Monday, 3 February 2014

கிம் கி டுக் வரிசை – 2


                                                                                                                                                     Kim-Ki-duk 

The Bow:

ஒரு படைப்பென்பது எந்தவொரு தனிமனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் தன்னையோ தன் வாழ்க்கையையோ ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட படைப்புகளே பெரும்பாலும் பேசப்படும்.. ஆனால் கிம் கி டுக்கின் படங்களில் வரும் கதைமாந்தர்கள் பெரும்பாலும் எந்தவகையான ஒப்பீட்டு அளவிலும் நாம் வாழும் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே இருக்க மாட்டார்கள்.. இருப்பினும் அவரது படைப்புகள்  நம்மை அளவுகடந்து உருக்குவதும், உரு மாற்றம் செய்வதும் எப்படி என்கின்ற சூட்சமத்தை நாம் The Bow திரைப்படத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்..


நமக்கு மிகவும் பழக்கமான ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் நமக்கு ஒருவித சோர்வை கொடுக்கும்.. அதுபோல நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு விசயத்தையோ அல்லது சம்பவத்தையோ நாம் நோக்கிய அதே பார்வை நோக்கோடு அணுகும் திரைப்படங்கள் கவனம் பெற்றாலும் அதிக அளவில் ஈர்க்காது.. ஆனால் அதே பரிச்சயமில்லாத விசயத்தையோ, சம்பவத்தையோ ஒரு திரைப்படம் வேறொரு பார்வையில் ஆழமாக நம் முன் விரித்து வைத்தால், அவை நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் வெகுநாட்கள் ஆகியும் அடங்காது.. பெரும்பாலும் இதைத்தான் பெரும்பாலான கிம் கியின் படங்கள் செய்கின்றன..

கதை மாந்தர்கள் நம்மில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு தெரிந்தாலும், அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் எல்லாம், நாம் ஓரிரு நிமிடங்களில் தீர்ப்பு கூறி நம் வாழ்க்கையில் நாம் எளிதாக கடந்து சென்ற சம்பவங்களாக இருக்கும். நம்மால் ஜீரணிக்க முடியாத, நாம் அருவறுத்து ஒதுக்குகின்ற அது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி இவர் எடுக்கும் திரைப்படங்கள், நமக்குள் புதுவிதமான சிக்கலான சிந்தனை கோணங்களைக் கொடுப்பதோடு மட்டுமன்றி, தீர்ப்புக் கூறும் மனநிலையில் நாம் இன்னும் அடைய வேண்டிய பக்குவங்கள் அதிகம் என்பதையும் அவை சுட்டிக் காட்டும்.. இந்த வரிகளையே அடிப்படையாகக் கொண்டு, நானோ கிம்கியின் படங்களோ குற்றத்தையும், குற்றவாளிகளின் செயல்களையும் ஆதரிக்கிறோம் என்பது போல் எண்ணிக் கொள்ள வேண்டாம்.. குற்றவாளிகளின் செயல்களில் இருக்கும் ஒருவிதமான பின்னோக்கு மனவியலையும் உணரத் தலைப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே  இவரது திரைப்படங்களின் நோக்கம்.. ஒரு புனைவுக் கதையோடு The bow வின் கதைக்குள் சென்றுவிடுவோம்..

”ஒரு 20 வயது நிரம்பிய இளைஞன் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தை அணுகி, ஒரு 60 வயது நிரம்பிய கிழவன் ஒருவன் 16 வயது நிரம்பிய பெண்ணை 10 வருடமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறான்.. அந்தப் பெண்ணை அவன் பெரும்பாலும் கடத்தியிருக்கக் கூடும்,,, மேலும் அவன் அவளை திருமணம் செய்யவும் முயற்சிக்கிறான்.. அவனிடம் இருந்து அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கிறான்…” புனைவுக் கதை முடிந்தது.. இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது.. அந்த கேடு கெட்ட அயோக்கியனை அடித்து உதைத்து நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆவேசம் பிறக்கிறதா..? நல்லது… The Bow க்குள் செல்வோம்..


The Bowவின் கதையும் கிட்டதட்ட மேற்சொன்ன கதைதான்… ஒரு 60 வயதான பெரியவர் 16 வயதை அடைந்த ஒர் பெண்ணை பத்து வருடமாக தன்னுடைய படகில் வைத்திருக்கிறார்.. அந்தப் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது அவளை இந்தப் படகுக்கு கொண்டு வந்து வளர்க்கத் தொடங்குகிறார்.. ஆனால் அவளை அவரது பெற்றோர் தேடிக் கொண்டிருக்கும் செய்தியும், அவளை கிழவர் கடத்தி வந்திருக்கலாம் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் கிழவர் முடிவு செய்கிறார்.. அதுவரை அவருடன் சந்தோசமாக வசித்து வந்த இந்த சிறுபெண்ணின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது.. அவளும் அந்த வயோதிகரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள்… முடிவில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்..

