? அல்லது யாருமே சொல்லவில்லையோ என்னவோ..? படு சீரியஸான இடத்தில் கூட அவரது உதறலான பாடி லாங்க்வேஜும், அசால்டாக செய்வதாக நினைத்துக் கொண்டு அசால்ட் செய்திருக்கும் வசன உச்சரிப்பும் தான் மிக முக்கியமான மைனஸ்…


வளர்ப்பு அப்பாவாக மோகன்லால்.. அவரது நடிப்பு பெரிதாக தீனி போடக்கூடிய கதாபாத்திரம் இல்லை… இருப்பினும் ஒவ்வொரு ப்ரேமிலும் அவர் இருக்கும் போது எல்லோரையும் தவிர்த்து அவரைத் தேடித்தான் கண்கள் போகின்றது.. அந்த ஆக்ரோசமான நடிப்பும்.. அந்த கர்ஜனையும் அவரது கதாபாத்திரத்தை மிகவும் உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது… ஆனால் என்னைக் கேட்டால் இன்னும் கூட இவருக்கான கதைக்களத்தை விரித்திருக்கலாம் என்றே சொல்லுவேன்..

ஜோடியாக காஜல்.. அந்த யூனிபார்மில் இவரைப் பார்க்க சகிக்கவில்லை… படு அபத்தமாக இருந்தது… மேலும் இவரது பிருஷ்டத்தில் கைவைப்பது போல் வருகின்ற காட்சிகளும் எந்த அவசியத்திற்காக வைக்கப்பட்டது என்று விளங்கவே இல்லை.. அதிலும் சூரி சம்மந்தப்பட்ட காமெடி என்று சொல்லிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே சுமார்.. இப்படி சூரி, காஜல் வரும் காட்சிகளை வெகுவாக கத்தரி போட்டிருந்தாலே படத்தின் சுவாரஸ்யம் பல மடங்கு பெருகி இருக்கும்… அதிலும் விஜய் ஸ்கூல் ஸ்டூடண்டுக்கு ட்ரெய்னிங் எடுக்கும் காட்சிகளெல்லாம் தேவையே இல்லை…


இமானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பரவாயில்லை.. எனக்கென்னவோ ஏற்கனவே அவரது படங்களில் கேட்ட பாடல்களை மீண்டும் கேட்பது போல்தான் இருந்தது.. புதிதாக ஒன்றும் இல்லை… வழக்கம் போல் பிண்ணனி இசையில் ரொம்பவே சுத்தம்..

இப்படி கதையாகவும் திரைக்கதையாகவும் ஆட்சியைப் பிடிக்கும் ஜில்லா டெபாஷிட் இழப்பதெல்லாம் ஆங்காங்கே விஜயின் நடிப்பு, வேகத்தடையாக வரும் பாடல்கள் மற்றும் அதன் நீண்ட நேர பயணத்தில் தான்.. ஒரு அரை மணி நேரத்தை ட்ரிம் செய்திருந்தால் இன்னும் பிரகாசமாக ஜொலித்திருக்கும் ஜில்லா… மொத்தத்தில் ஜில்லா ஒரு ரவுண்டு போய் வரலாம்… பாதகமில்லை…