Saturday, 2 August 2014

ஜிகர்தண்டா:கார்த்திக் சுப்புராஜ்ஜின் படங்கள் என்றாலே ஏனோ எனக்கு ட்ரைலர் பிடிப்பதில்லை.. ஆனால் போஸ்டர் டிசைனிங் மிகவும் பிடிக்கும்.. இப்படித்தான் பீட்ஸாவின் ட்ரைலரும் எனக்குப் பிடிக்கவில்லை.. ஆனால் படம் பிடித்திருந்தது.. அதுபோலத்தான் ஜிகர்தண்டாவின் ட்ரைலரும்.. ஆனால் படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனநிறைவை கொடுப்பதைப் போல் ஒரு தமிழ் திரைப்படம் பார்த்த திருப்தி..

 
படத்தின் கதையென்ன…? அதன் திரைக்கதையென்ன…? அதிலிருக்கும் பலவீனங்கள் என்ன…? என்பவற்றைப் பற்றி பார்க்கும் முன்பு ஒரு சிறிய விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. இந்த திரைப்படம் A DIRTY CARNIVAL என்ற கொரிய திரைப்படத்தின் நகலாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது… நான் இன்னும் அந்தக் கொரிய திரைப்படத்தைப் பார்க்கவில்லை.. ஆனால் அதன் முழுக்கதை என்ன என்பதை ஒரு வலைபக்கத்தில் வாசித்தேன்.. அந்த வலைபக்கத்தில் எழுதப்பட்டதுதான் உண்மையிலேயே அந்தக் கொரிய திரைப்படத்தின் கதையாக இருப்பின், அதற்கும் ஜிகர்தண்டாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று முழுக்க மறுக்க முடியாது… அதே நேரத்தில் அதை அச்சு அசலான காப்பி என்று சொல்வதற்க்கும் நான் தயாரில்லை.. ஏனென்றால், ஒரு உதவி இயக்குநர் தன் முதல்படத்தின் கதைக்காக ஒரு ரவுடியைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நகரத்துக்குச் செல்வதும், பின்னர் அதைப்பற்றி ஒரு படம் எடுத்து அந்தப் படம் வெற்றி பெறுவதுமான இரண்டே இரண்டு ஒற்றுமைகளைத் தவிர வேறெதும் ஒற்றுமை என் பார்வைக்கு தென்படவில்லை.. ஆகவே இதை முழுக்க அவரின் கதையாக கருதலாம்…

இரண்டு ஒற்றுமைகள் இருக்கிறதே என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், அவை மிகச்சாதாரணமான ஒற்றுமைகள்.. தமிழ்ப்படவுலகில் தங்கள் படம் ஓரளவுக்காவது சிறப்பாக வரவேண்டும் என்று எண்ணும் எல்லா இயக்குநரும் கதை தயாரானவுடன், அல்லது கதையை தேர்ந்தெடுத்தவுடன், அந்தக் கதையோடு தொடர்புடைய நிஜமான மனிதர்களை, அல்லது அந்தக் கதைகளனோடு தொடர்புடைய மனிதர்களை நேரில் சந்தித்து, அவர்களோடு பேசி, அதன்மூலம் ஏதாவது விசயங்களை உட்கிரகித்துக் கொள்வது என்பது இன்றைக்கு தமிழ் திரையுலகில் பாலபாடம் போன்றது.. இதை காப்பியடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.. அதே போல கதாநாயகன் தான் இங்கு உதவி இயக்குநர், அவன் எடுக்கும் படம் என்பதால், அது கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி… ஆக அதையும் காப்பியடித்திருக்க அவசியம் இல்லை… சரி இனி கதைக்குப் போகலாம்…

தன் முதல் படத்திற்கான வேலைகளில் இருக்கும் இயக்குநர் (சித்தார்த்), தயாரிப்பாளரின் தேவை ரத்தமும் சதையுமாக ஒரு கொலைகார கூட்டத்தைப் (கேங்ஸ்டர் என்பதற்கான இணைமொழி சரியா…?) பற்றிய கதை என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே தானே நேரடியாக சென்று, அந்தக் கூட்டத்தினரைக் கண்டு, சில விவரணைகளை சேகரித்து, அதைக் கொண்டு ஒரு கதை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தில் மதுரை கிளம்புகிறார் நாயகரான சித்தார்த்.. அங்கு அவருக்கு உதவும் நண்பனாக கருணா… நாயகன் அறிய முற்படும் ரவுடி சேதுவாக சிம்ஹா.. நாயகன் அந்த ரவுடியை எப்படி நெருங்கினான்…? அவன் படம் எடுத்தானா…? இல்லையா…? என்பதே இதன் ஒரு வரிக்கதை..

சரி.. திரைப்படம் ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது… கண்டிப்பாக இது ஒரு அற்புதமான கதையம்சத்தை கொண்ட படம் இல்லை.. அதனால் தானோ என்னவோ இத்திரைப்படம் தங்கமீன்கள் அல்லது ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் என் மனதில் ஏற்படுத்திய சலனத்தை கொஞ்சம் கூட ஏற்படுத்தவில்லை.. ஆனால் மிகச்சிறப்பான திரைக்கதையை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை… அது மட்டுமின்றி ஒரு கமர்ஸியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதன் முதல் பாதி மிகச்சரியான உதாரணம்… ஹீரோயிசம் தலை தூக்கும் காட்சிகளுக்காக யோசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், சிம்ஹாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை பார்த்தால் போதும்… காட்சிகள் எப்படி ஆரம்பிக்க வேண்டும்…? அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கு ஜிகர்தண்டாவின் முதல் பாதியில் இருந்தே மூன்று நான்கு உதாரணங்களை கூற முடியும்.. அது மட்டுமின்றி ஒரு திரைப்படத்திற்கு இசை எப்படி உதவுகிறது என்பதற்கும் இந்தத் திரைப்படம் ஒரு நல்ல உதாரணம் என்றும் சொல்லலாம்… இப்படி கதை தவிர்த்த மற்ற எல்லா விடயங்களிலும் எந்தவித குற்றமும் கூற முடியாமல் திரைப்படத்தின் முதல்பாதி என்னைக் கட்டிப் போட்டுவிடுகிறது.. பல இடங்களில் குவாண்டின் டொரண்டினோ சாயல் தெரிகிறது…

அதிலும் குறிப்பாக அந்த திரையரங்கின் கழிப்பறை பகுதியில் வைத்து சிம்ஹாவை கொல்ல முயற்சி நடக்கும் காட்சியை சொல்லலாம்…. இந்தக் காட்சி நகைச்சுவைத் தன்மையுடன் தொடங்கி, மிகத் தீவிரத் தன்மையுடன் நகர்ந்து, பின்னர் மீண்டும் நகைச்சுவையாகவே முடியும்… அந்தக் காட்சியை நீங்கள் பார்க்கும் போது உணர்வீர்கள்… அந்தக் காட்சியின் இறுதியில் சிம்ஹா கதவைத் திறந்து கொண்டு கழிப்பறைக்குள் நுழையாமல் இருந்திருந்தால், அதன் தன்மை வேறுவிதமாக மாறிவிடும்… அந்த மிக நுண்ணிய வேறுபாடு தான் காட்சியை அடுத்த தரத்துக்கு உயர்த்திவிடுகிறது… இதை பெரும்பாலான படைப்பாளிகள் செய்வதில்லை… அது போலத்தான் அந்த பிணத்துடன் அமர்ந்து டிவி பார்க்கும் காட்சி, கூட்டாளி சவுந்தரத்தை கண்டுபிடிக்கும் காட்சி, கத்தியுடன் தன்னை சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் இருந்து காருக்குள் சிம்ஹா பாய்ந்து தப்பிக்கும் காட்சி என அந்த முதல் பாதியின் பல காட்சிகள் ரசனையானது… அதிலும் குறிப்பாக அந்த இண்டர்வெல் ப்ளாக் விடப்படும் இடமும், அந்த தொனியும் கண்டிப்பாக இது ஒரு மிகச்சிறப்பான வித்தியாசமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் திரையரங்கை விட்டு நம்மை வெளிவர வைக்கிறது.. ஆனால்…..

சரி.. இப்படி முதல் பாதியைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறாயே… இரண்டாம் பாதி எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா…? இரண்டாம் பாதி என்னை ஏனோ பெரிதாக கவரவில்லை… நான் மிகப்பெரியதாக ஏதோ எதிர்பார்த்துக் கொண்டிருக்க… திரைக்கதையோ வழக்கமான தமிழ்சினிமாவின் நகைச்சுவைக் களனுக்குள் சென்று சிக்கிக்கொள்கிறது… அதுவரை மிகவும் யதார்த்தமாக தெரிந்த காட்சிகள் எல்லாம் மாறிப் போய் ஒரு நாடகத் தன்மையான, சினிமாத் தன்மையுடன் கூடிய காட்சிகளாக நிரம்பி வழியத் தொடங்குகிறது… முதல்பாதியில் எல்லாக் காட்சிகளையும் ரசித்து சிலாகித்த என்னால், ஏனோ இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிந்தது… அதுகூட திரைக்கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்ற காட்சிகள் என்பதால் தான்… மேற்சொன்னபடி மிகச்சிறப்பான வித்தியாசமான படமாக வந்திருக்க வேண்டிய ஒரு திரைப்படம்… அந்த அளவுக்கு எல்லாம் அதீதமாய் ஆசை கொள்ளாமல், சிறப்பான படமாக இருந்தால் மட்டுமே போதும் என்று திருப்திபட்டுக் கொண்டது நம் துரதிஷ்டம்..


 
 
இதிலும் நான் பார்க்கின்ற குறை, இந்த திரைப்படத்தின் மூலம் நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதை முன் தீர்மானம் செய்யாமல் விட்டதே… இரண்டு விதமான முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன… ஒன்று நாயகன் மற்றொன்று வில்லன்… நாயகன் படம் எடுத்து வெற்றி பெறுகிறானா.. இல்லையா…? என்பது ஒரு லைன்… அதில் எந்தக் குழப்பமும் இல்லை… இரண்டாவது லைனான சிம்ஹாவின் லைனில் தான் குழப்பம்… அவரது முடிவு என்னவாகிறது என்பதில் தெளிவில்லாத தன்மை… அந்த கதாபாத்திரத்தை எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் ஏற்பட்ட குழப்பம் தான் படத்தை முற்றிலுமாக யதார்த்த புள்ளியிலிருந்து நகர்த்தி செயற்கைத்தனமான சினிமாத்தனமான வணிகப்புள்ளிக்கு கொண்டு சென்றுவிடுகிறது… … சித்தார்த் படம் எடுத்து வெற்றிபெற்ற பின்னரும், திரைப்படம் நகரும் போது நாம் நெளியத் தொடங்குகிறோம்…. அதுபோல அதற்கு அடுத்து வில்லனுக்கு ஏற்படும் முடிவையும் ஓரளவுக்கு ஊகிக்க முடிவதால் அதுவும் நமக்கு மிகப்பெரிய சுவாரஸ்யத்தை கொடுப்பதில்லை… ஆனால் அதிலும் இருக்கின்ற லாபம் என்னவென்றால் திரையரங்கிற்குள் இது நமக்கு மிகப்பெரிய குறையாக தெரிவதில்லை… ஆனால் ஏதோவொன்று குறைவதை போன்ற ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது…. இது முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம்… ஆனால் உங்களுக்கு படம் கண்டிப்பாக பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்…. நேரத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதை வேண்டுமானால் நீங்கள் குறையாக கருதலாம்…

குறும்பட இயக்கம், அதன் மூலமாக கிடைக்கும் தயாரிப்பாளர், சமூகத்துக்கு கருத்து சொல்வதற்காக நான் படம் தயாரிக்கவில்லை என்று சொல்லும் தயாரிப்பாளரின் நிலை என தனது சொந்த அனுபவத்தில் இருந்தும் சில விசயங்களை இயக்குநர் கார்த்திக் சேர்த்திருக்கிறார்.. அது தவிர்த்து அந்த பெட்டிக் கடை முதியவர் வாயிலாக அவர் உதிர்க்கும் சில கருத்துக்கள் கூட இன்றைய நிலையில் படம் இயக்க காத்துக் கொண்டிருக்கும் பல இயக்குநருக்கு உதவக் கூடும்.. அதுபோல அந்தக் கதாநாயகியின் கதாபாத்திர சித்தரிப்பும் மிக புதுமையானது… அவர்கள் காதல் நிலைபெறுவதற்கான காரணமாக அமையும் அந்த இரண்டு வசனங்களும் கூட தனித்துவமான கவனத்தை கோருகிறது… இது தவிர்த்து படத்தில் பாராட்ட வேண்டிய அம்சம் என்று பார்த்தால், சிம்ஹாவின் நடிப்பு… முதல் இரண்டு காட்சிகளில் காமெடியனாகவே தெரியும் சூது கவ்வும் சிம்ஹா மெல்ல மெல்ல காணாமல் போவதே அவரது நடிப்பு எந்தளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது என்பதை சொல்லிவிடும்… அதுபோலத்தான் கருணாவும்… படத்துக்கு படம் காமெடியில் களை கட்டிக் கொண்டே போகிறார்…

 
 
இப்படி ஒரு அருமையான வித்தியாசமான பிண்ணனி இசை எந்தவொரு தமிழ்படத்திலும் சமீபமாக கேட்டதே இல்லை…. அவ்வளவு தத்ரூபமான பிண்ணனி இசை.. பாடல்களிலும் பிண்ணனியிலும் அதிரும் அந்த லயமும் தாளமும் கண்டிப்பாக இது ஒரு மியூசிக்கல் கேங்க்ஸ்டர் என்பதை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்ள வைக்கிறது…. சந்தோஷ் நாராயண் மீது இருக்கும் நம்பிக்கை கூடிக் கொண்டே போகிறது… இப்படி பிண்ணனி இசை, கேமராவின் கோணங்கள், காட்சியமைப்பு, அதன் நிறப்பிரிகைகள், கலை இயக்கம் என எல்லாமே மேற்கத்திய திரைப்படம் பார்க்கின்றோமோ என்கின்ற மாயையை கொடுக்கின்றது… மழையோடு கடந்து செல்லும் ஒவ்வொரு காட்சியும் அதை காட்சிபடுத்தி இருக்கும் விதமும் அத்தனை அழகு… அந்த கிணற்றுக்குள் நடக்கும் பாடல் காட்சி, டைட்டானிக் முகமூடி அணிந்து சயனிக்கும் காட்சி, இப்படி எத்தனையோ பாராட்டத்தக்க அம்சங்கள் படத்தில் இருக்கிறது… குறைகள் எல்லாம் இது அடுத்தக்கட்ட படைப்பாக தன்னை மாற்றிக் கொள்ளாமல், இரண்டாம் பாதியில் செயற்கை சாயத்தைப் பூசிக் கொண்டு தன்னைத் தானே சுருக்கிக் கொண்டது தான்….

அது தவிர்த்து பார்த்தால், இந்த ஜிகர்தண்டா பொதுமக்களுக்கும், திரை ஆர்வலருக்கும் தோன்றும் போதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பருக வேண்டிய ஒரு திரைப்படம்…

No comments:

Post a Comment