மேற்சொன்ன கதையிலும் நமது மேற்சொன்ன தீர்ப்பு என்னவாக இருக்கும்.. அந்தப் பெண்ணை கிழவரிடம் இருந்து பிரித்து அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்பது தானே… இந்தத் தீர்ப்பை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும்.. ஆனால் படம் பார்க்கும் போது அந்தத் தீர்ப்பை நாம் சற்றே கடினமான மனநிலையில் இருந்துதான் எடுக்க வேண்டியதாக இருக்கும் அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி..

வெகு சுருக்கமாக மேற்சொன்னதுதான் கதை வடிவம் என்று சொல்லி விட்டாலும்… வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது இத்திரைப்படம் வேறுவிதமாக காட்சி கொடுக்கும்… மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது மற்றொரு விதமாக காட்சியளிக்கும்.. இதுதான் கிம் கியின் படங்களில் இருக்கும் நுண்ணிய உணர்வு.. உதாரணத்துக்கு அந்த 60 வயது கிழவரின் கதாபாத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு 20 வயது இளைஞனை பொருத்திப் பாருங்கள்.. அவர்களுக்கு இடையே ஒரு அற்புதமான அன்பு இருக்கிறது.. ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண் அந்த இளைஞனை பிரிந்து செல்ல முடிவெடுக்கிறாள் என்கின்றபட்சத்தில் நாம் எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கும்…? எப்படியாவது அந்த இளம்பெண் அந்த 20வயது இளைஞனின் காதலை புரிந்து கொண்டு அந்த இளைஞனுடன் இணைய வேண்டும் என்றல்லவா நம் மனம் அலைபாயும்… ஆக இங்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட அன்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.. என்ன மாறி இருக்கிறது..? அன்பு அப்படியே தான் இருக்கிறது… மாறி இருப்பது வயதுதான்… 60 வயது கிழவனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு, 20 வயது இளைஞனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு… முதலாவதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நம் மனம்… இரண்டாவதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.. ஆக அன்பு, காதல் எதுவாக இருந்தாலும் அதையும் சரி தவறென நிர்ணயிப்பது வயதை பொருத்துத்தான் என்று நம்மை அறியாமலே நமக்குள் இட்டுக் கொண்ட ஒரு வரையறை நம்மை கேள்வி கேட்கும் இடமாக இத்திரைப்படம் மாறி நிற்கிறது…


ஒரு கிழவனின் காமப்பசிக்கு ஒரு சிறுமியை பலியாக்குவதா என்ற கேள்வி எழும்.. ஆனால் அதே நேரத்தில் அந்த சிறுமியை காமத்தின் பொருளாக பாவிப்பது அந்த கிழவர் அல்ல.. வெளிப்புறத்தில் இருந்து மீன்பிடிக்க வந்து, அங்கு அந்த சிறுமிக்காக கழிவிரக்கம் கொண்டு, ஒரு கட்டத்தில் அவளையே அடைய முற்பட்டு தோற்க்கும் வெளிப்புற மாந்தர்கள்தான், அவளை அப்படிப் பார்ப்பது என்பதை தெளிவுபடுத்தும் காட்சிகளும் உண்டு.. அவர்கள் இருவருக்கு இடையே குறிப்பாக அந்த கிழவருக்கு அந்தப் பெண்ணின் மீது உடல் சார்ந்த இச்சைகள் இல்லை என்பதை… அவர் அந்த சிறுபெண்ணை குளிக்க வைக்கும் காட்சியிலும், இரவில் அவரது கை அவளது படுக்கையை நோக்கிச் செல்லும் காட்சியிலும் மிக அற்புதமாக விளக்கியிருப்பார்… அப்படி இருக்க ஏன் அப்பெண்ணை திருமணம் செய்ய முயல்கிறார் என்பதற்கான தெளிவான பதில் சொல்லப்படுவதே இல்லை.. ஆனால் அதற்கு நாம் அந்த சிறுபெண் மீது இருக்கும் அளவு கடந்த பாசம், தன் வாழ்க்கையை தனியாக கடத்த வேண்டிய தனிமை என்னும் துயரத்தை எதிர்கொள்ள சக்தி இல்லாதது என பரிசுத்தமான எத்தனையோ காரணங்களை அடுக்க முடியும்… இதில் எதை வேண்டுமானாலும் அச்சிறுபெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான காரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்..

