உச்சி வெயில் உச்சந்தலையை எரித்துக் கொண்டிருந்ததொரு
நல்ல நண்பகல் வேளையில், சென்னை பெருநகரின் எலைட் போன்ற ஒரு ஹை-பையான பாரில் கிட்டத்தட்ட
ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏதோவொரு சுபயோக சுபதினத்தில் நடந்திருக்கலாம் நீங்கள்
கீழே படிக்கப் போகும் உரையாடல். உரையாடலில் உறுதி செய்யப்பட்ட பங்கேற்பாளர்களாக நம்
இயக்குநர் எம்.இராஜேஷ் மற்றும் நடிகர் சந்தானத்தை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.
உறுதியற்ற பங்கேற்பாளர்களாக, நடிகர் சந்தானத்தின் நண்பர்கள், இயக்குநரின் அஸிஸ்டெண்ட்டுகள்
மற்றும் இயக்குநரின் பிற நண்பர்களும் இருந்திருக்கலாமென்று நம்பப்படுகிறது.
ஆல் இன் ஆல் அழகுராஜா ஊத்திக் கொண்ட சோகத்தில்
இருந்த இயக்குநரின் குழுவினருக்கு, ஆறுதல் கொடுக்க வந்த நடிகர் சந்தானம், ஆறுதலாக வழக்கம்
போல ஒரு ட்ரிங்க்ஸ் பார்ட்டி கொடுக்க… அந்த ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் நெகிழ்ந்து போன
இயக்குநர், “நண்பேண்டா” என்று நடிகரை கட்டிக் கொள்ள, தொடங்குகிறது அவர்களின் கருத்து
மோதல்கள். “டாஸ்மாக் மூடு போராட்ட வன்முறைகளை எப்படி தடை செய்யலாம் என்றும், சரக்கடிக்கும்
போது தாம் புதிதாக முயற்சித்துப் பார்த்த சைட்-டிஷ் பற்றியும், நடித்தும் இயக்கியும்
சேர்த்தப் பணங்களைக் கொண்டு, எந்த நாட்டுக்குச் சென்று குஜாலாக எந்த வகை சரக்கடிக்கலாம்
என்பது பற்றியும் அவர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, இடையூறாக
இம்சிக்கிறது செல்போன். எடுத்துப் பார்த்தால் எதிர்முனையில் மனைவி. அமைதியாக அதை சைலண்டில்
போட்டவர், தலையில் கை வைத்து உட்கார, எதிரே இருப்பவருக்கும் மனைவியிடம் இருந்து போன்..
அவரும் சைலண்டில் போட்டுவிட்டு, அப்செட் ஆனவராக இவரைப் பார்க்க.. இருவருமே மொபைலைப்
பார்க்க… தொடர்ச்சியாக போன் வந்து கொண்டே இருக்கிறது..
வேறு வழியில்லாமல் போனை எடுத்த இயக்குநர்,
“இங்கதாம்மா, டிவிடி கடைக்கு, பாஸ்கரன் படமும், SMS படமும் வாங்கலான்னு வந்தே(ன்)..
நம்ம புதுப்பட வேலை விசயமாத்தா.., அஸிஸ்டெண்டு இந்த சீன் போன படத்திலயே வச்சாச்சு சார்ன்னு
சொன்னா.. அதான் டவுட்ட கிளியர் பண்ணலாம்ன்னு..” அய்யய்யோ சத்தியமா இல்லடா செல்லம்..
நா(ன்) தனியா தான் வந்திருக்கே(ன்).. ப்ரெண்ட்ஸ் எவனுமே இல்ல..” ”இல்லம்மா.. டாக்டர்
சொன்னதுக்கப்புறம் எப்டி நா(ன்) குடிப்பே(ன்).. வந்துர்றேம்மா..” பாய்..” என்று போனை
கட் செய்து நடிகரைப் பார்க்க.. நடிகரும் வேறு வழியில்லாமல் போனை அட்டெண்ட் செய்து,
“டார்லிங் இங்கதாண்டா.. புதுசா எதுகை மோனை இணைப்போட ஒரு தமிழ் டிக்ஸ்னரி வந்திருக்குன்னு
சொன்னாங்க.. அத வாங்கிட்டா.. டயலாக் எழுத யூஸ் ஆகும் பாரு.. அதான்… வாங்கலாம்னு வந்தே(ன்)..
அவனெல்லா நா(ன்) பாத்தே பல மாசமாச்சும்மா.. இதோ வந்திர்றே(ன்).. என்று போனை கட் செய்து,
“அப்பாட..” என்று பெருமூச்சுவிட்டவர், ”அது ஏன் இந்த பொண்டாட்டிகளுக்கு புருசனோட ப்ரெண்டுன்னால
ஆக மாட்டிக்கு.. அவ ப்ரெண்டெல்லா(ம்) நாம எவ்ளோ அன்பா பாத்துக்குறோ(ம்)…” என்று வேண்டா
வெறுப்போடு மீதமிருந்த விஸ்கியை விசுக்கென வாயில் ஊற்றி சரிய, இயக்குநர், நெற்றியை
தேய்த்தபடி, “நல்ல கான்செப்ட்ல புருஷன் ப்ரெண்ட்ஸ ஏன் பொண்டாட்டிக்கு புடிக்க மாட்டிக்குது..
இதான் அடுத்த படத்தோட கதை… ஆனா ஏன் பிடிக்க மாட்டேங்குது..” என்று மீதமிருந்த தங்கள்
குழுவினருக்கும் போன் அடித்து பார்-க்கு வரச் சொல்லி, மிதமிஞ்சிய போதையோடு, காரசாரமாக
விவாதத்தை தொடங்குகிறார்கள்.. பார் மூடும் நேரத்தில் இயக்குநருக்கும் நடிகருக்கும்
ஒரே நேரத்தில் ஞானோதயம் பிறக்க.. தங்கள் முன்னால் இருக்கும் பீர் பாட்டிலையும் பிராந்தி
பாட்டிலையும் பார்த்தபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி “நண்பேண்டா” என்று கட்டிக்
கொள்கிறார்கள்..
ஒன்றும் புரியாமல் முழித்த உதவி இயக்குநரிடம்,
இயக்குநர், “இது என்ன..?” என்று பீர் பாட்டிலை காட்டிக் கேட்க, “பீர் சார்..” இயக்குநர்
“இத எதோட மிக்ஸ் பண்ணி குடிக்கணும்..” உதவி இயக்குநர் “இத அப்டியே குடிக்கலாம் சார்..”
பிராந்தி பாட்டிலை கைகாட்டி இயக்குநர் “இதென்ன..?” உதவி இயக்குநர் “பிராந்தி சார்..”
இயக்குநர் “இத எதுல மிக்ஸ் பண்ணி குடிக்கலாம்..” உதவி -“இத தண்ணில மிக்ஸ் பண்ணிக் குடிக்கலாம்
சார்..” இவர்களின் உரையாடலில் இடைமறித்த நடிகர் “ தண்ணில மட்டுந்தானா..? என்னப்பா இது
உண்ட்ட அஸிஸ்டெண்டா இருந்துட்டு சரக்கடிக்கிறதப் பத்தி எதுவுமே தெரியாதவனா இருக்குறா(ன்)…
அஸிஸ்டெண்ட்டெல்லா கரெக்டா செலக்ட் பண்றீயா இல்லயா..” “ஏ என்னப்பா.. நீ என்னவே சந்தேகப்படுற… நா அஸிஸ்டெண்டா
சேத்துக்கோன்னு வர்றவண்ட்டல்லா படிக்கத் தெரியுமான்னு கேக்குறேனோ இல்லயோ குடிக்கத்
தெரியுமான்னு தான கேக்குறேன்..” என்ற இயக்குநரை, “நண்பேண்டா..” என்று கட்டிக் கொண்டு
நடிகர் உதவியை நோக்கி, “தம்பி இந்த மாதிரி பொது அறிவெல்லா தெரிஞ்சுக்கணும், இத, தண்ணி,
இளநீர், மோர், ஏன் சமயத்துல ரசத்துலகூட விட்டு அடிக்கலாம்.. சரியா..?” என்று கேட்க,
கெக்கபிக்க கெக்கபிக்க என்று சிரிக்கத் தொடங்கிய இயக்குநர், “Note பண்ணிக்க.. Note
பண்ணிக்க இதான் க்ளைமாக்ஸ் டயலாக்கு…” என்று சந்தோசத்தில் பிளிற.. உதவியும் அரக்கப்
பறக்க அதை குறித்துக் கொண்ட பிறகும் புரியாமல் முழிக்க… அவனை மேலும் தவிக்க விடாமல்
இயக்குநரே “டே பொண்ணுங்க ‘பீர் மாதிரி” எதோடயும் மிக்ஸ் ஆகவே மாட்டாங்க.. பசங்க பிராந்தி
மாதிரி, கழுத எல்லாத்துக் கூடயும் மிக்ஸ் ஆகிடுவாங்க… இத மட்டும் புரிஞ்சுக்கிட்டா
லைஃப்ல பிரச்சனையே கிடையாது.. “ என்னப் புரிஞ்சதா என்று கேட்க.. உதவியும் ஒப்புக்கு
தலையாட்ட.. இயக்குநர் “அப்பாடி கதைய முடிச்சாச்சு…” என்று இளைப்பாற, உதவி இயக்குநர்
கூட்டத்தில் புதிதாக வந்தவன், “சார்.. க்ளைமாக்ஸ்தா முடிஞ்சிருக்கு… அதுக்கு முன்னாடி
கதை..?” என்று தலையை சொறிய.. பிற உதவிகளும், இயக்குநர் அண்ட் கோவும் சிரிக்கத் தொடங்குகின்றனர்.
இயக்குநர் “இப்பத்தான வந்திருக்க.. கத்துக்குவ…
ஹீரோவும் சந்தானம் சாரும் ப்ரெண்டு, சந்தானர் சார் வொய்ப்புக்கு ஹீரோவ கண்டாலே புடிக்கல..
ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணுன்னு சொல்றாங்க.. அவனுக்கும் லைஃப்ல ஒரு பொண்ணு வந்துட்டா,
அவனே விலகிருவானேன்னு, ஹீரோவுக்கு ஒரு பொண்ணு பாத்து செட் பண்ணிவிடுறாரு சந்தானம் சார்..
அந்த ஹீரோயின் ஹீரோட்ட சந்தானம் சாரோட ப்ரெண்ட்ஷிப் கட் பண்ணச் சொல்றாங்க.. இதான் சாக்குன்னு
சந்தானம் சார் கலண்டுறாரு.. ஆனா ஹீரோ, அவரு ஹீரோல்ல அதனால ஹீரோயின உதறிராரு… இது தெரிஞ்சு
சந்தானம் சாரும் மனசு மாறி ரெண்டு பேரும் மறுபடி சேந்து தண்ணியடிக்குறாங்க… அங்க ஏன்
புருசனோட ப்ரெண்ட பொண்டாட்டிக்கு பிடிக்க மாட்டிக்குன்னு பேசிக்குறாங்க.. அதுக்கு சந்தானம்
சார், நீ எழுதி வச்ச டயலாக்க சொல்லி, படத்த முடிக்குறாரு…. நடுநடுல சந்தானம் சாரும்,
ஹீரோவும் சேந்து குடிக்கிறது… சந்தானம் சார் வேற கேரக்டர ஜோக்ஸ் சொல்லி கடிக்கிறது..
இப்டி சில சீன்ஸ் போட்டு ஃபில் பண்ணா படம் முடிஞ்சது புரிஞ்சதா…?..” என்று கேட்க உதவி
இயக்குநர் அவசரமாக தலையாட்ட கதை தயாராகி, திரைக்கதையும் எழுதப்பட்டு, அதற்கு அமோக ஆதரவு
பெற்ற ஆர்டிஸ்டிகளும் புக்காகி, சூட்டிங், டப்பிங் இதரப் பணிகள் எல்லாம் முடிந்து திரைக்கும்
வந்துவிட்டது.
