Wednesday, 3 December 2014

காவியத் தலைவன்:

எனக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்களில் வசந்தபாலன் அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு இடம் உண்டு. அவருடைய திரைப்படம் என்றாலே ஒரு கூடுதலான ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம். அரவான் திரைப்படத்துக்கு அப்படி காத்திருந்து தான் ஏமாந்து போனேன். காவியத் தலைவன் திரைப்படத்துக்கும் அதே போல காத்திருந்து ஏமாந்து போய் நிற்கிறேன்.. இனி அவரது அடுத்த திரைப்படத்துக்காக காத்திருக்க வேண்டும். இது எனக்கு பிடித்த இயக்குநரின் திரைப்படம் என்பதால் மட்டுமே இந்த திரைப்படத்தை என்னால் பாராட்டிவிட முடியாது. அதே போன்று நாடக கலைஞர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கு துணிந்து இறங்கி இருக்கும் அந்த முயற்சியை பாராட்டலாம் தான்... அதற்காக அந்த திரைப்படத்தையும் பாராட்ட வேண்டும் என்பது இல்லை.. நாயகன், நாயகி, காதல், நாயகனுக்கு பிரச்சனை, இறுதியில் சில சாகச சண்டைகளுக்குப் பின்னர் நாயகன் வெற்றி பெறுவது இதற்கு இடையிடையே சில மசாலா பாடல்கள் என்று வணிக சூத்திரங்களுக்கு கட்டுப்பட்டு இயங்கும் வணிக சினிமா அல்ல காவியத் தலைவன்.. அதற்காகவும் காவியத் தலைவனை பாராட்டிவிட முடியாது...


ஆக நாடகக் கலைஞர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்கின்ற புதிய முயற்சிக்காகவோ, வணிக சினிமா இல்லை என்கின்ற ஒற்றை காரணத்துக்காகவோ காவியத் தலைவனை பாராட்ட நான் தயாராக இல்லை.. ஏனென்றால் இயக்குநர் வசந்தபாலன் புதிய முயற்சிகளை எடுப்பவர் என்பதும், வணிக சினிமாக்களை விரும்பாதவர் என்பதும் ஏற்கனவே நம்மில் பெரும்பாலான மக்களுக்கு தெரியும். இதற்கு முந்தைய அவரது படங்களை நாம் அதற்காக மட்டுமே பாராட்டவில்லை.. அதையும் மீறி அவரது படைப்புக்களின் வழியாக வெளிப்பட்ட யதார்த்தமான வாழ்வியல், நம்மை கொஞ்சமேனும் யோசிக்க வைத்த கதைக்களன் இவைகளுக்கும் சேர்த்து தான் நாம் அவரை பாராட்டியது.. ஆனால் அவரது சமீபத்திய இரண்டு திரைப்படங்களான அரவான் மற்றும் காவியத் தலைவன் இரண்டிலும் யதார்த்தமான வாழ்வியல் இல்லை என்பதும், அதே போல் சிந்திக்க தூண்டும் கதைக்களன் இருந்தும் அது அதற்குரிய முழு வீரியத்துடன் வெளிப்படவில்லை என்பதும், புதிய முயற்சி, வணிக சினிமா அல்ல என்கின்ற இரு அடையாள அட்டைகள் மட்டுமே பெயரளவில் ஒட்டிக் கொண்டு இருந்தது என்பதும் தான் அவரது திரைப்படங்கள் பாராட்டு பெறாமல் போனதன் பிண்ணனியில் உள்ள சோகக்கதை..

இணையங்களிலும் பத்திரிக்கைகளிலும் வருகின்ற காவியத்தலைவன் தொடர்பான விமர்சனங்கள் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.. அதுவும் இந்த திரைப்படத்தின் வாயிலாக இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் நாடக கலைஞர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திவிட்டார் என்கின்ற பொருத்தமில்லாத வரிகளை கடக்கும் போதெல்லாம் எனக்கு என் மீதே பெருத்த சந்தேகம் எழுகிறது.. நான் திரைப்படத்தை சரியாகத்தான் பார்த்தேனா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.. என்னைப் பொருத்தவரைக்கும், நாடக கலைஞர்கள் என்பவர்கள் ஒரு ஆசிரியரின் கீழ் குழுவாக அமர்ந்து கொண்டு, நாடகக் கொட்டகைகளில் நாடகம் நடத்துபவர்கள் என்கின்ற ஒற்றை வாழ்வியல் அம்சத்தைத் தவிர வேறு எதையுமே அவர் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.. ஆவணப்படுத்திவிட்டார் என்று அறிக்கை விட்டிருக்கும் இணைய கணவான்கள், அவர் காட்டிய வாழ்வியலை சற்றே தெளிவாக அவர்களது இணைய பக்கத்தின் கல்வெட்டுகளில் பொறிக்க கடமைப்பட்டவர்கள் என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன்..

வெயில் திரைப்படத்தில் இருந்த வாழ்வியலோ அல்லது அங்காடித் தெரு திரைப்படத்தில் இருந்த வாழ்வியலோ இந்தத் திரைப்படத்தில் இல்லவே இல்லை என்பதனை என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்.. அவர்களது உணவு, உடை, உறைவிடம், தொழில், நம்பிக்கை, பழக்க வழக்கம், தேவை, பிரச்சனை, நாட்டு நடப்பு இப்படி எதைப் பற்றியும் பேசாமல், வெறுமனே நாடகக் கலைஞர்களின் உடைகளை அணிந்து கொண்டு வந்து நின்றதும் வாழ்வியலை காட்டிவிட்டார் என்று சொன்னால் அதை என்னவென்று சொல்வது.. இயக்குநர் வசந்தபாலனின் திரைப்படங்கள், கமர்ஸியல் திரைப்படங்களுக்கான மூலக்கூறுகளை முழுக்கவே புறக்கணிக்கும் திரைப்படங்கள் கிடையாது… அந்த மூலக்கூறுகள் மிக குறைந்த அளவு பயன்படுத்தப்பட்டு இருக்கும்.. ஆனால் சமீபத்திய இரண்டு படங்களிலும் அந்த சினிமாத்தனமான காட்சிகளின் விகிதாச்சாரம் பெருமளவு கூடிவிட்டதாக தோன்றுகிறது.. அதை அவர் கண்டு கொள்வது அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது என்று தோன்றுகிறது…


காவியத் தலைவன் திரைப்படத்தின் கதை என்று பெரும்பாலானவர்களால் முன் வைக்கப்படுவது, இரண்டு நாடக கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் போட்டியும் பொறாமையும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான்… ஆனால் அதையும் மீறி நான் கதையாக நினைப்பது, க்ளைமாக்ஸ் காட்சியின் போது காளியப்ப பாகவதராக வரும் சித்தார்த் பேசும் அந்த வசனத்தின் உட்கருத்தை தான்… அந்த உட்கருத்து இதுதான்…. “ ஒருவன் கையில் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதையோ அல்லது எந்தப் பாதையில் போக வேண்டும் என்பதையோ அவனது எதிரி தான் தீர்மானிக்கிறான்…” என்பதே அந்த உட்கருத்து. கோமதி நாயகம் பிள்ளையாக வரும் ப்ருதிவிராஜ், காளியப்ப பாகவதராக வரும் சித்தார்த்தின் மீதும் அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளின் மீதும் பொறாமை கொண்டு, அவருக்கு எதிராக சதி செய்கிறார்… அது ஒரு கட்டத்தில் அவருக்கு வெற்றியாக தெரிந்தாலும், கால ஓட்டத்தில் எல்லா இடங்களிலும் காளியப்ப பாகவதர், தன்னை வென்றுவிட்டதை உணரும் கோமதி, வெறுப்பின் உச்சத்தில் “ எப்படி நீ மட்டும் எல்லோரிடமும் புகழை சம்பாதித்தாய்…” என்று கேட்கும் கேள்விக்கு காளியப்பரின் பதிலாக வருவது தான் மேற்சொன்ன உட்கருத்து.. “ நீ என்னை சதி செய்து நகர்த்தவில்லை என்றால் நான் இந்த உயரத்தை அடைந்திருக்க மாட்டேன்…” என்பதே காளியப்பரின் வாக்குமூலம்.. கதையாகவோ கதைக்கருவாகவோ பார்த்தால் மிகநல்ல விசயத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்கும் படம்.. “ நாம் வளர்வதற்கு நமக்கு நல்ல போட்டியாளர்களும் தேவை… அதைவிட அந்த போட்டியாளர்களை எப்படி நாம் பார்ப்பது என்கின்ற புத்தி நமக்குத் தேவை “ என்பதனை பூடகமாக உணர்த்தியிருக்கும் திரைப்படம்… ஆனால் இந்த உட்கருத்து படத்தின் கடைசி பத்து நிமிடங்களில் மட்டும் தான் வந்து செல்கிறது. இதை மையமாக வைத்து கதையை ஆரம்பத்தில் இருந்தே நகர்ந்திருந்தால், படம் வேறொரு கோணத்தில் வந்திருக்கும் என்பது என் எண்ணம்..

இதே கதையம்சத்தை கொண்ட திரைப்படம் தான் ஆடுகளம்.. இங்கு இரண்டு நண்பர்களுக்கு இடையிலான போட்டி என்றால், அங்கு குரு சிஷ்யன் இருவருக்கும் இடையிலான போட்டி. அங்கு சேவல் சண்டை பின்புலம் என்றால் இங்கு நாடகக்கலை பின்புலம்.. ஆனால் ஆடுகளம் பார்த்தப் பின்னர் சேவல் சண்டை குறித்தான ஒரு அடிப்படை புரிதலாவது நமக்கு கிடைத்திருக்கும்.. ஆனால் காவியத்தலைவன் திரைப்படம் பார்த்தப் பின்னர் நாடகத் துறை சார்ந்து நாம் என்ன புதிதாக தெரிந்து கொண்டோம் என்றால் ஒன்றுமேயில்லை என்பதே பதில்.. ஆக பின்புலக் கதையான நாடகத் துறை சார்ந்த விவரணைகளை தொகுத்து வழங்குவதில் தோற்றிருக்கும் காவியத் தலைவன், மையக்கதையிலாவது சோபிக்கிறதா என்றால் அதுவும் இல்லை.. எந்தவொரு காட்சியுமே உணர்வுபூர்வமாக மனதில் நிற்பதே இல்லை.. கொஞ்சமேனும் தேறும் ஒரு காட்சி என்றால், அது சூரபத்மனாக சித்தார்த், ப்ருதிவிராஜ் இருவரும் நடித்துக் காட்டும் காட்சி மட்டும் தான்..நடிப்புதான் தன் உயிர் என்று சொல்லும் காளியப்ப பாகவதர் தன் நடிப்புக்காக எடுத்துக் கொள்ளும் பிரத்யேக பயிற்சிகள் என்று எதுவுமே இல்லை.. இங்கு இருப்பதெல்லாம் கயிறு ஏறிக் குதித்து ஜமீன் வீட்டுப் பெண்ணுடன் காதல் செய்யும் காட்சிகள் தான்.. இப்படி நாயகன் சுவர் ஏறிக் குதிக்கும் போதெல்லாம் ஜமீன் வீட்டில் நாயகியைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் என்பது அந்தக் காட்சிகளின் தனிச்சிறப்பு..

இருப்பதிலேயே கொஞ்சமேனும் ஒரு கதாபாத்திரம் சிரத்தையோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அது கோமதிநாயகம் பிள்ளையாக வரும் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் மட்டும் தான்.. தனக்கு அநியாயம் செய்வதாக குருவிடமே சென்று முறையிடுவது, தன் வஞ்சத்தை மனதுக்குள்ளேயே மறைத்து பழிவாங்க காய் நகர்த்துவது, கடைசிவரை அதே வஞ்சத்தோடு வாழ்ந்து வருவது என, இவரது கதாபாத்திரம் மட்டும் சிறப்பானது.. சித்தார்த் கதாபாத்திரம் தெளிவின்றி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.. பத்து வருட இடைவெளியில் வேறு எந்த நாடக கம்பெனியிலும் சேர்ந்து அவர் நடிக்கவே இல்லையா..?? அல்லது நடித்தாலும் சிறப்பாக நடிக்கவில்லையா..?? பின்பு எதனால் அவரது பெயர் யாருக்குமே தெரிவதில்லை.. அப்படி பத்து வருடம் குடித்து, சீரழிந்து அவர் நடிக்கவே இல்லை என்று வைத்துக் கொண்டால், தன் பழைய நாடகக் கம்பெனிக்கு வந்ததும் எப்படி தன் அதே பழைய நடிப்பை மீளுருவாக்கம் செய்து, மீண்டும் பாராட்டுக்களை பெற முடிந்தது என எழும் பல கேள்விகளுக்கு அந்த கதாபாத்திரத்திடம் பதிலே இல்லை..

