Monday, 6 January 2014

A SHORT FILM ABOUT LOVE:

புத்தாண்டின் முதல் பதிவு அன்பு சார்ந்த ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். எந்த திரைப்படத்தைப் பற்றி எழுதலாம் என்று எண்ணிய போது நான் பலமுறை பார்த்து சிலாகித்ததும், தலைப்பிலே அன்பைக் கொண்டிருப்பதுமான A SHORT FILM ABOUT LOVE என்கின்ற படம் அதற்கு உகந்ததாக இருக்கும் என்று தோன்றியது. போலந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ”கிறிஸ்டோஃப் கீவ்ஸ்லோவ்ஸ்கி” அவர்களால் 1988ல் எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம், இன்றளவும் காதலுக்கான ஒரு முக்கியமான திரைப்படமாக திரைவல்லுநர்களால் முன்மொழியப்படுகிறது…


காதல்…. பெரும்பாலும் இரு வயதொத்த எதிர்பாலினருக்கு இடையே ஏற்படுகின்ற ஒருவிதமான ஈர்ப்புக்கான பெயராக மட்டுமே பெரும்பாலும் பார்க்கின்றோம்.. காதலுக்கு இப்படி ஒரு வரையறை கொடுத்து சட்டகத்தில் அடைக்க நாம் முற்பட்டாலும், அது அந்த ஒற்றை சட்டகத்தில் அடங்க மறுத்து திமிறிக் கொண்டு வெளியேறும் என்பதே நாம் கண்கூடாய் கண்ட உண்மை.. ஏனென்றால் நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் காதல் சார்ந்த ஒரு கருத்து பிம்பம் இருக்கிறது.. இவர்களின் கருத்துக்களை எல்லாம் தொகுத்தால், காதலுக்கான விளக்கத்துக்கு மட்டும் ஒரு தனி அகராதியே அச்சடிக்க வேண்டிய சூழல் வந்தாலும், அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. ஆக இங்கு காதல் மட்டும் பெரிதல்ல… காதலுக்கான விளக்கமும் கூடத்தான்..

இதை ஏன் இவ்வளவு அழுத்தமாக இங்கே சொல்கிறேன் என்றால், இந்த திரைப்படமும் காதலுக்கான ஒரு விளக்கத்தை, மிகமிக அற்புதமாக எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக நம் முன் வைக்கிறது என்பதால் தான்.. நாம் நம் திரைப்படங்களில் காணாத, பேசாத, விவாதிக்காத நுண்ணிய விசயத்தையா இத்திரைப்படம் பேசிவிடப் போகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம்.. நண்பர்களே ஒரு விசயம் சொல்லட்டுமா… இன்றைய வேளான்மை சந்தைப்படுத்தும் பருவத்தின்படி இந்தியாவின் நெல் ஏற்றுமதி 93 இலட்சம் டன்னாக குறைந்திருக்கிறது… இருப்பினும் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக நெல் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது புள்ளிவிவரம்… இதனால் இந்தியாவில் பசியால் யாருமே சாகவில்லை என்று அர்த்தமாகிவிடுமா…? இல்லைதானே… அப்படித்தான்.. என்னதான் நாம் காதல் திரைப்படமாக எடுத்து குவித்துக் கொண்டிருந்தாலும், காதலுக்கான உலகளாவிய அதிசய சின்னத்தை நாம் கட்டி வைத்திருந்தாலும்.. இன்றளவும் நம் மக்களுக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்றே நான் சொல்வேன்…. பத்திரிக்கையில் நாம் அன்றாடம் படிக்கின்ற செய்திகளும் எனக்கே பக்கபலமாக இருக்கின்றன… அதனால் தான் இத்திரைப்படம் காதலை மிகமிக தெளிவாக, அற்புதமாக எந்தக் குழப்பமும் இல்லாமல் விளக்குகிறது என்பதை வலியுறுத்துகிறேன்…

படத்தின் கதையை ஓஷோவிடம் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. பால்ய பருவங்களில் எனக்கொரு கம்யூனிச பிடிப்புள்ள நண்பன் இருந்தான்.. கடும் மழையின் போது ஒடிந்துவிழும் மரக்கிளைகள், ஓரமாய் நின்று கொண்டிருக்கும் காரின் மீது விழுந்து கார் அப்பளமாகிவிட்டால் அதைக் கண்டு ஆனந்த கூத்தாடும் அளவிற்கு கம்யூனிச பக்தி உள்ளவன்.. நானோ பள்ளியில் பாடம் கற்றதைவிட, திரையரங்குகளின் உபயத்தால் அதிகமாக காதலைக் கற்றுவிட்டு அதற்கான செய்முறை பயிற்சியில் இறங்கி இருந்த காலம்.. நண்பனுக்கு காதல் என்றாலே ஒட்டாது.. பாடப்புத்தகங்களே நாங்கள் படிக்காத போது, அவன் பலதரப்பட்ட புத்தகங்கள் படிப்பவன்.. காதலுக்காக அலைந்து கொண்டிருந்த எங்களைப் பார்த்து அவன் சொல்வான்… “ஓஷோ என்ன சொல்றாரு தெரிமா…. காதல்ன்னு ஒன்னு கிடையவே கிடையாது… ”காமத்தின் நீட்சியே காதல்…” என்று எங்களோடு கருத்து மோதல் இடுவான்.. நாங்களும் எங்கள் பங்குக்கு விடாமல் சண்டை செய்வோம்.. ஆனால் அதை ஓஷோ சொன்னாரா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது…

ஆக.. ஓஷோ சொன்னதாக என் நண்பன் சொன்ன அந்த வரிதான் கதையின் மையம்.. காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் புரியாத இன்றைய காலச்சூழலில் அதை அற்புதமாக வித்தியாசப்படுத்தி காதலுக்கான ஒரு தீவிரமான படைப்பைக் அந்நாளிலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவஸ்கி.

பத்தொன்பது வயது நிரம்பிய இளைஞன் ”டாமக்” (Tomek) மிதமிஞ்சிய காதலில் ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவன்.. இவன் காதலிப்பதோ தன் அடுக்குமாடி குடியிருப்பு தாண்டி எதிர்புறமிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு முதிர்கன்னியை. அவளது சூழல் எப்படிப்பட்டது தெரியுமா…? காதலின் தேடலில் தோற்றுப் போய் முடிவில் காமத்தின் இருப்பியலை மட்டுமே கண்டு கொண்டு, அதன் இயங்குவியலில் இடைவெளியும் இல்லாமல் பரிபூரண இன்பமும் இல்லாமல் உச்சகதியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவள்… டாமக் தங்கி இருப்பது தன் நண்பனின் வயதான தாயாருடன்.. அந்த வயதான தாயாரின் மிகப்பெரிய கவலை…. தன் மகன் மார்ட்டின் தன்னை தனிமைப்படுத்தி இராணுவத்துக்கு சென்றது போல், டாமக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் தன்னை பிரிந்து சென்றுவிடுவானோ என்பதே… அந்த தனிமை துயரை எப்படி தாங்கிக் கொள்வது என்ற பயத்தின் பிடியிலேயே அவள் வாழ்ந்து வருபவள்.. இந்த மூவர் மட்டும்தான் கதையின் முக்கிய பாத்திரங்கள்.. இப்படி மூன்று வெவ்வேறு வயதுடைய தனி மனிதர்கள் தங்கள் தனிமையை துரத்தி தங்களுக்கான அன்பை பெற்றுக் கொள்ள நடத்தும் போராட்டமாகவே இப்படம் காட்சி தருகிறது..

காதலின் உச்சமட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையை எப்போதும் அழுதபடியோ அல்லது சிரித்தபடியோ அலைந்து திரியும் ஒரு பைத்தியக்காரனின் மனநிலையோடு மட்டுமே ஒப்பிட முடியும்… அவன் சிரிப்பதற்கும் அழுவதற்கும் காரணம் பெரும்பாலும் ஒன்றே ஒன்றுதான் இருக்கும்.. இது காதலர்களுக்கும் பொருந்தும்.. ஒரு கருவியோ காட்சியோ எதுவாக இருந்தாலும் அதை தங்கள் காதலின் சந்தோச துக்க தருணங்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்வார்கள்.. மேலும் இவர்கள் செய்கின்ற அளப்பரிய, வியப்பிற்குரிய, விபரீதமான செயல்கள் எல்லாம் பெரும்பாலும் தங்கள் சக காதலை பார்ப்பதற்கோ அல்லது பேசுவதற்கோ என்பதான மிகச் சாதாரண நிகழ்வுகளில் தான் முடியும்… ஆனால் அது அவர்களுக்கோ சாதாரணமானதே அல்ல… இதுதான் காதலின் மோனநிலை.. இது போன்றதொரு மோனநிலையில் தான் நாயகன் ”டாமிக்”கும் இருக்கிறான்.. எங்கோ எப்போதோ படித்த ஒரு காதல் கவிதையில் கவிஞன் கதறி இருப்பான்… ஒரு பஸ் நடத்துனராகவோ, சக பணியாளனாகவோ, பள்ளி கால தோழனாக, பக்கத்து வீட்டுக்காரனாகவோ அல்லது பால் போடும் ஒரு தொழிலாளனாகவோ கூட தன் காதலியோடு தன்னால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று… புலம்புவதாய் நீண்டு செல்லும் அந்தக் கவிதை..


அப்படித்தான் டாமிக்கும்.. ஆனால் அவன் மேற்சொன்னது போன்ற தொடர்பை அவனாகவே ஏற்படுத்திக் கொள்கிறான்… அவளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவள் வீட்டில் பால் போடும் பணியில் சேருகிறான்.. பொய்யான ஒரு மணி ஆர்டர் சிலிப்பை அவளது லெட்டர் பாக்சில் போட்டு அவளை தான் பணிபுரியும் தபால் நிலையத்துக்கு வரவைத்து அருகில் பார்த்து ரசிக்கிறான்.. போனில் அவளது குரலைக் கேட்டு மகிழ்கிறான்… அவள் சாப்பிடும் தருணத்திற்காக காத்திருந்து அவள் சாப்பிடும் போது தானும் சாப்பிட்டு, அவளோடு சேர்ந்து சாப்பிட்டது போன்ற பரவச உணர்வில் லயிக்கிறான்… அவள் கவலையோடு அழுது கொண்டு இருக்கும் போது, தன்னைத் தானே வருத்திக் கொள்கிறான்… இப்படி எத்தனை எத்தனையோ மானுட பைத்தியக்கார செயல்களையும், காதலின் உன்னத செயல்களையும் அவன் செய்து கொண்டே இருக்கிறான்… இவர்கள் இருவருக்குமான இருப்பிட இடைவெளியை குறைப்பது டாமிக் வைத்திருக்கும் அந்த டெலஸ்கோஃப் மட்டுமே… அதன் வாயிலாகவே அவளது செயல்களை பெரும்பாலும் தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்து ரசிக்கிறான்…


ஒரு கட்டத்தில் அவள் அவனிடம் நேரடியாகவே, என் வீட்டில் யாரும் இல்லை, நீ வீட்டுக்குள் வருகிறாயா..? என்னோடு இரவை கழிக்க விரும்புகிறாயா..? என்னோடு ஊர் சுற்ற விரும்புகிறாயா..? என்று அடுத்தடுத்து கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் டாமிக்கின் பதில் ”இல்லை” என்பதாகத்தான் இருக்கிறது.. ”என்னிடம் நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்..” என்று நேரடியாக கேட்கும் போது டாமிக் சொல்கிறான்.. “நான் உன்னை விரும்புகிறேன்..” என்று சொல்கிறான்.. இந்த உரையாடலின் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் ஹோட்டலில் சந்தித்து கொள்ளும் போது வரும் உரையாடல் தான் அதிமுக்கியமானது.. ”காலையில் என்னிடம் ஏதோ ஒன்று சொன்னாயே… அதை மீண்டும் சொல்.. அந்த வாக்கியத்தை கேட்டே பல யுகங்கள் ஆகிறது” என்கிறாள்.. டாமிக் தயங்கியபடியே “நான் உன்னை விரும்புகிறேன்….” என்கிறான்.. உதட்டை சுழித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் அவள் நீண்ட பெருமூச்சுக்குப் பின்னர் “அப்படி ஒரு விசயம் இல்லவே இல்லை (it’s not exist) என்கிறாள்.. “இருக்கிறது (it does)” என்கிறான் டாமிக்.. இவனிடம் இதைப் பற்றி விவாதிப்பது பிரயோஜனமற்றது என்ற எண்ணத்தில் என்னை எத்தனை நாட்களாக ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற கேள்விக்கு ஒரு ஆண்டாக என்று பதிலளிக்கிறான் டாமிக்.. மேலும் அவளது முன்னால் காதலனைப் பற்றி அவள் கூறிவிட்டு இப்போது அவன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான் என்று சொல்லும் போது, அங்கிருந்து அவளுக்கு வந்த கடிதத்தை தான் திருடி வைத்திருப்பதாகவும், ஆனால் அது அவனிடம் இருந்து வந்தது என்று தெரியாது எனவும் மன்னிப்பு கேட்டபடியே அதை அவளிடம் ஒப்படைக்கிறான்.. கோபம் கொள்ளும் அவள் இதெல்லாம் எதற்காக செய்தாய்..? என்று கேட்கும் போது அவளிடம் இருந்து அதே பதில் வருகிறது… வெறுத்துப் போகிறாள்..


அன்றிரவு அவளது வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறாள்… அவளுக்கு டாமிக் ஒரு பரிசு கொடுக்கிறான்… அவள் “பரிசு பெறுவதற்கு நான் தகுதி அற்றவள்.. நான் மோசமான பெண்..” என்கிறாள்.. அதற்கு டாமிக் “அதனால் என் காதலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என்கிறான்.. இதுவும் ஒரு மிக முக்கியமான இடம்.. இந்த இயக்குநர் மோசேயின் பத்து கட்டளைகள் என்னும் பைபிளின் பிரசித்தி பெற்ற நாடகத்தை Decalogue என்ற பெயரில் குறும்படமாக எடுத்தவர்.. அதனால் தானோ என்னவோ இத்திரைப்படத்தில் இந்த இடத்தை கடக்கும் போது பைபிளின் பிரசித்தி பெற்ற அன்பு சார்ந்த மற்றொரு வாசகமும் என் நினைவுக்கு வந்தது.. அது அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; என்பதாய் தொடங்கி நீண்டு செல்லும்.. அந்த வசனத்தில் குறிப்பாக மூன்று விசயங்கள் நினைவுக்கு வந்தது. அன்பு தீங்கு நினையாது, அன்பு சகலத்தையும் சகிக்கும், அன்பு சகலத்தையும் தாங்கும்… என்பதே அது…

இந்தக் குறிப்பிட்ட காட்சியும் மேற்சொன்ன வசனமும் ஒரு சேர நினைவு கூறப்பட்ட போதுதான்… என் வாழ்நாளில் நான் யாரையுமே உண்மையாய் காதலித்ததோ அல்லது அன்பு செலுத்தியதோ இல்லவே இல்லை என்பதை உணர்ந்து துணுக்குற்றேன்… எனது அன்பென்பது சமன்பாடுகளுக்கான உள்ளீடுகளைக் கொடுப்பதைப் போல் தான்.. குறிப்பிட்ட உள்ளீடுகளைக் கொடுத்தால் அதன் விடையாக என்னிடமிருந்து உங்களுக்கு அன்பு கிடைக்கும்.. அந்த உள்ளீடுகளாவன.. எனக்குப் பிடித்தது போல் பேசுவது, எனக்குப் பிடித்ததை செய்வது, அதிலும் மிகக்குறிப்பாக காதலில் என்னை மட்டுமே பிடிக்க வேண்டும்.. என்று இறுமாப்பாயிருப்பது… இதுபோன்ற இன்னபிற உள்ளீடுகளும் இதில் அடக்கம்.. இந்த வரைகோட்டுத் தளத்தில் இயங்கும் வரை அவர்கள் என் அன்புக்கு பாத்திரமானவர்கள்.. அதை விட்டு நீங்கும் போது என் அன்பும் நீங்கிப் போய்விடுகிறது…

இதுபோன்ற காட்சி தருணங்களைக் கொண்ட தமிழ் திரைப்படங்களை நினைவு கூற முயன்றேன்… என் பால்யத்தில் மிகவும் ரசித்து நான் பார்த்த மன்மதனும், சில வருடங்களுக்கு முன் வந்து எல்லோராலும் எளிதாக மறக்கப்பட்ட தனம் என்னும் இரண்டு மோசமான திரைப்படங்களே என் நினைவுக்கு வந்தன.. முதலாமானது காதலுக்குள் துரோகம் என்னும் ஒரு கற்பிதத்தைப் புகுத்தி, அதன் எதிர்வினையாக அன்பு செலுத்தியவனையே தீங்கு இளைக்கும் ஒரு மனோபாவத்துக்கு தள்ளிய படம்… இரண்டாமானது ஒரு பாலியல் தொழிலாளியை கண்டு மயங்கி, அவளை வற்புறுத்தி திருமணம் செய்து, அவளது கடந்த காலத்திய அடையாளங்களை அழித்து, அவளை புதுவிதமான சட்டதிட்டங்களுக்குள் அடக்கி வைக்கப் பார்க்கும் ஒரு அபத்தமான கேலிச்சித்திரம்… இப்படித்தான் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் அன்புக்கும் காதலுக்கும் சில குழப்பமான கோட்பாடுகளை நம் மனதில் விதைத்து விட்டிருக்கின்றன… அதனால்தான் சொன்னேன்.. எம் மக்களுக்கு(எனக்கும்) உண்மையான காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்று….

ஆனால் இங்கு டாமிக் தான் விரும்பும் பெண் இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதைக் கண்டு வாந்தி எடுப்பதோ..? அல்லது இதையெல்லாம் விட்டு விடு, என வகுப்பெடுப்பதோ இல்லை.. நீ எப்படி இருக்கிறாயோ அப்படி இரு.. நான் உன்னை விரும்புகிறேன்… அவ்வளவே.. இதுமட்டுமே டாமெக் அவளிடம் சொல்ல விரும்பும் அதிகபட்ச வார்த்தைகள்… அதனால் தான் சொன்னேன்.. இத்திரைப்படம் உண்மையான காதல் என்ன என்று குழப்பமில்லாமல் கூறுகிறது என்று… ஆனால் படம் சொல்ல வரும் மையம் அதுவல்ல… கவிஞர் பிரமிள் அவர்களின் கவிதை வார்த்தைகளில் சொன்னால் மேற்சொன்னது.. சிறகிலிருந்து பிரிந்த ஒரு இறகு மட்டும்தான்… அப்படியென்றால் அதன் மையம்.. இன்னும் வாருங்கள்…

டாமெக்கை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அவள் சில விசயங்களை அவனுக்கு புரியவைக்க முயற்சி செய்கிறாள்… காமத்தின் ஆரம்பகட்ட விளையாட்டுகளை அவள் தொடங்க… அவன் பதட்டத்தில் உச்சம் அடைகிறான்… ”அவ்வளவுதான் காதல்…” என்று அவள் முடிவுரை வழங்க… தன் காதலை நிரூபிக்க முடியாமல் தான் தவறிளைத்த குற்றவுணர்ச்சியில் டாமெக் தன் வீட்டை நோக்கி ஓடுகிறான்… அவன் சென்ற பின்னர் தான் அவனை மிகவும் காயப்படுத்திவிட்டோமோ என்ற எண்ணம் மேலோங்க.. அவனை தொடர்புகொள்ள முயல்கிறாள்.. முடியவில்லை… அதற்குப் பின் வரும் சில கனமான காட்சிகளுக்குப் பின்னர், அவளது முடிவுரை இப்படியாக இருக்கிறது… YOR ARE RIGHT TOMEK, IT’S EXIST” அது என்னமாதிரியான காட்சிகள் என்பதை நீங்களே திரைப்படத்தில் கண்டுகொள்ளுங்கள்.. உங்களுக்கான சுவாரஸ்யத்தை நான் குறைக்க விரும்பவில்லை…

இதில் சில குறியீடுகள் அற்புதமாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக எனக்குப் படுகிறது… டாமெக்கின் வீடு காதலுக்கான குறியீடாகவும், அந்தப் பெண் இருக்கும் வீடு காமத்துக்கான குறியீடாகவும் இருக்கிறது… இந்த இரண்டிற்குமான இடைவெளியாக அந்த நடைபாதை இருக்கின்றது… டாமெக் தன் வீட்டில் இருந்து கொண்டே அவளது நடவடிக்கைகளை காணும் போதெல்லாம் அவன் அடைவது காதலின் எழுச்சி நிலையைத்தான்.. ஆனால் டாமெக் அந்த நடைபாதையை கடந்து அவளது வீட்டுக்குள் பிரவேசிக்கும் பொழுது காமத்தை முகருகிறான்.. அதுபோல் அவள் அந்த நடைபாதையை கடந்து டாமிக்கின் வீட்டுக்குள் நுழையும் போதுதான் காதலின் இருப்பை உணர்ந்து கொள்கிறாள்.. அதிலும் குறிப்பாக அந்த இறுதிகாட்சியில் அந்த டெலஸ்கோப் வழியாக அவள் தன் வீட்டைப் பார்க்கும் போதுதான்… டாமெக்கிடம் அவள் அடிக்கடி கேட்கும் கேள்வியான “என்னிடம் இருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய்…?” என்ற கேள்விக்கு பதிலும் கிடைக்கிறது… அற்புதமான காதலின் கணங்களை அவள் உணர்ந்து கொண்டு மெலிதாக புன்னகைக்கிறாள் என்பதாக படம் முடிவடைகிறது.. இப்படி காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளியாக அந்த நடைபாதை எப்போதும் இருக்கிறது.. காதல் காமம் இதில் எதை நாம் உணர வேண்டும் என்றாலும் அந்த இடைவெளியை நாம் கடந்து வந்தே ஆக வேண்டும் நண்பர்களே…


டாமெக் டெலஸ்கோப்பின் வழியாக அந்தப் பெண் அழுவதை பார்த்துவிட்டு, அவள் எதற்காக அழுகிறாள் என்கின்ற துயரமான சிந்தனையுடன் அதை அடக்க முடியாமல், தன் நண்பனின் தாயிடம் “ஏன் மனிதர்கள் அழுகிறார்கள்..?” என்று கேட்கின்ற இடம் கவித்துவமானது.. அதுபோல் தன் காதலை சொல்லிவிட்டு வரும் போது டாமெக்கிடம் இருக்கும் அந்த துள்ளலும், அதை ஒரு கதாபாத்திரம் கவனித்து விட்டு செல்வதும், பின்பு டாமெக் குற்றவுணர்வுடன் தளர்வான நடையில் அவளது வீட்டில் இருந்து திரும்பும் போது அதே கதாபாத்திரம் அவனைக் கவனிப்பதும் கூட ஏதோவொரு குறியீடு என்றே நினைக்கிறேன்… அந்த இரண்டு இடங்களிலும் அந்த இளைஞனின் நடிப்பும் கவர்ந்தது.. அதுபோல டாமெக் திரும்ப பார்ப்பதற்கு முன் இருக்கும் அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தப் பெண்ணின் பரிதவிப்பான நடிப்பும், தன்னை அவன் எத்தனை நாட்களாக ரசிக்கிறான் என்று குதூகலத்துடன் கேட்கும் அந்த குழந்தைதனமான நடிப்பும், அசத்தலானது.. ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும் மிகமிக அற்புதம்.. இசை பற்றிய நுண்ணறிவெல்லாம் எனக்கு கிடையாது.. ஆனாலும் கண்டிப்பாக இதை ஒரு உன்னதமான இசை என்று சொல்லுவேன்… ஓரிரு இசை வாத்தியங்களை மட்டுமே கொண்டு இப்படி ஒரு கனமான இசையை எப்படி சாத்தியமாக்கினர் என்று இன்னும் வியந்து கொண்டே இருக்கிறேன்.. உண்மையான காதலின் தருணங்களை பருக விரும்புபவர்கள் உண்மையாகவே தவறவிடக் கூடாத படம்… கண்டு களியுங்கள் நண்பர்களே..




No comments:

Post a Comment