Sunday, 9 August 2015

சண்டி வீர்ன் :

முந்தைய படமான நைய்யாண்டியின் மூலம் ரசிகர்களை அமரர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர் சற்குணம், தன் குணத்துக்கு எது வரும், எது வராது என்பதை மிகத் தெளிவாக யோசித்து, இயக்குநர் பாலாவின் உதவியுடன் சண்டி வீரன் மூலம் மீண்டு(ம்) களம் கண்டிருக்கிறார். நைய்யாண்டி தந்த பாதிப்பிலிருந்து மீளாமல் இருந்தாலும் கூட, பாலா என்ற படைப்பாளியின் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், சண்டி வீரனை முண்டியடித்துக் கொண்டு முதல்நாளே பார்க்காவிட்டாலும், சற்று காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணமிருந்தது.. அதன்படி படமும் பார்த்தாயிற்று. படத்தைப் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், சண்டிவீரன் முழுக்க நொண்டிவீரன் அல்ல..


கதையென்று பார்த்தால், களவாணி கால காதல் கதைதான்.. ஆனால் வெறும் காதலை மட்டும் வைத்துக் கொண்டு இனி தமிழ் பூமியில் வியாபாரம் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொண்டு, நாயகனுக்கு இரட்டை வேலை கொடுத்திருக்கிறார்.. முதலாவது நாயகன் வழக்கம் போல காதலியின் தகப்பனை எதிர்த்து ஜெயித்து, காதலியை கைப்பிடிக்க வேண்டும், இரண்டாவதாய், ஊரில் நிலவும் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திரைப்படத்தின் மிகமுக்கியமான பலமே, இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது முந்தைய படத்தில் தொலைத்த, தான் வாழும் பூமி சார்ந்த கலாச்சாரப் பதிவுகளை மீண்டும் கையிலெடுத்து இருப்பதுதான்.. அதனோடு சேர்ந்து மற்றொரு பலமாக இருப்பது, சமூகத்தின் முக்கியப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கும் குடிநீர்ப் பிரச்சனையையும் கையில் எடுத்திருப்பது.

களவாணியைப் போலவே இங்கும் தஞ்சை வட்டாரப்பகுதி தான் கதைக்களம். அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்களுக்கு இடையே குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஒரு குளத்தை மையப்படுத்தி பகை இருந்து வருகிறது.. ஒரு கிராமத்துக்கு அந்தக் குளத்தை விட்டால், குடிநீருக்கு வேறுவழியே கிடையாது. ஆனால் மற்றொரு கிராமத்திற்கோ அப்படியில்லை. இதை மனதளவில் உணர்ந்து பக்கத்து கிராமத்தின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசும் நாயகனின் அப்பா, அந்தக் குளப் பிரச்சனை கலவரத்தில் கொல்லப்படுகிறார்.. இருபத்திரண்டு வருடங்கள் கழித்து நாயகன் வளர்ந்து வந்து நிற்கிறான். அந்தப் பிரச்சனையும் அதீதமாக வளர்ந்து நிற்கிறது.. கூடவே சிறுவயதிலிருந்து அவன் வளர்த்து வந்த காதலும் வளர்ந்து நிற்கிறது… காதலியோ அவனது ஊரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகள்.. இப்போது நாயகன் செய்ய வேண்டியது என்ன…? என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்… அதை அவன் எப்படி செய்தான் என்பதை திரையரங்கில் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல்பாதி நாயகன் நாயகி இருவருக்குமான காதலும், இரண்டு ஊர்களுக்குமான மோதலுமாக மாறிமாறி அடுக்கப்பட்ட காட்சிகளினால் விறுவிறுவென போகின்றது. திருவிழா கொண்டாடும் போது அந்த ஊரில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், சிங்கப்பூர் சென்று திரும்பும் அந்த ஊர் மக்களின் அனுபவங்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, திருவிழாவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், திருமணம் மற்றும் உடலுறவு சார்ந்த எதேச்சையான கிண்டல் பேச்சுகள், தேர்ட்டு அம்பயராக நிறுத்தப்பட்டு இருக்கும் மொபைல் போன், வீடியோ காலிங்கில் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு வெட்கப்படும் நாயகி, அந்த செல்போனை ஒலித்து வைக்கும் தந்திரம் என நிலவரைவியலில் உட்புகுந்த அறிவியல் சார்ந்த காட்சிகள் படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. தூங்கி எழுந்தது போல் ப்ரேமுக்கு ப்ரேம் காட்சியளிக்கும் ஆனந்தி கூட முதல்முறையாக அழகாக தெரிகிறார்.. களவாணி திரைப்படத்தின் சாயல் ஆங்காங்கே தென்பட்டாலும் கூட, இப்படி படத்தில் சில நம்பிக்கையளிக்கும் நல்ல விசயங்கள் முதல்பாதி முழுக்கவே இருக்கின்றன..


ஆனால் அவை இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இருப்பதுதான் பிரச்சனை.. முதல்பாதியில் மூர்க்கமாக சண்டித்தனத்துடன் பக்கத்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்க்கும் இந்தக் கிராமத்து மக்கள், எதற்காக அதை எதிர்க்கிறார்கள் என்பதற்கான காரணம் படத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.. அதனாலயே அது சாதிய அரசியல் சார்ந்த காரணமாக இருக்கலாமோ..? அதை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறாரோ என்ற எண்ணம் எழுகிறது.. இருப்பினும் அந்தப் பின்புலம் வலுவாக இல்லாததால், அதன் வீரியம் குறைகிறது.. மேலும் இரண்டாம் பாதியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சில கதாபாத்திரங்களின் குணாதிசய மாறுதல்கள் நம்பகத்தன்மைக்கு மிகுந்த பங்கம் விளைவிக்கின்றன. உச்சகட்டமாக ஒரு பிரச்சனையை அணுகிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு ஏற்படும் மனமாற்றங்கள் அந்தக் கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கின்ற சிக்கலைப் பற்றி கூறுகின்றன.. அவ்வளவு வீரியத்துடனும், மூர்க்கத்துடனும் தண்ணீர் பங்கீடை மறுக்கும் கிராமமக்கள், நாயகன் பேசும் ஒரேயொரு வசனத்தில் இந்தளவிற்கு மனம் மாறிவிடுகிறார்கள் என்றால், அதை அவர்கள் வாழ்நாளில் ஒருநாள் கூட யோசித்துப் பார்த்ததே இல்லையா..? என்கின்ற கேள்வி நமக்குள் எழுந்து இம்சித்து, அந்த மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவிடாமல் செய்துவிடுகிறது.. நம் அன்றாட யதார்த்த சமூகப் பிரச்சனைகளிலும் இது போன்ற மாயமந்திர மனமாற்றங்கள் ஏற்பட்டு, பிரச்சனை தீர்ந்துவிடாதா..? என்று ஏங்கும் நமக்கும் ஏனோ அதை திரையில் பார்க்கும் போது சற்று கேலிக் கூத்தாகத் தான் தெரிகிறது..

காதலின் க்ளைமாக்ஸில் அப்பட்டமாக களவாணியை மீண்டும் கண்டு கொள்ள முடிகிறது.. சீரியஸான விசயத்துக்கே சிரிப்பு க்ளைமாக்ஸை ஏற்றுக் கொண்டவர்கள், சிரிப்பு விசயத்துக்கு சிரிப்பு க்ளைமாக்ஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா.? என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்.. படத்தின் இரண்டாம் பாதியில் சண்டிவீரன் சற்றே நொண்டத்தான் செய்கிறான்.. அதனாலயே அப்பாடி படம் முடியப் போகிறது..!! என்ற எண்ணம் இரண்டாம் பாதியில் அடிக்கடி எழுந்து மறைவதை மறுக்க முடியவில்லை. பொண்டாட்டியின் பேரில் பில் போடுவது போன்ற சில சுவாரஸ்ய முடிச்சுகளை இரண்டாம் பாதியிலும் ஆங்காங்கே தூவியிருந்தால் சண்டி வீரன் நொண்டி இருக்கமாட்டான்..


மொத்தமாக பார்த்தால், இயக்குநர் சற்குணத்தின் நையாண்டியை ஒப்பிடும் போது இந்த சண்டிவீரன் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமில்லை.. எடுத்துக் கொண்டிருக்கும் சமூகப்பிரச்சனைக்காகவும், தண்ணீரின் தேவை தொடர்பான அந்த முக்கியமான பாடலுக்காகவும், தண்ணீரின் சிக்கனத்தையும், அதன் தேவையை மக்களுக்கு உணர்த்திய தன்மைக்காகவும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக்கூடிய திரைப்படம் தான். எ..ன்..ன.., இரண்டாம் பாதியை பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.. அவ்வளவே..

No comments:

Post a Comment