மதுரை மாவட்டத்தின் கலாச்சார பிண்ணனியில்
எத்தனையோ படங்கள் வந்துகொண்டிருக்கின்றன… தேனி நகரத்தின் கலாச்சார பிண்ணனியோடு வந்திருக்கும்
சமீபத்திய வரவுதான் இந்த மதயானைக் கூட்டம்.. இதுபோன்ற துல்லியமானதொரு மதுரை மாவட்டத்துப்
பேச்சு வழக்கை எந்தப் படமுமே இதுவரை பதிவு செய்ததில்லை.. அதுபோல அவர்களது வாழ்க்கை
முறைமைகளில் கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளில் இருக்கும் செய்முறைகளையும், பழக்க
வழக்கங்களையும் அவர்களது அசாதாரணமான வாழ்வியலோடு மிக அற்புதமாக ஆவணப்படுத்துகிறது இந்த
மதயானைக் கூட்டம்..
ஆனாலும் கூட..…… இந்தப் படம் எனக்குள் ஒரு
மிக மெல்லிய சலனத்தைக் கூட ஏற்படுத்தாமல், மனதில் கொஞ்சம் கூட நிலை கொள்ளாமல் அகன்று
போனது எனக்கே கூட ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. நேற்றைக்கு முன்தினமே
இப்படத்தைப் பார்த்துவிட்டேன்.. இருப்பினும் ஏன் இத்திரைப்படம் நம்மை திருப்திபடுத்தவில்லை
என்ற கேள்வியிலேயே என் மனம் நிலைகொண்டு இருந்ததால், பதிவு எழுதுவதில் கூட மனம் லயிக்கவில்லை..
அதற்கான காரணத்தையே நான் அலசிக் கொண்டிருந்த போது, காரணமாக எனக்குப்பட்டது இதுதான்..
“பெரும்பாலான இயக்குநர்கள் மிகச்சிறப்பான கதைகளத்தோடு வந்தாலும் கூட.. அந்தக் கதைக்களத்துக்கான
எதார்த்த சூழலியலை கேமராவின் கோணங்களுக்குள் கொண்டு வருவதிலும், அந்த மக்களின் நடை
உடை பாவனைகளுடன் கூடிய பழக்க வழக்கங்களை சிறப்பாக பதிவு செய்வதிலும், கலாச்சார அடையாளங்களை
கலையோடு சேர்ப்பதிலும் தான் பெரும்பாலும் தோற்றிருப்பார்கள்.. ஆனால் அதிலெல்லாம் கர்ம
சிரத்தையோடு பணியாற்றி வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தோற்றிருக்கும்
இடம் கதை மற்றும் அதைச் சொல்லும் விதமான திரைக்கதை… இந்த இரண்டிலும்தான்…
என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையோ…? நாவலோ..?
அல்லது திரைப்படமோ..? இப்படி எந்த கலைவடிவமாக இருந்தாலும் ஒரு பார்வையாளனை வெறும் பார்வையாளனாக
மட்டும் வெளியே நிறுத்தாமல், கதையில் பங்கேற்பவனாக ஏதோ ஒரு ரூபத்தில் அவனை உள்ளிழுத்துக்
கொள்ளும் போதுதான், அதன் பரிணாமத்தில் அது முழுமையடைவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பார்வையாளனையும்
மிக ஆக்ரோஷமாக ஆக்ரமித்துக் கொண்டு.. அந்தக் குறிப்பிட்ட கலைக்காக கட்டமைக்கப்பட்ட
கால வேளை தாண்டியும்.. சில மணித்துளிகளோ அல்லது சில நாழிகைகளோ அல்லது சில நாட்களோ..
