Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, 17 January 2018

ஆர்.கே.நகர் - செல்லரிக்கத் தொடங்கும் சமூகத்தின் இன்றைய அடையாளம் :


ஆர்.கே.நகரில் நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலின் முடிவு, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தையும், நல்ல ஆட்சியாளர்களையும் எதிர்நோக்கும் நடுநிலையாளர்கள் மத்தியில் ஒரு விதமான அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு வரை, முன்னால் முதல்வரின் மர்மமரணத்தின் பிண்ணனியின் சூத்திரதாரியாகப் பார்க்கப்பட்டவரும், இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றவரும், வருமானவரித் துறையினரால் அவரது வீடு, அலுவலகம், நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என ஒட்டு மொத்தமாக 287 இடங்களில் சோதனை செய்யப்பட்டவருமான டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.


“அரசியல் வாதிகள் எல்லாம் ஆண்டிகளாக அலைய வேண்டுமா..?” என்றும் “நான் ஒன்றும் காந்தியில்லை..” என்றும் அவர் உதிர விட்ட திருவாசகங்கள் இந்த நடுநிலையாளர்கள் காதில் இன்று வரை ரீங்காரமிட்டபடி இருப்பது தான், இவர்களின் அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் காரணம். இப்படிப்பட்ட முற்போக்கான மனிதர் தான், ஆர்.கே.நகர் மக்களின் மக்கள் பிரதிநிதி என்றால், இந்த மக்கள் தங்களை ஆள வருபவரிடம் எதைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.

மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கின்ற கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னர், இந்த நடுநிலையாளர்கள் மக்கள் யாரை தேர்ந்தெடுத்திருந்தால் அதிர்ச்சியும் அச்சமும் அடையாமல் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் என்பதை பார்த்துவிடுவோம். கண்டிப்பாக நடுநிலையாளர்களின் கணிப்பின் படி வெற்றிவாகை சூட வேண்டியவர்களாக இருந்தவர்கள், அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனும், திமுகவின் வேட்பாளர் மருது கணேஷும் தான். இந்த இருவருமே அப்பழுக்கற்றவர்கள், மாசுமருவற்றவர்கள், மக்கள் நலன் பேணும் தலையாயத் தலைவர்கள், அசகசாயசூரர்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.

ஆனால் ஆளும்கட்சி வெற்றி பெற்றிருந்தால், அதிகார பலத்தையும், மத்திய அரசின் செல்வாக்கையும் கொண்டு வழக்கம் போல வென்றுவிட்டார்கள் என்ற எரிச்சலோடு கடந்திருக்கலாம். எதிர்கட்சியான டி.எம்.கே வென்றிருந்தால், மக்கள் ஆளும் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மையாலும், துடிப்பற்ற நிர்வாகத்தினாலும், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்த ஆட்சியை புறக்கணித்து வழக்கமான அவர்களது மாற்றை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள் என்ற விரக்தியோடு அந்த முடிவையும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் இந்த இரண்டு வெற்றியிலுமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியது மக்கள் அல்ல.. ஆனால் இன்று டிடிவி. தினகரன் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்கள் சர்வ நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களே.. அதனால் தான் இந்த நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியும் அச்சமும் ஒரு சேர எழுகின்றது. ஏனென்றால் அவர்கள் இன்று, நல்ல ஆட்சியாளர்களைத் கண்டடையும் கடும் பணியோடு, நல்ல மக்களை தயார் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.

வள்ளுவன் அரசியல் தலைமையை இறைமாட்சிக்கு ஒப்பாகப் பேசுகிறான். வியாசனோ கருவில் இருக்கும் குழந்தையை தாய் காப்பது போல தலைவன் தன் மக்களை காக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை உண்ணாமல், குழந்தைக்கு தேவையானதை உண்ணும் தாயைப் போல் அவன் இருக்க வேண்டும் என்று அறவுரை நல்குகிறார். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த தலைவன் அப்படிப்பட்டவர் தானா…? வேறு எவரைத் தான் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள்..? யார் தான் உத்தமர்…?? என்று கேட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது..? இவருக்கு நீங்கள் அளித்த வெற்றிக்குப் பின்னால் எவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற குழப்பமும், மத்திய அரசால் இவ்வளவு நெருக்கடிகளுக்கு உள்ளாகியும் அசராமல் நிற்கிறாரே என்கின்ற ஆச்சரியமும், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை வீடியோவை க்ளைமாக்சாக வெளியிட்டு, அவர் மரணம் மர்ம மரணம் அல்ல என்பதை நம்மளை சூசகமாக நம்பச் சொன்னதும் மட்டுமே இருந்திருந்தால், ஆர்.கே.நகர் மக்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால், தன்னை காந்தியும் இல்லை, அரசியல் ஆண்டியும் இல்லை என்று சொன்னவரின் கருப்புப் பணம், கள்ளப் பணம் ஊழல் பணம், கொள்ளைப் பணமும் 20ரூபாய் டோக்கனும் இருக்கிறது. அந்தப் பணம் இன்று மக்கள் கைகளிலும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட அந்தப் பணம் தான், ஆர்.கே.நகர் மக்களை அவரை தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது என்கின்ற செய்தி தான், இன்று மக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.


ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், ஓட்டுக்கு பணம் வாங்குவது எந்த தவறும் இல்லை, அது தங்களின் பணம் தான், அது வேறு வழியில் எங்களிடமே திரும்பி வருகிறது, அதை நாங்கள் ஏன் வாங்கக்கூடாது, அதிலென்ன தவறு இருக்கிறது என்கின்ற மனநிலையில் வாக்காளர்கள் பதிலளித்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தினகரன் பெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரது ஆதரவாளர்கள் லட்டு விநியோகிக்கும் காணொலியை தொலைக்காட்சியில் காண முடிந்தது. அதில் வெறும் ஐந்து ரூபாய் பெறுமானம் உள்ள லட்டுக்காகவே முண்டியடித்துக் கொண்டு கை நீட்டும் ஒரு மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது.


இவர்களைப் பார்த்து ”ஓட்டுக்கு ஐந்தாயிரம் தருகிறார்கள்..!! என்று கைநீட்டி விடாதீர்கள் ” என்று நாம் சொன்னால், அது மடத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்..? ஆனால் இந்த மக்கள் தாங்கள் ஓட்டுக்காக வாங்கும் பணத்தின் வரலாறை அறிகிறார்களா..?? தங்கள் வரிப்பணம், தங்கள் வரிப்பணம் என்று மார்தட்டும் மக்கள், அதை தாங்கள் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதனை உணர்கிறார்களா..? என்றால் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, அரசியல் கட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்கான பொதுநல சேவைத் துறையின் கீழ் வருவதால்…!!!!? அவைகளுக்கு எந்தவிதமான வரிச்சுமைகளும் கிடையாது. மேலும் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் நன்கொடைகள் 20,000 ரூபாய்க்கு மேல் போகும் போது மட்டும் தான், அதற்கு அரசாங்கத்திடம் முறையாக கணக்கு காட்ட வேண்டும், இந்த தொகை யாரிடம் இருந்து வாங்கப்படுகிறது, அதைக் கொடுக்கும் நபர் எந்தத் தொழிலை மூலதனமாக வைத்து இதனை சம்பாதித்தார் போன்ற இன்னபிற தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.


