Friday, 27 December 2013

மதயானைக் கூட்டம்:

மதுரை மாவட்டத்தின் கலாச்சார பிண்ணனியில் எத்தனையோ படங்கள் வந்துகொண்டிருக்கின்றன… தேனி நகரத்தின் கலாச்சார பிண்ணனியோடு வந்திருக்கும் சமீபத்திய வரவுதான் இந்த மதயானைக் கூட்டம்.. இதுபோன்ற துல்லியமானதொரு மதுரை மாவட்டத்துப் பேச்சு வழக்கை எந்தப் படமுமே இதுவரை பதிவு செய்ததில்லை.. அதுபோல அவர்களது வாழ்க்கை முறைமைகளில் கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளில் இருக்கும் செய்முறைகளையும், பழக்க வழக்கங்களையும் அவர்களது அசாதாரணமான வாழ்வியலோடு மிக அற்புதமாக ஆவணப்படுத்துகிறது இந்த மதயானைக் கூட்டம்..


ஆனாலும் கூட..…… இந்தப் படம் எனக்குள் ஒரு மிக மெல்லிய சலனத்தைக் கூட ஏற்படுத்தாமல், மனதில் கொஞ்சம் கூட நிலை கொள்ளாமல் அகன்று போனது எனக்கே கூட ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. நேற்றைக்கு முன்தினமே இப்படத்தைப் பார்த்துவிட்டேன்.. இருப்பினும் ஏன் இத்திரைப்படம் நம்மை திருப்திபடுத்தவில்லை என்ற கேள்வியிலேயே என் மனம் நிலைகொண்டு இருந்ததால், பதிவு எழுதுவதில் கூட மனம் லயிக்கவில்லை.. அதற்கான காரணத்தையே நான் அலசிக் கொண்டிருந்த போது, காரணமாக எனக்குப்பட்டது இதுதான்.. “பெரும்பாலான இயக்குநர்கள் மிகச்சிறப்பான கதைகளத்தோடு வந்தாலும் கூட.. அந்தக் கதைக்களத்துக்கான எதார்த்த சூழலியலை கேமராவின் கோணங்களுக்குள் கொண்டு வருவதிலும், அந்த மக்களின் நடை உடை பாவனைகளுடன் கூடிய பழக்க வழக்கங்களை சிறப்பாக பதிவு செய்வதிலும், கலாச்சார அடையாளங்களை கலையோடு சேர்ப்பதிலும் தான் பெரும்பாலும் தோற்றிருப்பார்கள்.. ஆனால் அதிலெல்லாம் கர்ம சிரத்தையோடு பணியாற்றி வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தோற்றிருக்கும் இடம் கதை மற்றும் அதைச் சொல்லும் விதமான திரைக்கதை… இந்த இரண்டிலும்தான்…

என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையோ…? நாவலோ..? அல்லது திரைப்படமோ..? இப்படி எந்த கலைவடிவமாக இருந்தாலும் ஒரு பார்வையாளனை வெறும் பார்வையாளனாக மட்டும் வெளியே நிறுத்தாமல், கதையில் பங்கேற்பவனாக ஏதோ ஒரு ரூபத்தில் அவனை உள்ளிழுத்துக் கொள்ளும் போதுதான், அதன் பரிணாமத்தில் அது முழுமையடைவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பார்வையாளனையும் மிக ஆக்ரோஷமாக ஆக்ரமித்துக் கொண்டு.. அந்தக் குறிப்பிட்ட கலைக்காக கட்டமைக்கப்பட்ட கால வேளை தாண்டியும்.. சில மணித்துளிகளோ அல்லது சில நாழிகைகளோ அல்லது சில நாட்களோ.. அந்தக் கதையின் மையத்தோடு அவனை உரையாடச் செய்து, அவனுக்கு ஒரு தெளிவையும் ஏற்படுத்தி அவனை முழு மனிதனாக்கி, அவனை விட்டு அகலும் போது தான், அந்தக் கலைவடிவம் முழுவீச்சில் வெற்றியடைகிறது என்று சொல்லுவேன்.. ஆனால் இந்த மதயானைக் கூட்டம் பார்வையாளனை ஒரு பங்கேற்பாளனாக கதையில் நுழைவதற்கு அனுமதியை மறுப்பதோடு, கடைசிவரை அவனை ஒரு வெற்றுப் பார்வையாளனாக வெளியிலேயே நிறுத்திவிடுகிறது… அதுதவிர்த்து, படத்தின் மையம் என்பது எது என்பதிலும் பார்வையாளனுக்கு கடைசிவரை ஒரு ஊசலாடும் மனநிலை இருப்பதும் படத்தின் ஆகப்பெரிய குறை என்று சொல்லுவேன்…


படத்தின் மையம் என்று பெரும்பாலானவர்களால் சொல்லப்படுவது, ”கள்ளர்களின் கெளரவம்” தான்.. ஆனால் இந்த கெளரவம் என்பது நம் கண்களுக்கு காட்சி தருவதோ..? முப்பது நிமிட காட்சிகளின் நகர்வுக்கு பிறகு ஒருவரின் ஆண்குறி அறுக்கப்படும் போதுதான்… மீண்டும் சில நிமிடக் காட்சிகளில் மையம் மாறுகிறது… இரண்டு பெண்களை மனைவியாக்கியதால் கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஒரு முக்கியப் பிரமுகருக்கு ஏற்படும் பிரச்சனை என்று அது நிலை கொள்கிறது.. அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மையம் மாறுகிறது… அது அந்த முக்கிய பிரமுகரின் மரணத்தால் அந்தக் குடும்பத்துக் ஏற்பட்ட பாதிப்பு என மையம் கொள்கிறது… மீண்டும் சில நிமிடங்கள் கழித்து அந்தப் பிரமுகரின் மரணச் சடங்கின் இறுதியில் நிகழும் ஒரு மரணத்தால் கொலைப் பழி இரண்டாம் தாரத்து மகன் கதிர் மீது விழ… அவனை ஒரு கும்பல் கொலை வெறியோடு துரத்தத் தொடங்குவதில் கதை மையம் கொள்கிறது.. அதற்கடுத்த ஒரு இருபது நிமிடங்களில் அண்ணன் தங்கை பாசத்திற்கு இடையே மையம் கொண்டு அல்லல்படுகிறது கதை.. இதில் எதை குறிப்பாக மையம் என்று சொல்வது… மையம் கள்ளர்களின் கெளரவம்தான்.. அந்த கெளரவத்தால் தானே இரண்டு பெண்களை கட்டிக் கொள்ளும் போது பிரச்சனை தலைதூக்குகிறது என்று நீங்கள் சொல்ல முயன்றால்… இரண்டு பொண்டாட்டியால் வருகின்ற கெளரவ பிரச்சனை என்பது நம் சமூகத்தில் எல்லா சாதிகளுமே குத்தகைக்கு எடுத்த பிரச்சனை என்று நான் சொல்லத் துணிவேன்.. இப்படி மையம் இன்றி அலைவதுதான் மதயானைக் கூட்டத்தின் மிகப்பெரிய முதல்குறை… (இதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால், பருத்திவீரனில் குறத்தியை தாயாகவும் கள்ளனை தந்தையாகவும் கொண்ட ரவுடி இளைஞனை ஒரு பெண் காதலிக்கிறாள்… அவளுடைய அப்பா சாதிய வெறியில் ஊறியவர்.. இவர்களது காதல் என்னானது…? இதான் மையம்.. பின்வரும் காட்சிகள் எல்லாமே அந்த காதலையோ அல்லது அந்த சாதியவெறியையோ அல்லது நாயகனது ஊதாரித்தனத்தையோ கட்டமைப்பது போலவே அமைக்கப்பட்டு இருக்கும்..)