அந்தக் கதையின் மையத்தோடு அவனை உரையாடச் செய்து, அவனுக்கு ஒரு தெளிவையும் ஏற்படுத்தி
அவனை முழு மனிதனாக்கி, அவனை விட்டு அகலும் போது தான், அந்தக் கலைவடிவம் முழுவீச்சில்
வெற்றியடைகிறது என்று சொல்லுவேன்.. ஆனால் இந்த மதயானைக் கூட்டம் பார்வையாளனை ஒரு பங்கேற்பாளனாக
கதையில் நுழைவதற்கு அனுமதியை மறுப்பதோடு, கடைசிவரை அவனை ஒரு வெற்றுப் பார்வையாளனாக
வெளியிலேயே நிறுத்திவிடுகிறது… அதுதவிர்த்து, படத்தின் மையம் என்பது எது என்பதிலும்
பார்வையாளனுக்கு கடைசிவரை ஒரு ஊசலாடும் மனநிலை இருப்பதும் படத்தின் ஆகப்பெரிய குறை
என்று சொல்லுவேன்…
படத்தின் மையம் என்று பெரும்பாலானவர்களால்
சொல்லப்படுவது, ”கள்ளர்களின் கெளரவம்” தான்.. ஆனால் இந்த கெளரவம் என்பது நம் கண்களுக்கு
காட்சி தருவதோ..? முப்பது நிமிட காட்சிகளின் நகர்வுக்கு பிறகு ஒருவரின் ஆண்குறி அறுக்கப்படும்
போதுதான்… மீண்டும் சில நிமிடக் காட்சிகளில் மையம் மாறுகிறது… இரண்டு பெண்களை மனைவியாக்கியதால்
கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஒரு முக்கியப் பிரமுகருக்கு ஏற்படும் பிரச்சனை என்று அது
நிலை கொள்கிறது.. அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மையம் மாறுகிறது… அது அந்த முக்கிய
பிரமுகரின் மரணத்தால் அந்தக் குடும்பத்துக் ஏற்பட்ட பாதிப்பு என மையம் கொள்கிறது… மீண்டும்
சில நிமிடங்கள் கழித்து அந்தப் பிரமுகரின் மரணச் சடங்கின் இறுதியில் நிகழும் ஒரு மரணத்தால்
கொலைப் பழி இரண்டாம் தாரத்து மகன் கதிர் மீது விழ… அவனை ஒரு கும்பல் கொலை வெறியோடு
துரத்தத் தொடங்குவதில் கதை மையம் கொள்கிறது.. அதற்கடுத்த ஒரு இருபது நிமிடங்களில் அண்ணன்
தங்கை பாசத்திற்கு இடையே மையம் கொண்டு அல்லல்படுகிறது கதை.. இதில் எதை குறிப்பாக மையம்
என்று சொல்வது… மையம் கள்ளர்களின் கெளரவம்தான்.. அந்த கெளரவத்தால் தானே இரண்டு பெண்களை
கட்டிக் கொள்ளும் போது பிரச்சனை தலைதூக்குகிறது என்று நீங்கள் சொல்ல முயன்றால்… இரண்டு
பொண்டாட்டியால் வருகின்ற கெளரவ பிரச்சனை என்பது நம் சமூகத்தில் எல்லா சாதிகளுமே குத்தகைக்கு
எடுத்த பிரச்சனை என்று நான் சொல்லத் துணிவேன்.. இப்படி மையம் இன்றி அலைவதுதான் மதயானைக்
கூட்டத்தின் மிகப்பெரிய முதல்குறை… (இதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால்,
பருத்திவீரனில் குறத்தியை தாயாகவும் கள்ளனை தந்தையாகவும் கொண்ட ரவுடி இளைஞனை ஒரு பெண்
காதலிக்கிறாள்… அவளுடைய அப்பா சாதிய வெறியில் ஊறியவர்.. இவர்களது காதல் என்னானது…?
இதான் மையம்.. பின்வரும் காட்சிகள் எல்லாமே அந்த காதலையோ அல்லது அந்த சாதியவெறியையோ
அல்லது நாயகனது ஊதாரித்தனத்தையோ கட்டமைப்பது போலவே அமைக்கப்பட்டு இருக்கும்..)
இரண்டாவது பிரச்சனை… மேற்சொன்ன மையக்கதையில்
ஒன்றான அண்ணன் தங்கை பாசத்தை ஒரு கிழக்குச் சீமையிலே போல் சொல்லி இருக்கலாம்… சாதிய
கெளரவத்தை ஒரு பருத்தி வீரன் போல் சொல்லி இருக்கலாம்… இரண்டு பொண்டாட்டிகளால் ஏற்படும்
பிரச்சனையை ஒரு சின்னவீடு போல் சொல்லி இருக்கலாம்… இப்படி ஒவ்வொரு கதை மையமும் அற்புதமான
கதைக்களன் தான்… ஆனால் அதில் ஒன்றைக்கூட ஆழமாகவும் சொல்லாமல் அகலமாகவும் சொல்லாமல்
ஆங்காங்கே சொல்லிச் செல்வது தான் இதன் இரண்டாவது குறை…
மூன்றாவது பிரச்சனை… கதையில் ஒரு மையக் கதாபாத்திரம்
என்று ஒன்று இல்லாதது… அல்லது அப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தும் அதை முன்னிலைப் படுத்தாததும்
ஒரு குறை.. என்னைப் பொறுத்தவரை… திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் கதை
நாயகனான கதிரை மையமாகக் கொண்டுதான் நகருகிறது.. ஆனால் அந்த கதாபாத்திரம் படத்தில் பாதிவரைக்கும்
பத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வந்து செல்கிறது… பெரும்பாலான கதைகளில் பார்வையாளன் அந்த
Protogonist என்று சொல்லப்படும் மைய கதாபாத்திரத்தைப் பின்பற்றியே கதையைப் பின்தொடர்வான்…
இங்கு பல இடங்களில் பார்வையாளனின் பின்தொடர்தல் தடைபடுகிறது… (இங்கும் உதாரணமாக பருத்திவீரனையே
எடுக்கிறேன்… அதிலும் பல கதாபாத்திரங்கள் அதற்குரிய தனித்தன்மையோடு வலம் வந்தாலும்..
கதையின் மையம் பருத்திவீரன் என்னும் மைய கதாபாத்திரம் மீதே நிலைகொண்டு இருக்கும்..
பார்வையாளனும் கதைநகர்வை அநாயசமாக பின்பற்றிக் கொண்டே வருவான்…)
நான்காவதாக… என்னைப் பொறுத்தவரை இந்தக் கதை
நாயகன் கதிரின் பார்வையில் ஆடியன்ஸ்க்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் நாடோடிக்
கலைஞர்களின் ஆடல் பாடல் வழியே கதை சொல்லப்பட்டதால் அதுவும் கூட பார்வையாளனுக்கு ஒரு
செவிவழி தடங்கலை ஏற்படுத்தி, படத்தோடு ஒன்றச்செய்யாமல் செய்துவிட்டதோ என்றும் ஐயுறத்
தோன்றுகிறது.. அப்படியில்லாமல் கதிரின் பார்வையில் கதை சொல்லப்பட்டு இருந்தால், அது
குறைந்தப்பட்ச உணர்வுரீதியிலான மீட்டல்களையாவது பார்வையாளனுக்குக் கொடுத்திருக்கும்
என்பது என் அனுமானம்..
ஐந்தாவதாக கதையில் ஏற்கனவே நாம் பல்வேறு
திரைப்படங்களிலும், கதைகளிலும், பத்திரிக்கை செய்திகளிலும் கேள்விப்பட்ட பங்காளிச்
சண்டையை ஒத்த சில சம்பவங்களைத் தவிர்த்து புதுமையான சம்பவங்களோ.. எதிர்பாராத முரண்களோ..
