Showing posts with label cinema reviews.. Show all posts
Showing posts with label cinema reviews.. Show all posts

Friday, 11 October 2013

நய்யாண்டி:

களவாணி என்னும் கலகலப்பான திரைப்படத்தைக் கொடுத்து, பின்னர் வாகை சூட வா என்னும் சமூக சிந்தனையுள்ள படத்தைக் கொடுத்த இயக்குநர் சற்குணத்தை, இரண்டாம் படத்திற்கு வணிகரீதியாக கிடைக்காத வரவேற்பும், இன்றைய காலசூழலில் காமெடி திரைப்படங்களுக்கு கிடைக்கின்ற ஆகப்பெரிய வரவேற்பும் சேர்ந்து நய்யாண்டி செய்திருக்கும் போலும். பெரிதும் குழப்பிப் போன இயக்குநர், நல்லப் பெயர், நல்ல திரைப்படம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வணிகரீதியிலான வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நய்யாண்டியில் காமெடி களப்பணி ஆற்றுவோம் என்று களமிறங்கி இருக்கிறார். ஆனால் பாவம், இயக்குநருக்கு, காமெடி சுத்தமாய் கைகொடுக்கவில்லை..


ஒரு நல்ல திரைக்கதை என்பது, இரண்டே காட்சிகளில் பார்வையாளனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்கான திறப்பைக் கொண்டிருக்க வேண்டும். அந்த திறப்பின் வழியே இருள் சூழ்ந்த மாயவெளிக்குள் நுழைகின்ற அவன் கதை என்னும் சரடின் சிறு ஒளியின் துணையோடு, தான் பார்த்திராத, பயணிக்காத, தான் மறந்து போன அல்லது தனக்கு மறக்கடிக்கப்பட்ட ஒரு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவான். பல இடங்களில் முட்டி மோதி, எதிர்பாராத இடங்களில் அதிசயித்து, ஆச்சர்யப்பட்டு, ஆனந்தப்பட்டு அதிர்ந்து போய், குற்ற உணர்வால் சுருங்கிப் போய், இப்படி ஏதேனும் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, தனக்குப் பரிச்சயமில்லாத இருள்வெளியில் அவனது கண்கள் அந்த இருளுக்குப் பழக்கப்படத் தொடங்கும்… அவன் கண்களுக்கு அந்த இருள் சூழ்ந்த கதையின் கண்ணிகள் புலப்படத் தொடங்கும் பட்சத்தில் அவனை ஒளிபாயும் புறவெளியில் தள்ளி திரைக்கதை அவனை வழியனுப்ப வேண்டும்… இப்போது அவனது மனம் கண்கூசும் ஒளியில் கூட இருள் சூழ்ந்த வாழ்க்கையை எண்ணத் தொடங்கி இருக்கும்… இது நல்ல திரைக்கதை எழுதுவதற்கான ஒரு பொதுவிதி…

ஆனால் நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் கதைக்கே பதினெட்டாம் நூற்றாண்டு பஞ்சம் பீடித்திருக்கும் துயரநிலையில் நாம் திரைக்கதை நுட்பங்களை அலசுவதென்பது அவர்களை நையாண்டி செய்வது போல் இருக்கும்.. இந்த பஞ்சகாலத்திலும் இவர்கள் எடுத்திருக்கும் கதை என்னவென்று பார்த்தால், பல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணை (நாயகி நஸ்ரியா), என்ன செய்கிறார் என்பதையே சொல்லிக்கொள்ளாத அல்லது இயக்குநர் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒரு கதாபாத்திரம் காதலிக்கிறது… அப்படியென்றால் அது கண்டிப்பாக நாயகனாகதானே இருக்க வேண்டும்.. நாயகன் தான் காதலித்துவிட்டாரே, அவர் என்ன வேலை செய்கிறார்…? என்று ஒரு பேச்சுக்கு கூட கேட்காமல் அவர்களை இரண்டு முறை முறைத்துவிட்டு மூன்றாம் முறை பார்க்கும் போது காதலிப்பதற்காகவே சபிக்கப்பட்டு இருக்கும் நாயகியும் வழக்கம் போல் காதலிக்கத் தொடங்குகிறார்… இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட இயக்குநர் வில்லனை அறிமுகப்படுத்துகிறார்.. வில்லனும் அதே பெண்ணுக்கு நூல் விட்டால் தானே சுவாரஸ்யம்.. அவர் பெண்ணின் தகப்பன் சம்மதத்துடன் கல்யாணமே பேசிவிட… அச்சச்சோ இன்னும் சுவாரஸ்யம் இல்லையே என்று உணர்ந்த இயக்குநர் வேறொரு முடிச்சையும் போடுகிறார்… நாயகனுக்கு 40 வயதாகியும் கல்யாணமாகாத இரண்டு அண்ணன்கள்… அவர்களுக்கு கல்யாணம் ஆனால்தான்… நாயகன் கல்யாணம் செய்யமுடியும் என்று ஒரு அற்புதமான சுவாரஸ்யத்தையும் சேர்த்து கதை பண்ணியிருக்கிறார்கள்…


இப்படிப்பட்ட ஒரு கதையில் எதுதான் பார்வையாளனை கவரும்… எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும், அவளை நாயகனின் மனைவியாக மட்டுமே பார்க்கும் அக்மார்க் நண்பர்களும், தான் டாக்டருக்கு படித்திருந்தாலும், என்ன செய்கிறான், என்ன படித்திருக்கிறான் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் அவனை உருகி உருகி காதலிக்கும் மறை கலன்ற நாயகிகளும், நாயகனிடம் அடி வாங்குவதற்கென்றே சிக்ஸ்-பேக் உடம்பை வளர்த்துக் கொண்டு வரும் வில்லன்களும், கல்யாணத்துக்குப் பின்னரும் பொறுப்பாக நடந்து கொள்வதென்பதை நாயகியை கருவுறச் செய்வதில் மட்டுமே காட்டும் நாயகனையும், இவ்வளவு நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல், இறுதிக் காட்சியில் கூட்டமாய் வந்து அரவணைக்கும் குடும்பத்தையும் காலம் காலமாக காட்டி நம் தமிழ் சினிமா நமக்கு என்னதான் சொல்ல முயற்சிக்கிறது….

நண்பர்களுக்கு இடையிலான காட்சிகள், காதலர்களுக்கு இடையேயான காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான காட்சிகள் என்று எதிலுமே சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சிகூட அமையாமல் போனது இவர்களின் கற்பனை வறட்சியை காட்டுகிறது… பின்புலங்களில் பழைய பாடல்களை சூழ்நிலைக்கு ஏற்ப பாடவிடுவதை, வாரத்துக்கு ஒரு முறை விகடனே "இந்தப் பாட்டை இவர்களுக்கு டெடிகேட் செய்கிறோம்னு போடும் போது, படம் எடுத்து இவர்களுமா நையாண்டி செய்ய வேண்டும்… திரையில் அழகிய நஸ்ரியாவே இருக்கும் போதும் அவருக்கு முதுகைக் காட்டி திரும்பிக்கொள்ளும் அதிசயிக்கத்தக்க சூழலை உருவாக்கியது மட்டுமே இப்படத்தின் வெற்றி..



இப்படி குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்க எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய பாராட்ட எந்த தரப்பிலும் எந்த விசயமும் இல்லையே.. வேண்டுமென்றால் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத காரணத்துக்காகவும், இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது என்ற உண்மையை டைட்டில் கார்ட்டில் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டதற்காகவும், இந்த இரு காரணங்களுக்காக மட்டும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. அது தவிர்த்து தனுஷ், நஸ்ரியா, சற்குணம், ஜிப்ரான், நரேன், சிங்கம் புலி என அனைவருக்குமே அவர்களது கேரியரில் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கும் இந்தப் படம்… சற்குணம் அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி, காமெடிப் படம் என இது போன்ற விபரீத முயற்சிகள் எடுக்காமல், வாகை சூட வா போன்ற ஓடாத நல்ல திரைப்படங்களை எடுத்தால், நல்ல இயக்குநர் என்ற பேராவது மிஞ்சும் என்பது என் எண்ணம்.

Sunday, 15 September 2013

மூடர்கூடம்:

சிம்புத்தேவன், பசங்க பாண்டிராஜ் இருவரிடமும் உதவி இயக்குநராக இருந்த நவீன் என்பவரின் முதல் படம். படம் வெளிவருவதற்கு முன்பாகவே சினிமா வட்டாரத்தில் அதிகமாகப் பேசப்பட்டு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். அந்த எதிர்பார்ப்பை சினிமாதுறையினர் இடையே அது காப்பாற்றிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும். படத்தின் டைட்டில் கார்டில் சிம்புத்தேவன் மற்றும் பாண்டிராஜை குறிப்பாக உணர்த்திய நவீன், தனக்கு இன்ஸ்பிரேசனாக இருந்த மேற்கத்திய இயக்குநர்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்றாலும், குவாண்டின் டொரோண்டினோ, கோயன் பிரதர்ஸ், கேய் ரிச்சி, ஆகியோரின் பாதிப்பில் சினிமாவுக்கு வந்தவர்தான் நவீன் என்பது மூடர்கூடம் படத்தின் சில காட்சியமைப்புகளைப் பார்க்கும் போதே கணிக்கமுடிகிறது..


முதல் படம் என்பதால் இவரும் இன்றைய தமிழ்சினிமாவின் ஆச்சார்ய இலக்கணத்தின்படி, காமெடி என்ற பெயரில் நாளிதழ்களில் வரும் கடிஜோக்ஸை எல்லாம் ஒன்றாக சேர்த்துக் கட்டி, அதில் வலுக்கட்டாயமாக ஒரு ஒன்லைனரை திணித்து, அதை கதை என்று சொல்லிக் கொண்டு, நானும் ஒரு காமெடிப்படம் எடுத்து கல்லா கட்டிவிட்டேன் என்று மார் தட்டிக் கொள்ளாமல் பிடிவாதத்துடன் தனித்துவமாக நின்றதற்காகவே நவீனுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்…

ப்ளாக் க்யூமர் என்று சொல்லப்படும் சீரியஸான காட்சிகளில் சிதறி வழியும் நகைச்சுவைத் தன்மை கொண்ட படைப்புகளின் பட்டியலில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும் படங்களைத் தொடர்ந்து தற்போதைய வருகை இந்த மூடர்கூடம். சமுதாயத்தால் பல்வேறுவிதமாக பாதிக்கப்பட்ட நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க முயலுகிறார்கள்… அந்தக் கொள்ளை வெற்றியடைந்ததா..? இல்லையா…? என்பதே மூடர்கூடத்தின் ஒருவரிக் கதை..