இத்திரைப்படம் கிட்டப்பா மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிகிறது.. எனக்கு அந்தக் கால நாடக முறைகளைப் பற்றியோ, அதை வளர்த்தவர்கள் பற்றியோ பெரிதாக எதுவும் தெரியாது, அதைப் போலத்தான் கிட்டப்பா மற்றும் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் வாழ்க்கை பற்றியும் ஒன்றும் தெரியாது… அதனால் இத்திரைப்படத்தில் எவையெல்லாம் அவர்களது வாழ்க்கையோடு தொடர்பு உள்ளவை என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.. ஆனால் உண்மையாகவே இத்திரைப்படம் அவர்களது வாழ்க்கையாக இருக்கும்பட்சத்தில் அதை அப்படியே எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்திருந்தால் திரைப்படம் உண்மையாகவே ஒரு காவியமாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்படி எடுக்காமல் பொருத்தமில்லாத காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் சேர்த்து, மையக்கதை நகர்கிறதா என்பதில் கவனத்தை குவிக்காதது தான் திரைப்படம் வசீகரிக்காமல் போனதற்கு காரணம் என்று எண்ணுகிறேன்... அரவான் திரைப்படத்திலும் இதே வணிக சமரசங்கள் தான் படத்தை நிலைகுலைய செய்தது என்பது என் கருத்து..

படத்தில் சிறப்பாக இருக்கின்ற விசயங்கள் என்றால், அது இசை, ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு இவை மட்டுமே… கதையோ, திரைக்கதையோ அல்ல.. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.. பாடல்கள் தேவை இல்லாததாக தெரிந்தாலும், சுவாரஸ்யமே இல்லாத கதையோட்டத்தில் கொஞ்சமாவது நமக்கு ஆறுதல் அளிப்பது இந்த இசைதான்.. ஒளிப்பதிவு நீரவ் ஷா. படத்துக்கு என்ன தேவையோ அதை பளிச்சென கொடுத்திருக்கிறார்.. அடுத்ததாக நடிப்பு.. சித்தார்த், ப்ருதிவிராஜ், நாசர், வேதிகா என எல்லோருமே சிறப்பான நடிப்பை  பங்களித்திருக்கின்றனர்.. படத்தின் மிகச் சிறப்பான இரண்டு காட்சிகளும் படத்தில் முதலிலேயே வந்துவிடுகின்றன… ஒன்று அந்த சூரபத்மன் காட்சி, இரண்டாவது குருவும் சிஷ்யரும் மாறிமாறி சாபம் கொடுத்துக் கொள்ளும் காட்சி.. இரண்டாவது பாதியில் வரும் சுதந்திரப் போராட்ட பிண்ணனிகள் எந்த பாதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தவே இல்லை… அது போலத்தான் அந்த க்ளைமாக்ஸ் காட்சியும்… (உட்கருத்தாக விளக்கப்பட்ட காட்சிதான்… கருத்து நல்ல கருத்து, காட்சி அல்ல…) எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களும் ஏனோ பெரிதாக கைகொடுக்கவில்லை..

மொத்தத்தில் காவியத் தலைவன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் செல்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் படம்… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்பவர்களுக்கு எரிச்சலை கொடுக்காது, அதே நேரம் சுவாரஸ்யத்தையும் கொடுக்காது.. இருப்பினும் படத்தை கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பார்க்கலாம்… ஏனென்றால் இயக்குநர் நல்ல திரைப்படம் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ள இயக்குநர்… அவர் இந்த முறையும் சறுக்கி இருக்கிறார்…. அவரை ஆதரித்து ஏற்றுக் கொள்வதில் தவறில்லை… அதுதான் நமக்கு அவரின் மூலமாக மற்றொரு நல்ல சினிமா கிடைப்பதற்கு வழிவகுக்கும்.. ஆக..

காவியத் தலைவன்
HE IS THE PARTICIPANT OF THE RACE, NOT A WINNER

No comments:

Post a Comment