இரண்டாவது பிரச்சனை… மேற்சொன்ன மையக்கதையில் ஒன்றான அண்ணன் தங்கை பாசத்தை ஒரு கிழக்குச் சீமையிலே போல் சொல்லி இருக்கலாம்… சாதிய கெளரவத்தை ஒரு பருத்தி வீரன் போல் சொல்லி இருக்கலாம்… இரண்டு பொண்டாட்டிகளால் ஏற்படும் பிரச்சனையை ஒரு சின்னவீடு போல் சொல்லி இருக்கலாம்… இப்படி ஒவ்வொரு கதை மையமும் அற்புதமான கதைக்களன் தான்… ஆனால் அதில் ஒன்றைக்கூட ஆழமாகவும் சொல்லாமல் அகலமாகவும் சொல்லாமல் ஆங்காங்கே சொல்லிச் செல்வது தான் இதன் இரண்டாவது குறை…

மூன்றாவது பிரச்சனை… கதையில் ஒரு மையக் கதாபாத்திரம் என்று ஒன்று இல்லாதது… அல்லது அப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தும் அதை முன்னிலைப் படுத்தாததும் ஒரு குறை.. என்னைப் பொறுத்தவரை… திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் கதை நாயகனான கதிரை மையமாகக் கொண்டுதான் நகருகிறது.. ஆனால் அந்த கதாபாத்திரம் படத்தில் பாதிவரைக்கும் பத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வந்து செல்கிறது… பெரும்பாலான கதைகளில் பார்வையாளன் அந்த Protogonist என்று சொல்லப்படும் மைய கதாபாத்திரத்தைப் பின்பற்றியே கதையைப் பின்தொடர்வான்… இங்கு பல இடங்களில் பார்வையாளனின் பின்தொடர்தல் தடைபடுகிறது… (இங்கும் உதாரணமாக பருத்திவீரனையே எடுக்கிறேன்… அதிலும் பல கதாபாத்திரங்கள் அதற்குரிய தனித்தன்மையோடு வலம் வந்தாலும்.. கதையின் மையம் பருத்திவீரன் என்னும் மைய கதாபாத்திரம் மீதே நிலைகொண்டு இருக்கும்.. பார்வையாளனும் கதைநகர்வை அநாயசமாக பின்பற்றிக் கொண்டே வருவான்…)

நான்காவதாக… என்னைப் பொறுத்தவரை இந்தக் கதை நாயகன் கதிரின் பார்வையில் ஆடியன்ஸ்க்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் நாடோடிக் கலைஞர்களின் ஆடல் பாடல் வழியே கதை சொல்லப்பட்டதால் அதுவும் கூட பார்வையாளனுக்கு ஒரு செவிவழி தடங்கலை ஏற்படுத்தி, படத்தோடு ஒன்றச்செய்யாமல் செய்துவிட்டதோ என்றும் ஐயுறத் தோன்றுகிறது.. அப்படியில்லாமல் கதிரின் பார்வையில் கதை சொல்லப்பட்டு இருந்தால், அது குறைந்தப்பட்ச உணர்வுரீதியிலான மீட்டல்களையாவது பார்வையாளனுக்குக் கொடுத்திருக்கும் என்பது என் அனுமானம்..


ஐந்தாவதாக கதையில் ஏற்கனவே நாம் பல்வேறு திரைப்படங்களிலும், கதைகளிலும், பத்திரிக்கை செய்திகளிலும் கேள்விப்பட்ட பங்காளிச் சண்டையை ஒத்த சில சம்பவங்களைத் தவிர்த்து புதுமையான சம்பவங்களோ.. எதிர்பாராத முரண்களோ.. காட்சிகளுக்கான வீரியங்களோ இல்லாமல் சென்றதும் ஒரு முக்கியமான குறை.. அதுபோல படத்தின் ஒரு முக்கியமான பலமாகக் கருதப்படும் வசனங்கள் அதன் இயல்புநடையில் பல இடங்களில் மிக வேகமாக கடக்கின்றன… அது வெறும் வார்த்தை வசனங்களாக மட்டுமே இல்லாமல் முன்கதையை சொல்வதிலும் பங்கெடுக்கின்றது.. ஆனால் இதை இந்த வட்டார மொழி பரிச்சயம் இல்லாத பெரும்பாலான ஆடியன்ஸ் தவறவிடக்கூடும் என்பதும், ஆரம்பத்தில் கதை மிகமிக மெதுவாக நகர்வதும், இத்தகைய படங்கள் அந்த குறிப்பிட்ட சாதிய மக்களிடம் வேறுவிதமான எதிர்வினைகளை வருங்காலத்திலும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணர்வதும் கூட ஒரு குறையே.. இவை எல்லாம் சேர்த்து தான்.. திரைப்படத்தை என் மனதில் தங்கவிடாமல் அகலச் செய்துவிட்டது என்று தோன்றுகிறது…

ஆனால் இத்தனை குறைகள் இருப்பினும் படத்தின் செய்நேர்த்தியும்.. அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், வேல ராமமூர்த்தி, விஜி, பூலோகராசாவாக வரும் மூத்த தாரத்து மகன் ஆகியோரின் மிக அற்புதமான நடிப்பு இவைகளால் தான் திரைப்படம் கொஞ்சமேனும் நம்மைக் கவருகிறது… அதுபோல் சில இடங்களில் படக் காட்சிகள் கொடுக்கத் தவறிய உணர்வை படத்தின் பிண்ணனி இசை கொடுத்ததையும் குறிப்பிட விரும்புகிறேன்.. பாடல்களும் ரகுநந்தனின் இசையில் சிறப்பாகவே இருந்தது… தயாரிப்பாளராக ஜி.வி பிரகாஷ்குமாருக்கு இது நல்லதொரு முயற்சி… அவரது இந்த நல்ல முயற்சி தொடரட்டும்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ஆடுகளம் திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் அஸோசியேட்டாக பணியாற்றியவர் என்று அறிகிறேன்.. ஆடுகளத்திலும் கூட மதுரை பின்புல காட்சிகளில் அவரது பங்களிப்பு இருந்ததாகவும் கூறுகிறார்கள்.. அவருக்கு இது முதல்படம்… இயக்குநராக விக்ரம் சுகுமாரன் கதை மற்றும் திரைக்கதையில் சற்று சறுக்கி இருந்தாலும்.. மற்ற துறைகளில் தன் ஆதர்ச பலத்தை நிருபித்திருப்பதால்… இவரிடம் பிற்காலத்தில் இதைவிட சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்…

ஆக.. மொத்தத்தில் மதயானைக் கூட்டம் கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புவோருக்கான படம் அல்ல… அதுபோல் வித்தியாசமான கதைக்களமோ திரைக்கதையோ கொண்ட திரைப்படமும் அல்ல… ஆனால் கண்டிப்பாக மேக்கிங்க் என்று சொல்லப்படும் மாய்ஜால வார்த்தையின் அர்த்தத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவருக்கும்.. மதுரை வட்டாரத்து மக்களின் வாழ்க்கையை சற்று ஆழமாக ஆராய விரும்பும் ஒரு சிலருக்கும் கண்டிப்பாக தவறவிடக் கூடாத படம் என்று சொல்லலாம்…


Monday, 23 December 2013

தலைமுறைகள்:தலைமுறைகள் தாண்டி வந்து கொண்டிருக்கும் மானுடத்தின் நீண்ட பயணத்தில் நாம் இழந்ததையும், பெற்றதையும் திரும்பிப் பார்க்கும் ஒரு வயோதிகனின் பார்வைதான் இந்த தலைமுறைகள்.. நின்று நிதானித்து மூச்சை நன்றாக உள்ளிழுத்து… ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நம் வாழ்வில் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்…. அப்படி ஒரு விசயம் நடந்திருந்தால் கூட அது நம் ஞாபகத்தில் தங்கியிருக்குமா என்பதும் சந்தேகமே.. இந்த வாழ்க்கையில் நாம் எதைத்தான் ஆற அமர அனுபவித்து கடந்து வருகிறோம்.. இயந்திரகதியாக ஓடிக் கொண்டு இருக்கும் நம் வாழ்க்கையைப் போலவே தான்.. நம் ரசனையும் மாறிவிட்டது… வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒரு அவசரமும்.. ஒரு பரபரப்பும்… ஒரு சுவாரஸ்யமும்… ஒரு எதிர்பாராத முரண்களும், ஒரு வெற்றி தோல்வியும் இல்லாமல் கடப்பதென்பது அரிதாகவிட்ட இன்றைய காலச்சூழலில், நம் ரசனையும் திரைப்படத்தில் காணும் காட்சிப் படிமங்களில் அதையேத்தான் தேடுகிறது..  நாம் எல்லோருமே வாழ்க்கையை வேகமாக வாழ்ந்து கழித்துவிடும் ஒரு உத்வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம்… ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் நம் வாழ்க்கை இப்படித்தான் அவசர கோலமாக இருந்ததா..? என்கின்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்வது மிகமிக முக்கியமான ஒன்றாக இந்த இடத்தில் எனக்குப்படுகிறது…ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவையோ.. ஒரு குயிலின் கூக்கூவையோ…. சலனமற்ற நதியின் அமைதியையோ… காற்றுத் துகள்கள் நாணல்களில் மோதி உண்டாக்கும் இசையையோ… வண்டுகளின் ரீங்காரத்தையோ…. சுட்டெரிக்கும் பாறையின் மேல் தன் உடல் சுருக்கி விரித்து அசைந்து செல்லும் நத்தையையோ… ரசிப்பதற்கான மனநிலையை இழந்துவிட்ட நம்மால் ஒளிக் கவிஞர் பாலுமகேந்திராவின் இந்தத் தலைமுறைகளை ரசிக்க முடியாது… அது இந்த தலைமுறைகள் என்னும் திரைப்படத்தின் குறையல்ல… நம்முடைய குறை… நாம் இன்றுவரை கடந்து வந்திருக்கும் நம் தலைமுறைகளின் குறை….

அவசரகதியாக கடந்து கொண்டிருக்கும் நம் வாழ்க்கையைப் போலவே.. திரையிலும் நமக்கு எல்லாமே அவசர அவசரமாக கடந்து செல்ல வேண்டும்.. அப்படியின்றி அதன் இயல்பான பொறுமையோடு நத்தை போல ஊர்ந்து செல்லும் ஜீவராசிகள் எல்லாமே நம் பொறுமையை சோதிப்பதாகத்தான் நமக்குப் படுகின்றன.. அப்படி இந்த திரைப்படத்தின் வயோதிகன் கதாபாத்திரமும் உங்களது பொறுமையை சோதித்திருந்தால் அதில் வியப்பேதுமில்லை…. அதே நேரத்தில் ஏதோ ஒரு காவேரிக் கரையில் தன் வாழ்நாளைக் கழிக்கின்ற ஒரு வயோதிகனின் யதார்த்தமான வாழ்க்கை இப்படிப்பட்ட காட்சிப் படிமங்களோடு தான் கடக்கின்றது என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை….நம் பட்டறிவுக்குத் தெரியாத எந்தவொரு புதுமையான விசயங்களையும் இத்திரைப்படம் நமக்கு உணர்த்திவிடுவதில்லை தான்… ஆனால் இந்த தலைமுறைகளின் மாற்றங்களை வாய்மொழியாக அல்லாமல், இத்திரைப்படம் மிக அழகாக ஆவணப்படுத்தி இருக்கிறது.. வேதம் ஓதி மாணிக்கவாசகரின் இறைவாழ்த்தை காலையில் பாடுவதையே தன் களப்பணியாக கொண்டு இயங்கும் ஒரு வயோதிகரின் வீட்டிற்குள்  கிறிஸ்துவப் பெண் மருமகளாக நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த தலைமுறையில் உருவாகி இருப்பதையும் அதே நேரத்தில் மாணிக்கவாசகரின் பாடல்களை பாராயணம் செய்யும் வயோதிகனுக்கு, தமிழே பேசத் தெரியாத, எழுதத் தெரியாத ஒரு பேரன் வளருவதற்கான அவலச்சுவை இந்த தலைமுறையில் தலைவிரித்தாடிக் கொண்டு இருப்பதையும் இத்திரைப்படம் ஆவணப்படுத்துகிறது…