திருடச் செல்லும் நால்வராக செண்ட்ராயன், நவீன், குபேரன், மற்றும் வெள்ளையன். திருடப் போகும் வீட்டில் வசிப்பவர்களாக ஜெயப்பிரகாஷ், அனுபமா, ஓவியா, குட்டிப் பெண் மற்றுமொரு குட்டிப் பையன்.. நவீனாக நவீனே நடித்திருக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய நடிப்பு. திருடச் செல்லும் நால்வருமே முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நவீன் பேசும் கம்யூனிசம் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான வசனங்களும் அவருடைய செயல்பாடுகளும் எந்த இடத்திலும் அவரை ஒரு முட்டாளாக காட்டவே இல்லை என்பது ஒரு குறை..

செண்ட்ராயனாக நடித்திருக்கும் செண்ட்ராயனுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது போன்ற கதாபாத்திரம். அதிலும் குறிப்பாக கஞ்சா வாங்க வந்தவர்களிடம் அவர் பேசும் வசனங்களின் தொணியும், வெள்ளக்காரண்ட்ட தமிழ்ல பேசுவியா..? என்று சாஃப்ட்வேர் இஞ்சீனியரை வாறும் இடமும், முதன் முதலில் ஓவியாவைப் பார்த்துவிட்டு அவர் கொடுக்கும் ரியாக்சனும் க்ளாஸ்….


இவர்களைத் தவிர்த்து வழக்கம் போல் ஜெயப்பிரகாஷும், ஜெயப்பிரகாஷோடு போனில் பேசும் அந்த சிறுமியும் கவனம் ஈர்க்கிறார்கள்.. அந்த சிறுமியின் டயலாக் டெலிவரி அத்தனை க்யூட்.. முதன்முதலாக கதாநாயகி என்று இல்லாமல் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் ஓவியா.. நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம் தான்… அதனால் அவரைப் பற்றி பெரிதாக பேச ஒன்றுமில்லை… குபேரனுக்கும் அந்த சிறுவனுக்கும் ஏற்படுகின்ற உறவு ஒரு குட்டி சிறுகதை…


ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்புலக்கதையையும் விவரிக்கும் விதம் அருமை.. 2D அனிமேஷன், மெளனப்படம் என்று வகைவகையாக விரிகிறது.. ஆரம்பக் காட்சிகளில் செண்ட்ராயனை தேடி வரும் போலீஸ், போலீசிடமே மாட்டிக் கொள்ளும் செண்ட்ராயன், பொம்மை திருட வந்த திருடன் ஒவ்வொரு ரூமிலும் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சி, போனில் அந்தச் சிறுமி ஜெயப்பிரகாஷை வெறுப்பேற்றும் காட்சி, நாய்க்கான பின்புலக் கதை, பாடல்கள் எடுக்கப்பட்ட விதம், பாடல்கள் வந்து போகும் சூழ்நிலை, வசனங்களின் கூர்மை, ஜேசுதாஸின் நீயும் பொம்மை, நானும் பொம்மை பாடலை பயன்படுத்திய விதம் என்று பாராட்டப் பல இடங்கள் உண்டு..

ஆனாலும்……. முக்கியமான குறையாகப்படுவது திரைக்கதையில் இல்லாத விறுவிறுப்பு… ஆரண்யகாண்டத்தில் பசுபதி தன் மனைவியை காப்பாற்றுவானா..? சப்பை சுப்பு உறவு சிங்கப்பெருமாளுக்கு தெரிந்துவிடுமா..? காளையனை அந்தச் சிறுவன் எப்படி காப்பாற்றுவான்..? இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு திரைக்கதை எழுதப்பட்ட போதும் கூட அது வணிகரீதியான வெற்றியை அடையவில்லை.. சூதுகவ்வும் திரைப்படமோ… அந்த முட்டாள் கும்பல் போலீஸிடம் மாட்டிக்கொள்ளுமோ என்னும் இரண்டாம் கட்ட பரபரப்பையும், அதன் எதிர்பார்க்காத பின்புல விளைவுகளையும் சாத்தியமாக்கியதால் வெற்றிபெற்றது…


ஆனால் மூடர்கூடத்தில் அந்த கதாபாத்திரங்களுக்கான ஒரு தேடல் என்பது இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய குறையாக இருக்கிறது… அவர்கள் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள்… ஒருவேளை அவர்கள் போலீஸில் மாட்டிக் கொள்வார்களோ என்ற திகைப்பு ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே ஜெயிலில் இருந்துதான் வந்தவர்கள்.. மேலும் அந்தக் கொள்ளையில் அவர்கள் வெற்றிபெற வேண்டுமென்கின்ற துடிப்பும் ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் கதாபாத்திரத்திற்கு பணத்திற்கான தேவை இருப்பது போன்ற காட்சிகள் ஏதுமே காட்டப்படுவதில்லை… இதனால் கதை பல இடங்களில் மெதுவாக நகர்வது போன்ற பிம்பம் தோன்றுகிறது.. மேலும் அவர்கள் திருடித்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயமும், அதற்கான நியாயமும் சரிவர சொல்லப்படவில்லை.. மேலும் சில காட்சிகளை தூக்கிவிடுவதன் மூலம் படத்தின் திரைக்கதை செல்லும் விதத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டுவிடாது… உதாரணமாக அந்த பீட்ஸா சாப்பிடும் காட்சி (உலகமயமாக்கலைப் பேசிவிட்டு நீங்கலும் பீட்ஸாவா..?), அந்த சாப்ட்வேர் இஞ்சினியரின் வருகை, ஓவியாவின் காதல் கைகூடுவது போன்றவை பெரிதாக எந்த முரணையும் திரைக்கதையில் நிகழ்த்துவதில்லை.. இப்படி சில காட்சிகள் அமைந்திருப்பதும் பெரும் குறை.. மேலும் எல்லோருக்கும் ஒரு பின்புல கதையை விவரிப்பதும் ஒரு கட்டத்தில் அழுப்பை ஏற்படுத்துகிறது…



இருப்பினும் இது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.. மேலும் இது இயக்குநருக்கு முதல்படம் என்பதால், இதுபோன்ற சிறுசிறு குறைகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் அலட்சியப்படுத்துவதில் தவறில்லை.. மேலும் தற்போதைய சில வணிகவெற்றி பெற்ற குப்பைப்படங்களை ஒப்பிடுகையில் இது எல்லாவகையிலும் திரையில் சென்று காண்பதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை… வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து விடுப்பு பெற்று ஒரு தமிழ்ப்படம் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த மூடர் கூடத்துக்கு விஜயம் செய்யலாம்…

Sunday, 25 August 2013

ஆதலால் காதல் செய்வீர்:

எல்லோரது கவனத்தையும் பரவலாக ஈர்த்திருக்கும் படம். ராஜபாட்டையின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் தன்னை நிருபித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். இதிலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் இதன் மூலக்கதை லெனின் பாரதி என்பவரது. அதனை வெற்றிக்கான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.. இவரது ராஜபாட்டைக்கு முந்தையபடமான “அழகர்சாமியின் குதிரை” யும் பாஸ்கர்சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.. இதுபோன்று நாவலில் இருந்தும், பிறரது கதைகளிலிருந்தும் திரைப்படம் எடுக்க இயக்குநர்கள் முன்வருவது இன்றைய திரைச்சூழலுக்கு ஆரோக்கியமான விசயம். அதற்காக தனிப்பட்ட முறையிலும் இயக்குநருக்கு சில பாராட்டுக்கள்…



கதையின் களம், இன்றைய நவநாகரீக காதலை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் தலைப்பே ஒரு சின்ன எரிச்சலை ஏற்படுத்தியதால், “காதலும் காதல் சார்ந்த இடத்திற்காகவும் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் தமிழ்சினிமாவில் காதலிக்க கற்றுக் கொடுக்க வந்திருக்கும் இன்னொரு படம் என்ற எண்ணத்துடன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி ஒருவித எரிச்சல் கலந்த மனநிலையுடன் தான் படத்தை அணுகினேன்.. எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல முதல்பாதி முழுவதும் காதலும், அந்தக் காதலை தன் காதலியிடம் இருந்து பிடுங்குவதற்கு பிரயத்தனப்படும் காதலனின் அமெச்சூர்தனமான நடவடிக்கைகளும், நாயகனுக்கு காதல் டிப்ஸ்களை இனாமாக அள்ளிக் கொடுப்பதற்கு என்றே அவதாரம் எடுக்கும் தமிழ்சினிமா நாயக நண்பர்களையும் தவிர.. சொல்லிக் கொள்ளும்படி முதல்பாதி முழுவதும் எதுவுமே இல்லை… இயல்பான இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை என்று பலரும் மெச்சிக் கொண்டாலும், அது வணிகத்திற்கான மொண்ணையான கச்சாப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறதே ஒழிய, வாழ்க்கையென்பது அதில் அறவே இல்லை என்பதே என் எண்ணம்..மொத்தத்தில் முதல்பாதியில் என்னைக் கவர்ந்த காட்சிகள் இரண்டே இரண்டுதான்… “நெட்டில் எத்தன ஓட்ட இருக்கும்…” என்று கேள்வி கேட்டு தன் நண்பனை வெறுப்பேத்தும் காட்சி, காதலியின் வீட்டில் தனித்திருக்கும் காதலர்கள் மாட்டிக் கொள்ளும் சூழல் வந்தவுடன், தன்னை கொரியர் பாயாக நாயகன் காட்டிக் கொண்டு, அந்த சூழலின் அபாயத்தைத் தவிர்க்கும் காட்சி..” இந்த இரண்டு மட்டுமே தான்…

ஆனால் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கதை இயல்பாக யதார்த்தத்தின் பாதையில் தன்னை நகர்த்தத் தொடங்கியவுடன் தான் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது… அதிலும் படத்திற்கு அந்த க்ளைமாக்ஸ் மிகப்பெரிய பலம்.. அந்த முடிவுக்கு பதிலாக வேறு எந்த கோணத்திலாவது க்ளைமாக்ஸை யோசித்து வேறுவிதமான முடிவை கொடுத்திருந்தால், கண்டிப்பாக அது ராஜபாட்டையைவிட மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கும் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் பாடலும், அதன் பிண்ணனி இசையும், காட்சிகளின் கோர்ப்பும், அதில் நடித்திருக்கும் அந்த குட்டிச் சிறுவனின் ஆகச்சிறந்த நடிப்பும் படத்தைப் பற்றிய கணிப்பை அப்படியே மாற்றிவிடுகிறது..


ஸ்வேதாவாக நடித்திருக்கும் மனீஷா யாதவுக்கு வழக்கு எண் திரைப்படத்திற்க்கு பிறகும் கனமான கதைக்களம் கொண்ட கதாபாத்திரம் அமைந்தது அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.. தன் நண்பியிடம் இருந்து தன் காதலை மறைக்கும் போதும், காதலால் ஏற்பட்ட களங்கத்தை தன் தாயிடம் இருந்து மறைக்க முயலும் போதும் சிறப்பான நடிப்பு… கார்த்திக்காக வரும் சந்தோஷ் ரமேஷ்க்கு கனமான கேரக்டர்தான் என்றாலும் நடிப்புக்கான போட்டியில் மனீஷாவிடம் பிந்தங்குகிறார். மனீஷாவின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல் தன் நடிப்புத் திறனை நிருபிக்கிறார். தன் மகளின் நிலையை எண்ணி, எதுவுமே பேசமுடியாத நிலையில் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே அந்த இடத்தைவிட்டு வெளியேறும் காட்சியில் அசத்தலான நடிப்பு.

