Wednesday, 26 February 2014

பண்ணையாரும் பத்மினியும்:

என் நெருங்கிய நண்பன் ஒருவன் அடிக்கடி என்னிடம் ஒரு கேள்வி கேட்பான்… ஏன் எந்த தமிழ்படமும் ஒரு நடுத்தர வயதுள்ள அல்லது வயதானவர்களை நாயகர்களாக முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுவதில்லை என்று. இந்தக் கேள்விக்கு அதற்கான வணிகசூழல் நம் தமிழ் சினிமாவில் இல்லை என்பதே பெரும்பாலும் என் பதிலாக இருந்திருக்கிறது.. இருப்பினும் அப்படி ஒரு தமிழ்ப்படம் ஏன் வரவில்லை என்ற ஏக்கமும் என் அடிமனதில் அப்படியே படிந்துவிட்டிருந்தது… அந்த ஏக்கத்தை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த தலைமுறைகளைத் தொடர்ந்து வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த பண்ணையாரும் பத்மினியும்..


நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கை விட்டு மிகுந்த மனநிறைவுடன் வெளிவந்தது இந்த பண்ணையாரையும் பத்மினியையும் பார்த்துத்தான்.. சமீபத்திய தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இயங்கி இருக்கும் படம்.. மிகச் சிறப்பான ஆரம்பம்.. மிகச் சிறப்பான முடிவு.. மிக அற்புதமான தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்கள்… மிக நேர்த்தியான நடிப்பு… காட்சிகளோடு இணைந்த மிகச் சரியான பிண்ணனி இசை.. என எல்லாமே செய்நேர்த்தியோடு இருந்த படம் இந்த பண்ணையாரும் பத்மினியும்.. குறும்பட இயக்குநர்களின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் இயக்குநர்களின் படைப்புகளில் பீட்ஷாவிற்கு அடுத்து என்னை சலனப்படுத்திய படம் இந்த பண்ணையாரும் பத்மினியும்..

படத்தின் தலைப்பிலேயே பண்ணையார் மற்றும் பத்மினி இருப்பதால் கதையின் நாயகன் நாயகி யார் என்பதை சொல்லத் தேவையில்லை.. நடுத்தர வயதுள்ள பண்ணையாரான ஜெயப்பிரகாஷ் தான் கதையின் நாயகன்.. அவருக்கு நெருக்கமான ஒரு நண்பரின் வாயிலாக ஜெயப்பிரகாஷ்க்கு அறிமுகமாகிறது அந்த பத்மினி கார்.. பார்த்தமாத்திரத்திலேயே பண்ணையார் பத்மினியின் மீது மையம் கொள்ள அதிலிருந்து அவர் பேசும் எல்லா சம்பாஷனைகளும் பத்மினியையே சுற்றி சுற்றி வருகிறது, அந்தக் காருக்கு சொந்தக்காரரான ஜெயப்பிரகாஷின் நண்பரே ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், “ஏம்ப்பா… காரத்தவிர பேச வேற விசயமே இல்லையாப்பா…” என்று கேக்கும் அளவுக்கு போய்விடுகிறது நிலை.. இருப்பினும் தன் நண்பனுக்கு காரின் மீது ஒரு கண் இருப்பதை தெரிந்து கொண்டு, தன் மகளைக் காண வெளியூர் செல்லும் அவர், தன் காரை பண்ணையார் ஜெயப்பிரகாஷிடம் கொடுத்து தான் வரும் வரை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்ல… பண்ணையாருக்கு சந்தோசம் தாளவில்லை.. கார் தன்னோடு இருக்கும் போது கார் மீதான காதல் பண்ணையாருக்கு அதிகமாக, அதைக் கண்டு பண்ணையாரின் மனைவி துளசி “அது நம் பொருள் இல்லை.. அதன் மீது அதிகமாக ஆசை வைக்காதே…” என்று தன் கணவனை எச்சரிக்க.. அதை பண்ணையார் கண்டுகொள்ளாமல் விடுகிறார்.. ஒரு கட்டத்தில் காரை இழக்க வேண்டிய சூழல் நெருங்குகிறது…. செய்வதறியாமல் பண்ணையார் திகைக்க… தன் கணவனின் நிலைகண்டு மனைவியும் கலங்கிறார்… பண்ணையார் காரை இழந்தாரா…? இல்லையா என்பது க்ளைமாக்ஸ்… இது மிகச் சுருக்கமான கதை.. இதைவிட விரிவான அழகான காட்சிகளுடன் கூடிய கதை திரையில் காத்திருக்கிறது.. கண்டிப்பாக கண்டு களியுங்கள்..


ஜெயப்பிரகாஷ். ஊர் பண்ணையார் என்பதால் வழக்கம் போல் ஊருக்கே இவர்தான் கடவுள்… இவர் முதன்முதலாக தன் வீட்டில் வாங்கி வைக்கும் எல்லா உபகரணங்களும் அந்த ஊருக்கே பயன்படும்.. உதாரணம் டெலிபோன் மற்றும் டிவி.. ஊரே கூடி அவர் வீட்டில் தான் டிவி பார்க்கும்.. அதுபோல அர்த்தசாமத்தில் இழவு செய்திக்காக காத்திருக்கும் ஒரு கூட்டம் பண்ணையார் வீட்டில் போனுக்கு அடியில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும், பண்ணையார் வந்ததும் அனைவரும் ஒப்பாரியை நிப்பாட்டுவதும், அவர் அனுமதி அளித்ததும் அழத் தொடங்குவதும் மிகுந்த நகாஸான காட்சி.. அவர்கள் அழுது கொண்டு இருக்கும் போது பண்ணையார் சேரின் பின்னால் தன் தலையை சாய்த்து அமர்ந்து கொள்ள உள்ளே வரும் பீடை.. பண்ணையார் தான் இறந்துவிட்டாரோ என்று எண்ணி கத்தி அழத் தொடங்கி அவர் கண் விழித்துப் பார்த்ததும்… தன்னை சமாளித்துக் கொண்டு “யார் செத்தது..?” என்று கேட்டுக் கொண்டே அழும் இடமும் சிம்ப்ளி சூப்பர்…

பண்ணையாராக ஜெயப்பிரகாஷ்.. இவருடைய கேரியரில் கடைசி வரை நினைவில் நிற்பது போல ஒரு படம்.. மிக அற்புதமாக நடித்திருக்கிறார்…. கார் தனக்குக் கிடைத்துவிட்ட குஷியில் ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து வருவதும், தன் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிச் சென்று முன்னால் நிற்பதும், காரை ஓட்டிக் காட்டுகிறேன் என்று தன் மனைவியிடம் சவால் விடுவதும், தன் மனைவி மீது கொண்ட காதலில் குழைவதும், தன்னை தவறாக புரிந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், “கோயிலுக்குப் போற அந்த நாளத் தவிர வேற நாள்… நான் காரையே தொடலடா… போதுமா…” என சேதுபதியை சமாதானம் செய்வதும், மகளை திட்டும் தன் மனைவியை அதட்டி “உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டுப் போமா.. இது உன் வீடு..” என்று பாசம் காட்டுவதும், மகள் வீட்டிலிருந்து வந்து “உனக்காகவாது ஒரு தடவை நா கார கேட்டுப் பாத்துருக்கலாம்ல…” என்று மனைவியிடம் மருகுவதுமாக மிக அற்புதமான நடிப்பு..

