Saturday, 30 December 2017

அருவி :

இந்த வருடத்தின் மிகச்சிறப்பான படங்களில் ஒன்று இந்த அருவி. தன் மகள் அருவியின் மீது சிறுவயதிலிருந்தே பாசத்தைக் கொட்டி வளர்க்கும் பெற்றோர்கள், மிக முக்கியமாக அவர்களது அரவணைப்பு அவளுக்குத் தேவைப்படும் தருணத்தில், நம்பாமல் கைவிடுவதால், அந்த அருவி என்னும் இளம் பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு கேள்விக்கு உள்ளாகிறது என்பதே இந்த அருவி திரைப்படத்தின் ஒற்றை வரிக்கதை. புதுமுக இயக்குநர், ஒரு நடிகர் கூட முகம் தெரிந்த நடிகர் என்று சொல்வதற்கு இல்லை.. அனைவருமே புதியவர்கள், இசையமைப்பாளர்களும் புதியவர்கள். அப்படி இருந்தும் இப்படி ஒரு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது என்றால், அது இவர்களின் உழைப்புக்கு கிடைத்திருக்கும் பரிசு.


திரைப்படத்தில் நாயகன் இல்லை, வில்லன் இல்லை, பரபரவென்று செல்லக்கூடிய திரைக்கதை இல்லை, அடுத்த என்ன நடக்குமோ என்கின்ற எதிர்பார்ப்பு இல்லை, ஆனாலும் படம் முழுக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது என்பது தான் இந்த அருவியின் சிறப்பு. கதையோட்டத்தில் ஒரு முக்கியமான முடிச்சி அவிழும் போது, இனி வரும் காட்சிகள் எல்லாம், அழுகையும் ஒப்பாரியுமாக கடக்கப் போகிறது என்று நாம் காத்திருந்தால், நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக கேலியும், சிரிப்பும், நையாண்டியும் கொண்டாட்டமுமாக திரைப்படம் செல்வது தான் அருவிக்கு கிடைத்திருக்கும் அதிரிபுதிரியான ஆதரவுக்கு காரணம் என்று சொல்லலாம். மனிதர்களை எல்லாம் நாயகனாகவும், நாயகியாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் கலர் கலராக ரீல் விட்டுக் காட்டிய அகண்ட திரையில், மனிதர்களை நன்மையும் தீமையும் ஆசையும் குரோதமும், உண்மையும் பொய்யும் கொண்ட உண்மையான மனிதர்களாக, சதைப்பிண்டங்களாக, அவர்களின் சாயங்களை எல்லாம் கழுவிவிட்டு அகண்ட திரையில் காட்டியிருப்பது தான், இந்த பேரருவியின் சாதனை என்று சொல்லலாம்.


அருவியாக நடித்திருக்கும் நாயகியின் பெயர் அதிதி பாலன். கோட்டூர்புரத்தில் ஒரு வக்கீலாக பணிபுரியும் இவர், ஓரிரு மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் மட்டுமே கொண்டவர். இருப்பினும் இத்திரைப்படத்தின் மொத்த பலமுமே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் அசத்தி இருக்கிறார். வீட்டில் தன் மீது சந்தேகக்கணைகள் விழத் தொடங்கி, தன் பிரியமான தம்பியை பெற்றோர்களே தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்பதனை உணரத் தொடங்கி உடைந்து அழுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தன் தந்தையைக் காண, தான் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த பணத்துடன் வந்து தன்னை உள்ளே செல்லவிடாமல் தடுக்கும் தன் தம்பியிடம் மன்றாடுவது, இக்கட்டான தருணத்தில் சாகப் போறோம்னு பயமே இல்லையா..? என்று கேட்கும் கேள்விக்கு விடையாக வாழ்க்கை என்று பெயர் வைத்து, நாம் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான பிழைப்பை, அந்தப் பிரசித்தி பெற்ற இரண்டரை நிமிட வசனத்தால் கிழித்துத் தொங்கவிடுவது, திரைப்படத்தின் முக்கியமான முடிச்சை அவிழ்க்கும் இடத்தில், பேயறைந்தார் போல் நிற்கும் மொத்த கும்பலையும் அலட்சியமாகப் ஒரு ஏளனப்பார்வைப் பார்த்து சிரித்தபடி செல்வது, க்ளைமாக்ஸ் காட்சி நெருங்கும் போது, தனக்கு தொடர்புடைய நபர்களுக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்பி, அதன் வாயிலாக அவர்களோடு பேசும் அந்த உணர்வு பூர்வமான தருணமும், அதிதி பாலன் இந்த திரைப்படத்தில் பெயரில் மட்டுமல்ல, தான் நடிப்பிலும் ஒரு அருவி என்பதை நிருபிக்கிறார்.


“இந்தா பாரும்மா.. நான் உண்டு, என் ப்ளு ஜட்டி உண்டுன்னு… நான் என் பாட்டுக்கு இருக்கேன்னு நா சொல்லிட்டேனாக்கும்…” என்று தன் கள்ளம் கபடமற்ற பேச்சால் அறிமுகமாகி, எல்லார் மனதிலும் இடம் பிடிக்கும் திருநங்கை தோழி “எமிலி” அருவியின் அடுத்த பேரழகி. “ரோலிங் சார்..” என்கின்ற வார்த்தையையே ஒரு காமெடியாக மாற்றி திரையரங்கை அதிர செய்திருப்பதும், அருவியின் கதாபாத்திரத்தில் சீரியஸான இடங்களில் கூட விளையாட்டுத்தனம் துள்ளும் மிடுக்கை திரைக்கதையில் அழகாக செதுக்கி இருப்பதும், மிகச் சிக்கலான உணர்வுபூர்வமான கதைக்களனுக்குள் தற்கால வணிகம், வாழ்க்கை முறைகள், சினிமா, அரசியல், திருநங்கைகளின் வாழ்க்கை, மீடியாக்களின் இரட்டை வேடம், சாதி அரசியல், மீனவர்களின் நிலை என அனைத்தையும் கலந்து கட்டி கிண்டல் செய்திருப்பதும், மிக முக்கியமாக இவைகளை கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாதவாறு, மிக கலகலப்பாக திரையில் கொண்டு வந்திருப்பதும் அருவி திரைப்படத்தின் கவனிக்கத்தக்க அம்சங்கள்.  


கதையின் மிக நுணுக்கமான உள்ளடக்கங்களைப் பற்றி, நாம் பேச முனைந்தால், அது படம் பார்க்கும் போது, உங்களுக்கு சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தும் என்பதால், அதை பேசாமல் தவிர்க்கிறோம். ரேமண்ட் டேரிக் கிரஸ்டாவின் கலைநுணுக்கமான எடிட்டிங் கத்தரிகள் திரைப்படத்தின் சுவாரஸ்யத்தை ஒரு படி கூட்டியிருக்கின்றன என்றே சொல்லலாம். புது முக இசையமைப்பாளர்களான வேதாந்த் பரத்வாஜ் மற்றும் பிந்து மாலினியின் கூட்டணி, மிக பிரத்தியேகமான ஒரு இசைக்கோர்வையை திரைப்படத்துக்கு கொடுத்திருக்கிறது. பிண்ணனி இசை, பாடல்கள் என இரண்டு தரப்பிலும் திரைப்படத்தை அடுத்த இடத்திற்கு நகர்த்திருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. ஷெல்லி ஹெலிஸ்சின் ஒளிப்பதிவு காட்சிக்கு தேவையானதை கச்சிதமாகக் காட்டி இருக்கிறது. அது போல சவுண்ட் மிக்ஸிங்கும் மிக பிரத்யேகமான முறையில் இருப்பதாக, பல வல்லுநர்களும் பாராட்டி இருக்கிறார்கள். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு இது முதல் படமாம். முதல் படத்திலேயே புது முக நடிகர்கள், புது இசையமைப்பாளர் எடிட்டர்களைக் கொண்டே இவ்வளவு தரமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் இந்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அருவி திரைப்படம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், எல்லோரும் பேசத் தயங்கும், அல்லது பேசாமல் தவிர்க்கும் சில விசயங்களை சத்தம் போட்டு பேசுவதோடு அல்லாமல், அவை குறித்த கேள்விகளையும் புரிந்துணர்வுகளையும் சாதாரண மக்கள் மனதில் விதைப்பதால் தான். இது போன்ற திரைப்படைப்புகள் சமுதாயத்துக்கும், இளம் தலைமுறையினருக்கும், வழிகாட்டும் என்பதாலும், இளம் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதாலும் இவ்வளவு சிறப்பான ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கும், இதை தயாரிக்க முன் வந்த ரசனை மற்றும் தைரியத்துக்காக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கும் வெற்றி வேந்தன் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும். மொத்தத்தில் இந்த அருவி, வாழ்க்கையின் உச்சத்தில் இருந்து படுபாதாளத்தில் வீழ்வதைப் பற்றி மட்டும் பேசாமல், வீழ்ந்தாலும் எப்படி ஆறாக மாறி ஓடுவது என்பதனையும் வாழ்க்கையின் அழகியல் மற்றும் புரிதலோடு பேசுவதால், மிக முக்கியமான தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது.


Wednesday, 13 December 2017

வாயை மூடிப் பேசவும் – இப்படிக்கு அரசு


மெர்சல் பட விவகாரம், பத்மாவதி திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு, கந்துவட்டி கொடுமையை கார்டூனாக வரைந்ததால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை, தீபிகா மற்றும் பன்சாலியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரொக்கப் பரிசு என்னும் கொக்கரிப்பு, சனாதன இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்த தோழர். கெளரி லங்கேஷ்-க்கு துப்பாக்கி தோட்டாக்கள் பரிசளிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மாநில அரசின் உத்தரவு இன்றி விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்துக்கும், அந்த செய்திகளை பிரசுரம் செய்யக்கூடாது என்று பத்திரிக்கைக்கும் முட்டுக்கட்டைப் போட்டு, இராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம், என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது என்று ட்விட்டரில் பதிவிட்ட குர்மேகர் கவுர் என்ற பெண்ணுக்கு எதிராக பாலியல் மிரட்டல், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த கூட்டத்தில், தேசத்தந்தை காந்தியடிகளை, பனியா காந்தி என்று விளித்து, அவர் மீதும் சாதிய சாயம் பூச நாடாளும் கட்சியின் தலைவர் அமித்ஷா முனைந்தது, அவர் ஒன்றும் தவறாக பேசவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தன் பங்குக்கு கொளுத்திப் போட்டது.. என இங்கு நடப்பவைகளைப் பார்த்தால், நிச்சயமாக நாம் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோமோ…? என்று அச்சமாக இருக்கிறது. அவசர நிலை பிரகடனத்தில் எந்த அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக செல்லாமல் போய்விடும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் தானே..?இதைப் பற்றி எல்லாம் பேச முனைந்தால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது, கருத்துரிமை என்ற பெயரில் நீங்கள் மதத்தையும் நல்ல மனிதர்களின் மனதையும் புண்படுத்துகிறீர்கள் என்று பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் இருந்தபடி அமித்ஷாவும், அருண் ஜெட்லியும் அலறுவதும் காதில் கேட்கிறது. இந்த தருணத்தில் நாம் பேச்சுரிமை, கருத்துரிமை என்ற இரண்டு உரிமைக்குமான அடிப்படை வித்தியாசத்தைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் அண்டை வீட்டாரிடமும், உடன் பணிபுரிபவர்களிடமும் விசாரிக்கும் நல விசாரிப்புகள், உடல் சார்ந்த, குடும்பம் சார்ந்த சந்தோசங்களை, பிரச்சனைகளைப் பேசுவது தான் பேச்சுரிமை. இது தவிர்த்து நீங்கள் தொழில் வணிகம், குழந்தையின் கல்வி, சினிமா, விளையாட்டு, அரசியல், மதம், கருப்புப் பண ஒழிப்பு, GST இப்படி எதைப் பற்றி பேச உங்கள் திருவாயைத் திறந்தாலும் அது  பேச்சாக மட்டுமே இருக்காது, கருத்தாகத்தான் மாறும். அதாவது கருத்துரிமை. இதுதான் பேச்சுரிமை கருத்துரிமைக்கான அடிப்படை வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கருத்துரிமை விசயங்களில் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கேட்கிறது. ஏனென்றால் உங்கள் கருத்துரிமையைக் கொண்டு நீங்கள் யார் மனதையாவது புண்படுத்திவிட்டால், அவதூறு வழக்கு, தேசத் துரோக வழக்கு உங்கள் மீது பாய்ந்துவிடும். சரி.. இவர்கள் சொல்லும்படி இந்தக் கருத்துரிமையை எப்படி புண்படுத்தாமல் பயன்படுத்துவது..??, குழப்பமாக இருக்கிறதா..? வெகு எளிது. கீழே உதாரணம் பாருங்கள்.


