Tuesday, 29 January 2013

அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்


தமிழ் இலக்கியவெளியில் செவ்வியல் படைப்பாக கருதப்படும் நாவல்களில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்ற நாவலும் மிக முக்கியமான ஒன்று. மரபுகளும் பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் மீறுதலுக்கு அப்பாற்பட்டவை என்றும், புனிதமானவை என்றும் போற்றப்படுவது யாருடைய சுயலாபத்திற்காக என்னும் சந்தேகப் பார்வை இவருடைய எழுத்துகளில் இலையோடுவதை எப்போதும் காணலாம். அதற்கு ”அம்மா வந்தாள்” நாவலும் விதிவிலக்கல்ல. இந்த நாவல் வெளிவந்த காலகட்டம் 1964ல் இருந்து 1966க்குள் இருக்கலாம். இந்த நாவலை எழுதியதற்காக தி.ஜானகிராமன் தான் பிறந்த கிராமமான தேவங்குடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தன் சொந்த கிராம மக்களால் ’பிரஷ்டன்’ என்றும் தூற்றப்பட்டார்.

தூற்றியவர்களைப் பார்த்து தி.ஜா கூறிய வார்த்தைகள், “நம்முடைய நாட்டில் கலை பிரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன். மையக்கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்?. இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை, விமரிசகன். அவனுக்கு பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குத்தான் தெரியும். கலை உலகம் ஒரு மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.”

ஒரு நாவலை வாசகன் வாசிக்கும் போது, அது எந்தவிதமான நோக்கத்தில் எழுதப்பட்டதோ, அதை படைப்பாசிரியர் எந்த பார்வையில், எதை உணர்த்த வேண்டும் என்று எழுதினாரோ அதை மிகச்சரியாக புரிந்து  கொள்வதென்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமம். ஆனால் பல நேரங்களில் அவை வெறும் சிப்பியாக போவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் அந்த எழுத்தின் படைப்பாளுமையின் மூலம் வாசகனை படைப்பாளன் தேடலுக்கு உட்படுத்தும் சில அற்புதமான தருணங்களில் அவன் முத்துக்குவியலே கண்டடைவதற்கும் வாய்ப்பு உண்டு. வாசிப்பின் முடிவில் நான் கண்டடைந்தது முத்துக்குவியலா.. இல்லை உதவாக்கரை சிப்பிக்கல்லா என்று நான் அறியேன். எதுவாக இருப்பினும் அதை பகிர்ந்து கொள்ள முனைவதே இந்த பதிவின் நோக்கம்.

கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களாக நாம் ஐவரைக் கொள்ளலாம். அப்பு, அவரது தாயார் அலங்காரம், தகப்பனார் தண்டபாணி, குடும்ப நண்பர் சிவசு என்கின்ற சிவசுந்தரம் மற்றும் தோழி இந்து. நாவல் எதைப்பற்றியது என்பதை முதலாவது வரிகளிலேயே விளக்கிவிடுகிறார். அந்த வரிகள் உணர்த்தும் உண்மை இதுதான். சரஸ்வதி பூஜை நாளில் பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை எடுக்க முடியாத சூழலில் அதை எடுத்துப் படிக்கத் தூண்டுவதே மனித மனத்தின் இயல்பு என்பதே அது.

தன் நான்கு வயதில் தன் தகப்பனாரால் இந்துவின் அத்தை பவானியம்மாள் நடத்தும் பாடகசாலைக்கு மந்திரங்கள், உபநிசங்கள், ஸ்லோகங்கள் கற்றுக் கொள்ள செல்லும் அப்பு, தன் 24ம் வயதில் திருச்சியை ஒட்டியுள்ள அந்த கிராமத்தை விட்டு கிளம்ப எத்தனிக்கிறான். அப்போது இந்து அவன் மீது தனக்குள்ள அபிமானத்தை கூற, அது தன் தாய்க்கு செய்யும் துரோகம் என்று அவன் தன் அம்மாவை காணக் கிளம்புகிறான்.. வீட்டிலோ சூழ்நிலை வேறு மாதிரி இருக்க… அப்பு, அலங்காரம், இந்து மூவரும் அடுத்து என்ன செய்தார்கள் என்பதை நாவல் விளக்குகிறது.

