தமிழ்
சினிமாவின் வரலாறு நூறாண்டுகளை கடந்திருந்தாலும், இதுவரை தமிழ் சினிமா நூற்றுக்கும்
மேலான கேங்க்ஸ்டர் வகையறா படங்களை எடுத்திருந்தாலும், அதில் எந்த ஒரு படத்தின் சாயலும்
துளிகூட இல்லாமல், அத்தனை கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் இருந்தும், எல்லாவிதங்களிலும்
மேலான ஒரு அற்புதமான த்ரில்லர் - கேங்க்ஸ்டர் வகை திரைப்படத்தை நம் தமிழ் சினிமாவும்
நம் தமிழ் இனமும் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளியான அந்த காலை பொழுதின் விடியல்
வரை பார்த்ததேயில்லை என்று உறுதியாகச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை….
இரண்டரை
மணி நேர கேங்க்ஸ்டர் படங்களில் என்ன இருக்கும்… பெரும்பாலும் இரண்டு கேங்குகளுக்கு
இடையில் பிரச்சனை இருக்கும், அதில் நாயகன் இருக்கின்ற கேங்க் இறுதியில் ஜெயிக்கும்
அல்லது நல்லவனான கதாநாயகன் தன் மக்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு பொங்கி, கெட்டவனாக
அவதாரம் எடுத்து மக்களைக் காப்பான்.. அதுவும் இல்லை என்றால் தன் கேங்குக்குள்ளேயே நடக்கும்
அநீதிகளை தட்டிக் கேட்டு தன் தலைவனையே எதிர்த்து தலையெடுக்கும் நாயகன்… பின்பு தலைவனின்
தலையையும் எடுத்து வெற்றிவாகை சூடுவான்… இதில் ஏதோ ஒன்று தானே நாம் பார்த்த எல்லா கேங்க்ஸ்டர்
திரைப்படங்களின் சலிப்பூட்டும் வெறுப்பேற்றும் அதர பழசான கதை… இந்த மொத்தக்கதையையும்
இரண்டரை நிமிடங்களில் உணர்ச்சி பிழம்பூட்டும் வெறும் வசனங்களாலேயே கடந்து சென்று மீதி
இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்களில் வேறு ஏதேனும் கதை கூற முடியுமா என்று சவாலாக கேள்வி
கேட்டால் பெரும்பாலான இயக்குநர்கள் நம்மை முட்டாள்கள் என்று பழித்துவிட்டு, ஓட்டம்
எடுப்பார்கள்… அப்படி ஓட்டம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் அந்த சவாலை தானாக
முன்வந்து எடுத்து அதில் ஒரு அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்
மிஷ்கின்… உண்மையான கலை தாகம் கொண்ட கலைஞர்களுக்கு மட்டுமே இந்த வெற்றி சாத்தியப்படும்..
கதையென்னவென்று
சொல்ல…? மேற்சொன்ன வெவ்வேறு விதமான கதைசரடுகளில் ஒன்றுதான் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியின்
கதையும் கூட.. ஆனாலும் ஏற்கனவே சொன்னது போல அது இரண்டரை நிமிடங்களில் பாரதியாக வரும்
சிறுமி சைத்தன்யாவுக்கு சொல்லும் கதையாக நம்மை கடந்து செல்லும்… அதை தவிர்த்த மீதி
நிமிடங்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால்… நிறைய அதிர்ச்சிகள், நிறைய ஆச்சர்யங்கள்,
நிறைய கேள்விகள், நிறைய அழகியல், சீர்மையான சிரிப்பழைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்…
அதனோடு மிஷ்கின், ஸ்ரீ, இசை விமர்சகர் ஷாஜி, சிறுமி சைத்தன்யா, தோழி க்ளாடி இவர்களின்
உறுத்தல் இல்லாத நடிப்பும், இசையானி இளையராஜாவின் அற்புதமான பிண்ணனி இசையும், ஒளிப்பதிவாளர்
பாலாஜியின் அற்புதமான ஷாட்களும் சேர்ந்து ஒரு வித்தியாசமான காண்பனுபவத்தைக் கொடுக்கின்றன..
மொத்தத்தில் உங்களுக்கு ஒரு நிமிடம் கூட போரடிக்காது என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டுச்
சொல்ல முடியும்…
காட்சி
மொழி என்று சொல்லக்கூடிய திரைமொழியை வெகு நேர்த்தியாக கையாளக்கூடிய வெகுசில தமிழ் இயக்குநர்களில்
மிகமிக முக்கியமானவர் மிஷ்கின். அவரது முந்தையப் படங்களில் (முகமூடி தவிர்த்து) அதிலும்
குறிப்பாக யுத்தம் செய், நந்தலாலா போன்றவற்றில் சில பரீட்சார்த்தமான திரைமொழி தொடர்பான
முயற்சிகள் இருக்கும். அது இந்த திரைப்படத்தில் அதன் உச்சத்தை தொட்டிருக்கிறது எனச்
சொல்லலாம்.. அதற்கு உதாரணமாக ஸ்ரீயை மிஷ்கின் கோவில் வாசலில் படுத்திருக்கும் பிச்சைக்காரிக்கு
பிச்சை போட அனுப்பும் காட்சி.. அந்த காட்சியில் பலரின் உடல்மொழிக்கு ஊடாக ஒரே ஒரு வார்த்தைமொழி
மட்டுமே வரும்.. அது அந்த கோயில் வாசலில் படுத்திருக்கும் அம்மா சொல்லும் ”எட்வர்டு”
என்னும் வார்த்தை… அந்த வார்த்தை சொல்லப்படும் தருணத்திலேயே பார்வையாளர்கள் அந்த சூழ்நிலையை
புரிந்து கொள்வார்கள்… அந்தக் காட்சியை தொடர்ந்து ஓரிரு வரிகளில் வசனங்கள் வரும் அவ்வளவே…
அதுபோல அந்த போலீஸ் ஜீப்பை மிஷ்கின் கைப்பற்றும் காட்சியை மற்றொரு உதாரணமாக கூறலாம்..
இந்த
திரைப்படம் மிகமுக்கியமாக கேங்க்ஸ்டர் என்னும் வலைபின்னலில் இயங்குபவர்களின் முன்னால்
பல கேள்விகளை வைக்கிறது…? பொது மக்களான நம் முன்னாலும் சில கேள்விகளை வைக்கிறது…? கேங்க்ஸ்டர்கள்
முன்னால் அது எழுப்புகின்ற கேள்வி இதுவாகத்தான் இருக்கும்… நீ எதை வெற்றி…? எதை வீரம்..?
எதை திறமை…? எதை சந்தோசம்…? எதை கடினம்..? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறாய்….? ஒருவனின்
உயிரை எடுப்பதையா..? என்னும் கேள்வியைத்தான்… அதற்கான பதிலும் திரைப்படத்தில் உண்டு.
இல்லை நண்பா… நான்(மிஷ்கின்) 14 கொலைகளை செய்தவன்.. அது எனக்கு கடினமாகப்படவில்லை…
ஆனால் மூன்று உயிர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது எவ்வளவு கடினம்… அது எவ்வளவு வீரமான
செயல்… அது எவ்வளவு மகிழ்ச்சி தரும் செயல்… எவ்வளவு திறமையான செயல் என்பதை உணர்ந்துகொண்டேன்
என்பதை படம் சொல்லாமல் சொல்கிறது..
நம்
முன் அதாவது நம் சமூகத்தின் முன் அது வைக்கும் கேள்வி மீண்டும் நமது சட்டம், குற்றம்,
தண்டனை போன்ற இத்யாதிகளை மறு ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான வுல்ஃப் (மிஷ்கின்) ஒரு கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரன்..
அவன் இதுவரை செய்த கொலை 14. அந்த 14 கொலைகளை செய்ய அனுமதித்த (அல்லது அதுவரை காத்திருந்த)
நம் சமூகம் மூன்று உயிர்களை காப்பாற்ற அவனை அநுமதிப்பதில்லை…(அல்லது அதுவரை காத்திருப்பதில்லை..)
மேலும் ஓநாயாக சித்தரிக்கப்படும் அந்த கொலைகாரனை பிடிக்க நம் சமூகம் தெரிந்தே ஒரு ஆட்டுக்குட்டியை(ஸ்ரீ)
பலி கொடுக்கவும் துணிகிறது.. ஆனால் அந்த ஓநாயோ தான் நரி என்று நினைத்து தெரியாமல் கொன்ற
ஒரு ஆட்டுக்குட்டியின் இழப்புக்கு ஈடாக மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது…
இங்கு யார் குற்றவாளி…?
வுல்ஃப்
செய்த 14 கொலைகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது அந்த ஆட்டுக்குட்டியின் கொலையை
தான். ஏனென்றால் அது கதையின் ஆரம்பப்புள்ளி. பிற கொலைகள் நமக்கு சொல்லப்படுவதுமில்லை..
காட்டப்படுவதில்லை.. எனவே அந்த ஒற்றை கொலை சார்ந்தே நானும் பேச முனைகிறேன்.. தன் மகனைக்
கொன்ற கொலைகாரனை மன்னித்து அவனைத் தன் இரண்டாவது மகனாகவே ஏற்றுக் கொண்டு, தன் அத்தியாவசிய
செய்கையான சிறுநீர் கழிப்பதைக் கூட அந்த இரண்டாவது மகனின் தயவில் செய்து முடிக்கும்
அளவுக்கு அவனை நம்புகின்ற ஒரு தாயும் அவளது குடும்பமும், அவனது நிழலில் வாழ முனையும்
போது அந்த இரண்டாது மகனையும் இழந்தால் அது யாருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை… நாம் அந்த
குற்றவாளிக்கு தண்டனை என்ற பெயரில் கொடுக்க விளைவது என்ன…? இரட்டை ஆயுள் தண்டனை. அதை
முடித்து நீ வெளியில் வந்தால் திருந்தி நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்னும் பாசாங்கு
பிரச்சாரம் வேறு செய்கிறோம்… இங்கு குற்றத்தால் பாதிக்கப்பட்ட அந்த குடும்பமே அவனை
மன்னித்து ஏற்றுக் கொள்ளும் போது அவனை தண்டிக்க சட்டம் என்ற பெயரில் கதாயுதமும் கையுமாக
அலையும் நாம் யார்….? இந்த விசயத்தை இங்கு வுல்ஃப் என்னும் கதாபாத்திரத்தை மட்டுமே
கொண்டு பார்க்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்…
நண்பர்களே
பொதுவாக இது போன்ற திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளுமே ஏதேனும் ஒரு கருத்தை தனக்குள்
பொதிந்து வைத்திருக்கிறது.. துரதிஷ்டவசமாக நம் எல்லோருக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை
எப்படி பார்ப்பது என்பது கற்றுக் கொடுக்கப்படுவதே இல்லை… அதைக் கற்றுக் கொடுக்க வேண்டியதன்
அவசியம் என்னவென்று நீங்கள் கேட்டால்… அது வாழ்க்கையில் நாம் காணாத பல்வேறு தளங்களை
பல்வேறு கோணங்களில் நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதே என் பதிலாக
இருக்கும்.. மசாலாப் படங்களை தவிர்த்துவிட்டு இதுபோன்ற படங்களின் ஒரு காட்சியை எடுத்துக்
கொண்டு அது ஏன் அப்படி சித்தரிக்கப்பட்டது…?, அந்தக் காட்சி ஏன் அந்த சூழலில் படமாக்கப்பட்டது..?
அது என்ன சொல்ல வருகிறது..? என்று நாம் கேள்வி கேட்கும் பொழுது…. வாழ்க்கை நமக்குத்
தெரியாமல் தன் மீது போட்டுக்கொண்ட ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்துக் கொண்டே அம்மண அழகுடன்
நமக்கு தரிசனம் தரும்… இந்த இடிபாடுகளும் நெருக்கடியும் நிறைந்த வாழ்க்கையில் வாழ்க்கையை
கற்றுக்கொள்வதை விட எதைக் கற்றுக் கொள்வது அவசியம் அத்தியாவசியம் என்று எண்ணுகிறோம்
தோழர்களே…!?
உதாரணமாக
இந்தப் படத்தில் அவர்கள் குழுமி இருக்கும் இடம் ஏன் ஒரு கல்லறையாக இருக்க வேண்டும்..?
ஸ்ரீ தன் முதுகில் ஏன் மிஷ்கினை சுமந்து செல்ல வேண்டும்…? இறுதியில் அந்த சைத்தன்யா
குழந்தையை ஏன் தன் நெஞ்சில் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்…? அவர்கள் ஏன் கண் பார்வை
அற்றவர்களாக இருக்க வேண்டும்..? ஒரு கொலையாளி தன் கையில் ஏன் பைபிளை வைத்திருக்க வேண்டும்..?
ஒவ்வொரு போலீசாரும் இறக்கும் போது ஏன் ஒவ்வொரு கடவுளின் பெயரை கூறிக் கொண்டு சாக வேண்டும்..?
மிஷ்கின் ஏன் அந்த தாயின் கால்களை முடமாக்கிய கதாபாத்திரமாக சித்தரித்தார்…? அவரை சில
காட்சிகளில் ஏன் அவர் தன் முதுகில் தூக்கி சுமக்கிறார்..? இப்படி எல்லா காட்சிகளையும்
பெரும்பாலும் ஒரு உண்மையான கலைஞன் எந்தவித காரணமும் இன்றி வைப்பதில்லை… அதற்குள் ஒரு
செய்தியை மறைத்து வைக்கிறான்.. அதை மறைத்து வைப்பது நமக்குப் புரியக்கூடாது என்ற எண்ணம்
அல்ல… அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான் அதை அவன் அடிகோடிட்டு
காட்டுகிறான்… அதை ஒரு விடுகதையாக நம் முன் வைத்துவிட்டு செல்கிறான்… வாழ்க்கையும்
ஒரு விடுகதைதானே…? அதன் மர்மம் நிறைந்த முடிச்சுகளை நாம் அவிழ்க்கத்தானே வேண்டும்…
இந்த நூற்றாண்டில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக நிற்கப் போவதில் இலக்கியங்களும்,
திரைப்படங்களும் மிக முக்கியமானவை… ஆனால் அவை எந்த அளவுக்கு யதார்த்தமானதாக உண்மையானதாக
இருக்க வேண்டும் என்பதையும் அதன் தரத்தையும் நாம்தான் தீர்மானிக்கிறோம்.. என்பதை நினைவில்
வைத்துக் கொள்வோம்…
இது
குறைகளே இல்லாத ஒரு அற்புதமான படைப்பு என்று நான் சொல்லவில்லை. சில குறைகள் இருக்கின்றன.
படத்தில் முதல்பாதியில் எந்த கதாபாத்திரத்தின் மீதும் பிடிப்பு இல்லாமல் செல்வதும்,
ஸ்ரீயை போன் செய்து வரவழைக்கும் தேவை இல்லாமல் இருப்பதும் அதில் மிக முக்கியமானவை..
ஆனால் அதை பொருட்படுத்த தேவையில்லை என்கிறேன்… ஏனென்றால் அதைப் பொருட்படுத்தி பூதாகரமாக
மாற்றினால் இது போன்ற நல்ல முயற்சிகள் வராமலே போய்விடும்… மேலும் இது சமூகத்தை சிதைக்கும்
எந்த ஒரு தீமையான கருத்துக்களையும் விதைக்கவில்லை… அப்படி விதைக்கின்ற படங்களையே நாம்
வெற்றிவிழா கொண்டாட வைக்கும் போது, இது போன்ற அத்திபூத்தாற் போல் வரும் சில முயற்சிகளுக்கு
முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்… அப்படியின்றி இதன் வளர்ச்சியை
நாம் தடுத்தால் தமிழ்சினிமா காலத்துக்கும் தமிழர்கள் மட்டுமே பார்க்கும் ஒரு சினிமாவாக
இருக்கும் என்பது திண்ணம்…
No comments:
Post a Comment