குடும்பத்தோடு சேர்ந்து ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறீர்கள், 600 ரூபாய் சாப்பிட்டதற்கு GSTயுடன் சேர்ந்து 800 ரூபாய் பில் வருகிறது. மிகச் சிறப்பான வரித் திட்டம் என்று வாழ்த்துங்கள், இல்லை என்றால் மத்திய அரசின் மனம் புண்பட்டுவிடும். அங்கிருந்து நேராக தியேட்டருக்கு சென்று மெர்ஷல் திரைப்படம் பார்க்கிறீர்கள். GST வரியைப் பற்றிய குற்றச்சாட்டு வருகிறது. கருத்து சொல்ல வேண்டுமே..!!??மிக அற்புதமான வசனம் என்று வாழ்த்துங்கள். இல்லை என்றால் அட்லி மற்றும் விஜயின் மனம் புண்பட்டுவிடும். வெளியே வருகிறீர்கள் தீபிகாவின் தலைக்கு 1 கோடி என்று அறிவிப்பைப் பார்க்கிறீர்கள். இங்கு, கருத்து என்ன சொல்ல வேண்டும்..? தெரிகிறதா…?? கரெக்ட்..!! வாழ்த்த வேண்டும். மிக அற்புதமான அறிவிப்பு என்று வாழ்த்துங்கள். இல்லையென்றால் அறிவிப்பு செய்தவர்களின் மனம் புண்பட்டு நாடு சீரழிந்துவிடும். கூடவே இராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க முதல்வர் வசுந்த்ரா ராஜே அரசு அலுவலர்களை விசாரிக்க தடைச் சட்டம் பிறப்பித்ததையும், அமித்ஷா, காந்தி ஒரு பனியா என்று கண்டுபிடித்ததையும், ஹெச்.ராஜா விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று கண்டுபிடித்ததையும் அறிகிறீர்கள். நேரம் தாழ்த்தாமல் வாழ்த்திவிடுங்கள். இல்லையென்றால் மனம் புண்பட்டு நாடு சீரழிகிறதோ இல்லையோ..? நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள்.. என்ன..? வெளியே திருமா மதச் சாயம் பூசுகிறார்கள் என்று முழங்குகிறாரா..? யோசிக்காமல் பாராட்டுங்கள். இல்லையென்றால் பாவம் அவர் மனம் புண்பட்டுவிடும். என்ன…??? இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தால் உங்களை பைத்தியம் என்று கூறிவிடுவார்களே..? என்று பயமாக இருக்கிறதா..? அப்படியெல்லாம் உங்கள் மனம் புண்படுவது போல் யாரும் பேசிவிட முடியாது. அது கருத்துரிமையை மீறிய செயல் ஆகிவிடும். என்ன..? இதனை கடைபிடிப்பது கடினமாக இருக்கிறதா.? ம்ம்ம்.. சரி.. அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். வாயை மூடிப் பேசுங்கள். (கவனிக்கவும், பேசுங்கள் கருத்து சொல்லாதீர்கள்) இதைத் தான் நம்மை செய்யச் சொல்கிறது ஆளும் அரசு.


இந்திய அரசியலமைப்பு நமக்கு கருத்துரிமை பேச்சுரிமை இரண்டையுமே கொடுத்திருக்கிறது. ஆனால் ஆளும் மத்திய அரசு மேற்சொன்னபடி, பேச்சுரிமையையே கருத்துரிமையாகவும் நம்மை நம்பச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அல்லது பேச்சுரிமை மட்டும் தான், இனி கருத்துரிமையே கிடையாது என்பதனை சொல்லாமல் சொல்கிறது. இதற்கு நம் இந்திய அரசியலமைப்பு சட்டமும் ஒரு வகையில் துணை போகிறது. எப்படி என்றால் கருத்து சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் சில சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, இன்றுவரை நீக்கவும் படாமல், திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே தொடர்கின்றன. அவற்றில் குறிப்பாக பிரிவுகள் 153, 153A, 295, 295A, 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளைக் கூறலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கில் கிரிமினல் அவதூறு சட்டப் பிரிவுகளான 499,500 ஆகியவற்றை நீக்கக் கோரி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, சுப்ரமணிய சுவாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் அந்த சட்டப்பிரிவுகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் ஓரளவுக்கு நலிந்த மக்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், பெருமளவில் ஆளும் வர்க்கத்தினர் தான் அதனை தங்களுக்கு சாதகமான விசயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால், அதற்கான சட்டத் திருத்தங்களையாவது கொண்டு வருவதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.


சரி. இந்த கருத்து சுதந்திரத்தை நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது, அந்தப் பதத்தை எப்படித்தான் பயன்படுத்துவது என்று கேட்டால், அதற்கும் தேச தந்தை காந்தியடிகள் தனது கட்டுரை குறிப்புகள் மூலம் வழிகாட்டுகிறார். (காந்தி கருத்துரிமைப் பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் ஆளும் வர்க்கத்தின் அமித்ஷாக்கள் பேசவே மாட்டார்கள். காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார் என்பதைத் தான் அவர்கள் திரும்ப திரும்ப பேசுவார்கள்.) காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது எழுதிய “இந்திய சுயராஜ்ஜியம்” என்ற புத்தகத்தை, இந்தியாவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, அவரது நண்பர் முயலும் போது, அது தேச துரோக கருத்துக்களை கொண்டிருக்கிறது என்று சொல்லி ஆங்கிலேய அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்துவிடுகிறது. அந்தத் தடையை நீக்கக் கோரி, காந்தியடிகள் எழுதிய ஒரு கடிதம் ஆவணக் காப்பகத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காந்தி, ”எந்தவொரு தனி நபருக்கும் அவரது கருத்தை பொதுவெளியில் சொல்லவும், அதை செயல்படுத்தவும், முழு உரிமை உண்டு. எப்பொழுது என்றால், அது மற்றொரு நபரை உடல் ரீதியாக துன்புறுத்தாத வரை.. இது என்னுடைய தாழ்மையான கருத்து..” என்று எழுதியிருப்பதாக வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா தெரிவிக்கிறார்.


அப்படியென்றால் கருத்துக்கள் மனரீதியாக ஒருவரை துன்புறுத்தலாமா..? என்ற கேள்வி வரும். அப்படி புண்படுத்தாமல் எந்தவொரு கருத்தையுமே நாம் பேச முடியாது என்பதைத் தான் நாம் மேலே சில உதாரணங்களுடன் பார்த்தோம். இருந்தாலும் இதற்கான பதிலையும் மீண்டும் காந்தியிடமே பார்ப்போம்.

”கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் கருத்தை தெரிவிப்பதால், பிறரின் மனம் புண்படும் என்றாலும் அதை தடுக்காமல் விடுவது என்று தான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவது மட்டும் அல்லாது, அவை செய்திகளை திரித்துக் கூறவும் அனுமதிக்கும் போது தான் அவை சுதந்திரமாக செயல்படுகிறது என்று அர்த்தம்.” என்று யங் இந்தியா இதழில் 12-01-1922 தேதியிட்ட கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அப்போது அவர் எதிர்காலத்தில் அரசுகள், திரித்துக் கூறப்பட்ட செய்தி, புண்படுத்தும் செய்தி என்று கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கலாம் என்பதனையும் யூகித்திருக்கிறார் என்பது புலனாகிறது. மேலும் அவர் ”ஒருவர் தாம் நம்பும் கருத்து, அல்லது கொள்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதோடு, அவைதான் உறுதியான மறுக்க முடியாத உண்மை என்று நம்புவதால் தான் பிரச்சனை உண்டாகிறது. தான் கொண்ட கருத்தின் மேல் புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள் தான், மாறுபட்ட கருத்துக்கு அஞ்சி, அதனால் தன் கருத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கருதி, மாற்றுக் கருத்தை நசுக்கப் பார்க்கிறார்கள். ஒருவர் தான் கொண்ட கொள்கை உறுதியானது,  உண்மையானது, அறம் சார்ந்தது என்ற நம்பிக்கையோடு இருந்தால், மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. புண்படவும் தேவையில்லை. தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். நாம் எல்லோருமே பிழைகள் செய்பவர்கள், ஆகையால் அடிக்கடி நம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை வருகிறது. மாற்றுக் கருத்துக்களுடன் உறவாடும் போதுதான், நாம் கொண்டிருக்கும் கருத்து மேலும் வளர்ச்சியும் முழுமையும் அடைகிறது. இது போன்ற ஜனநாயக நாட்டில் உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து கொண்டுள்ள எல்லாருக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அதனால் எதிராளிகளின் கருத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அதையும் மதிப்பதும் இன்றியமையாததாகிறது. நாம் இது போன்ற தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால், நமக்குள் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளைக் கூட நமக்குள் பேசி சுமூகமாக தீர்க்க முடியாமல், மூன்றாமானவர்களான அந்நியர்களின் தீர்வுக்கே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.” என யங் இந்தியாவில் 17.04.1924ல் தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


ஏனென்றால் காந்தி, பூர்ண இந்திய சுயராஜ்ஜியத்துக்கு கருத்து சுதந்திரம் மிக மிக முக்கியம் என்று கருதியவர். அவரது இறப்புக்கு பின்னர் நடந்த, அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு கருத்துரிமை விசயத்தை இங்கு பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. Joseph Lelyveld எழுதிய Great Soul Mahatma Gandhi and His Struggle with India என்ற புத்தகத்தில் காந்திக்கும் அவரது உதவியாளருமான காலன்பாக்குக்கும் இடையே தன் பாலின உறவு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த சர்ச்சை எழுந்ததால், குஜராத் அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்தது. ஆனால் காந்தியின் பேரன்களான ராஜ்மோகன் காந்தியும், கோபாலகிருஷ்ண காந்தியும் அந்தத் தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அந்தப் புத்தகத்துக்கான தடையை வாபஸ் பெறச் செய்தனர். Josehp Lelyveld சொல்கின்ற கருத்தை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். இருப்பினும் அதைச் சொல்வதற்கான அவரது உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தது, இந்த இடத்தில் மிக முக்கியமானது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களையும், வழக்குகளையும், சிறைக் கம்பிகளையும் பரிசளித்துக் கொண்டிருக்கிறார்கள். வசுந்த்ரா ராஜே சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராஜஸ்தான் பத்திரிகா என்ற செய்தித்தாள், கருப்பு கட்டம் கொண்ட காலி தலையங்கத்தை பிரசுரித்திருக்கிறது. இந்திய தேசத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் நாம் எல்லோரும் சேர்ந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைச் செய்ய நாம் தவறுவோமானால், இங்கு கேலிக்கூத்தாக மாறிப் போயிருக்கும் இந்த ஜனநாயக ஆட்சியில் நாம் அனைவருமே சுயம் இழந்த கோமாளிகளாகத்தான் வலம் வர வேண்டியிருக்கும். 

