Sunday, 23 December 2012

வந்தார்கள் வென்றார்கள்:



       ஆசிரியர்:    மதன் (கார்டூனிஸ்ட்)
          பிரிவு:    வரலாறு.
      பதிப்பகம்:    விகடன் பிரசுரம்.
பெரும்பாலான மக்களால் கார்ட்டூனிஸ்டாகவும், திரைப்பட விமர்சகராகவும் அறியப்படும் திரு. மதன் அவர்களால் எழுதப்பட்டு 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்த வரலாற்று புத்தகம் இந்த ”வந்தார்கள் வென்றார்கள்”.
                                                      
ஏன் இந்த தலைப்பு:
     அது என்ன வந்தார்கள். வென்றார்கள். ஏன் இந்த தலைப்பு யார் வந்தார்கள், எதை வென்றார்கள்..? என்று கேட்கிறீர்களா….. வந்தவர்கள் துருக்கியர்களும் மங்கோலியர்களும். வென்றது இந்தியாவின் நெற்றியை  மங்களகரமாக அலங்கரிக்கும் முக்கிய பகுதியான டெல்லியையும் இந்தியாவின் பிறபகுதிகளையும்……

ஏன் படிக்க வேண்டும்:
இந்த புத்தகத்தை ஏன் நாம் படிக்க வேண்டும் என்றால்,
  1.    பாட்டி வடை சுட்ட கதை கேட்க இன்றைய பிள்ளைகள் தயாரில்லை.
  2.   வேறு கதை நமக்கு தெரியாது…
  3.   இந்த புத்தகத்தில் பிள்ளைகளுக்கு கதை சொல்ல பக்கத்திற்கு குறைந்தது இரண்டு கதை உள்ளது. ஒரு வருடம் முழுவதும் கதை சொல்லலாம்.
  4.   இது கதை மட்டுமல்ல… வரலாறு என்பதால் குழந்தைகளும் குழந்தைகளோடு நாமும் இந்தியாவின் வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம்…
  5.  அரசு தேர்வு எழுதுவோருக்கும் இவை உதவக்கூடும்.
  6.   இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா சென்று வரும் போது உங்களுக்கு ஸ்தல புராணம் பற்றி கூற கைடு தேவைப்படாது…
  7. இந்த புத்தகத்தை படிக்கும் போதே அருகில் ஒரு இந்திய வரைபடத்தையும் வைத்துக் கொண்டால் இந்திய வரலாறும் முக்கிய இடங்களும் நமக்கும் குழந்தைகளுக்கும் எப்போதுமே மறக்காது…
  8.      உண்மையான வரலாறுக்கும் நாம் சமூக அறிவியல் என்ற பெயரில் படித்த வரலாறுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள….
  9.     குறிப்பாக எனக்கும் இந்தியாவின் வரலாறு தெரியும் என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்…


ஏன் வந்தார்கள்:
     இந்தியாவின் மீது நடைபெற்ற முக்கியமான படையெடுப்புகள் அனைத்தும் வடக்கில் இருந்தே நிகழ்ந்திருக்கின்றன. காரணம் என்னவென்றால், வடக்கில் இருந்த அன்றைய துருக்கிய மங்கோலிய பகுதிகள் அனைத்துமே பாலைவனப்பகுதிகள். அவர்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மணற்பரப்பு மட்டுமே… எனவேதான் இந்தியா போன்ற சில இயற்கை வளம் மிகுந்த நாடுகளை பார்க்கும் போது, அவர்களுக்கு இயல்பாகவே அதை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மேலும் இந்தியாவில் அபரிமிதமான அளவில் கொட்டிக் கிடந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்றவையும் மற்றொரு முக்கியமான காரணம்.. இந்தியாவின் செல்வசெழிப்பை பற்றி பெரும்பாலான மன்னர்கள் ஒற்றர்களின் வாயிலாக அறிந்தே இருந்தார்கள். இதுவே பல மன்னர்கள் இந்தியாவின் மீது படை எடுக்க காரணம்…

ஏன் வென்றார்கள்:
     பெரும்பாலும் இந்திய மன்னர்களுக்கு போர் என்பது வீரம் கலந்த ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. ஆகவே தற்காப்புக்காக யுத்தம் செய்வதோடு நிறுத்திக்கொண்டார்கள். ”வலிய சென்று தாக்குதலே சிறந்த தற்காப்பு” என்பதை அவர்கள் அறியவில்லை…
   துருக்கிய மங்கோலிய படை வீரர்களின் நோக்கமானது மலை, ஆறுகளை கடந்து வந்து இந்திய செல்வங்களை கொள்ளை அடிப்பதில் இருந்தது. ஆனால் இந்திய வீரர்களுக்கோ, மன்னர்களுக்கோ நாடு பிடிக்கும் ஆசை அரிதாகவே இருந்தது. மேலும் பெரும்பாலான போர்களில் இந்திய வீரர்கள் கடமைக்காகவும் வீரமரணத்திற்காகவும் மட்டுமே பங்கேற்றனர்.
   இந்திய மன்னர்களுக்கு நல்ல ஜாதிக் குதிரைகள் வளர்ப்பு என்பது எப்போதுமே புரிபடாமலே இருந்தது. சோழர்கள் கூட குதிரையை அரபு நாடுகளில் இருந்தேதான் இறக்குமதி செய்தனர். ஆனால் ஆப்கன் குதிரைபடையோ பிரத்யேக போர் பயிற்சி பெற்ற குதிரைப்படை.
   ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த இந்தியமன்னர்கள் மிகச் சிறந்த வீரர்கள். ஆனால் அவர்கள் போர்தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்ற பேரில் செய்த பல செயல்கள் பேராபத்தாக முடிந்தது.
   முக்கியமாக அவர்களிடம் எப்போதுமே ஒற்றுமை இல்லை. வேற்று நாட்டுப் படைகள் இந்தியாவில் நுழைவதற்கு இருந்த இரண்டே இரண்டு வழிகள் கைபர் கணவாயும், கோமல் கணவாயும் மட்டுமே… அந்த இரண்டு இடங்களிலும் சிறு கோட்டைகூட கட்ட எந்த மன்னருமே முன்வரவில்லை.. உனக்கு வரும் ஆபத்தை தடுக்க நான் ஏன் கோட்டை கட்ட வேண்டும் என்ற ரீதியிலேயே மன்னர்களின் செயல்பாடுகள் இருந்தன..

நூலைப் பற்றி:
   மொகலாய(மொகல்=மங்கோலியர்) சாம்ராஜ்யத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இந்த நூல் மிகவும் விரிவாக விளக்குகிறது.. கி.பி 1000 நூற்றாண்டில் தொடங்கி கி.பி 1858ல் கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆளுமையின் கீழ் இந்தியா சென்று மொகலாய பரம்பரையின் கடைசி மன்னரான பகதூர்ஷா கைதியாக பர்மாவிற்கு கப்பலில் நாடு கடத்தப்படுவது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை உண்மைக்கு மிக அருகில் இருந்து பேசுகிறது இந்த நூல்..
       இந்த நூலில் மொத்தமாக இருபத்து ஒன்பது மன்னர்களின் வாழ்க்கை மிக ஆழமாக விவரிக்கப்பட்டு உள்ளது. அத்தனை மன்னர்களையும் நான் விவரிக்க முயன்றால் அது புத்தகத்தின் மொத்த பக்கங்களைவிட அதிகமான பக்கங்களை எடுத்துக் கொள்ளும் என்கின்ற ஐயத்தால், எனக்கு முக்கியமான மன்னர்களாக தோன்றிய ஒரு சில மன்னர்களைப் பற்றி மட்டும் சற்று விரிவாக கூற முயற்சித்திருக்கிறேன்…

டெல்லி:
   முக்கியமாக போர் நடந்த இடங்கள் எல்லாம் டெல்லியை சுற்றிய பகுதிகள் என்பதால் டெல்லியை பற்றிய வரலாறு கொஞ்சம்…
டெல்லியை பற்றிய குறிப்புகள் கி.பி736ல் இருந்து மட்டுமே எழுத்து வடிவில் கிடைக்கின்றன.. ஆனால் அங்கு தோண்டி எடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அனைத்தும் கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் யமுனை நதிக்கரையில் இந்திரசேனா என்ற பெயரில் உண்டாக்கப்பட்ட நகரமே டெல்லி..
   பாண்டவர்களுக்கு பிறகு டெல்லியின் நிலைமை யாதென்றே தெரியவில்லை.. கி.முவில் வந்த மெகஸ்தனிஸ், ஹிவான்சுவாங் போன்ற வெளி நாட்டு பயணிகளின் குறிப்பிலும் டெல்லியை பற்றி ஏதுமேயில்லை.. கி.பி 736ல் தோமர்கள்(இராஜபுத்திரர்கள்) தில்லிகா என்ற பெயரில் டில்லியை ஆண்டு வந்தார்கள்..

ப்ருத்விராஜ்:
   நமக்கு மிகவும் பரிட்சயமான ப்ருதிவிராஜ்தான் இவர். குதிரையில் சென்று சம்யுக்தையை தூக்கிவந்து மணந்தாரே அவரேதான்… இவர் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர். ராஜபுத்திர வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன். கடைசி மன்னனும் கூட..
   கன்னோசி நாட்டு மன்னன் ஜெயசந்திரனின் மகள் சம்யுக்தையை ப்ருதிவிராஜ் காதலிக்க… அவனுக்கு தன் மகளை மணமுடிக்க விருப்பமில்லாத ஜெயசந்திரன், அவசர அவசரமாக சம்யுக்தைக்கு சுயம்வரம் நடத்துகிறான். ப்ருதிவிராஜ்க்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ப்ருதிவிராஜ் போல ஒரு சிலையை செய்து அரண்மனை வாயிலில் காவலனாக நிறுத்தி வைத்து கேலி செய்யவே, ப்ருதிவிராஜ் குதிரையில் வந்து சம்யுக்தையை அவளது சம்மதத்துடன் தூக்கி செல்கிறான்….

முகமது கோரி:
   கி.பி 1000ல் இருந்தே சிந்துநதி பகுதியில் ஈரானியர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் அனைவரும் ராஜபுத்திர இனத்திற்கு தொல்லை கொடுத்து கொண்டே இருந்தனர்… கி.பி 1191ல் ஆப்கானிய மன்னன் முகமது கோரியின் படையை ப்ருதிவிராஜ் குறுநில மன்னர்களுடன் சேர்ந்து தோற்கடித்தான்.. தோற்று ஓடிய முகமது கோரியை ப்ருதிவிராஜ் விரட்டி சென்று வெட்டவில்லை… ( ஏற்கனவே பார்த்தோமே…. போர் தர்மமாம்…?!)
    கோபம் கொண்ட முகமது கோரி 1192ல் மீண்டும் பெரும்படையுடன் வந்து போரிட்டான்… அப்போது ப்ருதிவிராஜ்க்கு கன்னோசி மன்னன் ஜெயசந்திரனிடம் இருந்து உதவி வந்திருந்தால் வரலாறு மாறி இருக்கும். கன்னோசி மன்னனும் உதவிக்கு வரவில்லை. ப்ருத்வியும் உதவி கேட்கவில்ல்லை… ப்ருதிவிராஜின் படை தோற்றது.. சிறை பிடிக்கப்பட்ட ப்ருத்விராஜ் முகமது கோரியின் முன்னால் இழுத்து செல்லப்பட.. கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ப்ருத்விராஜின் தலை துண்டிக்கப்பட்டது. (இதுவும் போர் தர்மம்தானாம்…?!)
      ஆர்ப்பாட்டமாக டெல்லி அரண்மனையில் நுழைந்த கோரியின் படை அரண்டு போய் நின்றது. அரண்மனையில் ஒரு பிணக்குவியலே கிடந்தது. ராணி சம்யுக்தை உட்பட பிற பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிர் துறந்து இருந்தனர்….
    எல்லாவற்றையும் கொள்ளையடித்த பிறகு முகமது கோரியின் படை படையெடுத்தது மன்னன் ஜெயசந்திரனின் கன்னோசி நாட்டின் மீது. அந்த போரில் ஜெயசந்திரனும் கொல்லப்பட்டான்.. முகமது கோரியிடம் அடிமையாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படைத்தளபதியாக உயர்ந்த ”குத்புதீன் அய்பெக்” டெல்லியின் மன்னனாக கோரியால் நியமிக்கப்பட்டார்….
    இந்த குத்பூதீன் அய்பெக்கால் கட்டப்பட்டது தான் குதுப்மினார். கி.பி 1368ல் இதன் மேல்தளத்தை இரண்டு பால்கனியாக பிரித்து கட்டியவர்தான் பிரோஷா துக்ளக். கி.பி 1848ல் கர்னல் ராபர்ட் ஸ்மித் குதுப்மினார் ஸ்தூபியின் மீது ஏற்றி வைத்த மேற்கூரை இடி தாக்கியதால் அகற்றப்பட்டு இன்றும் குதுப்மினாருக்கு அருகில் காட்சி அளிக்கிறது….
   குதுப்மினாருக்கு அருகே அலாவுதீன் கில்ஜியால் கட்டப்பட்ட ஒரு அரைகுறை ஸ்தூபியும் இன்றளவும் இருக்கிறது……

முகமது கஜினி:
           முகமது கஜினியை பற்றி நாம் என்ன படித்தோம்…. 17 முறை தோற்றாலும் விடாமுயற்சியால் பதினெட்டாவது முறை அவர் வெற்றி பெற்றார் என்று தானே… ஆனால் உண்மையான வரலாறு அவ்வாறு இல்லை நண்பர்களே… கஜினியின் முதல் 17 படையெடுப்புகளும் கூட வெற்றிதான்… ஏனென்றால் முகமது கஜினி முகமது கோரியை போல் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் வந்தவன் அல்ல… கொள்ளையடிக்கும் நோக்கம் மட்டுமே பிரதானம்… 17 படையெடுப்பிலும் அவன் வெற்றிகரமாக கொள்ளையடித்தே திரும்பினான்.
    கி.பி 1025ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனம் வழியாக குஜராத்தில் நுழைந்த கஜினியின் படை… புகழ்பெற்ற சோம்நாத் கோயிலை நோக்கி சென்றது… கோயில் என்பதால் தாக்குவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று கஜினி முகம்மது எண்ணினான்… ஆனால் சாதாரண குடியானவர்கள் முதற்கொண்டு பூசாரிகள் வரை அனைவரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போரிட்டனர்… கோபம் கொண்ட கஜினி முகம்மது எல்லாரையும் கொல்ல உத்தரவிட்டான்… அன்று அந்த கடற்கரையில் மட்டும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கும் அதிகம்….
   காந்தசக்தியால் கட்டப்பட்ட மிதக்கும் சிவலிங்கம் இடித்து தள்ளப்பட்டு அதற்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 6 டன் தங்க நகைகளை கஜினியின் படை கொள்ளையடித்து கொண்டு சென்றது… கடலின் நீர் 50000 மக்களின் உதிரத்தை வாங்கிக் கொண்டு ரத்த சிவப்பாக காட்சியளிக்க… கஜினியின் படை அடுத்த ஊரை நோக்கி நகரத் தொடங்கியது… கஜினிக்கு ஒரு பழக்கம் இருந்தது… அவன் தோற்கடித்த மன்னர்களின் கைவிரல்களை வெட்டி சேமித்துக் கொண்டிருந்தான்.
   இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டி கொள்ளைக்காரனை எதிர்க்கும் திறன் பெற்ற ஒரு இந்திய மன்னன் இருக்கத்தான் செய்தான்… ஆனால் அவன் என்ன காரணத்தினாலோ வட இந்தியாவில் தன் ஆதிக்கத்தை பரப்ப விரும்பாமல் கடல் கடந்து சென்று இலங்கை, சுமித்ரா, பர்மா போன்ற நாடுகளை கைப்பற்றுவதில்தான் ஆர்வம் கொண்டு இருந்தான்… அந்த மாவீரன் தான் ”ராஜேந்திர சோழன்”
    ஏனோ நமது மாவீரன் ராஜேந்திர சோழனும், அந்த காட்டுமிராண்டி கொள்ளைக்காரன் முகமது கஜினியும் சந்திக்காமலே போய்விட்டனர்… அப்படி சந்தித்து இருந்திருந்தால் வரலாறு வேறுமாதிரி மாறி இருக்கலாம்… ஆனால் இந்த முகமது கஜினி வந்ததால் தான் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய மன்னர்களான பாபரும், அக்பரும் நமக்கு கிடைத்தனர்.. இல்லையென்றால் நாம் அவர்களை இழந்து இருப்போம்

தைமூர்:
   மங்கோலிய துருக்கிய கலப்பினத்தின் மற்றொரு காட்டுமிராண்டி, போரில் விஷ அம்பு தைத்ததால் ஒரு காலை விந்தி விந்தி நடப்பான்… இதனால் அவனை நொண்டி என்றும் சிலர் மறைமுறைமாக விளிப்பர்… ஆனால் இவன் தோல்விகண்ட போரே கிடையாது… இவனுக்கு நம் யானைப்படையை கண்டு தான் பயம்… அவர்கள் யானையையே பார்த்தது கிடையாது… பாலைவனத்தில் எங்கு போய் யானைகளை பார்க்க….
      நம் யானைப்படைகளின் யானைகளை பார்த்தவன்… வியப்புடன் இந்த கரிய குன்று போன்ற பிராணிகள் எப்படி இவ்வளவு பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு இவ்வளவு வேகமாக ஓடுகின்றன.. என வியந்தான்… அடுத்து ஆணையிட்டான்… போர்களத்தில் ஏற்கனவே குத்திவைத்து மண்ணால் மூடப்பட்டு இருந்த சூலாயூதங்கள் யானைகளின் கால்களை பதம் பார்க்க… யானைகள் மதம் பிடித்து ஒடத் தொடங்கின… மேலும் வெளிவட்டத்தில் இருந்து எருமை, குதிரை இவைகளின் பின்னால் வைக்கோலை வைத்து கட்டி…. அதன் வட்டங்கள் சுருங்கிக் கொண்டே வர.. யானைகளை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் வைக்கோலின் மீது தீயை பொருத்திவிட…. நெருப்பு வளையம் தங்களை நெருங்குவதை கண்டு பயத்தில் பிளிறிய யானைகள், கண் மண் தெரியாமல் ஓடி இந்திய படைகளுக்கே பெருத்த சேதத்தை ஏற்படுத்தின…. ஒரு நாள் மாலைக்குள் போர் முடிந்தது…
    பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கைதிகளின் தலைகள் ஒரு மணி நேரத்திற்குள் வெட்டப்பட்டன… நேரத்தை மிச்சப்படுத்த தைமூர் தனக்கு குர்-ஆன் வாசிக்கும் முதியவர் கையிலும் ஒரு வாளையை கொடுத்து தலையை வெட்ட சொன்ன குரூரமும் நடந்தது.. அவனுக்கு யானைகளின் கலர் பிடிக்கவில்லை என்று கூறி சிவப்பு, பச்சை, மஞ்சள் கலரில் யானைகளுக்கு பெயிண்ட் அடித்து அவைகளையும், கலைஞர்கள், ஓவியர்கள், கட்டட கலை நிபுணர்கள் இவர்களுடன் யானைகளும் துருக்கிக்கு அவனோடு பயணித்தன…..

பாபர்:
  பாபரின் வாழ்க்கையில் அவர் சிலகாலம் நாடோடியாக திரிந்தது…. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது… தனித்துவிடப்பட்ட தன் நிலையை எண்ணி பாலைவனத்தில் அழுது புலம்பியது, சாமர்கண்ட் கோட்டையில் முற்றுகைக்கு ஆளான போது, மக்களுடன் சேர்ந்து கழுதை இறைச்சியை தின்றது என பல உண்மைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும்.
     மேலும் பாபரின் தனிப்பட்ட இயல்புகளான, இரு நண்பர்களை தனது புஜங்களில் தொங்க சொல்லி மைதானத்தில் ஓடுவது, எந்த ஆழமான ஆற்றைக் கண்டாலும் அதில் இறங்கி ஒரு கரையில் இருந்து மற்றொரு கரை நோக்கி நீந்திக் கடப்பது(கங்கை ஆறு உட்பட…), இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய போதும், பாபரின் ஆசை சாமர்கண்ட் நகரையே சுற்றி வந்த தகவலும், கடைசி வரை அவரால் சாமர்கண்டை வெல்ல முடியாமல் போன துரதிஷ்டத்தை எண்ணி கலங்குவது, இந்தியாவின் வெயிலை கண்டு பின்வாங்க எண்ணிய வீரர்களிடம் பாபர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை, போருக்கு போக வேண்டாம் என்று தடுத்த ஜோசியரை, போரில் வெற்றி பெற்று வந்து அவருக்கு பணமும் கொடுத்து நாடு கடத்தியது….. ராஜபுத்திர வீரர்களின் வீரத்தை குறிப்பாக ராணாசிங்கின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்த்தது.. என பல முக்கியமான தகவல்களை காணலாம்…

