Saturday, 30 December 2017

அருவி :

இந்த வருடத்தின் மிகச்சிறப்பான படங்களில் ஒன்று இந்த அருவி. தன் மகள் அருவியின் மீது சிறுவயதிலிருந்தே பாசத்தைக் கொட்டி வளர்க்கும் பெற்றோர்கள், மிக முக்கியமாக அவர்களது அரவணைப்பு அவளுக்குத் தேவைப்படும் தருணத்தில், நம்பாமல் கைவிடுவதால், அந்த அருவி என்னும் இளம் பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு கேள்விக்கு உள்ளாகிறது என்பதே இந்த அருவி திரைப்படத்தின் ஒற்றை வரிக்கதை. புதுமுக இயக்குநர், ஒரு நடிகர் கூட முகம் தெரிந்த நடிகர் என்று சொல்வதற்கு இல்லை.. அனைவருமே புதியவர்கள், இசையமைப்பாளர்களும் புதியவர்கள். அப்படி இருந்தும் இப்படி ஒரு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது என்றால், அது இவர்களின் உழைப்புக்கு கிடைத்திருக்கும் பரிசு.


திரைப்படத்தில் நாயகன் இல்லை, வில்லன் இல்லை, பரபரவென்று செல்லக்கூடிய திரைக்கதை இல்லை, அடுத்த என்ன நடக்குமோ என்கின்ற எதிர்பார்ப்பு இல்லை, ஆனாலும் படம் முழுக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது என்பது தான் இந்த அருவியின் சிறப்பு. கதையோட்டத்தில் ஒரு முக்கியமான முடிச்சி அவிழும் போது, இனி வரும் காட்சிகள் எல்லாம், அழுகையும் ஒப்பாரியுமாக கடக்கப் போகிறது என்று நாம் காத்திருந்தால், நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக கேலியும், சிரிப்பும், நையாண்டியும் கொண்டாட்டமுமாக திரைப்படம் செல்வது தான் அருவிக்கு கிடைத்திருக்கும் அதிரிபுதிரியான ஆதரவுக்கு காரணம் என்று சொல்லலாம். மனிதர்களை எல்லாம் நாயகனாகவும், நாயகியாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் கலர் கலராக ரீல் விட்டுக் காட்டிய அகண்ட திரையில், மனிதர்களை நன்மையும் தீமையும் ஆசையும் குரோதமும், உண்மையும் பொய்யும் கொண்ட உண்மையான மனிதர்களாக, சதைப்பிண்டங்களாக, அவர்களின் சாயங்களை எல்லாம் கழுவிவிட்டு அகண்ட திரையில் காட்டியிருப்பது தான், இந்த பேரருவியின் சாதனை என்று சொல்லலாம்.


அருவியாக நடித்திருக்கும் நாயகியின் பெயர் அதிதி பாலன். கோட்டூர்புரத்தில் ஒரு வக்கீலாக பணிபுரியும் இவர், ஓரிரு மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் மட்டுமே கொண்டவர். இருப்பினும் இத்திரைப்படத்தின் மொத்த பலமுமே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் அசத்தி இருக்கிறார். வீட்டில் தன் மீது சந்தேகக்கணைகள் விழத் தொடங்கி, தன் பிரியமான தம்பியை பெற்றோர்களே தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்பதனை உணரத் தொடங்கி உடைந்து அழுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தன் தந்தையைக் காண, தான் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த பணத்துடன் வந்து தன்னை உள்ளே செல்லவிடாமல் தடுக்கும் தன் தம்பியிடம் மன்றாடுவது, இக்கட்டான தருணத்தில் சாகப் போறோம்னு பயமே இல்லையா..? என்று கேட்கும் கேள்விக்கு விடையாக வாழ்க்கை என்று பெயர் வைத்து, நாம் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான பிழைப்பை, அந்தப் பிரசித்தி பெற்ற இரண்டரை நிமிட வசனத்தால் கிழித்துத் தொங்கவிடுவது, திரைப்படத்தின் முக்கியமான முடிச்சை அவிழ்க்கும் இடத்தில், பேயறைந்தார் போல் நிற்கும் மொத்த கும்பலையும் அலட்சியமாகப் ஒரு ஏளனப்பார்வைப் பார்த்து சிரித்தபடி செல்வது, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும் போது, தனக்கு தொடர்புடைய நபர்களுக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்பி, அதன் வாயிலாக அவர்களோடு பேசும் அந்த உணர்வு பூர்வமான தருணமும், அதிதி பாலன் இந்த திரைப்படத்தில் பெயரில் மட்டுமல்ல, தான் நடிப்பிலும் ஒரு அருவி என்பதை நிருபிக்கிறார்.


“இந்தா பாரும்மா.. நான் உண்டு, என் ப்ளு ஜட்டி உண்டுன்னு… நான் என் பாட்டுக்கு இருக்கேன்னு நா சொல்லிட்டேனாக்கும்…” என்று தன் கள்ளம் கபடமற்ற பேச்சால் அறிமுகமாகி, எல்லார் மனதிலும் இடம் பிடிக்கும் திருநங்கை தோழி “எமிலி” அருவியின் அடுத்த பேரழகி. “ரோலிங் சார்..” என்கின்ற வார்த்தையையே ஒரு காமெடியாக மாற்றி திரையரங்கை அதிர செய்திருப்பதும், அருவியின் கதாபாத்திரத்தில் சீரியஸான இடங்களில் கூட விளையாட்டுத்தனம் துள்ளும் மிடுக்கை திரைக்கதையில் அழகாக செதுக்கி இருப்பதும், மிகச் சிக்கலான உணர்வுபூர்வமான கதைக்களனுக்குள் தற்கால வணிகம், வாழ்க்கை முறைகள், சினிமா, அரசியல், திருநங்கைகளின் வாழ்க்கை, மீடியாக்களின் இரட்டை வேடம், சாதி அரசியல், மீனவர்களின் நிலை என அனைத்தையும் கலந்து கட்டி கிண்டல் செய்திருப்பதும், மிக முக்கியமாக இவைகளை கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாதவாறு, மிக கலகலப்பாக திரையில் கொண்டு வந்திருப்பதும் அருவி திரைப்படத்தின் கவனிக்கத்தக்க அம்சங்கள்.  


கதையின் மிக நுணுக்கமான உள்ளடக்கங்களைப் பற்றி, நாம் பேச முனைந்தால், அது படம் பார்க்கும் போது, உங்களுக்கு சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தும் என்பதால், அதை பேசாமல் தவிர்க்கிறோம். ரேமண்ட் டேரிக் கிரஸ்டாவின் கலைநுணுக்கமான எடிட்டிங் கத்தரிகள் திரைப்படத்தின் சுவாரஸ்யத்தை ஒரு படி கூட்டியிருக்கின்றன என்றே சொல்லலாம். புது முக இசையமைப்பாளர்களான வேதாந்த் பரத்வாஜ் மற்றும் பிந்து மாலினியின் கூட்டணி, மிக பிரத்தியேகமான ஒரு இசைக்கோர்வையை திரைப்படத்துக்கு கொடுத்திருக்கிறது. பிண்ணனி இசை, பாடல்கள் என இரண்டு தரப்பிலும் திரைப்படத்தை அடுத்த இடத்திற்கு நகர்த்திருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. ஷெல்லி ஹெலிஸ்சின் ஒளிப்பதிவு காட்சிக்கு தேவையானதை கச்சிதமாகக் காட்டி இருக்கிறது. அது போல சவுண்ட் மிக்ஸிங்கும் மிக பிரத்யேகமான முறையில் இருப்பதாக, பல வல்லுநர்களும் பாராட்டி இருக்கிறார்கள். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு இது முதல் படமாம். முதல் படத்திலேயே புது முக நடிகர்கள், புது இசையமைப்பாளர் எடிட்டர்களைக் கொண்டே இவ்வளவு தரமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் இந்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அருவி திரைப்படம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், எல்லோரும் பேசத் தயங்கும், அல்லது பேசாமல் தவிர்க்கும் சில விசயங்களை சத்தம் போட்டு பேசுவதோடு அல்லாமல், அவை குறித்த கேள்விகளையும் புரிந்துணர்வுகளையும் சாதாரண மக்கள் மனதில் விதைப்பதால் தான். இது போன்ற திரைப்படைப்புகள் சமுதாயத்துக்கும், இளம் தலைமுறையினருக்கும், வழிகாட்டும் என்பதாலும், இளம் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதாலும் இவ்வளவு சிறப்பான ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கும், இதை தயாரிக்க முன் வந்த ரசனை மற்றும் தைரியத்துக்காக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கும் வெற்றி வேந்தன் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும். மொத்தத்தில் இந்த அருவி, வாழ்க்கையின் உச்சத்தில் இருந்து படுபாதாளத்தில் வீழ்வதைப் பற்றி மட்டும் பேசாமல், வீழ்ந்தாலும் எப்படி ஆறாக மாறி ஓடுவது என்பதனையும் வாழ்க்கையின் அழகியல் மற்றும் புரிதலோடு பேசுவதால், மிக முக்கியமான தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.


2 comments: