Monday, 29 April 2013

கருக்கு:

ஆசிரியர்  : பாமா
பிரிவு        : நாவல்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

    


தமிழகத்தின் தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாமா என்னும் இந்த சகோதரி, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை விடாமல் துரத்திக் கொண்டே இருந்த சாதிய வன்கொடுமைகளின் தாக்கத்தால், தன் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை தொலைத்து நிராதராவாக நின்று கொண்டிருந்த சூழலில், கிறிஸ்த்துவ திருச்சபைகளை சேர்ந்த மாற்கு என்னும் சகோதரரின் உதவியுடன், தனக்கு ஏற்பட்ட அவலங்களில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கு மருந்தாக எழுத்தை நாடினாள். தன் சோகங்களை பேனாவுக்குள் இட்டு நிரப்பி வார்த்தைகளாக வடிவம் கொடுக்க, அதை வாசித்துப் பார்த்த நண்பர்கள், கண்டிப்பாக இதனை அச்சேற்றி புத்தக வடிவில் கொண்டுவர விருப்பம் தெரிவித்தனர். முதலில் அந்த ஆலோசனையை ஏற்க அஞ்சிய பாமா அவர்கள், பின்பு நண்பர்களின் வற்புறுத்தலால் அதற்கு ஒப்புக் கொள்ள, கருக்கு என்ற நாவல் உதயமாகி, தமிழ் இலக்கிய பெருவெளியில் பல சர்ச்சைகளையும், சலனங்களையும் ஏற்படுத்தியது.

இது முதன்முதலில் நாவலாக வெளிவந்த காலகட்டம் 1998. மொத்தத்துக்கு 100 பக்கங்களுக்கு மிகாமல் குறுநாவலின் வடிவம் கொண்டது இந்த கருக்கு. ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின் சுமையைப் பார்க்கும் போது நாவலின் கணம் கூடித்தான் போகிறது. நாவல் வெளிவந்த போது தன் சொந்த கிராமத்திலேயே பயங்கரமான எதிர்ப்பை சம்பாதித்தார். தங்கள் இனத்தையும் தங்கள் ஊரையும் அசிங்கப்படுத்தி விட்டாள் என்று கூவி பாமாவை வசைபாடத் தொடங்கியது அவர்களது சமூகம். அதே நேரத்தில் நாவலில் இடம் பெற்றிருந்த சொல்லாடல் தமிழ் இலக்கியத்திற்கு புதிது. கிராமங்களில் இயல்பாக மக்களால் பேசப்படும் பேச்சுவழக்கில் எந்த விதமான மொழி பிறழ்வும், கலப்பும் இன்றி அப்படியே எழுதியதால், அந்த மொழிநடையை உட்கிரகித்துக் கொள்வதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனாலும் ஆரம்ப காலத்தில் நாவலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அதன் கணம் பொருந்திய கருத்தியலை புரிந்து கொண்டு பலதரப்பிலும் அதைப் பற்றி சிலாகிக்க தொடங்க. ஒரு புதிய மொழி நடையுடன் கருக்கு பிரகாசிக்கத் தொடங்கியது.

இந்த கருக்கு நாவல், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற சகோதரியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே ஒரு சமூகத்தின் இழிநிலையை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் அந்த வழி சற்றும் குறையாமல் எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர்.

பள்ளி செல்லும் காலத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் பள்ளியிலேயே மாணவ மாணவிகள் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் விளையாட்டு மதில் சுவர் பக்கம் சாய்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தின் மீது திரும்புகிறது. அதன் மீது ஏறி விளையாடத் தொடங்குகின்றனர். விளையாட்டின் சுவராஸ்யத்தில் அனைவரும் அந்த சிறிய தென்னை மரத்தில் பிஞ்சு விட்டிருந்த தேங்காய் மீது கைவைக்க.. அது பாமா கைவைக்கும் போது மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் பயந்து ஓடிவிட, பாமாவும் ஓடி விடுகிறாள். அடுத்த நாள் காலை ப்ரேயர் ஹாலில் தலைமையாசிரியர் “உன் சாதிப் புத்திய காட்டிட்டியே.. ஏண்டி இளநீய புடுங்குனே.. ஸ்கூலுக்குள்ள வராத.. வெளிய போ…” என விரட்டுகிறார். பாமா தான் அறிந்து ஏதும் தவறு செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவர் உதிர்க்கும் கண்ணீர் மட்டுமே அங்கு நிற்கிறது. இது அவர் வாழ்க்கையில் நேரிடையாக ஏற்பட்ட முதல் அவமானம். அதுவும் நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு தலைமையாசிரியரின் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தைகளை அவரால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

தீண்டாமை என்பதை அறியாத அந்த பிஞ்சு வயதில், அவர் தீண்டாமை, தொட்டா தீட்டாம்… என்கின்ற வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டது வேறொரு சந்தர்ப்பத்தில்… பள்ளி விட்டு வரும் வழியில் தெருவோரம் இருக்கும் பலகாரக் கடைகளையும் வித்தை காட்டுவோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்வது பாமாவின் வழக்கம்.. அன்றும் வழக்கம் போல் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும் போது, தலீத் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியாள் ஒருவர் தனது வலதுகையில் இருந்த ஒரு பொட்டணத்தை அந்த நூல் சரடைப் பிடித்து தூக்கி வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த சிறுமி பாமாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. அந்தப் பொட்டணத்தை உற்றுப் பார்த்தால் அது ஒரு வடை மடிக்கப்பட்ட பொட்டணம் என்பதற்கு சான்றாக அதில் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்க.. அதை நூல் சரடை பிடித்துக் கொண்டே சென்று நாக்கியர் கையில் கொடுத்து விட்டு கூனி கும்பிட்டு நிற்கிறார் அந்த முதியவர்.

பாமாவுக்கோ சிரிப்பு தாளமுடியவில்லை. இவ்வளவு வயதாகியும் சின்ன பிள்ளை மாதிரி நூலைப் பிடித்து பொட்டணத்தை பிடித்து விளையாடிக் கொண்டு அவர் வந்த விதத்தை தன் வீட்டில் சென்று ஸ்லாகித்துச் சொல்ல.. வீட்டில் தாய், அண்ணன் என்று யார் முகத்திலும் சிரிப்பில்லை… “நாமெல்லா அத தொடக்கூடாதாம்.. தொட்டா தீட்டாம்…” என்று முகத்தில் அடித்தாற் போல் பாமாவின் தாய் சொல்லிவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் செல்ல பாமாவுக்கும் அதற்குமேல் சிரிப்பு வருவதில்லை. பெரியவர் நூல் பிடித்து தூக்கி வந்த அந்த காட்சியை கண்ட நாளில் தான் பாமா தெரிந்து கொண்டாள், “தீண்டாமை பெருங்குற்றம்” என்பது இன்னும் நூல் அளவில் தான் இருக்கின்றது என்பதை.