அக்பர்:
  அக்பர் தன் சிறுவயதில் தனது கார்டியனாக இருந்த பைராம்கானுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் தந்தை ஹீமாயூன் இறந்துவிடவே, மக்களுக்கு அதை தெரிவிக்காமல் வேறு ஒரு நபரை மன்னர் போல இருளான இடத்தில் அமர்த்தி நான்கு நாட்கள் ஆள செய்து.. போரில் அக்பர் வெற்றி பெற்றவுடன்.. பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒரு வயல்வெளியில் தற்காலிக மேடை அமைத்து அதில் பைராம்கான் அக்பருக்கு முடிசூட்டி மன்னராக அறிவிக்கிறார்…..
    அந்த தற்காலிக மேடையை இன்றும் கூட பஞ்சாப் மாநிலத்தில் அந்த மேடைகளுக்கு இடையில் காணலாம்…
   அக்பர் சில காலம் வளர்ப்புத்தாய் மஹாம் அங்காவின் பிடியில் இருந்தார்… அதனால் அந்த வளர்ப்புத்தாயின் சொந்தமகன் ஆதாம்கானின் அடாவடித்தனம்… அதை நேரில் கண்ட அக்பர் கோபத்தில் அவனை மேல்மாடத்தில் இருந்து கீழே தூக்கிப்போட உத்தரவு இடுவார்.. முதல் முறை போட்டும் அவன் உயிர் பிரியாததால் மீண்டும் இன்னோரு முறை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட சொல்லி உத்தரவு இட.. அவன் உயிர் பிரியும்…
   இது க்ருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த ”அக்பர்” திரைப்படத்தில் கூட இடம்பெற்றிருந்த காட்சி ஆகும்.. இந்த கதையை கூறிக் கொண்டே குழந்தைகளுக்கு அந்த திரைப்படத்தை போட்டு காண்பித்தால் அக்பரின் வரலாறு என்றுமே மறக்காது..
   எல்லா மதத்தையும் சமமாக பாவித்தவர். இந்து மதத்தை மதிக்க வேண்டும் என்பதாலேயே ராஜபுத்திர இனத்தை சேர்ந்த ஒர் இந்து பெண்ணை மனைவியாக்கி கொண்டவர். பீர்பாலுக்கும் அக்பருக்கும் இடையிலான உறவு, பீர்பால் இறந்ததை கேட்டு அக்பரின் நிலை, பைராம்கானை யானை பாகனை கொன்றதால் கடிந்து கொண்ட அக்பர், ஒற்றை கண்ணுடன் வீரமாக போர் புரிந்த ஹேமுவை அக்பர் வெல்வது, “தீன் இலாஹி” இதுவே இந்தியாவின் இப்போதைய தேவை என எல்லா மதத்திலும் உள்ள நல்ல நல்ல கோட்பாடுகளை எடுத்து புதிய மதத்தை நிறுவ முயலுவது என அக்பரின் வாழ்க்கையிலும் பல முக்கியமான தருணங்களை அழகாகவும், ஆழமாகவும் எடுத்து கூறுகிறது இந்நூல்.
   நான் மேற்சொன்ன விசயங்கள் எல்லாமே மொத்த செய்திகளில் இரண்டு சதவீதம் கூட இருக்காது என்பது திண்ணம்… இதையும் மீறி நான் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஒன்று சொல்லலாம்… நம் வீட்டில் ஏதேனும் வரலாற்று புத்தகம் இருக்கிறதோ இல்லையோ… கண்டிப்பாக இருக்க வேண்டிய, கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு வரலாற்று நூல் இந்த
                வந்தார்கள்………    வென்றார்கள்…………

No comments:

Post a Comment