Saturday 20 April 2013

OLD BOY:


ரத்தமும் சதையுமாய் ஊனும் உயிருமாய்  உணர்ச்சியும் புணர்ச்சியுமாய் ஒரு படம். எனைப் பொருத்தமட்டில் ஒரு திரைப்படம் என்பது அந்த பார்வையாளனை ஏதோ ஒரு விதத்தில் யோசிக்க வைக்க வேண்டும். தர்க்கரீதியிலான விவாதத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும். அவனை தன்னைப் பற்றி சுய மதீப்பீடு செய்து கொள்ள தூண்ட வேண்டும். பகுத்தறிவு படிநிலையில் ஒரு படியாவது அவனை மேலேற்ற வேண்டும். ஆனால் இந்த மேற்சுட்டிய திரைப்படம் என் அளவீடுகள் அத்தனையும் அநாயசமாக கடந்து வந்து என் மனதெங்கும் வியாபித்து நிற்கிறது என்பதுதான் உண்மை.

படத்தைப் பார்த்து வெகு நேரத்திற்கும் நான் திரைப்படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். நரம்பில்லாத நாக்காக இருந்தாலும் இந்த நாக்கில் எப்போதும் கத்தியை அல்லவா சொருகிக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கிறோம். இதில் எத்தனை பேரை நாம் குத்திக் கிழித்திருப்போம்…!? இன்னும் எத்தனை பேரை குத்திக் கிழிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்….!? என்கின்ற எண்ணமே ஒரு விதமான வெறுப்பை என் மீது உமிழ்ந்தது. எத்தனை எதிரிகளை என் வாழ்க்கையில் நான் சம்பாதித்து இருப்பேன்.. அதில் எத்தனை பேரை எதிரிகள் என்றே எண்ணாமல் இருப்பேன்..” என்கின்ற கேள்விகளும் என்னை விடாமல் துரத்துகின்றன.

இது ஒரு கொரிய மொழி திரைப்படம். சமீபகாலமாக கொரிய சினிமா உலகளாவிய அளவில் கவனத்தை கவர்ந்து வருகின்றது. கதை என்னவென்று பார்த்தால் வழக்கம் போல சாதாரண ஒரு பழிவாங்கும் படலம் தான் கதை. ஆனால் பழிவாங்குவதற்கான காரணமும், பழி வாங்கும் விதமும் தான் படத்திற்கான தனித்துவ அடையாளத்தைக் கொடுக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு உயரமான கட்டடத்தின் மொட்டை மாடியில் ஹீரோ, தன் கையில் ஒரு நாயை வைத்துக் கொண்டு மாடி விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் டையைப் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க.. அவன் “உனக்கு என்ன வேண்டும் என்னை விட்டுவிடு..” என்று கெஞ்சுகிறான். ஹீரோ ”நான் என் கதையை உனக்குச் சொல்ல வேண்டும்” என்று தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.

போலீஸ் நிலையத்தில் ”ஓ தேஜ்ஜு யூ” என்னும் பெயர் கொண்ட கதாநாயகனை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்க.. அவனுக்கு அருகில் ஒரு இளம் காதல் ஜோடி அமர்ந்திருக்கிறது. ஹீரோ முழு போதையில் இருக்கிறான்.. போலீஸ் அடித்த அடியில் அவனது மூக்கில் இருந்து ரத்தம் வழிகிறது. அதனை தடுத்து நிறுத்த ஒரு பஞ்சு அவனது மூக்கில் சொருகப்பட்டு இருக்கிறது. அவனிடம் போலீஸ் அருகிலிருந்த அந்த இளம் ஜோடியில் இருந்த பெண்ணைக் காட்டி, ஏன் அவளிடம் நீ தகராறு செய்கிறாய்..? என்று விசாரிக்கிறார். அவன் முழுக்க நிதானம் இழந்து போய் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிக்க முற்படுகிறான். தன் பெயருக்கு “இன்றைய நாளை வெகு எளிதாக கடந்து செல்பவன்” என்று அர்த்தம் என்று கூறிக் கொள்கிறான்.

இன்று தன் மகளுக்கு  3-வது பிறந்த நாள் நான் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவளுக்காக வாங்கிய பரிசையும் தன் தோளில் மாட்டிக் கொண்டு ஆடுகிறான். தன் மனைவி மகளுடன் தான் இருக்கும் போட்டோவைக் காட்டி தன் மகள் அழகாக இருக்கிறாளா..? என்று கேள்வி எழுப்புகிறான். மீண்டும் சிறுநீர் கழிக்க முற்படுகிறான்.. இருக்கையுடன் சேர்த்து கைவிலங்கிட்டு அவனை அமர்த்துகிறது போலீஸ். அவனது நண்பன் வந்து அவனை காவலில் இருந்து கூட்டிச் செல்கிறான். வீட்டுக்குச் செல்லும் வழியில் மழை பெய்யத் தொடங்குகிறது, வழியில் இருக்கும் டெலிபோன் பூத்தில் தன் மகள், மனைவியுடன் பேசுகிறான் ஓ தேஜ்ஜூ. உடன் வந்த தன் நண்பனிடம் ரீசிவரைக் கொடுத்து தன் மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கச் சொல்லி விட்டு போன் பூத்துக்கு வெளியே நிற்கிறான். நண்பன் பேசிவிட்டு மீண்டும் ஓதேஜ்ஜூவை அழைக்க பதிலேதும் இல்லை.. வெளியில் வந்து பார்த்தால் ஆட்கள் குடை பிடித்தவாறு கடந்து சென்று கொண்டிருக்க.. ஹீரோ அங்கு இல்லை. அவன் தன் மகளுக்காக வாங்கிய அந்த பரிசு சாலையில் விழுந்து கிடக்கிறது. டைட்டில் கார்ட் ஓடத் தொடங்குகிறது..

டைட்டில் கார்டின் இறுதியில் தரையை ஒட்டிய நிலையில் ஒரு சிறிய செவ்வக வடிவிலான வெளிப்புறமாக பூட்டப்பட்ட கதவு காட்டப்படுகிறது. தூரமாய் கேட்கும் காலடிச்சத்தம் நெருங்கி வந்து கதவைத் திறக்க.. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் ஹீரோ உள்ளிருந்து தலையை வெளியே நீட்டி படுத்த நிலையில் கெஞ்சத் தொடங்குகிறான்.

“பிரதர், இது எந்த இடம் சொல்லுங்களேன்.. என்னை அடைச்சி வச்சி ரெண்டு மாசம் ஆகுது.. எவ்ளோ நாள் என்ன அடைச்சி வப்பீங்க.. ஏன் அடைச்சி வச்சிருக்கீங்க… எப்ப விடுவீங்க.. ஏன் அடைச்சி வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு உரிம இல்லயா.. என்று கெஞ்சிக் கொண்டே…” வழங்கப்பட்ட சாப்பாட்டை உட்புறமாக விசிறி அடிக்கிறான்.. இப்போது கோபத்தில் கத்தத் தொடங்குகிறான்.. “பாஸ்டர்ட் நான் உன் மூஞ்சிய பாத்துட்டேன்.. வெளிய வந்தேன்..  மவனே நீ செத்த… உன்ன கொல்லாம விடமாட்டேன்..” என்று வெறி பிடித்த மிருகம் போல் கத்துகிறான்… வெளியில் நிற்பவன் காலால் ஹீரோவின் முகத்தை தள்ளி கதவை பூட்ட முயல.. மீண்டும் கெஞ்சத் தொடங்குகிறான்.. “ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுருங்க.. நான் இப்டி நடந்துக்க மாட்டேன்..” என்று கெஞ்சுகிறான்.. இப்போது கேமரா உட்புறமாக சென்று ஹீரோவின் குமுறலை பதிவு செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும் கேமரா சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு படத்தில் நிலைகொண்டு நிற்கிறது.

அதில் ஒரு நடுத்தரவயது இளைஞனின் படம் அழுகிறான் என்றும் சிரிக்கிறான் என்றும் சொல்வதற்கு ஏற்றாற் போல் வரையப்பட்டு இருக்க.. ஹீரோவும் அழுவதற்கும் சிரிப்பதற்கும் இடைப்பட்ட நிலையில் நின்று அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க.. அதில் கீழ்கண்ட வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது. “ நீ சிரிக்கும் போது இந்த உலகம் உன்னோடு சிரிக்கும், நீ அழும் போது தனியாகத்தான் அழ வேண்டும்”

”எத்தனை வருடம் என்னை அடைத்து வைத்திருப்பாய் என்ற கேள்விக்கு அவன் பதினைந்து வருடம் என்று பதில் சொல்லி இருந்தால் அது எனக்கு எளிதானதாக இருந்திருக்குமா.. அல்லது கடினமானதாக இருந்திருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை என்று ஹீரோவின் குரல் மீண்டும் கேட்கிறது.

அவன் கவனம் பதிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும் போது அவனது கைவிரல்கள் மட்டும் ரிமோட்டின் பொத்தான்களை அழுத்திக் கொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சியில் அவன் தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிறது. அவனது மனைவி கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட ரத்த மாதிரியும், கைரேகைகளும் ஹீரோ ஓ-தேஜ்ஜூவின் கைரேகைகளுடன் ஒத்துப் போவதால் போலீஸ் அவன் தான் கொலைகாரன் என்று நம்புவதாகவும் தெரிவிக்கிறது. மேலும் அவன் கடந்த ஒரு வருட காலமாக காணாமல் போயிருந்தான் என்றும்.. மனைவியுடனும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடனும் எப்போதும் சண்டை போடுவான் என்றும் போலீஸ் தெரிவிக்கின்றனர். தன் மனைவியுடன் ரகசிய தொடர்ப்பில் இருந்திருக்கலாம் என்றும் தாங்கள் சந்தேகிப்பதாக போலீஸ் தெரிவிக்கிறார்கள். மேலும் அவனது மனைவி வீட்டில் இருந்து ஒரு போட்டோ ஆல்பம் தொலைந்து போனதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த செய்தியை கேட்ட ஹீரோ தன் உடலில் எறும்புகள் ஊறி துளைப்பது போல் தோற்றம் தர மயங்கிச் சரிகிறான்..

மிகவும் சோர்ந்த நிலையில் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோவின் குரல் மீண்டும் கேட்கத் தொடங்குகிறது. ”உங்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.. மழைநாளில் போன்பூத்துக்கு அருகே, வயலட் நிற குடையுடன் முகத்தை மறைத்தவாறு உங்களை நோக்கி ஒருவன் வருவானானால், அன்று முதல் உங்களது காலம், நேரம், நிமிடம், காலண்டர், நண்பன், எதிரி, மனைவி, குழந்தை, குடும்பம், கோயில், சர்ச், காதலி, எல்லாமே டெலிவிசனாக ஆகப்போகிறது என்று உங்களை எச்சரிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே, அவன் டீவியில் பாடிக் கொண்டிருக்கும்  பெண்ணின் உடலை ஆசையுடன் தடவ…. சில வருட காலமாக மனிதனைப் பார்க்காத குறிப்பாக பெண்ணைப் பார்க்காத அவனது தாபம் வெளிப்படுகிறது. அந்தப் பாடல் சீக்கிரமே முடிகிறது. இவன் கோபத்தில் டிவியை கைகளால் குத்த.. டிவி உடைந்து, கண்ணாடி குத்தி கைகளை பதம் பார்க்க… ஹீரோ மயக்கமாகிறான்..

நினைத்துப் பாருங்கள். இன்று இரவு உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நீங்கள் வீட்டுக்கு செல்கீறீர்கள். வழியில் நீங்கள் கடத்தப்பட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சிறை அறையில் அடைக்கப்படுகிறீர்கள். உங்களுக்கும் இந்த உலகத்திற்குமான தொடர்பு என்பது ஒரு இரண்டங்குல கதவு வழியே மட்டுமே.. அதுவும் சாப்பாடு கொடுக்க அந்த கதவு திறக்கப்படும் போது.., உள்ளே எல்லா வசதிகளும் இருக்கும், (டெலிபோன் தவிர்த்து), உங்களுக்கு அதிகமாக முடி வளர்ந்தாலோ, அல்லது உங்கள் அறையை தூய்மை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டாலோ… ஒரு இசை உங்கள் அறையில் ஒலிக்கும்.. அதைத் தொடர்ந்து ஒரு புகை உங்கள் அறையை நிறைக்கும்.. நீங்கள் மயக்கம் தெளிந்து எழும்போது அறை புத்தம் புதிதாக இருக்கும். உங்கள் முடி வெட்டி அழகுபடுத்தப்பட்டு இருக்கும்..

இது போக அவ்வபோது மனவசியம் செய்யும் சிகிச்சையும் நடக்கும். ஏன் என்று வழக்கம் போல் உங்களுக்கு தெரியாது. நீங்கள் தற்கொலை செய்ய முயன்றாலும் காப்பாற்றப்படுவீர்கள்.. உங்களை ஏன் கடத்தி இருக்கிறார்கள்..? எவ்வளவு நாள் அடைத்து வைப்பார்கள் எதுவுமே சொல்லப்படமாட்டாது..? மனித இனங்களுடனான உங்கள் தொடர்பு அற்றுப் போய் பதினைந்து வருடங்கள் இருக்கும் என்றால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்.. உங்களை அடைத்து வைத்தவனைப் பிடித்து கண்டந்துண்டமாக வெட்டி காணா பிணமாக்க உங்கள் உள்ளம் துடிக்காது….

அதே நிலையில் தான் ஹீரோவும் இருக்கிறான்.. தன் எதிரிகள் யார் என்று பட்டியல் தயார் செய்கிறான். தன் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறான். அதன் முடிவில் அவன் கூறுகிறான் “நான் மிகச்சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்தேன் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் அப்படி இல்லை.. நான் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்…” சுவற்றில் தன் எதிரியின் மாயையான உருவத்தை வரைந்து விரல் முஸ்டியால் அதனைக் குத்தி வலுவேற்றிக் கொண்டு தன் எதிரியை உடல்ரீதியாக எதிர்க்க தயார் ஆகிறான்.

தான் எத்தனை ஆண்டுகள் இங்கே இருக்கிறோம் என்று கணக்கு வைத்துக் கொள்ள தன் புறங்கைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கோடுகளை கிழிக்கிறான்.. தன்னை உடலளவிலும் மனதளவிலும் தயார் செய்து கொள்ளும் அதே நேரத்தில், சாப்பிடுவதற்குப் பயன்படும் ஜாய் ஸ்டிக்கை வைத்து சுவற்றின் செங்கலை தோண்டி, தோண்டி தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்துகிறான். எப்படியோ தோண்டி.. தன் கை வெளியே போகும் அளவுக்கு வழி ஏற்படுத்தி கையை வெளியே விட.. அத்தனை வருடத்திற்கு பிறகு முதன்முறையாக மழைநீர் அவன் கையை நனைக்கிறது.. சந்தோசத்தில் துள்ளுகிறான்.. எல்.ஐ.சி போன்ற ஒரு 30 மாடி கட்டிடத்தில் குறைந்தது ஒரு 25ம் மாடியின் வெளிப்புறம் அவன் கை மட்டும் வெளிப்புறம் நீண்டு மழையை துலாவிக் கொண்டிருக்கிறது.. அற்புதமான காட்சி அது.

இன்னும் ஒரு ஆண்டில் தான் இந்த இடத்தை விட்டு தப்பித்து விடலாம் என்கின்ற நம்பிக்கைப் பிறக்கிறது. வெளியே சென்றவுடன் என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறான்.. தன் எதிரியை எப்படி பழிவாங்கலாம்.. அதற்கு பணம் தேவைப்படுமே எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறான்.. மயக்க வாயு அவன் அறைக்குள் பரவத் தொடங்க.. தான் தோண்டிவைத்த துளையை கட்டிலைத் தள்ளி மறைக்கிறான்.. மயங்குகிறான்.. உள்ளே நுழையும் ஒரு பெண் அவனை வசியம் செய்யத் தொடங்குகிறாள்…

பச்சை நிறப் புல்வெளியில் வைக்கப்பட்ட சிவப்பு நிறப் பெட்டி திறந்து கொள்ள.. அதில் ஹீரோ அவன் எழுதிய வாழ்க்கை குறிப்பு நோட்டுகளுடன் வெளிவருகிறான். அது எந்த இடமென்றே அவனுக்குத் தெரியவில்லை.. அவன் கண்கள் 15 வருடம் கழித்து சூரிய ஒளியை எதிர்கொண்டதால் கூசத் தொடங்குகிறது. தூரத்தில் ஒருவன் கையில் நாய்குட்டியுடன் நின்று கொண்டிருக்க.. மனிதனைக் கண்ட சந்தோசத்தில் அவனை முகர்ந்து பார்க்கிறான் ஹீரோ.. அந்த மனிதன் மேலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய எத்தனிக்க.. ஹீரோ அவனது டையை பிடித்திழுத்து காப்பாத்தி தன் கதையை சொல்லத் தொடங்கும் முதல் காட்சியில் படம் வந்து நிற்கிறது..

முழுகதையையும் சொல்வது என் நோக்கமல்ல.. இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலை உங்களுக்கு தூண்ட வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். இந்த திரைப்படத்தின் மைய கருத்து தொடர்பான விவரணைகளுடன் கூடிய என் கருத்தை வேறொரு பதிவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன்.. நாம் அதைப் பற்றி விரிவாகவே பிறகு விவாதிக்கலாம்.

ஹீரோ தன்னை சிறைப்படித்தியவனை கண்டுபிடித்தானா..? ஏன் அவன் ஹீரோவை சிறைப்படுத்தினான்..? அவனுக்கு ஹீரோ என்ன தண்டனை கொடுத்தான்..? சிறைப்படுத்தியவன் ஏன் ஹீரோ தன்னை தேடிவர எல்லா தடயங்களையும் அவனுக்கு கொடுக்கிறான்..? என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா…? இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள்.

அருமையான திரைக்கதை. சமீபகாலத்தில் இப்படி ஓர் திரைக்கதை உள்ள படத்தை நான் பார்த்ததில்லை. எதிலுமே சோடை சொல்லமுடியாத ஒரு முக்கியமான திரைப்படம்.. கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, பிண்ணனி இசை என்று ஒவ்வொன்றும் அதன் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் படம்.

தன்னை தேடி வந்த ஹீரோவிடம், ஹீரோவை சிறைப்படுத்தியவன் சொல்லும் ஒரு வசனம் வரும்…” நீ உன்னைக் கேட்டுக் கொண்ட கேள்வியே தவறாக இருக்கும் போது, உனக்கு எப்படி சரியான பதில் கிடைக்கும்..” “ஏன் என்னை பதினைந்து வருடம் அடைத்து வைத்தான்..? என்றுதானே நீ யோசிக்கிறாய்…? அது தவறான கேள்வி. நீ கேள்வியை திருத்து, உனக்கு பதில் கிடைக்கும்..” என்று கூறுவான். ”மணலாக இருந்தாலும் கடினமான பாறையாக இருந்தாலும் இரண்டும் ஒரே போன்றுதான் நீரில் மூழ்கிப் போகும்..” இப்படி பல இடங்களில் வசனங்கள் கதையை சொல்லாமல் சொல்கின்றன… அது போல படத்தின் இறுதியில் ஒரு வசனம் வரும். உயிரோட்டமுள்ள அந்த வசனம் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.. மிக மிக அற்புதமான வசனங்கள்.

15 வருட சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வரும் ஹீரோ லிப்டில் ஒரு பெண்ணை சந்திப்பான்.. அப்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவன் படும் பாடு இருக்கிறதே.. மேலும் ஒரு இளைஞர் பட்டாளத்துடன் அவன் சண்டை போடுவான். அப்போது அவர்கள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அடிப்பார்கள். அதை உள்வாங்கும் ஹீரோ தனக்குத் தானே சொல்லிக் கொள்வான், “தொலைக்காட்சி, மொழியின் வளர்ச்சியை உள்வாங்கிக் கொள்வதில்லை.. போலும்..” இப்படி பல இடங்களில் அற்புதமான நடிப்பு.. இப்படிப்பட்ட ஒரு கதைக்களனை நம்முடைய சூழலில் யோசிப்பது என்பதே இயலாதது..

படத்தை பார்த்து முடிக்கும் போது, நம்முடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை ஒரு முறையாவது எண்ணிப் பார்த்து, உண்மையிலேயே மனசாட்சி உள்ள மனிதர்கள் ஓரளவுக்காவது வருந்துவார்கள், என்பதே இந்த படத்திற்கான வெற்றி…

No comments:

Post a Comment