யுவனின் இசையைவிட பிண்ணனி இசை அட்டகாசம்.. ஆண்டனியின் துல்லியமான எடிட்டிங்கும், சூர்யாவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.. ஒரு சிறுகதைக்கான ஆழமான முடிவைக் கொண்டு இருக்கும் “ஆதலால் காதல் செய்வீர்” அதே சிறுகதையின் நடையியல் அழகைக் கொண்டு இராமல், முதல்பாதியில் சம்பிரதாய தமிழ்சினிமாவைப் போல் பத்தில் பதினொன்றாக பரிதாபமாக காட்சி அளிப்பது அதன் மிகப்பெரிய குறை.. மேலும் எனது அனுபவத்தில் எனக்கு முதல் பாதி கொஞ்சம்கூட பிடிக்காமல் இருந்து, இரண்டாம் பாதி சொல்லிக் கொள்ளும்படி அமைந்த ஒரே திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர் மட்டுமே..



ஆதலால் காதல் செய்வீர் முன் வைக்கும் ஒரு முக்கியமான விசயம்.. பால்ய பருவத்தில் நடக்கும் உடலுறவு சார்ந்தது… அதை தவறான முறையில் அணுகும் இரு பாலினருக்கும் அதை பரீட்சார்த்த முறையில் ஆய்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.. அதனால் எதிர்படும் விளைவுகளை எதிர்நோக்கும் திராணி இல்லாமலும், அது தொடர்பான புரிதல் இல்லாமலும், எதிர்பாலின இச்சைகளை காதல் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டும் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர் என்பதை திண்மையாக உணர்த்துகிறது.. பெரும்பாலான ஊடகங்களும், வலைதளங்களும், பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது அவசியமான படம் என்பதை வலியுறுத்துகின்றன.. உண்மைதான்.. ஆனால் நான் சொல்ல விளைவது என்னவென்றால், இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சூரியனையே மறைத்துவிட்டதாக கற்பிதம் கொண்டு ஏமாறாமல், பிள்ளைகளின் கண்களில் இருந்து இதுசார்ந்த விசயங்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படும் முட்டாள்தனத்தைவிட.. அவர்களுக்கு இந்த விசயங்களை பக்குவமாக உணர்த்தி அவர்கள் பால்யவயது பருவத்தை பாதுகாப்பாக கடந்துவர துணைபுரிவதே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்பதே…

Tuesday, 4 June 2013

குட்டிப்புலி:

சசிக்குமாரின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் அடுத்த இயக்குநரான முத்தையாவின் முதல்படம். இயக்குநரின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் வளரும் பருவத்தில் கண்டு மெய்சிலிர்த்து நின்ற இளைஞரான “குட்டிப் புலி” என்னும் கதாபாத்திரத்தை அப்படியே சினிமாவாக்கி இருக்கிறார். குட்டிப்புலியின் வாழ்க்கையை நாம் அறியமாட்டோம் என்பதால் படத்தில் வரும் காட்சிகளில் எது நிஜம், எது கற்பனை என்பதை நம்மால் பிரித்தாள முடியாது. இருப்பினும் இரண்டுமே வறட்சியாக இருப்பதால் அந்த விவாதமே இங்கு தேவையற்றதாக ஆகிவிடுகிறது.


சசிக்குமாரின் முந்தைய படமான சுந்தரபாண்டியனுக்கான திரைவிமர்சனத்திலேயே எழுதி இருந்தேன், சசிக்குமார் விழித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்று. அது இந்த திரைப்படத்தில் அப்பட்டமாக நிருபணமாகி இருக்கிறது. ஒரு படத்தின் அசாத்தியமான வெற்றி படத்தை எந்த அளவுக்கு  மக்களின் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறதோ அதே அளவுக்கு இயக்குநருக்கும் மக்களுக்குமான இடைவெளியையும் ஏற்படுத்திவிடுமோ என்று ஐயுறத் தோன்றுகிறது.

சுப்ரமணியபுரம் என்னும் வெற்றி தந்த களிப்பில், அத்திரைப்படத்தின் சில சாத்தியக் கூறுகளை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு (தெருக்களில் நடந்து கொண்டே இருக்கும் கதாநாயகி, பரிமாறிக் கொள்ளும் காதல் பார்வைகள், பேக்ரவுண்டில் ஒரு இளையராஜா பாடல், இறுதியில் நெஞ்சைப் பதறச் செய்வது போன்ற ரத்தம் தெறிக்கும் ஒரு க்ளைமாக்ஸ்…) அந்த திரைப்படம் எதனால் வெற்றி பெற்றது என்பதை தவறவிடுவதால் ஏற்படும் கோளாறுகள் தான் இது போன்ற திரைப்படங்கள்..

கதை இதுதான். தன் தெரு (மேட்டுத் தெரு) பெண்ணின் மானத்துக்கு களங்கம் ஏற்படுத்தியவனை கொன்று, தானும் செத்து அத்தெருவுக்கு தெய்வம் ஆகிறார் குட்டிபுலியின் அப்பா. தன் மகனும் அடாவடி பண்ணும் ரவுடியாக மாறிவிடக்கூடாது என்று பயந்து தன் மகனின் கண்ணில் அவனது அப்பனின் போட்டோகூட படாதபடி பக்குவமாகப் பார்த்து வளர்க்கிறார் அம்மா சரண்யா. இருப்பினும் மகன் ரவுடியாக (ரவுடிக்கான விளக்கம்… அநீதியைக் கண்டு பொங்குபவனாக, நீதிமானாக, பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவனாக…) வளர்ந்து நிற்கிறான். பதறிப்போன தாய் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று நினைக்க.. கல்யாணம் செய்தால் தன் மனைவியும் தன் தாயைப் போல் தாலி அறுக்க நேரிடும் என்பதால் இவன் கல்யாணத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறான். எதிர்பாராத சூழ்நிலையில் பாரதியை(லட்சுமி மேனன்) அவன் கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ள.. அதே நேரத்தில் அவனால் பாதிக்கப்பட்ட எதிரிகள் அவனைக் கொல்ல படைசூழ.. என்ன நடந்தது என்பது மீதிப்படம்…

ஊருக்கு உதவும்..! மன்னிக்க… தெருவுக்கு உதவும் உத்தமர் குட்டிப்புலியாக சசிக்குமார். வழக்கம் போல மடித்து கட்டிய லுங்கி, மலிக்காத தாடி, ஊர் பெருசுகளை மதிக்காத இளக்காரம், தப்பு செஞ்சவன்…! போலீஸாக இருந்தாலும் எகிறி அடிக்கும் தெனாவட்டு என கொஞ்சம் கூட நழுவாத அதே ஸ்கெட்ச். பாரதியாக லட்சுமிமேனன். வழக்கம் போல கையில் ரெண்டு கோல நோட்டு புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கே போகிறோம் என்று அவருக்கும் தெரியாமல் நமக்கும் சொல்லாமல், எப்போது பார்த்தாலும் தெருவெங்கும் நடந்து கொண்டு இருப்பதும், நாயகன் எதிர்படும் போது காதல் பார்வை வீசுவதும் என அதே சசிக்குமார் படப்பாணியிலான கதாநாயகி ஸ்கெட்ச். அம்மாவாக சரண்யா. வழக்கம் போல தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் பிள்ளையை மெச்சிக் கொள்வதுமாக பல படங்களில் செய்து வரும் அவருக்கே அலுத்துப் போன அதே கதாபாத்திரம்.. தான்


படத்தின் ஆரம்பத்தில் வரும் பத்து நிமிட காட்சிகள் நாவலில் வரும் காட்சிகள் என்பதால் அவை க்ளாசாக வந்திருப்பதோடு, படம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பையும் தூண்டுகிறது. அது தவிர்த்து பார்த்தால் ஊர்மக்கள் திருவிழாவின் போது போலீசை எதிர்த்து செய்யும் அலும்புகள், போலீஸ் ஸ்டேசனில் சசியை ஊற வைத்த வாழைமட்டையைக் கொண்டு அடித்து தோலை உரிப்பது, “ஒரு பொம்பள சொன்னாதா நீயும் நானும் ஆம்பள”, “அப்ப மனுசன் சாவு மனுசன்கிட்ட இல்லன்னுதான தெரியுது..” என ஆங்காங்கே சில வசனங்கள் மட்டுமே திருப்தி.


சசிக்குமாரை சிலம்பு சுத்தவிட்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும். உண்மையாகவே அந்தக் காட்சியில் சசியை விட அந்த சிறுவனும், வயதான கிழமும் மிக அருமையாக கம்பு சுத்தினர். காதலுக்கும் காமெடிக்கும் மெருகூட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே மிக பரிச்சியம் இல்லாத சில இளையராஜா பாடலை தூவியதும், பப்பு, கசகசா என்ற பெயரில் நான்கு இளைஞர்கள் வந்து காமெடி என்ற பெயரில் அடிக்கும் அறுவைகளும் மேலும் எரிச்சலூட்டுகின்றது. படத்தின் முதல் பாதியிலாவது ஏதோ ஓரளவுக்கு நகரும் கதை, இரண்டாம் பாதியில் நகருவேனா என்கிறது. இதுபோக ஆங்காங்கே மறைமுகமான சாதியத் தீண்டல்கள் வேறு…

படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ் சூட் பண்ணி இருக்கிறார்கள். பல விவாதங்களுக்கு பிறகு இந்த க்ளைமாக்ஸை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இரண்டில் எந்த க்ளைமாக்சை வைத்திருந்தாலும் படத்தின் ரிசல்டில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது என்றே தோன்றுகிறது. இயக்குநர் தன் முந்தைய பேட்டியில் படம் பார்த்து முடிக்கும் போது பெண்கள் மீதும் தாய் மீதும் ஒரு மரியாதை கலந்த அன்பு ஏற்படும் என்று சொல்லி இருந்தார். ஐ ஆம் வெரி ஸாரி டைரக்டர்…


ஆனால் அவர் சொன்ன அதே வார்த்தைக்கான பொருளை “MOTHER” என்னும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்தப் போது உண்மையாகவே உணர்ந்தேன்.. கிட்டத்தட்ட இரண்டு படத்திலும் ஒரேவிதமான க்ளைமாக்ஸ் தான். ஜிப்ரானின் இசையில் சில பாடல்கள் கேட்கும் போது சுகமாக இருந்தது.. ஆனால் படத்தில் பார்க்கும் போது ஏனோ ஒட்டவே இல்லை. மகேஷ் முத்துச் சுவாமியின் கேமரா கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறது..


மொத்தத்தில் இது சுந்தரபாண்டியன் போல ஒரு கமர்ஷியல் காக்டெயிலாகவும் இல்லாமல், சுப்ரமணியபுரம் போல க்ளாசிக்காகவும் இல்லாமல் புதுமையான கதைக்களனாகவோ, பரபரப்பு ஏற்படுத்தும் திரைக்கதையாகவோ அல்லது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்காகவோ இல்லாமல் நம்மை வெறுப்பேற்றுவதோடு இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறது… பாவம் அது என்ன செய்யும்…..!? குட்டிப்புலிதான…!!!!

Wednesday, 22 May 2013

நேரம்:


அல்போன்ஸ் புத்திரன் என்ற புதிய இயக்குநரின் முதல்படம். படத்தின் ஆரம்பத்திலேயே “குவாண்டின் டொரொண்டினோ” அவர்களின் மேற்கோளான ”என் படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் எடுக்கப்படாத படங்களில் இருந்து திருடப்பட்டவை” என்பதை காட்டி அதனை தானும் வழிமொழிகிறேன் என்று படத்தை தொடங்குகிறார் இயக்குநர். இதை எதற்காக போட்டிருக்கிறார் என்னும் ஆராய்ச்சியை எல்லாம் இறுதியில் வைத்துக் கொள்வோம். மேலும் படத்தில் டைட்டில் கார்ட் மட்டும் இரண்டு நிமிடத்துக்கு குறைவில்லாமல் வருகிறது.


படத்தின் ஒன்லைனர் என்னவென்றால் ”ஒருவனுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டால் எல்லாமே நன்றாக நடக்கும்.. கெட்ட நேரம் தொடங்கி விட்டால் எல்லாமே கெட்டதாக நடக்கும்…” என்பதே

படத்தின் ஆரம்பகாட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். அதாவது கதாநாயகனுக்கு கெட்டநேரம்.. எனவே தொடர்ந்தால் போல் எல்லாமே கெட்ட விசயங்களாகவே நடக்கிறது. முதலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் நாயகனுக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் வேலை போகிறது. இதனால் வட்டி ராஜா என்னும் ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கி தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கிறான். வேலை கிடைத்ததும் பணத்தை திருப்பிக் கொடுக்க திட்டம். ஆனால் நான்கு மாதமாகியும் வேலை கிடைக்கவில்லை. ரவுடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்குகிறான். அதே நேரத்தில் வேலை இன்னும் கிடைக்கவில்லை என்னும் காரணத்தைச் சொல்லி, காதலியின் தகப்பன் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க.. அவள் வீட்டை விட்டு வருகிறாள்.. அவளது தகப்பனோ தன் மகளை கடத்தியதாக போலீசில் புகார் செய்ய.. அங்கும் ஒரு பிரச்சனை.. காதலனை சந்திக்க வரும்  வழியில் நாயகியின் செயினை ஒருவன் பறித்துவிட்டு ஓடி விடுகிறான்… அங்கொரு பிரச்சனை.. வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட நண்பனிடம் கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தை ஒருவன் நாயகனிடம் இருந்தும் திருடி விடுகிறான்.. இது தலை போகிற பிரச்சனை… இது போதாதென்று தங்கையை கல்யாணம் செய்த மச்சானிடம் இருந்தும் புதிதாக ஒரு பிரச்சனை. இத்தனை பிரச்சனைகளையும் நாயகன் எப்படி சமாளித்தான்.. அவனுக்கு நல்ல நேரம் வந்ததா இல்லையா…? என்பது மீதிக்கதை..


சமீபகாலத்தில் வந்த தமிழ்படங்களில் அதிகமான கதாபாத்திரங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் கதையை நகர்த்திச் செல்லும் விதமாகவும் காட்சிப்படுத்தி இருக்கும் திரைக்கதை உண்மையாகவே பாராட்டப்பட வேண்டியது. இது போன்ற பல முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் கதை நகர்வில் குறிப்பிட்ட பங்களிப்பைக் கொடுத்த மற்றொரு சமீபத்திய படம் “மெளன குரு”


இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான, வெற்றி(கதாநாயகன் நவீன்), வேணி (நாயகி நஸ்ரியா), வட்டி ராஜா(சிம்ஹா), லைட் அவுஸ்(ரமேஷ்), கட்டகுஞ்சு (ஜான் விஜய்), சரவணன்(ர்)(தம்பி ராமையா), வெற்றியின் நண்பன் கதாபாத்திரம், வெற்றியின் மச்சினன் கதாபாத்திரம், இது போக நாசர், சார்லி, நாசரின் தம்பியாக வரும் மாணிக்கம் மற்றும் அந்த ஆட்டோ டிரைவர் என எல்லாருமே ஒன்று பிரச்சனையை உருவாக்குபவர்களாகவோ அல்லது அதை தீர்த்து வைப்பவர்களாகவோ கதையோடு பயணிக்கிறார்கள்.


மேலும் ஆரம்ப காட்சியில் சிம்கா சாப்பிட்டுக் கொண்டு இருப்பதும் பின்பு அது அவரது வீடில்லை என்பதை விளக்குவதும், நாலு மாதங்கள் ஓடுகின்ற விதத்தை ஒரு டூத்பேஸ்டைக் கொண்டு காட்சிப்படுத்தியதும், காதலியின் போன்கால் வரும்போது காதலின் ப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு சீக்கிரமே கதைக்குள் வந்துவிடுவதும் ஒரு வித்தியாசமான அட்மாஸ்பியரில் போலீஸ் ஸ்டேசனைக் காட்ட எண்ணி வெள்ளை அடிக்கும் சூழலை பயன்படுத்தி இருப்பதும், கோணலாக தொங்கிக் கொண்டு இருக்கும் வாய்மையே வெல்லும் போர்ட்டும் க்ளாஷ்.  ஆங்காங்கே வரும் சில காமெடி துணுக்குகள், உதாரணமாக நாசர் பாடத் தொடங்கியவுடனே அவரது அடியொட்டிகள் வெற்றியை திட்டுவது போல் திட்டு கவனத்தை திருப்புவது, தன் பெயரை சரவணர் என்று சொல்வதற்கு தம்பி ராமையா சொல்லும் விளக்கம் என குறிப்பிட்ட சில காட்சிகள் அருமை..


சிறப்பான நடிப்பு என்கின்ற அடிப்படையில் என்று பார்த்தால் நாயகன் நாயகியை பின் தள்ளிவிட்டு நாசரும் வில்லனாக வந்து கலக்கிய சிம்ஹாவும் தான் மனதில் நிற்கிறார்கள். நாயகன் நவின் இன்னும் பல படிகள் தாண்டவேண்டும். நாயகி நஸ்ரியா காஜலின் தோற்றத்தில் இருப்பதால் இவருக்கு இனி ஏறுமுகம் என்றே தோன்றுகிறது. நடிப்பு பற்றி.. நடிக்கவே தெரியவில்லை என்று எந்த கதாநாயகியை நாம் ஒதுக்கி இருக்கிறோம்.. இசை வெறும் இரைச்சல்.. பெரிதாக ஒன்றும் இல்லை.. 5டி 7டி கேமராக்களில் எடுத்ததாக இருந்தாலும் நல்ல குவாலிட்டியான அவுட்புட் என்பது மகிழ்ச்சியான செய்தி.


என் படத்தின் காட்சிகள் எடுக்கப்படாத படத்தில் இருந்து திருடப்பட்டவை என்னும் வார்த்தைகளை யோசித்த போது.. இந்த சாயலில் ஓடிக் கொண்டே ஒரு படம் பார்த்ததாக நினைவு. ”“ரன் லோலா ரன்” என்னும் திரைப்படம். கதாநாயகன் தன் பாஸ்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை ட்ரெயினில் ஒருவன் திருடி விடுவான். நாயகன் தன் காதலியிடம் கேட்பான். அவள் நான் 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் காத்திரு என்று சொல்லிவிட்டு தன் தந்தையிடம் உதவி கேட்க செல்வாள். அவர் ஒரு சண்டையில் நீ என் பொண்ணே இல்லை என்று அடித்து விரட்டி விடுவார். மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டு இருக்கும். “நீ பனிரெண்டு மணிக்குள் திரும்பிவராவிட்டால் நான் எதிரே உள்ள சூப்பர் மார்கெட்டில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கப் போகிறேன்.. அதைவிட்டால் எனக்கு பணத்தை மீட்க வேறுவழியில்லை என்று சொன்னது நினைவு வரும்.. ஓடத் தொடங்குவாள்… தன் காதலனின் பணத்தை திருடியவன் அவளை கடந்து செல்வான்.. நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கும்.. அவள் ஓடிக் கொண்டே இருப்பாள்….” இப்படி யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற காரணத்துக்காகவே இயக்குநர் அந்த மேற்கோளை பயன்படுத்தினாரா தெரியவில்லை.. ஆனால் இதற்கும் இந்தப் படத்திற்கும் உண்மையாகவே எந்த சம்பந்தம் இல்லைதான் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்தப்படமும் நினைவுக்கு வந்தது அவ்வளவே..


குவாண்டின் டொரொண்டினோவுக்கு வருவோம். இவர் இப்போது பல தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஆஸ்தான இயக்குநராக ஆகிவிட்டிருக்கிறார். மிக நல்ல விசயம். அதற்காக டொரொண்டினோவின் ஸ்டைலை இவரிடமும் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால் டொரொண்டினோவின் எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு நிலையற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். அந்த பாத்திரம் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது. அதுதான் அவரது ப்ளஸ். ஆனால் அது இதில் மிஸ்சிங். என்னதான் சிம்ஹாவை அவ்வளவு பில்டப்புடன் காட்டினாலும் அவரால் ஒரு மிகப்பெரிய இழப்பு ஹீரோ தரப்புக்கு வரும் என்னும் எண்ணமே தோன்ற மாட்டேன் என்கிறது. மேலும் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன திருப்பங்கள் சில இடங்களில் எளிதாக யூகிக்க கூடியதாக இருப்பதும் ஓர் நெகட்டிவ்… அதை தவிர்த்துப் பார்க்கையில் இன்றைய தமிழ் திரைப்பட சூழலில் இது ஒரு மறுக்கமுடியாத நல்ல முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Wednesday, 26 December 2012

நீதானே என் பொன் வசந்தம்:


வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த படம். பெரும்பாலும் கெளதம் படங்கள் மிகப்பெரிய கலை பொக்கிச படங்களாக இல்லாமல் இருந்தாலும் அவை எப்போதுமே என் மனதுக்கு சற்று நெருக்கமானதாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு விண்ணை தாண்டி வருவாயா, போன்ற படங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் விடுபட்ட பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் கூட குறைபாடு உள்ள படங்களாக தெரிந்ததில்லை..

