எனக்கு ராஜுமுருகனைப் பிடிக்கும்.. ஏனென்றால்
எனக்கு வட்டியும் முதலும் ரொம்பப் பிடிக்கும்… இயக்குநராகும் கனவில் இயங்கிக் கொண்டிருக்கும்
எனக்கு “வட்டியும் முதலும் தந்த அதிர்ச்சி அளப்பரியது..” அதற்கு காரணங்கள் உண்டு. எனக்குள்
அத்திப்பூத்தாற் போல் எப்போதாவது பளிச்சிடும் முரணான கதைச்சரடுகளையும், கதைமாந்தர்களையும்
நான் கண்ணின் மணியைப் போல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் போது, அதே கனவுகளுடன்
இயங்கி வரும் இந்த ராஜுமுருகன் அண்ணன், அவருக்குத் தெரிந்த அத்தனைக்(பெரும்பாலான) கதைகளையும்
கதைமாந்தர்களையும் இப்படி கட்டவிழ்த்து பொதுவெளியில் அலையவிடுகிறாரே… இவர் தனக்கென்று
எந்தக் கதையையும் பொத்திவைக்க மாட்டாரா…? என்றும் இவருக்கு மட்டும் எப்படி வாழ்க்கையில்
இத்தனை நபர்களையும், இத்தனை சம்பவங்களையும் கடந்து வரும் வரம் கிடைத்தது… அதற்காக இவர்
இருந்த தவம் என்ன..? என்றெல்லாம் பல ஐயங்கள் எனக்குள் உழன்று கொண்டே இருந்தது… அதனாலயே
மீண்டும் ஒரு முறை வட்டியும் முதலும் முழு புத்தகத்தையும் படித்துவிட்டுத்தான் படத்துக்குச்
செல்ல வேண்டும்… படம் பார்க்கும் போதே புத்தகத்தில் உள்ள சம்பவங்களோடு அதனை ஓப்பீடும்
செய்ய வேண்டும்… என்ற தீராத மன உறுதியுடன் இருந்தேன்… ஆனால் தொடர்ந்துபட்ட வேலைகளால்
அதன் முதல் பத்து அத்தியாயங்கள், ஏறத்தாழ 120 பக்கங்களை மட்டுமே கடக்கமுடிந்தது.. ஏனென்றால்
அவற்றை அவ்வளவு எளிதாக புரட்டிக் கொண்டே சென்றுவிட முடியாது…. ஒவ்வொரு பக்கமும் அவ்வளவு
கணம்… வெளிவந்த விமரிசனங்களும் திரைப்படத்தை விரைவாகப் பார்க்கவேண்டும் என்று உந்தித்
தள்ள… நேற்றே திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன்… பார்த்ததில் இருந்து இன்று இலக்கியமுகாம்
கூட்டத்தின் இடைவேளை பகுதிகளின் போதுகூட அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்….
அப்போது தான் ஒன்று புரிந்தது… அது..
நம் சமூகம் அடிமைத்தளையிலேயே அமிழ்ந்திருக்க
விரும்பும் ஒரு சமூகம்.. நம் சமூகத்தில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக
இருந்து கொண்டே இருக்கிறோம்… அது ஒரு பொருளுக்கோ..? மனிதருக்கோ…? படைப்புக்கோ…? ஏதோ
ஒன்றுக்கு… அது மனிதர் என்கின்றபட்சத்தில் அந்த மனிதர் ஒரு மதத் தலைவராகவோ, ஒரு அரசியல்
தலைவராகவோ, ஒரு விளையாட்டு வீரனாகவோ, ஒரு கதாநாயகனாகவோ, ஒரு இயக்குநராகவோ, ஒரு இசையமைப்பாளராகவோ.
அல்லது ஒரு எழுத்தாளனாகவோ இப்படி யாராகனாலும் இருக்கலாம்…. அவர் என்ன செய்தாலும் அதைக்
கண்மூடித் தனமாக ஆதரிப்பது…. சரியென்று வாதிடுவது… முன்னர் நாம் பேசிய வார்த்தைக்கு
எப்படி உண்மையானவனாக இருந்தோமோ…? அப்படி இப்போதும் நாம் பேசும் வார்த்தைக்கு உண்மையானவனாக
இல்லாமல், முன்னர் நாம் பேசிய அதே வார்த்தைக்கே அடிமையாக மட்டுமே இருப்பது…. அப்படிப்பட்ட
சிலரை சமீபத்தில் ராஜூமுருகன் “வட்டியும் முதலும்” மூலம் சம்பாதித்திருக்கிறார் என்றே
தோன்றுகிறது…
நான் முதல்பாராவில் வட்டியும் முதலும் பற்றிப்
பேசியதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத உண்மை… மூன்றாவது பாராவில் ”குக்கூ” பற்றிப்
பேசிக் கொண்டிருப்பதும் அதே மாதிரியான உண்மைதான்… ஒரு திரைப்படத்தை நாம் எதற்காகப்
பாராட்ட வேண்டும்…? ஓர் அற்புதமான கதை சொல்லும் முறைக்காக பாராட்டலாம், இந்த சமூகம்
இதுவரை யோசித்திராத மாற்றுக் கோணத்தை திறந்துவைத்தால் பாராட்டலாம்… இந்த சமூகம் பேசுவதற்கே
அச்சப்படும் கூச்சப்படும் விசயங்களால், ஏற்படும் பிரச்சனைகளை ஒரு திரைப்படம் முகத்தில்
அறைவதைப் போல் பேசினால் பாராட்டலாம்… இதுவரை இந்த சமூக மக்கள் யோசித்துக்கூட பார்க்காத
ஒரு பிரிவு மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக நம் முன் விரித்துக் காட்டி, அவர்களின் சிந்தனையை
திசை திருப்பினால் பாராட்டலாம்…. அல்லது இதுபோன்ற தரமான இன்னபிற சில விடுபட்ட காரணங்களுக்காகவும்
பாராட்டலாம்… ஆனால் இங்கு என்னுடைய கேள்வி, மேற்சொன்னக் காரணங்களில் எந்தக் காரணத்தை
முன்வைத்து நாம் குக்கூவை பாராட்ட முனைகிறோம் என்பதே..?
நம் தமிழ்சினிமா இதுவரை காட்டியே இராத கண்பார்வையற்ற
மக்களின் வாழ்வியலை காட்டுவதால், என்று காரணம் சொன்னால், காட்டப்பட்டது மக்களின் வாழ்வியலா..?
காதலர்களின் வாழ்வியலா..? என்று கேட்பேன்.. நீங்கள் புத்திசாலித்தனமாக இரண்டு கண் தெரியாத
காதலர்களின் வாழ்வியல் என்று சொன்னால், அந்த வாக்கியத்தில் அமைந்திருக்கும் வாழ்வியல்
என்ற வார்த்தைக்கு நீங்களாவது தயவுசெய்து எனக்குப் புரியும் படி அர்த்தம் சொல்லுங்கள்
என்று கேட்பேன்…. நண்பா… கண் தெரியாதவர்களுக்கு கனவு என்பது வெறும் சத்தம், வர்ணம்
என்பது இசைக் குறிப்பைப் போன்றது, அவர்கள் மூக்கால் வாசனையை நுகர்வார்கள், தொடுவதன்
மூலம் ஒருவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க முனைவார்கள்.. இப்படி கண் தெரியாத மக்களின்
வாழ்வியலை அவர் சொல்லத்தானே செய்கிறார் என்று நீங்கள் சொன்னால், உங்களிடம் ஒன்று சொல்ல
விரும்புகிறேன்…
தயவுசெய்து சுஜாதா எழுதிய “பார்வை” என்ற
சிறுகதையை படித்துப் பாருங்கள்… மேலே வாழ்வியல் தடமாக நாம் சொன்ன நான்கு தடங்களையும்
சொல்லி, அதுதவிர்த்து இன்னும் இரண்டு சொல்லப்படாத தடங்களையும் வெறும் பத்தே பக்கங்களில்
தாண்டிப் போயிருப்பார்….. இரண்டரை மணி நேர சினிமாவில் நமக்கு காட்டப்பட்ட வேறுவாழ்வியல்
தடங்கள் தான் என்ன..? இரண்டு கண் தெரியாத மாந்தர்கள்… காதலிக்கிறார்கள்… அவர்களுக்கு
கல்யாணம் செய்வதில் பிரச்சனை…? என் நண்பன் ஒருவன் சொன்னான்… “இங்க கண் இருக்குறவனுக்கே
கல்யாணங்கிறது… பெரும் பிரச்சனையாத்தான இருக்கு….” மறுக்க முடியாத உண்மை… அந்த இரண்டு
கண் தெரியாத மாந்தர்களை எடுத்துவிட்டு, இரண்டு கண் தெரிந்த மாந்தர்களை படத்தில் போட்டால்,
அப்பொழுதும் இத்திரைப்படத்தை ஆகா ஓஹோ.. என்று பாராட்டுவீர்களா…? இல்லை என்று நீங்கள்
சொல்வீர்கள் என்றால், அந்த கண் தெரியாத இரண்டு மாந்தர்களை நாயகன் நாயகியாக போட்டதால்
மட்டுமே நீங்கள் திரைப்படத்தை பாராட்டுகிறீர்கள் என்று பொருள்….
வட்டியும் முதலும் புத்தகத்தில் பசி தொடர்பான
ஒரு அத்தியாயத்தில் முடியும் போது ஒரு வரி வரும்….. “அவனது பசியைப் போக்க அவனுக்குத்
தேவையானது ஒரு கனி தான்…. ஆனால் அந்த ஒரு கனிக்காக… அவன் தினம் ஒரு வனத்தை கடக்கிறான்….”
எவ்வளவு ஆழமான பசியைப் பற்றிய தரிசனம்.. இதைப் படித்ததில் இருந்து பசி வரும் போதெல்லாம்
”எனக்கானது ஒரு கனி மட்டுமே..” என்னும் எண்ணம் எனக்குள் மேலெழுவதை என்னால் தவிர்க்கவே
முடியவில்லை… இதுதானே அந்தப் படைப்புக்கான வெற்றி…. இன்னொரு சம்பவம் “ஹோட்டலில் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினர் சொல்வார்கள், “டாக் பார்சல்” மீதி உணவை அவர்கள்
வீட்டு நாய்க்கு பார்சல் செய்ய வேண்டுமாம்…. உடனே நம் அண்ணன் ராஜுமுருகன் சொல்லுவார்…
“எனக்கு ரெண்டு லயன் பார்சல்…” வெறித்தபடி பார்த்த சர்வரிடம் சொல்லுவார்…. ”என் ரூம்ல
ரண்டு சிங்கம் பசியாருக்கு… “ என்று பசியால் தன் அறையில் வாடிக் கொண்டிருக்கும் தன்
நண்பர்களைப் பற்றி சொல்லுவார்… எவ்வளவு அற்புதமான பகடி…
இப்படிப்பட்ட ஒரு நல்ல கலைஞனை, அவனது சராசரியான
ஒரு படைப்புக்கு நீங்கள் அவனை ஆகா ஓஹோ என்று போற்றி, புகழ்ந்து, மொழுகி அப்படியே அமிழ்த்தி
காணாமல் போகடிக்கப் பார்க்கிறீர்கள்… இதுதானா..? உங்கள் சித்தம்.. இருக்கட்டும்.. இப்படி
வாழ்க்கையின் யதார்த்தத்தின் வலியையும் ருசியையும் திகட்ட திகட்ட குடிக்கக் கொடுத்த
எழுத்தாளர் இராஜுமுருகனிடம் இருந்து, போலித்தனமான புனைவுலகத்தை படைத்திருக்கும் இயக்குநர்
இராஜுமுருகன் ரொம்பவே தூரமாக விலகிப்போய் தொடர்பறுந்தவர் போல் தெரிகிறார்… அதிலும்
அந்த ரணகளமான க்ளைமாக்ஸ் எல்லாம் நாடகத்தன்மையின் உச்சம் என்பேன்…
எனக்குப் படத்தில் பிடித்திருந்த காட்சி
என்றால் அது அந்த பேஸ்புக் லைக்ஸ் வாங்குவதற்காக சேவை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும்
அந்த இளம் தம்பதியும், தியேட்டரில் படம் பார்க்கச் சென்று ரகளை செய்யும் இளங்கோ தமிழ்
இருவரும், அதுபோல ஒரு ஜோடி பொம்மையை கொடுத்து மாவில் உருவம் செய்ய சொல்லும் போது அவர்
மாதா இயேசுவை செய்து கொடுக்கும் இடத்தைச் சொல்லலாம்... அதுபோல நாடக கொட்டகையில் விஜய்,
அஜித் மற்றும் எம்.ஜி.ஆரின் கதாபாத்திர உருவாக்கத்தை கொஞ்சம் ரசிக்க முடிந்தது… அதுபோல
சில கதாபாத்திரங்கள் காட்சி அலங்காரத்தோடு அழகாகவே தெரிந்தாலும், அவர்களுக்கும் நடக்கும்
கதைக்கும் தொடர்பே இல்லை… என்பதால் இடைசெருகலாகவே தெரிகின்றனர்.. அதுபோல நாயகன் நாயகியாக
நடித்திருக்கும் தினேஷ், மாளவிகா நாயர் இருவருமே கடினமான உழைப்பை நல்கி இருக்கிறார்கள்
என்று சொல்லுவேன்… பாராட்டப்பட வேண்டிய நடிப்பு.. ஆனால் மிகச்சிறந்ததாக தெரியவில்லை..
அதுதவிர்த்து இசை ஒரு குறிப்பிடத் தகுந்த பலம்… கேமரா, எடிட்டிங், மேக்கிங் என எல்லாமே
கொஞ்சம் இரண்டாம் தரம் தான்….
சரி…. இது இந்த அளவுக்கு கடுமையாக எதிர்வினை
ஆற்ற வேண்டிய படமா..? என்றால் கண்டிப்பாக இல்லை…. இந்த எதிர்வினை படத்தை எதிர்த்து
அல்ல… முன்னர் சில புரிந்த விமர்சனங்களை எதிர்த்தே இந்த எதிர்வினை… அது தவிர்த்து படம்
ஒரு சாதாரண காதல் படம்… அதுபோல நாயகன் நாயகி இருவருமே கண் பார்வையற்றவர்கள் என்ற அந்த
ஆரம்பகட்ட சிந்தனையும் ஆரோக்கியமான சிந்தனைதான்…. அதுபோல அந்த நான்கம்ச வாழ்வியல் தடங்களை
எல்லா மக்களுக்கும் சென்று சேருவது போல் செய்து காட்டியதும் சாதனைதான்… குத்தாட்டங்கள்,
இரட்டை அர்த்த வசனங்கள், இவை எதுவும் இல்லாத, குறைவான சரக்கடிக்கும் காட்சிகளைக் கொண்டது…
இது போன்ற சில நல்ல தகுதிகளையும் கொண்ட திரைப்படம் தான்…
ஆனால் கண்டிப்பாக இது இயக்குநர் இராஜுமுருகனின்
மாஸ்டர் பீஸ் இல்லவே இல்லை… அவருக்கு இது அற்புதமான ஆரம்பமும் இல்லை… ஆனால் அவர்மீது
இருக்கின்ற நம்பிக்கையும் குறையவில்லை… ஏனென்றால் இது முதல்படம்… ஏகப்பட்ட விட்டுக்கொடுத்தல்கள்
இருந்திருக்கலாம்.. சில விசயங்களில் தவறு நேர்ந்திருக்கலாம்.. முதலாவது முயற்சி என்பதால்
சில செயல்கள் கைகூடாமலும் போய் இருக்கலாம்…. ஆனாலும் இவரது அசாத்தியமான தேடல் மீது
எனக்கு நம்பிக்கை உண்டு…. இவரது இரண்டாம் படம் என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்
அதி அற்புதமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்…
No comments:
Post a Comment