சூர்யாவுக்கு
கண்டிப்பாக ஒரு வெற்றி தேவைப்படும் நேரம் இது. சரியான நேரத்தில் வெளிவந்து ஓங்கி அடித்து
அந்த வெற்றியை ஓரளவுக்கேனும் உறுதி செய்திருக்கிறது சிங்கம் 2. ஏற்கனவே ட்ரைலரைப் பார்த்தப்
பலபேர் ட்விட்டர், பேஸ்புக் என பல வலைதளங்களிலும் ட்ரைலைரைப் பார்க்கவே பயமாருக்கே
என்கின்ற ரீதியில் உபதேசித்துக் கொண்டிருக்க… அதை எல்லாம் பொய்யாக்கி வெற்றி பெற்றிருக்கிறது
இந்த சிங்கக் கூட்டம்.
பொதுவாகவே
ஹரியின் படங்கள் என்றால் எந்தவித தயக்கமும் இன்றி
பார்த்துவிடுவேன். அவர் ஒரு கமர்ஸியல் இயக்குநர் தான். அதில் மாற்றுக் கருத்தே
இல்லை. அவருக்கு படத்தின் வணிக ரீதியான வெற்றி மட்டுமே முக்கியம். அதிலும் எந்த ஐயப்பாடும்
இல்லை. இருந்தாலும் ஒரு இரண்டரை மணி நேரம் எதைப் பற்றியும் ஆடியன்ஸை யோசிக்க விடாமல்
விறுவிறுப்பாக கதை சொல்வது எப்படி என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். மேலும் மிகமிக
முக்கியமாக வணிக வியாபாரத்துக்காக, சமூகத்தை பாழ்படுத்தும் எந்தவொரு விசயத்தையும் பண்டமாக்கி
விற்பனை செய்யும் முயற்சி அவரது படங்களில் இருக்கவே இருக்காது. இந்த முக்கிய காரணத்தாலேயே
அவர் எனக்கு பிடித்தமானவராக மாறிப் போகிறார்.
இந்த
சிங்கம் 2விலும் சரபுரவென வினாடிக்கு மூன்று முறை பாய்ந்துவரும் கார்கள், மூச்சுவிடக்
கூட நேரம் இல்லாமல் முழுமூச்சாக அடித் தொண்டையிலிருந்து கத்திக் கொண்டு இருக்கும் நாயகனும்
வில்லனும், இப்படி இயக்குநர் ஹரி படத்திற்கே உரித்தான ஆஸ்தான அணிகலன்கள் இந்தப் படத்திலும்
உண்டு. ஆனால் இவை எதுவுமே உறுத்தாத, மேற்சொன்னபடி இரண்டரை மணி நேரம் எதையுமே யோசிக்கவிடாத
அந்த திரைக்கதை இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.
முதல்
பாகத்தின் முடிவில் வேலை ராஜினாமா செய்துவிட்டு, மளிகைகடை வைக்கப் போவதாய் சொல்லும்
துரைசிங்கத்திடம் ஹோம் மினிஸ்டர் ஆப் ட்யூட்டியில் கடலோரப் பகுதியை கண்காணிக்கும் பொறுப்பை
ஒப்படைப்பார். அங்கிருந்து தொடங்கும் இரண்டாம் பாதியில் பள்ளியில் NCC ஆசிரியராகத்
தொடரும் சூர்யா, கடலோரப் பகுதிகளில் நடக்கும் கடத்தல் ஆயூத கடத்தலா என்ற சந்தேகத்தில்
அதை கண்காணிக்க.. அது போதைப் பொருள் கடத்தல் என்பது தெரியவருகிறது. அந்த கும்பலை எப்படி
சூர்யா பிடித்தார் என்பது சிங்கம் 2வின் மீதிக் கதை.
சூர்யா,
ஹன்சிகா, அனுஷ்கா, சந்தானம், விவேக் நாசர், ரகுமான், ராதாரவி, மன்சூர் அலிகான் என மிகப்பெரிய
நடிகப் பட்டாளமே இருந்தாலும் திரையெங்கும் வியாபித்து தனிப்பெரும்பான்மை பிடிப்பது
சூர்யா.. சூர்யா.. சூர்யா மட்டுமே.. துரைசிங்கம் என்னும் DSP கேரக்டருக்கென்றே பிறந்தவர்
போல் பொருந்திப் போகிறார். தூத்துக்குடி நகரில் வன்முறை தலைதூக்கும் போது வேறுவழியின்றி
தன் NCC ஆபிஸர் வேசத்தைக் கலைத்துவிட்டு போலீஸ் யூனிபார்மை எடுத்து மாட்டும் போது தொடங்கும்
சிங்கத்தின் கர்ஜனை.. க்ளைமாக்ஸ் வரை ஒலிக்கிறது.
கடத்தப்பட்ட
பெண்ணை மீட்க, அவர் வகுக்கும் வியூகங்களும், சகாயமாக வரும் நான் கடவுள் ராஜேந்திரனைப்
பிடிக்கப் போன இடத்தில், அங்கு வாய் உதார் விட்டுக் கொண்டு இருக்கும் ஸ்மெக்லர் டேனியை
புடதியில் அடித்து இழுத்துச் செல்லும் இடத்திலும், தேசிய கீதம் பாடும் போது அத்துமீறி
நுழைந்தவனை அடித்துவிட்டு, கட்சிக் கொடி அதிகமானதால தேசியக் கொடிக்கு வித்தியாசம் தெரியாமப்
போயிருச்சில்ல… என்று கர்ஜிக்கும் போதும் கம்பீரமான நடிப்பு.
தப்பு
பண்ணுனான்னு தண்டிச்ச வாத்தியார கண்டிக்க நீங்க வர்றதாலதா.. நம்ம புள்ளைங்கள போலீஸ்காரனும்
ஜெயில்ல வார்டனும் தண்டிக்க வேண்டிய சூழ்நிலை வருதுடா.. என பொங்குவதும், போலீஸ் வேலையை
விட்டுவிட்டு வந்ததால் அப்பா ராதாரவி மகனுடன் பேசுவதை தவிர்க்க, அதை எண்ணிக் கலங்கும்
தாயை தேற்றும் போதும், தன் காதலியை அவமானப்படுத்திய ஹன்சிகாவை கண்டிக்கும் போதும் ...வெரைட்டியான
நடிப்பு. போலீஸ் நிலையத்தை சூறையாடி கொளுத்திவிட்டு ஸ்மக்லர் டேனியை தப்பிக்க வைக்க
உதவிய உயர் அதிகாரிகளிடம் எகிறும் போதும் அனல் பறக்கிறது சூர்யாவின் நடிப்பில்… வாழ்த்துக்கள்
சூர்யா….
ஸ்கூலில்
+2 படிக்கும் மாணவியா………!?க ஹன்சிகா. சூர்யாவை ஒருதலையாக காதலித்து, அழகு பதுமையாக
ஆங்காங்கே ஸ்கீரினை நிரப்பி, அணில் உதவி செய்யும் கதாபாத்திரம். நிறைவாகவே செய்திருக்கிறார்.
அனுஷ்காவுக்கு என்னாயிற்று…? பாவம்…. முகத்தில் அந்த களையே இல்லை… படம் முழுவதும் சோர்வாகவே
தென்படுகிறார்.. தன் கல்யாணம் தள்ளிப் போனாலும்
அதைப் பற்றி கவலைப்படாமல், தன் வருங்காலக் கணவன் எதற்காக போலீஸ் வேலையைவிட்டு விட்டு
NCC மாஸ்டராக இருக்கிறார் என்பதைப் பற்றி ஒரு கேள்வி கூடக் கேட்காமல், கேட்டால் எல்லாவற்றுக்கும்
ஒரே பதிலாக “பிகாஸ் ஐ லவ் யூ” என்று சொல்லி கடைசி வரை காதலனுக்கு துணை நிற்கும் கண்ணியமான
பாத்திரம். வில்லன்களாக நான் கடவுள் ராஜேந்திரன், நைஜீரிய இளைஞர் டேனி சபானி, வசீம்கான்
ரகுமான் மற்றும் இருந்தும் ஒத்தை ஆளாக நின்று ஒண்டிக்கு ஒண்டி மோதிய பிரகாஷ்ராஜ்க்கு
ஈடாகவில்லை என்பது படத்துக்கு மிகப்பெரிய குறை… சந்தானமும் வடிவேலுவும் வெடிக்கும்
தோட்டாக்களுக்கு நடுவே ஆங்காங்கே சிரிப்பு பட்டாசு வெடிக்கிறார்கள். வாழைக்காய் சீவும்
ஜோக்கும், பாவ மன்னிப்பு கேட்கும் ஜோக்கும் சந்தானத்தின் பிராண்ட். விவேக் அவர் பங்குக்கு
சில பஞ்ச் டையலாக் அடிக்கிறார்… சில இடங்களில் தான் சிரிப்பு வருகிறது.
இசை
தேவி ஸ்ரீபிரசாத். “கடலுக்குள்ள நுழைஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கமும், சிங்கம் டான்ஸ்
பாடலும் ஆட்டம் போட வைக்கிறது. பிண்ணனி இசை பரவாயில்லை ரகம்.. ஒளிப்பதிவு ப்ரியன்..
வழக்கம் போல ஹரியின் திரைக்கதைக்கு தேவையான ஒளிப்பதிவு.. நிறைவாகவே செய்திருக்கிறார்.
சிங்கம் பர்ஸ்ட் பார்ட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் இருந்த ப்ரெஸ்னஸ், கிரிஸ்ப்
எல்லாமே இதில் கொஞ்சம் கம்மி, நீளமும் சற்று அதிகம், அதுபோல சூர்யாவை தென்னாப்பிரிக்க போலீசாரும் புகழ்வது போன்ற அதீத துதிபாடலை தவிர்த்திருக்கலாம் என்றாலும், எந்த லாஜிக் ஓட்டையைப்
பற்றியும் யோசிக்கவிடாத திரைக்கதை, ஆங்காங்கே தூவப் பட்டு இருக்கும் டீடெய்லிங்க்,
காமெடி, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க ஏதுவான காட்சி அமைப்புகள், இதையெல்லாம் மீறி
சூர்யாவின் ஆகச்சிறந்த பெர்ஃபாமன்ஸ் இவையெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல கமர்ஸியல் காக்டெயில்
விருந்தளிக்கிறது…. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்….
No comments:
Post a Comment