Sunday, 22 December 2013

என்றென்றும் புன்னகை:



தலைப்புக்கு ஏற்றார் போல் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்.. அதனால் தானோ என்னவோ அவர்கள் கதை என்னும் வஸ்துவுக்காக கஷ்டப்படவே இல்லை.. கெளதம்(ஜீவா), ஸ்ரீ(வினய்) மற்றும் பேபி(சந்தானம்) என மூன்று நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே காதல், கல்யாணம் என்றாலே பிடிக்காது, ஆனால் வினய்க்கு பெண்களைப் பிடிக்கும்.. படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் மூவருமே தங்களது பிற நண்பர்கள் மத்தியில் தாங்கள் கல்யாணமே செய்யாமல் கடைசி வரை நல்ல நண்பர்களாக சேர்ந்து இருக்கப் போவதாக சத்தியம் செய்கின்றனர்.. அப்போதே கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரிந்து விடுகிறது..



இப்படிப்பட்ட எந்தவித புதுமையும் இல்லாத கதையும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.. இந்தப் படத்திலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹீரோ சந்தானம் தான்.. கடந்த நாலைந்து படங்களில் சறுக்கிய சந்தானம்.. இதில் சற்றே நிமிர்ந்து இருக்கிறார்... பத்து நிமிடங்களில் முழுக்கதையும் தெரிந்துவிடுகின்ற சூழலில் காட்சிகளை கொஞ்சமேனும் கலகலப்பாக நகர்த்துவதற்கு உதவி இருப்பது சந்தானத்தின் காமெடியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை… இத்திரைப்படத்தின் கதை சார்ந்தும், அதில் இருந்த குழப்பங்கள் சார்ந்து பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன… அந்த எண்ணங்களின் தொகுப்பையே கீழே கொடுக்கிறேன்…. இது படம் பார்க்கும் போது என்னுடைய பார்வையில் எனக்கு ஏற்பட்ட கேள்விகள் மட்டுமே…? அதே நேரத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த முகம் பேர் தெரியாத இளவயது ரசிகர் ஒருவர் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தார்.. என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்…. இனி என்னுடைய பார்வையில் படத்தின் கதையில் இருந்த குழப்பம் பற்றிய குறிப்புகள்…



ஒரு ஆணுக்கு பெண் என்றாலே பிடிக்காது… ஏன்..? இதற்கு உளவியல் ரீதியாக எத்தனையோ விதமான சுவாரஸ்யமான பதில்களை நம்மால் யூகித்து, கற்பனை செய்து காட்சிப்படுத்த முடியும்.. ஆனால் இந்த இடத்தில் இயக்குநரின் கற்பனையென்பது ஆணாதிக்க மனோபாவத்தில் திளைத்தோங்கும் நம் தமிழ்சமூகத்தின் மங்கலான மட்டுப்பட்ட பார்வையாகத்தான் இருக்கிறது… காலங்காலமாக கட்டப்பட்டு வரும் கருத்துப் பேழையில் இருந்து ஒரு அழுகிப் போன அற்பமான கருத்தை உருவி… உலவவிடுகிறார்… அவனுடைய தாய் ஒழுக்கங்கெட்டவள்.. ஓடிப்போனவள்… அதனால் அவனது தந்தை மனமொடிந்து தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுது, பெண்கள் மீது பிரத்யேகமாகக் கட்டப்பட்டு இருக்கும் ஒழுக்கமற்றவர்கள்.. நம்பிக்கை துரோகிகள் என்கின்ற ஒரு பிம்பத்தை அவனது மகனுக்குள்ளும் விதைத்துவிடுகிறார்… அதையே மகனான ஜீவாவும் கடைபிடித்து வாழத் தொடங்குகிறான்..

ஒரு பெண் தன் குடும்ப வாழ்க்கையை விடுத்து வேறொருவனுடன் ஓடத் தயாராகின்றாள், என்றால் அந்த தயார் நிலையை பெரும்பாலும் மிகச் சாதாரணமான காட்சிகளை அடுக்கி நம் தமிழ் சினிமா கடந்துவர முயற்சிக்கிறது.. ஆனால் யதார்த்த வாழ்வியலில் அது அவ்வளவு எளிதானதல்ல….. அதற்கு அவள் ஏகப்பட்ட மனப் போராட்டங்களை கடந்து வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவளது அந்த இக்கட்டான காலக்கட்டங்களை கண்டுகொள்ளாமல் நாம் வெகு சுலபமாக “ஒழுக்கங்கெட்டவள்” என்ற வார்த்தை வடிவத்தில் அதை கடந்துவந்து விடுகிறோம்.. அவள் ஏன் ஓடிப் போனாள்…? என்ற கேள்வியை எந்த கதாபாத்திரமும் கேட்காது..? பார்வையாளனும் அதைக் கேட்க விரும்புவது இல்லை.. இப்படி ஒழுக்கத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து இருக்கும் நாயக கதாபாத்திரம் கூட தன்னுடனே சுற்றிக் கொண்டு திரியும், நண்பன் வினயின் ஒழுக்கத்தைக் கண்டு கொள்வதே இல்லை.. ஏனென்றால் அவன் தான் ஆண் ஆயிற்றே..? போகின்ற வருகின்ற இடத்தில் எல்லாம் அவன் எல்லா பெண்களுக்கும் ப்ராக்கெட் போடுகிறான்.. கல்யாணம் ஆனப் பின்பும் அவன் மொட்டைமாடியில் நின்று கொண்டு கடந்து செல்லும் பெண்களுக்கு பறக்கும் முத்தத்தைப் பரிசளிக்கிறான்… இதைக் கண்டு கொள்ளாமல் அவனது இரண்டு நண்பர்களும் அதை நகைப்புக்குரியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்கின்றனர்… நண்பர்கள் மாத்திரம் அல்ல… பார்வையாளனும் அதைக் கண்டு நகைக்கத்தான் செய்கிறான்…. இதையே தானே அவனது அம்மாவும் செய்திருப்பாள்… அது எப்படி  ஒரே செயல் ஆண் செய்யும் போது நகைப்புக்குரியதாகவும், பெண் செய்யும் போது விரசமாகவும் மாறி விவாதத்துக்குள்ளானதாக மாறியது என்பதையெல்லாம் நாம் விவாதிக்கவே கூடாது போலும்….

சரி… போகட்டும்… ஜீவாவின் அப்பாவாக வரும் நாசர், தன் மனைவி பிரிந்தவுடன், அவர்களது மொழியில் சொன்னால் ஓடிப் போனவுடன், பெண்களைப் பற்றி பிதற்றி, அரற்றி ஒரு பிம்பத்தை தன் மகனின் மனதில் ஏற்படுத்த, மகனும் அப்பா சொன்னதை அப்படியே வேதவாக்காக நம்புகிறான்.. ஓரிரு மாதங்களில் பெண்களைப் பற்றி அவ்வளவு அவதூறு பேசிய அப்பாவே.. எப்படி மீண்டும் ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தார்.. அப்படியென்றால் இவர் முதலில் சொன்னது உண்மையா..? இப்போது சொல்வது உண்மையா…? என்று அந்த சிறுவயதில் கூட எந்த குழப்பச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், அப்பா முதலில் சொன்னதுதான் உண்மை… இரண்டாவது சொன்னது பொய்…. என்று எண்ணி.. அப்பா முதலில் சொன்ன விசயத்தையே பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கிறானாம்… அதுவும் இல்லாமல் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்தியும் விடுகிறானாம்… இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. சரி.. இதையும் விடுங்கள்…



கடைசியில் பிரியாவாக, தன் ப்ரொடக்சன் கம்பெனியில் கோ-ஆர்டினேட்டராக வரும் த்ரிஷா கிருஷ்ணனின் ஓரிரு அக்கறையான விசாரிப்புகளைக் கொண்டு.. எல்லாப் பெண்களும் அப்படியில்லை… என்று மனம் திருந்தி கல்யாணம் செய்து கொள்வதாக படம் முடிகிறது… அப்படி அவரது மனமாற்றத்துக்கான காரணமாக இருந்தது, ஒரு சின்ன சச்சரவின் போது த்ரிஷா ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசுவதும், ஓரிரு அக்கறையான விசாரிப்புகளும், அவர் மாடலாக மாறி ஒரு மாடர்ன் ட்ரெஸில் நடந்து வரும் போது ஜீவாவைப் பாதித்த த்ரிஷாவின் அழகும், ஒரு சின்ன முத்தமும் தான்… இவைதான்.. இவை மட்டும்தான் ஒட்டுமொத்தமாக ஜீவாவை மாற்றிவிடுகிறதாம்…. “எல்லாப் பெண்களும் அப்படியில்லை…” என்கின்ற ரீதியில் ஜீவா மாறியதாக அறிக்கைவிடும் போது… “எப்படியில்லை..” ”அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்..” என்றே கேட்கத் தோன்றுகிறது..



இதுதவிர்த்து ஜீவா என்னும் கெளதமுக்கு, மற்றுமொரு குணாதிசய குறைபாடும் உண்டு.. அது தான் ஒரு கொள்கை வைத்திருந்தால், அது தவறு என்று தெரிந்தாலும் அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்வதை இழுக்காக நினைக்கக் கூடியவர் என்பது.. இப்படி ஒரு குணாதிசயம் இருப்பதே க்ளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியில்தான் நமக்குத் தெரியவருகிறது… இது தவிர்த்து மருத்துவமனையில் நாசர், தன் மகனிடம் தனக்கு கேன்சர் இருப்பதை சொல்லக்கூடாது என்று சொல்லும் காட்சியெல்லாம் காமெடியின் உச்சம்… ஏற்கனவே ஜீவா, அப்பாவின் மீது வெறுப்பில் இருப்பவர்தான்… அப்பாவுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது தெரிந்தாலாவது அவர் தன் அப்பாவிடம் பேசுவதற்கான வாய்ப்பு உண்டு… இப்படியிருக்கின்ற பட்சத்தில் நாசர் அதை ஜீவாவிடம் இருந்து மறைத்துவிடுவதற்கான முகாந்திரம் என்ன என்பதும் நெருடுகிறது….

இப்படி கதையிலும் காட்சி அமைப்பிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், இவை அனைத்தையும் பெரிதாக வெளியே தெரியாமல் நீர்த்துப் போகச் செய்வது என்னவோ….? சந்தானத்தின் இயல்பான எதுகை மோனை நயத்துடன் கூடிய அந்த ட்ரேட் மார்க் காமெடிதான்… ட்ரெஸிங்க் ரூமில் ஒரு ப்ராவை எடுத்து அணிந்து கொண்டு அவர் தரும் விளம்பர அறிமுகத்தில் இருந்து எல்லாமே சூப்பர்… அதிலும், கல்யாணமானப் பின்பு, தன் மனைவி கடுமையான கோபத்தில் இரவு டிபனுக்கு ஒரு டம்ளர் விஷம் இருப்பதாகச் சொல்லும் இடத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் டயலாக் இருக்கின்றதே….!!!! க்ளாஸ்…!! இப்படி ஆங்காங்கே வசன நடையில் நம்மை வயப்படுத்தும் சந்தானம் மட்டுமே படத்தில் ஆறுதல்..

ஜீவாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் தான்… ஆண்ட்ரியாவுடன் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கும் ஜீவாவை ரசிக்க முடிகிறது… தந்தையை எப்போதும் முறைத்தவாறு செல்வதும், கண்ணில் நீர் கோர்க்க.. அவரது கையைப் பற்றுவதுமாக நடிப்பில் வழக்கம் போல் ஜீவா குறை வைக்கவில்லை… சில காட்சிகள் மட்டுமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும், அப்படியே ஒரு மாடலின் எதிர்வினைகளை நிறுவும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார்… ஆன்ட்ரியா த்ரிஷாவிற்கு பெரிதாக வேலை இல்லை… அழகாக இருக்கிறார்… க்ளைமாக்ஸ் நெருங்குகின்ற நேரத்தில் கிடைக்கின்ற கேப்பில் கச்சிதமாக நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்… வினய்….? என்ன சொல்வது..? சில இடங்களில் நடிப்பு பரவாயில்லை என்று சொல்லலாம்.. ஆனால் ஜீவாவின் முன்னால் அழுது கொண்டே “அப்பாட்ட பேசுடா…” என்று சொல்லும் இடத்தில் எல்லாம் இவரது நடிப்பை ஜீரணிக்கவே முடியவில்லை… உடம்பைக் குறைப்பதும் அவருக்கு நல்லது. நாசருக்கு மிக முக்கியமான ஆனால் வழக்கமான கதாபாத்திரம்.. ஃபாரின் செல்லும் மகனின் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்று த்ரிஷாவிடம் சொல்லி போன் பண்ணச் சொல்லி கெஞ்சும் இடத்தில் கலங்க வைக்கிறார்….



இசை ஹாரிஸ் ஜெயராஜ்…. பாடல்கள் ஒன்றிரண்டு நன்றாக இருந்தது… பிண்ணனி இசையில் ஸ்கோர் செய்வதற்கான திரைக்கதை இல்லை… ஏதோ ஒப்புக்கு இருந்தது பிண்ணனி இசை… மதியின் கேமராவில் ஜீவாவின் வீடும்.. அந்த ஃபாரின் லொகேஷன்களும் ஜில்… இயக்குநர் அஹமத்துக்கு இது முதல் படம்… காமெடியை நம்பி களம் இறங்கி இருப்பவர் கதையில் சற்று கோட்டை விட்டிருந்தாலும்… காமெடி அவரை கைகொடுத்து தூக்கி இருக்கிறது… இரண்டாம் பாதியில் படத்தின் முக்கிய பலமான காமெடி இல்லாமல் இருப்பதும்… இதுதான் நடக்கப்போகின்றது என்பதை ஆடியன்ஸ் யூகித்தப் பின்னரும், கதையை இழுப்பதோடு ஆடியன்ஸ் யூகித்த அதே விசயத்தை எந்தவிதமான வித்தியாசமும் இன்றி காட்டியிருப்பதும் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது… இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்… நல்ல முயற்சி என்று சொல்வதற்கு இல்லை.. இருப்பினும் ஒரு எண்டர்டெயினராக ஏமாற்றம் தராத ஒரு படமாகவே இருக்கும்… க்ரிடிட்ஸ் கோஸ் டூ சந்தானம்… மொத்தத்தில் என்றென்றும் புன்னகையில் வழக்கமான புன்னகையை தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை…

1 comment: