2002ல்
கனடா நாட்டை சேர்ந்த YANN MARTEL என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு புக்கர் பரிசை வென்ற
நாவல் லைஃப் ஆப் பை (LIFE OF PI). இந்த நாவலை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார்
CROUCHING TIGER புகழ் இயக்குநர் ”ஆங் லீ”. ”3 டி” படங்களுக்கான விஸ்வலில் இது அடுத்த
தளத்தை தொட்டிருக்கிறது என்றே கூறலாம்.
கதையென்னவென்றால்
ப்ரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டு காலணியாதிக்க நாடாக இருந்த பாண்டிச்சேரியில் வாழ்ந்த
ஒரு தமிழர் தான் பராமரித்துவந்த மிருக காட்சி சாலையை மேற்கொண்டு பராமரிக்க இயலாத காரணத்தால்
பிழைப்பு தேடி தன் குடும்பம் மற்றும் விலங்குகளுடன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் கப்பலில்
கனடா நோக்கி பயணம் செய்கிறார்.. அந்த பயணத்தின் போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் கப்பல்
மூழ்கி அனைவரும் இறந்துவிட.. ஹீரோவான ”ஃபை” ஒரு வரிக்குதிரை, சிம்பன்சி குரங்கு, ஒரு
கழுதை புலி, மற்றும் ஒரு பெங்கால் டைகர் இவை மட்டும் ஒரு உயிர் காக்கும் படகில் தப்பிக்கின்றன…
இப்படி
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த சிறுவனின் கடல் பயணம் என்னவானது என்பதை
விஷ்வல் ட்ரீட்டுடன் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. சுருங்க சொல்ல போனால்
கடலில் ஒரு படகில் மிருகங்களுடன் மாட்டிக் கொண்ட ஒரு சிறுவனின் கதி என்ன…? என்பதுதான்..
இது ஒன்றும் ஹாலிவுட்டுக்கு புதிது அல்ல.. Tom hanks நடிப்பில் வெளிவந்த Cast away
மற்றும் Big fish போன்ற படங்கள் சில கூறுகளில் இந்த லைப் ஆஃப் பையோடு ஒத்துப் போகும்…
ஏன்…?
நமக்குமே இந்த கதை ஒன்றும் புதிதல்ல… நாம் சிறுவயதில் புத்தி கூர்மையை பரிசோதிக்க ஒரு
விளையாட்டு விளையாடுவோமே.. ஒரு புதிர் விளையாட்டு… ஒரு புல்லு கட்டு, ஒரு ஆடு, ஒரு
புலி, ஒரு பையன், ஒரு படகு. ஆற்றை கடக்க வேண்டும்… ஆனால் ஒரு சமயத்தில் இரண்டு பேர்
மட்டுமே படகில் பயணம் செய்ய முடியும்… மூன்று பேராக சென்றால் படகு கவிழ்ந்துவிடும்…
முதலில் புலியை கொண்டு சென்றால், ஆடு புல்லை தின்றுவிடும்…. புல்லை தூக்கி சென்றால்
புலி ஆட்டை தின்றுவிடும்.. அப்படியென்றால் முதலில் ஆடை தூக்கி செல்லவேண்டும்.. ஆட்டை
அக்கரையில் விட்டுவிட்டு… அடுத்து புல்லை தூக்கி வர வேண்டும்.. இப்போது புல்லை அங்கே
வைத்துவிட்டு ஆட்டை மீண்டும் தூக்கி வர வேண்டும்… இப்போது ஆட்டை இங்கே கட்டி விட்டு
புலியை கூட்டி செல்ல வேண்டும்…. புலியை அங்கே விட்டுவிட்டு மீண்டும் வந்து ஆட்டை தூக்கி
செல்ல வேண்டும் என்ற பதிலை சொல்கிறார்களா என்று பார்க்க புதிர் போடுவோம்.. ஆனால் அதில்
சிறுவன் எப்படி புலியுடன் பயணம் செய்வான்… அவனை புலி தின்றுவிடாதா…? என்று நாம் கேள்வி
கேட்கவே மாட்டோம்… அப்படி கேள்வி கேட்டால் நமக்கும் ”லைப் ஆஃப் பை” படம் கிடைத்துவிடும்…
இங்கும்
அதுபோலத்தான்.. வரிக்குதிரை, கழுதைபுலி, சிம்பன்சி குரங்கு, சிறுவன், புலி… இதில் யார்
யாரை காப்பாற்றுவது….? யார் யார் பிழைப்பார்கள் என்று தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள்….
இது போக இந்தியா மற்றும் தமிழ்மொழி தொடர்பான சில பெருமைகளும் நம் குறைபாடு தொடர்பான
சில நையாண்டிகளும் இதில் உண்டு..
கதை
நடக்கின்ற களம் பாண்டிச்சேரி தமிழ்நாடு என்பதால்.. தபு போன்ற நடிகைகளும், ஆங்காங்கே
தமிழ் வாடைகளும் உண்டு.. இவைதவிர இந்தியாவில் மதம் என்பது ஒரு மனிதனை சந்திக்கின்ற
தருணங்கள் எது மாதிரியானவை… வாழ்க்கையில் நாம் கடைபிடித்துவரும் ஒழுக்கங்கள், கோட்பாடுகள்,
நெறிமுறைகள் போன்ற சில விசயங்களை கேள்விக்குறி ஆக்கும் சில தருணங்கள் இந்த திரைப்படத்தில்
உண்டு…
வாழ்வியலின்
விதி என்பது வாழ்வது மட்டுமே… இங்கு தான் வாழ வேண்டும் என்கின்ற ஒரே காரணத்துக்காகதான்
எல்லாவிதமான கொடூரங்களும் நிகழ்த்தப்படுகின்றன…. இரண்டு உயிர்களுக்கு இடையிலான வாழ்வியல்
போராட்டத்தில் பாவம், புண்ணியம் என்பதே இல்லை… தன் உயிரை எப்படியாவது தான் காப்பாற்றிக்
கொள்ள வேண்டும் என்கின்ற இலக்கே ஒவ்வொரு உயிருக்கும் முன்னே வைக்கப்படுகின்றது… அது
தன் உயிரை காத்துக் கொள்ளும் போது அடுத்த உயிரின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது… இது தர்க்கத்துக்குரிய
விவாதப் பொருள்தான்…. ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் இது போன்ற நிதர்சனங்களை கடந்து
வந்து கொண்டுதான் இருக்கிறோம்…
ஒரு
கட்டத்தில் திரைப்படம் வாழ்வியலை மீறிய ஒரு புனைவு கதையாக மைய நீரோட்டத்தில் இருந்து
விலகி செல்வது போல் தோற்றமளிக்கும்.. ஆனால் அதற்கும் அவர்கள் படத்தின் இறுதியில் சரியான
காரணத்தை கூறிவிடுகிறார்கள்… PI என்ற பெயர் காரணத்தை கூட அவர்கள் விளக்கமாகவே கூறிவிடுகிறார்கள்….
படத்தைப்
பார்க்கும் போது இந்த காட்சிகளை எல்லாம் எப்படி செய்தார்கள்.. எப்படி படம் பிடித்தார்கள்
என்று வியக்கும் அளவுக்கு பல காட்சிகள் உண்டு.. ஆனால் அவை அனைத்தும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்(CG)
மற்றும் பிற தொழில்நுட்ப உதவியால் செய்யப்பட்டது என்பதை அறியும் போது அதை நம்புவது
இன்னும் சிரமமாகத்தான் இருக்கும்….
எப்படியும்
நம் வாழ்வில் நடுக்கடலில் 20 நாட்கள் என்ன 20 நிமிடங்கள் கூட மாட்டிக் கொண்டு முழிக்கும்
சூழ்நிலை பெரும்பாலும் வரப்போவதில்லை… குறைந்தபட்சம் மாட்டிக் கொள்பவர்களின் உணர்வுநிலை
அதுவும் தனியாக இல்லை.. விலங்குகளுடன் மாட்டிக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்
என்பதை குடும்பமாக சென்று ஒரு 2 மணி நேரம் பார்த்து வரலாம்…. அது உங்களுக்கு மட்டும்
அல்ல… உங்கள் குழந்தைகளுக்கும்.. நல்ல அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை…
No comments:
Post a Comment