சிம்புத்தேவன்,
பசங்க பாண்டிராஜ் இருவரிடமும் உதவி இயக்குநராக இருந்த நவீன் என்பவரின் முதல் படம்.
படம் வெளிவருவதற்கு முன்பாகவே சினிமா வட்டாரத்தில் அதிகமாகப் பேசப்பட்டு ஒருவித எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி இருந்த படம். அந்த எதிர்பார்ப்பை சினிமாதுறையினர் இடையே அது காப்பாற்றிக்
கொண்டது என்றே சொல்ல வேண்டும். படத்தின் டைட்டில் கார்டில் சிம்புத்தேவன் மற்றும் பாண்டிராஜை
குறிப்பாக உணர்த்திய நவீன், தனக்கு இன்ஸ்பிரேசனாக இருந்த மேற்கத்திய இயக்குநர்கள் என்று
பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்றாலும், குவாண்டின் டொரோண்டினோ, கோயன் பிரதர்ஸ், கேய்
ரிச்சி, ஆகியோரின் பாதிப்பில் சினிமாவுக்கு வந்தவர்தான் நவீன் என்பது மூடர்கூடம் படத்தின்
சில காட்சியமைப்புகளைப் பார்க்கும் போதே கணிக்கமுடிகிறது..
முதல்
படம் என்பதால் இவரும் இன்றைய தமிழ்சினிமாவின் ஆச்சார்ய இலக்கணத்தின்படி, காமெடி என்ற
பெயரில் நாளிதழ்களில் வரும் கடிஜோக்ஸை எல்லாம் ஒன்றாக சேர்த்துக் கட்டி, அதில் வலுக்கட்டாயமாக
ஒரு ஒன்லைனரை திணித்து, அதை கதை என்று சொல்லிக் கொண்டு, நானும் ஒரு காமெடிப்படம் எடுத்து
கல்லா கட்டிவிட்டேன் என்று மார் தட்டிக் கொள்ளாமல் பிடிவாதத்துடன் தனித்துவமாக நின்றதற்காகவே
நவீனுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்…
ப்ளாக்
க்யூமர் என்று சொல்லப்படும் சீரியஸான காட்சிகளில் சிதறி வழியும் நகைச்சுவைத் தன்மை
கொண்ட படைப்புகளின் பட்டியலில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும் படங்களைத் தொடர்ந்து தற்போதைய
வருகை இந்த மூடர்கூடம். சமுதாயத்தால் பல்வேறுவிதமாக பாதிக்கப்பட்ட நான்கு பேர் சேர்ந்து
ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க முயலுகிறார்கள்… அந்தக் கொள்ளை வெற்றியடைந்ததா..? இல்லையா…?
என்பதே மூடர்கூடத்தின் ஒருவரிக் கதை..
திருடச்
செல்லும் நால்வராக செண்ட்ராயன், நவீன், குபேரன், மற்றும் வெள்ளையன். திருடப் போகும்
வீட்டில் வசிப்பவர்களாக ஜெயப்பிரகாஷ், அனுபமா, ஓவியா, குட்டிப் பெண் மற்றுமொரு குட்டிப்
பையன்.. நவீனாக நவீனே நடித்திருக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய நடிப்பு. திருடச் செல்லும்
நால்வருமே முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நவீன் பேசும் கம்யூனிசம் மற்றும்
உலகமயமாக்கல் தொடர்பான வசனங்களும் அவருடைய செயல்பாடுகளும் எந்த இடத்திலும் அவரை ஒரு
முட்டாளாக காட்டவே இல்லை என்பது ஒரு குறை..
செண்ட்ராயனாக
நடித்திருக்கும் செண்ட்ராயனுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது போன்ற கதாபாத்திரம்.
அதிலும் குறிப்பாக கஞ்சா வாங்க வந்தவர்களிடம் அவர் பேசும் வசனங்களின் தொணியும், வெள்ளக்காரண்ட்ட
தமிழ்ல பேசுவியா..? என்று சாஃப்ட்வேர் இஞ்சீனியரை வாறும் இடமும், முதன் முதலில் ஓவியாவைப்
பார்த்துவிட்டு அவர் கொடுக்கும் ரியாக்சனும் க்ளாஸ்….