சில நேரங்களில் பாமா தன் பாட்டியுடன் உயர் சாதியினரின் வீட்டுக்குச் வேலைக்குச் செல்லும் போது, அங்குள்ள பத்து வயது நிரம்பாத சிறுபிள்ளைகள் கூட தன் பாட்டியை பேர் சொல்லி அழைப்பதும், அதை பாட்டி மாத்திரம் அன்றி அந்த வீட்டாரம் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தும் நெஞ்சம் அதிர்ந்திருக்கிறாள். மேலும் அவர்கள் கூலியாகக் கொடுக்கும் கஞ்சியைக் கூட வாங்க, வீட்டு கால்வாயின் ஓரம் சட்டியை வைத்துவிட்டு காத்திருப்பதும், அதில் பழங் கஞ்சியை ஊற்றும் அந்த வீட்டுப் பெண்மணி, சட்டியில் தன் கை ஒட்டாதவாறு அகன்று நின்று அதை ஊற்றுவதும் மனதை போட்டு பிசைய.. அது அவளுக்குள் கேள்வியாக.. அதற்கு பாட்டியின் பதில் இதுதான். “நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட சனங்க தான.. காலங்காலமா நமக்கு கஞ்சி ஊத்துற மகராசங்க.. அவுங்கள அப்புடி பேசக்கூடாது….”

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விசயம்.. நாம் அடுத்த மக்களை அடக்கி ஆளப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும், நாம் அடங்கிப் போகப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும் இரு தரப்பிலும் சிறுவயதிலேயே மனதில் அறியாமல் விதைக்கப்படுகின்றது என்பதுதான். இந்த தவறு இன்றுவரை கூட நடந்து வருவதுதான், நாமெல்லாம் நாகரீகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை கேள்விக் குறியாக்குகிறது.

இவை தவிர்த்து படிக்க வெளியூர் செல்லும் இடங்களிலும், வேலைக்கு சேரும் இடங்களிலும், கன்னியாஸ்திரியாக போகும் இடங்களிலும் இவர் தன் அடையாளங்களை மறைத்து வாழும் சூழலும் ஏற்படுகின்றது. தான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்துவிட்டால் பிறர் தன்னைப் பார்க்கும் கேலியான பார்வைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஒடுங்கிப் போகும் காலகட்டமும் நாவலில் கடந்து செல்கிறது.

பால்ய பிராயத்தில் கிறிஸ்துவ சபைகளில் கடவுள் மீது நம்பிக்கை கலந்த பயம் ஏற்படுத்துவதற்காக கூறும் சில கட்டுக்கதைகள் எப்படி பயத்தை உண்டாக்கியது என்பதும், அதில் இருந்து அவர்கள் மீண்டு வருவதும் கலகலப்பான பக்கங்கள். குறிப்பாக கோயில் தோட்டத்தில் யாரும் அறியாமல் பறித்த மலர்களை ப்ளக் பாய்ண்டில் சொறுகி, ஷாக் அடித்ததை கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கும் என்று எண்ணுவதும், கோயிலில் கொடுக்கப்படும் நன்மய கையால் தொட்டால் கை முழுவதும் ரத்தம் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியதையும், கடிக்கக்கூடாது என்று சொல்வதையும் சோதித்துப் பார்க்கும் இடங்களை கூறலாம்.

மேலும் சாலியருக்கும் பறையருக்குமான கல்லறை தொடர்பான சண்டையின் போது போலீசின் அட்டூழியமும் வாச்சாத்தியின் சம்பவத்தை நினைவுகூற வைப்பவை. அந்த காலகட்டத்தில் போலீசுக்கு பயந்து ஒரு மாத காலமாக ஆண்களே ஊரில் இல்லாததால், தாங்களே வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய பெண்களின் சாமர்த்தியமும் பாராட்ட வேண்டியது. மேலும் பள்ளர், பறையர் இரண்டு சமூகமுமே தாழ்த்தப்பட்ட சமூகமாக இருப்பினும் ஓயாமல் அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளால் ஆதாயம் அடைவது யார் என்னும் விடை தெரியா கேள்வியையும் நாவல் எழுப்பிச் செல்கிறது.

குறை என்று பார்த்தால், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பிற்பாடு நாம் நினைத்தது எதையும் இங்கு செயல்படுத்த முடியாது என்ற வெறுப்பில் வெளியேறும் பாமாவுக்கு, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் ஒரேயடியாக போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினமாக இருப்பதால் அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மேலும் எழுதிய விசயங்களே சில இடங்களில் மீண்டும் எழுதப்பட்டிருப்பதும் வாசிப்பிற்கான ஒரு தடையாக உள்ளது. மேலும் நிலவியல் சார்ந்த குறிப்புகள், கதை எங்கு நடந்தது என்பது போன்ற விவரணைகள் தெளிவாக கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் தோன்றுகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அப்படியே சொல்வதாகக் கொண்டாலும், பிற சாதிய மக்களை கேலி செய்வது போல் அமைந்திருக்கும் சில இடங்கள் கண்டிப்பாக அவர்களை கோபப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதோ என்றும் ஐயுறத் தோன்றுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

சாதியத் தீண்டல்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர் இல்லை என்றாலும் பிறருக்கு நிகழ்ந்ததைப் பார்த்தது இல்லை என்றாலும் கூட நீங்கள் கண்டிப்பாக இந்த நாவலை வாசிக்கவும். ஏனென்றால் சாதிய தீண்டாமையின் கூறுகள் நம் கண்ணில் மண் தூவி எப்படி கிளை விரித்திருக்கின்றது என்பதை கண்டுகொள்ள இந்த ”கருக்கு” நாவல் கண்டிப்பாக உதவக்கூடும். உதாரணத்துக்கு உங்கள் ஊரில் அதிக அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களிடம் பேசும் போது, “தம்பி எந்த தெரு…” என்று கேட்டிருக்கிறாரா… அந்த கேள்வியின் உள்நோக்கம் நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்று கண்டு கொள்வதுதான். மேலும் உங்கள் ஊரின் சுற்றமைப்பை எடுத்துப் பாருங்கள். அதில் பழங்காலத்தில் கட்டப்பட்ட பள்ளிகூடங்கள், கோயில்கள், நகராட்சி அலுவலகங்கள், தபால் நிலையங்கள் இவை எல்லாம் எந்தெந்த தெருக்களைச் சுற்றி பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே சாதி நம் கண் மறைவில் எப்படி மறைந்திருக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளக் கூடும்.

Saturday, 20 April 2013

உதயம் NH-4:


வெற்றிமாறனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் வந்திருக்கும் படம். வெற்றிமாறன் என்ற ப்ராண்ட் நேம் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் படம் வெற்றிமாறனுக்கு ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். வெற்றிமாறனால் முதன்முதலில் எழுதப்பட்ட கதை. ”தேசிய நெடுஞ்சாலை” என்ற பெயரில் சூட்டிங் தொடங்கப்பட்டு, இரண்டொரு நாட்களில் கைவிடப்பட்டதாகக் கேள்வி. அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான பொல்லாதவன், ஆடுகளம் இரண்டும் தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமாக மாறிப் போனதால், முதலாவது செய்த கதையை தன் உதவியாளரை இயக்கச் சொல்லி பக்கபலமாய் இருந்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய விசயம்தான் என்றாலும் படம் பாராட்டுக்குரிய படமாக அமையாது போனது தான் வருத்தம். இதன் இயக்குநர் மணிமாறன்.

மேற்சொன்னது போல வெற்றிமாறன் என்ற பெயர் படத்தின் ப்ரோமோவுக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது முதல் இரண்டு நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளைக் கண்டாலே தெரியும். அதே வேளையில் வெற்றிமாறன் கூட்டணி என்பதால் என் போன்ற நபர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு இருந்தது. ஏனென்றால் அவருடைய முந்தைய படங்களை எடுத்துப் பார்த்தோமானால், உதாரணமாக பொல்லாதவன், ஆடுகளம் இரண்டுமே மனித மனங்களில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை மைய இலையாகக் கொண்டு இளைக்கப்பட்ட திரைப்படங்களாக இருக்கும். அதுதான் அவரது செய்நேர்த்தி. ஆனால் உதயம் NH-4ன் மைய இலையோ, தமிழ் சினிமா பல நூற்றாண்டுகளாக கிழித்து, தோரணம் கட்டி, தொங்கவிட்டு அலங்கோலமாக்கிய ஒரு சாதாரண காதல் கதை என்பது தான் இங்கு வன்சோகம்.

இதை வெற்றிமாறன் என்ற பெயரை மறந்துவிட்டு மணிமாறனின் முதல் படமாக அணுகினால் இந்தளவுக்கு நமக்கு ஏமாற்றம் தோன்றாது என்பது என் அனுமானம். கதை இதுதான். ஆரம்பத்தில் பெங்களூரில் முக்கியமான ஒரு அரசியல்வாதியின் மகள் கடத்தப்படுகிறாள், அவள் ஹீரோயின். கடத்தியவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் ஹீரோ இமேஜில் வளைய வரும் சித்தார்த். போலீஸ் அரசியல் வாதியின் வேண்டுகோளின் படி மறைமுக தேடுதல் வேட்டையை தொடங்க.. வேட்டையை தொடங்கும் போலீஸோ ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். சித்தார்த் ஏன் ஹீரோயினைக் கடத்தினார் என்பதை ப்ளாஸ்பேக் யுத்தியை வைத்து, ஹீரோவின் நண்பன் மற்றும் கடத்தப்பட்ட ஹீரோயின் இருவரும் விவரித்து கூறுவது போல் கதையமைத்து இருக்கிறார்கள். இதில் ஹீரோயினை ஹீரோ ஏன் கடத்தினார் என்பதை நீங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கதை முடிந்தது.

கடத்தியது சித்தார்த் என்னும் போதே அங்கு பாதி சஸ்பென்ஸ் முடிந்து விடுகிறதே… கடத்திய ஹீரோயினை அவர் கற்பழிக்கப் போகிறாரா..? இல்லை விபச்சாரத்தில் தள்ளப் போகிறாரா..? இல்லை மிரட்டி பணம் பறிக்கப் பார்க்கிறாரா..? அல்லது கொல்லத்தான் முனைகிறாரா…? அல்லது துரத்துகிற போலீஸ் தான் சித்தார்த்தை கொன்றுவிடுமா..? இது எதாகவும் கண்டிப்பாக இருக்காது. இருக்கவும் முடியாது. ஏனென்றால் இது தமிழ் ஹீரோயிச சினிமா.

முதல்பாதியாவது நண்பனின் டாவு, திசை திரும்பி சித்தார்த்தை வளைய வரும் இடங்களிலும், சித்தார்த்தின் நண்பனாக வரும் இரண்டு நபர்களின் இயல்பான நடிப்பினாலும் ஆங்காங்கே சற்று கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதிதான் முழுக்க முழுக்க தமிழ் ஹீரோயிச சினிமாவாகப் போய் நம்மை மிகவும் படுத்தி எடுக்கிறது. இருப்பினும் கமிஷ்னரிடம் நன்னடத்தை போலீஸ் அவார்ட்டு வாங்கிய கான்ஸ்டேபிள் கேரக்டர் சற்றே சுவாரஸ்யம்.

இவை தவிர்த்துப் பார்த்தால், பெங்களூரு பப்களில் புகுந்து அட்டுழியம் செய்த கன்னட ரட்சண வேதிகே அமைப்பினரை மறைமுகமாக சாடி இருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம். ஆனால் அந்த அடாவடி காட்சியிலும் ஹீரோ அனைவரையும் அடித்து துரத்திவிட்டு, ஹீரோயினையும் அவள் நண்பியையும் காப்பாற்றி, அதுவே ஹீரோயினுக்கு மீண்டும் ஹீரோ மேல் காதல் வருவதற்கான காரணமாக வைத்ததெல்லாம் பட்டினத்தார் கால பழசே…..!

காதலில் சேர்ந்துவிட துடிக்கும் ஜோடி, அவர்களைத் துரத்தும் ஒரு போலீஸ் ஆபிஸர், அவருக்கு வீட்டுக்குப் போக வேண்டிய நெருக்கடி, அதை நினைவு படுத்துவது போல் அடிக்கடி வரும் போன்கால்… இதையெல்லாம் பார்த்த போது சற்று மைனாவின் சாயல் தெரிந்தது.. அது காட்டோர மைனா, இது ரோட்டோர மைனா போலும்… விதிவிலக்காக இங்கு மகளுக்கு ஒரு பணக்கார அரசியல்வாதி அப்பா, கடத்தப்பட்ட பொண்ணு மைனர், ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண மாமனும், நண்பர்கள் பட்டாளமும்..  இந்த இத்யாதிகள் புதுசு.

இது போக ”கதவை தட்டிட்டு வரச் சொன்னான் பாருங்க சார்…” என்பதும் “நான் பேசுறதுக்கு மட்டும் வரல…” என்று சொல்லி ஹீரோயின் சித்தார்த்தை நெருங்கும் காட்சியும், அதற்கு சித்தார்த் கைலியை ஏத்திக் கட்டிக் கொண்டு பின்னால் திரும்பி கொடுக்கும் ரியாக்சனும், கடைசி க்ளைமாக்ஸில் கே.கே. மேனன் சீரியஸாக க்ளாஸ் எடுக்கும் போது, அதை அலட்சியமாகப் புறக்கணித்து ஹீரோவுக்கு லிப் லாக் கிஸ் அடிக்கும் காட்சிகளும் அப்ளாஸ் அள்ளுகின்றது. ஆங்காங்கே வரும் மொபைல் சேசிங், மற்றும் பெங்களூரு தொடர்பான டீடையிலிங் வசீகரிக்கிறது.

கே.கே. மேனன் சர்வசாதாரணமாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தூக்கி சுமந்து இருக்கிறார். யானைப் பசிக்கு சோளப் பொறி. ஜி.வி இசையில் கானா பாலா பாடும் பாடலும், யாரோ இவன் பாடலும் ஓகே ரகம்.. பிண்ணனி இசை பெரிதாக ஒன்றும் இல்லை. வேல்ராஜின் கேமரா வழக்கம் போல் நேர்த்தியான பணியை செய்திருக்க… கூடுதல் பணியாக நடிக்கவும் செய்திருக்கிறார். மொத்தத்தில் படம் ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய வெற்றிமாறனின் படம் இல்லை… அவரது உதவியாளர் மணிமாறனின் ஒரு ”தேசிய நெடுஞ்சாலை காதல் கதை…” அவ்வளவே.

OLD BOY:


ரத்தமும் சதையுமாய் ஊனும் உயிருமாய்  உணர்ச்சியும் புணர்ச்சியுமாய் ஒரு படம். எனைப் பொருத்தமட்டில் ஒரு திரைப்படம் என்பது அந்த பார்வையாளனை ஏதோ ஒரு விதத்தில் யோசிக்க வைக்க வேண்டும். தர்க்கரீதியிலான விவாதத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும். அவனை தன்னைப் பற்றி சுய மதீப்பீடு செய்து கொள்ள தூண்ட வேண்டும். பகுத்தறிவு படிநிலையில் ஒரு படியாவது அவனை மேலேற்ற வேண்டும். ஆனால் இந்த மேற்சுட்டிய திரைப்படம் என் அளவீடுகள் அத்தனையும் அநாயசமாக கடந்து வந்து என் மனதெங்கும் வியாபித்து நிற்கிறது என்பதுதான் உண்மை.

படத்தைப் பார்த்து வெகு நேரத்திற்கும் நான் திரைப்படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். நரம்பில்லாத நாக்காக இருந்தாலும் இந்த நாக்கில் எப்போதும் கத்தியை அல்லவா சொருகிக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கிறோம். இதில் எத்தனை பேரை நாம் குத்திக் கிழித்திருப்போம்…!? இன்னும் எத்தனை பேரை குத்திக் கிழிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்….!? என்கின்ற எண்ணமே ஒரு விதமான வெறுப்பை என் மீது உமிழ்ந்தது. எத்தனை எதிரிகளை என் வாழ்க்கையில் நான் சம்பாதித்து இருப்பேன்.. அதில் எத்தனை பேரை எதிரிகள் என்றே எண்ணாமல் இருப்பேன்..” என்கின்ற கேள்விகளும் என்னை விடாமல் துரத்துகின்றன.

இது ஒரு கொரிய மொழி திரைப்படம். சமீபகாலமாக கொரிய சினிமா உலகளாவிய அளவில் கவனத்தை கவர்ந்து வருகின்றது. கதை என்னவென்று பார்த்தால் வழக்கம் போல சாதாரண ஒரு பழிவாங்கும் படலம் தான் கதை. ஆனால் பழிவாங்குவதற்கான காரணமும், பழி வாங்கும் விதமும் தான் படத்திற்கான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு உயரமான கட்டடத்தின் மொட்டை மாடியில் ஹீரோ, தன் கையில் ஒரு நாயை வைத்துக் கொண்டு மாடி விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் டையைப் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க.. அவன் “உனக்கு என்ன வேண்டும் என்னை விட்டுவிடு..” என்று கெஞ்சுகிறான். ஹீரோ ”நான் என் கதையை உனக்குச் சொல்ல வேண்டும்” என்று தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.

போலீஸ் நிலையத்தில் ”ஓ தேஜ்ஜு யூ” என்னும் பெயர் கொண்ட கதாநாயகனை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்க.. அவனுக்கு அருகில் ஒரு இளம் காதல் ஜோடி அமர்ந்திருக்கிறது. ஹீரோ முழு போதையில் இருக்கிறான்.. போலீஸ் அடித்த அடியில் அவனது மூக்கில் இருந்து ரத்தம் வழிகிறது. அதனை தடுத்து நிறுத்த ஒரு பஞ்சு அவனது மூக்கில் சொருகப்பட்டு இருக்கிறது. அவனிடம் போலீஸ் அருகிலிருந்த அந்த இளம் ஜோடியில் இருந்த பெண்ணைக் காட்டி, ஏன் அவளிடம் நீ தகராறு செய்கிறாய்..? என்று விசாரிக்கிறார். அவன் முழுக்க நிதானம் இழந்து போய் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிக்க முற்படுகிறான். தன் பெயருக்கு “இன்றைய நாளை வெகு எளிதாக கடந்து செல்பவன்” என்று அர்த்தம் என்று கூறிக் கொள்கிறான்.

இன்று தன் மகளுக்கு  3-வது பிறந்த நாள் நான் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவளுக்காக வாங்கிய பரிசையும் தன் தோளில் மாட்டிக் கொண்டு ஆடுகிறான். தன் மனைவி மகளுடன் தான் இருக்கும் போட்டோவைக் காட்டி தன் மகள் அழகாக இருக்கிறாளா..? என்று கேள்வி எழுப்புகிறான். மீண்டும் சிறுநீர் கழிக்க முற்படுகிறான்.. இருக்கையுடன் சேர்த்து கைவிலங்கிட்டு அவனை அமர்த்துகிறது போலீஸ். அவனது நண்பன் வந்து அவனை காவலில் இருந்து கூட்டிச் செல்கிறான். வீட்டுக்குச் செல்லும் வழியில் மழை பெய்யத் தொடங்குகிறது, வழியில் இருக்கும் டெலிபோன் பூத்தில் தன் மகள், மனைவியுடன் பேசுகிறான் ஓ தேஜ்ஜூ. உடன் வந்த தன் நண்பனிடம் ரீசிவரைக் கொடுத்து தன் மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கச் சொல்லி விட்டு போன் பூத்துக்கு வெளியே நிற்கிறான். நண்பன் பேசிவிட்டு மீண்டும் ஓதேஜ்ஜூவை அழைக்க பதிலேதும் இல்லை.. வெளியில் வந்து பார்த்தால் ஆட்கள் குடை பிடித்தவாறு கடந்து சென்று கொண்டிருக்க.. ஹீரோ அங்கு இல்லை. அவன் தன் மகளுக்காக வாங்கிய அந்த பரிசு சாலையில் விழுந்து கிடக்கிறது. டைட்டில் கார்ட் ஓடத் தொடங்குகிறது..

டைட்டில் கார்டின் இறுதியில் தரையை ஒட்டிய நிலையில் ஒரு சிறிய செவ்வக வடிவிலான வெளிப்புறமாக பூட்டப்பட்ட கதவு காட்டப்படுகிறது. தூரமாய் கேட்கும் காலடிச்சத்தம் நெருங்கி வந்து கதவைத் திறக்க.. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் ஹீரோ உள்ளிருந்து தலையை வெளியே நீட்டி படுத்த நிலையில் கெஞ்சத் தொடங்குகிறான்.

“பிரதர், இது எந்த இடம் சொல்லுங்களேன்.. என்னை அடைச்சி வச்சி ரெண்டு மாசம் ஆகுது.. எவ்ளோ நாள் என்ன அடைச்சி வப்பீங்க.. ஏன் அடைச்சி வச்சிருக்கீங்க… எப்ப விடுவீங்க.. ஏன் அடைச்சி வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு உரிம இல்லயா.. என்று கெஞ்சிக் கொண்டே…” வழங்கப்பட்ட சாப்பாட்டை உட்புறமாக விசிறி அடிக்கிறான்.. இப்போது கோபத்தில் கத்தத் தொடங்குகிறான்.. “பாஸ்டர்ட் நான் உன் மூஞ்சிய பாத்துட்டேன்.. வெளிய வந்தேன்..  மவனே நீ செத்த… உன்ன கொல்லாம விடமாட்டேன்..” என்று வெறி பிடித்த மிருகம் போல் கத்துகிறான்… வெளியில் நிற்பவன் காலால் ஹீரோவின் முகத்தை தள்ளி கதவை பூட்ட முயல.. மீண்டும் கெஞ்சத் தொடங்குகிறான்.. “ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுருங்க.. நான் இப்டி நடந்துக்க மாட்டேன்..” என்று கெஞ்சுகிறான்.. இப்போது கேமரா உட்புறமாக சென்று ஹீரோவின் குமுறலை பதிவு செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும் கேமரா சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு படத்தில் நிலைகொண்டு நிற்கிறது.

அதில் ஒரு நடுத்தரவயது இளைஞனின் படம் அழுகிறான் என்றும் சிரிக்கிறான் என்றும் சொல்வதற்கு ஏற்றாற் போல் வரையப்பட்டு இருக்க.. ஹீரோவும் அழுவதற்கும் சிரிப்பதற்கும் இடைப்பட்ட நிலையில் நின்று அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க.. அதில் கீழ்கண்ட வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது. “ நீ சிரிக்கும் போது இந்த உலகம் உன்னோடு சிரிக்கும், நீ அழும் போது தனியாகத்தான் அழ வேண்டும்”

”எத்தனை வருடம் என்னை அடைத்து வைத்திருப்பாய் என்ற கேள்விக்கு அவன் பதினைந்து வருடம் என்று பதில் சொல்லி இருந்தால் அது எனக்கு எளிதானதாக இருந்திருக்குமா.. அல்லது கடினமானதாக இருந்திருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை என்று ஹீரோவின் குரல் மீண்டும் கேட்கிறது.

அவன் கவனம் பதிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும் போது அவனது கைவிரல்கள் மட்டும் ரிமோட்டின் பொத்தான்களை அழுத்திக் கொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சியில் அவன் தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிறது. அவனது மனைவி கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட ரத்த மாதிரியும், கைரேகைகளும் ஹீரோ ஓ-தேஜ்ஜூவின் கைரேகைகளுடன் ஒத்துப் போவதால் போலீஸ் அவன் தான் கொலைகாரன் என்று நம்புவதாகவும் தெரிவிக்கிறது. மேலும் அவன் கடந்த ஒரு வருட காலமாக காணாமல் போயிருந்தான் என்றும்.. மனைவியுடனும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடனும் எப்போதும் சண்டை போடுவான் என்றும் போலீஸ் தெரிவிக்கின்றனர். தன் மனைவியுடன் ரகசிய தொடர்ப்பில் இருந்திருக்கலாம் என்றும் தாங்கள் சந்தேகிப்பதாக போலீஸ் தெரிவிக்கிறார்கள். மேலும் அவனது மனைவி வீட்டில் இருந்து ஒரு போட்டோ ஆல்பம் தொலைந்து போனதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த செய்தியை கேட்ட ஹீரோ தன் உடலில் எறும்புகள் ஊறி துளைப்பது போல் தோற்றம் தர மயங்கிச் சரிகிறான்..

மிகவும் சோர்ந்த நிலையில் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோவின் குரல் மீண்டும் கேட்கத் தொடங்குகிறது. ”உங்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.. மழைநாளில் போன்பூத்துக்கு அருகே, வயலட் நிற குடையுடன் முகத்தை மறைத்தவாறு உங்களை நோக்கி ஒருவன் வருவானானால், அன்று முதல் உங்களது காலம், நேரம், நிமிடம், காலண்டர், நண்பன், எதிரி, மனைவி, குழந்தை, குடும்பம், கோயில், சர்ச், காதலி, எல்லாமே டெலிவிசனாக ஆகப்போகிறது என்று உங்களை எச்சரிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே, அவன் டீவியில் பாடிக் கொண்டிருக்கும்  பெண்ணின் உடலை ஆசையுடன் தடவ…. சில வருட காலமாக மனிதனைப் பார்க்காத குறிப்பாக பெண்ணைப் பார்க்காத அவனது தாபம் வெளிப்படுகிறது. அந்தப் பாடல் சீக்கிரமே முடிகிறது. இவன் கோபத்தில் டிவியை கைகளால் குத்த.. டிவி உடைந்து, கண்ணாடி குத்தி கைகளை பதம் பார்க்க… ஹீரோ மயக்கமாகிறான்..

நினைத்துப் பாருங்கள். இன்று இரவு உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நீங்கள் வீட்டுக்கு செல்கீறீர்கள். வழியில் நீங்கள் கடத்தப்பட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சிறை அறையில் அடைக்கப்படுகிறீர்கள். உங்களுக்கும் இந்த உலகத்திற்குமான தொடர்பு என்பது ஒரு இரண்டங்குல கதவு வழியே மட்டுமே.. அதுவும் சாப்பாடு கொடுக்க அந்த கதவு திறக்கப்படும் போது.., உள்ளே எல்லா வசதிகளும் இருக்கும், (டெலிபோன் தவிர்த்து), உங்களுக்கு அதிகமாக முடி வளர்ந்தாலோ, அல்லது உங்கள் அறையை தூய்மை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டாலோ… ஒரு இசை உங்கள் அறையில் ஒலிக்கும்.. அதைத் தொடர்ந்து ஒரு புகை உங்கள் அறையை நிறைக்கும்.. நீங்கள் மயக்கம் தெளிந்து எழும்போது அறை புத்தம் புதிதாக இருக்கும். உங்கள் முடி வெட்டி அழகுபடுத்தப்பட்டு இருக்கும்..

இது போக அவ்வபோது மனவசியம் செய்யும் சிகிச்சையும் நடக்கும். ஏன் என்று வழக்கம் போல் உங்களுக்கு தெரியாது. நீங்கள் தற்கொலை செய்ய முயன்றாலும் காப்பாற்றப்படுவீர்கள்.. உங்களை ஏன் கடத்தி இருக்கிறார்கள்..? எவ்வளவு நாள் அடைத்து வைப்பார்கள் எதுவுமே சொல்லப்படமாட்டாது..? மனித இனங்களுடனான உங்கள் தொடர்பு அற்றுப் போய் பதினைந்து வருடங்கள் இருக்கும் என்றால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்.. உங்களை அடைத்து வைத்தவனைப் பிடித்து கண்டந்துண்டமாக வெட்டி காணா பிணமாக்க உங்கள் உள்ளம் துடிக்காது….

அதே நிலையில் தான் ஹீரோவும் இருக்கிறான்.. தன் எதிரிகள் யார் என்று பட்டியல் தயார் செய்கிறான். தன் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறான். அதன் முடிவில் அவன் கூறுகிறான் “நான் மிகச்சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்தேன் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் அப்படி இல்லை.. நான் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்…” சுவற்றில் தன் எதிரியின் மாயையான உருவத்தை வரைந்து விரல் முஸ்டியால் அதனைக் குத்தி வலுவேற்றிக் கொண்டு தன் எதிரியை உடல்ரீதியாக எதிர்க்க தயார் ஆகிறான்.

தான் எத்தனை ஆண்டுகள் இங்கே இருக்கிறோம் என்று கணக்கு வைத்துக் கொள்ள தன் புறங்கைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கோடுகளை கிழிக்கிறான்.. தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் செய்து கொள்ளும் அதே நேரத்தில், சாப்பிடுவதற்குப் பயன்படும் ஜாய் ஸ்டிக்கை வைத்து சுவற்றின் செங்கலை தோண்டி, தோண்டி தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்துகிறான். எப்படியோ தோண்டி.. தன் கை வெளியே போகும் அளவுக்கு வழி ஏற்படுத்தி கையை வெளியே விட.. அத்தனை வருடத்திற்கு பிறகு முதன்முறையாக மழைநீர் அவன் கையை நனைக்கிறது.. சந்தோசத்தில் துள்ளுகிறான்.. எல்.ஐ.சி போன்ற ஒரு 30 மாடி கட்டிடத்தில் குறைந்தது ஒரு 25ம் மாடியின் வெளிப்புறம் அவன் கை மட்டும் வெளிப்புறம் நீண்டு மழையை துலாவிக் கொண்டிருக்கிறது.. அற்புதமான காட்சி அது.

இன்னும் ஒரு ஆண்டில் தான் இந்த இடத்தை விட்டு தப்பித்து விடலாம் என்கின்ற நம்பிக்கைப் பிறக்கிறது. வெளியே சென்றவுடன் என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறான்.. தன் எதிரியை எப்படி பழிவாங்கலாம்.. அதற்கு பணம் தேவைப்படுமே எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறான்.. மயக்க வாயு அவன் அறைக்குள் பரவத் தொடங்க.. தான் தோண்டிவைத்த துளையை கட்டிலைத் தள்ளி மறைக்கிறான்.. மயங்குகிறான்.. உள்ளே நுழையும் ஒரு பெண் அவனை வசியம் செய்யத் தொடங்குகிறாள்…

பச்சை நிறப் புல்வெளியில் வைக்கப்பட்ட சிவப்பு நிறப் பெட்டி திறந்து கொள்ள.. அதில் ஹீரோ அவன் எழுதிய வாழ்க்கை குறிப்பு நோட்டுகளுடன் வெளிவருகிறான். அது எந்த இடமென்றே அவனுக்குத் தெரியவில்லை.. அவன் கண்கள் 15 வருடம் கழித்து சூரிய ஒளியை எதிர்கொண்டதால் கூசத் தொடங்குகிறது. தூரத்தில் ஒருவன் கையில் நாய்குட்டியுடன் நின்று கொண்டிருக்க.. மனிதனைக் கண்ட சந்தோசத்தில் அவனை முகர்ந்து பார்க்கிறான் ஹீரோ.. அந்த மனிதன் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய எத்தனிக்க.. ஹீரோ அவனது டையை பிடித்திழுத்து காப்பாத்தி தன் கதையை சொல்லத் தொடங்கும் முதல் காட்சியில் படம் வந்து நிற்கிறது..

முழுகதையையும் சொல்வது என் நோக்கமல்ல.. இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலை உங்களுக்கு தூண்ட வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். இந்த திரைப்படத்தின் மைய கருத்து தொடர்பான விவரணைகளுடன் கூடிய என் கருத்தை வேறொரு பதிவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன்.. நாம் அதைப் பற்றி விரிவாகவே பிறகு விவாதிக்கலாம்.

ஹீரோ தன்னை சிறைப்படித்தியவனை கண்டுபிடித்தானா..? ஏன் அவன் ஹீரோவை சிறைப்படுத்தினான்..? அவனுக்கு ஹீரோ என்ன தண்டனை கொடுத்தான்..? சிறைப்படுத்தியவன் ஏன் ஹீரோ தன்னை தேடிவர எல்லா தடயங்களையும் அவனுக்கு கொடுக்கிறான்..? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா…? இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள்.

அருமையான திரைக்கதை. சமீபகாலத்தில் இப்படி ஓர் திரைக்கதை உள்ள படத்தை நான் பார்த்ததில்லை. எதிலுமே சோடை சொல்லமுடியாத ஒரு முக்கியமான திரைப்படம்.. கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, பிண்ணனி இசை என்று ஒவ்வொன்றும் அதன் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் படம்.

தன்னை தேடி வந்த ஹீரோவிடம், ஹீரோவை சிறைப்படுத்தியவன் சொல்லும் ஒரு வசனம் வரும்…” நீ உன்னைக் கேட்டுக் கொண்ட கேள்வியே தவறாக இருக்கும் போது, உனக்கு எப்படி சரியான பதில் கிடைக்கும்..” “ஏன் என்னை பதினைந்து வருடம் அடைத்து வைத்தான்..? என்றுதானே நீ யோசிக்கிறாய்…? அது தவறான கேள்வி. நீ கேள்வியை திருத்து, உனக்கு பதில் கிடைக்கும்..” என்று கூறுவான். ”மணலாக இருந்தாலும் கடினமான பாறையாக இருந்தாலும் இரண்டும் ஒரே போன்றுதான் நீரில் மூழ்கிப் போகும்..” இப்படி பல இடங்களில் வசனங்கள் கதையை சொல்லாமல் சொல்கின்றன… அது போல படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். உயிரோட்டமுள்ள அந்த வசனம் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.. மிக மிக அற்புதமான வசனங்கள்.

15 வருட சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வரும் ஹீரோ லிப்டில் ஒரு பெண்ணை சந்திப்பான்.. அப்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவன் படும் பாடு இருக்கிறதே.. மேலும் ஒரு இளைஞர் பட்டாளத்துடன் அவன் சண்டை போடுவான். அப்போது அவர்கள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அடிப்பார்கள். அதை உள்வாங்கும் ஹீரோ தனக்குத் தானே சொல்லிக் கொள்வான், “தொலைக்காட்சி, மொழியின் வளர்ச்சியை உள்வாங்கிக் கொள்வதில்லை.. போலும்..” இப்படி பல இடங்களில் அற்புதமான நடிப்பு.. இப்படிப்பட்ட ஒரு கதைக்களனை நம்முடைய சூழலில் யோசிப்பது என்பதே இயலாதது..

படத்தை பார்த்து முடிக்கும் போது, நம்முடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை ஒரு முறையாவது எண்ணிப் பார்த்து, உண்மையிலேயே மனசாட்சி உள்ள மனிதர்கள் ஓரளவுக்காவது வருந்துவார்கள், என்பதே இந்த படத்திற்கான வெற்றி…

Thursday, 11 April 2013

சேட்டை:


மூன்று பேச்சலர்ஸ் ரிப்போர்டர்ஸ். அதில் இரண்டு காமெடியன்கள். ஹீரோ என்பதால் அவர் வழக்கம் போல் ஒரு லட்சியத்துடன் பத்திரிக்கை நிருபராகிறார். ஆனால் அவருக்கு தரப்படும் உப்பு சப்பு இல்லாத உப்புமா வேலைகளை கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஹாஸ்ட்லி காதலி. பொழுதுபோக்குக்காக ஏர்கோஸ்டராக வேலை செய்பவள். தன் பணபலத்தால் தனக்கு வேண்டியபடி தன் காதலனை மாற்ற துடித்துக் கொண்டிருப்பவள். இது போக இங்கீலீஸ் பேப்பர் ரிப்போர்ட்டராக இன்னோரு நாயகி. இவர்கள் கைகளில் நாசர் அண்ட் கோ –க்கு சப்ளை செய்ய வேண்டிய டைமண்ட்ஸ் மாட்டிக் கொள்ள.. அது ஒவ்வொருவர் கைக்கும் மாறி மாறி சென்று, கடைசியில் என்ன ஆனது என்று சொல்லும் கண்ணாமூச்சி ஆட்டமே இந்த சேட்டை.

ஆர்யா எதற்கு கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டு.. என்ற முடிவுக்கு வந்து விட்டார் போல் தெரிகிறது. எல்லா ப்ரேமிலும் சந்தானத்துக்கு பேக்-அப் பாகவே நின்று கொண்டு இருக்கிறார். ஹன்சிகாவுடன் ஆடுகிறார், பாடுகிறார். சில நேரங்களில் டைமண்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். சந்தானம் படத்தில் கக்கூஸ்சிலேயே குடி இருக்கிறார். படம் முழுக்க இவரைக் கொண்டு அஜீரணம் தொடர்பாக வரும் நகைச்சுவை எல்லாம் ஜீரணிக்க முடியாதவை. தியேட்டரே நாறுகிறது. பிரேம்ஜிக்கு வழக்கம் போல.. இதிலும் ஒருதலைக் காதல்…., தோல்வி…., புலம்பல்….. ஒரு பாடல்… அதே வகையறா..

படத்தை ஆங்காங்கே காப்பாற்றுவது சந்தானத்தின் டைமிங்க் காமெடி மட்டும்தான். ஆனால் அதிலும் பாதி இடங்களில் வேறு நெடி வீசுகிறது. ஆங்கில ரிப்போர்ட்டராக அஞ்சலி. ஆங்கிலம் பேசி நடித்திருக்கிறார். ஆர்யாவை காதலிக்கிறார். வேறு ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. நாசர் மனோபாலா போன்றோரும் வீண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியில் வந்த “டெல்லி பெல்லி” படத்தின் தமிழ் தழுவல் தான் இந்த சேட்டை.. இந்தியில் இது போன்ற ப்ளாக் கியுமர் ஸ்டெயில் காமெடிகளை ஓரளவுக்காவது ரசிப்பார்கள். ஆனால் தமிழில் இவை சுத்தமாக எடுபடவில்லை

இசை தமன். பாடல் ஒன்று கூட தேறவில்லை. பிண்ணனி இசை பரவாயில்லை ரகம். பி.ஜி. முத்தையாவின் கேமரா தேவையானதை சிறப்பாக செய்திருக்கிறது. இயக்கியவர் ஆர். கண்ணன். ஜெயம் கொண்டானில் நம்பிக்கை விதைத்தவர்.. அதற்குப் பிறகு முளைக்காமல் இருப்பது தான் சோகம்.. வந்தான் வென்றான் தவிர்த்துப் பார்த்தால் இது இரண்டாவது ரீமேக்.. முதல் ரீமேக்கான கண்டேன் காதலை இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ”ஜாப் வி மேட்” திரைப்படம். தமிழில் சரியாகப் போகவில்லை. இப்போது சேட்டையிலும் முத்திரைப் பதிக்க தவறி இருக்கிறார்.

Wednesday, 10 April 2013

சென்னையில் ஒரு நாள்:


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயந்திரகதியான வாழ்க்கையை வெளிப்புறம் இருந்து தீர்மானிக்கும் சக்தியாக பல விசயங்கள் செயல்படுகின்றன. அதில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக மாறி இருப்பது சாலைகளும், அதில் நாம் நாள்தோறும் செய்யும் பயணங்களும். இரு வாகனங்களுக்கு இடையேயான சிறு மோதல், சிக்னல் இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு குழப்பம், தவிர்க்கமுடியாமல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், நமக்கு சம்பந்தமே இல்லாமல் யாருக்கோ ஏற்பட்ட ஒரு விபத்து இப்படி சாலைகளில் ஏற்படும் எந்தவொரு அசாத்தியமான சம்பவங்களும் நம்முடைய வாழ்க்கையை ஏதோவொரு விதத்தில் நம்மையும் அறியாமல் மாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு விபத்தால் மாறிப் போகும் சிலரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது இந்த “சென்னையில் ஒரு நாள்”

சென்னையில்  2008 செப்டம்பர் 20ல் ஒரு விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த சிறுவன் ஹிதேந்திரனின் இதயம் அவரது மருத்துவ பெற்றோர்களின் அனுமதியுடன் பெங்களூரைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்கு மாற்றிப் பொருத்தப்பட்டது. இது இந்திய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்ட ஹிதேந்திரனின் இருதயத்தை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முகப்பேரு மருத்துவமனைக்கு எப்படி விரைவில் கொண்டு செல்வது என்ற தயக்கத்தில் மருத்துவக்குழு போலீசை நாடியது. போலீசின் உத்தரவின்படி ஆயிரம்விளக்கு பகுதியிலிருந்து முகப்பேறு செல்லும் பகுதியில் மொத்த டிராபிக்கும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஹிதேந்திரனின் இருதயம் 14கீமி தொலைவை வெறும் பத்து நிமிடத்தில் போலீஸ் துணையுடன் கடந்து முகப்பேறு மருத்துவமனையை அடைந்தது. இது வரலாறு.

இதனை 2010ல் மலையாளத்தில் ட்ராபிக் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். அதே திரைப்படத்தை இப்போது ”சென்னையில் ஒரு நாள்” என்ற பெயரில் தமிழ்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு பொறுக்கி கும்பல் காரில் செல்லும் ஒரு பெண்ணை டீஸ் செய்து கொண்டே பைக்கில் துரத்துகின்றனர். அந்தப் பெண் பதற்றத்தில் எதிரே வந்த ஒரு பைக்கில் மோதிவிடுகிறாள். இது ஒரு எபிசோட்.

லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு டிராபிக் கான்ஸ்டேபிள் பல அவமானங்களுக்குப் பின்னர் ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் மீண்டும் வேலையில் சேருவதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். (சேரன்) இது ஒரு எபிசோட்.

தமிழகத்தின் மிக முக்கியமான ஸ்டார். அவரது மகளோ தான் செஸ் போட்டியில் வென்ற பதக்கங்களைக் காட்ட ஆவலோடு இருக்கிறாள். அவர் அதற்கென்று நேரம் ஒதுக்காமல் விழாக்களிலும், மீட்டிங்கிலும், சூட்டிங்கிலும் மூழ்கிக் கிடக்க.. தன் மகளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள் ஒரு தாய். இது ஒரு எபிசோட்.(பிரகாஷ்ராஜ், ராதிகா)

தன் காதலியைப் பார்த்து டூயட் பாடிய வாயோடு, தான் புதிதாக சேர்ந்த வேலையில் இன்றைக்கு ஒரு பிரபலமான மனிதரை எடுக்கப் போகும் நேர்காணலுக்கு, தன் நண்பன் மற்றும் அம்மாவோடு அமர்ந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கிறான் கார்த்திக் என்ற இளைஞன். இது ஒரு எபிசோட்.

தன் மனைவிக்கு கல்யாண நாள் பரிசாகக் கொடுக்க ஒரு புதியகாரை ட்ரையல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ராபின் என்னும் ஒரு மருத்துவர் அவரோடு வரும் அவரது நண்பன் தன் போனில் பீச்சில் பழக்கமான ஒரு பெண்ணுடன் வரம்புமீறி பேசிக் கொண்டிருக்கிறான். இது ஒரு எபிசோட் (பிரசன்னா, இனியா).

இந்த நெருக்கடியான சூழலில் கார்த்திக் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைய, அவரது இருதயத்தை பிரபல நடிகரான பிரகாஷ்ராஜின் மகளுக்கு பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முதலில் மறுக்கும் கார்த்திக்கின் பெற்றோரான லஸ்மி ராமகிருஷ்ணனும், ஜெயப்பிரகாஷும், பின்னர் சம்மதம் தெரிவிக்க, எல்லாம் தயாராகும் நேரத்தில் க்ளைமேட் சரியில்லாத காரணத்தால் இருதயத்தை சாலைவழியாக கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவும் சென்னையில் இருந்து வேலூருக்கு. மொத்தம் 170கீமி தூரம். வெறும் 11/2 மணி நேரத்தில் கடக்க வேண்டிய கட்டாயம்.

இது சாத்தியமில்லாத முயற்சி என்று முட்டுக்கட்டைப் போடுகிறார் சிட்டி கமிஷ்னர் சரத்குமார். இறுதியில் அவரும் சம்மதிக்க யார் இந்த தூரத்தை அசுர வேகத்தில் கடப்பது என்ற சிக்கல் வருகிறது. தன் களங்கத்தை துடைக்கும் வாய்ப்பாக இதை எடுத்துக் கொண்டு முன் வருகிறார் சஸ்பெண்டு செய்யப்பட்டு மீண்டும் ட்யூட்டியில் சேர்ந்த சேரன். போலீஸ் தரப்பில் சேரன், டாக்டர் தரப்பில் பிரசன்னா, இறந்த கார்த்திக்கின் நண்பன் இவர்கள்டன் பயணம் தொடங்குகிறது. உச்சக்கட்டத்தில் பயணம் சென்று கொண்டிருக்கும் போதே வண்டியுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் கடக்க வேண்டிய இடத்திற்கும் வண்டி வந்து சேரவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் போலீஸ் முழிக்க.. நிறுத்தி வைக்கப்பட்ட ட்ராபிக்கால் மக்கள் கொதித்தெழ.. என்ன செய்வது என்று தெரியாமல் திட்டத்தை கைவிடும் நிலைக்கு சரத்தின் டீம் தள்ளப்பட… அடுத்து என்ன ஆனது என்பது சினிமாத்தனம் கலந்த திக்திக் நிமிடங்கள்.

பலர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், லஷ்மி ராமகிருஸ்ணா ஆகியோரைச் சொல்லலாம். தன் மகனின் இருதயம் போலீஸ் வேனில் வைத்து கொண்டு செல்லப்படுவதை தூரத்தில் ஒரு பிரிட்ஜ் மீது நின்று கொண்டிருக்கும் தங்கள் காரில் இருந்து பார்த்துக் கொண்டே உடைந்து போய் அழும் இடத்தில் இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். அதுபோல ஐசியூவில் இருக்கும் கார்த்திக்கை ஒருவர் மட்டும் பார்க்கலாம் என்று சொல்லும் போது கார்த்தியின் நண்பன் கார்த்தியின் காதலியை உள்ளே போகச் சொல்ல.. அவள் யார் என்றே தெரியாமல் கார்த்திக்கின் பெற்றோர் பார்க்கும் காட்சியும், அவள் ஏதும் சொல்லாமல் கடந்து சென்று உள்ளே நுழைவதற்கு முன் கார்த்திக்கின் பெற்றோரை திரும்பிப் பார்க்கும் காட்சியும் கவித்துவமானது. பிரகாஷ்ராஜின் நடிப்பை சொல்ல வேண்டுமென்றால் தன் மகளின் டீச்சர் யார் என்பதை அவளிடம் கேட்டே தெரிந்து கொண்டு, கேமராவைப் பார்த்து பேசும் காட்சியில் அட்டகாசமான நடிப்பு….


உடல் உறுப்பு தானம் என்று சொல்லப்படும் ஒரு முக்கியமான விசயத்தை பேசு பொருளாக கொண்டு வந்திருப்பதாலேயே இந்த திரைப்படம் ஒரு தவிர்க்கமுடியாத திரைப்படம் ஆகிறது. முதலில் கூறியபடி வரும் எபிசோடுகள் ஒரே சீராக இல்லாமல் இடைத்தாவல்கள் இருப்பதால் அதன் வீரியத்தை முழுவதுமாக அவை பிரதிபலிப்பது இல்லை. அந்த நான் லீனியர் கதை சொல்லும் முறையை தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினர் உடல் உறுப்பு தானம் என்னும் விசயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்ததாலோ என்னவோ, விபத்து நடப்பதற்கு முக்கியக் காரணமான செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் போலும். வாகனத்தை அசுர வேகத்தில் ஒட்டிச் செல்லும் சேரன் கூட கமிஸ்னருடன் மொபைல் போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுகிறார். தவிர்த்திருக்கலாம்.

கடைசி இருபது நிமிடத்தில் காட்டப்படும் சூர்யா சம்பந்தப்பட்ட ஜிந்தா பகுதி காட்சிகள் எல்லாம் பக்கா சினிமாத்தனம். இவர்கள் பாய்ந்து பாய்ந்து வண்டியில் ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கும் போது இவர்கள் யாருக்காவது ஆக்சிடெண்ட் ஆகிவிடுமா என்ற பயம் கவ்விக் கொள்கிறது. இருப்பினும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சீரியஸான சோகமான கதைக்களனைக் கொண்ட இது போன்ற திரைப்படத்துக்கு கொஞ்சமேனும் சினிமாத்தனம் தேவை என்பதால் அவைகளைப் பொறுத்துக் கொள்ளலாம். இது போன்ற சீரியஸான படத்துக்கும் கூட்டம் வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.