திருமணம் என்பது பெண் உடலின் மீது ஆணுக்கு வழங்கப்படும் உரிமையாகவே ஆண் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும் காலமரபில் அது பெண்ணின் பார்வையில் எந்தவிதத்தில் பார்க்கப்படுகிறது என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்னமே பேசியிருக்கிறது இந்நாவல். மைய கதாபாத்திரங்களான அலங்காரமும், இந்துவும் ஒரே விதமான பிரச்சனையை இரு வேறுவேறு சூழ்நிலையில் சந்திக்கும் பெண்களாக இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளனர். அலங்காரம் தன் கணவர் தண்டபாணியுடனான இல்லறத்தின் மூலம் மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்னர், அவளுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் அளவிற்கு மற்றொரு ஆணுடன் பிறழ் உறவு ஏற்படுகிறது. அதற்கான பிண்ணனி காரணங்கள் இதில் விரிவாக சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆங்காங்கே அலங்காரம் மற்றும் தண்டபாணி இருவரும் பேசும் ஓரிரு வசனங்களில் அவை ஓரளவிற்கு பிடிபடுகின்றன..

இந்துவின் சூழ்நிலையோ சிறு வயதிலேயே குழந்தை திருமணம் செய்யப்பட்டு, அவள் குழந்தை ஏதும் இல்லாமல் கைம்பெண்ணாக இருக்கிறாள். வயதோ இருபது. அவளுடைய தர்க்கமாக அவள் அப்புவிடம் கூறுவது ”சிறுவயதிலேயே நான் உன்னைத்தான் மனதில் நினைத்திருந்தேன்.. என் உடலை மட்டும் கட்டியாண்டாள் நான் அவன் பொண்டாட்டியாகி விடுவேனா…” இந்து தன் கணவன் பரசு இறந்தவுடனே தன் மனம் கவர்ந்த அப்பு படித்துக் கொண்டிருக்கும், பாடகசாலைக்கே திரும்பிவிடுகிறாள். தன் மனதுக்கு உகந்தவன் இல்லை என்றாலும் கணவன் என்ற முறையில் இந்துவை பரசு ஆட்கொள்ளும் போது அவள் அதனை அனுமதிக்கிறாள். அதிர்ஷடவசமாக அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவன் இறந்த பிறகு தன் அத்தையிடம் சென்றால் அப்புவைக் காணலாம் என்ற ஒரே காரணத்திற்காக அவள் புக்ககத்திலேயே இராமல் பாடகசாலைக்கு வருகிறாள். அவள் கூறும் தர்க்கம் “அவரோடு இல்லறத்தில் இருக்கும் போதும் நான் மனதில் உன்னைத் தான் நினைத்திருந்தேன்.. அதுவே குற்றம்.. இப்போதும் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. என் மனதுக்கு உண்மையாக நான் நடப்பதே தர்மம்.. உன்னோடு நான் வாழ்வதே சரியாகும்….”

அலங்காரத்தின் விசயத்தில் அவை நேர்மாறானவை.. மூன்று குழந்தைகள் பிறந்த பின்னரே.. அவளுக்கு தன் கணவன் மீது பிணக்கு ஏற்படுகிறது. மனம் கணவனிடம் லயிக்காத போது தன்னை தொட அவரை அலங்காரம் அனுமதிப்பதில்லை. தன் உடலை யார் தொடவேண்டும் என்னும் உரிமையை தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக தன் கணவனுக்கு கொடுக்க அவள் தயாரில்லை. தன் உடல் மீதான தன் உரிமையை அவளே தீர்மானிக்கிறாள்… இருந்தாலும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவள் வேறுவழியின்றி தன் கணவருடனே வாழ்கிறாள். தன் கணவனுக்கான எந்த சலுகைகளையும் நாம் அவருக்கு கொடுக்கவில்லை என்கின்ற மரபு அடிப்படையிலான எண்ணங்களும் அவளை உலுக்கவே.. எல்லாவற்றையும் உதறிவிட்டு செல்வதற்கான நேரத்திற்காக அவள் காத்திருக்கிறாள்.. இவையனைத்தும் அவளை உறுத்தும் தருணத்திலும் அவளால் பிறன் மனை உறவை முற்றிலுமாக விட்டுவிடமுடிவதில்லை… இரண்டுக்கும் இடையில் இருந்து அவள் புலம்பிக் கொண்டே இருக்கிறாள்…

செவ்வியல் படைப்புக்கான இலக்கணமாக சொல்லப்படுவது என்னவென்றால் ஒரு நாவல் எந்த கால இடைவெளியில் எழுதப்பட்டாலும், அது புதிய பார்வைக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும் என்பதாகும். நாவலில் வரும் குருகுலவாசம் போன்ற பாடகசாலையும், பாடக சாலைக்கு தங்கள் குழந்தையை அனுப்பும் நடுத்தரவர்க்க குடும்பமும், உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகளை கண்டிக்காமல் இருக்கும் கணவன், என தற்கால போக்கோடு ஒன்றாத விசயங்கள் இருப்பினும் இவை 50 வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்களை அலங்காரம் போன்று காட்டிக்கொள்ள துணிவதே இல்லை. இன்றும் மூன்று குழந்தைகளை பெற்ற பின்னரும் பிற ஆடவர் மீது எனக்கு நாட்டம் வந்ததே இல்லை என்று சொல்லும் பொய்களே எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தாத, தித்திக்கும் அமுதமாக இனிப்பதால் நாம் அந்த பொய்களுக்குள்ளாக திளைத்திருக்கவே விரும்புகிறோம். ஆனால் நடக்கின்ற கள்ள உறவு தொடர்பான கொலைகள் உண்மை அவ்வாறு இல்லை என்பதையே உரக்க உரைக்கின்றன. மேலும் அலங்காரம்,இந்து போன்ற பெண்கள் இன்னும் இந்த சமூகத்தில் வேறு வேறு வடிவங்களில் வாழ்ந்து வருகிறார்கள், என்பதால் இந்த காலகட்டத்திற்கான பார்வைக்கும் இந்த நாவல் பொருந்தித் தான் போகிறது..

மனிதனின் செயல்பாடுகள் பெரும்பாலும் மரபு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் நியதி இவை சார்ந்துதான் இயங்குகின்றன என்றும், இல்லை மனிதனின் செயல்பாடுகள் உணர்ச்சிகள் சார்ந்துதான் இயங்குகின்றன என்றும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் உண்மையில் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட மெல்லிய கோட்டின் மீது, சில நேரம் அந்தப்பக்கம் கால் அகட்டி வைத்தும், சில நேரங்களில் இந்தப் பக்கம் கால் அகட்டி வைத்தும் தான் மனிதமனம் நடை போடுகிறது என்பதே பாசாங்கில்லாத உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. மொத்தத்தில் இதன் முன்னுரையில் எழுத்தாளர் சுகுமாரன் கூறியதைப் போல ”இந்த ’அம்மா வந்தாள்’ மீறலின் புனிதமான பிரதி” ஆகும்

Thursday, 24 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையாபல வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் வந்த “இன்று போய் நாளை வா” திரைப்படத்தின் கதையை எடுத்துக் கொண்டு அதை சந்தானத்திற்கே உரித்தான உட்டாலக்கடி பாணியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். பாக்யராஜ்க்கு நன்றி என்னும் டைட்டில் கார்ட்டுடன் தொடங்குகிறார்கள் படத்தை…

இன்று போய் நாளை வாவில் ஒரு அடல்சண்ட் டச் இருக்கும்.. அதுதான் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம். ஆனால் அது கலதிஆவில் மிஸ்ஸிங்.. (பின்ன மிஸ் ஆகாம எப்படி இருக்கும்.. 50ஐ தாண்டுன ஒருத்தர்.. 40ஐ நெருங்கும் ஒருத்தர்… 30ஐ நெருங்கும் இன்னொருத்தர்…) எதிர் வீட்டு பெண்ணை யார் கரெக்ட் செய்வது என்ற பிரச்சனை வர, நண்பர்கள் எதிரிகளாகி காய் நகர்த்த… கடைசியில் என்ன ஆனது என்பதை சந்தானம் குரூப் அவர்களுக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்கள்..

படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பவர்ஸ்டார்தான் (சாமி சத்தியமா பாஸ்….) என்ன ஒரு கவலை… இத வெச்சே நம்ம ஆடியன்ஸ் இவரோட அடுத்த ரெண்டு படத்தையும் ஓட வெச்சிருவாங்களே… (பவர் ஸ்டார் நீங்கதா எப்டியாது தமிழ் சினிமாவ காப்பாத்தணும்… ஏதோ பாத்து பண்ணுங்க…) ஓபனிங்கே செம்ம அலப்பரையான எண்ட்ரி… டாக்டர் ஸ்கூல் பிள்ளைகளுடன் பிரச்சனை செய்து கொண்டிருக்க.. உள்ளே எண்ட்ராகும் சந்தானம் கேப்பார்.. டேய் சின்ன பசங்களோட என்னடா பிரச்சனை… (எல்லா பசங்களும் சேர்ந்து…) ம்ம்ம்… நல்லா கேளுங்கண்ணா…. அதற்கு சந்தானம் சொல்லுவாரு ஸ்கூல் பையன்கள பாத்து… “டேய் நா உங்கள கேட்டேன்….” இப்படி ஆரம்பிக்கிற கலாட்டா… படத்தோட க்ளைமாக்ஸ் வர ஓயமாட்டேங்குது….

எதைப்பற்றியும் யோசிக்காமல்… தமிழ்சினிமா ரசிகர்களின் மனோபாவம் எந்தமாதிரி இருக்கிறது… என்றெல்லாம் தர்க்கரீதியாக யோசிக்காமல்.. பொழுதுபோகணும்… சிரிக்கணும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு என்றே எடுக்கப்பட்ட படம்….

கண்ணா லட்டு தின்ன ஆசையா….. இன்று போய் நாளை வாவின் லொள்ளு சபா ரீமேக்… என்ன விஜய் டிவிக்கு பதிலாக ஒளிபரப்பாவது வெள்ளித்திரையில்… 

சமர்:


தீராத விளையாட்டு பிள்ளை இயக்குநர் திருவின் இரண்டாவது படம். அவன் இவன் சூட்டிங்கில் ஆர்யாவுக்கு கதை சொல்ல காத்திருந்த திருவிடம் விஷால் கதை கேட்டு கதை பிடித்துப் போக தானே இந்த படத்தில் நடிப்பதாக ஆர்யாவிடம் கேட்டு, அவரும் பெருந்தன்மையாக…! விட்டு கொடுக்க.. இப்போது விஷால் நடிப்பில் வந்திருக்கும் படம்.

கதை தமிழ் சினிமாவிற்கு சற்று புதியது. ஆனால் அது மட்டுமே படத்தை காப்பாற்றி விடாதே… ஒரு நல்லகதை அமைந்தும் திரைக்கதை சரியாக அமையாவிடில் படம் தோல்வியடையும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம்.. இது த்ரில்லர், சஸ்பென்ஸ் வகையறா படமாக இருப்பதால் கதை இதுதான் என்று விரிவாக சொல்லமுடியாத சூழ்நிலை.

விஷாலின் அப்பா அழகம்பெருமாள் ஃபாரஸ்ட் ரேஞ்சர்.. அந்த காட்டில் ட்ரக்கராக வேலை செய்யும் விஷாலுக்கும், சுனைனாவுக்கும் காதல்… தன் காதலுக்கு அவன் மரியாதை தரவில்லை… என்கின்ற கோபத்தில் காதலை முறித்துக் கொண்டு பாங்காங்க் பறக்கிறார் சுனைனா.. இரண்டு மாதம் கழித்து அவரிடம் இருந்து வரும் கொரியரில் விஷால் பாங்காங்க் வருவதற்கான விமான டிக்கெட்டும்.. விஷாலை மறக்கமுடியவில்லை என்று எழுதிய காதல் கடிதமும் வந்து சேர.. இவரும் தாய்லாந்து செல்ல.. ஏர்போர்ட்டில் த்ரிஷாவும் விஷாலும் நண்பர்களாகின்றனர்…

காதலி சொன்ன இடத்தில் விஷால் காத்திருக்க காதலி வரவில்லை… மேலும் விஷால் ஒரு மல்டி மில்லினியர், நம்பர் ஒன் பிஸினஸ்மேன் என ஒரு கூட்டம் துரத்த.. ஒரு கூட்டம் அவரை கொல்ல துரத்துகிறது.. காதலி என்ன ஆனாள்… தாய்லாந்தில் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்….

படத்தில் அநியாயத்திற்கு பல லாஜிக் ஓட்டைகள். ஒரு புதிய விசயத்தை பிடித்துவிட்டோம்.. இதுவே போதும் படம் ஜெயித்துவிடும் என்கின்ற மிதப்பிலேயே இருந்திருப்பார்கள் என்று தோணுகிறது.. படத்தில் பாங்காங்க் போனவுடன் வரும் சில காட்சிகளான விஷாலை ஜான்விஜய் ஆட்கள் பாஸ் என்று சொல்லிக் கொண்டு பின்னால் சுற்றுவது, அவரை மல்டிமில்லினியர் என்று நம்புவது இவை போன்ற காட்சிகள் திரைக்கதை நகர்விற்கு எந்தவிதத்தில் உதவி இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் வில்லன்களின் முக்கிய குறிக்கோள் விஷாலை குழப்புவது இல்லை (ஒரு வேளை இயக்குநரின் முக்கிய குறிக்கோள் சுவாரஸ்யம் என்ற பெயரில் நம்மை குழப்புவதாக இருக்கலாம்) என்பதும் பின்வரும் காட்சிகளில் விளக்கப்படுகிறது.

மேலும் விஷால் தன்னை சுற்றி நடக்கும் குழப்பமான விசயங்களில் கவனம் செலுத்தும் போது, த்ரிஷாவின் மீது ஏற்படும் காதலும் தோல்வியும் எப்படி அவரை பாதிக்கும். அதற்கு பதிலாக முதலில் இருந்தே விஷாலுக்கு குழப்பமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை, அவருக்கு த்ரிஷாவின் மீது காதல் வருகிறது, த்ரிஷா தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று தெரிய வருகிறது என்று வைத்துக் கொண்டால் அப்போது ஏற்படும் விரக்தியால் வில்லன்கள் எதிர்பார்க்கும் சாதகமான விசயங்கள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உண்டே.

த்ரிஷாவிற்கு விஷாலின் மீது காதல் வரும் காட்சிகளில் நமக்கு எரிச்சலே வருகிறது. இது போக காதல் என்ற பெயரில் சில இடங்களில் பேசும் வசனங்கள் எல்லாம் படு அபத்தம். சில வசனங்கள் க்யூட். உதாரணமாக “யார்கிட்டயும் நான் பயன்படுத்தாத வார்த்தை.. நீ தூக்கிப் போட்டுறாத”, ”காதல் ப்ளைண்டுன்னு தெரியும்.. கலர் ப்ளைண்டுன்னு இப்பதா தெரியும்..” இப்படி ஆங்காங்கே எஸ்.ராவின் சில வசனங்கள் ஈர்க்கின்றன. படத்தின் இசை யுவன் சங்கர் ராஜாவாம். டைட்டில் கார்டில் மட்டுமே அவர் இருப்பதை உணர முடிகிறது.

பாலாவின் படத்தில் நடித்துவிட்டு திரும்பிய பின்னரும் விஷாலுக்கு நடிப்பு வருவேனா என்கிறது. விரக்தியோ கோபமோ எது வந்தாலும் தலைக்குப் பின்னால் கையை வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி உடலை பின்புறம் வளைத்து கத்த தொடங்கிவிடுகிறார். கத்துவது எப்போதுமே நடிப்பாகிவிடாது என்று யாராவது அவரிடம் சொன்னால் நன்றாய் இருக்கும். த்ரிஷாவின் பாடி லாங்க்வேஜ், எக்ஸ்பிரஸன்ஸ் எல்லாமே க்யூட், சுனைனா கவர்ச்சி பதுமையாக வலம் வந்து சற்று நேரத்தில் காணாமல் போகிறார். ஜான்விஜய், ஜே.டி சக்ரவர்த்தி, மனோஜ் பாஜ்பாய், சம்பத், ஜெயபிரகாஷ், அழகம் பெருமாள் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது. கேரக்டர்களுக்கான ஸ்கோப் தான் இல்லை.

தமிழ்சினிமாவின் சமீபத்திய சில மசாலா மொக்கை படங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான கருவை கொண்டு படம் எடுக்க முயற்சித்த திருவின் முயற்சி பாராட்டுக்குரியது. அவரது முதல் படமான தீராத விளையாட்டு பிள்ளையை ஒப்பிடும் போது கண்டிப்பாக இது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் திரைக்கதையில் இருந்த சில ஓட்டைகள் படத்தை யுத்தத்தில் தோற்கடித்துவிடுகின்றன. (சமர் என்றால் யுத்தமாம்…!?)

Monday, 14 January 2013

சென்னை புத்தக திருவிழா


சென்னையில் புத்தக கண்காட்சி கடந்த 11ம் தேதியில் தொடங்கி வருகின்ற 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை பச்சையப்பன் கல்லூரி மைதானம் புத்தக கண்காட்சிக்காக ஒதுக்கித் தரப்படாத காரணத்தால், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்து உள்ள இடத்திற்கு சென்றுவிட்டு, அங்கு என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்காமல், இந்த புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு செல்வது நமக்கு சற்று நலம் பயக்கும் என்பதால், முக்கியமான தவறவிடக்கூடாத நாவல்கள் என்று பிரபலமான எழுத்தாளர்களால் கூறப்படும் நாவல்களின் பட்டியலை நமக்கு உதவியாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் இங்கு கொடுத்திருக்கிறோம்.
முக்கியமான நாவல்கள்:
     ஜெயமோகன் எழுதிய காடு, ஏழாம் உலகம், கொற்றவை, எம்.ஜி சுரேஷ் எழுதிய அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், யுரேகா என்றொரு நகரமும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம் போன்றவையும், வாமு கோமுவின் கள்ளியும், யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம், கானல்நதி, பகடையாட்டம், ஜேடி..குரூஸின் ஆழி சூழ் உலகு நாவலும், பூமணியின் வெக்கை, பிறகு நாவலும், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஹெப்சிபா ஜேசுநாதனின் புத்தம் வீடு, சா.கந்தசாமியின் சாயாவனம், தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணத் தெரு, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கல்கியின் அலையோசை, மகுடபதி, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, அருணனின் பூருவம்சம், சுதேசமித்திரனின் காக்டெய்ல், ஆஸ்பத்திரி, தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள், ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே, குறத்தி முகடு, சோலை சுந்தர பெருமாளின் குருமார்கள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள், சூடிய பூ சூடற்க, வண்ணநிலவனின் கடல்புறத்தில், ஆதவனின் காகித மலர்கள், அகிலனின் சித்திரப் பாவை, கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம், நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சம்பத்தின் இடைவெளி.

சிறுகதை தொகுப்பு:
    ஆதவன், நகுலன், புதுமைபித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, இமையம், அம்பை, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், பிச்சமூர்த்தி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்செல்வன், லா.ச.ராமாமிருதம், மெளனி, கு.அழகிரிசாமி. ஆகிய ஆசிரியர்களின் தொகுப்புக்களை நம்பி வாங்கிப் படிக்கலாம்..
     இதுபோன்ற முக்கியமான தொகுப்புகளை நாம் குறைந்தவிலையில் வாங்குவதற்கு சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வசிக்கின்ற நம்மைப் போன்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த புத்தக கண்காட்சி நடக்கும் என்பதால் இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் அடுத்த வாய்ப்புக்காக அடுத்த ஜனவரி வரை காத்திருக்க நேரிடும். தவறவிடாதீர்கள் நண்பர்களே……..!
    மீண்டும் ஒன்றை அழுத்தமாக நினைவுபடுத்த விரும்புகிறேன்.. மேற்கூரிய நாவல்களும் சிறுகதை தொகுப்பு சார்ந்த விவரங்களும் அந்தந்த எழுத்தாளர்களின் ரசனையுடன் ஒத்துப் போயிருக்கும்.. எனவே அவை மிகச்சிறந்த நாவல்கள் என அவர்களால் கூறப்படுகின்றன.. இவற்றில் சில நம் ரசனையோடு ஒத்துப் போகாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு என்பதை சற்றே கவனத்தில் கொண்டால் நல்லது.
புத்தக கண்காட்சி நேரம்:
     வார நாட்கள்     :       மதியம் 2.30லிருந்து இரவு 8.30 வரை
     வார இறுதிநாட்கள்:      மதியம் 11.00லிருந்து இரவு 9.30 வரை