நிலமெல்லாம் இரத்தம்

புத்தகத்தின் பெயர் : நிலமெல்லாம் இரத்தம்
பிரிவு : அரசியல் & வரலாறு
பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : பா.இராகவன்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்து இருப்பதால், அரேபிய தேசமெங்கும் போர்மேகம் சூழ காத்திருக்கும் இந்த சூழலில், இந்தப் புத்தகத்தின் மதிப்புரையை எங்கிருந்து தொடங்குவது என்றே எனக்கு பெருத்த குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் இது கிட்டத்தட்ட இயேசுபிரானின் பிறப்புக்கு முன்பு தொடங்கி, இன்று வரையான 2000 வருடத்து அரசியல் நிகழ்வுகளை அலசுவதால், இதனை பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனை என்று சொல்லி தொடங்கினால் சரியாக இருக்குமா என்று இதை எழுதத் தொடங்குகின்ற இப்பொழுது வரை குழப்பமாகத்தான் இருக்கிறது. சரி.. எப்படியோ தொடங்கியாயிற்று. இனி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதிலிருந்து தொடர்ந்து உள்ளே செல்வோம். இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியுமா..? என்று கேட்டால், பலரும் இரண்டும் அண்டை நாடுகள், வேறு என்னப் பிரச்சனை இருக்கும் எல்லைப் பிரச்சனை தான்.. என்று சொல்லி நழுவப் பார்ப்பார்கள். அவர்களை வம்படியாக பிடித்து இழுத்து, கையில் ஒரு உலக மேப்பையும் திணித்து, எந்த எல்லைக்கோட்டை வைத்து அவர்களுக்குள் பிரச்சனை, எங்கே கோடிட்டு காட்டு, என்று நாமும் அவர்களோடு குத்த வைத்து உட்கார்ந்தோமானால், தேடு தேடு என்று தேடி விட்டு, இஸ்ரேல் இங்க இருக்கு..? பாலஸ்தீனம் எங்க…? என்று கவுண்டமணி பாணியில் (இல்லையென்றால் அவரையும் விட பரிதாபமாக) நம்மையே கேப்பார்.அதுவே நீங்கள் கேள்வி கேட்ட ஆள், ஒரு நூறு வயது நிரம்பிய பாலஸ்தீன பெரியவர், 70 வருடமாக கோமாவில் இருந்து மீண்டவர் என்று வைத்துக் கொண்டால் (வைத்துக் கொள்வோமே, 100 வயது நிரம்பிய பெரியவருக்கு உலகவரைபடத்தில் உள்ள எழுத்தெல்லாம் கண்ணுக்கு தெரியுமா.? என்று குதர்க்கமாக யோசிக்கக் கூடாது.) அவர் நம்மை மேலும் கீழும் பார்த்துவிட்டு, இது உலக மேப் தானா.? என்று எதிர்கேள்வி கேட்பார். நாமும் சத்தியம் செய்யாத குறையாக சாதித்தோமானால், உள்ளங்கையளவு இருந்த என் மண்ணு பாலஸ்தீன் எங்கடா கடுகளவு கூட இல்லாமப் போச்சு…?? என்று நம்மை அடிக்கப் பாய்வதோடு, “அய்யா என் நாட்டக் காணுமுய்யா… களவாண்டுட்டானுக” என்று பதறிக் கொண்டு ஓடுவார். இப்படித்தான் பாலஸ்தீன் மண்ணைச் சேர்ந்த ஒவ்வொரு மக்களும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். சுற்றிலும் இருக்கின்ற மத்தியக் கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் அகதிகளாக..?? என்னதான் ஆயிற்று அந்த தேசத்துக்கு…? அதை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நிலமெல்லாம் இரத்தம் என்னும் புத்தகத்தை, அல்லது வரலாற்றின் பல பக்கங்களை, அதற்கெல்லாம் நேரமில்லை என்று நினைத்தீர்களானால், நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தப் பக்கங்களையாவது புரட்டித் தான் ஆக வேண்டும்.ஏன் படிக்க வேண்டும்

இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்டால், கண்டிப்பாக சம்பந்தம் இருக்கிறது என்று நான் சொல்லுவேன். எப்படி என்றால், அங்கே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை தான், சில ஆண்டுகளாக நமக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பாபர் மசூதி, இராமர் கோவில் பிரச்சனைக்கு ஒப்பான ஒரு பிரச்சனையால் தான் அந்த இரு தேசங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. நாமும் அதுபோல் எரியக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல.. தாய் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, வீடு,வாசல், சொந்தங்களை இழந்து நிராதரவாக தவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழ சொந்தங்களுக்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவைப் பெறவும், ஒரு இனம் பல நூறு ஆண்டுகளாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத சக்தியாக எழுந்து நிற்கும் ஆற்றலுக்கு, எது அடிப்படையாக இருந்தது என்பதனை அந்த யூதர்களிடம் இருந்து தெரிந்து கொள்வது, பின்னாளில், நம் தமிழ் இனத்துக்கும் உதவும் என்பதாலும், மூன்று மிக முக்கியமான மதங்களின் பின்புலத்தை அறிந்து கொள்வது, மத அரசியலை புரிந்து கொள்ள உதவும் என்பதாலும், வரலாறு முக்கியம் அமைச்சரே என்கின்ற வரிகள், உண்மையாகவே முக்கியம் என்பதாலும் இந்தப் புத்தகத்தை நாம் படிக்கத் தான் வேண்டும்.

                           என்ன  பிரச்சனை

மதம் தான். மதம், அரசியல், உணர்ச்சி இவை தனித்தனியே வந்து நின்றாலே பிரச்சனை தான். இவை மூன்றும் கைகோர்த்து வந்து நின்றால் கேட்கவா வேண்டும். பாலஸ்தீனில் நடப்பது இதுதான். பாலஸ்தீன் என்னும் அந்த அகண்ட தேசத்தில் தான் ஜெருசலேம் இருந்தது. (இன்று அது இஸ்ரேல் தேசத்துக்குள் இருக்கிறது) ஜெருசலேம் என்றதுமே அனைவருக்கும் தெரியும் கிறிஸ்துவ மதத்தின் ஆதியான இயேசு நாதர் பிறந்த இடம் என்று.. அந்த இடம் எப்படி யூதர்களுக்கும், பாலஸ்தீனிய அராபியர்களுக்கும்(இஸ்லாமியர்கள்) மத ரீதியில் முக்கியமான இடமாக மாறியது என்பது பெரும்பாலானோர் அறியாது. அதை அறிவதற்கு முன்னர் நாம் யூதர்கள், அராபியர்கள், கிறிஸ்துவர்கள் யார் என்பதனை அறிய வேண்டும். அதற்கு நாம் கிறிஸ்து பிறப்பதற்கும் முன்னோக்கி செல்ல வேண்டும். செல்வோமாக..கி.மு-வில் நடந்த கதை

யூதர்களும், அராபியர்களும் எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான், ஈரான்,ஈராக், சவுதி அரேபியா, பாலஸ்தீனம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இனங்கள். இரண்டு இனங்களுமே உருவ வழிபாடு, மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளை கடைபிடித்துக் கொண்டிருந்த இனம் தான்.. யூத இனத்தைச் சேர்ந்த ஆபிரஹாம் தன் மனைவி சாராவுடன் வாழ்ந்து வருகிறார். இருவருமே வயோதிகர்கள். குழந்தை இல்லை. சாரா தன் வேலைக்காரப் பெண்ணான ஆகார் என்னும் அராபியப் பெண்ணை தன் கணவனுக்கு மணமுடிக்க.. ஆகார் கர்ப்பம் ஆகிறாள். இஸ்மாயில் என்னும் மகனைப் பெற்று எடுக்கிறாள். சில ஆண்டுகள் சென்றப் பின்னர் சாராவும் கர்ப்பம் தரிக்கிறாள். அவளுக்கு ஈசாக் பிறக்கிறான். இப்பொழுது சாரா, ஆகாரின் மீது பொறாமை கொண்டு, தன் கணவனிடம் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்புகிறாள்.

பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆகார், இறக்க கிடக்கும் தன் மகனைப் பார்த்து அழுது புலம்ப.. கடவுளின் அசரரீ ஒலிக்கிறது. சாராவின் சந்ததியை நான் எப்படி பெருகப் பண்ணுவேனோ அது போல உன் சந்ததியையும் நான் பெருகப் பண்ணுவேன் என்று சொன்னதோடு, நீர் இருக்கும் சுனையை நோக்கி அவளை வழிநடத்துகிறது அந்தக் குரல். இப்படித்தான் ஆகார் தன் மகனான இஸ்மாயில் உடன் எகிப்திலிருந்து இடம்பெயர்ந்து, பாலஸ்தீன்(அன்றைய கானான் தேசம்) வந்து வசிக்கத் துவங்குகிறாள். இந்த இஸ்மாயிலின் வம்சத்தினர் தான் அரேபியர்கள். (அதற்கு முன் பாலஸ்தீனில் வசித்து வந்தவர்கள் பற்றிய எந்தவொரு வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.) இது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் உள்ள கதை அல்லது வரலாறு. ஆக யூதர்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளே. இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பைபிளில் இருந்து இன்னொரு சம்பவம். மோஸே என்று ஒரு இறைதூதர் யூத வம்சத்தில் உதிக்கிறார். இவர் எகிப்தியப் படை இவர்களை துரத்தும் போது, இறைவனின் கட்டளையின் படி, எகிப்தில் இருந்து யூத மக்களை அழைத்துக் கொண்டு, செங்கடலை தன் மந்திரக்கோல் கொண்டு, கர்த்தரின் உதவியுடன் இரண்டாகப் பிளந்து அதன் வழியாக அன்றைய கானான் தேசத்தை(பாலஸ்தீனம்) அடைந்ததாக ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக யூதர்கள் பாலஸ்தீனம் என்னும் தேசத்துக்குள் நுழைந்ததற்கான வரலாற்று பூர்வ சான்று. அப்போதே அங்கு பாலஸ்தீனிய அராபியர்கள்(இஸ்மாயில் சந்ததியினர்) வசித்து வருகிறார்கள். ஆக பாலஸ்தீன அராபியர்கள் யூதர்களைக் காட்டிலும் பாலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


