பதிவுகள் எழுதியே பல காலங்கள் ஆகிறது. எழுதவே
கூடாது என்று இடைக்காலத் தடை எதுவும் விதித்துக் கொள்ளவில்லை. ஏனோ ஆசைகளும், நிராகரிப்புகளும்,
எதிர்பார்ப்புகளும், எரிச்சல்களும், அலுப்பும் அலட்சியமுமாக சேர்ந்து சிலமாத காலங்கள்
எழுதாமலே கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க சில
படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என் பதிவுகளின் மறுபிரவேசம் “காக்கா முட்டை”யிலேயே
நிகழ்ந்துவிடும் என்று நானும் கூட எதிர்பார்த்திருந்தேன். அதுவும் முடியாமல் கடந்ததும்,
இனி வெளியாக இருக்கும் “குற்றம் கடிதல்” என்ற மிக முக்கியமான தமிழ்சினிமாவில் அந்த
பிரவேசத்தை நிகழ்த்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த காத்திருப்பில்
கைவலியே வந்து, இனியெங்கே எழுதுவதையே மறந்துவிடுவேனோ என்ற பயத்தில், ”ஆரஞ்சு மிட்டாய்”
சுவைத்துக் கொண்டே களம் காணுகிறேன்..
தமிழ் சினிமாவில் கதைகளிலும், கதை சொல்லும்
முறைமைகளிலும் சமீபகாலமாக சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இது தமிழ் சினிமாவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் நல்லதுதான். ஆனால் அந்த குறிப்பிடத்தகுந்த
மாற்றங்கள் மட்டுமே இருந்துவிட்டால் அதுவே நல்ல திரைப்படமாகிவிடுமோ என்கின்ற குழப்பமும்
நமக்கு இருக்கின்றது. வணிக சினிமாவின் சூத்திரங்களை பெரிதும் தவிர்த்த, இயல்பான கதாபத்திரங்கள்
கொண்ட திரைப்படங்கள் எல்லாமே நல்ல திரைப்படமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அது போல மாற்று முயற்சி கொண்ட திரைப்படங்கள் எல்லாமே மிகச்சிறந்த திரைப்படங்களாக இருக்க
வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு உதாரணமாக கூற என் கைவசம் தற்போது தமிழில் இருப்பது,
இந்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் மட்டுமே.
ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் ஒரு மாற்றுமுயற்சி
கொண்ட திரைப்படம். நாயகன், நாயகி, வில்லன்
என்கின்ற வழக்கமான சினிமாவின் வஸ்துக்கள் இல்லாமல், கதாபாத்திரத்தை மையப்படுத்தி, யதார்த்தமான
மனிதர்களை சித்தரித்து, அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்வியல் சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால்
மட்டுமே இது மாற்றுமுயற்சி எனலாம். ஆனால் இந்த மாற்றுமுயற்சி, மற்றொரு முயற்சியாக மட்டுமே
சுருங்கியிருப்பது, இவர்கள் திரைப்படத்தில் காட்டியிருக்கும் வாழ்வியல் எந்தவகையிலும்
முழுமையடையாமல் இருப்பதால் தான்.
ஆம்புலன்ஸ் வண்டியில் வரும் அவசரகால மருத்துவ
உதவியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர், அதில் நோயாளியாக பயணிக்கும் 60 வயது முதியவர், இவர்கள்
தான் திரைப்படத்தின் முக்கிய மைய கதாபாத்திரங்கள். ஆம்புலன்ஸ் பயணம், வயதான நோயாளிப்
பெரியவர் என்ற கதாபாத்திரங்கள் தெரிந்தவுடன் நம் மனதுக்குள் பல கதைகள் தோன்றும், மரணத்தை
எதிர்நோக்கி இருக்கும் ஒரு பெரியவரின் அனுபவமாக கதை இருக்கலாம், அல்லது மரணத்தை எதிர்நோக்கிய
பல மனிதர்களை அருகில் இருந்தே பார்த்து வந்திருக்கும் அந்த மருத்துவ உதவியாளரின் அனுபவமாக
இருக்கலாம், அல்லது அந்த நோயாளிக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் இடையே ஏற்படும்
ஒருவிதமான வாழ்க்கை சார்ந்த புரிதலாக கதை இருக்கலாம் என்றெல்லாம் நமக்கு பல கதைகள்
தோன்றும். ஆனால் நாம் மேற்சொன்ன எதுவுமே இந்த திரைப்படத்தின் கதை இல்லை.. ஆக என்னதான்
கதையென்று கேட்டால், கதையே இல்லை என்று கூட சொல்லலாம். அதுதான் இந்த திரைப்படத்தின்
மிகப்பெரிய பிரச்சனை.
திரைப்படத்தின் இரண்டாவது காட்சி, மிக அட்டகாசமாக
இருந்தது. 60 வயது பெரியவரான கைலாசத்துக்கு நெஞ்சுவலி என்று போன் வர, அவரை அழைக்க ஆம்புலன்ஸ்
செல்லும். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வண்டி செல்வதற்கு சாலை வசதி
இல்லாமல், ஸ்டெரெக்சரை மட்டும் தூக்கிக் கொண்டு இருவரும் நடந்தே சென்று அந்தப் பெரியவரை
அழைத்து வருவார்கள். மிகச் சாதாரணமான காட்சி போன்று தெரியும் இந்தக் காட்சி, அரசாங்கத்தின்
செயல்பாடுகளை சிறப்பாக பகடி செய்யும் காட்சி. குடிமக்களின் உயிரைக் காக்க 108 அவசர
சிகிச்சைக்கு வழி செய்கின்ற அரசாங்கங்கள், அந்த வாகனங்கள் ஊருக்குள் சென்று சேர்வதற்கான
சாலைகளை மட்டும் கிராமங்களில் இன்றளவும் அமைக்கவில்லை என்பதாக சொல்லும் காட்சி. படம்
முழுக்க இப்படித்தான் இருக்கப் போகின்றதோ என்று ஆச்சரியம் கொடுத்த காட்சி அது. ஆனால்
அந்த ஆச்சரியம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேற்சொன்ன காட்சியில் நான் மையமாக இதைக்
குறிப்பிட, திரைப்படம் மையமாக குறிப்பதுவோ அந்த கைலாசம் என்கின்ற 60 வயது முதியவரின் அசட்டுத்தனமான முரண்டு பிடிக்கும்
குணத்தை. அவர் தனக்கு வீசிங் வரும் என்று அடம் பிடித்து ஸ்டெரெக்சரில் படுக்காமல் உட்கார்ந்து
கொண்டே வருகிறார், அவர்கள் அவரை தூக்க முடியாமல் தூக்கி வருகிறார்கள் என்று காட்சியின்
தன்மையை நகைச்சுவையாக மாற்றி சிதைக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை காமெடியாக சொல்வதா..?,
சீரியஸாக சொல்வதா..? என்கின்ற குழப்பமும் இயக்குநருக்கு இருந்திருக்கிறது என்பது படம்
முழுவதுமே தெரிகிறது. மருத்துவ உதவியாளராக வரும் ரமேஷ் திலக்-க்கு ஒரு காதல், அது கைகூடுவதில்
ஒரு பிரச்சனை, மேலும் ரமேஷ் திலக் சமீபத்தில் தான், தன் தந்தையை இழந்தவர் என்பதான அடிக்கோடிட்ட
பிண்ணனி வேறு. இந்த இரண்டு பிண்ணனியுமே முழு நிறைவுடன் இல்லை. கைலாசம் என்கின்ற பெரியவரின்
கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், ”மகன் உயிரோடு இருந்தும் அவர் தனிமையில் வாழ்பவர்,
”தன் தந்தை இறந்தால் மட்டும் தனக்குத் தெரிவியுங்கள்” என்று மூன்றாம் நபரிடம் தெரிவிக்கும்
அளவுக்கு அவர் மீதான கோபத்தோடு வாழ்பவன் அவரது மகன்..” என்பதான பிண்ணனி அவருக்கு..
அந்தக் கதையும் அதன் உணர்வுகளும் கூட திரைக்கதையில் முழுமையாக இல்லை.. மரணத்தை எதிர்கொள்ளப்
போகும் மனிதர்களிடம் இருக்கும் ஒரு வறட்டு பிடிவாதம் மட்டுமே ஓரிரு காட்சிகளில் தென்படுகிறது..
இது தவிர்த்து அந்த டிரைவரின் கதாபாத்திரம், இந்த கதையோட்டத்திற்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத
கதாபாத்திரம். திருமணம் ஆன பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்று வகைதொகையில்லாமல் எல்லா
பெண்களிடமும் போனில் அரட்டை அடிக்கும் அந்தக் கதாபாத்திரம், இந்தக் கதைக்களத்துக்கு
எப்படி பயன்பட்டது, கதையை அந்தக் கதாபாத்திரம் எப்படி நகர்த்தியது என்பது இயக்குநருக்கே
வெளிச்சம்.
கைலாசமாக வரும் அந்தப் பெரியவரின் செய்கை
விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.. நடமாட்டம் குறைந்து போய், சாவை எதிர்நோக்கியபடி
வீட்டுக்குள்ளாகவே முடங்கிக் கிடக்கும் அந்தப் பெரியவர், வெளியுலகை பார்க்க வேண்டும்
என்று தோன்றும் போது, ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அலைப்பாராம்.. ஆம்புலன்ஸ் வந்தவுடன்
அதில் ஏறி ஊரைச் சுற்றிப் பார்த்தபடியே மருத்துவமனையில் இறங்கும் அவர், மருத்துவர்கள்
கூறும் ஆலோசனைப்படி எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல், மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கே
சென்றுவிடுவாராம்.. ஆக 60 வயது முதியவராகிய அந்தக் கைக்குழந்தை வைத்து விளையாடும் ஒரு
பொம்மை போலத்தான், அந்த உயிர்காக்கும் ஆம்புலன்ஸும், அதில் வரும் மருத்துவ உதவியாளர்களும்..
இப்படிப்பட்ட செய்கை கொண்ட ஒரு மனிதரை எதன் அடிப்படையில் நாம் ரசிப்பது என்றே தெரியவில்லை..
”சாகப் போகின்ற உங்களை எங்களால் காப்பாற்ற
முடியாது, ஆனால் சாகும் வரை வைத்தியம் மட்டும் செய்கிறோம்” என்று சொல்கின்ற மருத்துவ
நிபுணர்களை கேள்விக்குட்படுத்துவதுதான் இத்திரைக்கதையின் மையம் என்றும் நம்மால் நம்ப
முடியவில்லை. ஏனென்றால் இந்தக் காட்சி வருவதே படத்தின் இறுதிக்காட்சிக்கு சற்று முன்புதான்.
அதுவும் வலுவில்லாத, மிகச் சாதாரண காட்சியாக நம்மை கடந்து செல்கிறது. இது தவிர்த்து
மேக்கிங்கிலும் அவ்வளவு பிரச்சனை.. முதல் காட்சியில் விபத்துக்குள்ளான ஒரு காரைக் காட்டுகிறார்கள்..
அந்தக் கார் தரையில் மல்லாந்து கிடக்கும் கரப்பான்பூச்சியைப் போல் கிடக்கிறது.. சுற்றிலும்
மரமோ, தடுப்புச் சுவரோ, பாலச்சுவரோ, பள்ளமோ கூட இல்லை.. சுற்றிலும் வெட்டாந்தரை. இந்த
இடத்தில் இந்தக் கார் எப்படி ஆக்ஸிடெண்ட் ஆனது என்ற கேள்வி மட்டுமே எழுகிறது.. மருத்துவமனை
என்கின்ற அட்மாஸ்பியரைக் காட்டி, இரவு நேரத்தில் அங்கு ரமேஷ் திலக், விஜய் சேதுபதியை
ஆவேசத்துடன் திட்டும் காட்சி வருகிறது. அந்தக் காட்சியில் மருந்துக்கு கூட நோயாளியோ
நர்ஸோ யாருமே எட்டிப் பார்ப்பதில்லை.. மொத்த திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு அந்தக்
குத்தாட்டம் போடும் ஒரு காட்சி மட்டுமே பயனுள்ளதாக சொல்லும்படி அமைந்திருக்கிறது..
அவரது கைவண்ணத்தில் வசனங்களும் சுமார் ரகம் தான்.
நல்ல சினிமா என்றால் மெசெஜ்ஜோ, கருத்தோ இருக்க
வேண்டுமா என்ன..?? இதோ நாங்கள் எடுக்கிறோம் பார்.. கருத்தோ மெசெஜ்ஜோ இல்லாத ஒரு நல்ல
சினிமா, என்று போட்டி போட்டுக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று
நினைக்கிறேன்.. Running Title ஓடும் போது வரும் பாடல் அதைத்தான் வலியுறுத்துகிறது..
அவர்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. இந்த திரைப்படம் மூலம்
நீங்களும் ஒரு கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள், அது, கருத்தியல் இல்லாத காட்சிகளைக்
கொண்டு மட்டுமே கட்டமைக்கப்படும் திரைப்படங்கள், பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சோர்வைக்
கொடுக்கும் என்பதே அது..
ஆக இந்த ஆரஞ்சு மிட்டாயை வழக்கமான தமிழ்
சினிமாவில் இருந்து சற்று மாறுபட்ட வித்தியாசமான தமிழ் சினிமா என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் இதனை மிகச் சிறப்பான திரைப்படம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்ற கூட்டத்தில்
நான் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்..
Hi, Thanks for Coming back... Please continue ... --Suresh
ReplyDeleteThanks For Your Encouragement Suresh. Your Words Motivate me to write more.. Thanks again...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWelcome back sir. Expecting a lot of movie reviews from you.
ReplyDeleteThanks Vasantha Kumar...
Delete