அதே போல் கிழவரின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் இருந்தாளா..? என்பதற்கான பதிலே படத்தில் இல்லை.. ஆனால் தங்களுக்கென தனியான குடும்பம் இருந்தும், மனைவி இருந்தும், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க கடலுக்குள் வரும் அந்த மனிதர்களுக்கு அங்கும் ஒரு பெண் தேவைப்படும் போது, பெண் வாடையே இல்லாமல் இருந்த ஒரு கிழவர் தன்னோடு ஒரு பெண் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இருக்கும் தர்க்க நியாயமும் நம்மை கேள்வி கேட்கக் கூடும்..

இதுவொரு கோணம்.. இன்னொரு கோணத்தில் இதை பழமைவாதத்துக்கும் நவீனத்துக்குமான போராட்டமாக கொள்ள முடியும்.. ஆரம்பக்காட்சியில் கடலின் அலையில் அலைகழிக்கப்படும் ஒரு பெரிய படகும் ஒரு சிறிய படகும் காட்சிக்கு கிடைக்கும்.. அதை அந்த கிழவருக்கும், அச்சிறு பெண்ணுக்குமான மெட்டஃபராக கொள்ளலாம்… அந்தக் கடலை ஒர் உலகமாகவும், அந்த படகை ஆபத்தில்லாத பழமைவாத கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டையாகவும் கொண்டாள் நமக்கு வேறொரு கதை கிடைக்கும்… பழமைவாதத்தில் மூழ்கிய அந்தப் பெரியவர், அப்பெண்ணை புறவுலகின் மீது கொண்ட பயத்தால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழப் பழக்குவதும், வேறெங்கும் செல்ல அனுமதிக்காததும், அவளை பாதுகாப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு செயல்படுவதும், அவள் நவீனயுக இசைக் கருவியை ரசிப்பதை கண்டு கொதிப்பதுமாக பெண்ணை அடிமைப்படுத்தும் விதமான செயல்பாடுகளை அவரது செயல்களில் காண முடியும்..


அதற்கு விடையாக எல்லா நேரமும் பெண்ணை ஆணே பாதுகாக்க முடியாது என்பதும், அவளுக்கே அவளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைவிட தேவைப்பட்டால் அவள் ஆணையும் காப்பாற்றுவாள் என்பதும், தொடுதலின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவள் அறிந்திருக்கிறாள் என்பதும், தன் விருப்பம் இல்லாமல் தனக்கு பிடித்தவனைக் கூட அவள் அவளது உடலை தொட அனுமதிப்பது இல்லை என்பதும், திருமணம் மற்றும் பழமைவாதத்தின் கட்டுப்பாடுகள் ஆணையும் பெண்ணையும் கட்டி வைத்திருக்கின்றன என்பதை சொல்லுவதற்காக சேவல், மற்றும் கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதும், நவீனயுகத்தின் குறியீடாக வரும் அந்த இளைஞன், கட்டி வைக்கப்பட்டு இருக்கும் சேவலின் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும், இறுதியில் காமத்தின் அனுபவத்தையும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து, அவளை கட்டுப்பாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளியே செல்ல அனுமதிப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழமைவாத கடவுளின் குறியீடுகள் கொண்ட அந்தப் பெரிய படகு மூழ்குவதும், சிறிய படகு மட்டும் தனியாக ஜலத்தில் பயணித்துச் செல்வதையும் நவீனயுகம் பழமைவாதத்தை மூழ்கடித்து தனித்து இயங்கிக் கொண்டிருப்பதற்கான குறீயீடாகக் கொள்ளலாம்..


மேலும் ஒரு பெண் ஒரு ஆணை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால், அவள் எந்த எல்லை வரைக்கும் செல்லத் துணிந்துவிடுவாள் என்பதற்கும் உதாரணமான பல காட்சிகள் படத்தில் உண்டு..

இன்னொரு கோணம் என்பது BOW வின் கோணம்.. அந்த வில் அம்பு என்பது ஆபத்தாக வரும் எதிரியை துளைக்கவும், இசை மீட்டி நம் மனதை துளைக்கவும், படகில் வரையப்பட்டு இருக்கும் புத்தர் படத்தை துளைத்து, தங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வதுமான முற்றிலும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கின்றது.. ஆனால் அதன் செய்கைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அதை இயக்குபவரின் மனநிலை என்பதும் உண்மை.. அதுபோலத்தான் ஒரு மனிதனின் மனமும் அவனது செயல்களும்.. முற்றிலும் நேரெதிரான புரிந்து கொள்வதற்கு கடினமான எத்தனையோ விதமான செயல்களை அவன் செய்தாலும் அதற்கு அவன் காரணம் இல்லை… அவனை இயக்குபவரின் மனநிலை என்பதான சித்தாந்தக் கொள்கையோடு இத்திரைப்படத்தை அணுக முடியும்..