யூதர்களும் கிறிஸ்துவர்களும்

முன்னரே பார்த்தது போல மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இன மக்கள் தான் யூதர்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள். இவர்கள் இனத்தில் தான் தொடர்ச்சியாக இறை தூதர்கள் தோன்றத் தொடங்க இவர்களின் வழிபாட்டு முறை மாறுகிறது. உருவமற்ற வழிபாட்டு முறைக்கு மாறுகிறார்கள். ஆபிரஹாம், மோசே, தாவீது என்று இறைதூதர்கள் இந்த இனத்தில் தோன்றி, கடவுளிடம் இருந்து பெரும் வேதங்களை தங்கள் இனத்து மக்களுக்கு போதித்து அவர்களை வழிநடத்துகிறார்கள். தோரா என்பது இவர்களின் வேத நூல். தொடர்ச்சியாக இவர்கள் இனத்தில் இறை தூதர்கள் தோன்றுவதோடு, அவர்கள் வாயிலாக வேதம் அருளப்பட்டதோடு, இந்த இனம் பூமியில் என்னால் ஆசிர்வதிக்கப்பட்ட இனம் என்றும் கடவுள் கூறியதாக இந்த இன மக்கள் நம்புகின்றனர். இதனால் இயல்பாகவே பிற இன மக்களிடம் இவர்கள் சற்றே அகந்தையாக நடந்து கொள்ளும் இயல்பை பெறுகின்றனர். மேலும் சாலமன் மன்னனால் கட்டப்பட்ட மிகப் பழமையான யூத தேவாலயம் ஜெருசலேமில் இடம் பெற்றிருக்கின்றது. ஆக ஜெருசலேம் இவர்களுக்கு முக்கியத்துவமான வழிபாட்டு ஸ்தலம் ஆகிறது.
இவர்கள் தங்கள் புனித நூலில் குறிப்பிட்டப்படி ஒரு தேவ குமாரனை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருந்த இனம். இந்த சூழலில் ஏரோது என்னும் மன்னன் பாலஸ்தீனை ஆளத் தொடங்குகிறான். இவன் சாலமன் மன்னன் கட்டிய யூத தேவாலயத்தை புதுப்பிக்கிறான். இவனது ஆட்சியில் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலோடு தேவகுமாரன் இயேசு பிறக்கிறார். தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, குழந்தை இயேசுவைக் கொல்ல துடிக்கிறான் மன்னன் ஏரோது. இயேசுவின் தந்தை யோசேப்பு குழந்தையோடு எகிப்துக்கு தப்புகிறார். ஏரோது மன்னரின் இறப்புக்கு பின்னர் நாசரேத்து என்னும் பாலஸ்தீனிய நகருக்கு வருகிறார்கள். தன் வாலிப பருவத்தில் இறைமகனார் இயேசு ஞானஸ்நானம் பெற்று, அருள்வாக்கு சொல்லத் தொடங்குகிறார். பெரும்பகுதி நாட்களை ஏரோது மன்னரால் புதிப்பிக்கப்பட்ட தேவாலயத்தில் ஜெபத்திலேயே கழிக்கிறார். அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இவர் தான் இறைமகனோ என்று யூத இனம் யோசிக்கத் தொடங்கிறார்கள்..

 யூதர்கள் ஓய்வு நாளாக அனுசரிக்கும் சனிக்கிழமையில் ஒரு குருடனை குணமாக்குகிறார். மேலும் யூதர்களின் மூடநம்பிக்கைத்தனமான மதச் சடங்குகளை கண்டிக்கிறார், யூதர்களின் ஒரு கூட்டம் அவரை பின்பற்றத் தொடங்குகிறது. சாலமன் மன்னனால் கட்டப்பட்டு, ஏரோது மன்னரால் புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் இடிந்து போகும் என்று ஆருடம் சொல்கிறார். இதனால் கோபம் கொண்ட ஒரு யூத கூட்டம் இவர் தேவகுமாரன் இல்லை என்று முடிவுக்கு வந்து அவரை சிலுவையில் அறைகிறது. அவர் உயிர்தெழுகிறார். அவரைப் பின்பற்றிய கூட்டம் கிறிஸ்துவர்களாக மாறுகிறது. அவரது போதனைகளையும் தோராவுடன் சேர்த்து அதனை பைபிள் என்னும் புனித நூலாக மாற்றுகிறது. இயேசு பிறந்த வளர்ந்த ஊர் என்பதால், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித பூமி ஆகிறது.இயேசு தேவகுமாரன் அல்ல.. தேவகுமாரன் இனிதான் வரப்போகிறார் என்று காத்திருந்த கூட்டம் யூதர்களாகவே தொடருகிறது.

இஸ்லாம்

அராபியர்களும் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வந்த பூர்வக்குடி மக்கள் தான். இவர்களும் சிறு தெய்வ வழிபாடுகள் மட்டுமே செய்து வந்தவர்கள். மேலும் முன்னரே பார்த்தபடி இவர்களும் ஆபிரஹாம் சந்ததி என்பதால், ஆபிரஹாமினால் நிறுவப்பட்ட மெக்காவில் உள்ள க-அபா என்ற ஆலயத்தில் உருவ வழிபாடு நடத்தி வந்த மக்கள் தான். கிட்டத்தட்ட 360 தெய்வங்களை இவர்கள் வணங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இயேசு தோன்றி 600 ஆண்டுகள் கழித்து, அராபிய இனத்தில் ஒரு இறைத்தூதர் தோன்றினார். அவர் தான் முகமது நபிகள்.

நபிகளுக்கு ஜிப்ரில் என்கின்ற தேவதூதன் மெக்காவிற்கு அருகில் உள்ள ஹரா என்ற குன்றுப் பகுதியில் காட்சியளித்து 23 ஆண்டுகள் போதித்த போதனைகள் தான் குர்-ஆன் ஆக ஓதப்பட்டது. ஒரு முறை முகமது நபிகள் தன் மனைவியின் மரணத்துக்கு பின்னர் சோர்ந்து அமர்ந்திருந்த போது, ஜிப்ரில் தோன்றி அவரை புராக் என்னும் பறக்கும் குதிரையில் அமர்த்தி ஜெருசலேம் நகரின் ஒரு குன்றின் மீது கூட்டி போய் வைத்ததாகவும், அங்கு அவர் முன்பிருந்த நபிகளான ஆபிரஹாம், மோஸே, இயேசு ஆகியோருடன் சேர்ந்து விருந்து உண்டதாகவும், பின்னர் அங்கிருந்து புராக்கின் மீது ஏறி ஜிப்ரிலுடன் தேவலோகம் சென்றதாகவும், அங்கு கண்ணைப் பறிக்கும் பேரொளியைக் கண்டதாகவும் இலந்தை மரத்தின் அடியில் அவருக்கு இடம் கிடைத்ததாகவும், பின்னர் மீண்டும் ஜிப்ரில் முகம்மது நபிகள் அவர்களை அங்கிருந்து ஜெருசலேமுக்கும், பிறகு அங்கிருந்து மெக்காவுக்கு கொண்டு வந்து விட்டதாக தன் அனுபவத்தை விவரித்துள்ளார். அவர் ஜெருசலேமில் இறங்கிய அந்த இடம் தான் இன்று பெரும்பாலும் புகைப்படத்தில் காட்டப்படும் Dome Of the Rock. எனவே இஸ்லாம் மதத்தவருக்கும் ஜெருசலேம் புனிதபூமி ஆகிறது.பாலஸ்தீனை ஆண்டவர்கள்

ஆரம்ப காலத்தில் ரோம் சாம்ராஜ்ஜியமும், அவர்களிடம் இருந்து அவ்வபோது கிளர்ச்சி செய்து யூதர்களும், பின்பு மீண்டும் யூதர்களிடம் இருந்து ரோம் சாம்ராஜ்ஜியம் பாலஸ்தீனைக் கைப்பற்றியதோடு, முதன்முறையாக யூதர்களை நாட்டை விட்டு துரத்தியதும், இந்த ரோம் பேரரசு தான். அப்பொழுது வரலாற்றில் மிகவும் பிரபலமான கலிகுல்லா ரோமின் பேரரசராக இருந்தார். அவர் இனி அனைவரும் தன்னுடைய உருவச் சிலையைத் தான், கடவுளாக வணங்க வேண்டும் என்று ஆணையிட. அதிலிருந்து எப்படியோ விலக்குப் பெற்ற யூதர்கள், இனி இது தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் தங்கள் மதமே அழிந்துவிடும், என்ற பயத்தில் ரோம் பேரரசை எதிர்த்து கிளர்ச்சி செய்கின்றனர். இப்பொழுது தான் அவர்கள் முதன்முதலாக பாலஸ்தீனில் இருந்து அடித்து வெளியேற்றப்படுகிறார்கள். இப்பொழுது பாலஸ்தீனிய அராபியர்கள் வெறும் பார்வையாளர்களே. அதைத் தொடர்ந்து உலகமெங்கும், குறிப்பாக ஐரோப்பிய தேசமெங்கும் யூதர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் விரட்டப்பட்ட நிகழ்வும், மிக விரிவாக வரலாற்றுச் சுவையுடன் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ரோம் சாம்ராஜ்ஜியம் கிறிஸ்துவ மதத்தை தழுவத் தொடங்கிய காலத்தில், பாலஸ்தீன் கிறிஸ்துவ பைசாந்திய மன்னர்களால் ஆளப்படுகிறது. பின்னர் சில காலம் பெர்சிய மன்னர்களாலும், அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற முஸ்லீம் கலிபாக்களினாலும் ஆளப்படுகிறது. கலிபாக்களின் காலத்தில் தான், ரோமின் போப்பாண்டவர், “தேவனின் சாம்ராஜ்ஜியம் வெகு விரைவில் வருகிறது, ஆயத்தமாகுங்கள் என்று அழைப்புவிடுகிறார். தங்கள் காலம் முடிவதற்குள் இயேசுபிரான் பிறந்த புனித மண்ணை ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்ற கனவோடு, ஐரோப்பிய தேசம் எங்கும் வசிக்கும் கிறிஸ்தவர்கள் அணி அணியாக திரண்டு, ஜெருசலேம் நோக்கி வருகின்றனர்.அவர்கள் வருகின்ற வழியில் கலீபாக்களின் ஆட்சி நடைபெறும், அரேபிய மண்ணான, சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகியவற்றை கடந்து வரும் வழி எங்கும், கிறிஸ்துவ மக்களும், யூதர்களும் மாற்று மதத்தவர்கள் என்பதால், திம்மி இனத்தவர் என்று அழைக்கப்பட்டதோடு, அதிக வரிச்சுமைக்கும் ஆளாக்கப்பட்டதை கண்டு கொண்டே வரும் கூட்டத்திடையே, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வருகிறது. (இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம், இதே காலங்களில் பிற தேசங்களில் வாழ்ந்த பிற மதத்தவர்கள், கட்டாய மதமாற்றம் அல்லது படுகொலை செய்யப்பட. இங்கு அந்தமாதிரியான கொடுமைகள் எதுவுமே நடக்கவில்லை.. வரி அதிகம் அவ்வளவே..!!!) யூதர்கள் துன்பப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே இருப்பினும், அவர்களோடு தங்கள் இனமான கிறிஸ்துவர்களும் துன்பப்படுவதைப் பார்க்க முடியாமல், தங்கள் தேவ குமாரன் பிறந்த மன்னை மீட்போம் என்று கிளர்ச்சியில் குதிக்க.. இதை சாதகமாக பயனபடுத்திக் கொண்ட போப் அவர்கள், தன் சக்தியையும் நிருபிக்க.. இதை பிரசித்திப் பெற்ற சிலுவைப் போராக மாற்றி மக்கள் அனைவரும் பங்கேற்கும்படி அறைகூவல் விடுக்க… 170 ஆண்டுகாலம் நீண்ட சிலுவைப் போர் இஸ்லாமிய, கிறிஸ்துவ தேசங்களுக்கு இடையே தோன்றுகிறது. வீரர்கள் தங்கள் கழுத்தில் சிலுவை அணிந்து போரிட்டதால் இவை சிலுவைப் போர் என்ற பெயர் பெற்றது. சிலுவைப் போர் காலங்களில் சில காலம் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களால் ஆளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக 20ம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஆட்சிமட்டத்துக்கு கீழ் வருவதற்கு முன்பு வரை, பாலஸ்தீன் துருக்கி ஓட்டோமான் இஸ்லாமியப் பேரரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த ஒரு தேசமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு காலம் வரை பாலஸ்தீனை யார் ஆள்வது என்பது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையேயான முக்கியமான பிரச்சனையாக இருந்து, இப்போது அந்த தேசம் யூதர்களால் ஆளப்பட்டு, கிறிஸ்துவர்கள் அதற்கு உதவி செய்து, இஸ்லாமியர்கள் அதை எதிர்த்து போராடும் நிலைக்கு வந்திருக்கிறது.

இஸ்ரேலின் இருப்பிடச் சிக்கல்

பாலஸ்தீனம் என்னும் தேசம் சரித்திர நியாயங்களின் அடிப்படையிலும், அம்மண்ணின் பூர்வீகக் குடிகள் என்கின்ற முறையிலும் பார்த்தால், கண்டிப்பாக அது பாலஸ்தீன அராபியர்களுக்கு உரியதுதான். யூதர்களும் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் தான், அவர்களும் அந்த மண்ணில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்தேறிகளாக வாழ வந்தவர்கள் தான். அராபிய இனம் மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளான சிரியா, ஜோர்டான்,லெபனான், ஈராக், எகிப்து, ஈரான், சவுதி அரேபியா முழுக்க பரவி இருந்த இனம். அந்த இனம் பாலஸ்தீனிலும் பரவி இருந்தது. அதனால் பாலஸ்தீன அராபியர்கள், அல்லது பாலஸ்தீன முஸ்லீம்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு காலத்திலும் பாலஸ்தீனை விட்டு வெளியேறியதில்லை. 1948ல் அவர்கள் தேசத்திற்குள், அவர்கள் அனுமதியின்றி ஐ.நா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் துணையுடன் இஸ்ரேல் என்னும் தேசம் உருவானதாலும், அதனை முன்னிட்டு நடந்த போர்களினாலும் அகதிகளாக்கப்பட்டு சமீபத்தில் வெளியேற்றப்பட்ட இனம்.


ஆனால் யூதர்கள் வரலாற்றின் படி பார்த்தால் பாலஸ்தீனில் முழு நூற்றாண்டு கூட தொடர்ச்சியாக தங்கியது இல்லை. பாலஸ்தீனை தங்கள் தேசமாக மாற்ற முனைந்து, ரோமுடன் போரிட்ட போது, ரோம் மன்னர்களால் துரத்தப்பட்டார்கள். பின்பு மீண்டும் வந்தவர்களை கிறிஸ்தவ இனம் தளைத்த போது ஓடஓட விரட்டியது. முஸ்லீம் கலிபாக்களின் ஆட்சியின் கீழ் மட்டுமே பாலஸ்தீனில் அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்.(திம்மி என அழைக்கப்பட்டு அதிக வரி வசூலிக்கப்பட்டது என்றாலும் கூட..) ஆனால் முஸ்லீம் கலிபாக்களுக்கும் ஐரோப்பிய கிறிஸ்துவ நாடுகளுக்கும் சிலுவைப் போர் தொடங்கிய காலத்தில் மீண்டும் கிறிஸ்துவர்களால் தாக்கப்பட (கவனிக்க… தாக்குபவர்கள் இஸ்லாமியர்கள், அரேபியர்கள் அல்ல..) மீண்டும் யூதர்கள் நாட்டை விட்டு ஓடி, ஐரோப்பிய தேசம், ரஷ்ய தேசம், அமெரிக்க தேசம் என்று பரவினார்கள்.சமீப காலத்தில் ஹிட்லரும் அந்த இனத்தை பூண்டோடு அழிக்க வகை தேடிய போது, ஒட்டு மொத்த உலகத்தின் பரிதாபத்தை சம்பாதித்தார்கள். அவர்களுக்கான நிலம் என்று உலகில் எதுவுமே இல்லையே என்று ஒட்டு மொத்த உலக நாடுகளும் கவலை கொண்டது. அவர்களும் தமக்கான தேசம் என்று எதனை கைகாட்டுவது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்த போது, பெரும்பாலான யூதர்கள் கைகாட்டியது பாலஸ்தீன் தேசத்தை. ஏனென்றால் அது அவர்கள்து யூத மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய புண்ணிய பூமி. அவர்களை வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்த படியாக ஓடஓட விரட்டிய கிறிஸ்துவ தேசங்களும், கிறிஸ்துவர்களும் கூட அடிப்படையில் நாமும் யூதர்கள் தானே..!!?? அதிலிருந்து பிரிந்தவர்கள் தானே நாம் என்று எண்ணினார்களோ எண்ணவோ...!!!?? சத்தமில்லாமல் யூத தேசம் உருவாக உதவத் தொடங்கினர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு மத்தியக் கிழக்கில் தாங்கள் வழுவாக கால் ஊன்றி எண்ணெய் தேசங்களை கண்காணிக்க, ஒரு இடம் கிடைத்த திருப்தி. அவர்களும் ஆதரவு நிலைப்பாடு எடுக்க.. யூதர்களும் சாமர்த்தியமாக இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் தரப்பு, அமெரிக்கத் தரப்பு இரண்டிலும் போரில் பங்கேற்றார்கள். ஒவ்வொரு நாட்டிலும் வாழ்ந்த யூதர்கள், அந்தந்த நாடுகளுக்காக போரிட்டார்கள். எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் தங்கள் யூத தேசம் என்ற கனவு வெற்றியடைய வேண்டும் என்பது அவர்கள் கணக்கு. ஆனால் அப்படி ஒரு தேசம் உருவாகும் போது அங்கு புனிதமான யூத இனம் மட்டுமே இருக்க வேண்டும். பழமைவாத அடிமைக் கூட்டத்தின் இனமான அரபு முஸ்லீம்கள் இருக்கக் கூடாது. ஜெருசலேமை அவர்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று வளைந்து கொடுக்காமல் இருந்ததும், அது சரிதான், பாலஸ்தீன அராபியர்களுக்கு இருக்க இடம் இல்லையா என்ன…? பரந்த அரபு தேசம் முழுக்க இருக்கிறதே என்று நினைத்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணமும் தான் பாலஸ்தீன அராபியர்களுக்கு சிக்கலாக மாறி அவர்களை அகதிகளாக அலையவிட்டு இருக்கிறது.

யூதர்களின் பிரச்சனைகள்

ஒரு கட்டத்தில் யூதர்களுக்கு கிறிஸ்தவர்களே மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தார்கள். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியதால், கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எல்லாம் யூதர்கள் மீது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சிலுவைப் போர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்துக்கும் இடையே பாலஸ்தீனைக் கைப்பற்றும் நோக்கில் 170 ஆண்டுகாலமாக நடைபெற்ற போராக இருந்தாலும், இந்தப் போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனம் யூதர் இனம் தான். ஏனென்றால் சிலுவைப் போர் வீரர்கள், ஐரோப்பிய தேசங்களில் இருந்து கிளம்பி போருக்கு வரும் வழியில் எதிர்படும் யூத குடியிருப்புகளை தாக்குவதும், யூதர்களைக் கொல்வதையும் ஒரு பொழுதுபோக்காகவே கொண்டு இருந்தனர்.மேலும் போகின்ற இடங்களில் எல்லாம் யூதர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தாலும், கடின உழைப்பாலும், கல்வி அறிவாலும், அரசு அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டு லஞ்சம் கொடுத்ததாலும் உயர் பதவிகளை எளிதாகப் பெற்றதோடு, உள்ளூர் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்ததால் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் என்று எல்லா நாடுகளிலும் தொடர்ச்சியாக விரட்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். மேலும் போகின்ற இடங்களில் எல்லாம் நிலங்களை அத்துமீறி வளைத்துக் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது வைக்கப்பட்டது. மேலும் யூதர்களுக்கு ஹிட்லர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது காலத்தில் போலந்து, ரஷ்யா, ஜெர்மன் என்று அவர் கைப்பற்றும் இடங்களில் எல்லாம் வசித்து வந்த யூதர்கள் விஷவாயுக் கலன்களில் அடைக்கப்பட்டு கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். பத்து இலட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் அந்தக் காலக்கட்டத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யூதர்கள் ஐரோப்பிய குடியேற்றங்களில் கூட மூன்றாம் தர மக்களாகத்தான் நடத்தப்பட்டார்கள். மேலும் கலீபாக்களின் காலத்தில் அவர்கள் திம்மிகள் என்ற பிரிவுக்குள் உட்படுத்தப்பட்டு, அதிகமான வரி வசூலுக்கு உள்ளானார்கள் என்கின்ற சுமையும் இதனோடு அடங்கும்.

அராபியர்களின் பிரச்சனைகள்

அராபியர்களில் பாலஸ்தீனிய அராபியர்களுக்குத்தான் பிரச்சனையே. மற்ற அரபு தேசங்களான சிரியா, லெபனான், ஈரான்,ஈராக், சவுத் அரேபியா, ஜோர்டான் போன்ற தேசங்களில் உள்ள அராபியருக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் நிகழவில்லை. எல்லா தேசங்களிலும் விரட்டப்பட்ட யூதர்கள் தங்களுக்கான தேசம் ஒன்று வேண்டும் என்று முடிவு செய்த போது, அவர்களின் பார்வை, தங்களின் புண்ணிய பூமி என்பதால் பாலஸ்தீன் மீது விழ.. அதுதான் அவர்களுக்கு பிரச்சனையாகிப் போனது. ஐரோப்பிய தேசங்களை ஒப்பிடுகையில் அரபு தேசங்களில் வாழ்ந்த யூதர்கள் அந்தளவுக்கு கொடுமைப்படுத்தபடவில்லை என்பது தான் உண்மை. முஸ்லீம் கலீபாக்களான உமர், அபூபக்கர், சலாவுதீன் போன்றோர் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் மிகவும் கண்ணியத்தோடு நடத்தியதோடு, அவர்களுக்கு ஜெருசலேமில் வழிபாடு செய்வதற்கான உரிமையை எப்போதுமே மறுத்ததில்லை. மேலும் தங்கள் ஆட்சியின் போது, அவர்கள் நாடு கடத்தப்பட்ட யூதர்களை மீண்டும் பாலஸ்தீனுக்கு வாழ்வதற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்த கண்ணியமானவர்கள்.

ஆனால் யூதர்கள் பாலஸ்தீனை பிரிட்டன் அமெரிக்காவின் துணையோடு ஆக்ரமித்த போது, அந்த பரிவையும் கனிவையும் கொஞ்சம் கூட பாலஸ்தீனிய அராபியர்கள் மீது காட்டவில்லை என்பது தான் வருந்தத்தக்கது. மேலும் அவர்களுக்கு பாலஸ்தீனில் இருக்கும் உரிமையை முற்றிலுமாக மறுப்பதும் கண்டிக்கத்தக்கது. யூதர்கள் தாங்கள் கொண்ட புத்தி கூர்மையைக் கொண்டு, நில வங்கி என்னும் அமைப்பை உருவாக்கி, பாலஸ்தீனியர்களின் நிலங்களை அவர்கள் அறியாத வண்ணம் வளைத்துப் போட்டு, ஒரு கட்டத்தில் அவர்களுக்கு மத்தியில் போய் கும்பல் கும்பலாக குடி ஏறியதும், படிப்பறிவு இல்லாத அரேபிய மக்கள் இதனை திட்டமிட்ட செயலாக கருதாமல், இயல்பாக நடப்பதாக எண்ணி கண்டுகொள்ளாமல் விட்டதும், உலகப் போர்களில் ஹிட்லரின் அட்டுழியத்தால் எல்லா உலக நாடுகளுக்கும் தங்கள் மீது ஏற்பட்ட பரிதாபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இஸ்ரேல் என்னும் தனி நாடு கோரிக்கையை பிரிட்டன் துணையுடன் சாதித்ததோடு, பாலஸ்தீனிய அராபியர்களை அகதிகளாக அவர்களின் சொந்த மண்ணில் அலையவிட்டதும், தான் அராபியர்களின் பிரச்சனை.மேலும் தங்கள் சகோதர நாடுகளான சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற தேசங்கள் தனக்காகத்தான் போரிடுகின்றன என்று பாலஸ்தீனிய அராபியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்க.. பாலஸ்தீன் நிலப்பரப்பை நட்பு நாடுகள் ஆக்கிரமித்த கையோடு, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டு, தனக்கு கிடைத்த நிலப்பரப்பை லாபமாகக் கருதிக் கொண்டு, அமைதியாக திரும்பிச் சென்றதும் கூட பாலஸ்தீனிய அராபியர்களுக்கு பிரச்சனையாகத்தான் போய்விட்டது. அந்த நட்பு நாடுகள் நினைத்திருந்தால், அன்றே சுதந்திர பாலஸ்தீன தேசத்தை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், யூதர்களிடம் இருந்த ஒற்றுமை அரபு தேசத்தில் இஸ்லாமியர்களிடம் இல்லை என்பது தான் அராபியர்களின் முக்கியமான பிரச்சனை என்பதையும் இந்தப் புத்தகம் விரிவாக விளக்குகிறது.கிறிஸ்துவர்களின் பிரச்சனைகள்

கிறிஸ்துவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் படி எந்தப் பிரச்சனையுமே இங்கு இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. எனவே தான் அவர்களின் ஆசியுடன் யூதர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். சாலமன் மன்னன் கட்டி, ஏரோது மன்னன் புதுப்பித்து, ரோம் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டு ஒரு சுவராக மட்டும் எஞ்சி இருக்கும் Wailing Wall யூதர்களைப் போலவே கிறிஸ்துவர்களுக்கும் புனிதத்தலம் தான்.. இந்த இடத்தில் தான் கலீபாக்களின் கல்லறைகளும், அதனைச் சுற்றி மசூதியும் இருக்கிறது. இந்த மசூதியை இடிக்கத்தான் இஸ்ரேலிய அரசு, அமெரிக்காவுடன் இணைந்து கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், இயேசுவைக் கொன்றது ரோம் அரசு, அவர் இடிந்து விழும் என்று சொன்ன தேவாலயத்தை இடித்ததும் ரோம் அரசு தான், கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிய் வழியாகவே பயணம் மேற்கொண்ட பவுல் என்னும் அப்போஸ்தலரை கைது செய்து கொலை செய்ததும் ரோம் அரசு தான், கிறிஸ்துவ மதத்தின் தலைமை இடம் அமைந்திருப்பதும் இந்த ரோமில் தான்.. பின்பு கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது.

புத்தகத்தில் இருக்கும் பிற சுவாரஸ்யங்கள்

முகமது நபிகள் க-அபா ஆலயத்தில் எப்படி அறிமுகம் ஆகிறார் என்பதும், அங்கு நிலவிக் கொண்டிருந்த பிரச்சனையை எப்படி அவர் சரி செய்தார் என்பதும், அவர் முன்னின்று நடத்திய மெக்காவின் மீதான போரும், அவரை சோதிக்க விரும்பிய யூத ரபீக்களுக்கு அவர் அளித்த பதிலும் ஒரு திரைப்படத்தை போல இந்தப் புத்தகத்தில் மிக சுவாரஸ்யமாக விளக்கப்பட்டு உள்ளன. ஒரு இறை தூதுவராகவும், போருக்கு தலைமை ஏற்ற ஒரு ஆட்சியாளராகவும் முகம்மது நபிகளை இந்தப் புத்தகத்தில் காணக் கிடைப்பது சுவாரஸ்யமானது.

மேலும் அபூபக்கர் மற்றும் உமர் போன்றோர் கலீபாவாக இருக்கும் போதும் ஒரு வயதான பெண்மணியின் வீட்டில் துணி துவைப்பது, பால் கறப்பது, பாத்திரம் தோய்ப்பது போன்ற செயல்களை செய்து, தான் ஒரு சாதாரணன் என்பதை அவர்கள் தங்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்தும் சம்பவங்கள் இப்படியும் மன்னர்களா..? என்று மெய்சிலிர்க்க வைக்கின்றன. அதுபோல உமர் முகம்மது நபி அவர்களை கொல்ல வாள் எடுத்து, பின்பு மனம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவும் இடமும், முதன் முதலாக எகிப்தின் பைசாந்தியர்களை வென்று ஜெருசலேமுக்குள் காலடி வைக்கும் போது, தேவாலயத்தில் தொழுகை நடத்தச் சொல்லும் முதியவரிடம் அது தவறு என்று சொல்லி மறுதலிப்பதோடு, யூத ஆலயங்களில் கிறிஸ்துவர்களால் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளை அள்ள உத்தரவு பிறப்பிப்பதோடு, தன்னையும் அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதும் மதநல்லிணக்கத்தை கூறும் பக்கங்கள்மேலும் யூதர்கள் ஷபாத்தி இஜ்வி என்னும் போலியான இறை தூதரை நம்பி 15 ஆண்டுகள் ஏமாந்து போன சம்பவமும், ஷபாத்தி இஜ்வி வாள் முனையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முஸ்லீம் மதத்துக்கு மாறும் இடமும் சுவாரஸ்யமானவை. அது போல யூதர்கள் தங்களின் மொழி உணர்வையும், இன உணர்வையும், மத உணர்வையும் எப்படி எங்கு சென்றாலும் கட்டி காத்தார்கள் என்கின்ற விடயங்களும், தங்களுக்கு என்று ஒரு தேசம் கிடைப்பதற்காக ஒரு இனம் என்ன மாதிரியான தியாகங்களைச் செய்ய தயாராக இருந்தது என்பது போன்ற நுட்பமான தகவல்களும் யூத இனத்தின் மீது ஒரு பொறாமையுணர்வை கொடுக்க வல்லதாகவே இருக்கிறது.

எகிப்தின் கமால் அப்துல் நாசர் சூயல் கால்வாய் எகிப்துக்கு சொந்தம் என்று கூறி சூயல் கால்வாயை இழுத்து அடைக்கும் தருணமும், அதை எதிர்த்து படை எதிர்த்து வரும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படைகளின் 40 போர் தாங்கிக் கப்பல்களை துல்லியமாக வீழ்த்திய நாசரின் திறமையும் வியப்பில் ஆழ்த்தும் பக்கங்கள். அது போல வரலாறு நம்ப முடியாத பல விசயங்களை எப்படி நடத்திக் காட்டுகிறது என்கின்ற சுவாரஸ்யமும் இந்த வரலாற்று சுவடுகளில் புதைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது..யாசர் அராபத்தைப் பற்றி சொல்லாமல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தைப் பற்றிப் பேச முடியாது. தனக்கு ஒரு தலைவன் கிடைக்கமாட்டானா..? என்று ஏங்கிக் கொண்டிருந்த பாலஸ்தீன் அராபியர்களுக்கு அராஃபத் என்னும் தலைவன் கிடைக்கும் இடமும், போராளியாக இருந்து அவர் ஆட்சியாளராக மாறும் தருணமும், போஸ்னா ஒப்பந்தம் தன் மக்களுக்கு எந்தவிதமான நல்லதையும் செய்யவில்லை, என்பதை உணர்ந்து மனம் வருந்தும் தருணமும், போராளியாக போராட்டம் மற்றும் ஆட்சியாளராக அமைதி பேச்சு வார்த்தை என இரட்டை குதிரையில் சவாரி செய்த தலைவராக யாசர் அராஃபத்தை மிக அருகே இருந்து அவதானிப்பது போன்ற ஒரு பிம்பத்தை இந்தப் புத்தகம் கொடுக்கிறது.இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் பற்றிய நுணுக்கமான தகவல்களும். தன் யூத இனத்திற்காக போராடிய சிமோன் பார் கொச்பா வின் பக்கங்கள் உணர்ச்சிகரமானவை என்றால், யூத மதகுருவான ஜோகனன் பென் ஷகாயின் வழிகாட்டல் அந்த இனத்துக்கான ஒரு விடிவெள்ளி என்றே கூறலாம். இது தவிர்த்து மிகவும் பிரசித்தி பெற்ற ஆறு நாள் யுத்தம், யாசர் அராஃபத் மாணவ பருவத்தில் போராளியாக அழைந்த தருணங்கள், ஐநா சபையின் அங்கீகாரத்தோடு இஸ்ரேல் தேசம் என்று ஒன்று தோன்றியவுடன் பாலஸ்தீனிய அராபிய பொது மக்கள் போராட தெருவில் இறங்கியது, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் நுணுக்கங்கள், பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் பற்றிய குறிப்புகள், சூயஸ் கால்வாய் ஏன் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு முக்கியமான கால்வாய், அதன் பொருளாதார முக்கியத்துவம் என்ன என்பதனை விளக்கும் பக்கங்கள், அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பு, ரோட்-மேப் ஒப்பந்தம் புஷ் தலைமையில் கையெழுத்தானது, மக்களின் இண்டிஃபதா புரட்சி என பல முக்கியமான சம்பவங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு இந்தப் புத்தகம். நான் இங்கே கூறி இருப்பதெல்லாம், புத்தகத்தில் இருப்பதில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே. இது போல இன்னும் பல சம்பவங்களும் தகவல்களும் கொட்டி கிடக்கிறது.