கதை, வசனங்கள், வித்தியாசமான கேமரா ஆங்கிள், புதிய முயற்சியிலான கலர் டோன் இப்படி நம்மை கட்டிப் போடும் விசயங்கள் இருந்தாலும், அதையும் மீறி பெரும்பாலும் ஒரு பெண்ணின் நுணுக்கமான மன உணர்வுகளை பிசகாமல் பிரதிபலிக்கும் இவரகு பாங்கு என்னை மற்ற எல்லா அம்சங்களையும் மீறி ஆக்ரமித்துக் கொள்ளும்… அவை ஒரே மாதிரியான பாணியிலான கதைகளாகவே இருந்தாலும் (ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா…? என்கின்ற ஒரு உச்சகட்ட குழப்ப நிலையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருக்கும்…) அவை என்னை எப்போதும் சளிப்படையவோ அல்லது அயர்ச்சி அடையவோ செய்ததே இல்லை… சில நேரங்களில் இவரது படத்தை பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் இதில் எதெல்லாம் இவரது வாழ்வில் நடந்திருக்கும் என்று மிகவும் காரசாரமாக விவாதித்து அதை நிருபிக்கும் முயற்சி வரைக்கும் நான் சென்றிருக்கிறேன்….

உதாரணமாக விண்ணை தாண்டி வருவாயாவில் ஹீரோ ஒரு உதவி இயக்குநர், அவனது காதலி ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், வீட்டில் சம்மதிக்காத காரணத்தாலும் பிரிந்து செல்கிறார். இந்த ஹீரோவான உதவி இயக்குநர், இயக்குநராகும் தனது முயற்சியில் தனது காதல்கதையையே தன் முதல் படமாக எடுக்கிறார். ஆனால் அதில் தன் காதலி பிரிந்து செல்லாமல் தன்னை திருமணம் செய்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பார். அதை பார்க்க தற்போது திருமணம் ஆகி இருக்கும் தன் பழைய காதலி ஜெஸியை அழைத்து வருவார். படம் பார்த்த ஜெஸி அழுது கொண்டே கூறுவார்…. “என்ன அழ வைக்காத கார்த்திக், நான் ஒண்ணும் அவ்வளோ நல்லவ இல்லியே…. நாந்தா உன்ன விட்டு போய்ட்டேனே” அதே திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் திருமண கோலத்தில் இருக்கும் ஜெஸி, தன் காதலன் கார்த்திக்கின் நினைவால் திருமணத்தையே நிறுத்திவிடுவார்.

இப்போது அப்படியே கெளதமின் முதல் படத்திற்கு வாருங்கள்… “மின்னலே” இதில் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது திருமணத்தை நிறுத்தி விட்டு மாதவனுக்காக திரும்பி வருவார் ரீமாசென்… காதல் கைகூடிவிடும். இந்த மின்னலே என்கின்ற கெளதமின் முதல் படத்தை அவர் தன் காதலி (ஜெஸி=………………………………)க்கு காட்டி இருக்கலாம். அப்போது அவர் ஜெஸி கூறிய அதே வசனங்களை கூறி இருக்கலாம்.. “என்ன அழ வைக்காத கெளதம்.. நான் ஒண்ணும் அவ்ளோ நல்லவ இல்லையே… நாந்தா உன்னவிட்டு போய்ட்டேனே…” இப்படியெல்லாம் நான் வாதிட்டு இருக்கிறேன்… ஏனென்றால் இது போல் குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல், சிறு சிறு சண்டைகளை மனதில் வைத்துக் கொண்டு வீம்பு செய்து கொண்டு தங்களையே தண்டித்துக் கொள்ளும் பெண்கள் எனக்கும் ஓரளவுக்கு பரிச்சயம். அவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை இவரது படங்களை விட வேறு எந்த படங்களும் தெள்ள தெளிவாக காட்டியதே இல்லை….

சரி… உனக்கு என்னாயிற்று.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு விமர்சனம் எழுதுறதா சொல்லிட்டு வேற எல்லா பட டயலாக்கையும் சொல்றீயேன்னு கேக்குறீங்களா…. அவுங்க பேசுன டயலாக் எல்லாம் இருக்கட்டும்…. நீதானே என் பொன் வசந்தம் பார்த்துவிட்டு நான் பேசிய டயலாக் என்ன தெரியுமா…. கண்களில் நீர் கோர்க்க…. “என்ன அழ வைச்சிட்டீங்களே கெளதம், நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லயே…, படம் வேணான்னு சொல்லிட்டு என்னால தியேட்டர விட்டும் போக முடியாதே…”

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை… அதே காதல், அதே ஈகோ, அதே குழப்பம், கல்யாணத்தை நிறுத்தி க்ளைமாக்ஸ்….. இதில் புதியதாக நான்கு பருவ காதல். குழந்தை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை பார்க்கும் பருவம்.

இது ஏறத்தாழ விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் வைத்த பதிவுதான்… ஆனால் VTVல் இருந்த அந்த 
அற்புதமான காதல், அழகான ஆழமான வசனங்கள், காதலின் வலி, மொத்தத்தில் அந்த திரைக்கதைக்கான உயிர், இவை எதுவுமே இல்லாத வெற்று எழும்புகூடாகவே காட்சியளிக்கிறது இந்த நீதானே என் பொன் வசந்தம்….

பல இடங்களில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது… இது கெளதம் படம்தானா என்று… கதை, காதல், விஸ்வல், வசனம் என எதிலுமே அவரது சாயல் தெரியவில்லையே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.. நண்பன் தான் தெளிவு படுத்தினான்… இது கெளதம் படம்தான்… ”நன்றாக பார்.. தமிழ் வசனங்களுக்கு இணையாக ஆங்கில வசனங்களும் வருகிறதே..” என்று.. நான் ஆமோதிக்க வேண்டியதாயிற்று…. கெளதம் வாசுதேவ் மேனனின் படம் என்பதற்கான ஒரே ஒரு அறிகுறியுடன் வந்திருக்கும் இந்த படம்தான் ”நீதானே என் பொன் வசந்தம்…”

Wednesday, 21 November 2012

பீட்சா:



துவண்டு போய் இருந்த தமிழ் சினிமா வணிகத்திற்கு ஆறுதலாக வந்து, சிறு பட்ஜெட் படங்களை நம்பிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் படம். இந்த படத்தின் விமர்சனங்களை எழுதிய பலரும் கதையைப் பற்றி கூறினால் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும் என்று கூறி ஜகா வாங்கிக் கொண்டனர். ஆனால் நான் இந்த கதையைப் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணிய காரணத்தால் தான் பல நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன். பெரும்பாலான மக்கள் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள்.. எனவே நான் கதையை பற்றி விவாதிப்பது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

பீட்சா கடையில் வேலை பார்க்கும் மைக்கேல் (விஜய் சேதுபதி) என்ற இளைஞனும், பேய்கள் பற்றிய அதீத ஆர்வத்தால் பேய்களைப் பற்றி கதைகள் எழுதிக் கொண்டும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் யுவதியும் காதலர்கள். லிவிங் டுகதர் கல்சரில் கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டில் வசித்து வருபவர்கள். அவள் எப்போதும் பேய் படங்களை பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருப்பவள். மைக் என்கின்ற மைக்கேலுக்கு பேய் மீது நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பயம் உண்டு. இந்த நிலையில் அவள் கர்ப்பமாக முதலில் யோசித்த மைக் பின்னர் திருமணம் செய்ய சம்மதித்து பணத்தட்டுபாட்டால் இப்போது நமக்காக திருமணம் செய்து கொள்வோம் என யாரையுமே அழைக்காது வீட்டிலேயே இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.

பீட்சா கடை ஓனரின் வீட்டுக்கு பைல்களை கொடுக்க சென்ற மைக், பேய் பிடித்து இருக்கும் அவரது மகளைப் பார்க்கிறான். அவளிடம் யார்மீதாவது உனக்கு கோபம் இருக்கிறதா…? யாரையாவது பழிவாங்க நினைக்கிறாயா சாந்தி என பேய் நிபுணர் ஒருவர் கேட்க… அவள் ”என் பேர் நித்யா” என கூறிக் கொண்டே உக்கிரமாக மைக்கேலை திரும்பி பார்க்க.. அவன் பயந்து போய் வீடு திரும்புகிறான். அவனது காதலி சொல்லுகிறாள் “எல்லாருக்கும் ஒரு தருணம் வரும் அவநம்பிக்கைய நம்பிக்கையா மாத்துற தருணம், உனக்கான தருணம் வந்திருச்சி” என கூற அவன் பயப்படுகிறான். இதை தொடர்ந்து வரும் காட்சிகளில் தன் வீட்டில் ஒரு பார்சலை கொடுக்க சொல்லி கடை ஓனர் (நரேன்) வீட்டுக்கு அனுப்ப.. மைக் தயங்கி தனக்கு டெலிவரி இருப்பதாக சொல்ல.. ”என் மகள் உன்ன கொன்ற மாட்டா…” என திட்டி அவனை அனுப்புகிறார்.

நடுநிசியில் பரபரப்புடன் கடைக்கு ஓனர் வர.. மற்ற இரண்டு ஊழியர்களும் அடிபட்ட ரத்த காயங்களுடன் இருக்க… மைக் எங்கே என அவர் கேட்க… உள்ளே அவர்கள் கைகாட்ட… உள்ளே மைக்கும் ரத்த காயங்களுடன் அமர்ந்து இருக்க… ஓனர் “டேய் மைக் டெலிவரி கொடுக்கவும் போகல.. வீட்டுக்கும் ஆள் வரலங்கிறாங்க.. எங்கடா போன..” என கேட்க.. அவன் பைத்தியம் பிடித்தவன் போல் “தன் மனைவி இறந்துவிட்டதாக போலீஸ் கூறுவதாகவும், அவளை காணவில்லை எனவும், தான் ஒரு அமானுஸ்ய பங்களாவில் மாட்டிக் கொண்டதாகவும் கூறி நடந்ததை விவரிக்க தொடங்க… அந்த அமானுஸ்ய பங்களாவில் என்ன நடந்தது..? அவனது மனைவி என்ன ஆனாள் என்பது மீதிக்கதை….

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்க:
இந்த படத்தின் திரைக்கதை யுத்தியை நாம் இரண்டு விதமாக கொள்ளலாம். ஒன்று இதனை புத்திசாலித்தனமான திரைக்கதை (Intelligent type) எனலாம். அல்லது ஏமாற்றும் விதத்திலான திரைக்கதை (cheating type) என்றும் சொல்லலாம்.. இரண்டு விதமான திரைக்கதை பெயரும் இப்படத்திற்கு பொருந்தும் என்பதற்கு காரணம் ஒன்று மட்டுமே அது பார்வையாளர்களை இதில் ஏதேனும் ஒன்று நடந்து இருக்கலாம் என்று யோசிக்க வைத்துவிட்டு அதில் எதுவுமே நடக்கவில்லை என்று புதிதாக ஒன்றை கூறுவதே.

படத்தைப் பார்க்கின்ற பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு பின்னர் மைக்கேலை ஒரு மனநோயாளியாகவோ அல்லது பேய் பிடித்தவனாகவோ அல்லது கொலைகாரனாகவோ நினைக்க வாய்ப்புண்டு… அதே நேரத்தில் கதாநாயகி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று நாம் நினைத்துக் கொள்வதற்கான தருணங்களையும் இயக்குநர் ஏற்படுத்துகிறார். நாம் மேற்கண்ட ஏதேனும் ஒன்றுதான் காரணமாக இருக்கும் என்ற தடத்தில் பயணித்து மேற்கொண்டு செல்லும் போது இயக்குநர் ஒரு u turn எடுத்து இது எதுவுமே காரணம் இல்லை. ஓனர் வீட்டில் கொடுக்க சொன்ன பாக்ஸில் இருந்த வைரங்களை கொள்ளை அடிக்க இருவரும்(கணவன், மனைவி) சேர்ந்து நாடகமாடுகின்றனர் என்ற ஒரு புதிய கோணத்தில் கதை சொல்லி முடிக்கிறார். எனக்கு இந்த முக்கியமான திருப்பம் சிறிது ஏமாற்றத்தை கொடுத்தது.. அந்த இரண்டு கேரக்டரும் சேர்ந்து ஓனரை ஏமாற்றியது இருக்கட்டும்… அவர்களுடன் இயக்குநரும் சேர்ந்து கொண்டு நம்மையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார் என்ற உணர்வே பிரதானமாக எழுந்தது. அந்த ஒரே ஒரு காரணம் படம் பார்த்தப் பின்னர் ஏற்படும் பாதிப்பை சிறிது குறைத்ததும் உண்மை.    

இந்த படத்தைப் பற்றியே மேற்கொண்டு சிந்தித்திக் கொண்டிருக்கும் போது  இந்த திரைக்கதையை இப்படி வைத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம் கண்டிப்பாக இயக்குநருக்கும் தோன்றியிருக்கும். இருந்தாலும் அவர் இப்போது படமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைக்கதை உத்தியே சிறந்தது என்று முடிவு செய்திருப்பார் என்றே தோணுகிறது. ஏனென்றால் அந்த மாற்று திரைக்கதையில் சுத்தமாக விறுவிறுப்பு இருக்காது. ஆனால் சற்று யோசித்து இருந்தால் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்க முடியும். இந்த மாற்று திரைக்கதை உத்தியையும் இயக்குநர் யோசித்து வேண்டாம் என்று நிராகரித்து இருப்பார் என்பதற்கு ஆதாரமாக கீழ்கண்ட காட்சியை விளக்குகிறேன்.

படத்தில் ஒரு காட்சி. …………மைக்கேல் பீட்சா டெலிவர் செய்து விட்டு 435 ரூபாயாக கொடுங்கள். என்னிடம் சில்லறை இல்லை என்று கூற… அந்த வீட்டின் பெண்மணி சில்லறை எடுத்து வருவதாக கூறி மேல்மாடி செல்கிறாள். கரெண்ட் வேறு இல்லை. மெழுகுவர்த்தி (ஒளிப்பதிவாளரின் உதவிக்காக) கொழுத்திவைத்து விட்டு செல்கிறாள். சத்தம் கேட்க.. மைக்கேல் மேலே சென்று பார்க்க.. அவள் இறந்து கிடக்க… வீட்டை விட்டு வெளியே செல்ல முயல… வீடு உட்புறமாக பூட்டிக் கொள்கிறது. எப்படி கொலை நடந்தது என்றே தெரியாத சூழ்நிலை… கொலைகாரன் அல்லது பேய் உள்ளே இருக்கின்ற பட்சத்தில் அடுத்து கொலை செய்யப்படுவது நீங்களாகவும் இருக்கலாம்.. அந்த சூழலில் மைக் கண்ணாடி ஜன்னலின் வழியே கத்துகிறான்.. யாரும் உதவிக்கு வரவில்லை………

இந்த காட்சியை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். இதே சூழ்நிலையில் அடைக்கப்பட்ட வீட்டுக்குள் நீங்கள் இருந்தால் “கண்ணாடி ஜன்னலின் உள்ளே இருந்து கத்திக் கொண்டு இருப்பீர்களா… கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறுவீர்களா…? கண்டிப்பாக கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளிவருவீர்கள்… ஆனால் மைக்கேல் அதை செய்வதில்லை… ஏனென்றால் அவன் அங்கு ஒரு கட்டுக்கதையை பொய் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான்… அவனும் ஒரு கட்டத்தில் தன் பொய்யில் மெக்கா சைஸ் ஓட்டை இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு ஓனரோ  சக பணியாளர்களோ அவனிடம் “நீ ஏன் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே வரவில்லை என்று கேட்பதற்கு முன்பு முந்திக் கொண்டு அதற்கும் ஒரு கதை சொல்கிறான். இவன் இரும்பு ராடால் அடித்தும் கூட அங்கிருந்த எந்த ஒரு கண்ணாடி பொருளும் உடையவில்லை என்று” இதுதான் அந்த மற்றொரு திரைக்கதைக்கான ஐடியா….

இது போன்ற அனுபவம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்பட்டு இருக்கும்.… ஏதாவது ஒரு பொய் சொல்லிக் கொண்டு இருப்போம்.. உதாரணமாக “ஆபிஸில் லீவு போட்டதுக்கு காரணமாக மனைவி வீட்டில் வழுக்கி விழுந்ததாக சொல்லிக் கொண்டு இருப்போம்.. எதிர் இருக்கை காரர் கேட்பார்… ’நேற்று இரவு உங்களையும் உங்கள் மனைவியையும் புட் பஜாரில் பார்த்தேனே…’. என்பார்.. மனதுக்குள் அவரை அசிங்கமாக திட்டியவாறே… ’நோ நோ நோ யூ ஆர் மிஸ்டேக்கன்… என்கூட வந்தது என் மிஸஸோட சிஸ்டர்… அவுங்க டிவின்ஸ்….” என்று இன்னொரு பொய்யை சொல்லி சமாளிப்போம்….

இப்படிதான் மைக்கும் சமாளிக்கிறான்… ஆபிஸில் லீவு போடுவதற்காக மேற்சொன்ன பொய்யை நீங்கள் சற்று கவனித்தால் ஒரு திரைப்படத்தின் சாயல் தெரியும்… அதான் இல்லாத இரட்டையரை இருப்பதாக கூறும் திரைப்படம்… “தில்லுமுல்லு” இதே திரைப்படம் தான் மைக்கேல் அந்த வீட்டுக்குள் நுழையும் போது டிவியில் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த தில்லுமுல்லு, பீட்சா இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால்.. தில்லுமுல்லுவில் ரஜினி(இந்திரன்) தன் முதலாளி தேங்காய் சீனிவாசனை ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டருக்கு தெரியாது. ஆடியன்ஸ்க்கு தெரியும். பீட்சாவில் மைக்கேல்(விஜய் சேதுபதி) ஏமாற்றுகிறார் என்பது படத்தில் வரும் பிற கேரக்டர்களுக்கும் தெரியாது. ஆடியன்ஸான நமக்கும் தெரியாது… இது முதல் வேற்றுமை.. இரண்டாவது வேற்றுமை அங்கு இரட்டையர் என்ற பொய்… இங்கு பேய் வீடு என்ற பொய்…

மாற்றுதிரைக்கதையாக நான் இங்கு முன்வைக்கும் திரைக்கதையும் தில்லுமுல்லு பாணிதான்.. அதாவது மைக்கேலின் வாழ்க்கை நடக்கும் விதத்தை முன்பின் மாற்றாமல் அப்படியே காட்டுவது.. அவன் பீட்சா டெலிவரி செய்ய செல்ல.. கீழே விழ.. வீட்டுக்கு சென்று டிரஸ் மாற்ற… டைமண்டை அவனது மனைவி பார்க்க… அவர்கள் திட்டம் போட… மைக்கேல் அதை அரங்கேற்றம் செய்ய….பொய் சொல்லத் தெரியாமல் பொய் சொல்லி அவன் மாட்டிக் கொள்ளப் போகிறான் என ஆடியன்ஸ் என்னும் போது புத்திசாலித்தனமாக மற்றொரு பொய்… இப்படி செல்லும் அந்த திரைக்கதை.. இதில் கண்டிப்பாக ஒரு பேய் கதைக்கான த்ரில் இருக்காது. ஆனால் காமெடி மிகச்சிறப்பாக அமைய வாய்ப்புண்டு… நடிப்புக்கும் அற்புதமான வாய்ப்பு உண்டு…

பீட்சா மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த மாற்றுதிரைக் கதையை வழக்கமான திரைக்கதை… இதில் என்ன புதுமை உள்ளது என்றே பெரும்பாலானோர் எதிர்கொள்வர். இருப்பினும்… ஒரிஜினல் திரைக்கதையின் முடிவில் ஒரு ஏமாற்றம் தோன்றுவதாலும்… இதற்கு ஒரு மாற்றுதிரைக்கதை உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே இதை பகிர்ந்து கொள்கிறேன்.

இதனை தவிர்த்து பார்க்கும் போது பீட்சா மிகச்சிறப்பான அடையாளமாக தமிழ்சினிமாவில் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு. சில மெழுகுவர்த்திகளையும், டார்ச் வெளிச்சத்தையும் கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்துக்கு வாழ்த்துக்கள். இசையும் பிண்ணனியிசையும் வெகு நேர்த்தி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துக்கள்.. விஜய் சேதுபதிக்கு பீட்சா ஒரு நல்ல திருப்பமாக அமையும்… அது போலவே தமிழ் சினிமாவிற்கும்.. தனது முதல்படம் என்பதற்கான அறிகுறியை எங்குமே விடாத இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்க்கும்…..


Saturday, 13 October 2012

மாற்றான்


மாற்றான்:
    

சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் இரண்டாவது படம். ”கோ”வின் வெற்றி படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தாலும், கடந்த சில காலங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலவிவரும் ”இந்தபடம்” இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்ற குற்றசாட்டுகளில் கேவியின் அயன் (MARIA FULL OF GRACE), கோ (STATE OF PLAY) போன்ற படங்களும் சிக்கிக்கொள்ள.. படத்தின் நாயகன் சூர்யாவும், டைரக்டர் கே.வி ஆனந்தும் சேர்ந்து மாற்றான் எந்த படத்தின் தழுவலும் இல்லை என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவர்களை இழுத்துச் சென்றது. இருப்பினும் மாற்றானும் ஏதோ ஒரு படத்தின் (STUCK ON YOU) அப்பட்டமான தழுவல்தான் என்றும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. அது உண்மையா..? அல்லது வதந்தியா..? என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்பதால் இப்போதைக்கு இதை முழுக்க முழுக்க கேவி.ஆனந்தின் படைப்பாகவே கருதி விமர்சனம் எழுத துணிகிறேன்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. அதில் ஒருவன் கொல்லப்பட.. மற்றொருவன் கொன்றவர்களையும்… கொல்ல தூண்டியவர்களையும் கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதுதான் மாற்றானின் கதை. தமிழ்சினிமாவிற்கான யூஸ்வல் லைன் தான். ஆனால் அந்த இரட்டையரில் ஒருவன் எதற்காக இறக்கிறான்.. என்கின்ற காரணம் சற்று தமிழ் சினிமாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் புதுசு..

திரைக்கதையில் முதல் பாதியில் இருக்கின்ற முக்கியமான மூன்று முடிச்சுகள் மிகச்சிறப்பாக அமைந்திருக்கின்றன. அந்த தைரியத்தில் தான் இரண்டாம் பாதியைப் பற்றி கவலையே படாமல் அவர்கள் இஸ்டத்திற்கு ஏதோ தோன்றியதை எடுத்திருப்பார்கள் போல் இருக்கிறது. அது படத்திற்கு பெரிய மைனஸ். அது சரியாக அமைந்திருந்தால் படம் மிகப்பெரிய ஹிட். ஆனால் அது அப்படி அமையவில்லை என்பதுதான் உண்மை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வழக்கமான தமிழ்சினிமாவின் வெகு சாதாரணமான இரண்டாம் பாதிதான் இங்கும். பழி வாங்கும் படலம். அதை சொல்வதற்கு எத்தனையோ விதமான முறைகள் உள்ளன. ஆனால் நான் புதிதாக ஒன்றை முயற்சி செய்கிறேன் என்ற எண்ணத்தில் இருப்பதிலேயே மொண்ணையான ஒரு முறையை கையாண்டிருப்பதுதான் மிகப்பெரிய குறை.

விமலன் அகிலன் என இரண்டு கதாபாத்திரத்தில் சூர்யா. நடிப்பில் சூர்யாவிற்கு இன்னோரு மைல்கல் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு திருஸ்டி போல் இரண்டாம் பாதியில் ஆரம்ப காட்சிகளை தவிர்த்து சூர்யாவின் நடிப்பு கொடுமை செய்கிறது. அதற்கு அவரை குற்றம் கூறி பிரயோசனம் இல்லை. அயனில் பிரபுவை கொன்றப் பிறகு கடைசி இருபது நிமிடங்களில் வரும் ஒரு அலட்டலான நடிப்பு குறிப்பாக பொன்வண்ணனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இருக்கும் மேனரிசங்களும் உடல்மொழியும் அப்படியே தொடர்வது போன்ற எண்ணம் தோன்றுகிறது. இயக்குநர் அதை உற்று நோக்கி சற்று தவிர்த்திருக்கலாம்.

காஜலை சூர்யாவின் கம்பெனியில் வேலை செய்பவள் என்று அறிமுகப்படுத்திவிட்டு கடைசிவரை சூர்யாவுடன் போகும் இடமெல்லாம் சுத்திக் கொண்டே இருப்பதை தவிர வேறு வேலையே அவரை செய்யவிடவில்லை. மரபியல் விஞ்ஞானி ராமசந்திரனின் (சச்சின் கண்டேல்கர்) கேரக்டரிலும் பல குழப்பங்கள்.. புறக்கணிப்பால் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் சொல்ல முடியாது.. ஏனென்றால் அது தொடர்பான காட்சிகள் வழுவற்றவை.. அடிப்படையில் கே.வி.ஆனந்த் ஒரு இளங்கலை வேதியியல் பட்டபடிப்பு முடித்தவர்.. எனவே கனா கண்டேன், அயன், எனத் தொடர்ந்து மாற்றானிலும் சில கெமிஸ்ட்ரி தொடர்பான சரக்குகள் உண்டு

அயனில் நம்ம டீம் எந்த வெளிநாட்டுக்கு போச்சி… ஓ காங்கோல்ல… அங்க இருந்து டையகோனலா ஒரு கோடு போட்டா எங்க போய் முட்டுது.. சோவியத் யூனியன்லயா… அப்ப அங்க சோவியத் யூனியன்ல இருந்து பிரிஞ்ச ஒரு கண்ட்ரி வச்சு கதை பண்ணிருவோம்னு யோசிச்சிருப்பாங்களோ… சத்தியமா படம் பாக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

சினிமா இண்டஸ்ட்ரியில் அடுத்த சங்கர் ”கே.வி.ஆனந்த்” என்று பேசத் தொடங்கியதாலோ என்னவோ அவருக்கும் நாட்டுப்பற்று தொற்றிக் கொண்டது. கோ-வில் இளைஞர் சமுதாய அரசியலை சொ(கொ)ன்னவர்.. இங்கு சூர்யாவை வைத்து என் நாட்டுக் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று போராடி இருக்கிறார். அயனில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை என்றால், இங்கு குடியரசு தலைவரின் விருது.

படத்தில் பல இடங்களில் லாஜிக்கே இல்லை. அதிலும் இந்த சைண்டிஸ்டின் அடியாட்கள் ஒரு நாட்டு ராணுவத்துடன் மோதுவது எல்லாம் உச்சபட்ச கொடுமை. அதிலும் சூர்யா மொழி தெரியாத நாட்டில் நுழைந்து அடிக்கும் லூட்டியும்(அது அகிலனின் கேரக்டரைசேசன்… என்று நீங்கள் சொன்னாலும்..) ராணுவ கேம்பில் இருந்து ஜஸ்ட் லைக் தெட் தப்பிப்பதும், ராணுவ அதிகாரியையே காப்பாற்ற அவரிடம் ஒரு சான்ஸ் கேட்டு அவரது உயிரையும் காப்பாற்றுவதும்…. என்னமோ போங்க என்று சொல்லத் தோன்றுகிறது.

அதுசரி… முக்கியமான ஒரு மர்மத்தின் முடிச்சை கண்டுபிடிக்க போகின்றவன் இப்படி கொஞ்சம் கூட சீரியஸே இல்லாமலா குழந்தைதனமாக அலைந்து கொண்டு இருப்பான். வோல்காவின் கதாபாத்திரம், வோல்காவுக்கும் காஜலுக்குமான உறவு, வோல்காவை முதலில் ரஞ்சித் ஏன் உள்ளே அனுமதிக்கிறான்.. என பல இடங்களில் லாஜிக் உறுத்தலுடன் காட்சிகள் அமைந்துள்ளன.. இவ்வளவு செய்கின்ற அந்த சைண்டிஸ்ட் வெளி நாட்டில் இருந்து ஏன் அந்த ஃபெர்டிலைசரை உணவுக்காக அல்ல என்று சொல்லி வாங்கி மாட்டுதீவணத்தில் பயன்படுத்த வேண்டும். அதை அவர் இங்கே தயாரித்துக் கொள்ள முடியாதா.. இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

படத்தில் வரும் கதாபாத்திரம் சம்பவங்கள் அனைத்துமே கற்பனை என்று சொல்கிறார்கள். ஆனால் 1992ம் ஆண்டு பிற நாடுகளை பின் தள்ளிவிட்டு ஒலிம்பிக்கின் பதக்க பட்டியலில் ரஷ்யா முன்னிலை பெற்றது உண்மை… அப்படி என்றால் அதிக மெடல் எப்படி வாங்கினார்கள் என்கின்ற கற்பிதம்  கற்பனையா..? விடை எனக்கு தெரியவில்லை.. அது உண்மையோ பொய்யோ.. ஆனால் இது போன்று காட்சியமைத்திருப்பது எப்படி ரஷ்ய நாட்டு தூதரக அதிகார்களுக்கு தெரியாமல் போனது என்று கேள்வி எழுகிறது.

வசனம் சுபா. முதல் முறை சுபாவுடன் கூட்டணி.. முதல் பாதியில் ஆங்காங்கே கவனிக்கும்படி இருக்கிறது வசனம். உதாரணமாக கம்யூனிசம் தொடர்பான வசனங்களை சொல்லலாம்… “ஏண்டா மொக்க மொக்க புக்கா படிச்சிட்டு வந்து அவ மேல வாந்தி எடுக்கிற..” “நெக்ஸ்ட் என்ன…. ம்ம்ம்.. புரோட்டா மாவு பிசஞ்சேல.. இப்ப சால்னா ஊத்து…” இரண்டாம் பாதியில் அவர் எழுதவே இல்லையோ என்று சந்தேகம் எழுகிறது. கே.வி ஆனந்துக்கு கம்யூனிசத்தின் மீது என்ன கோபமோ…? கோ-வைத் தொடர்ந்து இதிலும் பாய்ந்திருக்கிறார். வேறு யாரும் அவர் மீது பாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பேலன்ஸ் செய்யும் விதத்தில் சில வசனங்களும் உண்டு. உதாரணமாக “உனக்கு தின்ன உடுத்த எல்லா கிடைச்சா போதும்.. அடுத்தவன பத்தி எந்த கவலையும் இல்ல…” சொல்லலாம்.

பேக் ரவுண்ட் மீயூசிக் பல இடங்களில் சிறப்பாகவும், பல இடங்களில் மிக மோசமாகவும் அமைந்திருக்கிறது. இதில் இரண்டாம் பாதியில் சேசிங் காட்சியில் ஒரு குத்தாட்ட பாடலுக்கான பின்னணியிசை மனசாட்சியே இல்லாமல் போட்டிருக்கிறார்.. பாடல்கள் ஹரிஸுன் பழைய பாடல்களை நினைவு படுத்தினாலும் படத்தோடு பார்க்கும் போது ஒன்றிப்போவதால் பிரச்சனை இல்லை. குறிப்பாக “ரெட்டை கதிரே..” மாண்டேஜ் சாங் அருமை.. ”யாரோ யாரோ”(எம்மா எம்மா காதல் பொன்னம்மா ரீமிக்ஸ்) ”ராணி, கோணி” ஆகியவை ஒரு முறை கேட்கலாம் ரகம்.. கேமரா செளந்தர்ராஜன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… அது போல் எடிட்டிங்கும் சில இடங்களில் மிக சுமாராகவே இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது. எடிட்டிங் ஆண்டனி..!

மொத்தத்தில் இந்த மாற்றான் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்களே விரும்பவில்லை போலும். எனவே இது சாதாரண வெற்றிப்பட வரிசையில் இடம் பெறும் என்பது என் அனுமானம். அதற்கு முழு முதற்காரணம் சூர்யாவின் நடிப்பும், முதல் பாதியும் மட்டுமே..

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் கொஞ்சம் மணம் உண்டு…

Thursday, 4 October 2012

barfi- ஒரு ஃபாரின் சரக்கு...!?


