உங்கள்
பாசத்துக்குரிய பாரதிராஜாவின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் படம். இந்தமுறையும் கிராமத்து
மண் வாசனையோடு வந்திருக்கிறேன் என்று சொல்லியே படத்தை துவங்குகிறார். இவருடைய முந்தைய
படமான பொம்மலாட்டம் எனக்கு பிடித்திருந்தது. அதில் கிராமத்துக்கான அழகியலோ மண் வாசனையோ,
சொந்த அடையாளங்களோ இல்லாமல் இருந்தாலும், ஒரு கலைஞனுக்கு உள்ள மனக்கசப்புகளை மிக நேர்த்தியான
திரைக்கதையோடு சொல்லிய படம் பொம்மலாட்டம். ஆனால் இந்த அன்னக்கொடியோ மண் வாசனையோடு,
கிராமத்து அழகியலோடு சொந்த அடையாளங்களை சுமந்து கொண்டு வந்திருந்தாலும் ”காதல் கைகூடுமா..?
இல்லையா…?” என்னும் கருவையே பாடுபொருளாகக் கொண்டு பழமையான பாழடைந்த கட்டிடங்களிலேயே
படர முனைவதால் அன்னக்கொடி வலுவிழக்கிறது…
கதை
இதுதான். அன்னக்கொடி என்ற ஆடு மேய்க்கும் பெண்ணுக்கும், கொடி வீரன் என்ற ஆடு மேய்க்கும்
இளைஞனுக்கும் காதல். அன்னக்கொடி மீது கொண்ட விரோதத்தால் அவளை பழிவாங்கும் எண்ணத்தில்
அவளது காதலனை கம்பி எண்ண வைத்து, அன்னக்கொடியை திருமணம் செய்து கொள்கிறான் பண்ணையார்
பாவனையுடன் உலவி வரும் சடையன் என்னும் வில்லன். விடுதலையாகி வந்த காதலன் என்ன செய்தான்…?
அவர்கள் காதல் என்னவானது என்பது மீதிக்கதை…
அன்னக்கொடியாக
ராதாவின் மகள் கார்த்திகா. முந்தைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இயக்குநர் பாரதிராஜாவின்
புண்ணியத்தால் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருக்கிறார். தன் செருப்பை எடுத்துக் கொண்டு
ஓடும் கொடிவீரனை ஒவ்வொரு பெயராக சொல்லித் திட்டிக் கொண்டே துரத்தும் போது, அச்சு அசலாக
நம் ஊர் பக்கம் இருக்கும் ஆடு மேய்க்கும் பெண்ணை நினைவுபடுத்துகிறார். காதலனின் கவனத்தை
திசை திருப்ப ஆடு போல கத்துவதும், அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டபிறகு என்ன செய்வது
என்று தெரியாமல் மீண்டும் பரிதாபமாக ஆடு மாதிரி கத்துவதும்… தன் சேலையை உருவிப் போட்டுவிட்டு,
பாயில் அமர்ந்து கொண்டு தன் கணவன் சடையனை சவால்விட்டு அழைக்கும் போதும், தன் காதலன்
ஆட்டுத் தொழுவத்தில் விட்டுச் சென்ற ஒற்றைச் செருப்பை கண்டு கண் கலங்கும் போதும், கிழிந்த
சட்டையால் தன் உடலை மறைத்துக் கொண்டு காதலனைத் தேடி ஓடும் போதும் அற்புதமான நடிப்பு.
கிரிடிட்ட்ஸ் கோஸ் டூ பாரதிராஜா சார்…
கொடிவீரனாக
அறிமுக நாயகன் லஷ்மண். அறிமுகப் படம்தான் பெரிதாக இவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது
என்றாலும், பாரதிராஜாவின் கையில் கூட இவரால் பிரகாசிக்க முடியவில்லை என்று என்னும்
போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆரம்ப காட்சிகளில் ஓரிரு இடத்திலாவது நடித்தவருக்கு அடுத்து
நடிப்பு வருவேனா என்கிறது… அதிலும் குறிப்பாக தன் காதலி இன்னொருவனின் மனைவியாகி மாட்டுவண்டியில்
சென்று கொண்டிருப்பதைக் கண்டு கண் கலங்கும் காட்சியே… அவருக்கு நடிப்பு வரவே இல்லை
என்பதற்கு சாட்சி…
சடையனாக
பாரதிராஜாவின் மகன் மனோஜ். முதன்முறையாக நடிக்க வாய்ப்பு உள்ள கதாபாத்திரம். பிறர்
ஏற்று நடிக்க சற்று தயங்கும் கதாபாத்திரமும் கூட.. ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார்.
தன் மனைவியை போதை வெறியுடன் நெருங்கிவிட்டு தொடாமல், ”நீ அவனல்ல நினைச்சுகிட்டு இருக்க…
நான் எப்புடி உன்ன தொடமுடியும்… நானும் தொடமாட்டே.. எவனையும் தொடவும் விடமாட்டே..”
என வீராப்பாக விலகிச் செல்லும் போதும், “விடக்கோழி குழம்புதா… விளஞ்ச கம்மஞ் சோறுதா….
ஐஞ்சனக்கா ஜனக்குதா… சடையன் போட்ட கணக்குத்தா… என சொலவடையாக பாடிக் கொண்டு உறுமாவை
தலையில் கட்டிக் கொண்டு பழி வாங்க விரட்டும் போதும் மிகையில்லாத நடிப்பு..
சடையன்
மனோஜின் அப்பா சங்குனியாக நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பும் ஓகே. கட்டாத வட்டிப்
பணத்திற்காக அவன் கட்டி வைத்திருக்கும் மனைவியைத் தூக்கிவந்து பெண்டாளும் கேரக்டர்.