இது தவிர்த்து படத்தில் என்ன இருக்கிறது
என்று கேட்டால், இந்தியத் திரையரங்குகளில் முதன்முறையாக, மது குடிப்பதன் தீமை தொடர்பான
சிலைட் படம் முழுக்க காட்டப்பட்ட படம் இதுவொன்றாகத்தான் இருக்கும்.. டாஸ்மாக் மூடு
விழா, மது ஒழிப்பு அறப் போராட்டங்கள், உண்ணாவிரதங்களை ஏகத்துக்கு கேலி செய்வதால், கேளிக்கை
வரி மட்டும் இன்றி, திரைப்படத்தின் மொத்த செலவுத் தொகையையும், கழக அரசின் பொது நிதியிலிருந்து
கொடுக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மேலும் மது கொள்கை
பரப்பு செயலாளராக இயக்குநர் இராஜேஷ் நியமிக்கப்படலாம் என்றும், ஒவ்வொரு டாஸ்மாக் பாரிலும்
வாசுவும் சரவணனும் ஒன்னா குடிச்சவுங்க.. என்கின்ற அந்த பொதி கணக்கில் அர்த்தங்களை பொத்தி
வைத்திருக்கும் பொன்னான பாடல், குடிமகன்களை கவரும் விதமாக திரும்ப திரும்ப ஒளிபரப்பபட
இருக்கிறது..
படத்தை எதிர்த்து எதிர்தரப்பு ஒன்றும் கிளம்பி
இருக்கிறது.. அது படத்தில் வரும் காட்சிகள் எல்லாம், வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில்
திரைச்சீலை மாற்றும் இடைவெளியில், பார்வையாளர்களை கவர, ஒரு கோமாளி சில கோமாளித்தனமான
செய்கைகளை செய்வான், அதைவிட படத்தின் காட்சிகள், படு திராபையாக இருப்பதாக தெரிவிக்கிறது.
மேலும் “நாங்க என்ன சிரிச்சாப் போச்சு…ன்னு தம் கட்டியாப்பா சிரிக்காம இருக்கோ(ம்).
இழவு சிரிப்பு வரவே இல்லயேப்பா…” என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார் அன்பர் ஒருவர்..
மேலும் அவர், “குடியப் பத்தி படம் எடுக்கும் இயக்குநர், ஒரு உண்மையான குடிகாரனைக் கூட
இதுவரை காட்டவில்லையே என்று ஏங்குகிறார்..
மேலும் மதுப் பழக்கம் என்பது ஒரு நோய் என்பதனை
அங்கீகரித்திருக்கும் இந்திய மருத்துவத் துறை கவுன்சிலுக்கு, அதை விட கொடிய நோயாக இயக்குநர்
M. இராஜேஷின் திரைப்படங்களையும் அந்தப் பட்டியலின் கீழ் சேர்த்துக் கொள்ளும்படி கோரிக்கை
மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது..
(பி. கு – 1, படத்தில் எப்பொழுதும் ஊற்றிக்
கொண்டே இருப்பதால், படமும் ஊற்றிக் கொள்ளுமோ என்று பயந்த உதவி இயக்குநரிடம், இயக்குநர்,
“இந்த மு… ஜனங்க, இந்த படத்தை ஹிட்டாக்குறாங்களா இல்லயான்னு பாரு…” என்று சவால் விட்டதாக
கேள்வி.
பி. கு – 2 கேள்வி : திரை விமர்சனம், திரை
விமர்சன பாணியில் இல்லாமல், செய்தி வாசிப்பு பாணியில் எழுதப்பட்டிருப்பது ஏன்..?
பதில் : திரை விமர்சனம் எல்லாம் திரைப்படங்களுக்கு
மட்டும் தான்… இந்த மாதிரி -------------------- க்கு இல்லை..)
No comments:
Post a Comment