Sunday, 23 November 2014

காடு:

காடு பறிபோனதில் எனக்கு பெருத்த கவலை உண்டு.. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியை ஒட்டியே அமைந்திருக்கும் ஊர் தான் எங்கள் ஊர் என்பதால், கடலைப் பார்த்து கடலின் மீது காதல் கொள்ளும் முன்பே நான் அனுதினமும் பார்த்த மலைகளோடும் காடுகளோடு காதல் கொண்டவன் நான்… இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அழிந்து வரும் காடுகள் சார்ந்தும், காட்டுயிர் சார்ந்தும் எனக்கு வருத்தங்கள் எப்போதும் உண்டு.. அந்த வருத்தத்தோடு இப்போது ஒட்டியிருக்கும் மற்றொரு வருத்தம் பறி போகியிருக்கும் இந்த “ காடு” தலைப்பு தொடர்பானது… காட்டுயிர் சார்ந்து நான் கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு கதைக்கு காடு என்ற தலைப்பையே நானும் யோசித்திருந்தேன்… ம்ம்ம்…. இன்னும் அடுத்த காலடி எடுத்து வைக்கும் முன்னர் இன்னும் எத்தனை விசயங்களை பறி கொடுக்க வேண்டி இருக்கும் என்றே தெரியவில்லை… சரி கதைக்கு வருவோம்… இந்த காடு என்கின்ற தலைப்பே என்னை கவர்ச்சிகரமாக இழுத்ததால், இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து இருந்தேன்…


தமிழகத்தின் காடுகள் என்று பார்த்தால், அதில் மிகமுக்கியமானதாக விளங்குவது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி காடுகள் தான்… இதன் மலையடி வார மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டம் தான் கதைக்களம்.. காடு சார்ந்த கதைக்களம் என்றாலே காட்டிலாகா அதிகாரிகளைப் பற்றியோ, இல்லை மலைவாழ் மக்களைப் பற்றியோ, அல்லது அடிக்கடி இவர்களுக்கு இடையில் நடைபெறும் சட்டமீறல்களைப் பற்றியோ பேசாமல் திரைப்படம் எடுக்க முடியாது.. ஆனால் அப்படி எடுக்கின்ற திரைப்படத்தில் யாரை குற்றவாளியாகக் காட்டுவது என்பது மிகப்பெரிய தலைவலி.. ஏனென்றால் வன இலாகா அதிகாரிகளின் மெத்தனமும், அரசாங்கத்தின் மேம்போக்கான சட்ட திட்டங்களும் தான் காட்டு வளம் அழிவதற்கு காரணம் என்கின்ற கருத்தும், அதே நேரம் காட்டிற்குள்ளாகவே சட்டத்துக்கு புறம்பாக இருந்து கொண்டும், அல்லது அவ்வபோது காட்டுக்குள் விறகு பொறுக்க சென்று வந்தும் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும் மலைவாழ் மக்கள் தான் காட்டு வளம் அழிவதற்கு காரணம் என்றும் இரண்டு விதமான எண்ணவோட்டங்கள் நம்மிடையே உண்டு.. இதில் யார் உண்மையான குற்றவாளி….

இதற்கு நேர்மையான முறையில் பதில் சொல்வது பலருக்கு சங்கடங்களையும் திரைப்படத்துக்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் திரைப்படப் பாணியிலேயே அதற்கு விடையளித்து இருக்கிறார்.. இயக்குநர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள்… ஆக அவரின் கூற்றுப்படி இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது அதாவது வன இலாகா அதிகாரிகளும் அதே நேரம்  மலையோர கிராம மக்களும் இருவருமே தவறு செய்கிறார்கள் என்பதுவே அவரது தீர்மானம்… இது பல நேரங்களில் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.. இரண்டு கிராமத்து இளைஞர்கள், ஒருவன் படித்துவிட்டு காட்டிலாகா அதிகாரியாக முயற்சிப்பவன் காட்டின் மீது பெரிய அன்போ நேசமோ இல்லாதவன்… மற்றொருவன் படிக்காதவன்.. காட்டை நம்பியே ஜீவனம் செய்பவன்… காட்டின் மீது அளவு கடந்த பாசமும் அன்பும் கொண்டவன்… அந்தப் படித்த கிராமத்து இளைஞன் வன இலாகா அதிகாரியாக மாறி, சட்டத்துக்கு புறம்பாக சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலுக்கு உதவுகிறான்… தன் சொந்த மலையோர கிராமத்து மக்களையே நயவஞ்சகமாக பேசி மலையில் இருந்து துறத்துகிறான்…. ஆக காட்டு வளத்தை அழிப்பவன் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த ஒருவன், அதே நேரம் காட்டிலாக அதிகாரி…. ஆக இருவருமே குற்றவாளிகள்.. பிரச்சனை தீர்ந்தது…. என்று நினைத்துவிட்டார் போல இயக்குநர்…

ஒருவன் காட்டின் மரங்களை வெட்டி காட்டு வளத்தை குலைக்கிறான் என்றால், அங்கு ஹீரோவுக்கு என்ன வேலை… அந்த துரோகியை வென்று காட்டைப் பாதுகாப்பது தானே…. வழக்கமான சினிமா சம்பிரதாயத்தின்படி அதையே தான் செய்கிறார் நாயகன் விதார்த்தும்… இடையிடையே பள்ளி செல்லும் ஒரு பெண்ணை காதலிக்கவும் செய்கிறார்… திரைப்படத்தின் பலவீனங்கள் என்று பார்த்தால் அதன் சுவாரஸ்யம் இல்லாத, உணர்ச்சி இல்லாத திரைக்கதை, நடைமுறை பிரச்சனையை பேசுவதற்கான தளம் அமைந்தும், நாயகனின் காதல், நண்பனின் துரோகம் என்னும் வணிக அம்சங்களுக்கு உட்பட்ட தளத்திலேயே திரைக்கதையை பெரும்பாலும் நகர்த்தியது, துண்டு துண்டான காட்சிப் படிமங்கள், காடு பற்றிய கதையை வழக்கமான சந்தனமரம் கடத்தும் கடத்தல் சினிமாவாக குறுக்கியது.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்…

திரைப்படத்தின் முதல்பாதியில் மொத்தத்துக்கு நடக்கும் சம்பவம் இதுவொன்றுதான்… படித்த நண்பன் செய்த குற்றத்தை படிக்காத நண்பன் விதார்த் தான் செய்ததாக ஏற்றுக் கொள்வது, வேறு எதுவுமே இல்லை.. வன இலாகா அதிகாரிகளின் அத்துமீறலை காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அந்த மலைவாழ் நபரின் படுகொலை சம்பவம் படு அபத்தமாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது… அதற்கும் கதையின் மையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இதுபோல் தான் புரட்சிகர எழுத்தாளராக வரும் சமுத்திரக்கனியின் நாகா கதாபாத்திரமும்… இவர் பேசும் வசனங்கள் மிக கூர்மையானவையாக இருக்கும் அதே பட்சத்தில் கதைக்கு தொடர்பே இல்லாததாகவும் இருக்கிறது… நாயகனின் நண்பன் கெட்டவன் என்று பார்வையாளனுக்கு சொல்ல ஒரு சாமியாரும், நாயகனுக்கு சொல்ல ஒரு எழுத்தாளரும் என இரண்டு கதாபாத்திரங்கள் வலிய திணிக்கப்பட்டு இருக்கின்றன… இவை எல்லாமே திரைக்கதையில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு இருக்கின்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை…


காடு என்றவுடன் வனவிலங்குகளின் வாழ்வியலில் ஏற்பட்ட பிரச்சனைகள், அந்த விலங்குகள் தொடர்பான நுண் தகவல்கள், காட்டிலாகா அதிகாரிகளின் நடவடிக்கைகள், சந்தனமரம் கடத்துவது தவிர்த்து காட்டு வளம் அழிவதற்கான காரணங்கள், காடுகளை அழித்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள், அதில் உண்டாகும் மண் அரிப்பும், காட்டாற்று வெள்ளமும், அத்துமீறி செயல்படும் அதிகாரிகள், மலைவாழ் மக்கள், சுரங்கி வரும் காட்டின் நிலப்பரப்பு என காடு சார்ந்த பிரச்சனைகளும் காட்டைப் போலவே பிரம்மாண்டமானது… ஆனால் அது போன்ற தகவல்கள் இல்லாமல் போனதும் ஒரு ஏமாற்றமே…

படத்தின் மிகப்பெரிய பலமே அதன் வசனங்கள் தான்…. நாயகன் விதார்த் அடிக்கடி பேசும் வசனமான “ உயிர் வாழ்றதுக்காக இந்த காட்டுலருந்து எத வேணும்னாலும் எடுத்துக்குவோம்…. ஆனா வசதியா வாழ்றதுக்காக இந்த காட்லருந்து ஒரு செடியக் கூட பிடுங்க மாட்டோம்” என்று அடிக்கடி சொல்லும் வசனம் மலைவாழ் மக்களின் சார்பாகவே ஒலிக்கிறது… அதுபோல் ”மாற்றத்தைக் கொண்டு வாரோம்னு சொல்லிட்டு பேழ்றதுல திங்காதீங்க… திங்குறதுல பேழாதீங்க…” என்று சொல்கின்ற வசனமும். எழுத்தாளராக வரும் சமுத்திரக்கனி உடனான எல்லா வசனங்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம்.. அதுபோல காட்டைப் பற்றி தெரிந்த மலைவாழ் மக்களுக்கே காட்டிலாகா பணியை கொடுக்கலாமே என்கின்ற செய்தியும் யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான்…. இது தவிர்த்து படத்தில் சிங்கம் புலி தம்பி இராமையா அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் ஓரிரு காமெடிகள் சிரிப்புக்கு கேரண்டி கொடுத்தன… நடிப்பாக பார்த்தால் முதலில் மிளிர்வது சிறிது நேரமே வந்து செல்லும் சமுத்திரக்கனி தான்… அந்த தெனாவெட்டான உடல்மொழி, தீர்க்கமான பார்வை என கவருகிறார்… விதார்த்துக்கு நடிக்க வாய்ப்பு அதிகமெல்லாம் இல்லை… அதீதமாக கவரவும் இல்லை… நாயகியாக வந்து செல்லும் சம்ஸ்கிருதி அழகாக இருக்கிறார்… ஆனால் கதாபாத்திரத்துக்கு பொருந்தவே இல்லை… அது போல் இயக்குநர் ப்ரேமில் இருக்கும் துணை நடிகர்களின் ஒப்பனைகளிலும், முக பாவனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி இருக்கலாம்… புரட்சிகரமான மலைவாழ் மக்களின் பாடலில் லிப்ஸ்டிக் மற்றும் கண்-மைகளை அப்பிக் கொண்டு நிற்கும் துணை நடிகைகளை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது… அது போலத்தான் அவர்களது முகபாவனைகளும்…

படத்துக்கு இசையமைப்பாளர் கே அவர்களின் இசை மிகப்பெரிய ப்ளஸ்… அது போலத்தான் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும்… காட்டின் அழகையும் அடர்த்தியையும் ஒரு சேர அள்ளி வந்திருக்கிறது மகேந்திரன் ஜெயராஜின் கேமரா… காசி விஸ்வநாதனின் கத்தரி இன்னும் துணிந்து சில இடங்களை இயக்குநர் ராஜாங்கத்தின் அனுமதியுடன் கத்தரித்து இருந்தால் சபாஷ் போட்டிருக்கலாம்… இயக்குநருக்கு கதையில் இருந்த முதிர்ச்சி, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் இல்லையோ என்று தோன்றுகிறது…


காடு திரைப்படத்தை பாராட்ட வேண்டும் என்றால், அதற்கும் முதற்காரணம் மற்றும் முழுக்காரணம் அது காடு பற்றிய படம் என்பதாலும், காடு பற்றிய விழிப்புணர்வை கொஞ்சமாவது பேசுவதாலும், புரட்சிகர எழுத்தாளர் பேசும் சில அற்புதமான நடைமுறை சிக்கல் சார்ந்த வசனங்களுக்காகவும் மட்டுமே அன்றி வேறெதர்காகவும் இல்லை… காட்டின் மீது காதல் உள்ளவர்களுக்கு காடு பற்றி தமிழில் வந்த திரைப்படம் என்று சொல்லிக் கொள்ள இந்த ஒரு திரைப்படத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பதும் ஒரு சிறப்பு காரணமாக கொள்ளலாம்…

வன்மம் :


படத்தின் ட்ரைலரை பார்த்த எல்லோருமே கதையை ஓரளவுக்காவது ஊகித்திருப்பீர்கள்.. இரண்டே இரண்டு காட்சிகளில் உங்களுக்கு ட்ரைலரையும் அதனோடு சேர்ந்து, படத்தின் கதையையும் விளக்க முயற்சிக்கிறேன்… முதல் காட்சி பைக்கிள் ஜாலியாக ஆடல் பாடலுடன் இறுக கட்டிக்கொண்டு செல்லும் இரண்டு நண்பர்கள்… அடுத்த காட்சி இரண்டு நண்பர்களும் எதிரும் புதிருமாக நடந்து வர இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே கடந்து செல்லும் காட்சி.. கதை புரிந்ததா…?? இல்லையா..?? என்ன மக்களே..!!?? சரி உங்களுக்காக இன்னும் இரண்டு க்ளு.. மூன்றாவது காட்சி.. இரண்டு நண்பர்களும் எதிரெதிர் திசையில் நிற்க.. அவர்கள் இருவரையும் ஆளுக்கு ஐந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்க.. கையில் சாணம் புடித்து பொலிவேற்றப்பட்ட அரிவாளை வைத்திருக்கும் ஒரு நண்பன் மூன்றாவது நண்பனைப் பார்த்து “ டே உன்ன வெட்டாம விடமாட்டேண்டா..” என்கிறான்.. கட்ட கடைசியாக ஒரே ஒரு க்ளு.. படத்தின் பெயர் “வன்மம்” கதை புரிந்ததா மக்களே…!!!!????


சரி.. வன்மம். அருஞ்சொற்பொருள் கூறுக.. ஒருவரால் பாதிக்கப்பட்ட அல்லது அசிங்கப்படுத்தப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட்ட மற்றொருவர் அந்த நபருக்கு தெரிந்தபடியோ அல்லது தெரியாதபடியோ மனதிற்குள்ளாகவோ அல்லது வெளிப்படையாகவோ பகைமையை கொண்டிருப்பது வன்மம்.. மிக நீண்ட அருஞ்சொற்பொருள் தான்… இருந்தாலும் மறந்துவிடாதீர்கள்.. இப்படி ஒருவர் மற்றொருவர் மீது வைத்திருக்கும் வன்மத்தை அவர் எதிர்பாராத தருணத்தில் தக்க சமயம் பார்த்து வெளிப்படுத்தி தன் பகைமையை தீர்த்து கொள்வது நம் பண்பாட்டு வழக்கப்படி வன்மம். அப்படித்தானே.. சரி இப்போது இந்த வன்மம் என்ற தலைப்பின் பொருளுக்கும் திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்..

முதல் பாராவின் விதிப்படி, இரண்டு நண்பர்கள்… அவர்கள் இருவரும் விரோதிகளாக மாறிவிடுகிறார்கள்.. இந்த வளர்சிதை மாற்றத்துக்கு ