திரைப்படங்களை வெறும் கேளிக்கையாகவும் பொழுதுபோக்காகவும்
பார்க்கும் பார்வையாளர்கள் ஒரு ரகம். திரைப்படங்கள் மீது தீவிரமான காதல் கொண்ட மனநிலையில்
இயங்குபவர்கள் இன்னோரு ரகம். இதில் நான் இரண்டாவது ரகத்தில் இருப்பதாய் நம்பிக் கொண்டு
இருப்பவன்.. இந்த இரண்டாவது ரகத்திலும் இரண்டு வகைமைகள் உண்டு.. ஒன்று திரைப்படத்
துறையில் சாதிக்க வேண்டும் என்ற சுயம் சார்ந்த ஆசையால் சினிமாவின் மீது ஏற்பட்ட தீவிரமான
காதல் மனம் கொண்டவர்கள்.. இன்னொன்று தமிழ் சினிமாவின் தரம் உயர வேண்டுமே என்ற பொதுவெளி
சார்ந்த ஆசையால் சினிமாவின் மீது தீராத விமர்சன மனநிலையோடு இயங்குபவர்கள்.. இதில் எனக்கு
எந்த ஆசை என்று கேட்டால் இரண்டின் மீதும் என்றே சொல்லுவேன்…
”சினிமா பார்க்கப்படுவதோ கேட்கப்படுவதோ அல்ல..
அது உணரப்படுவது” என்ற வாக்கியங்களில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.. ”நான்
பெரும்பாலான திரைப்படங்களைப் பார்ப்பது எப்படி திரைப்படம் எடுப்பது என்று கற்றுக்கொள்வதற்காக
மட்டுமன்றி, எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக்கொள்வதற்குத்தான்…” என்று சொன்னால் அது
ஓரளவுக்கு உணர்ச்சி ததும்பிய மனநிலையில் பேசியதாகத் தோற்றம் தந்தாலும், நிச்சயமாக அதில்
உண்மை இருக்கிறது.. இது திரைப்படங்கள் தவிர்த்து இலக்கியங்களுக்கும் பொருந்தும்.. என்
போன்ற மனிதர்களுக்கு ஒரு இரண்டரை மணி நேர திரைப்படமோ, ஒரு இருபது மணி நேர நாவலோ, எதுவாக
இருந்தாலும் அது நாம் கேள்விப்படாத, கடந்துவராத, யோசித்துப் பார்க்காத, வாழ்ந்து பார்க்க
வாய்ப்பேயில்லாத ஒரு வாழ்க்கையை அந்த குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் வாழ்ந்து பார்ப்பதற்கான
ஒரு தளமாகவே காட்சியளிக்கிறது.. அது பெரும்பாலான நேரங்களில் விடை காண முடியாத ஆனால்
கண்டிப்பாக விடை காண வேண்டிய பல கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டே இருக்கிறது..
ஆனால் என்னளவில் ஒரு திரைப்படத்தை புரிந்து
கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று.. தற்போது வெளிவந்துள்ள ”மேதைகளின் குரல்கள்”
என்ற இயக்குநர்களின் நேர்காணல் தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இயக்குநர்
சத்தியஜித்ரேவின் வார்த்தைகளில் சொல்வதானால் “இயக்குநர் ஒருவருக்கு மட்டுமே அவரது படைப்பு
எப்படிப்பட்டது என்று தெரியும்..” இந்த வாக்கியத்தை நான் கடந்து வரும் போதுதான் ஒரு
படைப்பை புரிந்து கொள்வதற்கு முன் அந்த படைப்பாளனை ஓரளவுக்காவது புரிந்து கொள்வது சர்வ
அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.. அதன் மூலமாக அவரது படைப்புகளை தொடர்ச்சியாக அணுகும்
போது, அவரது படைப்புகளின் உள் சாராம்சங்களை அவரது மனநிலையில் இருந்து கொஞ்சமேனும் நம்மால்
உள்வாங்க முடியும் என்றும் நம்புகிறேன்.. மேலும் ஜெமோவின் இலக்கிய-விவாதிப்பு தொடர்பான
ஒரு கட்டுரையில், ”ஒரு இலக்கிய விவாதிப்பின் மூலம் அந்த இலக்கியம் மறைத்து வைத்திருக்கும்
ஒரு அரிய உண்மையை அந்த வாசகர்கள் ஒவ்வொரு பக்கமிருந்தும் திறக்கிறார்கள்..” என்று அவர்
கூறியிருப்பார்.. இது இலக்கியவெளி தவிர்த்து திரைவெளிக்கும் பொருந்தும்..
