இயக்குநர்
தீபன் சக்கரவர்த்தியின் குறும்படமான அமுதா எனக்கு பிடித்திருந்தது.. அவரது முதல்படம்
என்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளரிடம் இருந்து
வரும் அடுத்தப் படம் என்பதாலும், மிகப்பெரிய வெற்றி பெற்ற பீட்ஸாவின் இரண்டாம் பாகம்
என்னும் கேப்சனும் வில்லா படத்தின் மீதான எதிர்பார்ப்பை
அதிகப்படுத்தி இருந்தது. ஆனால் ஏனோ ட்ரெய்லர் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை.. மேலும்
படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த கால இடைவெளியில் படத்தைப்
பற்றிய விமர்சனங்கள் வந்து, படம் பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தை வடியச் செய்துவிட்டது…
இருப்பினும் ஒரு சில ஊடக விமர்சனங்கள் ஒரு நல்ல முயற்சி என்று படத்தை பாராட்டியதைக்
கருத்தில் கொண்டு, அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபத்தில் தான் திரைப்படத்தைப்
பார்த்தேன்… மிகச் சிறப்பான படம் என்று பாராட்டும் அளவுக்கு இல்லாவிட்டாலும்… அவரது
குறும்படத்தைப் போலவே இதுவும் எனக்குப் பிடித்திருந்தது…
சொந்த
தொழில் செய்வதில் விருப்பமும், திறமையும் இல்லாத நாயகன், தந்தையின் வற்புறுத்தலால்
அந்த தொழிலைச் செய்து அதில் தோல்வி அடைந்து, பெருத்த நஷ்டமும் ஏற்படுத்துகிறான். தன்
திறமை எழுத்து துறையில் என்பதை உணர்ந்தவனாய் எழுத்தாளனாய் ஆக முயல்கிறான்.. அது அவனது
தந்தைக்கு பிடிக்காமல் போக.. இருவருக்குமான பேச்சுவார்த்தை குறைந்து அவர் மனமொடிந்து
நோய்வாய்பட்டு இறக்கிறார்… தந்தையின் மறைவுக்குப் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்
அவனுக்கு அப்போதுதான் தன் தந்தை தன்னுடைய பெயரில் பாண்டிச்சேரியில் ஒரு வீடு வைத்திருந்தது
தெரிய வருகிறது… அதைக்கூட ஏன் தந்தை தன்னிடம் தெரிவிக்கவில்லை… அப்படி என்ன நான் தவறு
செய்துவிட்டேன்… என்று கோபிக்கும் அவனை.. அவனது காதலி சமாதானம் செய்கிறாள்.. அந்த வீட்டை
விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தன் முதல் நாவலை வெளியிட தயாராகும்
நாயகனை வீட்டை விற்காதே.. என்று அவனது காதலி தடுக்கிறாள்… வேறொரு பதிப்பகத்தினர் அவனது
புத்தகங்களை பிரசுரம் செய்ய முன்வருவதோடு 5 இலட்சம் பணமும் முன்பணமாக கொடுக்க முன்வருகின்றனர்..
அதே நேரத்தில் அவர்களது காதலுக்கும் காதலியின் வீட்டில் அனுமதி கிடைக்கிறது.. இதனைக்
காரணமாகச் சொல்லி வீடு மிகவும் ராசியானது.. அதை விற்காதே என்று காதலி பிடிவாதம் பிடிக்க…
அவனும் வீட்டை விற்கும் தன் எண்ணத்தை தள்ளிப் போடுகிறான்… இந்நிலையில் அந்த வீட்டில்
இருக்கும் ஒரு ஓவியத்தின் துணையோடு நாயகன், அந்த வீட்டில் தன் பார்வையில் இருந்து மறைத்து
வைக்கப்பட்டு இருக்கும் ஒரு அறையை கண்டடைகிறான்.. அந்த அறை அவனது தந்தை ஏன் அவன் ஒரு
எழுத்தாளன் ஆவதை விரும்பவில்லை… என்பதில் தொடங்கி, அவனது தாய் மற்றும் தந்தையின் மரணம்
என ஏகப்பட்ட மர்ம முடிச்சுகளுக்கும் விடையை கொண்டு இருக்கிறது… மேலும் அந்த வீட்டிலேயே
அவன் இருப்பது அவனது உயிருக்கும் ஆபத்து என்றும் தெரியவர… அவன் அந்த வீட்டை விட்டு
வெளியேற முற்பட… பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை…
இப்படி
ஒரு நாவலுக்கே உண்டான விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த கதை திரைப்படத்தில் இருக்கின்றது…
இதன் அடுத்த கட்டமாக வரும் காட்சிகளில் அந்த கட்டிடத் தொழிலாளியை அந்த வீட்டை முன்னால்
வைத்திருந்த ஜமீனின் மகனாகக் காட்டுவதும், அவர்களது சகோதர சண்டைக்குமான காரணத்தையும்
மைய திரைக்கதை ஓட்டத்தில் இணைத்ததும், சில ஓவியங்களைப் பற்றி தன் காதலியிடம் சொல்லாமல்
மறைப்பதும், அந்த ஓவியம் ஏன் அப்படி வரையப்பட்டிருந்தது.. என்பதற்கான தர்க்கரீதியிலான
நியாயமும், அதற்கு ஏற்றார் போல் நாயகியின் கதாபாத்திரத்தில் ஏற்படும் மாற்றமும்.. என
கடினமான உழைப்பு நிறைந்த திரைக்கதைதான்.. ஆனால் நாயகன் தொழிலில் தோற்றதும், அவன் எழுத்தாளன்
ஆவதை அவன் தந்தை வெறுத்ததும், புத்தகத்தை பிரசுரிக்க முடியாமல் தவிப்பதும், அதனால்
மனமொடிந்து நோய்வாய்படும் தகப்பனின் மரணமும் வெறும் வசனங்களாலும், ஒரிரு காட்சிகளிலுமே
கடந்து போகிறது… குறும்படங்களில் கடந்து போவதைப் போல் இவையும் சில நிமிடங்களில் கடந்து
போகிறது.. திரைப்படத்தில் ஒரு காட்சியை நிறுவுவதற்கான கால இடைவெளியை இவை கொண்டிராதது
ஒரு முக்கியமான குறை..
மேலும்
படம் பார்க்க வரும் பார்வையாளரும் பேய் படம் என்பதையே மனதில் கொண்டு படத்தைப் பார்க்க
வருவதால், த்ரில் தொடர்பான காட்சிகளையும் அந்த பேய் வீட்டையுமே பார்க்க விரும்புவார்கள்..
அது போன்ற மனநிலையில் வருபவர்களுக்கு நாம் என்னதான் கதை சொன்னாலும் அது பிடிக்காமல்
போய்விடும் என்பதால் வேகமாக ஆடியன்ஸ்க்கு த்ரில்
தொடர்பான காட்சியை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவசர அவசரமாக அந்தக் காட்சிகளை கடந்து
வந்தார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது…
மேலும்
வில்லா திரைப்படம் பேய் என்கின்ற மாயையை கண்ணில்
நேரடியாகக் காட்டாமல், அதன் அடுத்தகட்ட படிம நிலையான ப்ளாக் மேஜிக் என்று சொல்லப்படும்
நல்லவிதமான சிந்தனைகள், கெட்ட விதமான சிந்தனைகள் அதன் மூலம் மனித மனங்களுக்குள் ஏற்படுகின்ற
மாற்றங்கள் என்பதைப் பற்றி பேசுவதால் அதுவும் நம் வெகுஜன மக்களை திருப்திபடுத்தாது..
இருப்பினும்
படம் கொஞ்சம் கூடப் பேசப்படாமல் போனதற்கானக் காரணம் படத்தின் மீது இருந்த அளவுக்கு
அதிகமான எதிர்பார்ப்போ என்று நினைக்கத் தோன்றுகிறது.. பீட்ஸாவுக்கு இந்த திரைப்படத்துக்கும்
எந்தவிதமான தொடர்பும் இல்லாவிட்டாலும் பீட்ஸாவின் இரண்டாம் பாகம் என்று கேப்ஸன் போட்டுக்
கொண்டதால், அதே அளவு த்ரில்லர் ஃபீல் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்
அளிக்கும் படமாகப் போயிருக்கும்.. அதுவும் இல்லாமல் ப்ரேமுக்கு ப்ரேம் இரவுக் காட்சி
வரும் போதெல்லாம், இப்போது பேய் வந்துவிடுமா.. வந்து விடுமா என்று எண்ணி கடைசியில்
ஏமாந்தது இவையெல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை தோல்விப்படமாக ஆக்கி இருக்கக்கூடும்…
ஆனால்
இது கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பதற்கு தகுதி உடைய, தரமான படம் தான் என்பதும், தவறான
அணுகல் முறையால் படம் தோற்றிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை… இருப்பினும்
இந்த தோல்வியால் துவண்டு விடாமல், இயக்குநர் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கான
தகுதியை உடையவர் என்பதால்… அவரை வாழ்த்தி வரவேற்போம்….
No comments:
Post a Comment