சசிக்குமாரின் திரைப்படங்கள் ஏனோ தேய்பிறையைப்
போல தேய்ந்து கொண்டே செல்கின்றன.. பிரம்மன் திரைப்படத்தை பரவாயில்லை என்று சொல்ல எனக்கும்
ஆசைதான்.. ஆனால் அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.. சசிகுமாரின் அடுத்தப் படத்தை
பார்த்துவிட்டு வேண்டுமானால் பிரம்மன் பரவாயில்லை என்று சொன்னாலும் சொல்லுவேன்.. சசிக்குமாரின்
மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது.. அவர் மீது ஒரு குறிப்பிட்ட
மரியாதை கூட உண்டு.. ஆனால் இதெல்லாம் இருந்தும் அவரது படங்கள் பெரும்பாலும் ஒருகோட்டு
தத்துவத்தில் தான் இயங்குகின்றது.. கற்பு காதல் நட்பு என்னும் அந்த ஒரு கோட்டு தத்துவத்தை,
தப்பிதம் இல்லாமல் ஒப்பித்து, மக்களிடம் தன்னை ஒரு நாயகனாகவும் நல்லவனாகவும் நிலை நிறுத்தவே
அவரது படங்கள் போராடுகின்றன. ஆனால் அவரது முதல்படம் இது போன்ற சமரசங்கள் ஏதும் இல்லாமல்
மிகமிக யதார்த்தமாக இருக்கும்.. அந்த யதார்த்தமே அவருக்கு ஒரு தனி அடையாளத்தையும் மரியாதையையும்
கொடுத்தது… ஆனால் எப்போது அவர் ஒரு கலைஞனாக யதார்த்தத்தை காட்சிப்படுத்துவதை விட்டு
விலகி, நடிகனாக நடிக்கத் தொடங்கினாரோ… அப்போது அந்த யதார்த்தத்தையும் அவர் மீதான மரியாதையையும்
அவர் தொலைத்துவிட்டார்… அதுமுதல் அவரது படங்களும் பாதுகாக்க அவசியமே இல்லாத குப்பைகளாக
மாறி வருகின்றன… அதன் சமீபத்திய வரவு தான் இந்த பிரம்மன்..
ஒரு திரைப்படம் தோற்பதற்கு எத்தனையோ காரணங்கள்
இருக்கலாம்.. கதை இல்லாதது, நல்லதை பற்றிய கதை இல்லாதது(எ.கா: ஆ.கா), மோசமான திரைக்கதை,
தவறான கதாபாத்திர தேர்வு, தவறான நேரத்தில் திரைப்படத்தை வெளியிடுவது, போதிய விளம்பரம்
இல்லாதது என எத்தனையோ காரணங்களை அடுக்கலாம். மேற்சொன்ன காரணங்கள் எல்லாம் எல்லா மொழிப்
படங்களுக்கும் பொருந்தும் என்றாலும், தமிழ்மொழிப் படங்கள் தோற்பதற்கு மற்றொரு தனித்துவமான
காரணமும் உண்டு.. அது கதாநாயக பிம்பத்தையோ அல்லது காமெடி நாயக பிம்பத்தையோ ஒட்டுமொத்தமாக
நம்பி எடுக்கப்படுவது.. இந்த பிரம்மன் கடைசி வகையறா…
வெறும் சசிக்குமார் என்னும் நடிகரின் பிம்பத்தை
வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட படமாகத்தான் தெரிகிறது பிரம்மன்.. அது எங்கே காலை வாறிவிடுமோ
என்ற பயத்தில் காமெடி நாயக பிம்பத்தின் உதவியை நாடி சந்தானத்தையும் சூரியையும் இழுத்து
வந்திருக்கிறார்கள்.. இவர்களை இழுத்து வந்தும் தேரை இழுத்து நிலையம் சேர்க்கமுடியாமல்,
தவித்துப் போய் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறார்கள்…
கதையே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன்…
மிகமிக சாதாரணமான ஒரு கதையும்… மிகமிக மோசமான ஒரு திரைக்கதையும் படத்தில் உண்டு.. சிறுவயதிலேயே
சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இரண்டு நண்பர்கள்.. பாதியிலேயே இவர்கள் பிரிய ஒருவன்
இவர்கள் எந்த திரையரங்கில் திரைப்படம் பார்த்து அதன் மீதான தங்கள் காதலை வளர்த்துக்
கொண்டார்களோ அதே திரையரங்கை லீஸ்க்கு எடுத்து நடத்துபவனாக கஷ்டப்படுகிறான்.. ஒரு கட்டத்தில்
திரையரங்கை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது… அதில் இருந்து அவன் அந்த திரையரங்கை
எப்படி மீட்டான் என்பது மீதிக்கதை… மேலோட்டமாக கதையின் கருவை மட்டும் பார்த்தால் அதை
மிகச்சிறந்த ஒரு படமாக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதற்குள்ளாகவே இருப்பது தெரியும்..
