Monday, 29 December 2014

கப்பல்:


சமீபத்திய இரண்டு படங்கள் என்னை மிகப்பெரிய மன-அழுத்தத்துக்கு உள்ளாக்கின. அதிலொன்று இந்த “கப்பல்”. வெள்ளித் திரை திரைப்படத்தில் வசனகர்த்தா விஜி எழுதிய ஒரு வசனம் வரும். “இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணி, இந்த மாதிரியான காட்சிகளை திரைக்குழுவினர் வைக்கிறார்கள்” என்று கேட்டிருப்பார்.. ஆனால் இப்பொழுது இந்தப் படிமநிலை இன்னும் சற்று முன்னேறி, அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது.. “படம் எடுப்பவர்கள் எல்லாம் பார்வையாளரை என்னவாக எண்ணிக் கொண்டு படம் எடுக்கிறார்கள்..??” என்ன சொன்னாலும் அவன் கேட்டுக் கொண்டு போய்க்கொண்டே இருப்பான் என்று எண்ணுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வது கொஞ்சம் கூட தவறில்லை என்று எண்ணும்படி தான் நம் ஆட்களின்(பார்வையாளர்களின்) நடவடிக்கைகளும் இருக்கிறது.


இத்திரைப்படம், மிகப்பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்ததற்கு காரணம், இந்தப் படம் பார்த்து முடிக்கும் போது எனக்கு என் மீதே மிகப்பெரிய சந்தேகம் வந்துவிட்டது.. ஒரு வேளை நான் நகைச்சுவையுணர்ச்சியே இல்லாத ஒரு ஜடமாகவோ அல்லது கரிய சிந்தனைகள் மட்டுமே புதைந்திருக்கும் ஒரு சைக்கோவாகவோ மாறி விட்டேனா..?? என்று என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்கு என்னை இந்தப்படம் தள்ளி இருக்கிறது.. குறைந்தபட்சம் ஒரு தமிழ் சினிமாவை ரசிப்பதற்கு கீழ்கண்ட நான்கு விதமான மனநிலைகளில் ஏதேனும் ஒன்றாவது வேண்டும் போலும்.. அதில் முதலாவது ஒரு ஐந்து பத்து நண்பர்களோடு திரையரங்கிற்கு சென்று, கதையில் நாயகன் தோன்றிய சில நிமிடங்களிலேயே, முகம் கூட தெரியாத அந்த இருட்டுவெளியில் வெற்று கூச்சல்களாலும், சீல்கைகளாலும் தன் நண்பர்களுக்கு மத்தியில் மட்டுமோ, முடிந்தால் ஒட்டுமொத்த திரையரங்கிலோ தன்னையும் ஒரு நாயகனாக பிம்பப்படுத்திக் கொள்ளும் மனநிலை நமக்கு வேண்டும். அல்லது, தனக்கு விருப்பமான பெண்ணுடன் தனக்கு விருப்பமான இடத்தில் அமர்ந்து கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாத மனநிலை நமக்கு வேண்டும். இந்த மனநிலை கொண்டவர்களது கோரிக்கை ஒன்றுதான். படம் அதீத மவுனமாகவோ அல்லது அந்தரங்கங்களை பேசுவதாகவோ இருக்கக்கூடாது.. அப்படியிருக்கும் பட்சத்தில் பிற பார்வையாளர்களின் கவனம் சிதறுவதால் இவர்களுக்கு வருத்தம் கொடுக்கும் மனநிலை அது அல்லது கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி திரையரங்கில் தஞ்சம் அடைந்தவன் என்கின்ற மனநிலை இருக்க வேண்டும்.. அதுவும் இல்லையென்றால், தன் மனைவி மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு, அவர்களை கண்ணும் கருத்துமாக கண்காணித்துக் கொண்டே, கடந்த ஒருவார அல்லது ஒருமாதமாக படிக்காமல் விட்ட ஒருவரி ஜோக்ஸை எல்லாம் மொத்தமாக கொட்டக் கூடியதாக திரைப்படம் இருக்க வேண்டும் என்னும் மனநிலை இருக்க வேண்டும்.. இவர்களதும், ஒரே ஒரு நிபந்தனை தான்.. நான் குடும்பமாக மகன், மகள், மனைவியுடன் படம்பார்க்க வந்தவன், உங்கள் படம் ஒழுக்கம் சார்ந்த கொள்கைகளை மீறவேகூடாது, ஏற்கனவே காதலிக்க கற்று கொடுப்பதற்கும், ஓடிப் போக கற்றுக் கொடுப்பதற்கும்(திரைப்படத்தில் மட்டும்), தம்மடிக்க, தண்ணியடிக்க கத்துக் கொடுப்பதற்கும்(வாழ்க்கையிலும் கூட), குலுங்கி ஆடும் குத்துப் பாடல்களுக்கும் நாங்கள் எங்கள் ஒழுக்க விதிகளை தளர்த்தி இருக்கிறோம்.. இன்னும் அதிகமாக எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள் என்கின்ற மனநிலை அது.. இப்படி மேற்சொன்ன எந்த மனநிலையுமே இல்லாமல், ஒரு நல்ல தமிழ்படம் பார்க்க வேண்டும் என்கின்ற தப்பான மனநிலையில் நீங்கள் திரையரங்கில் போய் உட்கார்ந்தீர்கள் என்றால்…?? நீங்கள் அய்யோ… பாவம்..!!!!!

இந்தப் படத்தின் கதை என்ன..?? என்று பார்த்தால், ஜீவா, சந்தானம், வினய் நடிப்பில் வெளிவந்த என்றென்றும் புன்னகை என்கின்ற திரைப்படத்தின் அதே ஒருவரி கதைதான் இந்த திரைப்படத்தின் கதையும். காதலிக்கவும் கூடாது, கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது என்று சபதம் எடுக்கும் நண்பர்கள்.. அதை தொடர்ந்து நாயகனுக்கு வரும் காதல்.. அதனால் வரும் விளைவுகள்.. மொத்தப்படமும் இந்த மூன்று வரிதான்.. கதையென்று பார்த்தால் உளவியல் ரீதியிலான ஒரு பிரச்சனையை மையமாக வைத்திருக்கும் கதை.. ஆனால் அதை படமாக கொடுத்தவிதத்தில் தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைபடுத்தி இருக்கிறார்கள்.

என்றென்றும் புன்னகை மிக அற்புதமான படமில்லை என்றாலும் கூட, அதில் ஓரளவிற்காவது உண்மையும் உணர்வும் இருக்கும்.. ஒரு தர்க்க ரீதியிலான நேர்மை இருக்கும்.. ஜீவாவிற்குள் இருக்கும் ஈகோ மிகக் கச்சிதமாக வெளி கொண்டுவரப்பட்டு இருக்கும்.. இந்த கதை சமூகத்தில் ஒன்றும் நிகழாத நிகழவே வாய்ப்பில்லாத கதை என்று நான் சொல்லவரவில்லை.. ஏன், இப்படி கல்யாணம், காதல் இரண்டுக்கும் தடைவிதித்த நண்பர்களையும் நான் கடந்து வந்திருக்கிறேன்.. ஆனால் அந்த நண்பர்களிடம் நான் பார்த்த உணர்வும் வலியும் கொஞ்சம் கூட இல்லாமல், முட்டாள்தனமான, கோமாளித்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே கப்பல் முழுவதும் நிரம்பி இருக்கிறது.. படத்தில் வரும் எந்தக் காட்சியையுமே நல்ல கற்பனை என்ற வகைப்பாட்டிலோ, அல்லது யதார்த்தம் என்கின்ற வகைப்பாட்டிலோ சேர்த்துக் கொள்ளவே முடியவில்லை.. ஏதேனும் காட்சிகளை கடினமான நினைவு கூர்ந்து, அவை எவ்வளவு மொக்கையாக இருந்தது, என்பதை விளக்கலாம் என்று பார்த்தால், என் அதிர்ஷ்டம், படம் பார்த்து ஒரே நாளில் எனக்கு எல்லா காட்சிகளுமே மறந்துவிட்டது… என் ஞாபக சக்திக்கு நன்றி..

மொத்தத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றி ஒன்று சொல்லலாம்.. பெரும்பாலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு புத்திசுவாதீனம் இல்லாத கதாபாத்திரம் எப்போதும் அனுமதிக்கப்பட்ட ஒன்று… அது பெரும்பாலும் கதாநாயகியாக இருப்பது தமிழ் சினிமா தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கு.. ஆனால் இந்த தொன்று தொட்டு வரும் வழக்கத்தை உடைத்திருக்கிறது இந்த கப்பல் திரைப்படம்.. எப்படி என்றால், படத்தில் வரும் எல்லா கதாபாத்திரமுமே புத்தி சுவாதீனம் இல்லாத கதாபாத்திரங்கள்.. இப்படி ஒரு திராபையான திரைப்படத்தை தயாரிக்க முன்வந்ததும் அல்லாமல், படத்தைப் பற்றி பேசும் போது “ படத்தைப் பாருங்கள், ஒரு காட்சிவிடாமல் எல்லாக் காட்சிகளுக்கும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள்..” என்று திருவாய் மலர்ந்த இயக்குநர் சங்கர் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விளைவதெல்லாம், “நீங்கள் படுவேகமாக போய்க் கொண்டிருக்கிறீர்கள் சார்.., நாங்கள் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் வரவில்லை.. இந்தப் படத்தை சிரித்துக் கொண்டே பார்ப்பதற்கு தேவையான மனப்பிறழ்வை நாங்கள் இன்னும் அடையவில்லை.. கொஞ்சம் காத்திருங்கள்.. இன்னும் சில காலத்தில் அந்த உன்னத நிலையை அடைந்துவிடுவோம்” என்பதே…

என்னைப் பொறுத்தவரை, திரைப்படத்தின் முதல் வெற்றி என்பது, அது திரைப்படம் அல்ல என்று நம்பவைப்பதில் தான் தொடங்குகிறது என்பேன்.. ஆனால் அந்த சிக்கலான விதிமுறைகள் பெரும்பாலும் நம் தமிழ் சினிவாவிற்கு பொருந்தாது.. தமிழ் சினிமா தமிழ் சமூகத்தின் பணத்தை அதிகமாக தின்று கொழுத்திருக்கிறது என்பதனை விட, அது தமிழ் சமூகத்தின் நேரத்தை அதீதமாக தின்று விழுங்கி இருக்கிறது என்பது தான் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.. அப்படி மீண்டுமொரு இரண்டேகால் மணி நேரத்தை விழுங்கப் பார்க்கும் முயற்சி தான் இந்த கப்பல். நான் கதை கேட்டல் மற்றும் கதை பார்த்தல் என்ற நிகழ்வுக்காக அமர்ந்திருக்கிறேன்.. அங்கு என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, ஒரு முட்டாள்தனமான கதை எனக்கு சொல்லப்படுகிறது.. அந்த இரண்டே கால் மணி நேரமும் சகித்துக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பது என்பது உண்மையாகவே ஒரு மிகப்பெரிய சவால்.. சொல்லப்போனால் அந்த சவாலில் நான் தோற்றிருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் இந்தத் தோல்வி எனக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறது..


No comments:

Post a Comment