சிறு குழந்தையின் கையில் உள்ள சாக்லேட்டை சாப்பிடும் நாயகன், சிலை திறப்பு விழாவில் சிலையின் கைகளில் படுத்திருக்கும் நாயகன் போன்ற காட்சிகள் சார்லி சாப்ளின் வகைப்படங்களை நினைவு படுத்துவதாலும்.. ரன்பீரும் பிரியங்காவும் காரை நிறுத்துவதற்கு செய்யும் முயற்சிகள்.. போன்றவை கிக்கிஜிரோவில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று அப்பட்டமாக தெரிவதாலும் பிற நல்ல நல்ல காட்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
       சந்தேகம் நிவர்த்தியானது. நண்பர்களே ஃபார்பி தொடர்பான என் இடுகையில் நான் மேற்சொன்னவாறு கூறியிருந்தேன். பிற நல்ல காட்சிகள் என்று எண்ணிக் கொண்ட பல காட்சிகள் பல படங்களில் இருந்து அங்கங்கே உருவப்பட்டுள்ளன என்பது நிருபணமாகியுள்ளது. எந்தெந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது என்றால் cop, citylights, note book, kikijiro, singing in the rain, adventure, project-a, lovers concerto, koshish, swadish-ad, black cat white cat, getting home, goonies, the cops, tommy boy, fried green tomatoes,
இத்தனைப் படங்களிலிருந்து காட்சிகள் அனுமதியின்றி திருடப்பட்டுள்ளது. இதனை ஒரு மிகச்சிறந்த படம் என்று பதிவிட்ட என் அறியாமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன்.
மேலும் எந்தெந்த காட்சிகள் உருவப்பட்டவை என்று அறிய விரும்புபவர்கள் கீழ்கண்ட உரலியை சொடுக்குவதின் மூலம் அதை அறிந்து கொள்ளமுடியும்..

Tuesday, 2 October 2012

தாண்டவம்:



டைரக்டர் விஜயும் நடிகர் விக்ரமும் சேர்ந்து செய்த இரண்டாவது படம். எப்போதும் டைரக்டர் விஜயின் படங்களை எடுத்துப் பார்த்தோமானால் அந்த கதைக்களனில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அந்த கதைக்குரிய கரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்தாலும்… அது வெளிநாட்டுப் படங்களின் நகல் என்று விவாதிக்கப்பட்டாலும் கூட அவரது படங்களில் ஒரு சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக மதராஸ பட்டினத்தில் ஆர்யா உயிரோடு இருப்பாரா..? மாட்டாரா…? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா..? இல்லையா…? மேற் சொன்ன இரண்டு விசயங்களிலும் இரண்டு நிகழ்வுகளுமே நிகழ சாத்தியக்கூறுகள் உண்டு. அது போலவேதான் தெய்வதிருமகளும்.. சாராவும் விக்ரமும் சேருவார்களா இல்லையா… சேருவதற்கும் சேராமல் போவதற்குமான சாத்தியக்கூறுகள்  இரண்டுமே அதில் கலந்து இருக்கும். ஒரு லைவ்வான விளையாட்டின் முடிவைப் போலத்தான்…! வெற்றி தோல்வி இரண்டுமே சாத்தியமான அம்சங்கள். அந்த சுவாரஸ்யம்தான் பார்வையாளனை தொற்றிக் கொண்டு அவனுக்கு க்ளைமாக்ஸ் வரை எந்த அலுப்பும் ஏற்படாமல் இழுத்துச் செல்ல உதவும். அது இந்த தாண்டவத்தில் இல்லவே இல்லை.

உங்களுக்கு எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். அவர் எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. ராமமூர்த்தி என்ற பெயர் கொண்ட மிக அற்புதமான மனிதர். ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன் ஒரே மகனை ப்ரைன் டியூமர் நோய்க்கு பலி கொடுத்த சோகம் எப்போதும் அவர் முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். அவரது மகன் வயது குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்வார். கேட்காமலே எல்லாமே வாங்கிக் கொடுப்பார். நண்பர்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்பவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு நண்பர் சண்முகம்.. அவரும் எனக்கு பரிச்சயமே.. இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். குடும்ப நண்பர்கள் போல பழகி வந்தவர்கள்.

ஒரு நாள் அவர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளை நடந்து பேப்பரில் பிரசுரமாகி பெரிய பிரச்சனையாகிவிட்டது. பின்னர் ஒரு நாள் அவரே என்னிடம் பேசும் போது அந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணம் சண்முகம் தான்.. அலுவலகத்தில் கொள்ளையடித்து செல்லும் போது விபத்தில் அவன் ஒரு காலை இழந்துவிட்டான்… அவன் தான் திருடன் என்ற உண்மை தெரிந்து அவன் மனைவி அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிவிட்டாள். அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான் என்றார். அவன் புத்தி ஏன் தான் இப்படி போனது என்றே தெரியவில்லை என்று பரிகாசப்பட்டார்.
     
இதை அவர் என்னிடம் சொல்லி ஒரு வாரத்தில் அதே கால் இழந்த சண்முகம் பெயிலில் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்பு தான் உண்மை தெரிய வருகிறது.. அந்த கொள்ளை சம்பவத்தை செய்தவரே ராமமூர்த்திதான்.. செய்ததும் அல்லாமல் தான் மாட்டாமல் இருக்க தன் நண்பரை மாட்டிவிட்டு இருக்கிறார் என்று…

மன்னிக்கவும்… நான் பொய்யுரைத்துவிட்டேன்.. இது உண்மை சம்பவம் அல்ல.. இதுதான் தாண்டவத்தின் கதை. ஆனால் இதில் நீங்கள் இருவரையுமே (ராமமூர்த்தி, சண்முகம்) கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ முன்னமே தீர்மானித்திருக்க முடியாது. அதனால் உங்களுக்கு குறைந்த பட்ச சுவாரஸ்யமாவது இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் கதைமாந்தர்கள் மட்டுமே கதாநாயகர்கள் அல்ல.

நிதிநிறுவனத்திற்க்கு பதில் RAW (இந்திய உளவு அமைப்பு) சண்முகத்திற்கு பதில் சிவக்குமார்(விக்ரம்), ராமமூர்த்திக்கு பதில் சரத், கொள்ளைக்கு பதில் வெடிகுண்டு தயாரிக்கும் சாட், விபத்தில் கால் போவதற்கு பதில் கண், மனைவி தற்கொலைக்கு பதில் கொலை… இதுதான் தாண்டவத்தின் கதை. படத்தின் முதல் காட்சியிலேயே லண்டனில் 2011/1 ல் பிரிட்ஜ் மற்றும் சில பொது இடங்களில் குண்டு வெடிக்கிறது. அடுத்து ஒரு வருடம் கழித்து கண்பார்வை இல்லாத விக்ரம் ஒருவரைக் கொன்று மாடியில் இருந்து தூக்கி கீழே போடுகிறார். இதற்கு பின்னர் எல்லா பார்வையாளர்களும் விக்ரமிற்கு பின்னே செல்ல தொடங்கிவிடுவர்.. அவர் எதிராளியை கொல்ல ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு…
பார்வையாளனுக்கு எல்லா முடிச்சுகளும் அந்த இடத்திலேயே அவிழ்ந்து விடும். அதற்கு பின்பு அதில் என்ன தான் சுவாரஸ்யம் இருந்துவிட முடியும்.. ஒவ்வொரு படத்திற்கும் விக்ரம் கொடுக்கின்ற உழைப்பு பிரமிப்பானது.. ஆனால் அது இப்படி விழலுக்கு இறைத்த நீராவதுதான் வருத்தம்.

”கண் பார்வை இல்லாத ஒருத்தர் ஒலிஅலைகளை எழுப்பி அவை எதிரே இருக்கும் பொருளில் பட்டு திரும்பிவருவதைக் கொண்டு எங்கே எந்த பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்” என்கின்ற ஒரே ஒரு சிறப்பான அம்சம் கொண்ட கதாபாத்திரம் என்பதற்காகவே விக்ரம் இந்த கதையை தேர்வு செய்தார் என்றால் அவரை என்னவென்று சொல்வது… அவருடைய நடிப்பை அந்த கதாபாத்திரத்துக்கு 100% மேலேயே அவர் கொடுத்திருந்தாலும் இது போன்ற ஒரு சாதாரண கதைக்கு ஏன் இவர் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்று தான் தெரியவில்லை.

லண்டனில் குண்டு வெடித்ததனாலோ என்னவோ முதல் பாதியில் பாதி நேரம் ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர் ஆங்கிலத்தில் கதைக்க, மறுபக்கம் நாசர் கொலையாளியை, சந்தோசமாக ஆங்கிரி பேர்ட் விளையாடிக் கொண்டே தேடிக் கொண்டு இருக்கிறார். கண் தெரியாத விக்ரமோ கொலை செய்து கொண்டும் பியானோ கச்சேரி வாசித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் எமி ஜாக்சனோ அழகிபட்டம் வாங்கினாலும் கண் தெரியாத விக்ரமை காதலிப்பதாக பின்னாலயே திரிகிறார். கொஞ்சமேனும் ஆறுதலிப்பது சந்தானம் மட்டுமே.

அடுத்து வரும் அனுஷ்காவுடனான கல்யாணம், நட்பு, காதல் காட்சிகளே படத்தை ஓரளவேனும் உயிரோட்டமுள்ளதாக ஆக்குகின்றன. படுக்கையறையில் இருவருமே மாறி மாறி அடுத்தவர் தூங்குவதை ரசிப்பதும், விக்ரம் அனுஷ்காவிற்காக நடத்தும் பெயிண்டிங் கண்காட்சியும், தன் கணவனை சப்-இன்ஸ்பெக்டர் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் வேலைக்கு சிபாரிசுக்கு வரச்சொல்லும் காட்சிகளும்(லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் கூட..) கவித்துவமான காட்சிகள். பின்பு நடப்பதை எல்லாம் அதர பழசான காட்சிகள்.. ஒரு பத்து நிமிடம் நீங்கள் வெளியே சென்று வந்தாலும் கூட எதையுமே மிஸ் செய்ய மாட்டீர்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை ஆஹா.. பரவாயில்லையே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்.. மீண்டும் மீண்டும் அதையே பேசியே வெறுப்பேற்றுகிறார். ஜி.வியின் சொதப்பலான இசை மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நீரவ்ஷாவின் கேமரா வழக்கம் போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், கதையோடு ஏனோ ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற கதையை வைத்துக் கொண்டு பெரிய ஆர்ட்டிஸ்டிகளின் தயவில் பிழைத்துக் கொள்ளலாம் என்று, இயக்குநர்கள் நினைப்பார்களானால் அது தமிழ் சினிமாவிற்கான சாபகேடு.

தாண்டவம்- 100ரூபாய் கொடுத்து படம் பார்த்தால் நீங்கள் ஆடத்தான் வேண்டும்.