Friday, 11 October 2013

நய்யாண்டி:

களவாணி என்னும் கலகலப்பான திரைப்படத்தைக் கொடுத்து, பின்னர் வாகை சூட வா என்னும் சமூக சிந்தனையுள்ள படத்தைக் கொடுத்த இயக்குநர் சற்குணத்தை, இரண்டாம் படத்திற்கு வணிகரீதியாக கிடைக்காத வரவேற்பும், இன்றைய காலசூழலில் காமெடி திரைப்படங்களுக்கு கிடைக்கின்ற ஆகப்பெரிய வரவேற்பும் சேர்ந்து நய்யாண்டி செய்திருக்கும் போலும். பெரிதும் குழப்பிப் போன இயக்குநர், நல்லப் பெயர், நல்ல திரைப்படம் போன்றவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வணிகரீதியிலான வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நய்யாண்டியில் காமெடி களப்பணி ஆற்றுவோம் என்று களமிறங்கி இருக்கிறார். ஆனால் பாவம், இயக்குநருக்கு, காமெடி சுத்தமாய் கைகொடுக்கவில்லை..


ஒரு நல்ல திரைக்கதை என்பது, இரண்டே காட்சிகளில் பார்வையாளனை தனக்குள் இழுத்துக் கொள்வதற்கான திறப்பைக் கொண்டிருக்க வேண்டும். அந்த திறப்பின் வழியே இருள் சூழ்ந்த மாயவெளிக்குள் நுழைகின்ற அவன் கதை என்னும் சரடின் சிறு ஒளியின் துணையோடு, தான் பார்த்திராத, பயணிக்காத, தான் மறந்து போன அல்லது தனக்கு மறக்கடிக்கப்பட்ட ஒரு உலகிற்குள் பயணிக்கத் தொடங்குவான். பல இடங்களில் முட்டி மோதி, எதிர்பாராத இடங்களில் அதிசயித்து, ஆச்சர்யப்பட்டு, ஆனந்தப்பட்டு அதிர்ந்து போய், குற்ற உணர்வால் சுருங்கிப் போய், இப்படி ஏதேனும் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, தனக்குப் பரிச்சயமில்லாத இருள்வெளியில் அவனது கண்கள் அந்த இருளுக்குப் பழக்கப்படத் தொடங்கும்… அவன் கண்களுக்கு அந்த இருள் சூழ்ந்த கதையின் கண்ணிகள் புலப்படத் தொடங்கும் பட்சத்தில் அவனை ஒளிபாயும் புறவெளியில் தள்ளி திரைக்கதை அவனை வழியனுப்ப வேண்டும்… இப்போது அவனது மனம் கண்கூசும் ஒளியில் கூட இருள் சூழ்ந்த வாழ்க்கையை எண்ணத் தொடங்கி இருக்கும்… இது நல்ல திரைக்கதை எழுதுவதற்கான ஒரு பொதுவிதி…

ஆனால் நய்யாண்டி போன்ற திரைப்படங்களில் கதைக்கே பதினெட்டாம் நூற்றாண்டு பஞ்சம் பீடித்திருக்கும் துயரநிலையில் நாம் திரைக்கதை நுட்பங்களை அலசுவதென்பது அவர்களை நையாண்டி செய்வது போல் இருக்கும்.. இந்த பஞ்சகாலத்திலும் இவர்கள் எடுத்திருக்கும் கதை என்னவென்று பார்த்தால், பல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்ணை (நாயகி நஸ்ரியா), என்ன செய்கிறார் என்பதையே சொல்லிக்கொள்ளாத அல்லது இயக்குநர் சொல்லிக் கொள்ள விரும்பாத ஒரு கதாபாத்திரம் காதலிக்கிறது… அப்படியென்றால் அது கண்டிப்பாக நாயகனாகதானே இருக்க வேண்டும்.. நாயகன் தான் காதலித்துவிட்டாரே, அவர் என்ன வேலை செய்கிறார்…? என்று ஒரு பேச்சுக்கு கூட கேட்காமல் அவர்களை இரண்டு முறை முறைத்துவிட்டு மூன்றாம் முறை பார்க்கும் போது காதலிப்பதற்காகவே சபிக்கப்பட்டு இருக்கும் நாயகியும் வழக்கம் போல் காதலிக்கத் தொடங்குகிறார்… இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட இயக்குநர் வில்லனை அறிமுகப்படுத்துகிறார்.. வில்லனும் அதே பெண்ணுக்கு நூல் விட்டால் தானே சுவாரஸ்யம்.. அவர் பெண்ணின் தகப்பன் சம்மதத்துடன் கல்யாணமே பேசிவிட… அச்சச்சோ இன்னும் சுவாரஸ்யம் இல்லையே என்று உணர்ந்த இயக்குநர் வேறொரு முடிச்சையும் போடுகிறார்… நாயகனுக்கு 40 வயதாகியும் கல்யாணமாகாத இரண்டு அண்ணன்கள்… அவர்களுக்கு கல்யாணம் ஆனால்தான்… நாயகன் கல்யாணம் செய்யமுடியும் என்று ஒரு அற்புதமான சுவாரஸ்யத்தையும் சேர்த்து கதை பண்ணியிருக்கிறார்கள்…