தன் பேரப் பிள்ளைகளின் பேருக்குப் பின்னாலும் தங்கள் சாதிய அடையாளத்தை ஒட்ட வைக்கத் துடித்த, நம் சமூகத்தின் மரபில் இன்றைய நிலையில் சாதிய அடையாளத்தை அசிங்கமாக எண்ணக்கூடிய அளவிற்கு ஓரளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதையும்.. கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை இருப்பதையும், அதைப் புரிந்து கொண்டு சில மருத்துவர்கள் அங்கு சென்று பணியாற்றுவதற்கான மனமாற்றங்களைப் பெற்றிருப்பதையும் பறை சாற்றுகிறது…

இவைகளை எல்லாம் நாம் பெற்ற நன்மைகளாகக் கொண்டால், ஆறு என்பதையே என்னவென்று அறியாத அளவுக்கு நம் இளம் தலைமுறைகள் வளர்ந்து வருவதையும், ஆறு, கடல், குளம் போன்றவற்றையும் அம்மா, ஆடு போல புத்தகத்தைக் காட்டி கற்பிக்கும் சூழல் வருவதற்கான அபாய அறிகுறிகளையும்.. ”தமிழினி மெல்லச் சாகும்” என்ற வரிகளுக்கு ஏற்ப.. இளம் தலைமுறை தமிழைப் புறக்கணித்து, தமிழைக் கற்காமல் வளருவதையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான இடைவெளிகள் பெருகி வருவதையும், இன்றைய சிறார்கள் பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதைக் கூட அறியாத வண்ணம் வளருகிறார்கள் என்பதையும் இரைச்சலே இசையாக மாறி வரும் இன்றைய காலச்சூழலில், பறவைகள் எழுப்பும் இனிய இசைகளைக் கூட பறவைகளைப் போல் சிறைபிடித்தால் தான், இனி எதிர்காலத்தில் அவைகளைக் கேட்டு ரசிக்க முடியுமோ…? என்னும் ஐயப்பாட்டையும் கழிப்பிடம், குளிப்பிடம் என கட்டற்றுத் திரிந்த நம் முன்னோர்களை ஒப்பிடுகையில் நம் வாழ்க்கை நான்கு சுவர்களுக்கு நடுவே சிறைப்பட்டு இருப்பதையும் இத்திரைப்படம் பகடி செய்கிறது… இவைகளை  தலைமுறை மாற்றத்தால் நாம் இழந்த தரவுகளாக கொள்ளலாம்…அமைதியான நீரோடை, சாளரங்களின் வழியே ஒளி வீசும் சூரியன், பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு காடுகளுக்கு மத்தியில் கரைந்து போகும் வயதானப் பெரியவர், தொட்டவுடன் சுருங்கும் தொட்டாச் சிணுங்கி, எனப் பார்த்துப் பார்த்து படம் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறது பாலுமகேந்திராவின் அழகுணர்ச்சியுடன் கூடிய ஒளிப்பதிவு… வயோதிகப் பெரியவராக நடித்திருக்கும் பாலுமகேந்திராவின் நடிப்பு உக்கிரமாக வெடிக்க வேண்டிய இடங்களில் உறுதியாகவும், உடைந்து உருக வேண்டிய இடங்களில் ஏனோ உருக்குலைந்தும் தெரிகிறது… தன் வலதுகையை முன்னால் ஆட்டி ஆட்டிப் பேசும் அந்த உடல்மொழியை சற்றே தவிர்த்து இருக்கலாம்… இளைஞராக வரும் சசிக்குமார் தாத்தாவைப் பற்றி எதுவும் பேசாமலே படத்தை முடித்திருக்கும் அந்த உத்தி எனக்குப் பிடித்திருந்தது..

மருமகளாக நடித்திருக்கும் ரம்யா சங்கர் மற்றும் இரண்டாம் தாரத்து மகளாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும், மகளாக வந்து பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் மற்றொரு பெண்ணின் நடிப்பும் மிக இயல்பாக இருந்தது.. சிறுவன் மாஸ்டர் ஸ்ரீகாந்த் ஏனோ என்னைப் பெரிதாய் கவரவில்லை…

இளையராஜாவின் இசை மென்மையாக இதயத்தை பல இடங்களில் வருடுகிறது… குறை என்றுப் பார்த்தால் சில இடங்களில் பிரச்சார நெடி கொஞ்சம் அதிகமாக இருப்பது.. திரைப்படத்தை ஒரு புனைவாக காட்டிவிடுகிறது… மேலும் பல இடங்களில் “வா… உக்காரு…” இது போன்ற வசனங்கள் காட்சிகளின் வழியே விலக்கப்பட்டும் தேவையில்லாமல் வெளிப்பட்டு இருக்கிறது… பாம்பு கடித்த இளைஞன் மற்றும் அவனுக்காக கதறி அழும் அவனது தாய் என இருவரின் மிகையான நடிப்பும் ஒரு சில இடங்களில் பாலுமகேந்திராவின் மிகை நடிப்பும் எரிச்சலை தந்தது. அதுபோல படத்தின் முடிவும் ஒரு சம்பிரதாயமான முடிவு போல தோற்றம் கொள்ளச் செய்ததும் சிறு குறையே….

இப்படி இளம் தலைமுறையிடம் இருந்து தன் மதம் மற்றும் சாதியம் சார்ந்த பிடிவாதங்களை விடக் கற்றுக் கொள்ளும் பெரியவர், தனது பேரனிடம் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார்… அதே நேரத்தில் தன் பேரனுக்கு அன்பையும், பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்கின்ற பண்பையும், தமிழையும் கற்றுக் கொடுக்கும் பெரியவர்.. அந்த இளம் தலைமுறைகளிடம் ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்… அது “தாத்தாவையும் தமிழையும் மறந்திட கூடாது…” என்பதுதான்… நாமும் இன்றைய தலைமுறைக்கு வைக்க வேண்டிய மிக முக்கியமான வேண்டுகோளும் அதுதான்..மொத்தத்தில் இந்த தலைமுறைகள் மற்ற வணிக மசாலா குப்பைகளை ஒப்பிடுகையில் எவ்வளவோ மேல்.. மேலும் இது ஒரு ஆரவாரமற்ற அமைதியான ஏரியின் வழியே நாம் கடந்து வந்த வாழ்க்கையை பரிசலில் சென்று பார்க்கும் ஒரு பயணம் போல… சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் படத்தின் முடிவில் ஒரு மனநிறைவும் திருப்தியும் எனக்கு கிடைத்தது…. உங்களுக்கு அந்த மனநிறைவும் திருப்தியும் கிடைக்குமா…? கிடைக்காதா..? என்பது உங்கள் மனநிலையைப் பொறுத்தது….