கிராமப்புறங்களில் இது போன்ற நபர்கள் உண்டு. அதுபோல அவ்வாறு தூக்கிச் சென்று வைத்திருக்கும்
தன் மனைவியை மீட்க திருட்டுத்தனமாக வரும் தன் கணவனிடம்.. “அங்கேயே இருந்து சுகம் கண்ட
அவன் மனைவி வர மறுப்பதுமான கூத்துக்களும் கிராமங்களில் கேள்விப்பட்டதுதான். அதையும்
இங்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
சட்டையணியாத
பெண்கள் பாரதிராஜா படங்களின் அடையாளம் என்று பேச்சு உருவானதை சட்டை செய்வதே இல்லை இயக்குநர்.
இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆடுகளம் மீனாளுக்கு ஊரில் சரச வேலை செய்யும்
கதாபாத்திரம்.. வஞ்சனையில்லாமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். இது போதாதென்று கார்த்திகாவையும்
ஒரு காட்சியின் ஊடே சட்டை அணியாமல் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்…
இயக்குநர்
பாரதிராஜா தன் படங்களுக்கான காப்புரிமை பெற்ற காட்சிகளான, காதல் மலர்ந்ததும் பட்டாம்பூச்சி
பறப்பதும், சோகம் என்றதும் வானத்தை மின்னல் கீறி உடைப்பதும், துள்ளி துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டிகளும்,
அதன் காம்பில் இருந்து பிதுக்கப்பட்டு சீறித் தெறிக்கும் பாலும், கிராமத்து காவல் தெய்வங்களின்
அச்சுறுத்தும் குளோசப் காட்சிகளும் இதிலும் உண்டு..
இவைதவிர
நாம் மறந்துவரும் மண்சார்ந்த சில விசயங்களான, உலை வைக்க பக்கத்து வீட்டில் இருந்து
கங்கு எடுத்து வருவதும், காலில் குத்திய முள்ளை எடுக்க, அதில் கல் உப்பை வைத்து தீயில்
சுடுவதும், நெருப்பால் சுட்ட இடத்தை நாக்கில் பால் கொண்டு நனைப்பதும், முனி சாமி மரத்தில்
விருட்டென்று தொங்கிக் கொண்ட செருப்புகளும், திருவிழாவின் போது சாமிக்கு காணிக்கை செலுத்த
ஆளுயரத்தில் மரத்தால் செய்து வைத்திருக்கும் வாய் அகன்ற உண்டியல்களும், அதில் உயிரோடு,
கோழி, ஆடு போன்றவற்றைப் போட்டு மரத்தட்டால் மூடி ஆணி அறைந்துவிட்டு அதை திருவிழா நாளன்று
மலை உச்சியில் இருந்து பள்ளத்தை நோக்கி உருட்டிவிட்டு காணிக்கை செலுத்துவதுமான காட்சிகள்
எல்லாம் தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களை தாங்கி நிற்கின்றன.. அதற்காக மட்டும் ஸ்பெசல்
பாராட்டுகள் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு…
இதுதவிர
அவரின் முத்திரை என்று பார்த்தால், அன்னக்கொடிக்கும் கொடிவீரனுக்குமான காதலை இரண்டே
காட்சிகளில் கடந்துவிட்டு, அவர்கள் காதல் முறிந்த நிலையில் அது எப்படி எல்லாம் வளர்ந்த
காதலென்பதை அவர்களின் நினைவுகூறலாக காட்சிப்படுத்தி இருப்பது அருமை. மேலும் பேசும்
வசனங்கள் எல்லாம் வெகு இயல்பாக இருப்பதால் கதையோடு ஒன்ற முடிகிறது. “கால்ல செருப்பு
போடாம போனா கல்லும் முள்ளும் தாண்டா குத்தும்.. செருப்பு போட்டுட்டு குடியானவ தெருக்குள்ள
போன ஆளயே குத்துவான்ய்ங்கடா…” என்ற வசனம் சுருக்கென்று தைக்கும்.. கதை நடக்கும் கால
கட்டம் அறுதியிட்டு சொல்ல முடியாதது. எனினும் அரைகால் டவுசர் அணிந்த போலீசைப் பார்க்கும்
போதும், முதன்முதலாக கரெண்ட் இழுக்கும் காட்சி மூலமும் பார்க்கும் போது, 70ன் முற்பகுதியாக
இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் வரும் நாயகன் மட்டும் ட்ரிம்
செய்த மீசை வைத்துக் கொண்டு இருக்கிறான்.. சடையனோ…? தேள் உருவத்தை டாட்டு வரைந்திருக்கிறான்…?
எப்படி என்று தெரியவில்லை… இசை ஜி.வி. பாடல்களை விட பிண்ணனி இசை பரவாய்யில்லை ரகம்...
இப்படி
பாராட்டுவதற்கும் பல விசயங்கள் இருந்தாலும் கதை அதர பழசான கதை என்பது மட்டுமே மைனஸ்.
அதுதவிர்த்து சில காட்சிகளும் 80களில் எடுக்கப்பட்ட படக் காட்சிகளைப் போலவே வெகு மேலோட்டமாக
இருக்கிறது. ஆனால் இவை தவிர்த்து அந்த கிராமத்தின் அழகியல், நேட்டிவிட்டி, இயல்பான
பேச்சுமொழி சொலவடைகள், கிராமத்து நம்பிக்கைகள் இவைகளைப் பார்த்து நாளாயிற்றே என்று
ஏங்குபவர்களுக்கு பாரதிராஜாவின் அன்னக்கொடி கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காது.
No comments:
Post a Comment