தமிழ்சினிமாவில் இது முக்கியமான காலகட்டம் என்று
நினைக்கிறேன்.. தமிழ் சினிமாவின் பிடி மெல்ல மெல்ல ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்களின்
கைகளில் இருந்து நல்ல கதையுடன் வரும் இயக்குநர்களின் கைக்கு மாறிக் கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது. ஏனென்றால் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்க,
கதையை நம்பி புதுமுகங்களுடன் களம் இறங்கும் இளம் இயக்குநர்களின் படங்கள் மிகப்பெரிய
வெற்றிப்படங்களாக அமைந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சுப்ரமணியபுரம்,
களவாணி, அட்டகத்தி, பீட்சா.. இந்த வரிசையில் இப்போது ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..”
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் கிடையாது..
இங்கு கதையை ஒரு பத்தியில் சொல்வதால் உங்கள் சுவாரஸ்யங்கள் படம் பார்க்கும் போது எந்தவிதத்திலும்
குறைந்துவிடாது என்பதால்……
இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு
ஹீரோ ப்ரேம் (விஜய் சேதுபதி) தன் நண்பர்களுடன் விளையாட செல்ல… அங்கு கேட்சை பிடிக்கப்
போய் தடுமாறி விழுந்து மண்டையில் அடிபட.. கடந்த ஓராண்டு காலமாக நடந்த விசயங்களை மறந்துவிடுகிறார்.
இந்நிலையில் அவரது கல்யாணம், ரிசப்சன் இவை நடந்ததா..? இல்லையா..? உடன் சென்ற நண்பர்கள்
என்ன முடிவு செய்தார்கள்.. எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள்..? ப்ரேம் என்ன ஆனான்…?
இதுதான் கதை
இந்த ஒன்லைனை வைத்துக் கொண்டு ஒரு காமெடி தர்பாரே
நடத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு இது ஹீரோவாக மூன்றாவது படம். பீட்சாவிலேயே
அவரது நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று பலர் கூறினாலும் எனக்கு என்னவோ இந்த
படத்தில் தான் அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.. இந்த படத்தில்
மொத்தத்து அவருக்கு 5 அல்லது 6 வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொரு வசனத்தையும் அவர் 5 அல்லது
6 இடங்களில் பேச வேண்டும். மனுசர் ரணகளப்படுத்தி இருக்கிறார். அதிலும் கல்யாணப் பெண்ணை
பார்த்துவிட்டு ஒரு ரியாக்சன் கொடுப்பாரே தியேட்டரே குலுங்குகிறது. ஹாட்ஸ் ஆப் சேதுபதி..
ஹீரோவை தவிர படத்தில் பெரும்பாலான ஆட்கள் புதுமுகங்கள்.
ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. அதிலும் குறிப்பாக
விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் அந்த
சரஸ், பப்ஸ் மற்றும் இன்னொரு நண்பரின் நடிப்பு
மிக அருமை. சரஸ்க்கு சற்று சீரியஸான ரோல். ப்ரேமுக்கு மிக நெருக்கமான நண்பன் என்பதால்
அவரை முழுமையாக கையாளும் பொறுப்பு இவருக்கு. இதனால் இவர் சம்பந்தபட்ட சில காட்சிகள்
மட்டும் செண்டிமெண்ட் ரகம். ஆனால் இவர் ப்ரேமிடம் கேட்கும் அந்த வசனமான “நான் சொன்னா
கேப்பியா..? மாட்டியா..? என்ற வசனத்தை அவர் சொல்வதற்கு முன் ஆடியன்ஸ் சொல்லி கத்துவதன்
மூலமே தெரிகிறது அந்த கேரக்டர் எந்த அளவு ரீச் என்பது..
மற்ற இரண்டு நண்பர்கள் தான் மொத்த காமெடியையும்
குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.. கிரிக்கெட் ஆடும் போது ஆரம்பிக்கும் இவர்களது ஆர்பாட்டம்
க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. சீரியஸாக கிரிக்கெட் ஆடுவது, கிரிக்கெட் சீரியஸாக ஆடியதால்
தான் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டது என தங்களை நொந்து கொள்வது, ப்ரேமின் கேள்விக்கு
பதில் சொல்ல பயந்து அவனை மாற்றி மாற்றி பைக்கில் ஏற்றி செல்வது, காதலியின் முகத்தை
பார்த்ததும் அவனுக்கு எல்லாமே ஞாபகம் வரும் என்று நம்புவது, அதற்கு உல்டாவாக அங்கு
நடக்கும் களேபரம், ஹாஸ்பிட்டலில் இருந்து கொண்டே ஆபிஸில் இருப்பது போல் போன் பேசுவது,
சலூன் கடையில் அவனது வாயில் வெள்ளரியை வைத்து சமாளிப்பது.. இப்படி நான் சொல்லத் தொடங்கினால்
படத்தில் வரும் எல்லா காட்சியையுமே சொல்ல வேண்டி இருக்கும்.. அப்படி அதகளப்படுத்தி
இருக்கிறார்கள்…
இப்படி ஒட்டு மொத்த தியேட்டரே குலுங்கி குலுங்கி
சிரிப்பதை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன… அது சமீபத்தில் மசாலா கபேயில் சற்று நிறைவேறியது.
இந்த படத்தின் மூலம் முழுவதுமாக நிறைவேறி இருக்கிறது. குறையென்று சொல்லப் போனால் பர்ஸ்ட்
ஆப் சற்றே இழுவை ரகம்.. பேசியதையே மீண்டும் மீண்டும் பேசும் காட்சிகள் சில இடங்களில்
பொறுமையை சோதிக்கின்றன. இரண்டாம் பாதியில் படம் ஜெட் வேகத்தில் பரக்கிறது. ஆனால் கடைசி
இருபது நிமிடங்களில் சீக்கிரம் முடிங்கப்பா என்ற எண்ணம் தோன்றிய பிறகுதான் க்ளைமாக்சே
வருகிறது.. கதை, சஸ்பென்ஸ், திருப்பங்கள், அறிவுரைகள், லாஜிக், இப்படி எந்த ஒரு கச்சடாவும்
இல்லாமல் காட்சிக்கு காட்சிக்கு சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து எடுக்கப்பட்ட
படம் போல் தோன்றுகிறது. ஆனால் வழக்கமான தமிழ் சினிமாவின் பாணியில் இருந்து மாறுபட்ட
கதைக்களம் என்பதே இந்த படத்தின் பெரிய ப்ளஸ்..
கடைசியில் இது ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்க்கையில்
நடந்த உண்மை சம்பவம் என்று வேறு சொல்லிவிடுவதால் நம்புவதை தவிர வேறுவழி இல்லை. பாடல்கள்
என்று எதுவும் பெரிதாக கிடையாது.. பிண்ணனி இசை பரவாயில்லை ரகம்.. கேமராவும் சொல்லிக்
கொள்ளும்படி இல்லை… ஹீரோயினை பற்றி சொல்லவே இல்லையல்லவா… இப்படி படம் பார்க்கும் போதும்
நினைக்க தோன்றும்.. அப்படி தோன்றிய பின்னர்தான் ஹீரோயினே வருவார்… 18 வயசு படத்தில்
நடித்த பெண் தான் ஹீரோயின். அவருக்கு நடிப்பை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்பு ஏதும்
இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பாலாஜி முரளிதரனுக்கு இது முதல்படம். முதல்படமே வெற்றிப்படமாக அமைந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் பாலாஜி.இந்தபடம் இந்த வருடத்திற்கான மிகப்பெரிய ஹிட்
படங்களில் ஒன்றாக அமையும் என்றே தோன்றுகிறது.. போய் ஒரு மூன்று மணி நேரம் எதைப் பற்றியும்
யோசிக்காமல் சிரித்துவிட்டு வாருங்கள்.
No comments:
Post a Comment