Sunday, 28 November 2021

படம் காட்டி கதை சொல்கிறேன்.


கொரோனா பேரிடர் காலத்தில் வீட்டில் அடைபட்டுக் கிடந்த போது, என் தமக்கையின் மகள் ஜெஸி (ஜெஸிகா-8 வயது) புதிய காலணி வாங்கித் தர மறுக்கப்பட்டதால் கோபத்தில் இருந்தாள். அவளை சமாதானம் செய்யும் நோக்கில் அப்போது என் வசமிருந்த புகழ்பெற்ற ஈரானியத் திரைப்படம் “Children of Heven” திரைப்படத்தை அவளுக்குப் போட்டுக் காண்பித்தேன். அவள் படம் பார்க்க உட்கார்ந்த போது, அவளோடு அவளின் 6 வயது தமயனும் ஒட்டிக் கொண்டான். இருவருமே எதிர்பார்த்தது போல் படத்தை மிகவும் இரசித்துப் பார்த்து கலை என்பது மொழி மற்றும் கலாச்சாரம் கடந்தது என்பதை மெய்பித்தார்கள். குழந்தைகள் என்பதால் காட்சிகளின் அழகியலை நின்று ரசிக்காமல் கதையை அவ்வபோது நகர்த்தி நகர்த்தி தேடினார்கள். பேச்சுமொழி புரியாத போதும் என்னிடம் காட்சிக்கு காட்சி விளக்கம் கேட்க தவறவே இல்லை. அப்பொழுதே இது போன்ற பல திரைப்படங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இது நடந்து சரியாக இரு நாள் பொழுதில் நண்பனின் தமயனிடம் இருந்து ஒரு அழைப்பு. தான் சில யூடியூப் உரலிகளை எனக்கு அனுப்பி இருப்பதாகவும் அதைப் பார்த்துவிட்டு அவரை தொலைபேசியில் அழைக்கும்படியும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். அந்த யூடியூப் தளங்களைப் பார்த்த போது, அவை பல்வேறு வேற்றுமொழிப்படங்களுக்கான தமிழ் விளக்க வீடியோக்கள் என்பது புரிந்தது. இது போன்ற வீடியோக்களை நான் அப்பொழுது தான் முதன்முதலாகப் பார்த்தேன். அதில் காட்சிகள் சில நேரங்களில் சலனப் புகைப்படங்களாகவும், சில தருணங்களில் ப்ரேட் ரேட் FRAME RATE மாற்றியமைத்த வீடியோக்களின் தொகுப்பாகவும் இருந்தன. அதன் பின்னணியில் கதை தொடர்பான வாய்ஸ் ஓவர் தொடர்ந்தபடி இருந்தது. அதை முழுவதுமாகப் பார்த்துவிட்டு மீண்டும் அந்த நண்பனின் தமயனை அழைத்தேன்.

அவர், என் சினிமா தொடர்பான பணிகள் எப்படிப் போகிறது என்று விசாரித்துவிட்டு, நீ முன்பு கனவுத் திருடன் என்னும் வலைத்தளத்தில் எழுதுவாயே, அது போல் இந்த வீடியோக்களையும் உருவாக்கினால் என்ன..? இவர்களைவிட நீ காத்திரமாக அந்தக் கதைகளை உணர்வுபூர்வமாக சொல்வாய் என்று நான் நம்புகிறேன் என்று ஊக்கம் தந்தார். அது தான் முதல் பொறி. நான் இரசித்த நான் அனுபவித்த, என்னை செதுக்கிய, என் உளத்தோடு உறவாடிய திரைப்படங்களை என் வலைதளத்தில் வார்த்தைகளாக வடித்திருக்கிறேன். அதைக் காட்சியாகவும் கடத்தலாமே என்று ஒரு பொறி.

ஆனால், அப்பொழுது ஒரு முழு நீள திரைப்படத்திற்கான கதையை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் அச்செயலில் உடனடியாக இறங்க இயலவில்லை. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் இப்பொழுது அப்பணியை துவங்கியிருக்கிறேன். நான் அறிமுகப்படுத்த விரும்பும் அனைத்துத் திரைப்படங்களையும் அதன் காத்திரமான காட்சிகள் மற்றும் கனத்த கதைகளோடு எம் மக்களுக்கு வீடியோவாக “4F Film Fever” என்னும் யூ-டியூப் மூலம் கடத்தத் தொடங்கியிருக்கிறேன்.

திரைப்படங்களின் அசலான காட்சிகள் புகைப்படங்களாக ஒன்றன்பின் ஒன்று நகர்ந்தபடி இருக்க, அதன் மீது அவர்கள் பேசும் வசனங்களை எளிய தமிழில் வீடியோவின் நீளம் கருதி சற்றே விரைவாக கூறி சில வீடியோக்களை உருவாக்கத் துவங்கி இருக்கிறேன். ஆம் இதுவரை படம் காட்டாமல் வலைதளப் பக்கங்களில் கதையை மட்டும் கூறிக் கொண்டும் அவற்றை விமர்சித்துக் கொண்டும் இருந்த நான், தற்போது விமர்சனங்களை கூறாமல், படம் காட்டி கதை மட்டும் கூறத் துவங்கியிருக்கிறேன்.

பிறமொழி அறியாத, பிறமொழிப் படங்களை தரவிறக்கம் செய்து பார்க்க இயலாத மற்றும் தெரியாத, மக்களுக்கு மிக முக்கியமான திரைப்படங்கள், வெஃப் சீரிஸ் மற்றும் குறும்படங்களை படம் காட்டி கதை சொல்வதன் மூலம் அறிமுகப்படுத்துவது எளிதாக இருப்பதோடு, அவர்களுக்கும் அது எளிதில் மனதில் பதியும் என்ற நம்பிக்கையுடன் இதனை முன்னெடுக்கத் துவங்கியிருக்கிறேன்.

இந்த வீடியோ விளக்கத் திரைப்படங்களின் பட்டியலில் கண்டிப்பாக குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கும் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். அதன்படி எல்லா வயதினருக்குமான திரைப்படங்கள் கீழ்க்கண்ட யூடியூப் உரலியில் எளிமையான விளக்கப்படங்களாக விரைவில் வெளிவரும். பிறமொழிப்படங்களை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் விரும்புபவர்கள் இந்த உரலியை பின் தொடர்ந்து பதிவு செய்து கொள்ளவும்.

https://www.youtube.com/channel/UCMa7HJXXUoD_M4pFOZBkRNw

இதில் சென்ற ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்புப் பெற்ற, குறுந்தொடரான “Paatal Lok” Episode 1 & 2 வெளியாகி இருக்கிறது.

இந்த குறுந்தொடரானது வழக்குகள் கையாளப்படும் விதத்தில் இருக்கும் அஜாக்கிரதைகளையும், கண்மூடித்தனமான கட்டுக் கதைகளையும், பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தமே இல்லாமல் அரங்கேற்றப்படும் நாடகங்களையும் அந்த அபத்தமான நாடகங்களுக்கு பின்னணியில் இருக்கும், பொதுமக்களான நம்மைப் பாதிக்கும் நாம் என்றுமே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் காரணிகளை நம் கண் முன் கட்டவிழ்த்துத் காட்டுகிறது.  அதனை காண விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை பற்றி பின் தொடரவும்.

https://www.youtube.com/watch?v=yDYxkCoggg0 – Paatal Lok Episode – 1 (Bridges)

https://www.youtube.com/watch?v=jDtc0m_7FIc – Paatal Lok Episode – 2 (Lost and Found)

 

நன்றி.