Sunday, 22 December 2013

என்றென்றும் புன்னகை:தலைப்புக்கு ஏற்றார் போல் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் திரைப்படம்.. அதனால் தானோ என்னவோ அவர்கள் கதை என்னும் வஸ்துவுக்காக கஷ்டப்படவே இல்லை.. கெளதம்(ஜீவா), ஸ்ரீ(வினய்) மற்றும் பேபி(சந்தானம்) என மூன்று நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே காதல், கல்யாணம் என்றாலே பிடிக்காது, ஆனால் வினய்க்கு பெண்களைப் பிடிக்கும்.. படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் மூவருமே தங்களது பிற நண்பர்கள் மத்தியில் தாங்கள் கல்யாணமே செய்யாமல் கடைசி வரை நல்ல நண்பர்களாக சேர்ந்து இருக்கப் போவதாக சத்தியம் செய்கின்றனர்.. அப்போதே கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பதும் தெரிந்து விடுகிறது..இப்படிப்பட்ட எந்தவித புதுமையும் இல்லாத கதையும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.. இந்தப் படத்திலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹீரோ சந்தானம் தான்.. கடந்த நாலைந்து படங்களில் சறுக்கிய சந்தானம்.. இதில் சற்றே நிமிர்ந்து இருக்கிறார்... பத்து நிமிடங்களில் முழுக்கதையும் தெரிந்துவிடுகின்ற சூழலில் காட்சிகளை கொஞ்சமேனும் கலகலப்பாக நகர்த்துவதற்கு உதவி இருப்பது சந்தானத்தின் காமெடியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை… இத்திரைப்படத்தின் கதை சார்ந்தும், அதில் இருந்த குழப்பங்கள் சார்ந்து பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றன… அந்த எண்ணங்களின் தொகுப்பையே கீழே கொடுக்கிறேன்…. இது படம் பார்க்கும் போது என்னுடைய பார்வையில் எனக்கு ஏற்பட்ட கேள்விகள் மட்டுமே…? அதே நேரத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த முகம் பேர் தெரியாத இளவயது ரசிகர் ஒருவர் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தார்.. என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்…. இனி என்னுடைய பார்வையில் படத்தின் கதையில் இருந்த குழப்பம் பற்றிய குறிப்புகள்…ஒரு ஆணுக்கு பெண் என்றாலே பிடிக்காது… ஏன்..? இதற்கு உளவியல் ரீதியாக எத்தனையோ விதமான சுவாரஸ்யமான பதில்களை நம்மால் யூகித்து, கற்பனை செய்து காட்சிப்படுத்த முடியும்.. ஆனால் இந்த இடத்தில் இயக்குநரின் கற்பனையென்பது ஆணாதிக்க மனோபாவத்தில் திளைத்தோங்கும் நம் தமிழ்சமூகத்தின் மங்கலான மட்டுப்பட்ட பார்வையாகத்தான் இருக்கிறது… காலங்காலமாக கட்டப்பட்டு வரும் கருத்துப் பேழையில் இருந்து ஒரு அழுகிப் போன அற்பமான கருத்தை உருவி… உலவவிடுகிறார்… அவனுடைய தாய் ஒழுக்கங்கெட்டவள்.. ஓடிப்போனவள்… அதனால் அவனது தந்தை மனமொடிந்து தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுது, பெண்கள் மீது பிரத்யேகமாகக் கட்டப்பட்டு இருக்கும் ஒழுக்கமற்றவர்கள்.. நம்பிக்கை துரோகிகள் என்கின்ற ஒரு பிம்பத்தை அவனது மகனுக்குள்ளும் விதைத்துவிடுகிறார்… அதையே மகனான ஜீவாவும் கடைபிடித்து வாழத் தொடங்குகிறான்..

ஒரு பெண் தன் குடும்ப வாழ்க்கையை விடுத்து வேறொருவனுடன் ஓடத் தயாராகின்றாள், என்றால் அந்த தயார் நிலையை பெரும்பாலும் மிகச் சாதாரணமான காட்சிகளை அடுக்கி நம் தமிழ் சினிமா கடந்துவர முயற்சிக்கிறது.. ஆனால் யதார்த்த வாழ்வியலில் அது அவ்வளவு எளிதானதல்ல….. அதற்கு அவள் ஏகப்பட்ட மனப் போராட்டங்களை கடந்து வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவளது அந்த இக்கட்டான காலக்கட்டங்களை கண்டுகொள்ளாமல் நாம் வெகு சுலபமாக “ஒழுக்கங்கெட்டவள்” என்ற வார்த்தை வடிவத்தில் அதை கடந்துவந்து விடுகிறோம்.. அவள் ஏன் ஓடிப் போனாள்…? என்ற கேள்வியை எந்த கதாபாத்திரமும் கேட்காது..? பார்வையாளனும் அதைக் கேட்க விரும்புவது இல்லை.. இப்படி ஒழுக்கத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து இருக்கும் நாயக கதாபாத்திரம் கூட தன்னுடனே சுற்றிக் கொண்டு திரியும், நண்பன் வினயின் ஒழுக்கத்தைக் கண்டு கொள்வதே இல்லை.. ஏனென்றால் அவன் தான் ஆண் ஆயிற்றே..? போகின்ற வருகின்ற இடத்தில் எல்லாம் அவன் எல்லா பெண்களுக்கும் ப்ராக்கெட் போடுகிறான்.. கல்யாணம் ஆனப் பின்பும் அவன் மொட்டைமாடியில் நின்று கொண்டு கடந்து செல்லும் பெண்களுக்கு பறக்கும் முத்தத்தைப் பரிசளிக்கிறான்… இதைக் கண்டு கொள்ளாமல் அவனது இரண்டு நண்பர்களும் அதை நகைப்புக்குரியதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்கின்றனர்… நண்பர்கள் மாத்திரம் அல்ல… பார்வையாளனும் அதைக் கண்டு நகைக்கத்தான் செய்கிறான்…. இதையே தானே அவனது அம்மாவும் செய்திருப்பாள்… அது எப்படி  ஒரே செயல் ஆண் செய்யும் போது நகைப்புக்குரியதாகவும், பெண் செய்யும் போது விரசமாகவும் மாறி விவாதத்துக்குள்ளானதாக மாறியது என்பதையெல்லாம் நாம் விவாதிக்கவே கூடாது போலும்….

சரி… போகட்டும்… ஜீவாவின் அப்பாவாக வரும் நாசர், தன் மனைவி பிரிந்தவுடன், அவர்களது மொழியில் சொன்னால் ஓடிப் போனவுடன், பெண்களைப் பற்றி பிதற்றி, அரற்றி ஒரு பிம்பத்தை தன் மகனின் மனதில் ஏற்படுத்த, மகனும் அப்பா சொன்னதை அப்படியே வேதவாக்காக நம்புகிறான்.. ஓரிரு மாதங்களில் பெண்களைப் பற்றி அவ்வளவு அவதூறு பேசிய அப்பாவே.. எப்படி மீண்டும் ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தார்.. அப்படியென்றால் இவர் முதலில் சொன்னது உண்மையா..? இப்போது சொல்வது உண்மையா…? என்று அந்த சிறுவயதில் கூட எந்த குழப்பச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், அப்பா முதலில் சொன்னதுதான் உண்மை… இரண்டாவது சொன்னது பொய்…. என்று எண்ணி.. அப்பா முதலில் சொன்ன விசயத்தையே பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கிறானாம்… அதுவும் இல்லாமல் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்தியும் விடுகிறானாம்… இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.. சரி.. இதையும் விடுங்கள்…கடைசியில் பிரியாவாக, தன் ப்ரொடக்சன் கம்பெனியில் கோ-ஆர்டினேட்டராக வரும் த்ரிஷா கிருஷ்ணனின் ஓரிரு அக்கறையான விசாரிப்புகளைக் கொண்டு.. எல்லாப் பெண்களும் அப்படியில்லை… என்று மனம் திருந்தி கல்யாணம் செய்து கொள்வதாக படம் முடிகிறது… அப்படி அவரது மனமாற்றத்துக்கான காரணமாக இருந்தது, ஒரு சின்ன சச்சரவின் போது த்ரிஷா ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசுவதும், ஓரிரு அக்கறையான விசாரிப்புகளும், அவர் மாடலாக மாறி ஒரு மாடர்ன் ட்ரெஸில் நடந்து வரும் போது ஜீவாவைப் பாதித்த த்ரிஷாவின் அழகும், ஒரு சின்ன முத்தமும் தான்… இவைதான்.. இவை மட்டும்தான் ஒட்டுமொத்தமாக ஜீவாவை மாற்றிவிடுகிறதாம்…. “எல்லாப் பெண்களும் அப்படியில்லை…” என்கின்ற ரீதியில் ஜீவா மாறியதாக அறிக்கைவிடும் போது… “எப்படியில்லை..” ”அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்..” என்றே கேட்கத் தோன்றுகிறது..இதுதவிர்த்து ஜீவா என்னும் கெளதமுக்கு, மற்றுமொரு குணாதிசய குறைபாடும் உண்டு.. அது தான் ஒரு கொள்கை வைத்திருந்தால், அது தவறு என்று தெரிந்தாலும் அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்வதை இழுக்காக நினைக்கக் கூடியவர் என்பது.. இப்படி ஒரு குணாதிசயம் இருப்பதே க்ளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியில்தான் நமக்குத் தெரியவருகிறது… இது தவிர்த்து மருத்துவமனையில் நாசர், தன் மகனிடம் தனக்கு கேன்சர் இருப்பதை சொல்லக்கூடாது என்று சொல்லும் காட்சியெல்லாம் காமெடியின் உச்சம்… ஏற்கனவே ஜீவா, அப்பாவின் மீது வெறுப்பில் இருப்பவர்தான்… அப்பாவுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது தெரிந்தாலாவது அவர் தன் அப்பாவிடம் பேசுவதற்கான வாய்ப்பு உண்டு… இப்படியிருக்கின்ற பட்சத்தில் நாசர் அதை ஜீவாவிடம் இருந்து மறைத்துவிடுவதற்கான முகாந்திரம் என்ன என்பதும் நெருடுகிறது….

இப்படி கதையிலும் காட்சி அமைப்பிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், இவை அனைத்தையும் பெரிதாக வெளியே தெரியாமல் நீர்த்துப் போகச் செய்வது என்னவோ….? சந்தானத்தின் இயல்பான எதுகை மோனை நயத்துடன் கூடிய அந்த ட்ரேட் மார்க் காமெடிதான்… ட்ரெஸிங்க் ரூமில் ஒரு ப்ராவை எடுத்து அணிந்து கொண்டு அவர் தரும் விளம்பர அறிமுகத்தில் இருந்து எல்லாமே சூப்பர்… அதிலும், கல்யாணமானப் பின்பு, தன் மனைவி கடுமையான கோபத்தில் இரவு டிபனுக்கு ஒரு டம்ளர் விஷம் இருப்பதாகச் சொல்லும் இடத்தில் அவர் அடிக்கும் கவுண்டர் டயலாக் இருக்கின்றதே….!!!! க்ளாஸ்…!! இப்படி ஆங்காங்கே வசன நடையில் நம்மை வயப்படுத்தும் சந்தானம் மட்டுமே படத்தில் ஆறுதல்..

ஜீவாவுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் தான்… ஆண்ட்ரியாவுடன் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கும் ஜீவாவை ரசிக்க முடிகிறது… தந்தையை எப்போதும் முறைத்தவாறு செல்வதும், கண்ணில் நீர் கோர்க்க.. அவரது கையைப் பற்றுவதுமாக நடிப்பில் வழக்கம் போல் ஜீவா குறை வைக்கவில்லை… சில காட்சிகள் மட்டுமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும், அப்படியே ஒரு மாடலின் எதிர்வினைகளை நிறுவும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார்… ஆன்ட்ரியா த்ரிஷாவிற்கு பெரிதாக வேலை இல்லை… அழகாக இருக்கிறார்… க்ளைமாக்ஸ் நெருங்குகின்ற நேரத்தில் கிடைக்கின்ற கேப்பில் கச்சிதமாக நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்… வினய்….? என்ன சொல்வது..? சில இடங்களில் நடிப்பு பரவாயில்லை என்று சொல்லலாம்.. ஆனால் ஜீவாவின் முன்னால் அழுது கொண்டே “அப்பாட்ட பேசுடா…” என்று சொல்லும் இடத்தில் எல்லாம் இவரது நடிப்பை ஜீரணிக்கவே முடியவில்லை… உடம்பைக் குறைப்பதும் அவருக்கு நல்லது. நாசருக்கு மிக முக்கியமான ஆனால் வழக்கமான கதாபாத்திரம்.. ஃபாரின் செல்லும் மகனின் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்று த்ரிஷாவிடம் சொல்லி போன் பண்ணச் சொல்லி கெஞ்சும் இடத்தில் கலங்க வைக்கிறார்….இசை ஹாரிஸ் ஜெயராஜ்…. பாடல்கள் ஒன்றிரண்டு நன்றாக இருந்தது… பிண்ணனி இசையில் ஸ்கோர் செய்வதற்கான திரைக்கதை இல்லை… ஏதோ ஒப்புக்கு இருந்தது பிண்ணனி இசை… மதியின் கேமராவில் ஜீவாவின் வீடும்.. அந்த ஃபாரின் லொகேஷன்களும் ஜில்… இயக்குநர் அஹமத்துக்கு இது முதல் படம்… காமெடியை நம்பி களம் இறங்கி இருப்பவர் கதையில் சற்று கோட்டை விட்டிருந்தாலும்… காமெடி அவரை கைகொடுத்து தூக்கி இருக்கிறது… இரண்டாம் பாதியில் படத்தின் முக்கிய பலமான காமெடி இல்லாமல் இருப்பதும்… இதுதான் நடக்கப்போகின்றது என்பதை ஆடியன்ஸ் யூகித்தப் பின்னரும், கதையை இழுப்பதோடு ஆடியன்ஸ் யூகித்த அதே விசயத்தை எந்தவிதமான வித்தியாசமும் இன்றி காட்டியிருப்பதும் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது… இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்… நல்ல முயற்சி என்று சொல்வதற்கு இல்லை.. இருப்பினும் ஒரு எண்டர்டெயினராக ஏமாற்றம் தராத ஒரு படமாகவே இருக்கும்… க்ரிடிட்ஸ் கோஸ் டூ சந்தானம்… மொத்தத்தில் என்றென்றும் புன்னகையில் வழக்கமான புன்னகையை தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை…

Friday, 20 December 2013

பிரியாணி:வெங்கட் பிரபுவின் படங்களில் எனக்கு சென்னை 28ம், சரோஜாவும் பிடிக்கும். ஆனால் கோவாவைப் பார்த்தப் பிறகுதான் எனக்கு ஒரு விசயம் புலப்பட்டது.. அந்த மூன்று படங்களுமே அவரது வாழ்க்கையில் நடந்த, அல்லது நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதற்கு ஏதுவான ஏதோ ஒரு சம்பவத்தின் பிண்ணனியிலேயே பின்னப்பட்டு இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை.. இயக்குநர் பாலுமகேந்திரா அடிக்கடி சொல்லுவது போல் ”வாழ்க்கையில் இருந்து ரத்தமும் சதையுமாக ஒரு கதையை எடுத்து வைக்கும் போதுதான் அதுவொரு மிகச்சிறந்த கலைப்படைப்பாக பரிமளிக்க முடியும்…” உண்மைதான். ஆனால், வெங்கட்பிரபுவின் படங்களையும் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட படங்களாக நாம் அணுக முற்படும் போது, அது ஏன் ஒரு கலைப்படைப்பாக பரிமளிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் கண்டிப்பாக நாம் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது…அதுயென்ன ”ரத்தமும் சதையுமாக…” இந்த வார்த்தை தொடர்பான எனது புரிதல் இப்படித்தான் இருக்கிறது.. இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இடையேயான பொதுவான ஒற்றுமை இந்த ரத்தமும் சதையும் தான்… இந்த வார்த்தை அப்படி எல்லா மக்களின் (அல்லது பெரும்பாலான மக்களின்) வாழ்க்கையிலும் ஒத்துப் போகிற உணர்வுகளைக் குறிக்கிறது.. ரத்தமும் சதையுமாக எடுத்துவைப்பது என்பது அதன் யதார்த்தத்தையும் தத்ரூபத்தையும் குறிக்கிறது… இவைகள் ஒருசேர அமையும் போது அது கலைப்படைப்பாக, ஒரு குறிப்பிட்ட கால வாழ்க்கையின் ஆவணமாக மாறுகிறது…

இப்படியிருக்க… வெங்கட்பிரபு தனது வாழ்க்கையில் இருந்து எடுத்து வைத்தவை யாவும் ரத்தமும் சதையுமான எல்லோருக்குமான பொதுவான உணர்வுகள் இல்லை.. அவை அங்க ஆபரணங்கள்… ஆரம்பத்தில் அதனால் பெரிய பாதகம் இல்லை… ஆம் அது எல்லோர் கையிலும் இருந்த சாமிகயிறு போல.. சென்னை 28ல் இருந்தது.. “கிரிக்கெட் விளையாடுவதை தொழிலாகக் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம், அந்த நண்பர் கூட்டத்துக்கு இடையேயான காதல் மோதல், சிறுபிள்ளைகளுடன் மோதி தோற்றுப் போன அவமானம் என… “ அது பெரும்பாலானவர்களின் கையில் இருந்த சாமிக்கயிறு.. ஆனால் சரோஜாவோ கிரிக்கெட் பார்ப்பதற்காக ஊரில் இருந்து காரில் கிளம்பிச் செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம்.. ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வது… ஆனால் இதுவும் மீண்டும் கிரிக்கெட் என்கின்ற ஒரு தேசியபுள்ளியில் இயங்கியதால்… இதை ஒரு தங்கக் காப்பு என்னும் ஆபரணமாகக் கொள்ளலாம்.. பத்தில் இரண்டு பேருக்குப் பரிச்சயம்.. ஆனால் ”கோவா..”வோ ஒரு வைரமோதிரம் போன்றது.. வீட்டில் இருந்து பணத்தை திருடிக் கொண்டு கோவாவுக்குச் சென்று, அங்கு இளம் பெண்களை கரெக்ட் செய்து கல்யானம் செய்து கொள்ளத் துணியும் இளைஞர்களின் கதை… அதனால்தான் இதை வைரமோதிரம் என்று சொன்னேன்… நூறு பேர் எடுத்தால் ஒருவன் கூட இருக்கமாட்டான்… ஆயிரத்தில் ஒருவன் கிடைக்கலாம்.. இப்படித்தான் வெங்கட் பிரபு வாழ்க்கையில் இருந்து எடுத்த அல்லது எடுத்திருக்கலாம் என நினைக்கின்ற கதைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக சாமானியமக்களிடம் இருந்து விலகி படத்துக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை அதிகரித்தது.. மேலும் அவரது படங்களில் வணிக சினிமாவின் கச்சாப் பொருட்களான.. கதை சொல்லும் முறையில் சின்ன புதுமையோ, திரைக்கதையில் எந்தவிதமான சுவாரஸ்ய முரண்களோ கூட பெரிதாக இருக்காது… (ச-ரோ-ஜா தவிர்த்து)..

மேற்சொன்ன காரணங்களால் என்னை அறியாமலேயே எனக்கு வெங்கட் பிரபு படங்கள் மீது ஒரு அலர்ஜியும் அவர்மீது ஒரு அவநம்பிக்கையும் ஏற்பட்டது… ஆனால்… மங்காத்தாவின் மேக்கிங்கும், அதிலிருந்த சின்ன சின்ன திரைக்கதை நுணுக்கங்களும் அந்த அவநம்பிக்கையை கொஞ்சம் மாற்றின… இப்போது வந்திருக்கும் பிரியாணியைப் பார்க்கும் போது கடந்த இரண்டு படங்களில் இயக்குநர் தன் வாழ்க்கை வட்டத்தின் அங்க ஆபரணங்களை கடை விரிப்பதை விட்டு வெளிவந்து, ஒரு வணிகவெற்றிக்கான கதைசொல்லியாக தன்னை வளர்த்திருக்கிறார் என்று நம்பிக்கையோடு சொல்லத் தோன்றுகிறது…

