தலைப்பிலேயே காதல்.. போஸ்டரின் முகப்பிலேயே
சந்தானம், உதயநிதி. இந்தக் கூட்டணியுடன் நயன்தாரா வேறு.. இவர்களிடம் இருந்து பெரிதாக
என்ன எதிர்பார்த்துவிட முடியும்.. எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் படம் பார்க்க திரையரங்கம் சென்றேன்… ஒரே ஒரு வேண்டுதலுடன்…
ஓகே ஓகே, நய்யாண்டி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற அதிஅற்புதமான திரைப்படமாக இதுவும்
அமைந்துவிடக் கூடாது என்ற வேண்டுதல் தான் அது… வேண்டுதல் பழித்தது…. இது மேற்சொன்னது
போன்ற அதிஅற்புதமான படமாக அமையவில்லை… கடவுள் இருக்கிறார்…
அதற்காக உண்மையிலேயே இது அற்புதமான படம்
என்றும் எண்ணி விட வேண்டாம்… இது யாரால் எடுக்கப்பட்ட படம் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன்..
யாருக்காக, எந்தவிதமான ஆடியன்ஸை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்பதை நீவிர்
நன்றாக அறிவீர்கள்.. அவர்களை திருப்தி படுத்துவதோடு மட்டுமில்லாமல் நம்மை கொஞ்சமே கொஞ்சம்
ஆரம்ப மற்றும் இறுதி காட்சிகளில் மட்டும் எரிச்சல்படுத்துவதால்…. இந்தக் காதல் எப்படி
என்று கேட்பவர்களிடம் ஓகே ஓகே(படத்தை சொல்லவில்லை) என்று சொல்லமுடியாவிட்டாலும், ஓரளவுக்கு
இழுத்து ஓ…க்…கே என்று சொல்லவைக்கிறது… இதற்காக முக்கியமாக பாராட்ட வேண்டியது இயக்குநர்
பிரபாகரனை தான்…
சுந்தரபாண்டியன் என்னும் திரைப்படத்தைக்
கொடுத்தவர்.. அதில் இருந்த காதல், நட்பு, குடும்பம், செண்டிமெண்ட் என்ற சரிவிகித கலவையை
பார்த்த உதய் குழுவினர், உதயின் சினிமா க்ராப் வளர்ச்சிக்கு இது போன்ற மசாலா மாஸ்டர்களின்
சேவை தேவை என்பதை உணர்ந்து கொத்தாக அள்ளி இருப்பார்கள் போலும்… ஆனாலும் இயக்குநர் புத்திசாலிதான்..
என்னதான் சரிவிகித கலவை கிண்டியிருந்தாலும், படத்தின் வெற்றிக்கு காரணம் இனிகோ பிரபாகரைக்
கொண்டு நாம் ஆடிய திரைக்கதை உத்திதான் என்பதைக் கண்டு கொண்டு, இது கதிர்வேலன் காதலிலும்
எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு திரைக்கதையில் அதிசுவாரஸ்யமும் இல்லாத அதே நேரத்தில்
சோர்வோ வெறுப்போ ஏற்படுத்தாத வகையில் ஓரிரு முடிச்சுகளை போட்டிருக்கிறார்.. கதை திரைக்கதை
என எதுவுமே இல்லாமல் வந்த சமீபத்திய வரவுகளுக்கு மத்தியில், இதெல்லாம் இருக்கிறது என்று
சொல்ல முடிவதே இனிப்பான செய்தியாக மாறிவிடுகிறது…
மிகமிக சாதாரணமான முடிச்சி தான்.. உதாரணமாக
நயன் வீட்டுக்கும் உதயின் அக்காவீட்டுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கு காரணமான அந்த
ஆரம்பப்புள்ளியை சொல்லலாம்… அது தவிர்த்து முதலிலேயே காதலுக்கு முட்டுக்கட்டை விழுவதைப்
போல் மற்றொரு காதலை காட்டியதையும் சொல்லலாம்.. மேலும் ஹீரோயினின் கற்பைக் காப்பாற்ற
துடிக்கும் நாயகன் என்னும் செல்லரித்துப் போன களன் இங்கு காலியாக இருந்தும், அந்த ஹீரோயிசத்தை
தவிர்த்து நம் எரிச்சலை தவிர்த்ததும் கூட நல்ல முயற்சிதான்… வீட்டில் உதயநிதிக்கு காத்திருக்கும்
பிரச்சனை என மிக சின்ன சின்ன முடிச்சுகளை குழப்பமே இல்லாமல் போட்டு, அதை தெளிவாக அவிழ்த்திருக்கிறார்கள்
இப்படக்குழுவினர்..