ஆனால் பெரும்பாலும் எந்தக் கட்சியும் 20,000 ரூபாய்க்கு மேலான நன்கொடைகளை வாங்குவது இல்லை. நீங்கள் நன்கொடையாக இரண்டு இலட்சம் கொடுக்க முன் வந்தாலும், அதை 10 நபர்கள் 20,000 ரூபாயாக பிரித்துக் கொடுத்தது போல் மட்டுமே வாங்கிக் கொள்ளும் நெறியாளுமைக் கொண்ட கட்சிகள் தான், நம் அரசியல் கட்சிகள். இதில் மாநிலக் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. இந்தக் கணக்குப்படி இந்தியாவில் இருக்கும் மொத்தக் கட்சிகளின் கையிருப்பாக இருக்கும் பணத்தில் 70 சதவீத பணத்துக்கு எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லை. அது எவரிடம் இருந்து நீங்கள் பெற்ற பணம் என்று, நாம் சட்டரீதியாக கேள்வி எழுப்பவோ வழக்கு பதியவோ சட்டத்தில் இடம் இல்லை. போனால் போகிறது என்று ஒரே ஒரு சலுகை தருகிறார்கள். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.


இதுதான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கையிருப்பில் இருக்கும் பணத்துக்கான பின்புலம். சரி இப்பொழுது மீண்டும் ஆர்.கே.நகருக்கு வருவோம். வாக்காளப் பெருமக்கள் சொன்னது போல, அவர்கள் ஓட்டுக்கு பெறும் பணம் சந்தேகம் இல்லாமல் அவர்களுடையது தான். அவர்கள் தாத்தன் பூட்டன் காலத்தில் அவர்கள் கட்டிய வரிப்பணத்தை பெரும் நிறுவனங்களும், அரசியலில் கோலோச் தனி நபர்களும் சுருட்டி, இன்று மீண்டும் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது சரிதான். ஆக ஓட்டுக்குப் பணம் வாங்குவது அவர்களது புரிதலின்படி சரியென்று ஆகிவிட்டது. இப்பொழுது ஆர்.கே.நகர் மக்களின் தொகுதிப் பிரச்சனைக்கு வருவோம்.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, ஒட்டு மொத்த சென்னையின் குப்பை கூழங்களும் கொட்டப்பட்டு எரிக்கப்படும் இடம். இதில் மருத்துவக் கழிவுகளும் இரசாயனக்கழிவுகளும் கொட்டப்படுவதால், அங்குள்ள மக்கள் புற்றுநோய்  பாதிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்பது உப தகவல். இரண்டாவது பிரச்சனை குறுகிய சந்துகளில் கூட முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. மூன்றாவது சுத்தமான குடிநீர் இல்லாததும் குண்டும் குழியுமான ரோடும். நான்காவது பிரச்சனை அங்கு சுற்றுவட்டாரத்தில் எந்த பெரு தொழில் நிறுவனங்களோ சிறு தொழில் நிறுவனங்களோ இல்லாதது. இது போக இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இவைதான் தலையாய பிரச்சனைகள். இவற்றில் எவற்றை எல்லாம் உங்கள் தலைவர் உங்களுக்காக தீர்த்து வைக்கப் போகிறார் என்று பார்ப்போமா… ஆர்.கே.நகர் மக்களே..?


எதையுமே தீர்த்து வைக்க மாட்டார் என்பது தான் நிதர்சனம். கொடுங்கையூர் குப்பை கிடங்கை ஒழிக்க முடியாது, ஏனென்றால் அங்கு குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கக் கூடாது, என்ற நிபந்தனையின் பேரில் தான் பெரு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை என்ற முறையில் அரசியல் கட்சிகளின் சார்பாக மேற்சொன்ன நூதன முறையில் பணம் வாங்கப்பட்டு இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் பங்காக பெற்றுக் கொண்ட வெறும் 4000, 5000 ரூபாய்க்கே நீங்கள் விசுவாசமாக இருக்கும் போது, உங்கள் தலைவர் அவர்களிடம் வாங்கிய (40C அல்லது 50C) பணத்துக்கு அவர் விசுவாசம் காட்ட வேண்டாமா..? அதனால் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அகற்றப்படாது. அடுத்து டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டுமா..? ஒழித்துவிட்டால், மிடாஸின் நிலை என்னாவது..?? மூச்… குலத் தொழிலையே மூடச் சொன்னால் எப்படி..? அதிலிருந்து சம்பாதித்த பணத்தில் தான் நீங்களும் பங்கு வாங்கி இருக்கிறீர்களே..? ஆக அதைப்பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை கூட உங்களுக்குக் கிடையாது. அடுத்து நல்ல குடிநீர்..? தண்ணீர் வியாபாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளிடமும் உங்கள் தானைத் தலைவர் நன்கொடை பெற்றிருக்கலாம்.