என் நோக்கமும் இப்போது அதுதான்… ஒரு குறிப்பிட்ட
திரைஆளுமையை எடுத்துக் கொண்டு, அவரது திரைப்படங்களை தொடர்ச்சியாக விவாத்தித்து, அந்த
விவாதங்களின் இறுதியில் அந்த திரையாளுமையின் வாழ்க்கையையும், அவரது நேர்காணலையும் வாசிப்பதன்
மூலம் நாம் அவரது படைப்பு சார்ந்த சாராம்சங்களை மிகச் சரியாக உள்வாங்கிக் கொள்ள முயற்சிப்பதே..
இங்கு நம் நோக்கம். முதலிலேயே அவரது வாழ்க்கை மற்றும் நேர்காணலை படித்துவிடுவது, நமக்கு
அவரது படைப்புகள் சார்ந்து ஒரு முன்முடிவை கொடுத்துவிடும் என்பதாலும், காட்சிகள் சார்ந்து
நாம் சிந்திப்பதை அது மட்டுப்படுத்திவிடும் என்பதாலும் அது போன்ற தரவுகளை இறுதியாக
தொகுக்கத் திட்டம்.. திரைப்படம் சார்ந்த பதிவுகளின் வாயிலாக என் கருத்துக்களையும்,
கருத்துரைகளின் மூலமாக நீங்கள் முரண்படும் இடங்களையும் கொடுத்து ஒரு விரிவான விவாதத்துக்கு
உங்களை வரவேற்கிறேன்.. இது தனிப்பட்ட முறையில் எனக்கும், வாசிக்கும் ஒரு சிலருக்கும்
உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் இதை முன்னெடுக்கிறேன்..
அதன் ஆரம்பமாக எவராலும் எந்தவகையிலும் புறக்கணிக்க
முடியாத தென்கொரிய இயக்குநரான கிம்-கி-டுக்கிலிருந்து இந்தக் கட்டுரை தொடங்க இருக்கிறது..
இது எந்த தர அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவல்ல… என் கைவசம் இருக்கும் அவரது படங்களின்
தொகுப்புகள் மட்டுமே யாரை முதலில் எழுதுவது என்பதை தீர்மானிக்கும் காரணியாக தொடருகிறது
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. அதன் தொடர்ச்சியாக கீழ்காணும் இயக்குநர்களின்
திரைப்படங்கள் பதிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.. அதில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது…
மாற்றம் இருப்பின் தெரிவிக்கப்படும்.. இந்தப் பட்டியல் நிறைவடைந்தவுடன் அடுத்தப் பட்டியல்
கொடுக்கப்படும்.. தற்போது எடுத்துக் கொண்ட இயக்குநர்களின் பட்டியல் முறையே…
- கிம் கி டுக்
- குவாண்டின் டொரொண்டினோ
- ரிட்லி ஸ்காட்
- கோயன் பிரதர்ஸ்
- க்ளைண்ட் ஈஸ்ட்வுட்
- கய் ரிச்சி
- வூடி ஆலன்
-------
-------
இவை சார்ந்த பதிவுகள் தொடர்ச்சியாக வெளிவரும்
அதேபட்சத்தில், சில தவிர்க்கமுடியாத தமிழ் திரைப்படம் சார்ந்த பதிவுகளும், சில தவிர்க்க
முடியாத சூழலில் மிக முக்கியமான உலக திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளும் தொடர்ச்சியாக
வரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்..
good idea. looking forward
ReplyDelete