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம்..
கொஞ்சமாவது சிரிக்க வைக்கும் சந்தானத்தின் காமெடி.. சந்தானமும் உதயநிதியும் சேர்ந்து
கொண்டு டிவி கடையில் அடிக்கும் காமெடி சமீபத்திய வரவுகளில் ஒரு நல்வரவு.. அதுபோக அனுமன்
வேடத்தில் இருக்கும் சுவாமிநாதன் அடிக்கும் காமெடியும்… மயில்சாமியை வைத்து மிமிக்ரி
பண்ணும் இடங்களிலும் சிரிப்பை அடக்குவது கடினம்.. இது தவிர்த்து மற்றொரு மிக முக்கியமான
காரணம் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்… அது இப்படத்தில்
மிக கச்சிதமாக வெற்றிக்கு உதவி இருக்கிறது… உதயின் அக்காவாக வரும் சாயாசிங்க்கு வரும்
பிரச்சனை, அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் நெகிழ்வு, எதிர்த்த வீட்டு ஜெயப்பிரகாஷுடன்
சாயா சிங்கின் கணவனுக்கு இருக்கும் பிரச்சனை.. நயன் தாராவுக்கு ஏற்கனவே இருக்கும் லவ்..
அதில் ஏற்படும் பிரச்சனை, நரேனுக்கு சமூகத்தில் ஏற்பட்ட இழுக்கு என இது கதிர்வேலனின்
காதலில் மட்டுமே தனித்து இயங்காமல் பல்வேறு தளங்களில் சேர்ந்து இயங்குவதால் நமக்கு
பெரும்பாலும் அலுப்பு ஏற்படுவதில்லை.. இதை சுந்தரபாண்டியனிலும் கடை பிடித்திருப்பார்
இயக்குநர்…
உதயநிதிக்கு செண்டிமெண்ட் காட்சிகளிலெல்லாம்
நடிப்பு ஓகே தான்… காதல் காட்சிகளில் தான் நடிப்பு வருவேனா என்கிறது… போன படத்தைவிட
இந்தப் படத்தில் ஓரளவுக்கு ஆடவும் செய்கிறார்… சந்தானத்தின் காமெடி காலை வாராமல், இப்படத்தில்
கைகொடுத்திருப்பது உதயநிதி செய்த அதிர்ஷ்டமோ கொடுத்த அதிர்ஷ்டமோ…? நரேன் அதட்டியதும்
பரப்பாக அந்த பாட்டில் மாத்திரைகளை விழுங்கும் காட்சி ஃபைன்… டச்.. சந்தானம் ஒவ்வொரு
படத்திலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பார் போலும்…
ஆல் இன் ஆலில் கரகரப்பாக சிரித்து மிரட்டியவர்.. இதில் கண்ணாடியின் ஃபிரேமைப் பிடித்து
ஆட்டிக் கொண்டே இருக்கிறார்…
நயனுக்கு சொல்லிக் கொள்வது போல் காட்சிகள்
ஏதும் இல்லை… ஸ்கூட்டரில் பவனி வருவதும், காதலில் தோற்று உருகுவதும் மருகுவதுமாக காலம்
காலமாக செய்து வரும் அதே காட்சிகள் தான்…. கச்சிதமாக செய்திருக்கிறார்… ஓரிரு காட்சிகளில்
மட்டுமே வந்தாலும் சுவாமிநாதனும் மயில்சாமியும் சிரிக்க வைப்பதோடு, மனதிலும் நிற்கிறார்கள்..
இவர்கள் தவிர்த்து வழக்கம் போல் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், சாயாசிங், நரேன், ஜெயப்பிரகாஷ்,
வனிதா கிருஷ்ணசந்திரன், சுந்தர் ராமு, ஆடுகளம் முருகதாஸ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே
உண்டு…
ஹரிஸின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்….
பிண்ணனி இசை…? வழக்கம் போல்… பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, டான் பாஸ்கோவின் எடிட்டிங்
என மற்ற அனைத்தும் செய்நேர்த்தி… மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் கேட்கவும் பார்க்கவும்
(ஒரு முறை மட்டும்) சற்றே ஜாலியான காதல்…
No comments:
Post a Comment