அதில் வாக்காளப் பெருமக்களான நீங்களும் கமிஷன் வாங்கி இருக்கிறீர்கள்..? பின்பு எப்படி உங்களுக்கு நல்ல தண்ணீர் கொடுத்து, தண்ணீர் வியாபாரம் செய்யும் பெரு நிறுவனங்களின் வயிற்றில் உங்கள் தலைவர் அடிப்பார். அதனால் அதுவும் நஹி.. அடுத்தது என்ன..? நல்ல சாலை வசதியா..? எதற்கு இன்னும் பத்து வண்டிகள் சவுகரியமாக வந்து குப்பையை தட்டிவிட்டு செல்வதற்கா..? அட போங்கப்பா.. பொழைக்கிற வழியப் பாருங்க…? அடுத்து சிறு நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள்..? இவை எதுவுமே, கொடுங்கையூர் குப்பை மேடு அங்கு இருக்கும் வரை, அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டார்கள். ஆக ஆர்.கே.நகர் வாசிகளே உங்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்து விட்டீர்களா..? இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவில் உணர்வீர்கள்.

உங்கள் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டாலோ..? புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானாலோ..? குடியால் உங்கள் குடும்பம் சீரழிந்தாலோ..? சுகாதாரமற்ற குடிநீரால் நோய்கள் பரவினாலோ..? நீங்கள் சாமர்த்தியமாக திரும்பப் பெற்றுக் கொண்ட உங்கள் வரிப்பணம் நாலாயிரமோ அல்லது ஐயாயிரமோ அதைக் கொண்டு சிகிச்சையும் நிவாரணமும் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களின் பிரதிநிதியை தேர்தலுக்குப் பின்னர் உங்கள் எல்லைக்குள் பார்க்கவே முடியாது. ஏனென்றால் அவர் “நான் அரசியல் ஆண்டியோ, காந்தியோ இல்லை..” என்பதனை உங்களிடம் சொல்லித் தானே ஓட்டுக் கேட்டார்..”

நாம் அரசாங்கத்திடம் பத்து ரூபாயை வரிப் பணமாக செலுத்தி, அந்தப் பணத்தை பயன்படுத்தி நமக்கான அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க அரசாங்கத்தை வேண்டுகிறோம். அரசாங்கம் என்னும் போர்வைக்குள் அமர்ந்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், அந்தப் பத்து ரூபாயில் எட்டு ரூபாயை சுருட்டிக் கொள்வதோடு, நம் தேவையை நிறைவேற்றுவதும் இல்லை. அத்தேவையை நிறைவேற்றாமல் இருப்பதால் லாபம் அடையும் நிறுவனத்திடமும் ஒரு கமிஷனை அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்கிறார்கள். நாம் நல்ல தலைவன் வருவான், நம் நிலை மாறும் என்று காத்துக் கொண்டே இருந்தோம். அது அந்தக் காலம்.. ஆனால் இன்றோ, தேர்தல் காலங்களில் மேற்சொன்னபடி நம்மிடமிருந்து சுருட்டிய வரிப் பணத்திலோ அல்லது பெரு முதலாளிகளிடம் பெற்ற பணத்திலோ ஒரு இரண்டு ரூபாயை நம்மிடமே கொடுத்து, தான் அயோக்கியன் என்பதைச் சொல்லியே மீண்டும் ஓட்டு போடச் சொல்லிக் கேட்கிறார்கள். நாமும் இளித்துக் கொண்டே வாங்கிய காசுக்கு வஞ்சனை செய்யாமல் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு, அரியனை ஏற்றி, அவர்கள் முன் அதே கோரிக்கையோடு நிற்கிறோம்.



இப்படி மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள் மட்டும் சுரண்டிக் கொண்டிருந்த காலம் போய், நாமும் இந்த சுரண்டலின் பங்கு தாரர்களாக மாறி நிற்பதோடு நில்லாமல், நம் தேவைகளை நிறைவேற்றச் சொல்லி கூப்பாடு போடுகிறோம். எந்தப் பணத்தைக் கொண்டு திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.. அந்தப் பணத்தை தான் அரசியல்வாதிகளோடு சேர்ந்து நாமும் தின்னத் தொடங்கிவிட்டோமே..! இந்தக் கூட்டத்தில் யார் நல்லவன்..? யார் கெட்டவன்..? யார் ஏமாளி..? யார் புத்திசாலி..? இந்த உண்மையை இந்த மக்களுக்கு யார் தான் சொல்லி விளங்க வைப்பது…?? கவுண்டமணி பாணியில் சொல்லுவதென்றால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன், கொள்ளைக்காரனே…!!!!??? நாடு வெளங்கிறும்…????????????

Wednesday, 13 December 2017

வாயை மூடிப் பேசவும் – இப்படிக்கு அரசு


மெர்சல் பட விவகாரம், பத்மாவதி திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு, கந்துவட்டி கொடுமையை கார்டூனாக வரைந்ததால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை, தீபிகா மற்றும் பன்சாலியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரொக்கப் பரிசு என்னும் கொக்கரிப்பு, சனாதன இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்த தோழர். கெளரி லங்கேஷ்-க்கு துப்பாக்கி தோட்டாக்கள் பரிசளிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மாநில அரசின் உத்தரவு இன்றி விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்துக்கும், அந்த செய்திகளை பிரசுரம் செய்யக்கூடாது என்று பத்திரிக்கைக்கும் முட்டுக்கட்டைப் போட்டு, இராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம், என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது என்று ட்விட்டரில் பதிவிட்ட குர்மேகர் கவுர் என்ற பெண்ணுக்கு எதிராக பாலியல் மிரட்டல், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த கூட்டத்தில், தேசத்தந்தை காந்தியடிகளை, பனியா காந்தி என்று விளித்து, அவர் மீதும் சாதிய சாயம் பூச நாடாளும் கட்சியின் தலைவர் அமித்ஷா முனைந்தது, அவர் ஒன்றும் தவறாக பேசவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தன் பங்குக்கு கொளுத்திப் போட்டது.. என இங்கு நடப்பவைகளைப் பார்த்தால், நிச்சயமாக நாம் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோமோ…? என்று அச்சமாக இருக்கிறது. அவசர நிலை பிரகடனத்தில் எந்த அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக செல்லாமல் போய்விடும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் தானே..?



இதைப் பற்றி எல்லாம் பேச முனைந்தால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது, கருத்துரிமை என்ற பெயரில் நீங்கள் மதத்தையும் நல்ல மனிதர்களின் மனதையும் புண்படுத்துகிறீர்கள் என்று பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் இருந்தபடி அமித்ஷாவும், அருண் ஜெட்லியும் அலறுவதும் காதில் கேட்கிறது. இந்த தருணத்தில் நாம் பேச்சுரிமை, கருத்துரிமை என்ற இரண்டு உரிமைக்குமான அடிப்படை வித்தியாசத்தைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் அண்டை வீட்டாரிடமும், உடன் பணிபுரிபவர்களிடமும் விசாரிக்கும் நல விசாரிப்புகள், உடல் சார்ந்த, குடும்பம் சார்ந்த சந்தோசங்களை, பிரச்சனைகளைப் பேசுவது தான் பேச்சுரிமை. இது தவிர்த்து நீங்கள் தொழில் வணிகம், குழந்தையின் கல்வி, சினிமா, விளையாட்டு, அரசியல், மதம், கருப்புப் பண ஒழிப்பு, GST இப்படி எதைப் பற்றி பேச உங்கள் திருவாயைத் திறந்தாலும் அது  பேச்சாக மட்டுமே இருக்காது, கருத்தாகத்தான் மாறும். அதாவது கருத்துரிமை. இதுதான் பேச்சுரிமை கருத்துரிமைக்கான அடிப்படை வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கருத்துரிமை விசயங்களில் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கேட்கிறது. ஏனென்றால் உங்கள் கருத்துரிமையைக் கொண்டு நீங்கள் யார் மனதையாவது புண்படுத்திவிட்டால், அவதூறு வழக்கு, தேசத் துரோக வழக்கு உங்கள் மீது பாய்ந்துவிடும். சரி.. இவர்கள் சொல்லும்படி இந்தக் கருத்துரிமையை எப்படி புண்படுத்தாமல் பயன்படுத்துவது..??, குழப்பமாக இருக்கிறதா..? வெகு எளிது. கீழே உதாரணம் பாருங்கள்.


