Showing posts with label விஷால்.. Show all posts
Showing posts with label விஷால்.. Show all posts

Friday, 11 April 2014

நான் சிகப்பு மனிதன்:

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் திரு அவர்களின் மூன்றாவது படம் இந்த நான் சிகப்பு மனிதன்.. ஒரு வணிகநோக்கோடு எடுக்கப்படும் கமர்ஸியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் முதல் பாதியும்.. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இரண்டாம் பாதியும் மிகச்சிறப்பான சமீபத்திய உதாரணங்கள்..


பொதுவாகவே பார்வையாளர்களால் யூகிக்கமுடியாத சம்பவங்களால் தொகுக்கப்பட்ட திரைக்கதை மிகச்சிறப்பான திரைக்கதை என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு… அதை முழுக்க தவறான கருத்து என்று சொல்லிவிடவும் முடியாது.. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இயக்குநர் சொல்ல வருகின்ற அந்த யூகிக்க முடியாத சம்பங்கள், மக்கள் யூகித்து வைத்திருக்கும் சம்பவங்களை விட கண்டிப்பாக மேம்பட்டதாக இருக்க வேண்டும்.. அப்படி இல்லாத பட்சத்தில் அது பார்வையாளர்களை வசீகரிக்காது.. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்துக்கு நேர்ந்திருப்பதும் அதுவே தான்.. இரண்டாம் பாதியில் நாம் கொஞ்சம் கூட எதிர்பாராத திசையை நோக்கி கதை பயணிக்கிறது.. நிமிடங்களுக்கு நிமிடம் திருப்பங்களால் நிறைந்து இருக்கிறது திரைக்கதை.. ஆனால் அந்த திருப்பங்களும் ட்விஸ்டுகளும் நமக்கு ஆச்சரியத்தையோ ஆனந்தத்தையோ கொடுக்காமல் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் கொடுப்பது தான் இத்திரைப்படத்தின் மிகமிக முக்கியமான குறை..

Narcolipsy என்பது ஒருவிதமான தூக்கத்துடன் தொடர்புடைய உடற்கூறியல் குறைபாடு.. இந்த நோய் பொதுவாக இலட்சத்தில் ஒருவருக்கு இருக்குமாம்.. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அளவுக்கு அதிகமான துக்கம், சந்தோசம், கோபம், பயம், அதிர்ச்சி, அழுகை, ஆசை இப்படி எந்தவகையான உணர்ச்சி மேலோங்கினாலும் உடனடியாக தூக்கத்துக்கு சென்றுவிடுவர்.. அவர்களாக மீண்டும் எழுந்தால் தான் உண்டு.. ஆனால் அந்த தூக்கத்தின் போதும் மூளை விழித்திருப்பதால் தங்களைச் சுற்றி நடக்கின்ற உரையாடல் மற்றும் சத்தங்கள் அவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த நோய்தான் படத்தின் ஹைலைட்டான விசயம்…

சிறுவயதிலேயே விஷால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்… அவருக்கு காதலி கிடைப்பதோ கல்யாணம் ஆவதோ மிகப்பெரிய பிரச்சனை.. ஏனென்றால் ஒரு பெண் அவரது கையை தொட்டாலே ஏற்படும் உணர்ச்சி பிளம்புகள் கூட அவரை உறக்கத்துக்கு ஆட்படுத்திவிடும்.. இப்படி இருக்க ஒரு பெண்ணுடன் எப்படி அவரால் உடலுறவு கொள்ளமுடியும்.. எனவே அவருக்கு திருமணம் தள்ளிப் போகிறது.. இருப்பினும் ஒரு கட்டத்தில் நாயகியுடன் ஏற்படும் நட்புறவு அவர்கள் இருவருக்குமிடையேயான திருமணத்துக்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்குகிறது… அப்போது நடக்கின்ற ஒரு சம்பவம் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட.. அந்த சம்பவத்துக்கு காரணமான நபர்களை பழிவாங்க துடித்து உறங்கத் தொடங்கி விடுகிறார் விஷால்.. இப்படி ஒரு நோயை வைத்துக் கொண்டு அவர் அவர்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை..


அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு சம்பவம்.. ஏற்கனவே நாயகனுக்கு இருக்கின்ற நோய்.. அதை மீறி அவர் அவர்களைப் பழிவாங்கினாரா..? இல்லையா..? இப்படி எல்லாமே சுவாரஸ்யமான தொகுப்புகள்.. இதில் எதிலுமே பிரச்சனை இல்லை.. பிரச்சனை எங்கு என்றால், அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் என்று சொன்னேனே… அந்த சம்பவம் எதற்காக அரங்கேறியது என்பதில் தான்… அதன் பிண்ணனியில் தான் பிரச்சனையே உள்ளது.. ஒரு திரைப்படத்துக்கு மிக முக்கியமான விசயங்கள் கதை திரைக்கதை என்ற இரண்டாக இருந்தாலும், அந்தக் கதை எதைப் பற்றியது என்பதை, பார்வையாளர்கள் புரிந்து கொள்வதைப் போல், முதல் அரைமணி நேரத்துக்குள் அதற்கான காட்சிகளை வைத்து அவர்களை தயார் செய்வதும் மிகமிக முக்கியமானது…

இப்போது நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை விட்டுவிட்டு, விசித்திரமான நோய்களை பிரதானமாகக் கொண்டு ஏற்கனவே வெளிவந்த முக்கியமான மற்ற இரண்டு படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.. அந்நியன் மற்றும் கஜினி. இரண்டிலுமே நாயகர்கள் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு  இருப்பார்கள்.. இரண்டிலுமே கதையின் மையம் அந்த விசித்திரமான நோய் அல்ல.. அந்நியனில் சக மனிதர்களின் ஒழுங்கின்மை அல்லது அலட்சியத்தால் சிறு வயதிலேயே பாதிக்கப்படும் ஒரு சிறுவனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை தான் மையம்… ஒழுங்கின்மையை அவன் வெறுக்கிறான் என்பது படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கிவிடும்.. எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பது, விதிமுறைகளை சாலையில் செல்லும் போது சரியாக கடைபிடிப்பது.. இப்படி குறைந்தது நான்கு முதல் ஐந்துவிதமான ஒழுங்கின்மையை வெறுக்கும் காட்சிகள் வரிசையாக காட்டப்பட்டு இருக்கும்.. இறுதியாக நாயகன் இப்படி இருப்பதற்கு காரணமும் ஒரு மனிதனின் அலட்சியம் அல்லது ஒழுங்கின்மைதான் என்று மையத்தை விளக்கும் போது அதை பார்வையாளன் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வான்…

கஜினியிலும் நாயகன் தான் அந்த விசித்திரமான நோயால் தாக்கப்பட்டு இருப்பான்.. ஆனால் கதையின் மையம்.. நாயகன் அல்ல நாயகி.. நாயகிக்கு ஏற்பட்ட கொடூரத்துக்கு பதிலடி கொடுக்க நினைப்பான் நாயகன்.. ஆனால் நான் சிகப்பு மனிதனில் வருவதைப் போலவே நாயகனுக்கு அவனது நோய் இடையூறாக இருக்கும்… ஆனால் படத்தின் மையம் நாயகிக்கு எதனால் அந்த கொடூர சம்பவம் நேர்ந்தது என்பது.. எதனால் அது நேர்ந்தது என்றால் பிறருக்கு உதவ முற்பட்ட போது… படத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு நாயகியின் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட குணாதிசயம் சிலபல காட்சிகளால் காட்டப்பட்டு இருக்கும்… அதனோடு தொடர்புபடுத்தியே பிரச்சனையும் ஏற்படும் போது கதை பார்வையாளர்களை வெகுவாக உள்ளிழுத்துக் கொள்ளும்… நான் சிகப்பு மனிதன் சறுக்குவது இந்தப் புள்ளியில் தான்…

படத்தில் Narcolipsy என்னும் அந்த நோய்க்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்குமே தவிர கதாபாத்திரத்துக்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப்படவே இல்லை… அதுபோல் படத்தில் மையமாக நிகழும் அந்த சம்பவத்தை பார்வையாளர்கள் முதலிலேயே உள்வாங்கிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் திரைக்கதையில் இல்லவே இல்லை.. அதுவும் இல்லாமல் இயக்குநர் திரு தெரிந்து செய்கிறாரா..? இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை.. தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் முழுத் தவறும் நாயகனின் மீது இருக்க… நாயகன் படம் முழுக்க நாயகிகளை பழி வாங்கும் நடவடிக்கைகளையும் வெற்றி கொள்ளும் செயல்களையும் செய்து கொண்டே இருப்பான்… நாயகனின் கதாபாத்திரம் நம்மிடையே சாகடிக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு கொலைவெறியே வந்து கொண்டு இருக்கும்.. இயக்குநர் கொஞ்சம் கூட அதைப் புரிந்து கொள்ளாமல் கதையை நகர்த்திக் கொண்டே சென்று கொண்டு இருப்பார்.. அதே போலத்தான் இங்கும்…

நாயகியான லட்சுமி மேனனுக்கு ஏன் அந்த கொடூரம் நிகழ்கிறது என்பதற்கான பின்கதையாக சொல்லப்படும் அந்த ப்ளாஷ்பேக் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நாயகன் மீதுதான் தவறு இருப்பது போல் படுகிறது.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது மற்றொருவன் தனது தனிப்பட்ட கருத்தாக்கங்களை திணிப்பதும், ஒழுக்கம், கற்பு போன்ற பழமையான கருத்தாக்கங்களின்  வளமையின் படி ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுவதுமான கலாச்சார கல்லெறிகள் எல்லாம் இத்திரைப்படத்தில் கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிவதைப் போல் ஆகிவிட்டது… மேலும் கடைசி காட்சியில் நண்பன் சுந்தர் இறக்கும் முன் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் நாயக கதாபாத்திரத்தையே சிதைத்துவிடுவதால் அந்த கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்வு நம்மை களிப்படையச் செய்யாமல் காயப்படுத்தவே செய்கிறது..

ஆனாலும் முதல் பாதியில் வரும் சில காட்சி அமைப்புகள் எல்லாம் மிகச் சிறப்பானவை… குறிப்பாக Narcolipsy என்னும் அந்த நோய் தொடர்பான குணாதிசங்கள் எல்லாமே.. இந்திரனாக வரும் நாயகன் விஷாலுக்கு இருக்கும் அந்தப் பத்து ஆசைகள், அதிலேயே காதலையும் கொண்டு சென்ற விதம்… எப்போதாவது நீ தூங்காமல் இருப்பாயா..? என்று நாயகி நாயகனைக் கேட்டு அதற்கு இருவரும் விடை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து பார்க்கும் இடம்.. டூவிலரில் பெல்ட் அணிந்து பயணிப்பது.. மயில்சாமியுடன் வரும் அந்தக் காமெடி காட்சி என சில காட்சிகள் மிகச் சிறந்த மசாலா திரைப்படத்திற்கான காட்சிக் கோர்ப்புகளாகத்தான் இருந்தன.. அதுபோல வசனங்களும் அருமை.. பத்து கேள்வியை கேட்டு எப்புடிங்க ஒருத்தன பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. என்ற கேள்விக்கு அவன் சொன்ன பத்து பதில வச்சி.. அவனப் பத்தி நூறு கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும் என்று சொல்லும் லட்சுமியின் பதில்.. என வசனங்கள் பல இடங்களில் நன்றாகவே இருந்தது…


லட்சுமி மேனன், விஷால், சுந்தர் ராம், இனியா என எல்லோருக்குமே நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள்… நடிப்பில் குறை சொல்லமுடியவில்லை.. சிறப்பாகவே இருக்கிறது… வழக்கமான தாய் கதாபாத்திரத்தில் வந்து போகும் சரண்யாவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.. பாடல்கள் படத்துக்கு மற்றொரு முக்கியமான மைனஸ்.. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை.. பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம் தான்… இசை ஜி.வி.பிரகாஷ்.. ஒளிப்பதிவு பிரமிப்பாக இருந்தது… ஒரு பாலைவன பாடல் காட்சியில் மரச் சட்டகங்களுக்கு ஊடாக அவர் வைத்திருந்த ஒவ்வொரு ப்ரேமும் ரம்மியமாக இருந்தது.. ஒளிப்பதிவு ரிச்சர்ட்டு. என். நாதன்.

இயக்குநர் திரு.. நல்ல வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர்.. ஆனால் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தன் திரைக்கதையில் திணித்து வைப்பதாலும், மிகச் சின்ன சின்ன விசயங்களில் கதையில் தவறு இளைத்துவிடுவதாலும் அவர் எதிர்பார்க்கின்ற ஒரு வெற்றி அவருக்கு இன்றைய தினம் வரை கிடைக்காமல் இருக்கிறது.. ஆக மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை நீங்கள் பாருங்கள்… முதல் பாதி உங்களுக்கு மிகச்சிறப்பான எண்டர்டெயினராக இருக்கும்… ஆனால் இரண்டாம் பாதி அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு..



Saturday, 9 November 2013

பாண்டிய நாடு:

யதார்த்தமான சினிமாக்களை கொடுக்கின்ற முயற்சியில் ஆங்காங்கே ஏற்பட்ட சில சறுக்கல்களைத் தவிர்த்து, தொடர்ச்சியாக கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் அந்த கவன ஈர்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியே.. யதார்த்தமான சினிமாவாக இருந்தாலும் அதை வணிகரீதியாக வெற்றி பெற வைக்கவும், கதாநாயக பிம்பங்களை நம்பி வரக்கூடிய சாதாரண பாமர மக்களையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும் யதார்த்தத்தின் எல்லைக் கோடுகளை சில இடங்களில் பாண்டிய நாடு மீறி இருக்கிறது.. இருப்பினும் அத்தைகைய மீறல்கள் கதையையோ, நமது கவனத்தையோ சிதைத்து அயர்ச்சியைக் கொடுக்காமல், நம்மை ஆசுவாசப்படுத்தி அனுப்புவதே பாண்டிய நாட்டின் சிறப்பு..


கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. தமிழ் சினிமா இதுவரை தொடாத களமும் இல்லை. ஆனால் மற்ற வழக்கமான திரைப்படங்களில் இருந்து பாண்டிய நாடு எந்த இடத்தில் மாறுபடுகிறது என்றால், கதாநாயகர்களின் தோள்களிலேயே மொத்த திரைக்கதையும் தொங்கிக் கொண்டு இருக்காமல், நாயகன் விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த், மற்றும் விஷாலின் தகப்பனாக வரும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரையும் முன்னிலைப்படுத்தி அவர்களின் தோள்களிலும் பயணிப்பதில் தான் பாண்டிய நாடு ஒளி மங்கிய கற்களுக்கு இடையில் வைரமாக மின்னுகிறது.. வைரம் என்று உவமைப்படுத்துவதால் இது ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு, ஒரு அற்புதமான கலைப் படைப்பாக அழியாமல் நம் மனதில் நிலைக்கும் போலும் என்று கற்பிதம் கொள்ள வேண்டாம்.. ஆனால் இளம் உதவி இயக்குநர்களுக்கு ஒரு சாதாரண கல்லை எப்படி பட்டை தீட்டுவது என்று பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன் என்பதாகக் கொள்ளலாம்.

சமரில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு, இதில் விஷாலின் நடிப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.. பயந்த சுபாவம் கொண்டவராக, பதற்றமான சூழலில் திக்கித் திக்கிப் பேசுபவராக, தன் எதிரியை நேருக்கு நேர் நின்று புடைத்தெடுக்கும் நாயக பிம்பமாக இல்லாமல், பதுங்கி நின்று கொண்டு பாய முயலும் புதுவிதமான விஷாலைப் பார்க்க முடிகிறது. அவரது சுபாவத்துக்கு ஏற்றார் போல் அவரை பெப்பி ஓட்டவிட்டிருப்பது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு இன்னும் பலம் சேர்க்கிறது. எல்லா ப்ரேம்களிலும் முழுவதுமாக ஆக்ரமிக்க எண்ணாமல், கதையின் தேவை உணர்ந்து விக்ராந்துக்குப் பின்னால் பம்மிக் கொள்வதும், ஆக்ரோசமாய் வெடிக்காமல் அடக்கி வாசித்திருப்பதுமாக, தயாரிப்பாளர் விஷாலிடம் ஆரோக்கியமான மாற்றங்கள்… வாழ்த்துக்கள்..
விஷாலின் தந்தையாக இயக்குநர் பாரதிராஜா.. தன் மகனின் சாவுக்கு நியாயம் தேடி அலையும் ஒரு பாசக்கார தந்தையை நம் கண் முன் நிறுத்துகிறார். அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் இளைய மகனை சீண்டுவதும், சிம்மக்கல் ரவியிடம் அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் மூத்த மகனைக் கண்டு பொருமுவதும், அர்த்த ராத்திரியில் தன் நண்பன் வீட்டுக்குச் சென்று கூலிப்படையைப் பற்றி விசாரிப்பதுமாக இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு ஒரு புதுவண்ணத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல.. இயக்கத்தில் மட்டுமின்றி தான் நடிப்பிலும் இமையம் என்பதை அந்த க்ளைமாக்சில் விஷாலின் கைகளை பிடித்துக் கொண்டு அகமகிழும் அந்த ஒரு காட்சியிலேயே நிருபிக்கிறார்..


விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், மிகையான ஒப்பனைகள் இன்றி, மனதில் நிற்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.. இது போன்ற கதையோடு தொடர்புடைய கதாபாத்திரங்களில் இவர் கவனம் செலுத்தலாம்.. விஷாலை முன்னால் விட்டு பின்னால் நடப்பதும், சண்டை என்று வந்ததும் முந்திக் கொண்டு முன்னால் நிற்பதுமாக நிறைவான கதாபாத்திரம்..

நாயகியாக லட்சுமிமேனன். வழக்கமாக நாயகிகள் செய்யும் அதே வேலைதான்.. நாயகனை காதலித்து கைப்பிடிக்கும் கதாபாத்திரம். ஸ்கூல் டீச்சராக பாந்தமான அழகுடன் வளைய வருகிறார். காரணமே இல்லாமல் காதலிக்கவில்லை என்றும், காரணமே இல்லாமல் கல்யாணம் செய்து கொள்வோமா என்றும் கேட்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து இருக்கிறார்.. சூரிக்கு வழக்கம் போல் நாயகனின் காதலுக்கும் லட்சியத்துக்கும் உதவும் நண்பன் கதாபாத்திரம். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தவறிவிழும் அந்தப் பணப்பையை எடுத்துக் கொண்டு செல்லும் இடத்தில் மட்டும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்..


வசனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. காதலர்களுக்கு இடையிலான உரையாடலில் இளமை ததும்புகிறது.. மகனின் சாவில் மர்மம் இருப்பதாக எண்ணி, கையெழுத்து இட மறுக்கும் பாரதிராஜாவிடம், அந்த படிவத்தைப் பிடிங்கி கையெழுத்திடும் ரவுடி சொல்லும் அந்த வசனம்.. நம் சட்டத்தின் இருட்டறைகளை வெளிப்படுத்துகிறது.. இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் மனதை நிறைக்கிறது.. அதிலும் குறிப்பாக அந்த பைவ் பைவ் பாடலிலும், ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான் பாடலிலும் துள்ளல் இசை.

பாண்டிய நாட்டின் வெற்றிக்கு நடைமுறை நிகழ்வோடு தொடர்புடைய அந்த கதைக்களம் இன்னும் பலம் சேர்க்கிறது. க்ரானைட் குவாரி ஊழல்களின் புழுதிக் காற்று இன்னும் கண்களை கலங்க வைத்துக் கொண்டு இருக்கும் சூழலில் அதே சூட்டோடு மதுரை மாஃபியாக்களின் வாழ்க்கையை கிட்டதட்ட அச்சு அசலாகத் தொட்டுக் காட்ட முயன்றிருக்கும், அசாத்திய முயற்சிக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்… சில நிஜ பிம்பங்களின் நிழல்களாக வளைய வரும் சிம்மக்கல் ரவியும், ராஜாவும் சிலரது கண்களை உறுத்தக்கூடும்.. சிம்மக்கல் ரவியாக நடித்திருக்கும் அந்த நடிகரின் உடல்மொழி அபாரம்.. தன் குருவின் இடத்துக்கு தான் வந்தவுடன் அவரது உடையில் ஏற்படுகிற அந்த மாற்றம் அச்சு அசலாக அந்த தாதாவின் தோரனையை அவருக்கு கொடுத்துவிடுகிறது. அந்த குன்னூர் அட்டெம்ட்டின் போது சிம்மக்கல் ரவியின் தாண்டவம் மட்டுமே அந்தக் காட்சிக்கு உயிர்ப்பைத் தருகிறது..


பல படங்களில் பார்த்த அதே காட்சிகள் தான்… ஆனால் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் அந்த பழைய காட்சியே புதியதாக மாறிப் போகின்ற வித்தையை பாண்டிய நாட்டில் பார்க்கலாம்… உதாரணமாக விஷாலும், விக்ராந்தும், சூரியும் சேர்ந்து கொண்டு அந்த ரவுடியின் கையாளை கொலை செய்ய முயலும் காட்சியையும், பாரதிராஜா மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தப்பிச் செல்லும் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் கூறலாம்.. திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் சுவாரஸ்யம் படத்துக்கு மிகப்பெரிய பலம்.. விக்ராந்தின் முடிவும், பாரதிராஜா மாட்டிக் கொள்வாரோ என்ற பதைப்பும், விஷாலும் வில்லனும் எங்கு சந்தித்துக் கொள்வார்கள் என்ற நிமிடங்களும் தான் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன…


ஆனால் அந்த சினிமாத்தனமான முடிவுதான்… வழக்கம் போல் நம் மனதை எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாக நம்ப வைத்து, களிப்பில் ஆழ்த்தி அதைப் பற்றி மீண்டும் யோசிக்கவே விடாமல், பிற வேளைகளில் நம்மை மூழ்கடித்து திரைப்படம் தரவேண்டிய அந்த தாக்கத்தை தராமல், அப்படி ஒரு திரைப்படம் பார்த்ததையே மறக்கச் செய்துவிடுகிறது.. இருப்பினும் நாம் கொடுக்கின்ற காசுக்கும், நம் களிப்பிற்காகவும் அவர்கள் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள் என்பது உண்மை…