இவர்களைத்
தவிர்த்து வழக்கம் போல் ஜெயப்பிரகாஷும், ஜெயப்பிரகாஷோடு போனில் பேசும் அந்த சிறுமியும்
கவனம் ஈர்க்கிறார்கள்.. அந்த சிறுமியின் டயலாக் டெலிவரி அத்தனை க்யூட்.. முதன்முதலாக
கதாநாயகி என்று இல்லாமல் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் ஓவியா.. நடிப்பதற்கு பெரிதாக
ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம் தான்… அதனால் அவரைப் பற்றி பெரிதாக பேச ஒன்றுமில்லை… குபேரனுக்கும்
அந்த சிறுவனுக்கும் ஏற்படுகின்ற உறவு ஒரு குட்டி சிறுகதை…
ஒவ்வொரு
கதாபாத்திரத்தின் பின்புலக்கதையையும் விவரிக்கும் விதம் அருமை.. 2D அனிமேஷன், மெளனப்படம்
என்று வகைவகையாக விரிகிறது.. ஆரம்பக் காட்சிகளில் செண்ட்ராயனை தேடி வரும் போலீஸ், போலீசிடமே
மாட்டிக் கொள்ளும் செண்ட்ராயன், பொம்மை திருட வந்த திருடன் ஒவ்வொரு ரூமிலும் மாட்டிக்கொண்டு
முழிக்கும் காட்சி, போனில் அந்தச் சிறுமி ஜெயப்பிரகாஷை வெறுப்பேற்றும் காட்சி, நாய்க்கான
பின்புலக் கதை, பாடல்கள் எடுக்கப்பட்ட விதம், பாடல்கள் வந்து போகும் சூழ்நிலை, வசனங்களின் கூர்மை, ஜேசுதாஸின்
நீயும் பொம்மை, நானும் பொம்மை பாடலை பயன்படுத்திய விதம் என்று பாராட்டப் பல இடங்கள்
உண்டு..
ஆனாலும்…….
முக்கியமான குறையாகப்படுவது திரைக்கதையில் இல்லாத விறுவிறுப்பு… ஆரண்யகாண்டத்தில் பசுபதி
தன் மனைவியை காப்பாற்றுவானா..? சப்பை சுப்பு உறவு சிங்கப்பெருமாளுக்கு தெரிந்துவிடுமா..?
காளையனை அந்தச் சிறுவன் எப்படி காப்பாற்றுவான்..? இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு
திரைக்கதை எழுதப்பட்ட போதும் கூட அது வணிகரீதியான வெற்றியை அடையவில்லை.. சூதுகவ்வும்
திரைப்படமோ… அந்த முட்டாள் கும்பல் போலீஸிடம் மாட்டிக்கொள்ளுமோ என்னும் இரண்டாம் கட்ட
பரபரப்பையும், அதன் எதிர்பார்க்காத பின்புல விளைவுகளையும் சாத்தியமாக்கியதால் வெற்றிபெற்றது…
ஆனால்
மூடர்கூடத்தில் அந்த கதாபாத்திரங்களுக்கான ஒரு தேடல் என்பது இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய
குறையாக இருக்கிறது… அவர்கள் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள்… ஒருவேளை அவர்கள் போலீஸில்
மாட்டிக் கொள்வார்களோ என்ற திகைப்பு ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே
ஜெயிலில் இருந்துதான் வந்தவர்கள்.. மேலும் அந்தக் கொள்ளையில் அவர்கள் வெற்றிபெற வேண்டுமென்கின்ற
துடிப்பும் ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் கதாபாத்திரத்திற்கு பணத்திற்கான தேவை
இருப்பது போன்ற காட்சிகள் ஏதுமே காட்டப்படுவதில்லை… இதனால் கதை பல இடங்களில் மெதுவாக
நகர்வது போன்ற பிம்பம் தோன்றுகிறது.. மேலும் அவர்கள் திருடித்தான் தங்கள் வாழ்க்கையை
ஓட்ட வேண்டிய கட்டாயமும், அதற்கான நியாயமும் சரிவர சொல்லப்படவில்லை.. மேலும் சில காட்சிகளை
தூக்கிவிடுவதன் மூலம் படத்தின் திரைக்கதை செல்லும் விதத்தில் எந்தவிதமான மாற்றமும்
ஏற்பட்டுவிடாது… உதாரணமாக அந்த பீட்ஸா சாப்பிடும் காட்சி (உலகமயமாக்கலைப் பேசிவிட்டு
நீங்கலும் பீட்ஸாவா..?), அந்த சாப்ட்வேர் இஞ்சினியரின் வருகை, ஓவியாவின் காதல் கைகூடுவது
போன்றவை பெரிதாக எந்த முரணையும் திரைக்கதையில் நிகழ்த்துவதில்லை.. இப்படி சில காட்சிகள்
அமைந்திருப்பதும் பெரும் குறை.. மேலும் எல்லோருக்கும் ஒரு பின்புல கதையை விவரிப்பதும்
ஒரு கட்டத்தில் அழுப்பை ஏற்படுத்துகிறது…
இருப்பினும்
இது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது..
மேலும் இது இயக்குநருக்கு முதல்படம் என்பதால், இதுபோன்ற சிறுசிறு குறைகளை பூதக் கண்ணாடி
கொண்டு பார்க்காமல் அலட்சியப்படுத்துவதில் தவறில்லை.. மேலும் தற்போதைய சில வணிகவெற்றி
பெற்ற குப்பைப்படங்களை ஒப்பிடுகையில் இது எல்லாவகையிலும் திரையில் சென்று காண்பதற்கான
தகுதிகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை… வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து
விடுப்பு பெற்று ஒரு தமிழ்ப்படம் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த மூடர் கூடத்துக்கு
விஜயம் செய்யலாம்…