Saturday, 27 December 2014

பிசாசு:

இதுவரை தமிழ் சினிமா காட்டி வந்த பேய்களும் பிசாசுகளும் செய்யாத, ஏன் யோசித்து கூட இராத ஒரு காரியத்தை இந்த பிசாசு செய்திருக்கிறது.. அதுதான் மிஷ்கினின் பிசாசுவிற்கும் மற்ற தமிழ் சினிமா பிசாசுகளுக்கும் இடையிலான முக்கியமானதொரு வித்தியாசம். அப்படி இந்தப் பிசாசு என்ன செய்கிறது என்று கேட்டால், இது பயத்தை பரப்பாமல் அன்பை போதிக்கிறது.. என்பதே என் பதிலாக இருக்கும்.. அன்புக்கு அணை கட்டிக் கொண்டதால் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தை இது போன்ற திரைப்படங்களும், இலக்கியங்களும் கொஞ்சமேனும் தீர்க்கும் என்கின்ற தீர்க்கதரிசனங்களின் மீது நம்பிக்கை உடையவன் நான். அதனால் எனக்கு இந்த திரைப்படம் பிடித்திருந்தது.. ஆனால் மிஷ்கினின் முந்தைய திரைப்படமான “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” எந்த அளவுக்கு எனக்கு பிடித்திருந்ததோ, அந்த அளவுக்கு இது என்னை கவரவில்லை என்பதும் உண்மை.


ஏனென்றால் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படம் மிஷ்கின் என்னும் வீரியமான கலைஞனின் முழுத்திறமைகளும் வெளிப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நான் கருதுகிறேன்.. அந்த திரைப்படம் தொடங்கி, ஒரு சில காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா அல்ல என்பது மிகத் தெளிவாக புரிந்துவிடும்.. அது தவிர்த்து நான் விரும்புகின்ற சில மிஷ்கினின் அடையாளங்கள் வரிசையாக அணி வகுத்தபடி வந்துகொண்டே இருக்கும்.. ஆனால் இந்த பிசாசுவில் அது எல்லாமே மிஸ்சிங் என்பதுதான் என் வருத்தம். முதல் பாதியில் கண்ணுக்கு க்ளோசப் வைத்து தொடங்கும் அந்த ஷாட்டை தவிர்த்து, மீதி எல்லா காட்சிகளுமே ஒரு சாதாரண தமிழ் பேய்படங்கள் கையாளும் உத்திகளை உள்ளடக்கமாக கொண்டிருந்தன.. அதில் மிஷ்கினின் அடையாளங்கள் இல்லவே இல்லையா…?? என்று கேட்டால், இருந்தன..!!! ஆனால் அந்த அடையாளங்கள் எல்லாம், நான் மிஷ்கினின் படங்களில் மீண்டும் தெரிந்துவிடக் கூடாது என்று வெறுத்து வந்த அடையாளங்கள்.. உதாரணமாக அந்த முகத்தை மறைக்கும் தலைமுடி, தரையைப் பார்த்து குனிந்து கொண்டே பேசுவது, ஒவ்வொருவராக வந்து அடி வாங்குவது, எல்லோருமே ஒரே பாணியில் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது இப்படியாக மட்டுமே அந்த அடையாளங்கள் இருந்தன.

தன்னுடைய அடையாளங்களை தொலைத்து, தன் கலைக்கு ஊடாக காணாமல் போவதுதான் கலைஞனுக்கு அழகு என்பது இயக்குநர் மிஷ்கினுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.. அது நம்மைவிட அதிகமாக தெரிந்திருந்தும் அதை ஏன் அவர் விடாமல் பிடிவாதமாக பிடித்திருக்கிறார் என்பது தான் விளங்கவில்லை.. மிஷ்கினைப் போன்ற கதை சொல்லிகள் தமிழ் சினிமா சமூகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கிறார்கள்.. இது அவருக்கும் தெரியும்.. ஆனால் அவர் கூட இது போன்று வெளிப்படையாக தெரியும் ஒருசில குறைகளை களைய விரும்பாமல் இருப்பது தான் வருத்தமளிக்கிறது.. இதுபோன்ற அதிசயமான தமிழ் சினிமா கலைப்படைப்புகளிலும் கூட சக பார்வையாளனை ஒன்றவிடாதபடி, மிஷ்கினின் விரும்பத்தகாத அடையாளங்கள் துருத்திக் கொண்டு தெரிவதால், அந்த கலைப்படைப்பை காட்டிலும் மிஷ்கின் தான் ஆக்ரோசமாக வெளிப்படுகிறார் என்பதை எப்போது அவர் உணரப் போகிறார்..??