படத்தின் இரண்டாவது ஹீரோ அந்த பச்சை நிற பத்மினி காரே தான்… அது முதன் முதலில் பண்ணையார் கண்ணில் படும் போது அதற்கு கொடுக்கப்படும் அறிமுக இசையும் கேமரா கோணமும், அதே போல ஃப்ரீ க்ளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கப்படும் இசையும் மிக அலாதியானது… பண்ணையாரின் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த பச்சை நிற காரின் மீது மஞ்சள் நிறப் பூக்கள் சொறிந்து கொண்டே இருக்கும் காட்சிகள் சற்றே செயற்கையாக தெரிந்தாலும் கண்டிப்பாக அருமையான காட்சிகள் தான்..

பத்மினியை பண்ணையாருக்கு ஓட்டத் தெரியாததால், அதன் டிரைவராக வருபவர் விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதியை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.. இது போன்ற படங்களில் இவரை தவிர்த்து வேறு யாரும் நடிக்க முன்வர மாட்டார்கள்.. அதற்காகவே அவருக்கு ஸ்பெசல் பாராட்டு.. ரம்மியில் விட்ட இடத்தை இதில் தன் பிரத்யேகமான நடிப்பால் மீட்டெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.. அடுத்த கியர் எப்படி போடுவது என்று கேட்கும் பண்ணையாரிடம்… “எதுக்கு…? கோயிலுக்குத் தான செகண்ட் கியரிலயே போய்ட்டு செகண்ட்லயே வாங்க… இப்பவே என் காருன்னு பேசுறீங்க… அப்புடியே என்ன பொட்டிய கட்டி அனுப்பலாம்னு பாக்குறீங்களா…? என்று வெடிக்கும் போதும், தன் காதலை பட்டென்று போட்டு உடைக்கும் போதும், பண்ணையாரின் மனைவி துளசி, “கார் இல்லைங்கிறதால் இங்க வராம இருக்கக்கூடாது எப்பவும் போல வரணும்… நாம சீக்கிரமே புதுக்கார் வாங்குவோ…” என தேற்றும் போது பதிலுக்கு அவரை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் கண் கலங்கும் போதும், காரை காப்பாற்றும் எண்ணத்தில் காரை வைக்கோலுக்குள் நிறுத்தி வைப்பதுமாக எக்ஸலண்ட் ஆக்டிங்க்…. சூப்பர்ஜி… சூப்பர்ஜி.. சூப்பர்ஜி..


அடுத்ததாக பண்ணையாரின் மனைவியாக நடித்திருக்கும் துளசியின் நடிப்பு.. தன் கணவன் மீதுள்ள அன்பை அவர் வெளிக்காட்டும் இடங்கள் அத்தனை அழகு.. ”தன் கணவனுக்கு கார் ஓட்ட வரவில்லை என்றாலும் பரவாயில்லை.., நீ அருகிலிருந்து காரை ஓட்ட… நான் அவர் ஓட்டுனதாகவே நம்புவது போல நடிக்கிறேன்… என்று விஜய் சேதுபதியுடன் திட்டம் தீட்டுவதும், கார் மீது கொண்ட மோகத்தால் பொய் சொல்லத் துணியும் தன் கணவனை தடுத்து நல்வழிப்படுத்துவதும், தன் கணவனுக்குப் பிரியமான காரை ஏது தன் மகள் வழக்கம் போல புக்ககம் கொண்டு போய் விடுவாளோ என்ற பதட்டத்தில் அவளை திட்டித் தீர்ப்பதும், தன் வீட்டு வேலைக்காரர்களின் மீது அன்பை பொழிவதுமாக அற்புதமான நடிப்பு…


இது தவிர்த்து பீடையாக வரும் அந்த இளைஞரின் நடிப்பு, வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஏதோ ஒன்றை எடுத்துச் செல்லும் மகளாக வரும் நீலிமா ராணி, விஜய் சேதுபதியின் காதலியாக வரும் ஜஸ்வர்யா என எல்லோருமே சொல்லிக் கொள்ளும் படி நடித்திருக்கிறார்கள்… பிணத்தை காரின் மீது வைத்து எடுத்துச் செல்லும் காட்சியும் மறக்கமுடியாத ஒன்று… இது தவிர்த்து படத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரமாக நான் கருதுவது, காரின் முன் சீட்டில் உட்கார ஐந்து ரூபாய் காசு சேர்க்கும் அந்த சிறுவனின் கதாபாத்திரத்தை… அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி உள்ளார் இயக்குநர்.. அவனுடைய பார்வையில் இருந்து கதை தொடங்குவதும், அவனுடைய பார்வையிலேயே கதை முடிவதும் படத்திற்கு வேறொரு வண்ணத்தைக் கொடுக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை..

எனக்கும் இது ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தியது.. 1992ல் இருந்து 1996 கால கட்டத்துக்குள் இருக்கும்.. நான் சிறுவனாக இருந்த போது எனக்கு திண்பண்டத்துக்காக கொடுக்கப்படும் காசு வெறும் ஜம்பது பைசா.. அப்பொழுதுதான் ஃப்ரூட்டி அட்டை வடிவ மாம்பழ ஜீஸ் அறிமுகமாகி இருந்த காலகட்டம்.. அதை வாங்கி சுவைக்க வேண்டும் என்பது என் தீராத ஆசை.. ஆனால் அப்போது அதன் விலையோ 5லிருந்து 8 ரூபாய்க்குள் என்று நினைக்கிறேன்… இரண்டு மூன்று நாட்கள் எப்படியோ மனதை கட்டுப்படுத்தி ஒரு ரூபாய் வரை சேர்த்து விடுவேன்… ஆனால் நண்பர்கள் திண்பண்டம் சுவைப்பதைப் பார்த்து அடக்க முடியாமல் அடுத்த நாளே அந்தக் காசை செலவழித்துவிடுவேன்… இப்படி சேர்த்து வைப்பதும் செலவழிப்பதுமாக.. நீண்ட நாள் எனக்கு அந்த ஆசை நிறைவேறவே இல்லை.. பின்பு கால ஓட்டங்களில் வாழ்க்கையில் கடந்த வந்த கரடுமுரடான பாதையினால், அப்படி ஒரு ஆசை இருந்ததே எனக்கு அடியோடு மறந்துவிட்டது… பின்பு பெங்களூருவில் பணியில் இருந்த சமயத்தில் ஒரு நாள் ஃப்ரூட்டியின் விளம்பரத்தைக் கவனிக்க நேர்ந்த போது, என் பால்யகால ஆசை நினைவுக்கு வந்தது… அன்று இரவு நான் ஃப்ரூட்டியை சுவைக்கும் போது எனக்கு ஏதோ விவரிக்க இயலாத ஒரு பரவசம் கிடைத்தது உண்மை.. இதைப் போன்ற ஒரு சிறுவனின் நிறைவேறாத கனவும் இந்தத் திரைப்படத்தில் இருக்கிறது… மேலும் எனக்கும் என் சைக்கிளுக்குமான பந்தத்தின் நாஸ்டால்ஜியாவையும் இத்திரைப்படம் தீண்டிவிட்டது… உங்களுக்கும் உங்களது இரு சக்கர வாகனத்தின் உடனோ அல்லது நான்கு சக்கர வாகனத்துடனோ பந்தம் இருக்குமானால் உங்களுக்கும் இப்படம் பிடிக்கும்.. காதலன் காதலிக்கு இடையிலான காதலையே பார்த்த நமக்கு, காருக்கும் கனவானுக்குமான இந்த காதல் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

இது தவிர்த்து இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது… உதாரணமாக காரின் முன் சீட்டில் அமர காசு சேகரிக்கும் சிறுவன், வரும் போதெல்லாம் தன் வீட்டில் இருந்து ஏதேனும் பொருளை புக்ககம் கொண்டு செல்லும் மகள், தான் ஓட்டுகின்ற வாகனத்தை எதிராளி ஓட்டும் வாகனத்தை விட வேகமாக முந்திக் கொண்டு செல்வதை சாகசமாக கருதும் டிரைவர், அவன் பேசும் போதெல்லாம் ஏதாவது அபசகுணமாக நடந்துவிட.. அதனாலயே பீடை என்னும் பெயரை சுமந்து கொண்டு ஊரில் வளைய வரும் அந்த வேலைக்கார இளைஞன், எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாரின் மாப்பிள்ளை, காரை ரிப்பேர் செய்ய வரும் மெக்கானிக் என அனைவரின் கதாபாத்திரமும் ஒரு சிறுகதையைப் போல் காட்சியளிப்பதும் சிறப்பு..

ஜஸ்டின் பிரபாகரன் வரவு நம்பிக்கை அளிக்கிறது.. இசையைவிட பிண்ணனி இசை பிரமிக்க வைத்தது… அதிலும் மேற்சொன்னபடி குறிப்பிட்ட சில காட்சிகளில் பிண்ணனி இசை மிக பிரமாதமாக இருந்தது.. அது போலத்தான் கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும் கண்ணுக்கு உறுத்தலாக, கதையை விட்டு துறுத்திக் கொண்டு இல்லாமல் கதையொடு இயைந்ததாக மிகையில்லாமல் தெரிந்த சப்ஜெக்டிவ் வகை ஒளிப்பதிவு.. இயக்குநர் அருண்குமார்… தனது குறும்படத்தையே முழுநீளத் திரைப்படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்… வாழ்த்துக்கள்..

இப்படி பாராட்டுவதற்கு அநேக விசயங்கள் இருந்தாலும் தலைமுறைகளின் மீது வைக்கப்பட்ட அதே குற்றச்சாட்டு இந்த பண்ணையாரும் பத்மினியும் மீதும் வைக்கப்படுகிறது.. அது என்னவென்றால் படம் மிகவும் மெதுவாக செல்கிறது என்பதே.. எனக்கு இதை புரிந்துகொள்வது மிக கடினமானதாக இருக்கிறது… மிக மெதுவாக நகரும் எந்த பொருளின் மீதும், எந்த உயிரின் மீதும் இனி மக்களுக்கு நாட்டமே இருக்காதோ என்று தோன்றுகிறது.. நம் வழித்தோன்றிகள் ”எனக்கு நத்தையை பிடிக்காது… ஏனென்றால் அது உலகம் போகின்ற வேகம் புரியாமல் மிக மெதுவாக நடந்து வருகிறது..” என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்களோ என்று ஐயமாக இருக்கிறது..  சமைப்பது மிக மெதுவாக நடக்கிறது என்று குற்றம் சாட்டி, பாஸ்ட் புட்டுக்கு மாறிவிட்டோம்… அதை அமர்ந்து சாப்பிட நேரமில்லாமல் நின்று கொண்டே புசிக்கத் தொடங்கிவிட்டோம்… உண்ட உணவு மெதுவாக ஜீரணிக்கிறது என்று கையில் கோக் மற்றும் 7-அப் ஏந்திக் கொண்டோம்… இப்படி மெதுவாக நடக்கின்ற எந்த நிகழ்வையுமே ஜீரணிக்க முடியாதவர்களாக மாறி வரும் நாம் நொடி முட்களையும் குற்றம் சாட்டுவோமோ…? ”நீ மெதுவாக ஓடுகின்றாய் என்று…” வீட்டில் எப்போதாவது கடிகாரம் கூட நின்றுவிடுகிறது.. ஆனால் என் மக்கள் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.. எதை நோக்கி…? என்று தான் தெரியவில்லை… நீங்களும் எப்போதாவது கடிகாரம் போல் பேட்டரி தீர்ந்து போய் நின்றுவிட்டால் அப்போதாவது பண்ணையாரை பாருங்கள்…. மெதுவாக ஓடுவது உங்களுக்கும் பிடிக்கலாம்….!!!!Sunday, 23 February 2014

இது கதிர்வேலன் காதல்:

தலைப்பிலேயே காதல்.. போஸ்டரின் முகப்பிலேயே சந்தானம், உதயநிதி. இந்தக் கூட்டணியுடன் நயன்தாரா வேறு.. இவர்களிடம் இருந்து பெரிதாக என்ன எதிர்பார்த்துவிட முடியும்..  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் படம் பார்க்க திரையரங்கம் சென்றேன்… ஒரே ஒரு வேண்டுதலுடன்… ஓகே ஓகே, நய்யாண்டி, ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற அதிஅற்புதமான திரைப்படமாக இதுவும் அமைந்துவிடக் கூடாது என்ற வேண்டுதல் தான் அது… வேண்டுதல் பழித்தது…. இது மேற்சொன்னது போன்ற அதிஅற்புதமான படமாக அமையவில்லை… கடவுள் இருக்கிறார்…


அதற்காக உண்மையிலேயே இது அற்புதமான படம் என்றும் எண்ணி விட வேண்டாம்… இது யாரால் எடுக்கப்பட்ட படம் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.. யாருக்காக, எந்தவிதமான ஆடியன்ஸை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்பதை நீவிர் நன்றாக அறிவீர்கள்.. அவர்களை திருப்தி படுத்துவதோடு மட்டுமில்லாமல் நம்மை கொஞ்சமே கொஞ்சம் ஆரம்ப மற்றும் இறுதி காட்சிகளில் மட்டும் எரிச்சல்படுத்துவதால்…. இந்தக் காதல் எப்படி என்று கேட்பவர்களிடம் ஓகே ஓகே(படத்தை சொல்லவில்லை) என்று சொல்லமுடியாவிட்டாலும், ஓரளவுக்கு இழுத்து ஓ…க்…கே என்று சொல்லவைக்கிறது… இதற்காக முக்கியமாக பாராட்ட வேண்டியது இயக்குநர் பிரபாகரனை தான்…

சுந்தரபாண்டியன் என்னும் திரைப்படத்தைக் கொடுத்தவர்.. அதில் இருந்த காதல், நட்பு, குடும்பம், செண்டிமெண்ட் என்ற சரிவிகித கலவையை பார்த்த உதய் குழுவினர், உதயின் சினிமா க்ராப் வளர்ச்சிக்கு இது போன்ற மசாலா மாஸ்டர்களின் சேவை தேவை என்பதை உணர்ந்து கொத்தாக அள்ளி இருப்பார்கள் போலும்… ஆனாலும் இயக்குநர் புத்திசாலிதான்.. என்னதான் சரிவிகித கலவை கிண்டியிருந்தாலும், படத்தின் வெற்றிக்கு காரணம் இனிகோ பிரபாகரைக் கொண்டு நாம் ஆடிய திரைக்கதை உத்திதான் என்பதைக் கண்டு கொண்டு, இது கதிர்வேலன் காதலிலும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு திரைக்கதையில் அதிசுவாரஸ்யமும் இல்லாத அதே நேரத்தில் சோர்வோ வெறுப்போ ஏற்படுத்தாத வகையில் ஓரிரு முடிச்சுகளை போட்டிருக்கிறார்.. கதை திரைக்கதை என எதுவுமே இல்லாமல் வந்த சமீபத்திய வரவுகளுக்கு மத்தியில், இதெல்லாம் இருக்கிறது என்று சொல்ல முடிவதே இனிப்பான செய்தியாக மாறிவிடுகிறது…

மிகமிக சாதாரணமான முடிச்சி தான்.. உதாரணமாக நயன் வீட்டுக்கும் உதயின் அக்காவீட்டுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்கு காரணமான அந்த ஆரம்பப்புள்ளியை சொல்லலாம்… அது தவிர்த்து முதலிலேயே காதலுக்கு முட்டுக்கட்டை விழுவதைப் போல் மற்றொரு காதலை காட்டியதையும் சொல்லலாம்.. மேலும் ஹீரோயினின் கற்பைக் காப்பாற்ற துடிக்கும் நாயகன் என்னும் செல்லரித்துப் போன களன் இங்கு காலியாக இருந்தும், அந்த ஹீரோயிசத்தை தவிர்த்து நம் எரிச்சலை தவிர்த்ததும் கூட நல்ல முயற்சிதான்… வீட்டில் உதயநிதிக்கு காத்திருக்கும் பிரச்சனை என மிக சின்ன சின்ன முடிச்சுகளை குழப்பமே இல்லாமல் போட்டு, அதை தெளிவாக அவிழ்த்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்..


இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம்.. கொஞ்சமாவது சிரிக்க வைக்கும் சந்தானத்தின் காமெடி.. சந்தானமும் உதயநிதியும் சேர்ந்து கொண்டு டிவி கடையில் அடிக்கும் காமெடி சமீபத்திய வரவுகளில் ஒரு நல்வரவு.. அதுபோக அனுமன் வேடத்தில் இருக்கும் சுவாமிநாதன் அடிக்கும் காமெடியும்… மயில்சாமியை வைத்து மிமிக்ரி பண்ணும் இடங்களிலும் சிரிப்பை அடக்குவது கடினம்.. இது தவிர்த்து மற்றொரு மிக முக்கியமான காரணம் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்… அது இப்படத்தில் மிக கச்சிதமாக வெற்றிக்கு உதவி இருக்கிறது… உதயின் அக்காவாக வரும் சாயாசிங்க்கு வரும் பிரச்சனை, அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் நெகிழ்வு, எதிர்த்த வீட்டு ஜெயப்பிரகாஷுடன் சாயா சிங்கின் கணவனுக்கு இருக்கும் பிரச்சனை.. நயன் தாராவுக்கு ஏற்கனவே இருக்கும் லவ்.. அதில் ஏற்படும் பிரச்சனை, நரேனுக்கு சமூகத்தில் ஏற்பட்ட இழுக்கு என இது கதிர்வேலனின் காதலில் மட்டுமே தனித்து இயங்காமல் பல்வேறு தளங்களில் சேர்ந்து இயங்குவதால் நமக்கு பெரும்பாலும் அலுப்பு ஏற்படுவதில்லை.. இதை சுந்தரபாண்டியனிலும் கடை பிடித்திருப்பார் இயக்குநர்…

உதயநிதிக்கு செண்டிமெண்ட் காட்சிகளிலெல்லாம் நடிப்பு ஓகே தான்… காதல் காட்சிகளில் தான் நடிப்பு வருவேனா என்கிறது… போன படத்தைவிட இந்தப் படத்தில் ஓரளவுக்கு ஆடவும் செய்கிறார்… சந்தானத்தின் காமெடி காலை வாராமல், இப்படத்தில் கைகொடுத்திருப்பது உதயநிதி செய்த அதிர்ஷ்டமோ கொடுத்த அதிர்ஷ்டமோ…? நரேன் அதட்டியதும் பரப்பாக அந்த பாட்டில் மாத்திரைகளை விழுங்கும் காட்சி ஃபைன்… டச்.. சந்தானம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பார் போலும்… ஆல் இன் ஆலில் கரகரப்பாக சிரித்து மிரட்டியவர்.. இதில் கண்ணாடியின் ஃபிரேமைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறார்…


நயனுக்கு சொல்லிக் கொள்வது போல் காட்சிகள் ஏதும் இல்லை… ஸ்கூட்டரில் பவனி வருவதும், காதலில் தோற்று உருகுவதும் மருகுவதுமாக காலம் காலமாக செய்து வரும் அதே காட்சிகள் தான்…. கச்சிதமாக செய்திருக்கிறார்… ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சுவாமிநாதனும் மயில்சாமியும் சிரிக்க வைப்பதோடு, மனதிலும் நிற்கிறார்கள்.. இவர்கள் தவிர்த்து வழக்கம் போல் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், சாயாசிங், நரேன், ஜெயப்பிரகாஷ், வனிதா கிருஷ்ணசந்திரன், சுந்தர் ராமு, ஆடுகளம் முருகதாஸ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே உண்டு…


ஹரிஸின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்…. பிண்ணனி இசை…? வழக்கம் போல்… பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, டான் பாஸ்கோவின் எடிட்டிங் என மற்ற அனைத்தும் செய்நேர்த்தி… மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் கேட்கவும் பார்க்கவும் (ஒரு முறை மட்டும்) சற்றே ஜாலியான காதல்…

பிரம்மன்:

சசிக்குமாரின் திரைப்படங்கள் ஏனோ தேய்பிறையைப் போல தேய்ந்து கொண்டே செல்கின்றன.. பிரம்மன் திரைப்படத்தை பரவாயில்லை என்று சொல்ல எனக்கும் ஆசைதான்.. ஆனால் அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.. சசிகுமாரின் அடுத்தப் படத்தை பார்த்துவிட்டு வேண்டுமானால் பிரம்மன் பரவாயில்லை என்று சொன்னாலும் சொல்லுவேன்.. சசிக்குமாரின் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது.. அவர் மீது ஒரு குறிப்பிட்ட மரியாதை கூட உண்டு.. ஆனால் இதெல்லாம் இருந்தும் அவரது படங்கள் பெரும்பாலும் ஒருகோட்டு தத்துவத்தில் தான் இயங்குகின்றது.. கற்பு காதல் நட்பு என்னும் அந்த ஒரு கோட்டு தத்துவத்தை, தப்பிதம் இல்லாமல் ஒப்பித்து, மக்களிடம் தன்னை ஒரு நாயகனாகவும் நல்லவனாகவும் நிலை நிறுத்தவே அவரது படங்கள் போராடுகின்றன. ஆனால் அவரது முதல்படம் இது போன்ற சமரசங்கள் ஏதும் இல்லாமல் மிகமிக யதார்த்தமாக இருக்கும்.. அந்த யதார்த்தமே அவருக்கு ஒரு தனி அடையாளத்தையும் மரியாதையையும் கொடுத்தது… ஆனால் எப்போது அவர் ஒரு கலைஞனாக யதார்த்தத்தை காட்சிப்படுத்துவதை விட்டு விலகி, நடிகனாக நடிக்கத் தொடங்கினாரோ… அப்போது அந்த யதார்த்தத்தையும் அவர் மீதான மரியாதையையும் அவர் தொலைத்துவிட்டார்… அதுமுதல் அவரது படங்களும் பாதுகாக்க அவசியமே இல்லாத குப்பைகளாக மாறி வருகின்றன… அதன் சமீபத்திய வரவு தான் இந்த பிரம்மன்..


ஒரு திரைப்படம் தோற்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. கதை இல்லாதது, நல்லதை பற்றிய கதை இல்லாதது(எ.கா: ஆ.கா), மோசமான திரைக்கதை, தவறான கதாபாத்திர தேர்வு, தவறான நேரத்தில் திரைப்படத்தை வெளியிடுவது, போதிய விளம்பரம் இல்லாதது என எத்தனையோ காரணங்களை அடுக்கலாம். மேற்சொன்ன காரணங்கள் எல்லாம் எல்லா மொழிப் படங்களுக்கும் பொருந்தும் என்றாலும், தமிழ்மொழிப் படங்கள் தோற்பதற்கு மற்றொரு தனித்துவமான காரணமும் உண்டு.. அது கதாநாயக பிம்பத்தையோ அல்லது காமெடி நாயக பிம்பத்தையோ ஒட்டுமொத்தமாக நம்பி எடுக்கப்படுவது.. இந்த பிரம்மன் கடைசி வகையறா…

வெறும் சசிக்குமார் என்னும் நடிகரின் பிம்பத்தை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட படமாகத்தான் தெரிகிறது பிரம்மன்.. அது எங்கே காலை வாறிவிடுமோ என்ற பயத்தில் காமெடி நாயக பிம்பத்தின் உதவியை நாடி சந்தானத்தையும் சூரியையும் இழுத்து வந்திருக்கிறார்கள்.. இவர்களை இழுத்து வந்தும் தேரை இழுத்து நிலையம் சேர்க்கமுடியாமல், தவித்துப் போய் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறார்கள்…

கதையே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன்… மிகமிக சாதாரணமான ஒரு கதையும்… மிகமிக மோசமான ஒரு திரைக்கதையும் படத்தில் உண்டு.. சிறுவயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இரண்டு நண்பர்கள்.. பாதியிலேயே இவர்கள் பிரிய ஒருவன் இவர்கள் எந்த திரையரங்கில் திரைப்படம் பார்த்து அதன் மீதான தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்களோ அதே திரையரங்கை லீஸ்க்கு எடுத்து நடத்துபவனாக கஷ்டப்படுகிறான்.. ஒரு கட்டத்தில் திரையரங்கை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது… அதில் இருந்து அவன் அந்த திரையரங்கை எப்படி மீட்டான் என்பது மீதிக்கதை… மேலோட்டமாக கதையின் கருவை மட்டும் பார்த்தால் அதை மிகச்சிறந்த ஒரு படமாக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதற்குள்ளாகவே இருப்பது தெரியும்.. ஆனால் அதற்கான எந்த மெனக்கெடலையும் படக்குழு அர்ப்பணிக்க தயாராக இல்லாததால், மிகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம், எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய வெறும் படமாக வந்திருக்கிறது..


படத்தின் இரண்டாம் பாதியைக் கூட சகித்துக் கொள்ளமுடியும்… ஆனால் முதல் பாதி…???????? அதிலும் ஒரு காட்சி உண்டு.. ரோட்டில் ஒரு ரோஜா கிடக்கும்…. அதை கடந்து சென்ற சசிக்குமார், மீண்டும் திரும்பி வருவார்.. அந்த ரோஜாவை கையில் எடுப்பார்… வழக்கம் போல் எதிரே ஹீரோயின் ஸ்கூட்டியில் வருவார்.. இவர் ரோஜாவை அவரைப் பார்த்து ஆட்டுவார்… ஹீரோயின் பதிலுக்கு அசிங்கமில்லாமல் திட்டுவார்.. அங்கதா இப்ப ட்விஸ்ட்டு… பாதியிலேயே ரோஜாவை தவறவிட்டு பத்து மைல் தாண்டிப் போயிருந்த ஒரு கல்யாண ஜோடி, அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுக்க திரும்பி வரும்… ஹீரோவுக்கு தேங்க்ஸ் சொல்லி அதனை வாங்கிக் கொள்வார்கள்…. ஹீரோயின் தான் மகா பெரிய தவறு செய்து விட்டதாக எண்ணி அசடு வழிவார்…” எனக்கு பயத்தில் வேர்த்து வேர்த்து வழிகிறது.. சுற்றிலும் கும்மிருட்டு வேறு…. கதவு எந்தப் பக்கம் இருக்குன்னே தெரியல… இன்னைக்கி நாம சிக்கிட்டோம்டா என்று எண்ணிக் கொண்டே.. பயத்தில் இறுக கண்களை மூடிக் கொண்டேன்….


இப்படி முதல்பாதியில் கதை இம்மியளவுக்கு கூட நகராது… வழக்கம் போல நாயகன் நாயகியை துரத்திக் கொண்டு இருக்க…. வீட்டில் நாயகனை துரத்திக் கொண்டு இருப்பார்கள்.. இடையிடையே சந்தானம் வந்து இன்றைய செய்தி போல.. இப்போதைய காமெடியை டைமிங்க் ரைமிங்காக அவிழ்த்து விட்டுப் போவார்… ஐந்து நிமிடத்தில் அதுவும் மறந்து போகும்… “என்னடா நடக்குது இங்க…” என்கின்ற மனோநிலையில் நான் அமர்ந்து இருக்க… சந்தானத்தின் வகையறா ரசிகர் ஒருவர் அவிழ்த்துவிட்டார் ஒரு அற்புதமான காமெடியை.. “பாஸு இதுதான் இருட்டு அறையில முரட்டு குத்தா பாஸு…. முடியல…” என்று சொல்லி சிரிக்க…. இந்த ஜோக்குக்கு மட்டும் திரையரங்கமே குலுங்கியது…


திரைப்படமே இந்த நிலையில் இருக்கும் போது, அதன் சங்கீத ராக ஸ்ருதிகளில் எப்படி மனம் லயிக்கும்…. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதன் மீதும் மனம் ஒன்றவே இல்லை…. ஹீரோயின் மீதும் அப்படியே.. சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ்…. இப்படி ஏகப்பட்ட நடிகப் பட்டாளம் இருக்கிறது… என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது… இருக்கிறார்கள் அவ்வளவே…. பிரம்மனை நான் எப்போதாவது திட்டுவது வழக்கம்…. ஆனால் இந்த பிரம்மனை பார்க்க நேரிட்ட அந்த இரண்டரை மணி நேரத்தில் நான் இடைவெளியே இல்லாமல் பிரம்மனை திட்டிக் கொண்டே இருந்தேன்…. (“கடுப்பேத்றார் மை லார்ட்”) பார்த்தால் நீங்களும் கொஞ்சம் திட்டுங்கள்….

Monday, 3 February 2014

கிம் கி டுக் வரிசை – 2


                                                                                                                                                     Kim-Ki-duk 

The Bow:

ஒரு படைப்பென்பது எந்தவொரு தனிமனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் தன்னையோ தன் வாழ்க்கையையோ ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட படைப்புகளே பெரும்பாலும் பேசப்படும்.. ஆனால் கிம் கி டுக்கின் படங்களில் வரும் கதைமாந்தர்கள் பெரும்பாலும் எந்தவகையான ஒப்பீட்டு அளவிலும் நாம் வாழும் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே இருக்க மாட்டார்கள்.. இருப்பினும் அவரது படைப்புகள்  நம்மை அளவுகடந்து உருக்குவதும், உரு மாற்றம் செய்வதும் எப்படி என்கின்ற சூட்சமத்தை நாம் The Bow திரைப்படத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்..


நமக்கு மிகவும் பழக்கமான ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் நமக்கு ஒருவித சோர்வை கொடுக்கும்.. அதுபோல நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு விசயத்தையோ அல்லது சம்பவத்தையோ நாம் நோக்கிய அதே பார்வை நோக்கோடு அணுகும் திரைப்படங்கள் கவனம் பெற்றாலும் அதிக அளவில் ஈர்க்காது.. ஆனால் அதே பரிச்சயமில்லாத விசயத்தையோ, சம்பவத்தையோ ஒரு திரைப்படம் வேறொரு பார்வையில் ஆழமாக நம் முன் விரித்து வைத்தால், அவை நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் வெகுநாட்கள் ஆகியும் அடங்காது.. பெரும்பாலும் இதைத்தான் பெரும்பாலான கிம் கியின் படங்கள் செய்கின்றன..

கதை மாந்தர்கள் நம்மில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு தெரிந்தாலும், அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் எல்லாம், நாம் ஓரிரு நிமிடங்களில் தீர்ப்பு கூறி நம் வாழ்க்கையில் நாம் எளிதாக கடந்து சென்ற சம்பவங்களாக இருக்கும். நம்மால் ஜீரணிக்க முடியாத, நாம் அருவறுத்து ஒதுக்குகின்ற அது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி இவர் எடுக்கும் திரைப்படங்கள், நமக்குள் புதுவிதமான சிக்கலான சிந்தனை கோணங்களைக் கொடுப்பதோடு மட்டுமன்றி, தீர்ப்புக் கூறும் மனநிலையில் நாம் இன்னும் அடைய வேண்டிய பக்குவங்கள் அதிகம் என்பதையும் அவை சுட்டிக் காட்டும்.. இந்த வரிகளையே அடிப்படையாகக் கொண்டு, நானோ கிம்கியின் படங்களோ குற்றத்தையும், குற்றவாளிகளின் செயல்களையும் ஆதரிக்கிறோம் என்பது போல் எண்ணிக் கொள்ள வேண்டாம்.. குற்றவாளிகளின் செயல்களில் இருக்கும் ஒருவிதமான பின்னோக்கு மனவியலையும் உணரத் தலைப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே  இவரது திரைப்படங்களின் நோக்கம்.. ஒரு புனைவுக் கதையோடு The bow வின் கதைக்குள் சென்றுவிடுவோம்..

”ஒரு 20 வயது நிரம்பிய இளைஞன் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தை அணுகி, ஒரு 60 வயது நிரம்பிய கிழவன் ஒருவன் 16 வயது நிரம்பிய பெண்ணை 10 வருடமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறான்.. அந்தப் பெண்ணை அவன் பெரும்பாலும் கடத்தியிருக்கக் கூடும்,,, மேலும் அவன் அவளை திருமணம் செய்யவும் முயற்சிக்கிறான்.. அவனிடம் இருந்து அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கிறான்…” புனைவுக் கதை முடிந்தது.. இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது.. அந்த கேடு கெட்ட அயோக்கியனை அடித்து உதைத்து நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆவேசம் பிறக்கிறதா..? நல்லது… The Bow க்குள் செல்வோம்..


The Bowவின் கதையும் கிட்டதட்ட மேற்சொன்ன கதைதான்… ஒரு 60 வயதான பெரியவர் 16 வயதை அடைந்த ஒர் பெண்ணை பத்து வருடமாக தன்னுடைய படகில் வைத்திருக்கிறார்.. அந்தப் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது அவளை இந்தப் படகுக்கு கொண்டு வந்து வளர்க்கத் தொடங்குகிறார்.. ஆனால் அவளை அவரது பெற்றோர் தேடிக் கொண்டிருக்கும் செய்தியும், அவளை கிழவர் கடத்தி வந்திருக்கலாம் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் கிழவர் முடிவு செய்கிறார்.. அதுவரை அவருடன் சந்தோசமாக வசித்து வந்த இந்த சிறுபெண்ணின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது.. அவளும் அந்த வயோதிகரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள்… முடிவில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்..

மேற்சொன்ன கதையிலும் நமது மேற்சொன்ன தீர்ப்பு என்னவாக இருக்கும்.. அந்தப் பெண்ணை கிழவரிடம் இருந்து பிரித்து அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்பது தானே… இந்தத் தீர்ப்பை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும்.. ஆனால் படம் பார்க்கும் போது அந்தத் தீர்ப்பை நாம் சற்றே கடினமான மனநிலையில் இருந்துதான் எடுக்க வேண்டியதாக இருக்கும் அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி..

வெகு சுருக்கமாக மேற்சொன்னதுதான் கதை வடிவம் என்று சொல்லி விட்டாலும்… வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது இத்திரைப்படம் வேறுவிதமாக காட்சி கொடுக்கும்… மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது மற்றொரு விதமாக காட்சியளிக்கும்.. இதுதான் கிம் கியின் படங்களில் இருக்கும் நுண்ணிய உணர்வு.. உதாரணத்துக்கு அந்த 60 வயது கிழவரின் கதாபாத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு 20 வயது இளைஞனை பொருத்திப் பாருங்கள்.. அவர்களுக்கு இடையே ஒரு அற்புதமான அன்பு இருக்கிறது.. ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண் அந்த இளைஞனை பிரிந்து செல்ல முடிவெடுக்கிறாள் என்கின்றபட்சத்தில் நாம் எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கும்…? எப்படியாவது அந்த இளம்பெண் அந்த 20வயது இளைஞனின் காதலை புரிந்து கொண்டு அந்த இளைஞனுடன் இணைய வேண்டும் என்றல்லவா நம் மனம் அலைபாயும்… ஆக இங்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட அன்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.. என்ன மாறி இருக்கிறது..? அன்பு அப்படியே தான் இருக்கிறது… மாறி இருப்பது வயதுதான்… 60 வயது கிழவனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு, 20 வயது இளைஞனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு… முதலாவதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நம் மனம்… இரண்டாவதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.. ஆக அன்பு, காதல் எதுவாக இருந்தாலும் அதையும் சரி தவறென நிர்ணயிப்பது வயதை பொருத்துத்தான் என்று நம்மை அறியாமலே நமக்குள் இட்டுக் கொண்ட ஒரு வரையறை நம்மை கேள்வி கேட்கும் இடமாக இத்திரைப்படம் மாறி நிற்கிறது…


ஒரு கிழவனின் காமப்பசிக்கு ஒரு சிறுமியை பலியாக்குவதா என்ற கேள்வி எழும்.. ஆனால் அதே நேரத்தில் அந்த சிறுமியை காமத்தின் பொருளாக பாவிப்பது அந்த கிழவர் அல்ல.. வெளிப்புறத்தில் இருந்து மீன்பிடிக்க வந்து, அங்கு அந்த சிறுமிக்காக கழிவிரக்கம் கொண்டு, ஒரு கட்டத்தில் அவளையே அடைய முற்பட்டு தோற்க்கும் வெளிப்புற மாந்தர்கள்தான், அவளை அப்படிப் பார்ப்பது என்பதை தெளிவுபடுத்தும் காட்சிகளும் உண்டு.. அவர்கள் இருவருக்கு இடையே குறிப்பாக அந்த கிழவருக்கு அந்தப் பெண்ணின் மீது உடல் சார்ந்த இச்சைகள் இல்லை என்பதை… அவர் அந்த சிறுபெண்ணை குளிக்க வைக்கும் காட்சியிலும், இரவில் அவரது கை அவளது படுக்கையை நோக்கிச் செல்லும் காட்சியிலும் மிக அற்புதமாக விளக்கியிருப்பார்… அப்படி இருக்க ஏன் அப்பெண்ணை திருமணம் செய்ய முயல்கிறார் என்பதற்கான தெளிவான பதில் சொல்லப்படுவதே இல்லை.. ஆனால் அதற்கு நாம் அந்த சிறுபெண் மீது இருக்கும் அளவு கடந்த பாசம், தன் வாழ்க்கையை தனியாக கடத்த வேண்டிய தனிமை என்னும் துயரத்தை எதிர்கொள்ள சக்தி இல்லாதது என பரிசுத்தமான எத்தனையோ காரணங்களை அடுக்க முடியும்… இதில் எதை வேண்டுமானாலும் அச்சிறுபெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான காரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்..

அதே போல் கிழவரின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் இருந்தாளா..? என்பதற்கான பதிலே படத்தில் இல்லை.. ஆனால் தங்களுக்கென தனியான குடும்பம் இருந்தும், மனைவி இருந்தும், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க கடலுக்குள் வரும் அந்த மனிதர்களுக்கு அங்கும் ஒரு பெண் தேவைப்படும் போது, பெண் வாடையே இல்லாமல் இருந்த ஒரு கிழவர் தன்னோடு ஒரு பெண் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இருக்கும் தர்க்க நியாயமும் நம்மை கேள்வி கேட்கக் கூடும்..

இதுவொரு கோணம்.. இன்னொரு கோணத்தில் இதை பழமைவாதத்துக்கும் நவீனத்துக்குமான போராட்டமாக கொள்ள முடியும்.. ஆரம்பக்காட்சியில் கடலின் அலையில் அலைகழிக்கப்படும் ஒரு பெரிய படகும் ஒரு சிறிய படகும் காட்சிக்கு கிடைக்கும்.. அதை அந்த கிழவருக்கும், அச்சிறு பெண்ணுக்குமான மெட்டஃபராக கொள்ளலாம்… அந்தக் கடலை ஒர் உலகமாகவும், அந்த படகை ஆபத்தில்லாத பழமைவாத கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டையாகவும் கொண்டாள் நமக்கு வேறொரு கதை கிடைக்கும்… பழமைவாதத்தில் மூழ்கிய அந்தப் பெரியவர், அப்பெண்ணை புறவுலகின் மீது கொண்ட பயத்தால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழப் பழக்குவதும், வேறெங்கும் செல்ல அனுமதிக்காததும், அவளை பாதுகாப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு செயல்படுவதும், அவள் நவீனயுக இசைக் கருவியை ரசிப்பதை கண்டு கொதிப்பதுமாக பெண்ணை அடிமைப்படுத்தும் விதமான செயல்பாடுகளை அவரது செயல்களில் காண முடியும்..


அதற்கு விடையாக எல்லா நேரமும் பெண்ணை ஆணே பாதுகாக்க முடியாது என்பதும், அவளுக்கே அவளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைவிட தேவைப்பட்டால் அவள் ஆணையும் காப்பாற்றுவாள் என்பதும், தொடுதலின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவள் அறிந்திருக்கிறாள் என்பதும், தன் விருப்பம் இல்லாமல் தனக்கு பிடித்தவனைக் கூட அவள் அவளது உடலை தொட அனுமதிப்பது இல்லை என்பதும், திருமணம் மற்றும் பழமைவாதத்தின் கட்டுப்பாடுகள் ஆணையும் பெண்ணையும் கட்டி வைத்திருக்கின்றன என்பதை சொல்லுவதற்காக சேவல், மற்றும் கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதும், நவீனயுகத்தின் குறியீடாக வரும் அந்த இளைஞன், கட்டி வைக்கப்பட்டு இருக்கும் சேவலின் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும், இறுதியில் காமத்தின் அனுபவத்தையும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து, அவளை கட்டுப்பாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளியே செல்ல அனுமதிப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழமைவாத கடவுளின் குறியீடுகள் கொண்ட அந்தப் பெரிய படகு மூழ்குவதும், சிறிய படகு மட்டும் தனியாக ஜலத்தில் பயணித்துச் செல்வதையும் நவீனயுகம் பழமைவாதத்தை மூழ்கடித்து தனித்து இயங்கிக் கொண்டிருப்பதற்கான குறீயீடாகக் கொள்ளலாம்..


மேலும் ஒரு பெண் ஒரு ஆணை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால், அவள் எந்த எல்லை வரைக்கும் செல்லத் துணிந்துவிடுவாள் என்பதற்கும் உதாரணமான பல காட்சிகள் படத்தில் உண்டு..

இன்னொரு கோணம் என்பது BOW வின் கோணம்.. அந்த வில் அம்பு என்பது ஆபத்தாக வரும் எதிரியை துளைக்கவும், இசை மீட்டி நம் மனதை துளைக்கவும், படகில் வரையப்பட்டு இருக்கும் புத்தர் படத்தை துளைத்து, தங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வதுமான முற்றிலும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கின்றது.. ஆனால் அதன் செய்கைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அதை இயக்குபவரின் மனநிலை என்பதும் உண்மை.. அதுபோலத்தான் ஒரு மனிதனின் மனமும் அவனது செயல்களும்.. முற்றிலும் நேரெதிரான புரிந்து கொள்வதற்கு கடினமான எத்தனையோ விதமான செயல்களை அவன் செய்தாலும் அதற்கு அவன் காரணம் இல்லை… அவனை இயக்குபவரின் மனநிலை என்பதான சித்தாந்தக் கொள்கையோடு இத்திரைப்படத்தை அணுக முடியும்..


அதுபோல அன்பு என்பது எதிர்பார்ப்புக்கு உரியதாக ஆகும் போது, அதில் ஏற்படும் நெருக்கமான சிக்கல்களையும், அதனால் மனிதர்களின் மனதில் ஏற்படும் கோபாவேசத்தையும் நம்மால் சில இடங்களில் உணர முடியும்.. தனக்கு பிடிக்காத மனிதர்களிடம் இருந்து தன்னை கிழவர் பாதுகாக்கும் போது, கிரீடம் போல இருக்கும் அந்தக் கிழவரின் அன்பு, தனக்கு பிடித்த ஒரு இளைஞனிடம் பழக முற்படும் போதும், பாதுகாக்கும் நோக்கோடு பெரியவர் குறுக்கிடுவதும், இப்போது அந்த அன்பு முள்கீரிடமாக மாறி அவளை வெறுப்பேற்றும் காட்சியும் மிக முக்கியமான காட்சிகள்.. கிழவரை வெறுப்பேற்றிவிட்டு தனியாக வந்து அந்தப் பெண் சிரிப்பதும், தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள போராடும் கிழவர், திருமண தேதியை திருத்த முற்படும் திருட்டுத்தனமான குணாதிசங்கள் நமக்குள் முளைவிடும் தருணங்களை நம் கண் முன் இத்திரைப்படம் நிறுத்துகிறது… மேலும் அன்புக்கான அளவீடாக வைப்பது, பிறர் அவர்களுக்கு பிடித்தது போல் நடப்பதையா..? அல்லது நமக்கு பிடித்தது போல் நடப்பதையா…? என்னும் தவிர்க்க முடியாத கேள்வியும் நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியாது..

மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒரு கோணம் இத்திரைப்படத்தில் உண்மையான கோணமாக இருக்கலாம்… அல்லது நான்காவதான முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணமும் இயக்குநரின் பார்வையில் இருக்கலாம்.. ஆனாலும் இப்படி வித்தியாசமான ஒரு மூன்று கோணங்களில் நம்மை யோசிக்க வைப்பதன் மூலமாக ஒரு நிகழ்வின் வெவ்வேறு விதமான வித்தியாசமான புரிதல்களை புரிந்துகொள்ள நம்மைத் தூண்டுவதையே இத்திரைப்படத்தின் வெற்றியாகக் கொள்ளலாம்..

கிம் கி டுக்கின் பிற படங்களைப் போல் இத்திரைப்படத்திலும் வசனங்கள் என்பது மிகமிக குறைவு.. அதிலும் குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களான அந்த கிழவரும், அச்சிறு பெண்ணும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.. ஆனால் அவர்களது உணர்வுகள் நமக்கு அப்பட்டமாக உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு… படம் முழுக்க கடலில் உள்ள ஒரு படகில் நிகழ்வது என்பதால் இதன் ஒளிப்பதிவும் ஒரு சிறப்பம்சம் விளங்கியதாக இருக்கிறது… அது போல் இசை… அந்தக் கிழவர் அந்த வில்லை ஒரு சீனப் பாரம்பரிய இசை கருவியைப் போல் மாற்றி ஒரு வித்தியாசமான இசையை பல இடங்களில் இசைத்துக் கொண்டே இருப்பார்… அந்த இசை நம் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் ஒரு அற்புதமான இசை…

தனது வாழ்க்கையை கிம் கி டுக் ஒரு ஓவியராக தொடங்கியவர் என்பதால் ஓவியம் போன்ற அற்புதமான காட்சிகள் இயல்பாகவே படத்தில் அமைந்திருக்கும்… அது போலத்தான் இசையும் மிக அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்… க்ளைமாக்ஸில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியாவிட்டாலும் கூட.. அது நம் முடிவுக்கே விடப்படுவதால்.. அது நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் அலாதியானது… கிழவராக நடித்திருக்கும் Jeon Seong-hwang-ம் Han Yeo Reum-ம் சிறு பெண்ணாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் எந்தவொரு வசனத்தின் துணையும் இன்றி மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்… கிம் கி டுக்கின் வரிசையில் இதுவும் தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம்…

அடுத்தப் பதிவு

கிம் கி டுக்கின் THE ISLE (2000)

ரம்மி:

1987ல் புதுக்கோட்டை வட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களம்.. அதற்காக 87ல் எடுக்கப்பட்ட படங்களின் கதையவே 2014ல் ஓட்டிக் காட்டினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது ரம்மியும்.. ஒரு காதலுக்கு பதிலாக இரண்டு காதல்.. இரண்டு காதலுக்கு வில்லத்தனம் செய்ய இரண்டு வில்லன்கள்.. இரண்டு வில்லன்களுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது உபரித் தகவல்.. இரண்டு காதல்களும் என்ன ஆனது என்று சொல்வது இந்த ரம்மியின் சுவாரஸ்யமே இல்லாத ஆட்டம்..


இப்படி ஒரு படத்தை இந்த காலகட்டத்தில் விஜய் சேதுபதியிடம் இருந்து நாம் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படித்தான் மனிதர் இது போன்ற படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை.. மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றாலும், இவரது கதாபாத்திரத்துக்கான தனித்துவமான வடிவ அடையாளமோ, குணாதிசயமோ, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான சூழலோ கொஞ்சம் கூட இல்லாத திரைக்கதை… விஜய் சேதுபதியின் கால்சீட் கிடைத்ததுமே ஜெயித்து விட்டோம் என்று இயக்குநர் கனவில் மூழ்கிவிட்டார் போலும்.. இயக்குநர் தனக்கான இடத்தை தேடிப் பிடிக்கவோ..? நடித்த நடிகர்கள் தங்களது இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவோ…? கதையிலோ அல்லது திரைக்கதையிலோ எந்தவிதமான முயற்சியும் இயக்குநர் மேற்கொள்ளவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது..


காலாவதியான காட்சிகளாலும் கற்பனை வறட்சியாலும் நிறைந்திருக்கும் காட்சி அடுக்குகள்.. மிகப்பெரிய ஏமாற்றத்தையும் எரிச்சலையுமே கொடுக்கின்றன.. தமிழ் சினிமா கரைத்துக் குடித்த காதல் கரைசலின் துளிகளைக் காட்சிப்படுத்துவதில் கூட இந்தப் படக்குழுவினரால் கரை சேர முடியவில்லை.. அதிலும் காயத்ரி மற்றும் இனிகோ பிரபாகரின் காதலில் கொஞ்சமேனும் ரசனையும், ஒரு சிறியளவிளான சிந்தனை முயற்சியும் இருந்தது.. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு காதல் வரும் அந்த கிணற்றடி காட்சிகள் எல்லாம் நம்மை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு வீரியம் நிறைந்தவை..


மிகமிக சாதாரணமான காதலும், அதற்கு வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பல் என வற்றிய குளத்துக்குள்ளாகவே இவர்கள் ஓடம் விட முயற்சித்திருக்கிறார்கள்.. கொஞ்சமேனும் வித்தியாசமான நடிப்புக்காக பேர் வாங்கி வரும் விஜய் சேதுபதியும், இனிகோவும் இப்படிப்பட்ட கதைக்களத்தில் எப்படி பேர் வாங்குவது போல் நடிப்பது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள்.. காதலுக்காகவும், காதலிக்காகவும் உருகுவது, நண்பனுக்காகவும் நட்புக்காகவும் மருகுவது என காப்புரிமை வாங்கிய காட்சிகளின் அணிவகுப்புகளுக்கு இடையில் கதைமாந்தர்கள் கலங்கிப் போய் மங்கலாக காட்சி தருகிறார்கள்..

காயத்ரிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் காதல் படலங்களில் கண் கசக்கும் வேலை தான் என்றாலும் ஆங்காங்கே கொஞ்சமாக ஈர்க்கிறார்கள்.. புரோட்டா சூரி படத்தில் இல்லாமல் இருந்திருந்தால், படத்தில் மீதான எரிச்சல் கொஞ்சம் குறைந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.. அதிலும் இவரும் இனிகோவும் நண்பன் சேதுபதிக்காக எடுக்கும் சூளுரைகள் எல்லாம் சூர்ப்பனகை காலத்து பழசு… என்ன நினைத்து படம் எடுத்தார்கள் என்றே தெரியவில்லை..


சுஜாதா, ஜோ மல்லூரி என நடிக்கத் தெரிந்த நடிகர்கள் எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்… இமானின் இசையில் தேவையே இல்லாமல் பல இடங்களில் பாடல்கள் வருவதால் எதிலுமே மனம் லயிக்கவில்லை.. ஆனாலும் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தின் மலையின் அழகுகளை எல்லாம் பாடல்களில் ஆங்காங்கே காட்சிப்படுத்தி இருப்பது மட்டுமே ஒரு சின்ன ஆறுதல்… சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாத வகை..

இயக்குநர் பாலகிருஷ்ணனுக்கு இது முதல் படம் போலும்.. இணை தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்… கதையிலும் திரைக்கதையிலும் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.. இருப்பினும் சமூகத்துக்கு தீமை விளைவிக்கும் எந்தவிதமான காட்சிகளும் இல்லாதது மட்டுமே மனநிறைவு தரும் அம்சம்.. அதுதவிர்த்து சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் ஸார்…


மொத்தத்தில் புதுமை இல்லாத கதை.. புத்திசாலித்தனம் இல்லாத திரைக்கதை… சோபிக்க முடியாமல் திணறும் நடிகர்கள் என எந்த தளத்திலுமே திரைப்படம் நம்மை ஈர்ப்பது இல்லை.. நான் எத்தனையோ ரம்மி ஆடியிருக்கிறேன்… ஆனால் எந்த ரம்மியும் இந்த ரம்மி போல் குறைந்தபட்ச சுவாரஸ்யம் கூட இல்லாமல் இருந்தது இல்லை… இயக்குநருக்கு முதல் படம் என்பதால் ஆரம்பக்கட்ட முயற்சியாக சொல்லலாம்… ஆனால் படம் பார்க்க முயலும் நமக்கு இது ஆரோக்கியமான முயற்சியாக இருக்காது என்பதே என் கருத்து…