ஆனால் அதற்கான எந்த மெனக்கெடலையும் படக்குழு அர்ப்பணிக்க தயாராக இல்லாததால், மிகச்சிறந்த
படமாக வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம், எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய
வெறும் படமாக வந்திருக்கிறது..
படத்தின் இரண்டாம் பாதியைக் கூட சகித்துக்
கொள்ளமுடியும்… ஆனால் முதல் பாதி…???????? அதிலும் ஒரு காட்சி உண்டு.. ரோட்டில் ஒரு
ரோஜா கிடக்கும்…. அதை கடந்து சென்ற சசிக்குமார், மீண்டும் திரும்பி வருவார்.. அந்த
ரோஜாவை கையில் எடுப்பார்… வழக்கம் போல் எதிரே ஹீரோயின் ஸ்கூட்டியில் வருவார்.. இவர்
ரோஜாவை அவரைப் பார்த்து ஆட்டுவார்… ஹீரோயின் பதிலுக்கு அசிங்கமில்லாமல் திட்டுவார்..
அங்கதா இப்ப ட்விஸ்ட்டு… பாதியிலேயே ரோஜாவை தவறவிட்டு பத்து மைல் தாண்டிப் போயிருந்த
ஒரு கல்யாண ஜோடி, அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுக்க திரும்பி வரும்… ஹீரோவுக்கு தேங்க்ஸ்
சொல்லி அதனை வாங்கிக் கொள்வார்கள்…. ஹீரோயின் தான் மகா பெரிய தவறு செய்து விட்டதாக
எண்ணி அசடு வழிவார்…” எனக்கு பயத்தில் வேர்த்து வேர்த்து வழிகிறது.. சுற்றிலும் கும்மிருட்டு
வேறு…. கதவு எந்தப் பக்கம் இருக்குன்னே தெரியல… இன்னைக்கி நாம சிக்கிட்டோம்டா என்று
எண்ணிக் கொண்டே.. பயத்தில் இறுக கண்களை மூடிக் கொண்டேன்….
இப்படி முதல்பாதியில் கதை இம்மியளவுக்கு
கூட நகராது… வழக்கம் போல நாயகன் நாயகியை துரத்திக் கொண்டு இருக்க…. வீட்டில் நாயகனை
துரத்திக் கொண்டு இருப்பார்கள்.. இடையிடையே சந்தானம் வந்து இன்றைய செய்தி போல.. இப்போதைய
காமெடியை டைமிங்க் ரைமிங்காக அவிழ்த்து விட்டுப் போவார்… ஐந்து நிமிடத்தில் அதுவும்
மறந்து போகும்… “என்னடா நடக்குது இங்க…” என்கின்ற மனோநிலையில் நான் அமர்ந்து இருக்க…
சந்தானத்தின் வகையறா ரசிகர் ஒருவர் அவிழ்த்துவிட்டார் ஒரு அற்புதமான காமெடியை.. “பாஸு
இதுதான் இருட்டு அறையில முரட்டு குத்தா பாஸு…. முடியல…” என்று சொல்லி சிரிக்க…. இந்த
ஜோக்குக்கு மட்டும் திரையரங்கமே குலுங்கியது…
திரைப்படமே இந்த நிலையில் இருக்கும் போது,
அதன் சங்கீத ராக ஸ்ருதிகளில் எப்படி மனம் லயிக்கும்…. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என
எதன் மீதும் மனம் ஒன்றவே இல்லை…. ஹீரோயின் மீதும் அப்படியே.. சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ்….
இப்படி ஏகப்பட்ட நடிகப் பட்டாளம் இருக்கிறது… என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது…
இருக்கிறார்கள் அவ்வளவே…. பிரம்மனை நான் எப்போதாவது திட்டுவது வழக்கம்…. ஆனால் இந்த
பிரம்மனை பார்க்க நேரிட்ட அந்த இரண்டரை மணி நேரத்தில் நான் இடைவெளியே இல்லாமல் பிரம்மனை
திட்டிக் கொண்டே இருந்தேன்…. (“கடுப்பேத்றார் மை லார்ட்”) பார்த்தால் நீங்களும் கொஞ்சம்
திட்டுங்கள்….
ரொம்ப சரியா எழுதி இருக்கீங்க..நான் நேத்து போய் மாட்டிகிட்டேன்... :(
ReplyDeleteசசிகிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்கிறோம்ன்னு நினைக்கிறன்...