மிஷ்கினின் கதை சொல்லும் பாணி தமிழ் சினிமாவில் தனித்துவமானது.. அப்படி ஒரு கவித்துவமான காட்சிப்படுத்துதலில் இருந்து தான் இந்த பிசாசுவும் தன் காட்சித் தாக்குதல்களை தொடங்குகிறது.. விபத்தில் அடிபட்டு விழுந்திருக்கும் பெண், அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரையும் ஒரு ஆண், அந்தப் பெண்ணின் இறப்பு, அதைத் தொடர்ந்து தொடரும் மர்மங்கள், துரத்துகின்ற பிசாசு, அந்தப் பிசாசின் தேவை என்ன..?? இதுதான் இந்த திரைப்படத்தின் கதை சுருக்கம்… இதை காட்சி சுருக்கம் என்று சொன்னாலும் தகும். இப்படி தமிழ் சினிமாவின் வெகு சம்பிரதாயமான காட்சிகளை கண் முன் அடுக்கி, முதல் பாதி முழுவதுமே காணாமல் போகின்ற மிஷ்கின், மீண்டும் தன்னை, தன் முத்திரையை காட்டிக் கொள்கின்ற இடம், அந்த பிசாசின் தேவை என்ன..? என்பதை முன்னிறுத்தித் தான்.. திரைப்படத்தில் அந்த பிசாசின் தேவை என்ன…?? என்பது, தமிழ் திரை சமூகத்தில் இந்த பிசாசு திரைப்படத்தின் தேவை என்ன..? என்பதைப் போல், ஒரு அத்தியாவசியமான, அழகான, அன்பான ஒரு தேவை..

தான் செத்துக் கொண்டிருந்த போது உதவிய ஒரு மருத்துவ கல்லூரி மாணவனை, மீண்டும் சந்திக்க விரும்பும் ஓநாயான கொலைகாரனுக்கும், தான் செத்துக் கொண்டிருந்த போது, தூக்கிச் சென்று உதவி செய்ய விரும்பிய இளைஞனை பார்க்க விரும்பி தேடி வரும் பிசாசுவுக்கும் நாம் முடிச்சி போட்டு யோசித்தால், இந்த பிசாசுவின் மையக்கருவை நாம் கண்டு கொள்ளக் கூடும்.. அந்தப் பிசாசு அந்த வீட்டுக்கு ஏன் வருகிறது என்பதில் தான் மொத்த கதையும் அடங்கி இருக்கிறது.. வழக்கமான தமிழ் சினிமாவின் அடிப்படையில் பார்த்தால், தன் மரணத்துக்கு காரணமான நபர்களை பழி வாங்கவோ பழி வாங்க உதவி வேண்டியோ அந்தப் பேய் வந்திருக்கும்.. ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா கிடையாது.. இன்னும் சில பதிவுகள் செத்துப் போகும் இளம்பெண், அந்த முதல் பார்வையிலேயே நாயகன் மீது காதல் கொண்டுவிட்டாள், என்று முன்மொழிகின்றன.. அதுவும் கூட ஒரு வழக்கமான தமிழ் சினிமா என்பதால், அந்த பாதையிலே தன் கதையை மிஷ்கின் நகர்த்தி இருக்க மாட்டார் என்றும் நம்புகிறேன்.. அப்படி என்றால், சாகும் தருவாயில் அந்தப் பெண், நாயகனின் கையை இறுக பற்றிக் கொள்வதும், அவளது தந்தை “ எனக்குப் பிடிச்ச பையனை பார்த்தா கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னியே..” என்று சொல்லி புலம்புவதுமான காட்சிகளையெல்லாம் சேர்த்து முடித்துப் போட்டு, நாம் அதை காதல் என்று கற்பிதம் செய்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது.. ஆனால் அது சரியல்ல என்றும் தோன்றுகிறது.


அப்படி பார்த்தால், அந்தப் பெண்ணின் ஆவி ஏன் நாயகனின் வீட்டுக்கு வருகிறது என்ற கேள்வி துருத்திக் கொண்டு தெரியக்கூடும்.. இது எல்லாவற்றுக்குமான பதில், இறந்த பெண்ணின் தந்தையான இராதாரவியை நாயகன் தேடிச் செல்கின்ற போது, அவர் என்ன மனநிலையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்கின்ற வசனத்தில் இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது..  இறக்கின்ற தறுவாயில் தன் கையை தூக்கிக் கொண்டு “ப்பா..” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே இறக்கும் பொழுதையும், அவள் ஏதோ சொல்ல வந்து முடியாமல் இறக்கிறாள் என்றே நான் நினைக்கிறேன்.. அவள் எதிர்பார்ப்பது போல் ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதால் தான் அவள் வீட்டுக்கும் தேடி வருகிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது.. அப்படி வருகின்ற பெண் ஏன் அப்பாவிடமே அதை சொல்லி தடுத்து நிறுத்தக் கூடாது என்று கேள்வி கேட்கலாம். ஆனால் அதற்கு என்னிடம் பதில் இல்லை..

இது தவிர்த்து படத்தில் ஆங்காங்கே மிஷ்கினின் குறியீடுகளும் இருக்கின்றன.. படத்தின் ஆரம்பத்திலேயே ரெட் சிக்னல் விழுந்திருப்பதை கவனியாமல், க்ரீன் சிக்னல் என்று எண்ணிக் கொண்டு, ஆட்டோவை செலுத்தும் ஆட்டோக்காரரின் காட்சி ஒன்று படத்தில் வருகிறது.. இந்தக் காட்சி படத்தில் வர வேண்டிய தேவையே இல்லை.. அடிபட்ட பெண்னை ஆட்டோவில் தூக்கி வைத்தவுடனே அடுத்த காட்சியை மருத்துவமனையில் தொடங்கி இருக்கலாம்.. அதுபோலத்தான் போலீஸிடம் சென்று நாயகன் இடித்துவிட்டு சென்ற கார்காரனை பற்றி விசாரிக்கும் போது, வெறித்த விழிகளுடன், நெற்றியில் வட்டவடிவில் பெரிதாக வைத்த சிவப்பு நிற பொட்டுடன் நிற்கும் பாட்டியின் காட்சி.. தேவையில்லாத காட்சியாகத் தோன்றும்.. அதற்குடுத்து, உண்மை தெரியவரும் சமயத்தில் சிவப்பு பூவை வைத்துக் கொண்டு பச்சை நிற ஒழுகும் குடத்துடன் நிற்கும் பெண்மணியின் காட்சி.. அங்கு உண்மை தெரியவேண்டுமே தவிர, சிவப்பு நிறப் பூவோ அல்லது பச்சை நிற குடமோ அல்லது அது ஒழுக வேண்டும் என்பதோ தேவையே இல்லை.. இதையெல்லாம் இயக்குநர் ஏன் காட்சியாக்கி இருக்கிறார் என்று யோசித்தால், முதல் காட்சி அந்த ஆட்டோ டிரைவருக்கு கண்ணில் உள்ள பிரச்சனையை பதிவு செய்யும் காட்சி, இரண்டாவது காட்சியை அன்பின் வடிவமாக உள்ள ஒரு பெண், இவன் உண்மையை அறிந்து அதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிவிடுவானோ என்ற பதட்டத்துடன் அவனை அணுகுவதாகக் கூட கொள்ள முடியும்… இந்த இடத்தில் அந்தப் பெண்ணின் ஆவி அவனை வீட்டுக்குள் மட்டும் தொடரவில்லை.. வெளியிலும் தொடருகிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.. சுரங்க நடைபாதை சண்டையிலும் நாயகனை அதுதான் காப்பாற்றுகிறது.. ஆக அந்தப் வயதான பெண்ணின் ரியாக்சனை நான் இறந்து போன பெண்ணின் தவிப்பாகவே பார்க்கிறேன்.. அதுபோலத்தான் அந்த கடைசி காட்சியின் குடமும் பூவும்.. இரண்டின் நிறங்களும் இடம் மாறி இருக்கலாம்.. மாறவில்லை.. ஏனென்றால் சிக்னலில் மேல் இருக்கும் நிறம் சிகப்புதானே.. அது போல பச்சைக் குடம் ஒழுக வேண்டிய அவசியம் இல்லை… அது ஒழுகுவது உண்மை கசிகிறது என்பதற்கும், இனியும் பச்சை நிறம் பாவத்தை சுமக்க அவசியம் இல்லை என்றும் நாம் எண்ணிக் கொள்ளலாம்..

ஆக இப்படி நாயகனின் காரின் நிறத்தில் இருந்து, ஒவ்வொரு இடங்களில் நிறப்பிரிகைகளை மிகச் சரியாக கையாண்டு, ஒரு கதையை வடிக்கின்ற பக்குவம் இங்கு இருக்கின்ற பெரும்பாலான இயக்குநர்களுக்கு இல்லை.. இது போன்ற கதை சொல்வதில் இருக்கின்ற பொறுப்புணர்ச்சி கூட மிஷ்கினின் திரைப்படங்களை விஷேச கவனிப்புகுரிய திரைப்படங்களாக மாற்றுகிறது.. அது தவிர்த்து இந்தத் திரைப்படம் தவறுகளை மன்னிப்பதற்கு கற்றுக் கொடுப்பதாலேயே பிசாசாக இருந்தாலும் இது புனிதமாகிறது..

இந்த திரைப்படத்தில் எல்லோரது நடிப்பிலும் பெரும்பாலும் மிஷ்கின் தெரிகிறார் என்பதால் படத்தில் நடிப்பை பற்றி பேச பெரிதாக ஒன்றும் இல்லை.. இருந்தாலும் அந்தக் குறையையும் மீறி ஆங்காங்கே நடிப்பில் ஈர்ப்பவர்கள் இரண்டே பேர்.. ஒன்று பவானி என்னும் பேயாக வரும் ப்ரயகா மார்ட்டின்.. இவருக்கு வசனங்கள் கிடையாது. படத்தில் வருவது ஒரே ஒரு காட்சி தான் என்றாலும், அந்த அகல விழி திறந்து நம் மனதுக்குள் எளிதாகவே நுழைந்துவிடுகிறார்.. மற்றொருவர் பவானியின் தந்தையாக வரும் இராதாரவி.. “அம்மாடி… நம்ம வீட்டுக்கு வந்துடுறா…” என்று சொல்லியபடி அவர் மண்டியிட்டபடி செல்லும் அந்த காட்சிகளில் கலங்காத கண்கள் இருக்கவே முடியாது.. படத்துக்கு அரோல் கரோலியின் இசை பக்க பலமாக இருக்கிறது.. அந்த சுரங்கப்பாதை பாடலிலும், அந்தப் பெண்ணின் இறப்பிற்கு பிறகு, நாயகன் துடிக்கின்ற துடிப்பிலும் பிண்ணனி இசை மனதை பிசைகிறது.. ரவி ராயின் கேமரா, இது மிஷ்கினின் படம் என்பதை புரிந்து கொண்டு இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து படம் பிடித்திருக்கிறது… இது தவிர்த்து மது, சிகரெட் இவைகளுக்கு எதிரான கருத்துக்களை லாவகமாக படத்தில் திணித்து இருப்பது, குடிகாரக் கணவனை சித்தரிப்பது, வாகனம் ஓட்டும் போது இருக்க வேண்டிய கவன உணர்வைப் பற்றி ஒரு நொடியேனும் சிந்திக்க வைத்தது என பல நல்ல விசயங்களையும் படத்தின் கதையோடு உறுத்தாத வண்ணம் சேர்த்திருப்பதும் பாராட்டபட வேண்டிய அம்சம்.

இந்த திரைப்படத்தில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை.. சில குறைகள் இருக்கின்றன… ஒரு சாதாரண Opener தொலைந்ததற்கு நாயகன் மிரளத் தொடங்குவதில் இருந்து, பேயைக் கண்டு அவர்கள் நடுங்கும் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் பெரும் கேலிக்கூத்தாகவே இருக்கிறது. அது போன்ற காட்சிகளில் எல்லாம் அச்சத்துக்கு பதிலாக நகைப்பே தோன்றுகிறது.. ஆனால் பேயை விரட்டுவதற்காக அவர்கள் கையாளும் முயற்சிகளில் இருந்து, படத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது.. அடுத்து வரும் காட்சிகள் எல்லாமே பரபரவென்று செல்கிறது.. இரண்டாம் பாதி முழுவதுமே மிஷ்கினின் படமாக காட்சியளிக்கிறது.. குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பமாக பார்ப்பதற்கும் இது ஏற்றபடும்.. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒருசில நிமிடமாவது Rash Driving செய்வது தொடர்பான ஒரு  குற்றவுணர்ச்சியையும் இப்படம் தோற்றுவிப்பதில் தவறவில்லை. எனவே ‘அரண்மனை’ காலத்து பேய்களையே பார்த்து வரும் நமக்கு இந்த மிஷ்கினின் “பிசாசு” எந்த வகையிலும் ஏமாற்றம் தராது என்பதால் தைரியமாக கம்பளம் விரித்து வரவேற்கலாம் இந்த பிசாசை.


No comments:

Post a Comment