இப்படிப்பட்ட ஒரு கதையில் எதுதான் பார்வையாளனை கவரும்… எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும், அவளை நாயகனின் மனைவியாக மட்டுமே பார்க்கும் அக்மார்க் நண்பர்களும், தான் டாக்டருக்கு படித்திருந்தாலும், என்ன செய்கிறான், என்ன படித்திருக்கிறான் என்று எதுவுமே தெரியாவிட்டாலும் அவனை உருகி உருகி காதலிக்கும் மறை கலன்ற நாயகிகளும், நாயகனிடம் அடி வாங்குவதற்கென்றே சிக்ஸ்-பேக் உடம்பை வளர்த்துக் கொண்டு வரும் வில்லன்களும், கல்யாணத்துக்குப் பின்னரும் பொறுப்பாக நடந்து கொள்வதென்பதை நாயகியை கருவுறச் செய்வதில் மட்டுமே காட்டும் நாயகனையும், இவ்வளவு நடந்தாலும், எதுவுமே நடக்காதது போல், இறுதிக் காட்சியில் கூட்டமாய் வந்து அரவணைக்கும் குடும்பத்தையும் காலம் காலமாக காட்டி நம் தமிழ் சினிமா நமக்கு என்னதான் சொல்ல முயற்சிக்கிறது….

நண்பர்களுக்கு இடையிலான காட்சிகள், காதலர்களுக்கு இடையேயான காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான காட்சிகள் என்று எதிலுமே சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சிகூட அமையாமல் போனது இவர்களின் கற்பனை வறட்சியை காட்டுகிறது… பின்புலங்களில் பழைய பாடல்களை சூழ்நிலைக்கு ஏற்ப பாடவிடுவதை, வாரத்துக்கு ஒரு முறை விகடனே "இந்தப் பாட்டை இவர்களுக்கு டெடிகேட் செய்கிறோம்னு போடும் போது, படம் எடுத்து இவர்களுமா நையாண்டி செய்ய வேண்டும்… திரையில் அழகிய நஸ்ரியாவே இருக்கும் போதும் அவருக்கு முதுகைக் காட்டி திரும்பிக்கொள்ளும் அதிசயிக்கத்தக்க சூழலை உருவாக்கியது மட்டுமே இப்படத்தின் வெற்றி..



இப்படி குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்க எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய பாராட்ட எந்த தரப்பிலும் எந்த விசயமும் இல்லையே.. வேண்டுமென்றால் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத காரணத்துக்காகவும், இந்த திரைப்படம் ஒரு மலையாள திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது என்ற உண்மையை டைட்டில் கார்ட்டில் பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டதற்காகவும், இந்த இரு காரணங்களுக்காக மட்டும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. அது தவிர்த்து தனுஷ், நஸ்ரியா, சற்குணம், ஜிப்ரான், நரேன், சிங்கம் புலி என அனைவருக்குமே அவர்களது கேரியரில் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கும் இந்தப் படம்… சற்குணம் அவர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகி, காமெடிப் படம் என இது போன்ற விபரீத முயற்சிகள் எடுக்காமல், வாகை சூட வா போன்ற ஓடாத நல்ல திரைப்படங்களை எடுத்தால், நல்ல இயக்குநர் என்ற பேராவது மிஞ்சும் என்பது என் எண்ணம்.

1 comment: