Tuesday, 4 March 2014

தெகிடி:

படத்தின் தலைப்பை போலவே கதையும், அவர்கள் ஏற்படுத்த விரும்பும் விழிப்புணர்வும் வித்தியாசமானது மட்டுமல்ல.. புதிதும் கூட.. தமிழில் த்ரில்லர் வகை திரைப்படங்கள் வெகு அரிதாகவே தலைகாட்டும்.. அந்த வரிசையின் சமீபத்திய வரவு தான் இந்த தெகிடி.. இத்திரைப்படத்தின் இயக்குநர் P.ரமேஷ். இவரும் சில குறும்படங்களை இயக்கியவர் தான்.. ஆனால் அவரது குறும்படங்கள் எதையும் இதுவரை பார்த்ததில்லை.. இத்திரைப்படத்தை பார்த்தவுடன் அவரது குறும்படங்களையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை..


ஆகா… ஓகோ என்று கொண்டாடும் அளவுக்கு மிகமிக அற்புதமான படம் என்று சொல்லமாட்டேன்.. அப்படி சொல்லாமல் போவதற்கு காரணமாக சில குறைகளும் படத்திலிருக்கிறது.. ஆனாலும் கண்டிப்பாக எல்லோரும் பார்த்து, பாராட்டி, வரவேற்க வேண்டிய ஒரு ஆரோக்கியமான முயற்சி இந்த தெகிடி.. முதலில் நிறைகளையும் பின்னர் குறைகளையும் வரிசைகட்டிப் பார்க்கலாம்..

படத்தின் கதை இதுதான்.. படத்தில் நாயகனான வெற்றி (அசோக் செல்வன்) குற்றவியல் துறை எனப்படும் Criminalogyல் எம்.ஏ பட்டம் பெற்றவர்.. படிக்கும் காலத்திலேயே அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கண் இமைக்கும் பொழுதில் எடைபோடும் திறமைக்காக விரிவுரையாளரிடம் பாராட்டும் பெற்றவர்.. அதே விரிவுரையாளரின் வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் ஒரு துப்பறியும் நிறுவனத்தில் பணியில் சேருகிறார் வெற்றி…. அங்கு சில தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை ரகசியங்களை கண்டறிவது அவருக்கு களப்பணியாக கொடுக்கப்பட அதை வெற்றிகரமாக அவர் செய்தும் முடிக்கிறார்.. அப்படி ஒரு பணி நிமித்தமாக சென்ற இடத்தில் நாயகியின் சந்தேகத்துக்கும் ஆளாகிறார்… அதே நேரத்தில் அடுத்ததாக வெற்றிக்கு நாயகியையே பிந்தொடரச் சொல்லி உத்தரவு… அவரை பிந்தொடரும் சூழலில் நாயகன் வழக்கம் போல் நாயகியின் மீது காதலில் விழ…. அதே நேரத்தில் இன்னொரு உண்மை தெரியவருகிறது.. அது வெற்றி துப்பறிந்து கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர் துப்பு துலக்கிய அத்தனை நபர்களும் ஒரு ஆபத்து வளையத்தில் இருக்கிறார்கள் என்பதே.. இப்போது நாயகியும் அதே ஆபத்து வளையத்தில்…. அது என்ன ஆபத்து..? நாயகன் நாயகியையும் பிற நபர்களையும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றினாரா…? இல்லையா…? என்பது மீதிக் கதை…


வெற்றியாக அசோக் செல்வன்… சூது கவ்வும் திரைப்படத்துக்கு அடுத்தும் இவருக்கு சொல்லிக் கொள்வது போல் மற்றொரு படம் அமைந்திருப்பது அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி… கிடைத்த வாய்ப்பை கோட்டை விடாமல் சிறப்பாகவே செய்திருக்கிறார்… ஆனாலும் சூது கவ்வும் திரைப்படத்தை ஒப்பிடும் போது நடிப்பு கொஞ்சம் கம்மிதான்… இயக்குநரின் கைவண்ணமாக இருக்கும்… காதல் மற்றும் திகில் கலந்த எபிசோடுகளில் இன்னும் கொஞ்சம் உடல்மொழியில் முன்னேற்றம் தேவை… நாயகியாக அவன் இவன் புகழ்….!!!! ஜனனி ஐயர்… மிகப்பெரிய ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம்… எந்தவகையிலும் இவர் பெரிதாக ஈர்க்கவில்லை… அதுவும் படத்துக்கு ஒரு குறைதான்…


அடுத்ததாக சொல்லிக் கொள்வது போன்ற கதாபாத்திரம் என்றால், அசோக் செல்வனின் நண்பனாக வரும் காளி. இவர் ஆங்காங்கே அடிக்கும் டைமிங் ரைமிங்கில் தியேட்டரில் சிரிப்பலை. சம்பிரதாய போலீஸாக ஜெயப்பிரகாஷ்.. வழக்கம் போல நடிப்பில் குறை வைக்கவில்லை. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்களைவிட பிண்ணனி இசை நேர்த்தியாக இருந்தது… பாடலில் விண்மீன் விதை பாடலும் யார் எழுதியதோ பாடலும் மனதில் நிற்கிறது… தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் சமமாக உள்வாங்கி, ஒவ்வொரு ப்ரேமுக்கும் தேவையான அழுத்தத்தை கச்சிதமாகக் கொடுக்கிறது..

குறை என்று பார்த்தால் லாஜிக் தான்… இந்த தவறுகளுக்கு பின்னால் இருப்பது யார் என்பதை, வெற்றி இவ்வளவு எளிதாக கண்டுபிடிப்பது போல் முடிச்சை வெகு எளிதாக அவிழ்த்திருக்க வேண்டும்.. அந்தக் காட்சிக்காக விவாதத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்… அதுபோல இது போன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் தங்களை நேரிடையாக இதில் திணித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.. வெற்றி வேவு பார்க்கச் சொன்ன பெண்ணையே காதலிக்கிறான் என்பது தெரிந்தும் எப்படி மீண்டும் அவனிடமே அந்தப் பெண்ணின் தகவல்களை கேட்பார்கள் என்பதையும், தப்பிப்பதற்கான முன்வழிகள் எதையுமே அவர்கள் முன்கூட்டியே யோசிக்க மாட்டார்களா…? என்பது போன்ற பல கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை..


இப்படி சில குறைகள் இருந்தாலும், வித்தியாசமான கதைக்களன், வித்தியாசமான பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வு, முதல் ஒரு மணி நேர த்ரில் என பல நிறைகள் இருப்பதால், கண்டிப்பாக பார்க்கலாம் இந்த தெகிடியை…

No comments:

Post a Comment