Wednesday 13 August 2014

கிம் கி டுக் வரிசை – 6

                                                                                                     Kim Ki-duk

BAD GUY:

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் கிம் கி டுக் தொடர்பான பதிவு இது.. படம் பார்த்துவிட்டு அதே மனநிலையிலேயே உடனே பதிவை எழுத வேண்டும் என்று பல முறை முயற்சி செய்தும் முடியாமல் போய், இப்போதாவது நிலைமை கைகூடி இருப்பதை எண்ணி மகிழ்ச்சியே… இத்திரைப்படத்தை குறைந்தது ஒரு ஆறு ஏழு முறையாவது நான் பார்த்திருப்பேன்… ஐந்தாவது முறையாக நான் பார்க்கும் போது எப்போதும் இல்லாத அளவுக்கு பல இடங்களில் அழுகையின் ஆரம்பகட்ட விசும்பல்கள் முட்டிக் கொண்டு வந்ததை என்னால் உணர முடிந்தது… ஆக நான்கு முறை நான் பார்த்த போது தவறவிட்ட ஏதோ ஒன்றில், ஐந்தாவது முறை பார்க்கும் போது மனம் லயித்து போய், கனத்து போய் அது அழுகையாக பீறிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது…. ஒரு சாதாரணமான ஒன்றரை மணி நேரத் திரைப்படமே தனக்குள் பல மர்மங்களை புதைத்துக் கொண்டு, அவைகளை நமக்குப் புரிபட விடாமல் நம்மோடு கண்ணாமூச்சி ஆடும் போது, நாம் ஒவ்வொருவரும் வாழ்கின்ற இந்த நீண்ட, மிகப்பெரிய பிரம்மாண்டமான வாழ்க்கை தனக்குள் எத்தனை மர்மங்களை புதைத்து வைத்திருக்கும்…!!!!! திரைப்படத்தின் மர்மங்களை புரிந்து கொள்வதற்காவது நமக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…. என்று விரும்பிய வரை வாய்ப்புகள் கிடைக்கின்றன…. ஆனால் இந்த பிரம்மாண்டமான இருண்மையும் ஒளியும் நிறைந்த வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரே ஒரு வாய்ப்புதான்…. நாம் அதில் என்ன புரிந்து கொள்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையை பற்றிய நமது கருதுகோள்… நாம் வாழ்ந்து கடந்த நிமிடங்களை, மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்து நாம் தவறவிட்ட தருணங்களில் இருந்து புதுவிதமான புரிதல்களைப் பெறுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவது தான் இந்த வாழ்க்கையின் ஆகப்பெரிய துரதிஷ்டம்…


ஒரு சாதாரண மனிதன் எத்தனை விதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும்…. அவனது சொந்த அனுபவத்தில் இருந்து ஒரு வாழ்க்கை… சுற்றத்தின் அனுபவத்தில் இருந்து ஒரு இரண்டு மூன்று வாழ்க்கைகள்… கேள்வி ஞானத்தின் மூலமாக ஒரு இரண்டு மூன்று வாழ்க்கைகள்… ஆக இப்படி ஒரு ஏழு எட்டு வாழ்க்கை முறையை அவன் அரைகுறையாக அறிந்திருப்பான்…. அரைகுறையாக மட்டுமே அறிந்திருப்பான்.. ஏனென்றால் அவன் தன் வாழ்க்கை முறையையே விவாதித்திருக்க மாட்டான்… அவன் விவாதிக்க இங்கு சினிமா நாயகிகளின் கிசுகிசுக்கள், அரசியல், விளையாட்டு, வேலை பளு என வேறுவேறு கருப்பொருள்கள் இருக்கின்றன… தன் இறந்த காலத்துக்குள் சென்று அதன் உயிர்ப்பான சம்பவங்களை மேலெழுப்பி அவன் ஆராய மாட்டான்…. அப்படி ஆராய்ந்தாலும் அது பெரும்பாலும் பாலியல் இன்பம் தொடர்பான மீள் காணலாகவே இருக்கும்.. அல்லது இந்த இயந்திரகதி வாழ்க்கை அதற்கு அவனை அனுமதிக்காது… ஆக அவன் கடந்துவந்த அந்த ஆறேழு வாழ்க்கை முறையை அவன் அரைகுறையாக தெரிந்து வைத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.. ஆனால் கலைஞர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய அனுகூலம் இதுதான்… அவர்கள் எல்லா விதமான வாழ்க்கையையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாழ்ந்து பரிட்சீத்துப் பார்க்க முடியும்… நல்லவனாக கெட்டவனாக, காமெடியனாக, முட்டாளாக, புத்திசாலியாக, நயவஞ்சகனாக, பேராசைக்காரனாக, பொறாமை உடையவனாக, திருடனாக, போலீசாக, முதலாளியாக, தொழிலாளியாக, ரவுடியாக, கற்பழிப்பவனாக, கற்பழிக்கப்படுபவளாக, குடிமகனாக, அரசனாக, கொலைகாரனாக, கொலை செய்யப்படுபவனாக….. இப்படி எத்தனை எத்தனையோ வாழ்க்கை முறைகள்…. இதில் இந்த கிம் கி டுக் என்னும் மாகலைஞன் சற்றே வித்தியாசமானவர்… இவரின் படங்கள் பெரும்பாலும் பொது சமூகம் குற்றமாக கருதும் செயல்களை செய்பவர்களின் மனநிலைகளையே பின்புலமாகக் கொண்டு ஆராயும்…. அதை நாம் அவரது முந்தைய படங்களிலும் கண்டோம்… ஆக அவர் இந்த குற்ற பிண்ணனி கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை குறைந்தபட்ச கால அளவேனும் வாழ்ந்து, பரீட்சித்துப் பார்த்தே வடித்திருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை… எனவே ஒருவித எதிர்மறை தன்மை கொண்ட கதையான இந்த Bad Guy திரைப்படத்தையும், அதிலிருக்கும் ஒரு நேர்மறை தன்மையையும் இணைத்து ஒருவிதமான விவாத மனநிலையில் அணுகுவதே இந்தப் பதிவின் நோக்கம்….

இவ்வளவு நீண்டதொரு முன்னுரை எதற்கு என்று கேட்டால், அது இந்த “BAD GUY” என்ற திரைப்படத்துக்கு அத்தியாவசியமாகப் பட்டது… இந்த முன்னுரை இல்லாமல் நான் படத்தின் முதல் காட்சியில் இருந்து விளக்கத் தொடங்கினால், நீங்கள் முகத்தை சுழித்துக் கொண்டு வேறுதளத்திற்கு செல்வதோடு, என் தளத்துக்கு வருவதையே அடியோடு நிறுத்திவிடுவீர்களோ என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு… சரி கதைக்குள் செல்வோம்… அதற்கு முன் உங்களுக்கும் எனக்குமான வழக்கமான ஒரு கேள்வி விவாதத்தில் இருந்தே இந்த படத்தை தொடங்குகிறேன்… கேள்வி இதுதான்…. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் சொல்லுங்கள்.. நீங்கள் எப்போதாவது தனிமையில் இருக்கும் போது, குற்றம் செய்யும் மனநிலை உங்களுக்குள் தலை தூக்குவதை உணர்ந்திருக்கிறீர்களா…? அது சமூகத்தால், குற்றம் என்று அங்கீகரிக்கப்பட்ட எந்த மாதிரியான குற்றமாகவும் இருக்கலாம். அந்த குற்றச் செயலை நீங்கள் செய்திருக்க வேண்டும் என்பது இல்லை…. அந்த எண்ணத்தை உணர்ந்திருக்கிறீர்களா…? என்பது மட்டுமே என் கேள்வி…. உணர்ந்திருந்தாலோ…? அல்லது உணர்ந்ததே இல்லை என்றாலோ…? ஏன் நமக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றோ….? ஏன் நமக்கு அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை என்றோ யோசித்து அதற்கான காரணங்களை நீங்கள் கண்டறிய முயன்றிருக்கிறீர்களா…? அப்படி முயன்றிருந்தால் உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கும்… அப்படி ஒரு விசயத்தை யோசிக்கவே இல்லை என்றால் உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்காது…

”ஒரு இளைஞன் ஒர் பெண்ணைப் பார்க்கிறான்… அவள் அவனது கண்களுக்கு மிகமிக அழகாகத் தெரிகிறாள்… விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்கின் மொழியில் சொல்வதென்றால், அவனைப் போட்டுத் தாக்குகிறாள் அந்தப் பெண்… அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்… அதை கவனித்த அவள், என்னைப் பார்ப்பதற்கு கூட நீ தகுதி இல்லாதவன் என்பதைப் போல், ஒரு அறுவறுப்பான முகத்தை அவனுக்கு காட்டி அந்த இளைஞனை வெறுப்பேற்றுகிறாள்… இளைஞன், நான் உன்னை ஒன்றுமே செய்யவில்லையே பார்க்கத்தானே செய்தேன்… என்கின்ற ரீதியிலான ஒருவித கோபத்தில் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து முத்தமிட்டு விடுகிறான்… அவள் அவன் முகத்தில் காறி உமிழ்ந்து அவனை அவமதித்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்று விடுகிறாள்… அவள் மீதான அதீதமான காதலில் இருக்கும் அந்த இளைஞன், அவளை தான் வசிக்கும் இடத்துக்கு நயவஞ்சகமாகக் கூட்டிக் கொண்டு போய் தன் காதலை அவளுக்கு புரியவைக்க முற்படுகிறான்… அவனது தீவிரமான காதலை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் அவளும் அவனை விரும்பத் தொடங்குகிறாள்..“ இதுதான் கதை… உங்களுக்கு பிடித்திருக்கிறதா….? பிடித்திருந்தால் சந்தோசம்…


கதையில் ஒரே ஒரு சின்ன மாற்றம்…. அந்த இளைஞன் தான் வசிக்கும் இடத்துக்கு கூட்டிச் செல்கிறான் என்று சொன்னேனே… அது ஒரு விபச்சார விடுதி… அவளை ஒரு விபச்சாரியாக, பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக மாற்றித்தான் அங்கே கொண்டு செல்கிறான்… கதையில் அதுமட்டும் தான் மாற்றம்… இப்போது உங்களுக்கு கதை பிடித்திருக்கிறதா…? இப்போது நீங்கள் கதை பிடிக்கவில்லை… ச்சீசீசீ… இதென்ன கதை என்று சொன்னீர்கள் என்றால், உங்களுக்கு பிரச்சனை கதையில் இல்லை… கதை நடக்கும் இடத்தில் தான்… இதே செயலை பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும், ஒரு சாதாரணன் செய்திருந்தால், நமக்கு மிகப்பெரிய அதிருப்தி கதையில் ஏற்படாது… அது போன்ற திரைப்படங்களை நாம் தமிழில் கூட கண்டும் இருக்கிறோம்… ஆக பாலியல் தொழில் தொடர்பான நமது புரிதல் தான் நம்மை இந்தக் கதைக்கு எதிரான தளத்தில் நிறுத்தி கேள்வி கேட்க வைக்கிறது… சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை விபச்சாரத்தில் தள்ளுவதா…??? என்கின்ற கேள்விதான் அதற்கு முத்தாய்ப்பாக எழுவது… அந்த வாழ்க்கை ஒரு தரக்குறைவான அறுவறுப்பான வாழ்க்கை என்பது தான் நம் எண்ணம்…. ஆனால் நாயகனின் பார்வையில், அது அவர்களது வாழ்க்கை…. மிக சந்தோசமான வாழ்க்கையாக இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையே… நீங்கள் அதாவது நாம், அந்த வாழ்க்கையை வெறுத்தாலோ விரும்பினாலோ அது அவர்களது வாழ்க்கையில் துளி அளவும் வித்தியாசத்தைக் கொண்டு வரப் போவதில்லை… அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் அவனது மனதுக்கு பிடித்தமானவளை அவன் சேர்த்துக் கொள்கிறான்…. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்டால்….? அவனுக்கு நம்முடைய பதில் என்ன…?


விருப்பமில்லாத ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக எப்படி நீ ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்றலாம்…? என்று கேள்வி கேட்கலாம்… இங்கு வந்த எல்லாப் பெண்களுமே முதலில் அப்படி கொண்டுவரப்பட்டவர்கள் தானே… ஆனால் இன்று அவர்கள் அந்தத் தொழிலுக்கு பழக்கப்பட்டவர்களாக அதை ஏற்றுக் கொள்பவர்களாக மாறிவிட்டார்களே… அதுபோல இவளும் மாறிவிடுவாள் என்பதான நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பதில் சொன்னால், அதையும் நம் சராசரி மனதால் முற்றிலுமாக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளமுடியாது தானே… சரி.. இப்பொழுது நான் நயவஞ்சகமாக கூட்டி வந்த பெண்ணைப் பற்றி மட்டுமே உங்களுடைய கவலை இருக்கிறதே, அவளை போல பல பெண்கள் இங்கு ஏற்கனவே இருக்கிறார்களே… அவர்களைப் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன…? சரி அவளோடு வாழ வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம்.. அவளை ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல… அவள் என்னை ஒப்பிடுகையில் சமூகத்தில் உயர்ந்த படிநிலையில் இருப்பவள்… அதையே தான் அன்று அவளது பார்வையும் எனக்கு உணர்த்தியது…. அவளோடு வாழ்வதற்காக, அதே படிநிலைக்கு செல்ல இந்த சமூகம் என்னை அனுமதிக்குமா…? அல்லது அதற்கான வாய்ப்பளித்திருக்கிறதா…? அப்படி ஒரு வாய்ப்பளித்தாலும், அந்த நிலைக்கு நான் வந்தாலும், பிறரை நடத்துவதைப் போலவே அது என்னையும் நடத்துமா..? இப்படி சமூகத்தின் படிநிலையில் என்னைப் போன்ற மக்கள் உயர்ந்து வருவதற்கு பெரிதும் அனுமதிக்காமல், வாய்ப்பளிக்காமல், அவர்கள் இருக்கின்ற அந்தஸ்தில் இருந்து கீழான நிலைக்கு செல்வதற்கு மட்டும் வாய்ப்புகளையும் அநேக அனுமதிகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறதே இந்த சமூகம் அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்…. நாங்களும் பிறக்கும் போதே, நீங்கள் அவமானம் எனக் கருதும் அறுவறுப்பாக நினைக்கும் இந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் இல்லையே…. ஓரளவுக்கு சமூகத்தால் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்து, பின்பு இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டவர்கள் தானே…. அப்படி நாங்கள் தள்ளப்படும் போது உங்களுடைய நியாயத்தின் செங்கோல் யாரை அடக்கிக் கொண்டு ஆண்டு கொண்டு இருந்தது, ஆக எப்படி நாங்கள் தரம் தாழ்ந்து வந்தோமோ, அதே போல அவளது தரத்தையும் கீழே இறக்கி, அவளை எனக்குரியவளாக நான் ஆக்கிக் கொள்கிறேன்.. இதில் என்ன தவறு..? என்று கேட்டால், அதற்கு நம்மிடம் பதில் உண்டா….??? அவனிடம் இறுதியாக ஒரே ஒரு கேள்வி கேட்கலாம்… ” உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களுக்கு இதே கதி நேர்ந்தால் ஏற்றுக்கொள்வாயா…? ” அதற்கு அவன் சொல்வான், “என் குடும்ப பெண்கள் ஏற்கனவே அங்கே தான் இருக்கிறார்கள்.. இவளையும் என் குடும்பத்து பெண்ணாக மாற்றவே அங்கு அழைத்துச் செல்கிறேன் ” என்று… இந்தக் கதையின் நாயகன் இது போன்ற ஒரு மனநிலையில் இருப்பவன் தான்….


பெரும்பாலும் ஒரு குற்றவாளியை நாம் பார்ப்பது, அந்த குறிப்பிட்ட குற்றம் நடந்த சம்பவத்தை ஒட்டியே…. அதுவும் பாதிக்கப்பட்ட நபரின் கோணத்தில் இருந்தே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு… அந்த குற்றத்தை இளைப்பதற்கு முந்தைய நிமிடம் வரை, அந்தக் குற்றவாளி ஏதோ ஒன்றினால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறான்…. மிகப்பெரிய மனப்போராட்டங்களை கடந்து வந்திருக்கிறான்… என்பதை நாம் கவனத்தில் கொள்வதே இல்லை… பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில், நாம் அந்தக் குற்றவாளிகளை வன்மையாக தண்டிப்பதற்கு காட்டும் முனைப்பில் ஒரு பகுதியையாவது, அவர்கள் எந்த மனநிலையில் அந்தக் குற்றத்தை செய்தார்கள்… அந்த மனநிலைக்கு செல்லாமல் பிற மக்களை தடுப்பதற்கு, நாம் எடுக்க வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வதில் காட்டி இருப்போமா…? என்பது கேள்விக்குறியே… ஆணவத்தாலும், வறட்டு கெளரவத்தினாலும், திமிராலும் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் இதற்கு விதிவிலக்கு....

திரைப்படத்தில் அந்த இளைஞனின் நயவஞ்சக வலையில் அந்த இளம்பெண் விழுகின்ற இடம் மிகமிக முக்கியமானது… உணர்ச்சிவசப்பட்டு தன்னை முத்தம் செய்தவனை தண்டித்த அவளும் கூட ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு குற்றம் செய்கிறாள்…. அது ஒரு புத்தகக்கடையில் அந்த இளைஞனின் குழுவினர், ஒரு நபரிடம் இருந்து ஒரு மணி பர்ஸை திருடி, இவளது பார்வையில் படும்படி அதை வைத்து விட்டு நகர்ந்து விட… ஒரு பர்ஸ் மட்டும் தன் அருகே இருக்க, வேறு யாரும் இல்லை என்பதை பார்த்து விட்டு அவளும் அந்தப் பர்ஸை திருடிக் கொண்டு செல்கிறாள்… இறுதியில் அவள் பிடிபட்டு, தன் கடனை அடைப்பதற்காக தன்னையே விற்கும் நிலைக்கு ஆளாகிறாள்… இது அவள் இரண்டாவதாக செய்த குற்றத்துக்கான தண்டனை.. ஆக அவள் செய்த முதல் குற்றம்… அந்தப் புத்தகக்கடையில் ஒரு புத்தகத்தில் இருந்து களவி நிலையில் இருக்கும் படத்தை யாருக்கும் தெரியாமல் கிழித்துக் கொண்டு வருவது…. அது மறைமுகமாக அவளுக்கு இருக்கும் பாலியல் மீதான ஆர்வத்தை காட்டுவதோடு, அவளது பொருளாதார இயலாமை, அந்த புத்தகத்தை வாங்க முடியாமல் செய்வதால், அவள் தன் விருப்ப பக்கத்தை மட்டும் கிழித்துக் கொள்கிறாள் என்பதையும் குறிப்பால் உணர்த்துவது.. இப்படி அவளது பொருளாதார இயலாமை அவளை அங்கு குற்றவாளியாக ஆக்குகிறது… ஆக இங்கு எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் குற்றவாளிகள் தான்…. இப்படி நம்முடைய சுய குற்றங்களை கண்டு கொள்ளாமல் சென்று விடும் நாம், பிறருடைய குற்றங்களை அப்படி விட்டுவிடுவது இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே வைக்கப்பட்ட காட்சியோ அது என்றே எனக்குத் தோன்றியது…. ஆக அவள் பாலியல் தொழிலாளியாக மாறுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் அவளும் கூட காரணமாக இருக்கிறாள் என்பதற்கான காட்சித் தெளிவையும் கொடுக்கிறது அந்தக் காட்சி…


அதுபோல முதலாவது காட்சியில் கொடுக்கப்படுகின்ற முத்தம் காமத்தின் உச்சகட்ட வெறியில் கொடுக்கப்படும் முத்தம் அல்ல… ஏனென்றால் அவன் ஒரு பாலியல் தரகன்.. அவனுக்கு தன் காமத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள எத்தனையோ வழிகள் உண்டு… அப்படி இருந்தும், அந்த பொது வெளியில் ஆபத்துக்குள்ளான வகையில் அவளை முத்தமிடுவது என்பது அவமானப்படுத்தியதற்கான பரிசு… அல்லது பரிசுத்தம் என்று நினைக்கும் உடலை அசுத்தப்படுத்துவதற்கான முயற்சி… இதை கிம்கியின் பல படங்களில் காண முடியும்… கொரியாவும் கிட்டதட்ட நம் கலாசாரத்துக்கு ஒத்துப் போகும் ஒரு நாடு தான்… கொரியாவில் பணியில் இருக்கும் என் நண்பன் ஒருவனிடம் கேட்டேன்.. படங்களில் வருவது போல் பாலியல் தொழில் அங்கு சட்டபூர்வமான தொழில் அல்ல என்றும்… ஆனால் சட்டபூர்வமாக நடப்பதைப் போலத்தான் அங்கு அந்தத் தொழில் நடக்கிறது என்றும் அவன் சொன்னான்… ஆக அங்கு வாழும் பெண்களுக்கும் தன் உடலை முதன்முறையாக தன் கணவனுக்கோ காதலனுக்கோ தான் கொடுக்க வேண்டும் என்கின்ற ரீதியிலான கொள்கை கோட்பாடுகளும் உண்டு் என்பதையும் விளக்கும் காட்சி அமைப்பும்  படத்தில் உண்டு… அந்த இளம் பெண்ணுக்கு உடலுறவு சார்ந்த இச்சைகள் இருந்தும், அவளது காதலன் அவளை ஒரு ஓட்டலுக்கு அழைக்கும் போது கோபத்துடன் மறுத்துவிடுகிறாள்… பின்பு ஒரு கட்டத்தில் தன் உடல் வலுக்கட்டாயமாக வேற்று ஆடவன் ஒருவனால் சூறையாடப்படும் சூழல் வரும் போது, தன் காதலனுடன் முதலில் உடலுறவு கொள்ள கோரிக்கை வைக்கும் இடம் நுட்பமானது… ஆனால் அதைத் தடுத்து, அவளை மீண்டும் விடுதிக்கு அழைத்து வரும் அந்த முரட்டு இளைஞனின் செயலோ அதைவிட நுட்பமானது…. தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலியை மற்றொரு ஆணுடன் படுக்கைக்கு அனுப்பி விட்டு, கடைசி காட்சியில் வெளியில் காத்திருக்கும் அந்த முரட்டு இளைஞனின் செயல் புரிதலுக்கு அப்பாற்பட்டது… உடலை சார்ந்தே பெரும்பாலான காதலும் கல்யாணங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் உண்மையான அன்பு என்பதற்கு நாம் போட்டு வைத்திருக்கும் எல்லைக் கோடுகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை இருப்பதை படம் பல இடங்களில் உணர்த்துகிறது… ஜி.நாகராஜனின் ”நாளை மற்றொரு நாளே ” நாவலில் ஒரு காட்சி வரும்… தன் கணவனுடன் படுத்திருக்கும் அந்த பாலியல் தொழில் செய்யும் பெண்… அவர்கள் இருவருக்கும் இடையிலான சரசத்தின் ஊடாகவே, அன்றைய தினம் அவளிடம் வந்து சென்ற இளைஞனின் செயல்களைப் பற்றி கதைத்துக் கொண்டு இருப்பாள்… ஏனோ இந்தக் காட்சி எனக்கு ஞாபகத்தில் வந்து வந்து சென்றது… பரத்தையின் உடல் அசுத்தமானது… காதலியின் உடல் புனிதமானது என்கின்ற ரீதியில் அற்ப உடலின் மேல் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளை உடைக்கின்ற காட்சி அது…

இந்தக் கதையையும் காட்சியமைப்பையும் பார்க்கும் போது, பெண்ணை உழைக்கச் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் இவர்களெல்லாம் ஆண்களா…? என்கின்ற ரீதியிலான கலாச்சார கேள்வியும் வரத்தான் செய்தது.. ஆனால் அதற்கு என்னால் பதில் கண்டுபிடிக்கவே முடியவில்லை… படத்திலாவது அந்தப் பெண்ணிற்கு அடுத்த கட்ட துன்பங்கள் வராமல் தடுக்க நாயகன் பல இடங்களில் ரத்தம் சிந்தி அவளை காப்பாற்றுகிறான்….!!! ஆனால் நாவலில் அது போன்ற அம்சம் கூட இருந்ததாக நினைவில்லை….

இது காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதற்கு அத்தாட்சியாக அமைவது, அந்த இளம் பெண் விபச்சார விடுதிக்கு சென்ற பின்னரும், அவளை பின்தொடரும் இரண்டு வெவ்வேறு நிறத்திலான காதல் சரடுகள் தான்… ஒருவன் அந்த முரட்டு இளைஞன், மற்றொருவன் அவனது கையாள்… அந்த கையாளும், தான் அந்த இளம்பெண்ணை விரும்புவதாக சொல்லிக் கொண்டே இருப்பான்… ஆனால் அவனது காதல் என்பது பெரும்பாலும் அவளது உடல் சார்ந்தே இருக்கும்… அவள் மன அமைதி இல்லாமல் இருக்கின்ற போதும் கூட அவளுக்கு ஆதரவாக பேசுபவன் போல் நடித்து, அவளை உறவுக்கு அழைப்பான்… அவள் மறுத்ததும் அவளிடம் கடுமையாக நடந்து கொள்வான்.. ஆனால் அந்த முரட்டு இளைஞனின் காதலோ அவளது அன்பை பெற முயற்சி செய்வதாகவும், அவளை அடுத்தகட்ட ஆபத்துகளில் இருந்து தடுப்பதாகவும் தான் பெரும்பாலும் இருக்கும்… அவன் அவளை கண்காணித்துக் கொண்டே இருப்பான்… முதலாவதாக அவளிடம் செல்லும் வாடிக்கையாளன் அவளிடம் முரட்டுத்தனமாக நடக்க முயற்சிக்கும் போது, தன் ஆட்களை உள்ளே அனுப்பி இடையூறு செய்து, அவனை மிரட்டி வெளியே அனுப்பி, அவளை பாதுகாப்பான்… இரண்டாவது முறையாகவும் அவளிடம் செல்லும் வாடிக்கையாளரை தடுக்க முயன்று அந்த முயற்சி தோற்றுப் போகும் போது, இருபுற கண்ணாடியின் வழியாக அவளது வேதனையை கண்டு மனம் வருந்தி தன்னையே தண்டித்து கொள்வதோடு மட்டுமின்றி, அவளை கஷ்டப்படுத்திவிட்டு களைத்துப் போய் வெளியே வரும் அந்த வாடிக்கையாளரை நையப் புடைத்து எடுப்பான்…  அது போல அந்த இருபுற கண்ணாடியின் வழியாக அவன் அவளை காண்பது என்பது ஒருவகையான வாயரிஸ்டிக் இன்பம் என்பதை சொல்லும் காட்சி… இப்படி பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களுக்காக வருந்திக் கொண்டே எப்படி நம்மால், அதே பெண்களைக் கொண்டு எடுக்கப்படும் போர்ன் திரைப்படங்களை ரசிக்கமுடிகிறது….??? என்பதான கூர்மையான கேள்வியை நமக்குள் ஏற்படுத்தும் காட்சி அது… இந்த மனம் எவ்வளவு விசித்திரமான ஒரு படைப்பு…


இந்த திரைப்படத்திலும் அந்த முரட்டு இளைஞன் கடைசி இரண்டு காட்சிகள் தவிர்த்து வேறு எங்குமே பேசுவதே இல்லை…. தன் நண்பனே தன் காதலியிடம் தன்னை காட்டிக் கொடுக்கும் போதும், தன்னிடம் தன் காதலியை தான் விரும்புவதாக அவன் சொல்லிவிட்டு சென்று, அவளிடம் உறவு கொள்ளுவதை காண்கின்ற போதும் அந்த முரட்டு இளைஞன் வெளிப்படுத்தும் உணர்ச்சி அசாத்தியமானது… தான் காதலிக்கும் ஒரு பெண் இப்படி கஷ்டப்படுவதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் நண்பன் அவளை தப்பவைக்க முயலும் போதும், அதற்கு நேர் மாறாக தான் காதலிக்கும் பெண் அங்கு இருப்பதில் எந்த தவறும் இல்லை என்கின்ற ரீதியில் செயல்படும் அந்த இளைஞனின் மனம் சற்று விசித்திரமானது தான்… அந்த இளம்பெண்ணுக்கு உண்மை எல்லாம் தெரிந்து இவனை அறைந்து விட்டு சென்ற பின்னர், அவளது படுக்கையறைக்கு சென்று அவளது கைகளை பிடித்துக் கொண்டே அழும் அந்தக் காட்சியில் அவனது காதல் மிக அற்புதமாக வெளிப்பட்டு இருக்கும்…. அதுபோல அந்தப் பெண்ணின் நடிப்பும் ஈடு இணையற்றது… முதன்முறையாக அவள் ஒருவனுக்கு இரையாகும் போதும் அவள் துடிக்கின்ற துடிப்பும், தன் நிலையை எண்ணி நொந்து போய் மது அருந்திவிட்டு, அந்த இளைஞன் மேல் வாந்தி எடுக்கும் காட்சியும், ஜெயிலில் அடைக்கப்பட்டு மரணத்தை முத்தமிட காத்திருக்கும் அந்த இளைஞனிடம் கோபம் கொண்டு சண்டை போடும் காட்சியும் என ஒவ்வொரு காட்சியிலும் அந்தப் பெண்ணின் நடிப்பு மிகமிக பிரத்தேகமானது… இறுதியில் அந்தக் கண்ணாடியின் மறுபக்கம் அவன் அமர்ந்து கொண்டு தான் அங்கு தான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்துவதைப் போல், தன் லைட்டரைக் கொளுத்திக் காட்டுவான்… அவள் அந்தக் கண்ணாடியை உடைத்து எதிரே அவனைக் கண்டுவிட்டு, கோபத்தில் அவனை அடிக்கும் போது, அப்படியே அவளை அள்ளிக் கட்டிக்கொள்ளும் அந்த இடம் உணர்ச்சிகரமானது…


படத்தில் பல இடங்கள் கவித்துவமானவை…. அதில் குறிப்பாக என்னைப் பாதித்த காட்சி, முதன்முறையாக அந்தப் பெண்ணை சந்தித்த அதே பார்க்கில், அதே பெஞ்சில் இருவரும் அமர்ந்திருக்கும் காட்சி… ஆனால் இப்பொழுது அந்த இளம் பெண் அவனது கைகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பாள்… அதில் ஒரு அன்பு மட்டுமே புலப்படும்… இது முதலிலேயே நடந்திருந்தாள்… இவ்வளவு பிரச்சனைகள் தேவையில்லையே என்பதும், இப்படி வாழ்க்கையின் துயரமான சம்பவங்களை திருத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்…!!!??? என்பதுமாக பல எண்ணச் சிதறல்களை கொடுத்த காட்சி இது… அதுபோல டைட்டில் போடும் இடமும் கிம் கியின் படங்களில் பிரத்யேக கவனம் பெறும்…. இந்தப் படத்திலும் அது அப்படியே… அந்த இளம்பெண்ணை நட்ட நடு வீதியில் வைத்து, வலுக்கட்டாயமாக முப்பது விநாடிகளுக்கும் தாண்டி முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறான் நாயகன்… நாம் விக்கித்துப் போய் “அடப்பாவி….” என்று சொல்லும் போது அவரும் டைட்டில் போடுகிறார்… BAD GUY என்று….


குறியீடுகள்….??? குறியீடுகள் இல்லாமல் கிம் கியின் படமா… இதிலும் சில குறியீடுகள் உண்டு… அது படம் நெடுக்க வருவதுதான்  இந்தப் படத்தின் சிறப்பு… வெண்மை என்பது புனிதத்துக்கான குறியீடாகவும் சிவப்பு என்பது காமத்துக்கான குறியீடாகவும் எங்கோ படித்த ஞாபகம்… இந்த திரைப்படத்தில் இந்த இரண்டு வண்ணங்களும் முக்கிய பங்காற்றி இருக்கிறது… அந்த இளம்பெண் ஆரம்பம் முதலே வெண்மை நிற ஆடைகளையே விரும்புவாள்… காதலனுடன் துணி எடுக்கும் போதும், விபச்சார விடுதியில் முதன் முறை காட்சிக்கு நிற்க வைக்கப்படும் போதும், முதல் முறை அந்த முரட்டு இளைஞன் முத்தமிடும் போதும், விடுதியில் இருந்து தப்பித்து செல்லும் போதும், வழிப்போக்கியாய் செல்லும் ஒரு பெண் இவளுக்கு வெள்ளை நிற மேலங்கியையே கொடுத்துச் செல்வாள்…. அதுபோல மழைக்காக அந்த விடுதியின் நிர்வாகி போல இயங்கும் அந்தப் பெண்மணியும் இவளுக்கு அதே வெள்ளை நிற மேலங்கியைத் தான் போர்த்திவிடுவாள்…. சிவப்பு நிறம் என்பது முதன் முதலில் காதலனுடன் துணி எடுக்கும் காட்சியில் வெளியே ஒரு பொம்மைக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும்… முதன்முறையாக அந்த விடுதியின் நிர்வாகியாக இருக்கும் பெண் அவளுக்கு சிவப்பு நிற ஆடையை கொடுத்து இது உனக்கு பொறுத்தமாக இருக்கும் என்று சொல்வாள்… அந்த இளம் பெண்ணோ அதை நிராகரித்து வெள்ளையை தேர்வு செய்வாள்… அது போல அந்த முரட்டு இளைஞனின் முன்னால் காதலியாக உருவகப்படுத்தப்படும் பெண்ணோ சிவப்பு நிற ஆடைதான் அணிந்திருப்பாள்… அந்த கிழிந்த நிலையில் கைப்பற்றப்படும் புகைப்படத்திலும் அந்தப் பெண் சிவப்பு நிற ஆடைதான் அணிந்திருப்பாள்… பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம்பெண் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் போது, அவள் அந்த இளஞ்சிவப்பு நிற ஆடையை தேர்ந்தெடுப்பாள்… அந்த மனமாற்றத்தை குறிப்பிடவே இந்த நிறங்களை பயன்படுத்தி இருப்பார் என்று தோன்றுகிறது…


அதுபோல அந்த முரட்டு இளைஞன், தனக்கு நெருக்கமானவர்கள் என்று யாரை எண்ணுகிறோனோ அவர்களுடனெல்லாம் சிகரெட்டை பங்கிட்டுக் கொள்வான்… ஒரு வாடிக்கையாளரிடம் தொடங்கி, தன் சகாக்களில் ஒருவன் அவளை விரும்புகிறேன் என்று சொல்லும் போது அவனுடன் சிகரெட்டை பங்கிட்டு, பின்பு தன் மற்றொரு சகாவை தவறுதலாக அடித்துவிட்டு, அவனிடம் சிகரெட்டை பங்கிடுவதும், இறுதியில் அந்த இளம்பெண் அவனது காதலை ஏற்றுக்கொண்டவுடன் அவளுடன் சிகரெட்டை பங்கிட்டுக் கொள்வதுமாக அந்த குறியீடுகள் தொடர்ந்து வரும்…


பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருப்பது, அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி யார் என்பது…?? என்னைப் பொறுத்தவரை அது அவனது முந்நாள் காதலியாக இருக்கலாம்… அவளும் அந்த இளம்பெண்ணும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பதால் தான் இவன் அவளிடம் கண்டதுமே காதல் கொள்கிறான்… அந்தக் கடற்கரையில் அவர்கள் இருவரும் முதன்முறை வரும் போது, அவன் அந்த இளம்பெண்ணிடம் தன் காதலியைப் பற்றி சொல்லி இருக்கலாம்… அவள் இறந்துவிட்டாளா…? என்பதோ அல்லது ஏன் இறந்தால் என்பதோ படத்தில் தெளிவாக சொல்லப்படுவதில்லை… ஆனால் அதையும் நான் இப்படித்தான் எடுத்துக் கொள்கிறான்… ஒருவேளை அவள் இறந்திருக்கலாம்… அல்லது பிரிந்து சென்றிருக்கலாம்… ஆனால் அந்த மரணத்துக்கோ பிரிந்து சென்றதுக்கோ நாயகன் காரணமில்லை… அவள் மீதே வேறு ஏதாவது குற்றம் அல்லது நியாயம் இருந்திருக்கலாம்… ஏன் அந்த புகைப்படம் கிழிக்கப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் யோசித்தால் அதற்கு விடை கிடைக்கும்… அதற்கு முந்தைய காட்சியில், நாயகனை அவனது நண்பன் கத்தியால் குத்திவிடுகிறான்.. காரணம்..?? அவன் காதலிக்கும் பெண்ணை நாயகன் எங்கோ விட்டுவிட்டு வந்துவிட்டான் என்கின்ற நியாயமான கோபம்.. அல்லது பிறருக்கு முன்னிலையில் தன்னை தாக்கிவிட்டான் என்பதான குற்றம் இளைக்க தூண்டும் கோபம்… இரண்டில் ஏதோ ஒன்று தான்…. ஆனால் நாயகன் அந்த நண்பனின் கைரேகை பதிந்த கத்தியை மண்ணில் புதைத்து வைக்கிறான்… அப்படியானால் அவன் நண்பனின் குற்றத்தை மறைக்கப் பார்க்கிறான் என்று தானே பொருள்…. அதுபோல தன் முன்னால் காதலியின் ஏதோ ஒரு குற்றத்தை மறைக்கத்தான் அந்த கிழிந்த புகைப்படங்களை அவன் மண்ணில் புதைத்து வைத்திருக்கிறான் என்று கூட நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்…


வழக்கம் போல் இந்த திரைப்படத்திலும் ஒளிப்பதிவும் இசையும் படம் பார்க்கும் போது மனதுக்கு மிக நெருக்கமானதாக உணரப்படும்…. பாலியல் தொழில் செய்த பெண்ணை, விரும்பி திருமணம் செய்து தன்னோடு கூட்டிக் கொண்டு வரும் பல திரைப்படங்களை நாம் தமிழில் பார்த்திருக்கிறோம்… ஆனால் இதுவோ சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளி அவளையே திருமணம் செய்து கொள்ளும் வித்தியாசமான ஒரு தீயவனின் காதல் கதை…. ஆனால் திரைப்படம் நமக்கு காட்டுவதோ இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதனின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் மிக அற்புதமான பரிசுத்தமான காதலை…. BAD GUY பாருங்கள்…. உங்களுக்கும் இந்த காதலின் ஆழம் பிடித்தாலும் பிடிக்கும்…..

அடுத்த பதிவு

கிம் கி டுக்கின் “ 3 IRON ” (2004)

Saturday 2 August 2014

சரபம்:


ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் முதல் பத்து நிமிடங்களிலோ அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவோ பார்வையாளர்களை கதையம்சம் சார்ந்தோ அல்லது அதன் நம்பகத்தன்மை சார்ந்தோ அல்லது காமெடி சார்ந்தோ ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக ஈர்த்துவிட வேண்டும்…. அப்படி முதல் பாதி முழுக்கவே பார்வையாளர்களை கவர எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், இரண்டாம் பாதியில் இருக்கும் இரண்டும் மூன்று திருப்பங்களை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்கப்பட்டால், அந்தப் படம் தோல்வியடையும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை இளம் இயக்குநரான அருண் மோகன் புரிந்திருக்கிறாரா..? என்று தெரியவில்லை.. தயாரிப்பாளர்  சி.வி.குமாரின் பேனரில் வந்த படம் என்பதால் கண்டிப்பாக இயக்குநர் அருண் மோகன் அவர்களும் குறும்பட பட்டறையில் இருந்து வந்தவராகத்தான் இருப்பார் என்று நம்பலாம்…

 
தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு சூது, கடத்தல், ஏமாற்றுதல், கொள்ளையடித்தல் மற்றும் பணம் சம்பாதித்தல் இவற்றின் மீது தீராத காதல் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது… இவரது தயாரிப்பில் வந்த படங்களில் பாதிக்கு பாதி நாயகனின் நோக்கம் எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும்… அதற்கு இந்த சரபம் படமும் விதிவிலக்கல்ல…  இதிலும் நாயகனின் தாரக மந்திரம் ” மாட்டிக்காம தப்பு பண்றதால, நிறைய பணம் கிடைக்கும்னா… அந்தத் தப்ப தைரியமா பண்ணலாங்கிறது தான்…” இந்த தாரக மந்திரத்துக்கு சொந்தக்காரனான நாயகன் குறைந்தபட்சம் மாதம் நாற்பது அல்லது அம்பதாயிரம் சம்பளம் வாங்கும் மனிதன்… நிறைய பணம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா என்று கடைசி வரை கேட்டுக் கொண்டே இருக்கும் நாயகன், என்னவெல்லாம் செய்வதற்காக பணம் வேண்டும் என்பதை மட்டும் சொல்வதே இல்லை… அல்லது சொல்லத் தெரியவில்லை… இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு பணம் வேண்டும்…

இன்னொன்று நாயகியின் கதாபாத்திரம்… மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்… போதை பழக்கம் உடையவள்… அடிக்கடி பணம் தர இவளது தந்தை மறுப்பதால், இவளுக்கும் பணம் தேவை… இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க இவர்களுக்குள் ஒரு திட்டம்… அது வேறு என்னவாக இருக்கும்… இந்தப் பெண்ணை கடத்தியது போல் நாடகமாடி, அவளது தந்தையிடம் இருந்து பணம் பறித்து அதை இருவரும் பிரித்துக் கொள்ளும் அதி அற்புதமான புதுவிதமான கண்டுபிடிப்பு தான் அது… இப்படி ஒரு கதை தொடங்கினால், அதில் எந்த விசயம் நம்மை ஈர்க்கும்… அல்லது அந்தக் கடத்தலை அரங்கேற்றும் செயல்களிலாவது குறைந்தபட்ச சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கலாம்… தொழிலதிபரின் மகளை அல்ல… ஒரு தொழிலாளியின் மகளைக் கூட இவ்வளவு எளிதாக கடத்த முடியாதே…!!!! என்று தோன்றுவது போன்ற காட்சியமைப்புகள்… அதற்குத்தான் நாங்கள் இரண்டாம் பாதியில் சரியான விளக்கம் கொடுக்கிறோமே என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால், வீ ஆர் வெரி வெரி ஸாரி இயக்குநர் ஸார்… எங்களது கேள்வி எல்லாம், இந்தக் கடத்தலை நிகழ்த்தும் நாயகன் ஏன் கொஞ்சமும் தன் திட்டத்தில் இருக்கும் அதல பாதாள ஓட்டைகளை கண்டுகொள்வதில்ல என்பதே..

 
கடத்திய நாயகன், தன் மொபைலில் வேறொரு சிம் கார்டை போட்டு பேசுகிறான்… அந்த செல்போனின் ஐஎம்-இஐ நம்பரைக் கொண்டு, அந்த செல்போனில் பயன்படுத்தப்பட்ட பிற நம்பர்களை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்கின்ற தொழில்நுட்ப விவரம் கூடவா தெரியாத ஆர்க்கிடெக் அந்த நாயகன்… அதுமட்டுமின்றி அவ்வளவு பெரிய தொழிலதிபருக்கு ஒரு மரணத்தை மறைப்பது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லையே.. இப்படி லாஜிக்கான கேள்விகளை கேட்கத் தொடங்கினால் படம் முழுக்க ஏகப்பட்ட ஓட்டைகள்… இரண்டாம் பாதியில் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் இருந்தாலும்… முதல் பாதியில் ஏற்பட்ட களைப்பால், இதுவும் நமக்குள் எந்தப் படபடப்பையும் ஏற்படுத்தாமல் வெகு சாதாரணமாக.. “ஓ… அப்டியா…” என்று கடக்க வைக்கிறது… மேலும் அந்த திரைக்கதை திருப்பங்கள் எல்லாம் பழைய பதிவுகளில் சொன்னதைப் போல் ஏமாற்றும் வகை திரைக்கதைகள்… அதனை மிகச்சிறப்பான திரைக்கதை என்று கூற முடியாது..

கதையே இல்லாத ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இப்போது தான் பார்க்கிறேன்…படத்தின் பொருட்செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக மிகக்குறுகிய நாட்களில், மிகச் சில இடங்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதும் படத்தின் பல காட்சிகளில் தெரிகிறது… இசை கேமரா நடிப்பு என்று எல்லாமே சுமார் ரகம் தான்… லியோ ஜான் பாலின் நறுக்குகள் தான் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட துடித்திருப்பது தெரிகிறது. ஆனால் அதற்கு எந்த பலனுமே கிடைக்காததற்கு காரணம்…. சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் தான்…

நாயகனாக நவீன் சந்திரா நடித்திருக்கிறார்…. ஓரிரு இடங்களில் வசனமும் வசன உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது… அவ்வளவே… நடிப்பில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை.. விரக்தியோடு மேசை சுவர் என்று மாறி மாறி குத்திக் கொண்டே திரிகிறார்… நாயகியாக சலோனி லுத்ரா… அழகாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது…. ஆனால் கவனிக்க வைக்கும் கவர்ச்சியோடு இருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்… இசை பிரிட்டோ மைக்கேல்.. படமே தந்தியடித்துக் கொண்டிருக்கும் போது பாடல்கள் வேறு மிகப்பெரிய வேகத்தடையாக பொறுமையை சோதிக்கிறது.. தயாரிப்பாளர் சி.வி.குமார் எதிலோ சறுக்கத் தொடங்குகிறாரோ என்று தோன்றுகிறது…. அது உண்மையா இல்லை பிரமையா என்பதை இனி அவரது தயாரிப்பில் வரும் திரைப்படங்கள் சொல்லும்….

மொத்தத்தில் சரபம் பல இடங்களில் சர்பமாக மாறி உங்களை கொத்தி கொல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இது உங்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியாது…

 

ஜிகர்தண்டா:



கார்த்திக் சுப்புராஜ்ஜின் படங்கள் என்றாலே ஏனோ எனக்கு ட்ரைலர் பிடிப்பதில்லை.. ஆனால் போஸ்டர் டிசைனிங் மிகவும் பிடிக்கும்.. இப்படித்தான் பீட்ஸாவின் ட்ரைலரும் எனக்குப் பிடிக்கவில்லை.. ஆனால் படம் பிடித்திருந்தது.. அதுபோலத்தான் ஜிகர்தண்டாவின் ட்ரைலரும்.. ஆனால் படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனநிறைவை கொடுப்பதைப் போல் ஒரு தமிழ் திரைப்படம் பார்த்த திருப்தி..

 
படத்தின் கதையென்ன…? அதன் திரைக்கதையென்ன…? அதிலிருக்கும் பலவீனங்கள் என்ன…? என்பவற்றைப் பற்றி பார்க்கும் முன்பு ஒரு சிறிய விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. இந்த திரைப்படம் A DIRTY CARNIVAL என்ற கொரிய திரைப்படத்தின் நகலாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது… நான் இன்னும் அந்தக் கொரிய திரைப்படத்தைப் பார்க்கவில்லை.. ஆனால் அதன் முழுக்கதை என்ன என்பதை ஒரு வலைபக்கத்தில் வாசித்தேன்.. அந்த வலைபக்கத்தில் எழுதப்பட்டதுதான் உண்மையிலேயே அந்தக் கொரிய திரைப்படத்தின் கதையாக இருப்பின், அதற்கும் ஜிகர்தண்டாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று முழுக்க மறுக்க முடியாது… அதே நேரத்தில் அதை அச்சு அசலான காப்பி என்று சொல்வதற்க்கும் நான் தயாரில்லை.. ஏனென்றால், ஒரு உதவி இயக்குநர் தன் முதல்படத்தின் கதைக்காக ஒரு ரவுடியைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நகரத்துக்குச் செல்வதும், பின்னர் அதைப்பற்றி ஒரு படம் எடுத்து அந்தப் படம் வெற்றி பெறுவதுமான இரண்டே இரண்டு ஒற்றுமைகளைத் தவிர வேறெதும் ஒற்றுமை என் பார்வைக்கு தென்படவில்லை.. ஆகவே இதை முழுக்க அவரின் கதையாக கருதலாம்…

இரண்டு ஒற்றுமைகள் இருக்கிறதே என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், அவை மிகச்சாதாரணமான ஒற்றுமைகள்.. தமிழ்ப்படவுலகில் தங்கள் படம் ஓரளவுக்காவது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணும் எல்லா இயக்குநரும் கதை தயாரானவுடன், அல்லது கதையை தேர்ந்தெடுத்தவுடன், அந்தக் கதையோடு தொடர்புடைய நிஜமான மனிதர்களை, அல்லது அந்தக் கதைகளனோடு தொடர்புடைய மனிதர்களை நேரில் சந்தித்து, அவர்களோடு பேசி, அதன்மூலம் ஏதாவது விசயங்களை உட்கிரகித்துக் கொள்வது என்பது இன்றைக்கு தமிழ் திரையுலகில் பாலபாடம் போன்றது.. இதை காப்பியடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.. அதே போல கதாநாயகன் தான் இங்கு உதவி இயக்குநர், அவன் எடுக்கும் படம் என்பதால், அது கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி… ஆக அதையும் காப்பியடித்திருக்க அவசியம் இல்லை… சரி இனி கதைக்குப் போகலாம்…

தன் முதல் படத்திற்கான வேலைகளில் இருக்கும் இயக்குநர் (சித்தார்த்), தயாரிப்பாளரின் தேவை ரத்தமும் சதையுமாக ஒரு கொலைகார கூட்டத்தைப் (கேங்ஸ்டர் என்பதற்கான இணைமொழி சரியா…?) பற்றிய கதை என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே தானே நேரடியாக சென்று, அந்தக் கூட்டத்தினரைக் கண்டு, சில விவரணைகளை சேகரித்து, அதைக் கொண்டு ஒரு கதை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் மதுரை கிளம்புகிறார் நாயகரான சித்தார்த்.. அங்கு அவருக்கு உதவும் நண்பனாக கருணா… நாயகன் அறிய முற்படும் ரவுடி சேதுவாக சிம்ஹா.. நாயகன் அந்த ரவுடியை எப்படி நெருங்கினான்…? அவன் படம் எடுத்தானா…? இல்லையா…? என்பதே இதன் ஒரு வரிக்கதை..

சரி.. திரைப்படம் ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது… கண்டிப்பாக இது ஒரு அற்புதமான கதையம்சத்தை கொண்ட படம் இல்லை.. அதனால் தானோ என்னவோ இத்திரைப்படம் தங்கமீன்கள் அல்லது ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் என் மனதில் ஏற்படுத்திய சலனத்தை கொஞ்சம் கூட ஏற்படுத்தவில்லை.. ஆனால் மிகச்சிறப்பான திரைக்கதையை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை… அது மட்டுமின்றி ஒரு கமர்ஸியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதன் முதல் பாதி மிகச்சரியான உதாரணம்… ஹீரோயிசம் தலை தூக்கும் காட்சிகளுக்காக யோசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், சிம்ஹாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை பார்த்தால் போதும்… காட்சிகள் எப்படி ஆரம்பிக்க வேண்டும்…? அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கு ஜிகர்தண்டாவின் முதல் பாதியில் இருந்தே மூன்று நான்கு உதாரணங்களை கூற முடியும்.. அது மட்டுமின்றி ஒரு திரைப்படத்திற்கு இசை எப்படி உதவுகிறது என்பதற்கும் இந்தத் திரைப்படம் ஒரு நல்ல உதாரணம் என்றும் சொல்லலாம்… இப்படி கதை தவிர்த்த மற்ற எல்லா விடயங்களிலும் எந்தவித குற்றமும் கூற முடியாமல் திரைப்படத்தின் முதல்பாதி என்னைக் கட்டிப் போட்டுவிடுகிறது.. பல இடங்களில் குவாண்டின் டொரண்டினோ சாயல் தெரிகிறது…

அதிலும் குறிப்பாக அந்த திரையரங்கின் கழிப்பறை பகுதியில் வைத்து சிம்ஹாவை கொல்ல முயற்சி நடக்கும் காட்சியை சொல்லலாம்…. இந்தக் காட்சி நகைச்சுவைத் தன்மையுடன் தொடங்கி, மிகத் தீவிரத் தன்மையுடன் நகர்ந்து, பின்னர் மீண்டும் நகைச்சுவையாகவே முடியும்… அந்தக் காட்சியை நீங்கள் பார்க்கும் போது உணர்வீர்கள்… அந்தக் காட்சியின் இறுதியில் சிம்ஹா கதவைத் திறந்து கொண்டு கழிப்பறைக்குள் நுழையாமல் இருந்திருந்தால், அதன் தன்மை வேறுவிதமாக மாறிவிடும்… அந்த மிக நுண்ணிய வேறுபாடு தான் காட்சியை அடுத்த தரத்துக்கு உயர்த்திவிடுகிறது… இதை பெரும்பாலான படைப்பாளிகள் செய்வதில்லை… அது போலத்தான் அந்த பிணத்துடன் அமர்ந்து டிவி பார்க்கும் காட்சி, கூட்டாளி சவுந்தரத்தை கண்டுபிடிக்கும் காட்சி, கத்தியுடன் தன்னை சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் இருந்து காருக்குள் சிம்ஹா பாய்ந்து தப்பிக்கும் காட்சி என அந்த முதல் பாதியின் பல காட்சிகள் ரசனையானது… அதிலும் குறிப்பாக அந்த இண்டர்வெல் ப்ளாக் விடப்படும் இடமும், அந்த தொனியும் கண்டிப்பாக இது ஒரு மிகச்சிறப்பான வித்தியாசமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையரங்கை விட்டு நம்மை வெளிவர வைக்கிறது.. ஆனால்…..

சரி.. இப்படி முதல் பாதியைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறாயே… இரண்டாம் பாதி எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா…? இரண்டாம் பாதி என்னை ஏனோ பெரிதாக கவரவில்லை… நான் மிகப்பெரியதாக ஏதோ எதிர்பார்த்துக் கொண்டிருக்க… திரைக்கதையோ வழக்கமான தமிழ்சினிமாவின் நகைச்சுவைக் களனுக்குள் சென்று சிக்கிக்கொள்கிறது… அதுவரை மிகவும் யதார்த்தமாக தெரிந்த காட்சிகள் எல்லாம் மாறிப் போய் ஒரு நாடகத் தன்மையான, சினிமாத் தன்மையுடன் கூடிய காட்சிகளாக நிரம்பி வழியத் தொடங்குகிறது… முதல்பாதியில் எல்லாக் காட்சிகளையும் ரசித்து சிலாகித்த என்னால், ஏனோ இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிந்தது… அதுகூட திரைக்கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்ற காட்சிகள் என்பதால் தான்… மேற்சொன்னபடி மிகச்சிறப்பான வித்தியாசமான படமாக வந்திருக்க வேண்டிய ஒரு திரைப்படம்… அந்த அளவுக்கு எல்லாம் அதீதமாய் ஆசை கொள்ளாமல், சிறப்பான படமாக இருந்தால் மட்டுமே போதும் என்று திருப்திபட்டுக் கொண்டது நம் துரதிஷ்டம்..


 
 
இதிலும் நான் பார்க்கின்ற குறை, இந்த திரைப்படத்தின் மூலம் நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதை முன் தீர்மானம் செய்யாமல் விட்டதே… இரண்டு விதமான முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன… ஒன்று நாயகன் மற்றொன்று வில்லன்… நாயகன் படம் எடுத்து வெற்றி பெறுகிறானா.. இல்லையா…? என்பது ஒரு லைன்… அதில் எந்தக் குழப்பமும் இல்லை… இரண்டாவது லைனான சிம்ஹாவின் லைனில் தான் குழப்பம்… அவரது முடிவு என்னவாகிறது என்பதில் தெளிவில்லாத தன்மை… அந்த கதாபாத்திரத்தை எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் ஏற்பட்ட குழப்பம் தான் படத்தை முற்றிலுமாக யதார்த்த புள்ளியிலிருந்து நகர்த்தி செயற்கைத்தனமான சினிமாத்தனமான வணிகப்புள்ளிக்கு கொண்டு சென்றுவிடுகிறது… … சித்தார்த் படம் எடுத்து வெற்றிபெற்ற பின்னரும், திரைப்படம் நகரும் போது நாம் நெளியத் தொடங்குகிறோம்…. அதுபோல அதற்கு அடுத்து வில்லனுக்கு ஏற்படும் முடிவையும் ஓரளவுக்கு ஊகிக்க முடிவதால் அதுவும் நமக்கு மிகப்பெரிய சுவாரஸ்யத்தை கொடுப்பதில்லை… ஆனால் அதிலும் இருக்கின்ற லாபம் என்னவென்றால் திரையரங்கிற்குள் இது நமக்கு மிகப்பெரிய குறையாக தெரிவதில்லை… ஆனால் ஏதோவொன்று குறைவதை போன்ற ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது…. இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம்… ஆனால் உங்களுக்கு படம் கண்டிப்பாக பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்…. நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதை வேண்டுமானால் நீங்கள் குறையாக கருதலாம்…

குறும்பட இயக்கம், அதன் மூலமாக கிடைக்கும் தயாரிப்பாளர், சமூகத்துக்கு கருத்து சொல்வதற்காக நான் படம் தயாரிக்கவில்லை என்று சொல்லும் தயாரிப்பாளரின் நிலை என தனது சொந்த அனுபவத்தில் இருந்தும் சில விசயங்களை இயக்குநர் கார்த்திக் சேர்த்திருக்கிறார்.. அது தவிர்த்து அந்த பெட்டிக் கடை முதியவர் வாயிலாக அவர் உதிர்க்கும் சில கருத்துக்கள் கூட இன்றைய நிலையில் படம் இயக்க காத்துக் கொண்டிருக்கும் பல இயக்குநருக்கு உதவக் கூடும்.. அதுபோல அந்தக் கதாநாயகியின் கதாபாத்திர சித்தரிப்பும் மிக புதுமையானது… அவர்கள் காதல் நிலைபெறுவதற்கான காரணமாக அமையும் அந்த இரண்டு வசனங்களும் கூட தனித்துவமான கவனத்தை கோருகிறது… இது தவிர்த்து படத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் என்று பார்த்தால், சிம்ஹாவின் நடிப்பு… முதல் இரண்டு காட்சிகளில் காமெடியனாகவே தெரியும் சூது கவ்வும் சிம்ஹா மெல்ல மெல்ல காணாமல் போவதே அவரது நடிப்பு எந்தளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது என்பதை சொல்லிவிடும்… அதுபோலத்தான் கருணாவும்… படத்துக்கு படம் காமெடியில் களை கட்டிக் கொண்டே போகிறார்…

 
 
இப்படி ஒரு அருமையான வித்தியாசமான பிண்ணனி இசை எந்தவொரு தமிழ்படத்திலும் சமீபமாக கேட்டதே இல்லை…. அவ்வளவு தத்ரூபமான பிண்ணனி இசை.. பாடல்களிலும் பிண்ணனியிலும் அதிரும் அந்த லயமும் தாளமும் கண்டிப்பாக இது ஒரு மியூசிக்கல் கேங்க்ஸ்டர் என்பதை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்ள வைக்கிறது…. சந்தோஷ் நாராயண் மீது இருக்கும் நம்பிக்கை கூடிக் கொண்டே போகிறது… இப்படி பிண்ணனி இசை, கேமராவின் கோணங்கள், காட்சியமைப்பு, அதன் நிறப்பிரிகைகள், கலை இயக்கம் என எல்லாமே மேற்கத்திய திரைப்படம் பார்க்கின்றோமோ என்கின்ற மாயையை கொடுக்கின்றது… மழையோடு கடந்து செல்லும் ஒவ்வொரு காட்சியும் அதை காட்சிபடுத்தி இருக்கும் விதமும் அத்தனை அழகு… அந்த கிணற்றுக்குள் நடக்கும் பாடல் காட்சி, டைட்டானிக் முகமூடி அணிந்து சயனிக்கும் காட்சி, இப்படி எத்தனையோ பாராட்டத்தக்க அம்சங்கள் படத்தில் இருக்கிறது… குறைகள் எல்லாம் இது அடுத்தக்கட்ட படைப்பாக தன்னை மாற்றிக் கொள்ளாமல், இரண்டாம் பாதியில் செயற்கை சாயத்தைப் பூசிக் கொண்டு தன்னைத் தானே சுருக்கிக் கொண்டது தான்….

அது தவிர்த்து பார்த்தால், இந்த ஜிகர்தண்டா பொதுமக்களுக்கும், திரை ஆர்வலருக்கும் தோன்றும் போதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பருக வேண்டிய ஒரு திரைப்படம்…