பிரியாணி தின்றால் என்ன பிரச்சனை வரும்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் வயிற்றுப் பிரச்சனை வரும்… ஆனால் ஒருவனுக்கு வாழ்க்கையே பிரச்சனையாகிப் போனால்… அதுதான் வெங்கட் பிரபுவின் டயட் “பிரியாணி”. எதற்காக பிரியாணி திங்கச் சென்றார்கள் என்கின்ற உப்புசப்பு இல்லாத லாஜிக்கை விட்டுவிட்டு.. பிரியாணி தின்றுவிட்டு இன்னொரு லெக்பீஸ்க்கு ஆசைப்பட்டு அவர்கள் செல்கின்ற இடத்தில் தான் சப்புக் கொட்டவைக்கும் சுவாரஸ்ய முரண்கள் இருக்கின்றன…

சுகனாக ப்ளேபாய் கேரக்டருக்கு கார்த்தி நன்றாகவே பொருந்துகிறார்… மெயின் டிஸ்சாக லட்டு மாதிரி ஹன்சிகா இருக்கும் போதே.. சை டிஸ்சாக பூந்தி தேடி அலையும் கேரக்டர்… சோ-ரூமுக்கு ரிசெப்சனிஸ்டாக வந்த பெண்களை மடக்க பிரேம்ஜிக்கு க்ளாஸ் எடுக்கும் போதும், வரதராஜனாக வரும் நாசரை பேட்டி எடுக்கும் போதும், தன் எதிரேயே அக்காவை யாரோ கடத்திக் கொண்டு செல்லும் போதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் கார்த்தி. ஆனால் மொத்தக் கதைக்கும் ஆணிவேரான அந்த ஹோட்டல் அறையில் கொலை நடந்திருக்கலாம் என்பதை அறிந்து அங்கிருந்து வெளியே செல்ல முயலும் போதும்.. பிணத்தைப் பார்த்துவிட்டு புலம்பும் காட்சியிலும் இருக்க வேண்டிய பதட்டம் சுத்தமாய் மிஸ்சிங்… அதிலும் கையில் பிணத்தை வைத்துக் கொண்டு இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று யோசிப்பதான கற்பனை காட்சிகளெல்லாம் ரொம்பவே செயற்கைத்தனம்.. இருப்பினும் இது கண்டிப்பாக கார்த்திக்கு பல தோல்விப் படங்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் படி அமைந்திருக்கும் ஒரு படம்…வெறுப்பேற்றும் ஒரேமாதிரியான டெம்ப்ளேட் காமெடிகள் இல்லாமல் பிரேம்ஜி.. அதுவே மிகப்பெரிய ஆறுதல்.. மேலும் டைகர் வேஷம் போட்டு ஆடும் போதும், எம்.டியின் பெண்களை பிக்-அப் செய்ய ஏர்போர்ட்டுக்குச் சென்று பல்பு வாங்கித் திரும்பும் போதும், ”அவனுக்கு எந்த வண்டி புடிச்சா என்னங்க… எப்புடியும் அதையும் நாந்தான ஓட்டப் போறேன்… அவனுக்குத்தா கார் ஓட்டத் தெரியாதே…” என்று கார்த்தி கிண்டல் செய்யும் போதும், கார்த்தி செய்த தப்புக்காக ஹன்ஸிடம் மாட்டிக் கொண்டு பளார் என்று அறை வாங்கும் போதும் உண்மையாகவே சிரிக்க வைக்கிறார்… 

ஹன்சிகாவுக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம்… இதிலும் காதலனுடன் சண்டை போடுவதும், சாந்தமாகிப் போய் டூயட் பாடுவதும், ஆங்காங்கே அழகு காட்டுவதும் தான் அவரது ஆகச்சிறந்த பணி. செவ்வனே செய்திருக்கிறார்..படத்திற்கு திரைக்கதை மிகப்பெரிய பலம்..  நடந்த விசயங்களை கார்த்தி ஹன்ஸிடம் சொல்லும் போது ப்ளாஸ்பேக்காக விரியும் காட்சிகளை ரசிக்க முடிகிறது.. பத்து நிமிடமே வந்து செல்லும் கேரக்டராக இருந்தாலும் உமா ரியாஸின் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது.. என்னைப் பொறுத்தவரை க்ளைமாக்ஸைவிட ஃப்ரீ க்ளைமாக்ஸ் புதிதாகவும் யதார்த்தமாகவும், நம்பகத்தன்மையோடும் இருந்தது.. சில விசயங்களை மட்டும் மாற்றி அதை அப்படியே விட்டு இருக்கலாம்.. க்ளைமாக்ஸாக வரும் விசயங்களும், சண்டைகளும் அயற்சியை ஏற்படுத்துவதோடு, பல குழப்பமான கேள்விகளையும் ஏற்படுத்துகிறது… 

பிரியாணியில் லெக் பீஸ், குஸ்கா, சுக்கு, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் பட்டை, சீரகம், மிளகு இப்படி என்ன அயிட்டங்கள் இருக்குமோ… அதை விட அதிகமான நட்சத்திரப் பட்டாளம்.. நாசர், சுப்பு பஞ்சு, ராம்கி, சம்பத், ஜெயப்பிரகாஷ், பிரேம், நிதின் சத்யா, உமா ரியாஸ், மாண்டி தாகர், மதுமிதா, அரவிந்த் ஆகாஷ் என இன்னும் நிறைய நபர்கள்.. யுவனுக்கு இது 100வது படம்… பாடல்களிலும் சரி… பிண்ணனி இசையிலும் சரி… யுவனுக்கே உரித்தான அந்த ட்ரேட் மார்க் மிஸ்சிங்…. சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் மென்மை காட்சிகளை விட சண்டைக் காட்சிகளின் ரம்மியமாக இருக்கிறது… குறைகள் என்று பார்த்தால் வழக்கம் போல லாஜிக்கள் குறைகள் தான்… ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன.. சிசிடிவி போட்டோ புட்டேஜ் அழிக்கப்பட்டதை எப்படி போலீஸ் கண்டுபிடிக்காமல் இருக்கும்..? அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழாதா..? ஆரம்பத்தில் இருந்தே பிணத்தை பாதுகாப்பது பின்கதை தெரிந்ததால் தானா…? இப்படி எத்தனையோ கேள்விகள் கேட்கலாம்..

ஆனால் இப்படி ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன்… லெக்பீஸ் இல்லாத பிரியாணியாகவே இருந்தாலும்.. சாப்பிடும் போது லெக்பீஸைப் பற்றி யோசிக்கவே விடாத படி சுவாரஸ்ய அடுக்குகள் பல இருப்பதால், இது போன்ற குறைகள் உங்கள் நினைவுக்கு வரவே வராது என்பது தான்.. இந்த பிரியாணியின் வெற்றி… நம்பிச் செல்லலாம்… உபாதைகள் இருக்காது என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்…