காட்சிகளுக்கான வீரியங்களோ இல்லாமல் சென்றதும் ஒரு முக்கியமான குறை.. அதுபோல படத்தின்
ஒரு முக்கியமான பலமாகக் கருதப்படும் வசனங்கள் அதன் இயல்புநடையில் பல இடங்களில் மிக
வேகமாக கடக்கின்றன… அது வெறும் வார்த்தை வசனங்களாக மட்டுமே இல்லாமல் முன்கதையை சொல்வதிலும்
பங்கெடுக்கின்றது.. ஆனால் இதை இந்த வட்டார மொழி பரிச்சயம் இல்லாத பெரும்பாலான ஆடியன்ஸ்
தவறவிடக்கூடும் என்பதும், ஆரம்பத்தில் கதை மிகமிக மெதுவாக நகர்வதும், இத்தகைய படங்கள்
அந்த குறிப்பிட்ட சாதிய மக்களிடம் வேறுவிதமான எதிர்வினைகளை வருங்காலத்திலும் ஏற்படுத்துவதற்கான
வாய்ப்புகள் இருப்பதாக உணர்வதும் கூட ஒரு குறையே.. இவை எல்லாம் சேர்த்து தான்.. திரைப்படத்தை
என் மனதில் தங்கவிடாமல் அகலச் செய்துவிட்டது என்று தோன்றுகிறது…
ஆனால் இத்தனை குறைகள் இருப்பினும் படத்தின்
செய்நேர்த்தியும்.. அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், வேல ராமமூர்த்தி, விஜி,
பூலோகராசாவாக வரும் மூத்த தாரத்து மகன் ஆகியோரின் மிக அற்புதமான நடிப்பு இவைகளால் தான்
திரைப்படம் கொஞ்சமேனும் நம்மைக் கவருகிறது… அதுபோல் சில இடங்களில் படக் காட்சிகள் கொடுக்கத்
தவறிய உணர்வை படத்தின் பிண்ணனி இசை கொடுத்ததையும் குறிப்பிட விரும்புகிறேன்.. பாடல்களும்
ரகுநந்தனின் இசையில் சிறப்பாகவே இருந்தது… தயாரிப்பாளராக ஜி.வி பிரகாஷ்குமாருக்கு இது
நல்லதொரு முயற்சி… அவரது இந்த நல்ல முயற்சி தொடரட்டும்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
ஆடுகளம் திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் அஸோசியேட்டாக பணியாற்றியவர் என்று
அறிகிறேன்.. ஆடுகளத்திலும் கூட மதுரை பின்புல காட்சிகளில் அவரது பங்களிப்பு இருந்ததாகவும்
கூறுகிறார்கள்.. அவருக்கு இது முதல்படம்… இயக்குநராக விக்ரம் சுகுமாரன் கதை மற்றும்
திரைக்கதையில் சற்று சறுக்கி இருந்தாலும்.. மற்ற துறைகளில் தன் ஆதர்ச பலத்தை நிருபித்திருப்பதால்…
இவரிடம் பிற்காலத்தில் இதைவிட சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்…
ஆக.. மொத்தத்தில் மதயானைக் கூட்டம் கண்டிப்பாக
ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புவோருக்கான படம் அல்ல… அதுபோல் வித்தியாசமான கதைக்களமோ
திரைக்கதையோ கொண்ட திரைப்படமும் அல்ல… ஆனால் கண்டிப்பாக மேக்கிங்க் என்று சொல்லப்படும்
மாய்ஜால வார்த்தையின் அர்த்தத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவருக்கும்.. மதுரை வட்டாரத்து
மக்களின் வாழ்க்கையை சற்று ஆழமாக ஆராய விரும்பும் ஒரு சிலருக்கும் கண்டிப்பாக தவறவிடக்
கூடாத படம் என்று சொல்லலாம்…
ஆழமான விமர்சனம் பாஸ்....நான் இன்னைக்கு தான் பார்க்க போறேன்...நெட்ல தான் பார்க்கணும்...
ReplyDeleteஉங்க "பிரியாணி:" பதிவுல Malware இருக்குன்னு கூகிள் சொல்லுது...கொஞ்சம் பாருங்க...
நன்றி நண்பா... கண்டிப்பாக படம் பாருங்கள்... உங்களுடைய கண்ணோட்டத்தில் படம் எப்படி இருந்தது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.. சில பதிவுகளில் Malware பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.. சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteதெளிவான பார்வை/அலசல்.... நல்லா எழுதுற இன்பா. தொடரட்டும்.
ReplyDeleteநன்றி நண்பா...
DeleteVery Nice Inba.. Keep writing
ReplyDelete