குடும்பத்தோடு சேர்ந்து ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறீர்கள், 600 ரூபாய் சாப்பிட்டதற்கு GSTயுடன் சேர்ந்து 800 ரூபாய் பில் வருகிறது. மிகச் சிறப்பான வரித் திட்டம் என்று வாழ்த்துங்கள், இல்லை என்றால் மத்திய அரசின் மனம் புண்பட்டுவிடும். அங்கிருந்து நேராக தியேட்டருக்கு சென்று மெர்ஷல் திரைப்படம் பார்க்கிறீர்கள். GST வரியைப் பற்றிய குற்றச்சாட்டு வருகிறது. கருத்து சொல்ல வேண்டுமே..!!??மிக அற்புதமான வசனம் என்று வாழ்த்துங்கள். இல்லை என்றால் அட்லி மற்றும் விஜயின் மனம் புண்பட்டுவிடும். வெளியே வருகிறீர்கள் தீபிகாவின் தலைக்கு 1 கோடி என்று அறிவிப்பைப் பார்க்கிறீர்கள். இங்கு, கருத்து என்ன சொல்ல வேண்டும்..? தெரிகிறதா…?? கரெக்ட்..!! வாழ்த்த வேண்டும். மிக அற்புதமான அறிவிப்பு என்று வாழ்த்துங்கள். இல்லையென்றால் அறிவிப்பு செய்தவர்களின் மனம் புண்பட்டு நாடு சீரழிந்துவிடும். கூடவே இராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க முதல்வர் வசுந்த்ரா ராஜே அரசு அலுவலர்களை விசாரிக்க தடைச் சட்டம் பிறப்பித்ததையும், அமித்ஷா, காந்தி ஒரு பனியா என்று கண்டுபிடித்ததையும், ஹெச்.ராஜா விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று கண்டுபிடித்ததையும் அறிகிறீர்கள். நேரம் தாழ்த்தாமல் வாழ்த்திவிடுங்கள். இல்லையென்றால் மனம் புண்பட்டு நாடு சீரழிகிறதோ இல்லையோ..? நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள்.. என்ன..? வெளியே திருமா மதச் சாயம் பூசுகிறார்கள் என்று முழங்குகிறாரா..? யோசிக்காமல் பாராட்டுங்கள். இல்லையென்றால் பாவம் அவர் மனம் புண்பட்டுவிடும். என்ன…??? இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தால் உங்களை பைத்தியம் என்று கூறிவிடுவார்களே..? என்று பயமாக இருக்கிறதா..? அப்படியெல்லாம் உங்கள் மனம் புண்படுவது போல் யாரும் பேசிவிட முடியாது. அது கருத்துரிமையை மீறிய செயல் ஆகிவிடும். என்ன..? இதனை கடைபிடிப்பது கடினமாக இருக்கிறதா.? ம்ம்ம்.. சரி.. அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். வாயை மூடிப் பேசுங்கள். (கவனிக்கவும், பேசுங்கள் கருத்து சொல்லாதீர்கள்) இதைத் தான் நம்மை செய்யச் சொல்கிறது ஆளும் அரசு.


இந்திய அரசியலமைப்பு நமக்கு கருத்துரிமை பேச்சுரிமை இரண்டையுமே கொடுத்திருக்கிறது. ஆனால் ஆளும் மத்திய அரசு மேற்சொன்னபடி, பேச்சுரிமையையே கருத்துரிமையாகவும் நம்மை நம்பச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அல்லது பேச்சுரிமை மட்டும் தான், இனி கருத்துரிமையே கிடையாது என்பதனை சொல்லாமல் சொல்கிறது. இதற்கு நம் இந்திய அரசியலமைப்பு சட்டமும் ஒரு வகையில் துணை போகிறது. எப்படி என்றால் கருத்து சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் சில சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, இன்றுவரை நீக்கவும் படாமல், திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே தொடர்கின்றன. அவற்றில் குறிப்பாக பிரிவுகள் 153, 153A, 295, 295A, 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளைக் கூறலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கில் கிரிமினல் அவதூறு சட்டப் பிரிவுகளான 499,500 ஆகியவற்றை நீக்கக் கோரி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, சுப்ரமணிய சுவாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் அந்த சட்டப்பிரிவுகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் ஓரளவுக்கு நலிந்த மக்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், பெருமளவில் ஆளும் வர்க்கத்தினர் தான் அதனை தங்களுக்கு சாதகமான விசயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால், அதற்கான சட்டத் திருத்தங்களையாவது கொண்டு வருவதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.


சரி. இந்த கருத்து சுதந்திரத்தை நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது, அந்தப் பதத்தை எப்படித்தான் பயன்படுத்துவது என்று கேட்டால், அதற்கும் தேச தந்தை காந்தியடிகள் தனது கட்டுரை குறிப்புகள் மூலம் வழிகாட்டுகிறார். (காந்தி கருத்துரிமைப் பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் ஆளும் வர்க்கத்தின் அமித்ஷாக்கள் பேசவே மாட்டார்கள். காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார் என்பதைத் தான் அவர்கள் திரும்ப திரும்ப பேசுவார்கள்.) காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது எழுதிய “இந்திய சுயராஜ்ஜியம்” என்ற புத்தகத்தை, இந்தியாவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, அவரது நண்பர் முயலும் போது, அது தேச துரோக கருத்துக்களை கொண்டிருக்கிறது என்று சொல்லி ஆங்கிலேய அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்துவிடுகிறது. அந்தத் தடையை நீக்கக் கோரி, காந்தியடிகள் எழுதிய ஒரு கடிதம் ஆவணக் காப்பகத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காந்தி, ”எந்தவொரு தனி நபருக்கும் அவரது கருத்தை பொதுவெளியில் சொல்லவும், அதை செயல்படுத்தவும், முழு உரிமை உண்டு. எப்பொழுது என்றால், அது மற்றொரு நபரை உடல் ரீதியாக துன்புறுத்தாத வரை.. இது என்னுடைய தாழ்மையான கருத்து..” என்று எழுதியிருப்பதாக வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா தெரிவிக்கிறார்.


அப்படியென்றால் கருத்துக்கள் மனரீதியாக ஒருவரை துன்புறுத்தலாமா..? என்ற கேள்வி வரும். அப்படி புண்படுத்தாமல் எந்தவொரு கருத்தையுமே நாம் பேச முடியாது என்பதைத் தான் நாம் மேலே சில உதாரணங்களுடன் பார்த்தோம். இருந்தாலும் இதற்கான பதிலையும் மீண்டும் காந்தியிடமே பார்ப்போம்.

”கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் கருத்தை தெரிவிப்பதால், பிறரின் மனம் புண்படும் என்றாலும் அதை தடுக்காமல் விடுவது என்று தான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவது மட்டும் அல்லாது, அவை செய்திகளை திரித்துக் கூறவும் அனுமதிக்கும் போது தான் அவை சுதந்திரமாக செயல்படுகிறது என்று அர்த்தம்.” என்று யங் இந்தியா இதழில் 12-01-1922 தேதியிட்ட கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அப்போது அவர் எதிர்காலத்தில் அரசுகள், திரித்துக் கூறப்பட்ட செய்தி, புண்படுத்தும் செய்தி என்று கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கலாம் என்பதனையும் யூகித்திருக்கிறார் என்பது புலனாகிறது. மேலும் அவர் ”ஒருவர் தாம் நம்பும் கருத்து, அல்லது கொள்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதோடு, அவைதான் உறுதியான மறுக்க முடியாத உண்மை என்று நம்புவதால் தான் பிரச்சனை உண்டாகிறது. தான் கொண்ட கருத்தின் மேல் புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள் தான், மாறுபட்ட கருத்துக்கு அஞ்சி, அதனால் தன் கருத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கருதி, மாற்றுக் கருத்தை நசுக்கப் பார்க்கிறார்கள். ஒருவர் தான் கொண்ட கொள்கை உறுதியானது,  உண்மையானது, அறம் சார்ந்தது என்ற நம்பிக்கையோடு இருந்தால், மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. புண்படவும் தேவையில்லை. தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். நாம் எல்லோருமே பிழைகள் செய்பவர்கள், ஆகையால் அடிக்கடி நம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை வருகிறது. மாற்றுக் கருத்துக்களுடன் உறவாடும் போதுதான், நாம் கொண்டிருக்கும் கருத்து மேலும் வளர்ச்சியும் முழுமையும் அடைகிறது. இது போன்ற ஜனநாயக நாட்டில் உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து கொண்டுள்ள எல்லாருக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அதனால் எதிராளிகளின் கருத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அதையும் மதிப்பதும் இன்றியமையாததாகிறது. நாம் இது போன்ற தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால், நமக்குள் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளைக் கூட நமக்குள் பேசி சுமூகமாக தீர்க்க முடியாமல், மூன்றாமானவர்களான அந்நியர்களின் தீர்வுக்கே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.” என யங் இந்தியாவில் 17.04.1924ல் தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


ஏனென்றால் காந்தி, பூர்ண இந்திய சுயராஜ்ஜியத்துக்கு கருத்து சுதந்திரம் மிக மிக முக்கியம் என்று கருதியவர். அவரது இறப்புக்கு பின்னர் நடந்த, அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு கருத்துரிமை விசயத்தை இங்கு பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. Joseph Lelyveld எழுதிய Great Soul Mahatma Gandhi and His Struggle with India என்ற புத்தகத்தில் காந்திக்கும் அவரது உதவியாளருமான காலன்பாக்குக்கும் இடையே தன் பாலின உறவு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த சர்ச்சை எழுந்ததால், குஜராத் அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்தது. ஆனால் காந்தியின் பேரன்களான ராஜ்மோகன் காந்தியும், கோபாலகிருஷ்ண காந்தியும் அந்தத் தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அந்தப் புத்தகத்துக்கான தடையை வாபஸ் பெறச் செய்தனர். Josehp Lelyveld சொல்கின்ற கருத்தை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். இருப்பினும் அதைச் சொல்வதற்கான அவரது உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தது, இந்த இடத்தில் மிக முக்கியமானது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களையும், வழக்குகளையும், சிறைக் கம்பிகளையும் பரிசளித்துக் கொண்டிருக்கிறார்கள். வசுந்த்ரா ராஜே சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராஜஸ்தான் பத்திரிகா என்ற செய்தித்தாள், கருப்பு கட்டம் கொண்ட காலி தலையங்கத்தை பிரசுரித்திருக்கிறது. இந்திய தேசத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் நாம் எல்லோரும் சேர்ந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைச் செய்ய நாம் தவறுவோமானால், இங்கு கேலிக்கூத்தாக மாறிப் போயிருக்கும் இந்த ஜனநாயக ஆட்சியில் நாம் அனைவருமே சுயம் இழந்த கோமாளிகளாகத்தான் வலம் வர வேண்டியிருக்கும்.