இஸ்ரேல் பாலஸ்தீன் தேசத்தை இரண்டாகப் பிரிக்கும் படி கட்டப்பட்ட அந்தச் சுவர் பாலஸ்தீன் மக்களின் இரண்டாவது இண்டிபதா போராட்டத்தின் போது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது அன்றே 458 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டு, இரண்டு தேசங்களையும் பிரித்தது. (750 கி.மீ தொலைவில் மேற்குக்கரை முழுவதும் இந்தச் சுவரை எழுப்ப திட்டம்) இதனை இஸ்ரேல் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என்கிறது. பாலஸ்தீன் இதனை பிரிவினைவாதம் என்றும், எங்களுக்கான உரிமையை மறுப்பதற்கான, ஜெருசலேமுக்குள்ளான எங்கள் நுழைவை அத்துமீறல் என்று நிருபீப்பதற்கான குறுக்குவழி என்று முழங்குகிறது. இந்த செய்தி இந்தப் புத்தகத்தில் இடம் பெறவில்லை.முடிவாக நிலமெல்லாம் இரத்தம் என்னும் இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் போது, ஏற்கனவே நான் சொல்லியபடி மத அரசியல் எப்படி எல்லாம் செயல்படும் என்பதையும், அதில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதையும் புரிந்து கொள்வதோடு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் வியாபாரத்தை தவிர்த்து மதத்தின் பெயரால் நடைபெற்ற அரசியலின் ஒரு கோட்டுருவம் புரிந்து கொள்ளும்படி நமக்குக் கிடைக்கும் என்பதால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.

Wednesday, 6 December 2017

அறம் :

கோபி நயினார் இயக்கத்தில், நயன் தாரா நடித்து தயாரித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த அப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும். பள்ளி வளாகத்தில் இருந்து தப்ப நினைக்கும் சிறுவர்கள், அதற்கான உபாயம் தேடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்களில் குள்ளமாக இருக்கும் அப்பாஸ் என்னும் சிறுவன் சொல்லுவான், “டேய் கொஞ்சம் வளந்திட்டா, கீழயே பாக்க மாட்டீங்களா…” என்று கீழே இருக்கும் ஒரு பொந்தைக் காட்டுவான்.. அந்தக் காட்சி தான் எனக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. ஆம். வல்லரசு கனவு காணும் நாம், கை இரண்டையும் மடித்துக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைத் தானே வெறித்துக் கொண்டு கனவு காணுகிறோம். கீழே குனிந்து பார்த்தால், மூடப்படாத போர்வெல் குழிகள், குழிகளில் கசியும் மீத்தேன் வாயு, முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு வறண்டு வாய் பிளந்து கிடக்கும் பூமி, காலடியில் குவிந்து கிடக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகள், நேரத்துக்கு வந்து சேர முடியாத அரசு வாகனம், வர முடிந்தாலும் வந்து சேராத அரசு இயந்திரங்கள், வாழ்க்கையோடு போராடிக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க வராமல், தன்னை சார்ந்தவர்களை மீட்பதற்காக மட்டும் படை எடுக்கும் அரசியல்வாதிகள் என இத்தனைப் பிரச்சனைகளை நம் காலடியில் வைத்துக் கொண்டு தான், ராக்கெட் சயின்ஸ் கொண்டு வல்லரசு கனவு காணுகிறோமா.? என்ற அழுத்தமான கேள்வியை எழுப்புகிறது அறம் திரைப்படம்.  


நாம் செய்தித்தாளில் பல முறை படித்து கடந்திருந்த நெஞ்சை உலுக்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதை மிகச் சிறந்த திரைக்கதையாக மாற்றி, திரையில் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். கதை இல்லை.. கதை இல்லை.. என்று ஒரு இயக்குநர் கூட்டம் புலம்பிக் கொண்டிருக்க… அறம் திரைப்படத்தைப் பார்க்கும் போது, கதை இந்த மண்ணில் நிறையவே இருக்கிறது.. ஆனால் அதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு கதையாக தெரியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. மிகச் சாதாரண கதை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு ஏழைச் சிறுமியை தன் கையாலாகாத்தனத்தால் காப்பாற்ற முடியாத என்று அரசு நிர்வாகம் கைவிரித்துவிட.. நேர்மையும் துணிச்சலும் விடாமுயற்சியும் கொண்ட ஒரு பெண் ஆட்சியர் அந்த இக்கட்டான சூழலில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே அறம் படத்தின் ஒற்றை வரிக்கதை.


படத்துக்கு மிகப்பெரிய பலம், அந்த ஏழைக் குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தத்ரூபமான நடிப்பும், நயன் தாரா என்னும் அடையாளமும் தான். நயன் தாராவிற்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படம் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் செல்வது அதன் தனிச் சிறப்பு. அது போல் வசனங்கள் சாட்டையடியாக இருப்பதோடு, கதையோடு சேர்ந்து பயணிப்பதால், இயல்பாக இரசிக்க முடிகிறது. ஜிப்ரானின் இசைக்கு காட்சிக்கான கணத்தை மிகக் கச்சிதமாக கொடுத்திருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் போர்வெல் குழி தொடர்பான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. படத்தில் சில கதாபாத்திரங்கள் தவிர்த்து, பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


கீழே சில Spoiler-கள் இருப்பதால், படம் பார்க்காதவர்கள் இதைப் படித்து விட்டு, படம் பார்த்தால் அது அவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்கும் என்பதால், படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கும்படி வேண்டுகிறேன். அறம்
திரைப்படம் ஒரு புள்ளியில் தன் இயல்பான தன்மையில் இருந்து சினிமாத்தனமான பிண்ணனியில் மாறி விடுகிறது. அப்படி இல்லாமல் அது முழுக்கவே தன் இயல்பான தன்மையில் இருந்திருந்தால், அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தன் உயர் அதிகாரியின் முன்னால் விசாரணைக்கு உட்கார்ந்திருக்கும் போது நயன் தாராவிடம் காணப்படும் பதட்டமும் தயக்கமும், அவர் கையாண்ட களத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்கின்ற பரிதவிப்பை கொடுத்து, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று படம் முடியும் போது, பின்பு ஏன் அந்த தவிப்பும் பதட்டமும் அவரிடம் இருந்தது என்கின்ற கேள்வி எழுவதையும், அது வெறும் சுவாரஸ்யத்தை தக்கவைப்பதற்காக கையாளப்பட்டிருக்கும் தவறான யுத்தி என்று உணரும் போதும் அதை தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆட்சியராக நயன் தாரா அவர்களின் அன்றைய ஒரு நாள் பயணத்தில் அவர் அடைந்திருக்கும் வெற்றிகள் இரண்டு. ஒன்று தண்ணீரின்றி தவிக்கும் கிராமத்துக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் கிடைக்க வழி செய்தது. மற்றொன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை பல போராட்டங்கள், சோதனைகள், எதிர்ப்புகளை மீறி, தன் அதிகாரத்தைக் கொண்டு போராடி மீட்டது. இப்படி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போராடி மக்களுக்கான இரண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தப் பின்னர், இந்த அதிகார மையத்தில் இருந்து கொண்டு என்னால் மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை, எனவே இதில் இருந்து நான் விலகுகிறேன், என்று அவர் எடுக்கும் முடிவு திரைக்கதை ஓட்டத்தின் முரணான அம்சமாக அமைகிறது. இரண்டு சம்பவங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் தோற்றிருந்தால் கூட அந்த முடிவு ஏற்புடையதாக இருந்திருக்கும். மேலும் குழந்தை கயிற்றின் சுருக்குக்குள் சரியாக கை நுழைக்காத போதும், அதை தூக்குவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்குவதும், அதை ஆட்சியரும் எந்தவித கேள்வியும் இல்லாமல் அனுமதிப்பதும் சற்று நெருடலாக இருந்தது. அது போல திரைப்படம் முழுக்க முழுக்க மக்களின் பரிதாப உணர்வலைகளை மட்டுமே கிளப்பி விட்டு, அதிலேயே பயணம் செய்திருப்பதும், நமக்குத் தெரிந்த அரசியல் சித்தாந்தங்களையே பேசி இருப்பதும் சற்றே பலவீனமாகத் தோன்றியது.


இருப்பினும் சமகால சூழலில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒப்பு நோக்கினால், உண்மையான அறவுணர்வோடு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாலும், திரைப்படம் பேசிய அரசியல் நையாண்டிகளும், சித்தாந்தங்களும் நாம் அறிந்ததே என்ற கூற்று இருப்பினும், அவைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்து, அதனை ஆவணப்படுத்தி இருக்கும் அந்த தைரியம் மற்றும் துணிச்சலுக்காகவும், இந்த அறவுணர்வையும், அரசியல் சார்ந்த விழிப்புணர்வையும் திரைப்படம் வாயிலாக கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு போய் சேர்த்திருப்பதாலும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். இது போன்ற கதையம்சம் உள்ள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக மட்டும் நடிக்க ஒப்புக் கொண்ட முதிர்ச்சிக்காகவும், அத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த துணிச்சலுக்காவும் நடிகையும் தயாரிப்பாளருமான நயன் தாராவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். மக்கள் அவர்களது வாழ்க்கையை, வலியை பேசும் திரைப்படங்களை என்றுமே கைவிட மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்த அறம் திரைப்படம்.

மெர்சல்:

தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ஆயிரம் வாலா பட்டாசு. (நீ…ளத்தில் சொன்னேன். 2 மணி நேரம் 50 நிமிடம்) அட்லி விஜய் கூட்டணியில் இது இரண்டாவது படம். பழைய தமிழ்ப்படங்களையே புதிதாக ரீமேக் செய்கிறார் என்று இரண்டே படங்களில் பாராட்டுப் பத்திரம் பெற்ற அட்லி, தனது மூன்றாவது படத்தில், அந்தப் பாராட்டுப் பத்திரத்துக்கு தான் பாத்தியமானவன் என்பதை மீண்டும் நிருபீத்திருக்கிறார். கதையாகப் பார்த்தால் பல தமிழ் திரைப்படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த கதை தான். அப்பாவைக் கொன்ற வில்லனை, மகன்கள் இரட்டையராக வந்து பழிவாங்கும் கதை. ஆனால் மெர்சல் பழைய படங்களின் காப்பி என்பதை அப்பட்டமாக காட்டுவதில்லை. ஏனென்றால் முந்தைய இரு படங்களைப் போல் கதை, திரைக்கதை என இரண்டையுமே ஜெராக்ஸ் செய்யாமல், திரைக்கதையில் சற்று(சற்றே) மெனக்கெட்டு இருப்பதால், மெர்சலில் இருக்கும் பழைய படங்களின் சரத்துகள் துருத்திக் கொண்டு பளீச்சென கண்ணில் தெரிவதில்லை.


ஏழை எளிய மக்களிடம் வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கிக் கொண்டு, மருத்துவம் செய்யும் சென்னை மருத்துவரான மாறன், தன் மருத்துவ சேவைகளுக்காக ப்ரான்ஸ் நாட்டில் உலக அமைப்புகளிடம் இருந்து விருதும் பெறுகிறார். பொழுதுபோக்காக மேஜிக்கும் செய்கிறார். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மேஜிக் ஷோவில் பதட்டமின்றி அனைவரின் கண் முன்னே ஒரு கொலையும் செய்கிறார். அவர் மருத்துவரா..? மேஜிஷியனா..?? கொலைகாரனா..?? ஏன் அந்தக் கொலையை செய்தார்..? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் படத்தின் கதை. இதை மூன்று காதல் எபிசோடுகளாகவும், மூன்று மோதல் எபிசோடுகளாகவும் பிரித்துக் கதை சொல்லி இருக்கிறார் அட்லி.


தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இது ஒரு முக்கியமான திரைப்படம். தமிழுக்கான மற்றும் தமிழர்களுக்கான விசயங்களைப் போகிறப் போக்கில் பேசி இருப்பதோடு, அரசியலுக்கான அர்ச்சதைகளையும் ஆங்காங்கே தூவி இருக்கிறார்கள். தளபதியாக வரும் மதுரைக்காரன் கதாபாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் உடல்மொழி, சிட்டுகுருவி கிழவியிடம் அவர் காட்டும் அடாவடிகள் எல்லாம் அவர் திரை வாழ்க்கையில் சற்றே புதிது. அது மட்டுமன்றி தோற்றத்தில் பல இடங்களில் குஷி காலத்து விஜயைப் பார்க்க முடிந்தது. ஆனால், தோற்றத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் குஷி காலத்து விஜயை அண்ணன் தம்பி இணையும் போதும், அதற்கு பிந்தையக் காட்சிகளிலும் காண முடிவதுதான் பரிதாபம். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் நித்யாமேனனுக்கு மட்டும் தான். நிறைவாக செய்திருக்கிறார். சமந்தா ஓரிரு காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு அலட்டிக் கொள்ளாத வில்லன் வேடம் அசால்ட்டாக செய்திருக்கிறார்.


பெரிய நடிகர்களுக்கான கமர்ஸியல் திரைப்படத்தை எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அது ஒரு மிகப்பெரிய கலை. அது அட்லிக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் என்னென்ன எந்தெந்த அளவு இருக்க வேண்டும் என்பதிலும் நல்ல தெளிவு இருக்கிறது. எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்னும் ஒற்றை வரிக் கதையின் மீது ஒரு அரண்மனையையே கட்டி இருக்கிறார். எளிய முறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், உடைகளைக் கொண்டும், உடல் நிறங்களைக் கொண்டும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால அவமானப்படுத்தப்படும் மனிதர்கள் என ஆங்காங்கே உண்மையான சம்பவங்களை கதைகளில் காட்சிகளாகக் கோர்த்திருப்பது படத்திற்கு வலுசேர்க்கிறது. ரஹ்மானின் இசையும் பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. அது போல் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் இடங்களுக்கு ஏற்றார் போல வண்ணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங்கில் இன்னும் பல காட்சிகளை வெட்டியிருந்தால், படத்தில் அலுப்பு தட்டி இருக்காது என்று தோன்றுகிறது..

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு திருப்தியைக் கொடுக்கும் படமாகவே அமைந்திருக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படம் ஏமாற்றத்தையே தரக் கூடும். திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொல்லியிருந்தாலும், அது மிகப்பெரிய மெனக்கெடல் இல்லை, ஒரு மிகச்சிறிய மெனக்கெடல் தான்.. கதாபாத்திரத்தின் அடையாளத்தை குழப்பவதன் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும் டெக்னிக்கை நான்-லீனியர் கதை சொல்லலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் அதுவே தான் திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது குழப்பத்தையும் கொடுக்கிறது. மருத்துவமும், மேஜிக்கும் தெரிந்த ஒருவன் தான் கொலை செய்திருக்கிறான் என்பது தான், போலீஸ்க்கு கிடைக்கும் க்ளூ. இதைக் கொண்டு தான் ஆடியன்ஸுக்கும் இருவரும் ஒருவரே என்பது போன்ற பிம்பத்தைக் கொடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்தர் பல்டி அடித்து, இருவருமே வேறு வேறு என்று சொல்லி, கதைக்குள் சென்று விடுகின்றனர். மேஜிக் தெரிந்வனுக்கு மருத்துவம் எப்படி தெரிந்தது என்ற கேள்வி கடைசி வரை தொக்கி நிற்கிறது. ஃபிரான்சில் அந்த மாடலிடம் விஜய் பணம் கொடுப்பது எதற்கு...? பின்பு ஏன் காஜலிடமும் உதவி கேட்கிறார்..? மேஜிசியன் விஜய் கதை சொல்ல ஆரம்பிக்கிறார், ஆனால் அவர் சொல்வதெல்லாம் டாக்டரைப் பற்றிய கதை இப்படி படம் முடிந்தப் பின்னர் யோசித்தால் ஆயிரம் கேள்விகள்.. இதுதான் படத்தின் மைனஸ். ஆனால் படம் பார்க்கும் போது, இந்த கேள்விகள் எதுவுமே நமக்குத் தோன்றாமல் இருப்பது தான் படத்தின் ப்ளஸ்..மேயாத மான் :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜின் தயாரிப்பில், இயக்குநர் இரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் மேயாத மான். தன் நண்பனின் ஒருதலைக் காதலை ஒரேயடியாக முடித்து வைப்பதற்காக தன் நண்பனின் காதலியிடம் மற்ற நண்பர்கள், தூது செல்லும் ஒரு கதை. தன் நண்பனை ஒரு தலையாக காதலிக்கும் தன் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனிடமே தூது போகும் இன்னொரு கதை. என, இரண்டு காதல் கதைகளும் நான்கு கதாபாத்திரங்களுமே சுற்றி வரும் களம் தான், மேயாத மான். ஒரு காதல் ஜோடியாக வைபவ்வும், ப்ரியா பவானி சங்கரும், மற்றொரு காதல் ஜோடியாக விவேக் பிரசன்னா மற்றும் இந்துஜா. இதில் முதல் காதல் ஜோடியை விட அதிகமாக நம்மை ஈர்ப்பது இரண்டாவது ஜோடி தான்.


காதல், நட்பு, காமெடி, கானா என இவற்றைச் சுற்றியே கதை பயணிக்கிறது. தன் காதலை கடைசி வரை சொல்லாமல், ஒரு தலையாகக் காதலித்து மேடைகளில் லைட் மியூசிக் நடத்தி, கானாப் பாடல்களைப் பாடிக் கொண்டு திரியும் வட சென்னை இளைஞரின் கதாபாத்திரம் வைபவ்-க்கு. சோகம், காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தெரு நாயை துரத்திக் கொண்டு ஓடும் காட்சி, ஓடாத கிராமபோனை ஓட வைத்து, தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் காட்சி, ஷேக்ஸ்பியரின் மேற்கோளைச் சொல்லி குடித்து விட்டு புலம்பும் காட்சி போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. ஆனால் காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் இவர் தள்ளாடுவது தெரிகிறது. திருமணம் நிச்சயக்கிப்பட்ட நாளில், தன்னை ஒருதலையாக காதலித்த ஒருவன், தன்னை எப்படியெல்லாம் காதலித்து இருக்கிறான் என்பதை அவன் வாயாலேயே அறிந்து கொண்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் நாயகி ப்ரியா பவானி சங்கருக்கு. தன்னை காதலிப்பவனுக்கு நல்லது செய்வதா..? அல்லது தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதா..? என்கின்ற ஊடாட்டத்துக்கு இடையிலான நடிப்பை வெகு சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.


நண்பனாக வரும் விவேக் ப்ரசன்னாவும், நாயகனின் தங்கையாக வரும் இந்துஜாவும் தான் மொத்த படத்தின் ஹைலைட்டும். தன் அண்ணனின் காதலுக்காக அவனது நண்பர்கள் தூது போனவர்கள் என்பதனை அறிந்து, தன் அண்ணனின் நண்பன் மீதே காதல் கொண்டுவிட்டு, அவன் தன்னைத் தங்கையாகத் தான் பார்க்கிறான் என்பதனை அறிந்து, தன் காதலை சொல்ல முடியாமல், தன் அண்ணனின் நண்பன் மீது வெறுப்பை உமிழும் கதாபாத்திரம் இந்துஜாவிற்கு. அசத்தியிருக்கிறார் இந்துஜா. விவேக் ப்ரசன்னாவும் நடிப்பில் ஜொலிக்கிறார். ஒரு தலைக்காதலால் தன் நண்பனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்கின்ற பரிதவிப்பிலும், தன் நண்பனின் தங்கையை தானும் தங்கையாக பாவித்து கண்ணியமாக நடக்கும் தருணங்களிலும், அவள் மீது தனக்கான காதலை வெளிப்படுத்த நெடுஞ்சாலையில் வைத்து அவர் எடுக்கும் பிரயத்தனங்களிலும் அமர்களப்படுத்தி இருக்கிறார்.


”மது” என்ற பெயரில் ஓரிரு வருடங்களுக்கு முன்னால் ஒரு குறும்படமாக இதனைப் பார்த்த நினைவு. அதையே ஒரு முழு நீளப் படமாக செய்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையில் கானாப் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதனை விட கதையோடும், கதை வாழ்வியலோடும் ஒன்றி இருக்கிறது என்று சொல்லலாம். இயக்குனர் இரத்னக்குமாருக்கு இது முதல் படம். படம் தொடங்கும் முதல் புள்ளியிலேயே படத்தின் முடிவு தெரிந்து விடுவது தான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய குறை. இதனால் திரைக்கதை மிகப்பெரிய சுவாரஸ்யம் ஏதும் இல்லாமலேயே கடக்கிறது. காட்சிகளில் இருக்கும் நகைச்சுவை ஆங்காங்கே மட்டும் சிரிக்க வைப்பதால் சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அது போல் கதை நடப்பது எந்தக் காலத்தில் என்பதும் மிகத் தெளிவாக சொல்லப்படவில்லை. மேடைகளில் பாடப்படும் 1980களின் பாடல்களைக் கொண்டு மட்டுமே கதை நடக்கும் காலத்தை யூகிக்க முடிகிறது. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் இல்லாமல் செய்வது நாயகனின் தங்கைக்கும், நண்பனுக்குமான காதலும் அதற்கான புதுமையான காட்சிகளும் தான். ஒரு குறைந்த பட்ஜெட்டில் ஒரளவு இரசிக்கும் படியான படத்தையே இயக்குநர் இரத்னகுமார் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் மேயாத மானை கொண்டாடவும் முடியவில்லை.. அதே நேரம் இரசிக்காமல் புறக்கணிக்கவும் முடியவில்லை என்பது தான் மேயாத மானின் சிறப்பு.