Saturday, 25 January 2014

கோலி சோடா:

நம்மை அதிகமாக யோசிக்கவே விடாமல், திரையில் வரும் கதாபாத்திரத்துக்காக பார்வையாளனை அதீதமாக உருக வைத்து, உணர்ச்சிவசப்படுத்தி, கதையில் ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்க வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து, அதை எந்த ஏமாற்றமும் தராமல் நடத்தியும் காட்டி, பார்வையாளனை சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் கோலி சோடா வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.. இத்திரைப்படம் மிகப் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.. ஆனால் என்னை இத்திரைப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை.. அதற்கு மிகமுக்கிய காரணமாக இருப்பது, யதார்த்தமான ஒரு நான்கு சிறுவர்களின் வாழ்க்கையை, யதார்த்தத்தை மீறியதாக சுவாரஸ்யம் கலந்த ஒரு கற்பனை கதையாக படைத்து, அந்த கற்பனையிலேயே நம்மை லயிக்கச் செய்து, அந்தக் கற்பனையிலேயே நம்மை மனநிறைவும் அடையச் செய்து, யதார்த்தத்தின் வலிகளை உணரவேவிடாமல் நம்மை விரட்டியடித்து, புனைவு வகை கதைகளில் இத்திரைப்படம் தன்னையும் நிறுத்திக் கொண்டதுதான்….


கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் நான்கு சிறுவர்கள்.. பெற்றோர்கள் என்று அவர்களுக்கு யாரும் கிடையாது… உழைப்பதும் பிழைப்பதுமாக நகரும் அவர்களது வாழ்க்கை கேலியும் ஆர்ப்பாட்டமுமாக நகர்ந்து கொண்டிருக்க.. வாலிப வயோதிகத்தின் காரணமாக, அவர்களும் காதல் என்னும் சித்து விளையாட்டுக்களை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. அதன் விளைவால் தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் யோசிக்கத் தூண்டப்படுகிறார்கள்.. கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை நடத்திவரும் ஆச்சி, எப்போதும் இவர்களை அனுசரனையாக நடத்தக்கூடியவர்.. அவரே இப்போதும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்.. அவருக்கு இவர்கள் வயதையொத்த ஒரு மகளும் உண்டு.. ஆச்சியின் வேண்டுகோளால் கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பவனும், மார்க்கெட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் ஆன நாயுடு இவர்களுக்கு உதவ முன்வருகிறான்… அதன் மூலம் அந்த நான்கு சிறுவர்களுக்கும் ஒரு புதிய அடையாளம் கிடைக்கிறது.. ஆனால் அதன் ஆயுள் குறைவு… அவர்களின் அடையாளத்துக்கு வரும் ஆபத்து.. அவர்களின் உயிருக்கும் ஆபத்தாக மாறுகிறது… அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக்கதை..


படத்தின் ஆரம்பத்தில் இருந்து அந்த நான்கு சிறுவர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் அந்த அற்புதமான வாழ்வியலும், அவர்களோடு மாயாவியாக இணைந்து கொள்ளும் அண்ணாச்சி செய்யும் லூட்டிகளும் மனதுக்கு மிக நெருக்கமானவை.. அது போல் அந்த வான்மதி கதாபாத்திரத்தின் வார்ப்பும், அதற்கான தேர்வும் அது போன்ற பெண்களின் சாத்தியக்கூறுகளும் அவ்வளவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை… அதுபோல்தான் அந்த வான்மதி கதாபாத்திரம் பேசும் வசனங்களும்.. அதுபோல் கவனிக்க வேண்டிய மற்றொரு கதாபாத்திரம் ஆச்சியின் கதாபாத்திரம்.. மிகமிக இயல்பான கதாபாத்திரம்.. அந்த நான்கு சிறுவர்களையும் தனது பிள்ளைகளைப் போல் நினைத்து வழிநடத்தும் கதாபாத்திரம்.. இவைகளும் சமூகத்தை சீரழிப்பவையும், தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான காட்சியாக மாறி நிற்கும் குடி கூத்து போன்ற காட்சிகளை முற்றிலும் தவிர்த்து இருப்பதும்தான்… கோலிசோடாவின் மிக முக்கிய ப்ளஸ்.


இப்படி மேற்சொன்ன காட்சிகளின் வழியாக மிக இயல்பாக பயணித்துக் கொண்டிருந்த கதை.. இயல்பை மீறுகின்ற இடங்களின் ஆரம்பமாக சிறுவர்கள் ஆற்றுகின்ற எதிர்வினை செயல்களில் இருந்து சொல்லத் தொடங்கலாம்.. நான்கு சிறுவர்களுக்கும் நாயுடுவின் ஆட்களுக்கும் ஏற்படுகின்ற அந்த முரண்பாடுகள் கூட ஓரளவுக்கு இயல்புத் தன்மை வாய்ந்தவை தான்.. அதுபோல் திரைக்கதைக்கான சில சுவாரஸ்ய முடிச்சுகளும் நயமாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் தான் நம்பகத்தன்மையை முற்றிலுமாக கெடுத்து, இது ஒரு வாழ்க்கையை காட்சிப்படுத்தும் யதார்த்த சினிமா அல்ல… ஒரு மிகச் சாதாரணமான கேளிக்கை சினிமா என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.. அதனால் மிகப்பெரிய மோசம் ஒன்றும் இல்லை.. ஆனால் எனக்கு சினிமாவை ஒரு கேளிக்கையாக மட்டும் அணுகும் வழக்கமில்லை என்பதுதான் பிரச்சனை… அதற்காக கேளிக்கை சினிமாவே வேண்டாம், தேவையில்லை என்று சொல்லவில்லை.. ஆனால் அதில் கொஞ்சமேனும் நம்பகத்தன்மையும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்றே சொல்லுகிறேன்.. கோலி சோடாவில் கூட அந்த நான்கு சிறுவர்கள் இருக்கின்ற இடத்தில் ஒரே ஒரு மாஸ் ஹீரோவை நிறுத்திப் பார்த்தால் வழக்கமாக நாம் பார்த்த பல மசாலா படங்களுக்கும் கோலி சோடாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றும்… இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.. ஒரே ஒரு புதுமை.. அங்கு ஒரே ஒரு மாஸ் ஹீரோ… இங்கு நான்கு சிறுவர்கள் அவ்வளவுதான்… இதே சூழலியல் வாழ்க்கையை பேசிய படமான அங்காடித் தெருவில் ஒரு வாழ்க்கை, ஒரு வலி, ஒரு யதார்த்தம் என எல்லாமே இருந்தது.. ஆனால் அதே போன்ற சூழலைக் கொண்ட இந்த நான்கு சிறுவர்களின் வாழ்க்கையில் மிதமிஞ்சிய கற்பனை கனவுகள் மட்டுமே இருக்கிறது…



நடிப்பாகப் பார்த்தால் எந்த கதாபாத்திரத்திடம் குறை சொல்ல முடியாத நடிப்பு… இந்த விசயத்தில் விஜய் மில்டன் நன்றாகவே தேரியிருக்கிறார்.. பசங்க படத்தில் நடித்த அனுபவம் அந்த நான்கு சிறுவர்களுக்கும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. ஆச்சியாக நடித்திருக்கும் சுஜாதா சிவக்குமார், மாயாவியாக வரும் இமான் அண்ணாச்சி, மயிலாக வரும் விஜய் முருகன், வான்மதியாக நடித்திருக்கும் அந்தப் பெண் என எல்லோருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.. மேலும் இயக்குநர் பாண்டியராஜின் நறுக்கென தைக்கும் மிக இயல்பான வசனங்களும், விஜய் மில்டனின் வித்தியாசமான கோணங்களைக் கொண்ட கேமராவும் மிக தத்ரூபமாக இருக்கின்றது.. அதுபோல் கானா பாலாவின் ஈர்ப்பான குரலில் ஒலிக்கும் கானா பாடல்களும் கதைத்தன்மையை இன்னும் கொஞ்சம் இயல்பாக்குகின்றன..

ஆனாலும்…. குடி ஒரு போதை என்பது நமக்குத் தெரியும்… அது போல உணர்ச்சிவசப்படுவதும் கூட ஒரு போதை தான்… என்பதை நாம் புரிந்து கொள்வது மிகமிக கடினம்… ஏனென்றால் ஒரு கொலைகாரன் கொலை செய்வதும்.. உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையில் தான்… அந்த உணர்ச்சி வசப்பட்ட மனநிலை மனிதனை யோசிக்கவே விடாது… இதை நாம் அனுபவ பூர்வமாக உணர்வது.. அனுதாப அலையால் ஒரு கட்சியை ஜெயிக்க வைத்துவிட்டு.. அதற்குப்பின் அந்தக் கட்சி ஆட்சி நடத்தும் காலங்களில் தான்.. அதுபோலத்தான் கோலி சோடாவும்… திரையரங்கில் நான் பார்க்கும் போது… பல இடங்களில் அது என்னை உணர்ச்சிவசப்படுத்தி நான் இருக்கையில் குற்றவுணர்வோடு குதித்துக் கொண்டிருந்தேன்…. ஆனால் திரையரங்கில் இருந்து வெளிவந்து சில நிமிடங்களில் அந்த உணர்ச்சிகள் வடிந்து விட்டது… இப்போது யோசித்துப் பார்க்கும் போது எல்லாமே மடமைகளாகத் தெரிகிறது…


இருப்பினும் நீங்கள் திரைப்படம் பாருங்கள்… எதையுமே யோசிக்காமல் பாருங்கள்.. அதற்கு தேவை இருக்காது… திரைப்படம் உங்களை யோசிக்க விடாது… படம் பார்க்கும் போது உங்களுக்கு திரைப்படம் பிடிக்கலாம்.. வெளியில் வந்து நீங்கள் யோசிக்கத் தொடங்கும் போது உங்களுக்கு படம் பிடிக்காமலும் போகலாம்… அல்லது பிடித்தும் இருக்கலாம்… மொத்தத்தில் இயக்குநராக விஜய் மில்டனுக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்த திருப்தி இருக்கலாம்… ஆனால் என்னைப் பொருத்தவரை இது வணிக வெற்றியை ஓரளவுக்கு சாத்தியப்படுத்திய மற்றொரு சாதாரண வணிகப் படமாகத்தான் காட்சி தருகிறது…

1 comment:

  1. கண்டிப்பாக இது வணிக படம் தான் அதன் வெற்றி பெற்று கொண்டு இருக்கின்றதே நண்பா , யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் கலவை கோலி சோடா :)

    ReplyDelete