அதுபோல அன்பு என்பது எதிர்பார்ப்புக்கு உரியதாக ஆகும் போது, அதில் ஏற்படும் நெருக்கமான சிக்கல்களையும், அதனால் மனிதர்களின் மனதில் ஏற்படும் கோபாவேசத்தையும் நம்மால் சில இடங்களில் உணர முடியும்.. தனக்கு பிடிக்காத மனிதர்களிடம் இருந்து தன்னை கிழவர் பாதுகாக்கும் போது, கிரீடம் போல இருக்கும் அந்தக் கிழவரின் அன்பு, தனக்கு பிடித்த ஒரு இளைஞனிடம் பழக முற்படும் போதும், பாதுகாக்கும் நோக்கோடு பெரியவர் குறுக்கிடுவதும், இப்போது அந்த அன்பு முள்கீரிடமாக மாறி அவளை வெறுப்பேற்றும் காட்சியும் மிக முக்கியமான காட்சிகள்.. கிழவரை வெறுப்பேற்றிவிட்டு தனியாக வந்து அந்தப் பெண் சிரிப்பதும், தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள போராடும் கிழவர், திருமண தேதியை திருத்த முற்படும் திருட்டுத்தனமான குணாதிசங்கள் நமக்குள் முளைவிடும் தருணங்களை நம் கண் முன் இத்திரைப்படம் நிறுத்துகிறது… மேலும் அன்புக்கான அளவீடாக வைப்பது, பிறர் அவர்களுக்கு பிடித்தது போல் நடப்பதையா..? அல்லது நமக்கு பிடித்தது போல் நடப்பதையா…? என்னும் தவிர்க்க முடியாத கேள்வியும் நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியாது..

மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒரு கோணம் இத்திரைப்படத்தில் உண்மையான கோணமாக இருக்கலாம்… அல்லது நான்காவதான முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணமும் இயக்குநரின் பார்வையில் இருக்கலாம்.. ஆனாலும் இப்படி வித்தியாசமான ஒரு மூன்று கோணங்களில் நம்மை யோசிக்க வைப்பதன் மூலமாக ஒரு நிகழ்வின் வெவ்வேறு விதமான வித்தியாசமான புரிதல்களை புரிந்துகொள்ள நம்மைத் தூண்டுவதையே இத்திரைப்படத்தின் வெற்றியாகக் கொள்ளலாம்..

கிம் கி டுக்கின் பிற படங்களைப் போல் இத்திரைப்படத்திலும் வசனங்கள் என்பது மிகமிக குறைவு.. அதிலும் குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களான அந்த கிழவரும், அச்சிறு பெண்ணும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.. ஆனால் அவர்களது உணர்வுகள் நமக்கு அப்பட்டமாக உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு… படம் முழுக்க கடலில் உள்ள ஒரு படகில் நிகழ்வது என்பதால் இதன் ஒளிப்பதிவும் ஒரு சிறப்பம்சம் விளங்கியதாக இருக்கிறது… அது போல் இசை… அந்தக் கிழவர் அந்த வில்லை ஒரு சீனப் பாரம்பரிய இசை கருவியைப் போல் மாற்றி ஒரு வித்தியாசமான இசையை பல இடங்களில் இசைத்துக் கொண்டே இருப்பார்… அந்த இசை நம் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் ஒரு அற்புதமான இசை…

தனது வாழ்க்கையை கிம் கி டுக் ஒரு ஓவியராக தொடங்கியவர் என்பதால் ஓவியம் போன்ற அற்புதமான காட்சிகள் இயல்பாகவே படத்தில் அமைந்திருக்கும்… அது போலத்தான் இசையும் மிக அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்… க்ளைமாக்ஸில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியாவிட்டாலும் கூட.. அது நம் முடிவுக்கே விடப்படுவதால்.. அது நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் அலாதியானது… கிழவராக நடித்திருக்கும் Jeon Seong-hwang-ம் Han Yeo Reum-ம் சிறு பெண்ணாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் எந்தவொரு வசனத்தின் துணையும் இன்றி மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்… கிம் கி டுக்கின் வரிசையில் இதுவும் தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம்…

அடுத்தப் பதிவு

கிம் கி டுக்கின் THE ISLE (2000)

No comments:

Post a Comment