Sunday, 31 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா:


வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு இருக்கும் இரண்டு நண்பர்கள். இவர்களுக்கு அரசியலில் சாதிக்க வேண்டும் என்று உயர்ந்த….! லட்சியம். இவர்கள் இருவரையும் வழக்கம் போல எந்தக் காரணமும் இன்றி காதலிக்கும் இரண்டு நாயகிகள்., காதலிலும் சிக்கல், அரசியல் ஆசையிலும் சிக்கல். இரண்டும் கைகூடியதா என்பது மீதி கதை..

இதெல்லாம் ஒரு கதை என்று கேட்பவர்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன் இதுதான் கதை. அப்பா அம்மா பேச்சை மதிக்காமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் நண்பர்களாக விமலும் சிவகார்த்திகேயனும். இவர்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டு உடன் சுற்றித் திரிபவராக வரும் சூரி, வீட்டோடு மாப்பிள்ளை. மாமனாரிடம் பாக்கெட் மணியோடு பக்கெட் பக்கெட்டாக வசவுகளையும் வாங்கிக் கொண்டு எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் கதாபாத்திரம். இவர்களுக்கு இன்னும் இரண்டு அல்லக்கைகள் வேறு.

தேனீ என்ற செல்லப்பெயருடன் வளைய வருகிறார் விமல். பில்லா படம் வெளிவந்த காலத்தில் பிறந்ததால் இவருக்கு பில்லா என்று இன்னோரு செல்லப் பெயர் வேறு. உண்மையான பெயர் இன்னொன்று உண்டாம். அது கேசவனாம்…!? இதில் K7 என்று புதிய கண்டுபிடிப்பு வேறு. சிவகார்த்திகேயன் கதையை பார்த்தால் சிறுவயதில் சளி பிடிக்கிறது என்று அவரது தாய் திருநீறை நெற்றியில் பட்டையாக அடிக்க ஆரம்பித்து, அவர் பழநி மழை முருகன் போல் இருந்ததால் அவருக்கு பேர் முருகனாம்…. முருகா……!!!!!!!!!!!!  

விமலுக்கு ஜோடியாக பிந்துமாதவி. ஏன் விமலை காதலிக்கிறார் என்றே தெரியாமல் காதலித்துக் கொண்டு இருக்கிறார். இதில் ஆங்காங்கே விமலோடு மூன்றாந்தரத்திலான சண்டை காட்சிகள் வேறு. படு கேவலமாக இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா. இவரைக் காட்டும் போதெல்லாம் ஜெராக்ஸ் கடையை திறந்து வைத்து, தூசி தட்டிக் கொண்டே இருக்கிறார். கடை ஷட்டரை திறந்து வைத்து உதவி செய்த ஒரே காரணத்துக்காகத்தான் இவரும் சிவகார்த்திகேயனை காதலிக்கத் தொடங்குகிறார். இரண்டு கதாநாயகிகளுமே இரண்டாவது காட்சியிலேயே ஹீரோவை திரும்பித் திரும்பி பார்த்து சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பின்பு முறைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஏன் என்றுதான் கடைசி வரை தெரிவதில்லை. அப்படி ஒரு அசத்தலான கதாபாத்திரம். இது பசங்க படம் தந்த பாண்டியராஜ் தானா என்று சந்தேகம் வருகிறது.

ஆனாலும் படத்தை காப்பாற்றுவது ஆங்காங்கே டைமிங்கில் வரும் காமெடி மட்டுமே. அதற்கு பல இடங்களில் சிவகார்த்திகேயனும் சூரியும் கேரண்டி தருகிறார்கள். ஒன்றிரண்டு காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் எல்லாரும் காமெடி ஸ்கிரிப்டை நோக்கி திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கதை என்ற  வஸ்து பெயரளவில் கூட இல்லாமல் கதை செய்வது தான் நம்மை நெளிய வைக்கிறது. நானும் கூட படம் பார்க்கும் போது குறைந்தது பத்து இடங்களிலாவது சிரித்து இருப்பேன். ஆனால் அது எந்த இடங்கள் என்று எழுதும் வரைக்கும் கூட அவை மனதில் நிற்காமல் போனது தான் சோகம்…

கதை வேண்டாம். சோகம் வேண்டாம். சுவாரஸ்யம் வேண்டாம். லாஜிக் வேண்டாம். எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆங்காங்கே சிரிக்க மட்டும் வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு உடையவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சரியான சாய்ஸ் இந்த ”கேடி பில்லா கில்லாடி ரங்கா”

கலகலப்பு> கேடி பில்லா கில்லாடி ரங்கா > கண்ணா லட்டு தின்ன ஆசையா

Monday, 25 March 2013

வாடிவாசல்      

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
பதிப்பகம்: காலச்சுவடு, எழுத்துப் பிரசுரம்
வரிசை: குறுநாவல்.

இலக்கியப் பெருவெளியில் ஒரு முக்கியமான படைப்பாகக் கருதபடுவது இந்த வாடிவாசல் என்னும் குறுநாவல். செல்லாயி சல்லிக்கட்டில் நடக்கும் மாடணையும் போட்டியில் மாடணைய வந்த பிச்சு என்கின்ற இளைஞனுக்கும், அவன் கண்டிப்பாக அடக்க வேண்டும் என்னும் ஆதங்கத்துடன் வந்த வாடிபுரம் ”காரி” என்னும் காளைக்கும் இடையில் நடக்கும் ஜீவ-மரண போராட்டம் தான் இந்த வாடிவாசல்.

இந்த நாவல் எழுதப்பட்ட விதம் என்னை பெரிதும் ஈர்த்தது. ஒரு சிறப்பான திரைக்கதையின் அடிப்படை கூறுகளைக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு இருக்குமோ என்று ஐயுறத் தோன்றுகிறது. மொத்தமே 76 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவலைப் எடுத்த எடுப்பில் படித்து விட முடியும். ஆனால் முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா என்கின்ற ஒரு ஏக்கத்தை உண்டாக்குவதே இந்த நாவலின் வெற்றி.

உசிலனூரில் இருந்து மாடணைய வந்திருக்கும் பிச்சியும், அவனது மச்சான் மருதனும் செல்லாயி சல்லிக்கட்டு வாடிவாசலில் நிற்பதில் இருந்தே ஆரம்பமாகிறது நாவல். அதைத் தொடர்ந்து அறிமுகமாகும் அந்த வயதான கிழவனும், ஜமீந்தாரும், காரி காளையும், முருகுவும் ஒரு விறுவிறுப்பான ஜல்லிக்கட்டை விட இந்த நாவலை விறுவிறுப்பாக எடுத்துச் செல்கின்றனர். எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சுணக்கம் ஏற்படுத்தாத நாவல்.

இந்த நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகின்ற இடம் மிகவும் நுட்பமானது. உதாரணமாக முருகு என்கின்ற அந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் இடத்தைச் சொல்லலாம். இது போன்ற விடயங்கள் தான் ஒரு சிறப்பான திரைக்கதைக்கான தோற்றத்தை நாவலுக்கு கொடுக்கிறது. அதுவரைக்கும் மாட்டுக்கும் மனிதனுக்குமான மோதலை, கெளரவம் என்ற பெயரில் மனிதனுக்கும் மனிதனுக்குமான போட்டியாக, ஒரு மனிதனின் சார்பாக போட்டியாளனாக அந்த இடத்தில் மாடு கலந்து கொள்கிறது என்னும் சேதியை சொல்லாமல் சொல்லும் நுட்பம் அலாதியானது. அது போக திட்டிவாசல் தொடர்பாண விவரணைகள், ஒவ்வொரு மாடை பற்றிய நுட்பங்கள், அதை அவர்கள் வெற்றி அடைய கையாளும் தந்திரங்கள், அங்கு மாடு அணைபவர்களுக்குள் ஏற்படும் போட்டி, பொறாமை, ஜமீந்தாரின் அடையாளமாக, மரியாதையாக கருதப்படும் “வாடிபுரம் காரி காளை” என அத்தனை விவரங்களும் துல்லியமானவை.

இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் பார்க்காதவர்கள் இந்த நாவலைப் படித்தாலே போதும். பல ஊர் ஜல்லிக்கட்டை சில பக்கங்களில் கடந்துவிட்ட திருப்தியை அடைவார்கள் என்பது உறுதி.

ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுசனுக்கும் நடக்கிற விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் இந்த வாடிவாசல். இதனை ஒரு வீர விளையாட்டு என்று ஏற்றுக் கொள்வதில் சில  சிக்கல் இருக்கிறது. ஒரு விளையாட்டு என்றால், அது ஒரு விளையாட்டு என்று இருதரப்பினருக்குமே தெரியும். ஆனால் இங்கு எதிராளியாக இறங்கும் காளைக்கு இது ஒரு விளையாட்டு என்பது தெரிவதற்கு வாய்ப்பேயில்லை.

ரோசம் ஊட்டப்பட்டு வாடிவாசலில் மூக்கணாங்கயிறை உருவி வெளியேற்றப்படும் காளைகள் என்னும் மிருகங்கள் இதை ஒரு விளையாட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால் தமிழ் சமூக வரலாற்றில் “ஏறு தழுவதல்” என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் ஆயர்கள் வாழும் முல்லை நிலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காட்சிகள் வீரவிளையாட்டுகளாக வர்ணிக்கப்படுகின்றன..
எனினும் சற்று கூர்ந்து பார்த்தால், இந்த விளையாட்டில் யார் சற்று கவனக் குறைவாக இருக்கிறார்களோ அவர்களின் உயிர் பறிக்கப்படும்.. அது மாடாகவும் இருக்கும்.. மனிதனாகவும் இருக்கும்.. அப்படி இருக்கையில் இதனை விளையாட்டு என்று சொல்வதை விட வேட்டை என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்ற காலக்கட்டத்தில் அதனை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ வழக்காட என் மனம் ஒப்பவில்லை. இருப்பினும் ஒரு விசயம் முரணாகத் தெரிகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவது பெரும்பாலும் ஜீவகாருண்ய நேசர்கள் தான் இதனை மிருகவதை என்று சொல்லி தடை கோருகிறார்கள். ஆனால் இந்த வாடிவாசலை படித்தால் தெரியும்.. இதில் மிருகவதையை விடவும் மனிதவதை அதிகம் என்பது…!

Wednesday, 20 March 2013

வத்திக்குச்சி:


ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் முருகதாஸின் தயாரிப்பில் வரும் இரண்டாவது படம். முதல் படமான எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்த தரத்தை உத்தேசித்து, துணிந்து இந்த படத்திற்கும் சென்று வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். முந்தைய படத்தைப் போலவே இந்தப் படத்திலும் தனது உதவி இயக்குநரான கின்ஸ்லின்யை இயக்குநராக்கி அழகு பார்த்திருக்கிறார் முருகதாஸ். முருகதாஸின் தம்பி தீலீபன் தான் ஹீரோ. ஆனால் முதல் படத்திற்கான கதைதேர்விலேயே கோட்டை விட்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வந்த ரெளத்ரம் என்ற படத்தின் ஒன்லைனுக்கும் இந்த வத்திக்குச்சியின் ஒன்லைன்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதில் ஜீவா தன் தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்ததால் சிறுவயதிலிருந்தே தீமைகளை கண்டால் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவராக வளருவார். அவர் தட்டிக் கேட்கும் சில அநியாயங்களால் அவரது சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. அதேதான் இங்கும். ஆனால் ஹீரோ சக்தி(தீலீபன்) இங்கு அநியாயங்களை தட்டிக் கேட்கும் எண்ண மாற்றங்களை தனக்குள் எப்போது விதைத்துக் கொண்டார் என்பதில் தெளிவில்லாத தன்மை நிலவுகிறது.


படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒரு ரவுடி (சம்பத்), ஒரு தொழிலதிபர் (ஜெயபிரகாஷ்), ஒரு சாமானிய எல்.ஐ.சி ஏஜெண்ட், (நண்டு ஜெகன்) மூவருமே யாரோ ஒருவனை கொல்ல வேண்டும் என்னும் ஆக்ரோசத்தோடு அலைகின்றனர். அவர்கள் அப்படி கொல்ல அலைவது யார் என்று நம்மை அதிகம் யோசிக்க வைக்காமல், இவர்கள் கொல்ல அலைவது இவனைத்தான் என்று ஹீரோவுக்கு ஒரு ஓபனிங் சீன் வேறு வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஏன் ஹீரோவை கொல்ல அலைகிறார்கள்…? அவன் அவர்களிடம் இருந்து தப்பினானா..? இல்லையா..? என்பது மீதிக் கதை.

ஷேர் ஆட்டோ ஓட்டுநரான சக்திக்கு தாங்கள் தங்கியிருக்கும் சமத்துவகுடியிருப்பில் இரண்டு வீடு தள்ளி குடியிருக்கும் மீனா (அஞ்சலி) மீது காதல்… “நான் உன்ன காதலிக்கல.. நீ வேணா என்ன காதலிச்சிக்கோ..” எனக்கு பிரச்சனையில்ல..” என தீலீபனை சுத்தவிடும் அஞ்சலி வீட்டாவில் ஸ்போக்கன் இங்கீலீஸ் கோர்ஸ் படிப்பவர். இந்த காதல் ஓடிக் கொண்டிருக்கும் போதே தனிப்பட்ட முறையில் சக்திக்கு ஒரு பிரச்சனை சம்பத் கோஷ்டியினரால் வருகிறது. அந்தப் பிரச்சனையை அவர் தீர்க்கும் முறை சற்று வித்தியாசமானது, மிகவும் காமெடியானது. அதன் முடிவில் இனி தன் கண் முன்னால் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் தாந்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று ஹீரோவுக்கு ஞானோதயம் வருகிறது. கூடவே கூட்ஸ் வண்டி போல பிரச்சனையும்…

ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்கள் கூட பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகளை தவிர்த்து வரும் சூழலில், இப்படி ஒரு படத்தை தன் தம்பிக்காக எப்படி முருகதாஸ் ஓகே செய்தார்.. என்பது கேள்விக்குறி. ரவுடி சம்பத் தன் சகலை ரவிமரியாவிடம் தண்ணியடித்துவிட்டு பேசுவார்… “பச்ச முட்ட… கொண்ட கடல… இதெல்லாம் ஊறப்போட்டு தின்னுட்டு, ஜிம்முக்கு போய்ட்டு வந்தா நம்மள அடிச்சிரமுடியுமா.. இல்ல நம்மள மாதிரிதா ஆகிடமுடியுமா…” என்று ஹீரோவை கேலி செய்வார். இப்படி தமிழ்சினிமா ஹீரோயிசத்தை பகடி செய்துவிட்டு அதையே இம்மி பிசகாமல் இயக்குநரும் கடைபிடித்து இருப்பதை என்னவென்று சொல்வது….?


ப்ளாஸ்பேக்கை ஓப்பன் செய்கின்ற விதங்களில் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக சம்பத் தனக்கும் ஹீரோவுக்குமான பிரச்சனையை ரவிமரியாவிடம் விளக்குவது, ஹீரோ தனக்கும் ஜெயப்பிரகாஷ்க்கும் இடையேயான பிரச்சனையை அஞ்சலியிடம் விளக்க.. அவர் “போடா.. உனக்கு பொய் சொல்லவே தெரியல..” என அவரை கலாய்க்கும் இடங்கள் சற்றே சுவாரஸ்யமானவை. அது போல அந்த வேளச்சேரி ப்ரிஜ்க்கு அடியில் வைத்து நடக்கும் கொலை முயற்சி (கொலை நடக்கப் போவதை அவர் எப்படி கண்டுகொண்டார் என்பதை தவிர்த்து…) கடைசி க்ளைமாக்ஸ்க்கு சம்பத் ரெடியாகும் முன்பான, முன் நடவடிக்கைகளில் இருந்த டீடெய்லிங்க், இவை எல்லாமே சூப்பர். ஆனால் க்ளைமாக்ஸ்……………….?! தியேட்டரில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். உண்மையில் படக்குழுவினரின் எண்ணம் ஆக்சன் படம் எடுப்பதா.. இல்லை காமெடிப் படம் எடுப்பதா என நமக்கு குழப்பம் வருகிறது.

இது போக படத்தில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அஞ்சலி. படத்திற்கு மிகப் பெரிய ரீலிவ் அஞ்சலிதான். வீட்டா இங்கிலீஸ் கோர்ஸ் படிப்பதாக இவர் அடிக்கும் அரைகுறை இங்கிலீஷ் வசனங்கள் காமெடிக்கு கேரண்டி.. அவர் இல்லாமல் அந்த இரண்டரை மணி நேரத்தை கடப்பது மிகவும் கடினம். இருப்பினும் அஞ்சலிக்கு இதில் நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படியான படம் இல்லை. இது போக ஆங்காங்கே சில இடங்களில் வசனம் ஓகே. தீலீபன் நடிப்பில் இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும். சரண்யாவை அம்மா கேரக்டரிலேயே பார்த்து சலிக்கத் தொடங்குகிறது.


ஜிப்ரானின் இசையில் “கண்ண கண்ண உருட்டி உருட்டி…” பாடல் மட்டும் ஓகே. பிண்ணனி இசை பரவாயில்லை. குருதேவின் கேமரா சிம்ப்ளி சூப்பர். ஆனால் சண்டைகாட்சிகள் தான் மனதை நெருடுகிறது. பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் பொழுது போக்க எண்ணி செல்வதற்கு இந்தப்படம் ஓகேதான். சண்டைகாட்சிகளையும் காமெடி கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்னும் அதிகமாக என்ஜாய் செய்யலாம்.

Friday, 15 March 2013

பரதேசி:


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளிவந்திருக்கும் படம். படத்தின் ரீலிசுக்கு சற்று முன்பு, பாலா பரதேசி தொடர்பான ஒரு டீசரை வெளியிட ஏகத்தும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதைப்பற்றி பதிவின் இறுதியில் பார்ப்போம்.

1939-ல் சென்னை மாகாணத்தின் தென் பிராந்தியத்தில் இருக்கும் சாலூர் என்னும் ஒரு கிராமத்தில் இருந்து வேலையும் நல்ல கூலியும் தருகிறோம் என்று நயவஞ்சகமாகப் பேசி ஒரு கங்காணியால் ஏமாற்றப்பட்டு, கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு இழுத்துச் செல்லப்படும் ஆதரவற்ற ஒரு ஏழை மக்களின் கூட்டத்துக்கு “பச்சைமலை எஸ்டேட்” என்னும் தேயிலைத் தோட்டத்தில் ஏற்படும் துன்பவியல் தீண்டல்களே இந்த பாலாவின் பரதேசி.

கி.பி1969ல் “RED TEA” என்ற நாவல் PAUL HARRIS DANIEL என்பவரால் எழுதப்பட்டு, அதன் தமிழ் மொழிபெயர்ப்பு “எரியும் பனிக்காடு” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே இந்த பரதேசி என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான் எரியும் பனிக்காடு என்ற அந்த நாவலை இதுவரை வாசித்ததில்லை என்பதால் அது எந்த அளவுக்கு நம்பகத்தனமான செய்தி என்பதை அழுத்தந் திருத்தமாக பேச இயலவில்லை. எனினும் திரைப்படத்தின் எந்த இடத்திலும் இது இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றது போல் தெரியவில்லை என்பதால் இதை பாலாவின் படைப்பாகவே தற்போது அணுகலாம்.

படத்தின் ஆரம்பத்தில் கேமரா ஒவ்வொரு குடிசைகளுக்கும் ஊடாக பயணித்து செல்கிறது. செல்லும் போதே அந்த மக்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்த வண்ணமே செல்கிறது. இடிந்த நிலையில் கிடக்கும் வீட்டின் நிலைச்சுவரின் மீதேறி விளையாடும் சிறுவர்கள், தட்டாங்கல் ஆடும் சிறுமிகள், பழக்கம் பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆண்கள், மத்து கொண்டு தயிரு கடையும் பெரியம்மா, முற்றம் தெளிக்கும் அக்கா என நீண்ட காட்சியாக பயணிக்கும் கேமரா, தமுக்கடிப்பவனின் மீது முட்டி தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறது.

தமுக்கடிப்பவனாக அதர்வா. பேருக்கு பஞ்சமில்லை அவனுக்கு. சோறுக்குத் தான் பஞ்சம். அவனை நினைக்கிறேன் என்று சொல்லித் திரியும் அங்கம்மா (வேதிகா) கூப்பிட ……….. பொறுக்கி என்று ஒரு பெயர், ஊர்காரர்கள் கூப்பிட ஓட்டுப் பொறுக்கி என்று ஒரு பெயர், ராசா என்று உண்மையாக ஒரு பெயர், அதை அவன் மட்டுமே சொல்லிக் கொள்வான். “நியாயமா……ரே, ஏதோ கூலு, கஞ்சி ஊத்துங்க.. ராசா வண்டிய வுடணும்…” இந்த வசனம் படத்தில் பல இடங்களில் வருகிறது.

படத்தின் ஆரம்பத்தில் தமுக்கடித்து கல்யாணசேதி சொல்பவனாக வரும் ராசா…, இறுதிகாட்சியில் கையில் தமுக்கு இல்லாமல் மேகம் முட்டிக் கொண்டு இருக்கும் ஒரு உச்சிப் பாறையின் மீது அமர்ந்து பெருங்குரலெடுத்து கத்தி சேதி சொல்லுவான். உயிரை உலுக்கும் காட்சி அது. சேதி சொல்லி ஒவ்வொரு வீடாக படியரிசி கேட்டு நிற்கும் போதும் சரி, தங்கராசு கல்யாணத்தில் நெல்லு சோறு திங்க ஆசைப்பட்டு, பந்தியில் உட்கார.. பால், பணியாரம் என எதுவுமே அவனது இலையில் விழாமல் நகர்ந்து செல்ல… இலையில் விழும் நிழலைப் பார்த்துக் கொண்டே, “ராசாக்கு பாலு.. ராசாக்கு பணியாரம்…” என்று பரிதாபமாக கேட்க, ஊரார் எல்லாம் அவனை கேலி பண்ணிச் சிரிக்க.. (இங்கு சாதிய தீண்டல் இலைமறை காயாக சொல்லப்பட்டுள்ளது) விம்மி உடைகின்ற நிலையில் “ராசா வண்டிய உட்டுருவேன்…” என்று சொல்லும் போது அனுதாபம் அள்ளுகிறார். அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகன் என்று சொல்ல இந்த ஒரு காட்சியே போதும். பாவம் பார்த்து ரசிக்க முரளிதான் இல்லை.

அழகான பதுமையாக மட்டுமே நாம் கண்டு வந்த வேதிகாவை, அவருக்கு அழகாக நடிக்கவும் வரும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறார் பாலா. தயிரு கடையும் மத்தைக் கொண்டு குடத்தை அடித்துக் கொண்டே அதர்வாவை இமிடேட் செய்து கேலி செய்யும் அங்கம்மாவாக வேதிகா. ஓயாமல் அதர்வாவை வம்பிழுத்துக் கொண்டும், பந்தியில் அவனை சாப்பிட விடாமல் “உங்க பெரியப்பனக் கூட்டிட்டு வா அப்பத்தா பணியாரம்..” என்று துரத்தி அடிக்கும் போதும், அவன் அழுது கொண்டே அந்த இடம்விட்டு செல்வதைக் கண்டு கலங்கி, காட்டுக்குள் தனியாக உட்கார்ந்து ஆவேசமாக தமுக்கடித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு சோறூட்ட முயல, அவன் ஆவேசமாக மறுக்க.. அவன் தலைமயிரைப் பற்றிக் கொண்டு அதே ஆவேசத்துடன் அவள் வாயில் சோற்றைத் திணிக்கும் போதும், ஆடவனின் தலையில் தன் கை இருப்பதை உணர்ந்து சட்டென்று கையை விலக்கி வெட்கப்படும் போதும், அதே வெட்கத்துடனே “நான் உன்ன நினைக்கிறேன்..” என்று தன் காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், பஞ்சாயத்து நடக்கும் போது மரத்துக்கு நடுவில் தன் அடிபொடுசுகளுடன் மறைவாக நின்று கொண்டு, வசனம் இல்லாமலே ராசாவோடு பேசும் போதும் முற்றிலும் புதிய, அழகான, கருப்பு சாயம் பூசப்பட்ட வேதிகா.

பச்சைமலை எஸ்டேட்டில் ஏற்கனவே கொத்தடிமையாக பிழைப்பு நடத்தும் மரகதமாக தன்ஷிகா. தன்னையும் தன் மகளையும் தனியாக தவிக்கவிட்டு, தன் உயிரை மட்டும் காப்பாத்திக் கொண்டு எஸ்டேட்டில் இருந்து தப்பி ஓடிய தன் கணவனால் ஆண் சமூகத்தையே வெறுக்கும் கதாபாத்திரம். எப்படி உடை அணிய வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் போதும் சரி, கருத்தகன்னி மனதை புண்படுத்தும் ராசாவை புடதியில் அடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடத்திலும், கருத்தகன்னியை சோரம் போகச் சொல்லித் தூண்டும் பெண்களை கண்டிக்கும் போதும், ஆடவன் கைபட்ட தன் துணியை எரிக்கும் போதும், ஊருக்கு திரும்ப முடியாத சோகத்தில் பெட்டியை தூக்கி எரிந்து விட்டு விம்மி அழும் போதும் பிரமாதமான நடிப்பு. தன்ஷிகா தமிழில் நடிக்கத் தெரிந்த அழகான, தமிழ் நடிகை இல்லை என்ற பஞ்சத்தைப் போக்குவார் என்று உறுதியாக நம்பலாம்.

பெரியப்பாவாக வந்து செல்லும் விக்ரமாதித்தன், சிறிது நேரமே வந்தாலும் வரும் இடமெல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார். அந்த மந்திரி காமெடிக்கு தியேட்டரே அதிர்கிறது. கருத்தகன்னியாக வரும் ரித்விகா, தங்கராசாக வரும் உதய் கார்த்திக் என்று அனைவருமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

கொத்தடிமையாக வந்தவர்களை 18 மாதங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்ப அனுப்பப் போகிறார்கள் என்று கனவோடு காத்திருக்கச் செய்து, அந்தக் கனவை சுக்கு நூறாக நொறுக்கி, அவர்களை மீண்டும் அந்த மரணக் குழியில் தள்ளி, முடிந்த அளவுக்கு அட்டைப் பூச்சிகளும் அதிகாரப் பூச்சிகளும் ரத்தம் குடிப்பதற்கு, கங்காணி பயன்படுத்தும் குறுக்குவழி திட்டம் கொடூரமானது.

நாஞ்சில் நாடனின் வசனங்கள் வசீகரிக்கின்றன. கிராம மக்களுக்கே உள்ள துடுக்குத்தனதோடு, தூய்மை என்று அறியப்படும் மாயையை விலக்கி இயல்பான மக்களின் பேச்சுவழக்கை நம்மை எட்ட நின்று எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது நாடனின் சொல்லாடல்கள். கடல் அதிர்வால் ஏற்பட்ட இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இடைவெளியில் ஒரு அழகான ஆபத்தில்லாத பாலத்தைக் கட்டி இணைத்திருக்கிறது நாடனின் வசனங்கள். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு… “இது தேயிலைத் தோட்டமா.. இல்ல கல்லறை தோட்டமா…” “ உன் வண்டிய கொண்டு போயி ஊர் காரன் …..” “ம்ம்ம் அத உங்க மந்திரிகிட்டயே கேளுங்க…” “நான் உன்ன நினைக்கிறேன்..”

செழியனின் கேமரா இல்லாமல் படத்திற்கு இத்தனை எதார்த்தம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அற்புதமான ஒளிப்பதிவு. கதையை மீறாத கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு. பஞ்சம் பிழைக்கச் செல்லும் கூட்டத்தைக் காட்டும் எஸ்டாபிளிஸ்மெண்ட் சாட்டும், விறகு வெட்டிய கூலியை வாங்கும் முன் நெட்டி முறியும் அதர்வாவுக்கு நெற்றிப் பொட்டில் வைத்த டாப் ஆங்கிள் ஷாட்… க்ளைமாக்ச் காட்சியின் போது பாறைமீது அமர்ந்திருக்கும் அதர்வாவுக்கு வைக்கப்பட்ட லோ ஆங்கில் சாட்டும் அற்புதம். இப்படி ஒவ்வொரு பிரேமிலும் ஒரு தனித்தவம் தெரிகிறது.

ஜி.வி. பிரகாஷ்குமாருக்கும் லைஃபில் இது ஒரு மைல்கல். ஏற்கனவே “Gangs of wasseypur” ல் தன் பிண்ணனி இசை திறமையை நிருபித்தவர் இதிலும் மிகமிக சிறப்பான பிண்ணனி இசையை கொடுத்திருக்கிறார். பாடல்களிலும் செங்காடே, அவித்த பையா இரண்டும் கதைக்களனோடு இயைந்து வாழ்வை உணரச் செய்யும் அனுபவத்தைக் கொடுக்கிறது. அதற்கு வைரமுத்துவின் வரிகள் மிகுந்த துணை செய்திருக்கிறது. “நண்டுகளை கூட்டிகிட்டு நரி போகுதே…” ”கூட்டம் கூட்டமாய் வாழப் போகிறோம்.. கூட வருகுதே சாவு.” “உள்ளூரில் காக்கா குருவி இறை தேடுதே” வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காலைப் போல் வத்திப் போச்சையா வாழ்வு” உண்மையாகவே ரத்தத்தைக் கொண்டு எழுதிய எழுத்துக்களோ என்று ஐயமுறத் தோன்றுகிறது. செங்காடே பாடல்களின் வரிகளைக் சற்று கவனியுங்கள்.. நான் எழுதிய வார்த்தைகளில் பசப்பு இல்லை என்று புரியும். கலை இயக்குநர் C.S.பாலச்சந்தர் புதியவராம், நம்பவேமுடியவில்லை. அற்புதமான கலை வடிவம்….

குறையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. படம் தொடங்கி வெகு நேரம் சென்றப் பின்னரே கதை தொடங்குகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அதர்வா பிழைப்பு தேடி அயலூரில் விறகு வெட்டிவிட்டு கூலி கேட்டு கங்காணியிடம் மாட்டிக் கொள்வதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. அதற்கு முன்புவரை ஒட்டுப் பொறுக்கியின் கேரக்டரைசேசன் மற்றும் அங்கம்மாளுக்கும் ஒட்டுபொறுக்கிக்கும் இடையேயான காதல் என்று வழக்கமான தமிழ்சினிமா பாணியில்தான் பயணிக்கிறது. ஆனால் ஒட்டுப் பொறுக்கியாக வரும் அதர்வாவின் கேரக்டரைசேசன் அந்த சலிப்பை வெளித் தெரியாமல் அமுக்கிவிடுகிறது.

மேலும் அங்கம்மாளின் கதாபாத்திரம் ஏற்கனவே பல பாலா படங்களில் பார்த்துப் பழகிய அடாவடி பெண்களின் டச் தான். அது போல ஊரில் பஞ்சம் என்னும் செய்தியை, ஒரு வேளையாவது ஊர் மக்கள் நெல்லு சோறு திங்கட்டும் என்று இழவு விழுந்த செய்தியைக் கூட மறைத்து, திருமணம் நடத்தும் காட்சி மட்டும் விளக்குகிறது. அந்த ஊர் மக்களின் தொழில் என்ன..? பஞ்சத்தால் அந்த தொழிலுக்கு என்ன பாதிப்பு வந்தது…? வேறு எந்தக் கூலித் தொழிலுமே செய்ய இயலாத சூழ்நிலையா? இது போன்ற கேள்விக்கு பதில் இல்லை. மேலும் இது போன்ற படங்களுக்கு கதைக்களன் மிகமிக முக்கியம். இவர்கள் பஞ்சம் பிழைக்கச் செல்லும் பச்சைமலை எங்கு இருக்கிறது என்பதையும் போகிறபோக்கில் எங்காவது சொல்லியிருக்கலாம். கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கம் எந்த அளவுக்கு கீழ்தரமானதாக இருந்தது என்பதை விளக்கும் காட்சிகளில் இருந்த நையாண்டிகள் யதார்த்தத்தை கொன்றுவிடுகிறது. அதனையும் யதார்த்தமான தொனியில் சொல்லி இருந்தால் இன்னும் ஆழமாகவே தைத்திருக்கும்.

இயக்கத்தைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அந்த டீசரில் பாலா எப்படி வேலை வாங்கினார் என்பதனை அடிப்படையாகக் கொண்டது. எல்லோரையும் அடித்து, அதட்டி மிரட்டி வேலை வாங்கினார் என்று ஒரு குற்றச்சாட்டு. படத்தில் கங்காணி சொல்வது போல் ஒரு வசனம் வரும்…”போ… போய் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ வேலயப் பாரு.. பின்ன ஊரு வந்து சேந்து, ஒரு வீட்டக் கட்டு, மாட்ட வாங்கி கட்டு, காடு கழனி வாங்கி வேலயப் பாரு, பொண்டாட்டி புள்ளைகளுக்கு நகை வாங்கிப் போடு.., மீதி காசு பணம் இருந்தா இன்னொருத்திய சேத்துக்க…” என்று. ஆனால் கங்காணியின் இந்த வாக்குறுதிகள் காற்றில் கரைந்தவைதான்.. கடைசிவரை நிறைவேறாமலே போய்விடும்.

பாலா படத்தில் நடிப்பதும் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பது போன்றது தான். ஆனால் கங்காணியின் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும். பாலா படத்தின் நாயகர்களை எடுத்துப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும். உண்மையாகவே ஒரு சிறு கூலிக்காக இன்றும் தினம் தினம் செத்துப் பிழைக்கும் எந்த ஒரு மனிதக் கூட்டத்தைக் கண்டும் காணாமல் விலகிச் செல்லும் நாம், 20 நாளோ 60 நாளோ கால்சீட் கொடுத்துவிட்டு லட்சம் லட்சமாக, கோடி கோடியாக சம்பாதிக்கும், சம்பாதிக்கப் போகும் நடிகர் நடிகைகளை காட்சியின் எதார்த்தத்திற்காக சற்று உடல் வருத்தி வேலை வாங்கினால் மட்டும் கண்டனக் குரல் எழுப்புவது எப்படி நியாயமாகும்.. இங்கு எந்த வேலைதான் கஸ்டம் இல்லாமல் இருக்கிறது.. விமர்ச்சிக்கும் வேலையை தவிர… உலக சினிமா என்று நாம் போற்றும் படங்களுக்காக அந்த நடிகர் நடிகைகள் எப்படிப்பட்ட உடலுழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுக்கிறார்கள் என்று நாம் அறிவதில்லை. இது போன்ற அர்ப்பணிப்புகள் இல்லாமல் தமிழில் உலகம் போற்றும் படைப்புகள் எப்போதுமே சாத்தியப்படாது. ஒரு படைப்பாளனுக்கு சுதந்திரம் மிகமிக முக்கியம். அதை அவனிடம் பறிக்கும் நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது கலைக்கு நல்லது.

உண்மையாக நடந்த சம்பவம் என்பதால் அதன் வீரியம் சற்றும் குறையாமல், எந்தவிதமான வணிகசினிமா கலப்பும் இல்லாமல், தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட, அறியப்படாத வாழ்க்கையை அச்சில் ஒரு படைப்பாக கொண்டு வந்து, அதை அழியாத சாட்சியாக ஆவணப்படுத்தி இருக்கும் இந்த அற்புதமான உழைப்புக்காக பாலாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படி நம் சொந்த மக்களின் அடிமை வாழ்க்கையை கண்முன் விரித்துக் காட்டி, அவர்களை உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்ய வேண்டியது காலத்தின் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழ் சினிமா தன் தடங்களை மாற்றிக் கொண்டு புதிய தளத்தில் பயணிக்கத் தொடங்கினால் அதற்கு இந்த பாலாவின் பரதேசி ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

Thursday, 14 March 2013

KAI PO CHE:


Kai po che என்பது குஜராத் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு ப்ரேஸ் ஆகும். அதற்கு ”அந்தப் பட்டத்தை நான் அறுத்துவிட்டேன்” என்று பொருள். காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து பறக்கத் தொடங்கும் பட்டமானது, வானை மட்டுமே அதன் ஒரே குறிக்கோளாகக் கொண்டு மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தீடீரென்று எதிர்பாராமல் அதன் வால் அறுந்துவிட்டால் அந்தப் பட்டத்தின் நிலை என்னாகும்..? காற்றினால் அலைகழிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் சுற்றி தரையில் வீழ்ந்து கிடக்கும் அல்லவா..! அந்தப் பட்டம் போல தங்களுக்கென சில குறிக்கோள்களைக் கொண்டு முன்னேறத் துடிக்கும் மூன்று இளைஞர்கள், அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் சில எதிர்பாராத வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்களால் எப்படி காதறுந்த பட்டம் போல் வீழ்ந்து போகின்றார்கள் என்பதே படத்தின் கதை. கதைக்கு மிகச்சரியாகப் பொருந்துவது போல் கவித்துவமான ஒரு டைட்டில்.

கோவிந்த், இஷாந்த், ஓமி என்று மூன்று இளைஞர்கள், மிக நெருக்கமான நண்பர்கள். தங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, கோவிந்த் சொந்தமாக தொழில் தொடங்குவோம் என ஐடியா கொடுக்க, மற்ற இருவரும் அதனை ஆமோதிக்கிறார்கள். இந்து முண்ணனி கட்சி ஒன்றில் செயலாளராக இருக்கும் ஓமியின் மாமா பணம் தருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு கோயில் பின்புறம் ஒரு சிறிய இடத்தில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடத்தை தொடங்குகிறார்கள். கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவனாக இருக்கும் இஷாந்த கடையின் பின்புறம் கிரிக்கெட் கோச்சிங்கும், கணிதத்தில் புலியாக இருக்கும் கோவிந்த டியூசனும் எடுக்கிறார்கள். ஓமி இவர்களுக்கான பணத்தேவைகளை மாமாவிடம் இருந்து பணம் பெற்று நிறைவேற்றுபவனாக இருக்கிறான். அதற்கு பிரதிபலனாக மாமா அவனிடம் இருந்தும் அவனது நண்பர்களிடம் இருந்தும் கட்சி பணிகளை எதிர்பார்க்க.. அவர்கள் முடிந்தவரை டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறார்கள்.

புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஷாப்பிங் மாலில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, தங்கள் தொழிலில் அடுத்த படிநிலைக்கு செல்ல அவர்கள் முற்படும் போது அவர்கள் வாழ்வில் விழும் மிகப்பெரிய அடி அவர்களது வாழ்வை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது மீதிக் கதை.

3 mistakes of my life என்ற சேத்தன் பகத் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். நாவலை நான் படித்ததில்லை என்பதால் படத்திற்கும் நாவலுக்குமான வித்தியாசத்தை உணர முடியவில்லை. குஜராத் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்ற வரலாற்று நிகழ்வுகளை திரைக்கதையில் மிகச்சிறப்பாக பயன்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், இது போன்ற உண்மை நிகழ்வுகளை படமாக்கும் போது, அது ஏதாவது ஒரு தரப்புக்கு சாதகமான அம்சமாக நம்மை அறியாமலும் (சில நேரங்களில் அறிந்தே..!) அமைந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதை இதில் வெகு சிறப்பாக தவிர்த்து இருக்கிறார்கள்.

மேலும் அதற்கான காரணகர்த்தா யார், அது எப்படி நடந்தது என்பதான விவரணைகளை தேவை இல்லாமல் வலியத் திணிக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. ஏனென்றால் இந்த இரு மறக்கமுடியாத சம்பவங்களும் சாதாரண மக்களின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றிப்போடுகிறது என்பது தான் கதையின் மையப்புள்ளி என்பதால் அவர்கள் அதைவிட்டு இம்மி அளவும் பிசகாமல் கதை சொல்லி இருக்கிறார்கள்.

முதல்பாதியில் இஷாந்தாக வரும் சுசாந்த் சிங் ராஜ்புத் நடிப்பும், கோவிந்தாக வரும் ராஜ்குமார் யாதவ் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. இஷாந்த் கிரிக்கெட் மீது உள்ள தீவிரமான காதலால் வீட்டில் எதிர்கொள்ளும் அவமானம், அலி என்னும் முஸ்லீம் சிறுவனிடம் இருக்கும் அபாரமான திறமையைக் கண்டு அவனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்ற படும்பாடு, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பன் ஓமியை அப்டி இப்டி அசையவிடாமல் அமரச் செய்து, ”நீ அசையாத, அசைஞ்சா விக்கெட் விழுது…” என்று கோபப்படுவது, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியருக்கு உதவச் சொல்லி சண்டையிடும் போதும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

டியூசன் சொல்லிக் கொடுக்க வந்த இடத்தில், நண்பனின் தங்கை தன்னிடம் வரம்பு மீறும் போது அதை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கும் இடத்திலும், பூகம்பத்தால் இடிந்துகிடக்கும் மாலுக்கு முன் நின்று அழும் காட்சியிலும், தன் நண்பன் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தான தர்மம் செய்யும் போது அடக்கி வைத்திருந்த கோபத்தை வெடித்து வெளிக்காட்டும் இடத்திலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஓமியாக வரும் அமித் சத்துக்கு இவர்கள் இருவரை விடவும் ஸ்கோர் செய்வதற்கான ஏரியா குறைவுதான். இருந்தாலும் அதை இரண்டாம் பாதியில் ஈடு செய்வது போன்ற காட்சிகளில் தன்னை நிருபித்து இருக்கிறார்.

தங்கையாக வரும் அம்ரிதா புரி அண்ணனின் நண்பனிடம் தனக்கு ”பயாலஜிதான் பிடிக்கும் ஏன்னா அததா நாம அட்லீஸ்ட் ரியலைஸ் பண்ணமுடியும்” என்று சொல்லிக் கொண்டே கையை தொடும் காட்சியிலும், அண்ணனை நண்பர்களுடன் சேர்க்க, அவனது தவறை புரியவைக்கும் காட்சியிலும் அசத்தலான நடிப்பு. அலியாக நடித்திருக்கும் திக்விஜய் தேஷ்முக்கின் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. படத்தின் முதல்பாதியில் கதை பெரிதாக நகருவதில்லை என்பது மட்டுமே குறை. மற்றபடி தரமான ஒளிப்பதிவு, அமித் திரிவேதியின் உறுத்தாத இசை, அபிஷேக் கபூரின் சிறப்பான இயக்கமும் ஒரு நல்ல காண்பனுபவத்தைக் கொடுக்கும் படமாக இந்த Kai po che யை உருமாற்றி இருக்கிறது.

Tuesday, 5 March 2013

சி.பி.ஐயும் செல்லப்பாவும் - சிறுகதை


       பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை 8 மணியிலிருந்து 10 மணியை எப்படியாவது தொட்டுக் கடந்துவிடுவது என, கடிகார முட்கள் 8 மணியை அதிவேகமாக நெருங்கிக் கொண்டிருந்தன.

   அது நெருக்கிய நெருக்கில் பிதுங்கிய மக்கள் கூட்டம், கோடம்பாக்கத்தில் இருந்து சென்னை பீச் நோக்கியும்… தாம்பரம், திருமால்பூர், செங்கல்பட்டு நோக்கியும் மின்சார ரயிலில் அதன் வேகத்தையும் மிஞ்சிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

      பூமிச் சமநிலையை காக்கும் பொருட்டு, ”அகத்திய மா….” குள்ள முனியின் வழிகாட்டுதல் இல்லாமலே, மற்றொரு கூட்டம் கோடம்பாக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது…..

     விரித்து விடப்பட்ட ஈரக்கூந்தலுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் பெண்கள். ஆடை அணிகலன்களில் எதையாவது மறந்துவிட்டனரா…? அல்லது எல்லாவற்றையுமே மறந்துவிட்டனரா..? என்ற குழப்பத்தில் அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, முதுமையை முட்டும் ஒரு முதியவர்க் கூட்டம்.

      மீனாட்சி காலேஜ் மாணவிகளின் “தேவி தரிசனம்” கிடைத்த தித்திப்பில் சூரியனைக் கண்ட சூரியகாந்தியாக முகமலர்ந்து காணப்பட்டனர் சில இளைஞர்கள்..

      இந்த சலசலப்புக்கு நடுவிலும், எந்தவிதமான சலனத்திற்கும் ஆட்படாமல் அங்கும் அமர்ந்திருந்தார் அகத்திய முனிவரின் தோற்றத்தில் சீனியர் செல்லப்பா. கமண்டலத்தை வெற்றிலை டப்பாக்கள் விரட்டி விட்டு இருந்தன…

      குட்டையான உருவமும், பெருத்த தொந்தியும், குறுகிய குடுமியும், கணுக்கால் தெரியும்படி ஏற்றிக் கட்டிய எட்டு முழ வேஷ்டியும், தோளில் தொங்கிய தோல்பையும் அவரை இருபதாம் நூற்றாண்டு காலத்தவர் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டின..

     தண்டவாளங்களுக்கு போட்டியாக தார் கருங்கல் கலப்பின்றி இடைவெளி இல்லாமல் அவர் இட்டிருந்த பட்டையும், இரண்டு ரூபாய் அகலத்தில் இரத்த சிவப்பில் வைத்திருந்த குங்குமத்தையும் கண்டு, சிக்னல் எனக் குழம்பித்தான்.. எந்த ரயிலும் வரவில்லையோ என்ற குழப்பத்திலோ..? என்னவோ….! கடக்கின்ற மக்கள் அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே கடந்தனர்.

     அவருக்கு முதுகுப்புறமாக திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயிலில், ஐந்து அல்லது ஆறு நாமக்காரப் பெண்கள் சேர்ந்த பஜனைக் கூட்டம் ஒன்று, வழக்கம் போல் பாட்டுப் பாடி அதிகாலை 8.35 மணிக்கு திருமாலை எழுப்ப போராடிக் கொண்டிருந்தது…..

      அந்த ஓசையை கேட்டவுடன் கடிகாரத்தை திருப்பிப் பார்த்த செல்லப்பா மூக்குக் கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டே இருமருங்கிலும் பார்வையை ஓடவிட்டார். அவரது கண்ணுக்கு சி.பி.ஐ அன்று தட்டுப்படவே இல்லை….

     “சார் வரல்லய்யா…….” என்ற குரலைக் கேட்டு தனக்கெதிராக நின்று கொண்டு இருக்கும், சென்னை பீச் நோக்கிச் செல்லும் மின்சார ரெயிலில், பொதித்து வைக்கப்பட்ட பூத உடல்களுக்கு இடையே, தனக்கு பரிச்சயமான முகத்தை தேடியவர்… ஐன்னலோரம் கையசைவதைக் கண்டு, பார்வையை அந்தப் பக்கம் திருப்பினார்……

     சிரித்த முகத்துடன் ஜீனியர் செல்லப்பா கையசைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன், சுரத்தில்லாமல், “நீ போப்பா….. நான் குமாரசாமி வந்ததும் வாரேன்……” என்றார். ரெயில் நகரத் தொடங்கியது…

     பொதுவாகவே சீனியர் செல்லப்பாவிற்கு, ஜீனியர் செல்லப்பாவை கண்டாலே பிடிக்காது. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. ஜீனியர் செல்லப்பா பத்து வருடத்திற்கு முன்புதான் சீனியர் செல்லப்பாவின் அலுவலகத்தில் சேர்ந்திருந்தார். சீனியரைக் காட்டிலும் 23 வயது இளையவர்… இவருடைய வருகையால் தான் செல்லப்பாவின் பெயர் சீனியர் செல்லப்பா ஆனது.

      ”கழுதைப்பய…. பேருதான் ஒன்னு… அப்பன் பேருகூடவா ஒரே எழுத்தில ஆரம்பிக்கணும்… இவன் வந்ததுல்ல எல்லாப்பயலும் என் பேரை மாத்திட்டாங்க.. சீனியர் செல்லப்பாவாம்….. சீனியர் செல்லப்பா….. அப்படி என்ன வயசாச்சி எனக்கு… 49 வயசெல்லாம் ஒரு வயசா…? அதுக்குள்ள சீனியர்ங்கிறானுக….” என்று சீனியர்க்கு அர்த்தம் தெரியாமலே… தொலைவில் மறைந்து கொண்டிருந்த ட்ரெய்னைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார், செல்லப்பா…

     இவருக்கு எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் உள்ள ஒர் அரசு அலுவலகத்தில்தான் பணியிடம். கணக்கர் உத்தியோகம். தன்னைப் பற்றிய பீடம்பம் அடித்துக் கொள்வதில் எப்போதுமே தணியாத தாகம் உண்டு.

      அமெரிக்கா-கீயூபா பிரச்சனையில் தொடங்கி, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை தொட்டு, ஓமன் வளைகுடாவில் வளைந்து வந்து, இலங்கை ஈழப் பிரச்சனைகளை தோண்டக்கூடியவர்….

      தினசரியில் வருகின்ற தலைப்புகளைப் படித்துவிட்டே.. அதைப்பற்றிய தலையங்கம் தீட்டும் திறனுள்ளவர் சீனியர் செல்லப்பா… இவருக்கு “ஆமாம்சாமி” போடுவதற்கு என்றே பரமக்குடியில் இருந்து பணி இடமாற்றம் செய்து அனுப்பி வைத்தார்கள் போலும் குற்றாலத்தைச் சேர்ந்த குமாரசாமியை…

       ஊர் குற்றாலமாக இருந்தாலும், குமாரசாமியின் குணம் குரங்கல்ல… ஏனென்றால் மரத்திற்கு மரம் தாவ மாட்டார்… அவருக்கு தெரிந்த ஒரே மரம் ‘செல்லப்பா என்ற கொடிமரம்’ மட்டுமே….

      “என்ன…! சீனப்பெருஞ்சுவர்….. எங்க வீட்டு மதில்சுவரை விடச் சின்னதாக்கும்…” என சீனியர் செல்லப்பா சொன்னால், குமாரசாமியின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

      “சார்… சரியாகச் சொன்னீங்க…… போங்க….!”

      அந்த குமாரசாமிக்காகத்தான் அவர் காத்திருந்தார்.. அவருக்கு அவரைப் பற்றிய துதிப்பாடல் மிகவும் அவசியமாகவே இருந்தது… என்றாலும் அவர் இப்போது காத்து இருப்பது குமாரசாமிக்காக மட்டும் இல்லை….

      ஆறுமாத காலமாக அவர் கோடம்பாக்கம் இரயில்நிலையத்தில் கண்காணித்து வரும் சி.பி.ஐக்காகவும்தான்…! என்பது அவருக்கும் குமாரசாமிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்..!

      “என்ன சார், வந்து ரொம்ப நேரமாச்சா…” என்று கேட்டுக் கொண்டே வந்து செல்லப்பாவுக்கு அருகில் வந்து அமர்ந்தான் குமாரசாமி…

     “ஷ்ஷ்…..!” என்று ஒரு கைவிரலை வாயில் வைத்து, மறுகையின் ஆள் காட்டி விரலை கொண்டு தூரமாய் காட்ட…

      எதிர்திசையில் இருந்து அழுக்கு கறை படிந்த பேண்ட்டும், பல நாள் துவைக்காத மஞ்சள் நிற சட்டையும், அதற்கு மேல் குளிருக்கு போர்த்திக் கொள்ளும் ஆரஞ்சு நிற அழுக்கு படிந்த ஸ்வெட்டரும் அணிந்து கொண்டு, நைந்து போன ரீபக் சூ மாட்டிக் கொண்டு தண்டவாளம் அருகில் தலையை குனிந்த படியே வந்து கொண்டிருந்தான் செல்லப்பாவின் சி.பி.ஐ
.
     “அடேய்! அவனை கிறுக்கன், பிச்சைக்காரன்னு சொன்னாயே…!? கிறுக்கனுக்கும் பிச்சைக்காரனுக்கும் எவன்ட்டா ஸ்டெப் கட்டிங் அடிச்சி விடுறது…” என்று செல்லப்பா கொக்கி போட்ட மதப்பில் குமாரசாமியைப் பார்க்க…

       சி.பி.ஐயை உற்றுப் பார்த்த குமாரசாமி…

      “சார்…. சரியாகச் சொன்னீங்க போங்க..” என்றான்.

      “பின்ன…. நானென்ன சும்மாவாடா சொல்றேன்… கிறுக்கன் மாதிரி இருக்கான்.. யாரையும் எந்த தொந்தரவும் பண்ண மாட்டிக்கான்.. எல்லாரையும் வாட்ச் பண்றான்… நம்ம அவனப் பாக்குறோம்ன்னு தெரிஞ்சா…? பைத்தியம் மாதிரி சிரிக்கிறான், பேசுறான்… மத்த நேரம் எவ்வளோ அமைதியா இருக்கான்..?” என்றார் செல்லப்பா.

     “ஆமா சார்….! முக்கியமா பிச்சை எடுக்கமாட்டிக்கிறான்…! சார்” என்று ஒத்து ஊதினான் குமாரசாமி. “சார் அங்க பாருங்க…” என்றான் குமாரசாமி.

     சி.பி.ஐ குப்பைத் தொட்டியில் கிடந்த லேஸ் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்த சிறு துகள்களை தேடித் தின்றவன், தாகம் தணிக்க தலைகீழாக குத்தி நின்ற காலி Fanta பாட்டிலை எடுத்து தலைகீழாக கவிழ்த்துக் கொண்டிருந்தான்…

      சே…! என்ன புழப்புடா இது….? ப்ளாட்பார்ம்ல தூங்கி, பிச்சைக்காரனா திரிஞ்சி, குப்பைத் தொட்டிய கிளறி…! நாறப் பொழப்புடா…. நம்ம வேல எவ்ளோவோ தாவல.. அது…! நாம பார்க்கிறத பாத்துட்டான்ல… அதான் நாம அவன பிச்சைக்காரன்னு நம்புறதுக்காக நடிக்கிறான்…. என்றார் செல்லப்பா.

     “நீங்க பலே ஆளு சார்…!, எப்டி சார் இத கண்டுபிடிச்சீங்க…?” என்றான் குமாரசாமி.

     “சும்மாவா…. எவ்வளவு கஷ்டப்பட்டேன்… சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்கணும், கொஞ்சமாது யோசிக்கணும், இதுகூட பண்ணாட்டி நாமெல்லா என்ன மனுசன்…? நல்லாப் பாத்தா தெரியும்… போலீஸ், டிக்கெட் செக்கர் யாருமே அவன எதுவும் கேட்கமாட்டாங்க.. அங்கங்க தீவிரவாதி குண்டு வைக்கிறான்.. இந்த சூழ்நிலைல இப்புடி ஒருத்தன் இந்த கோலத்தில ரயில்வே ஸ்டேசனே கதின்னு கிடக்கமுடியுமா…” என்றவர் மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

    “அதுவும் இல்லாம நல்லாப் பாரு… அவன் தினமும் பேப்பர் கடைக்கு முன்னால நின்னு பேப்பர் ஹெட் நீயூஸ் பார்ப்பான்…. பாத்திருக்கீயா… “ என்றார் செல்லப்பா.

    “நான் என்னத்தப் பார்த்தேன்.. அதுக்கெல்லாம் உங்கள மாதிரி அறிவு வேணும்.. சார், அதுக்கெல்லாம் நான் எங்க போவேன்..” என்றான்.

     சீனியர் செல்லப்பாவுக்கு மட்டும் ஸ்பெசலாக பனிக்கட்டி மழை கொட்ட, சிரித்தபடியே இருவரும் ரெயில் ஏறிச் சென்றனர்..

     சில நாட்கள் சென்றிருக்கும். அதே ரயில் நிலையத்தில் சீனியர் செல்லப்பா குமாரசாமிக்காக காத்துக் கொண்டு இருக்கின்ற பட்சத்தில், சி.பி.ஐயையும் கவனித்துக் கொண்டு இருந்தார்.

      நெருங்கிவந்த சி.பி.ஐ செல்லப்பாவின் முதுகுப்பக்கம் செல்லவே, சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த செல்லப்பாவை, ஏதோ பின்னால் பிடித்து இழுத்தது. திடுக்கிட்டு திரும்பினார் செல்லப்பா.

      அவரது குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு சிரித்தான் சி.பி.ஐ. விக்கித்து நின்ற செல்லப்பாவின் கன்னத்தில் திடும்மென ஒரு குத்து விழுந்ததில் தள்ளாடி கீழே விழுந்தார் செல்லப்பா. கடைவாயில் ரத்தம் கசிந்தது. கண்ணாடி இவருக்கு முன்பு கீழே விழுந்து நொறுங்கியது.

       செல்லப்பாவின் முதுகில் ஏறி அமர்ந்து சாணி மிதிக்க துவங்கி இருந்தார் சி.பி.ஐ. செல்லப்பாவின் மதிய உணவு தரையில் கொட்டிக் கிடக்க… அதனை கையால் எடுத்து தன் வாயில் திணித்த சி.பி.ஐ செல்லப்பாவின் முகத்தை திருப்பி சிரித்தார். செல்லப்பாவுக்கு உச்சிக்குடுமியை பிடித்து இழுத்ததில் வலி உயிர் போனது. சி.பி.ஐ சிரித்த சிரிப்பு இவர் வயிற்றில் பீதியை கிளப்பி, கிலி கொள்ளச் செய்தது. ஓரமாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தி பயந்து தூரமாய் விலகினாள். இன்னொருத்தி செல்லப்பாவை பார்த்து உச்சுக் கொட்ட…. இவருக்கு வாயின் கடவாய்பல் கழன்று ரத்தம் கொட்டியது.

       கூடிய மக்கள் கூட்டம், போலீஸ் அனைவரும் சேர்ந்து செல்லப்பாவை மீட்க, தண்டவாளம் தாண்டிக் குதித்து சிரித்துக் கொண்டே ஓடினார் சி.பி.ஐ. கூட்டத்தில் நின்ற குமாரசாமியைக் கண்டு புறங்கையில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே பேந்த பேந்த விழித்தார் செல்லப்பா. பார்க்கவே பரிதாபமாக இருந்தது குமாரசாமிக்கு…

        அடுத்து வந்த நாட்களில் சீனியர் செல்லப்பா குமாரசாமிக்காக காத்திருப்பதே இல்லை.. குமாரசாமியும் சொல்லிப் பார்த்தான். இப்போதெல்லாம் அந்த பைத்தியம் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் இருப்பதே இல்லையென்று.. சீனியர் செல்லப்பாவோ மாம்பலம் சென்று ரயிலேறத் தொடங்கிவிட்டார்.. கோடம்பாக்கத்தை கடக்கும் போது ஜன்னல் வழியாக துலாவுவார், அவன் தென்படுகிறானா என்று, அவன் இவரது கண்ணில் அகப்பட்டதே இல்லை.

       சீனியர் செல்லப்பா மாம்பலம் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக நிற்கும் போது, தூரமாய் சி.பி.ஐ வருவதைப் பார்த்து அதிர்ந்து போய், ஓர் இடுக்கில் மறைய முயல, இவரைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற சி.பி.ஐ பேப்பர் கடையில் தொங்கிக் கொண்டிருந்த பேப்பரின் தலைப்பு செய்தியை படித்துக் கொண்டு இருந்தான். செல்லப்பாவுக்கு தலை சுற்றத் தொடங்கியது…..

Sunday, 3 March 2013

அமீரின் ஆதி-பகவன்:


தமிழ் திரை சூழலில் கூலிப்படை, ரவுடி கேங்க்ஸ்டர் அல்லது மாபியா என்று சொல்லக்கூடிய நிழலுலக தாதாக்களின் வாழ்க்கையை அச்சு அசலாக கண் முன் நிறுத்திய திரைப்படங்கள் மிக அரிது. சற்று பின்னோக்கிப் பார்த்தால் நாயகன், புதிய பாதை, புதுப்பேட்டை என்று ஒன்றிரண்டு படங்களை அந்த சட்டகத்திற்குள் வலுக்கட்டாயமாக திணிக்கலாம். அமீர் இதுவரை நாம் கண்டிராத கிராமத்தின் மற்றொரு உண்மையான முகத்தை தத்ரூபமாக அவரது பருத்திவீரனில் நம் கண் முன் விரித்துக் காட்டினார். அது தந்த நம்பிக்கையில் அமீரின் ஆதி-பகவன் தாதாக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு அழுத்தமான தடயத்தை தழிழ் திரை சூழலில் விட்டுச் செல்லும் என்று நான் நம்பி இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கையை படம் காப்பாற்றவில்லை.

வழக்கமான தமிழ் சினிமாவின் ஆள்மாறாட்டக் கதைய எடுத்துக் கொண்டு அதில் இரண்டு விதமான புதுமைகளை புகுத்தி வெற்றியடைய முயற்சித்து இருக்கிறார் அமீர். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. என்ன புதுமை என்று பார்த்தால் தமிழ் சினிமா மரபின்படி இரட்டை வேட படங்கள் என்றால் பெரும்பாலும் ஒருவன் நல்லவன், ஒருவன் கெட்டவன் என்று கதை புனையப்படும். இங்கு இரண்டு பேருமே கெட்டவர்கள். மற்றொன்று இறுதியில் கெட்டவனும் நல்லவனாக திருந்துவது போன்றோ அல்லது இருவருமே அண்ணன், தம்பி என்பது போன்றோ காட்சிகள் அமைக்கப்படும். இதில் அத்தகைய கிளிசேதனங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதுமட்டுமே போதும் என்று நினைத்துவிட்டது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்.

கதை இதுதான். தாய்லாந்தின் பாங்காங் நகரில் தாதாவாக இருக்கும் ஆதி,(ஜெயம் ரவி) அங்கு உணவுவிடுதியில் பணிபுரியும் ஒரு தமிழ்பெண்ணால்(நீது சந்திரா) ஈர்க்கப்படுகிறான். அவள் அவனது அன்பை புறக்கணிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவனது காதலை ஏற்றுக்கொள்ளும் அவள், ஒரு துப்பாக்கி சண்டையில் தன் உயிரைப் பணயம் வைத்து அவனது உயிரைக் காப்பாற்றுகிறாள். ஆதியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவனை பிரிந்து வாழும் அவனது தாயிடம் உங்கள் மகனை நீங்கள் விரும்புவது போல் மாற்றுவது என் பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறாள். மறுநிமிடம் தன் தந்தையை காண அவனை இந்தியா அழைத்துச் செல்லும் வழியில் ஆடியன்ஸான நமக்கு, ஒரு உண்மை தெரியவருகிறது. அது இந்தியாவில் ஆதியை என்கவுண்டரில் கொல்லத் துடிக்கும் ஒரு அஸிஸ்டெண்ட் கமிஸ்னரிடம் அவள் போனில், ”அவனை நான் கொண்டு வந்து உன்னிடம்  சேர்த்து விடுகிறேன்.. பின்னர் உன்பாடு” என்கிறாள். அவள் அப்படி நடந்து கொள்ள காரணம் என்ன…? ஆதியின் நிலை என்னவானது…? என்பது மீதிக்கதை.

கேட்பதற்கு சுவாரஸ்யமான ஒரு நாட் தான். ஆனாலும் இந்தப் படம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதுதான் நமக்கு மிகமிக முக்கியம். இதே போன்று ஒரு பழைய தமிழ்படத்தின் கதைக்கரு உண்டு. அதில் சிவாஜிகணேசன் கதாநாயகன். நாயகி சரியாக நினைவில்லை. படத்தின் பெயரும்தான். ஆனால் கதை இதுதான். நாயகி நாயகனை உயிருக்கு உயிராக காதலிப்பாள், அவனை திருமணம் செய்ய முயலும் போது பல தடங்கள்கள் வரும். எல்லாத் தடங்கள்களையும் மீறி அவள் நாயகனை மணம் புரிவாள். முதலிரவு அறை பழம் அறுக்க இருந்த கத்தியை எடுத்து, நாயகன் எதிர்பாராத தருணத்தில் அவனை கத்தியால் குத்துவாள். அப்போது இடைவேளை.. ஏன் அவள் அவனை கத்தியால் குத்தினாள், அவர்களுக்குள் என்ன பகை, என்ன பிரச்சனை என்பது மீதிக்கதை. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றபடம் என்றே நினைக்கிறேன்.

ஆனால் மேற்சொன்னபடி இதே மாதிரியான கதை சொல்லும் முறையை கொண்ட அமீரின் ஆதிபகவன் தோற்றுப்போனது ஏன்.? முக்கியமான காரணம் அந்த சிவாஜிபடத்தில் கதையை நகர்த்திச் செல்லும் முதன்மை கதாபாத்திரமாக(புரோட்டகோனிஸ்ட்) கதாநாயகி இருப்பார். அப்படித்தான் ஆதிபகவனிலும் ராணி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நீதுசந்திரா தான் கதையை நகர்த்திச் செல்பவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து கதை ஆதி என்னும் ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் மீது பயணிப்பது போல் கதையை அமைத்ததுதான் முக்கியமான பிழை என்று எனக்குத் தோன்றுகிறது.( அது தவறாகவும் இருக்கலாம்…)

நீது சந்திரா செய்கின்ற சூழ்ச்சிக்கு காரணம், மும்பையில் இருக்கும் தன் உயிருக்கு உயிரான காதலன் பகவானை(ஜெயம் ரவி) சிக்கலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே. அதனால் தான் ஆதியை காதலிப்பது போல் நடிக்கிறார். இந்தியாவுக்கு அழைத்தும் வருகிறார். இப்படி கதையை பெரும்பாலும் நகர்த்திச் செல்லும் கதாபாத்திரமாக நீது இருக்க, படம் ஜெயம்ரவியின் (ஆதி) மீது பயணம் செய்ததால் நிவர்த்தி செய்யமுடியாமல் போனக் குறைகள் என்னவென்று பார்ப்போமா…?

1.முதல்பாதி பயங்கர எரிச்சலை ஊட்டக்கூடியதாக அமைந்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் முதல் பாதியில் கடைசி ஐந்து நிமிடத்திற்கு முன்பு வரை கதை ஆரம்பிப்பதே இல்லை.

2. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் தொடர்பான காட்சிகள் மிகுந்த செயற்கைதனம் கலந்ததாக அமைந்துவிடுகின்றன. ( அவை அனைத்தும் முன்திட்டத்தின் படி ஜோடிக்கப்பட்டவை என்பதை இரண்டாம் பாதியில் கூறினாலும் ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கடந்துவிடுகின்றனர்.)

3. மொத்தகதை நகர்வுக்கும் காரணம், நீதுவுக்கு தன் காதலன் பகவான் மீது இருக்கும் அபிரிமிதமான காதல்தான் என்று இருக்கும் போது அந்த காதல் எப்படி இருக்க வேண்டும்…? ஆனால் அது குறைந்தபட்சம் ஒரு காட்சியாகக்கூட இல்லாமல், வெறும் உப்புசப்பு இல்லாத ஒரு வசனத்துடன் அந்த காதலின் ஆழம் தரை தட்டிவிடுகிறது. அந்த வசனம் இதுதான் : எல்லாரும் என்ன படுக்க கூப்டாங்க… அவன் மட்டும்தான் வீட்டுக்கு கூப்டான்….

4. ஆதியின் மாஜி தலைவன் கதாபாத்திரம், அந்த இரண்டு ஆந்திர தொழிலதிபர்களின் கதாபாத்திரம் எல்லாம் ஆதியின் ஹீரோயிசத்தைக் காட்டவும், ஆதியை ஓரிடத்தில் நீது காப்பாத்தவும், ஆதி போலீசிடம் இருந்து தப்பி ஓடவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரங்களையும், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தூக்கிவிட்டு, அந்த காட்சிகளின் தேவையை வேறுவிதமான காட்சிகளின் மூலம் நிவர்த்தி செய்திருந்தாலே முதல் பாதி சற்று வலுவாகி இருக்கும்
.
 5. இரண்டாம் பாதியில் முதல்பாதியில் ஒட்டாமல் சென்ற காட்சிகளுக்கான ஐஸ்டிபிகேசன் சில சொல்லுவாரகள். உதாரணமாக குண்டடிபட்ட ஆதியை காப்பாற்ற நீது துப்பாக்கியால் சுடுவாள், குண்டு நீக்கி சிகிச்சை செய்து ஆதியை காப்பாற்றுவாள். இதற்கு ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர சிரிப்பலை.. ஏனென்றால் அவள் உணவுவிடுதியில் பணியாற்றியவள். அவளுக்கு எப்படி சிகிச்சை செய்யத் தெரியும், துப்பாக்கிபிடிக்கத் தெரியும். ஆனால் இந்த காட்சிக்கு ஐஸ்டிபிகேசன் இரண்டாம் பாதியில் வரும். நீதுவும் ஒரு கேங்க்ஸ்டர் கும்பலை சேர்ந்தவள் என்று. முதல்பாதியில் ஆடியன்ஸ் மிகவும் எரிச்சலடைந்துவிடுவதால் இரண்டாம் பாதியில் சொல்லப்படும் இது போன்ற ஐஸ்டிபிகேசன் எதுவும் எடுபடுவதில்லை.

 6. படத்தின் இறுதிவரை எந்த கதாபாத்திரத்தின் மீதும் பார்வையாளர்கள் பயணிக்க முடிவதில்லை.

 7. மேலும் பொதுவாக முதல்பாதி சுமாராக இருந்து, இரண்டாம் பாதி நன்றாக இருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகும். ஆனால் முதல்பாதி மோசமாக இருந்து இரண்டாம் பாதி சுமாராக இருந்தாலும் படம் மோசம் என்றே பேசப்படும். அதுவே ஆதிபகவனுக்கும் நடந்திருக்கிறது.

ஜெயம் ரவிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு என்று பார்த்தால் அந்த அரவாணி கதாபாத்திரம் மட்டுமே. அதிலும் அவர் பெரிதாய் ஒன்றும் ஜொலிக்கவில்லை. ராணி கதாபாத்திரத்தில் நீதுவின் நடிப்பு மட்டும் கவனம் ஈர்க்கிறது. இசையும் பிண்ணனியிசையும் படுமோசம்.. யுவனுக்கு என்னாயிற்றோ….? இதை ஏதோ ஒரு புதுமுக இயக்குநர் எடுத்திருந்தால், அட்லீஸ்ட் அவரது முயற்சியை பாராட்டி படம் சுமாராக இருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பருத்திவீரன் மூலம் ஒரு அற்புதமான திரைக்கதை பார்மூலாவை தமிழ்சினிமாவுக்கு தந்த அமீர் அவர்களின் படம் என்பதாலேயே இதை மோசமான படம் என்றே கூறவேண்டியிருக்கிறது. இந்த சீண்டல்கூட மீண்டும் அவரிடம் இருந்து இதுபோன்ற படைப்புகள் வந்துவிடக்கூடாது என்கின்ற முன் ஜாக்கிரதையால்தான்…….. ஏனென்றால் அது அவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லதே அல்ல…..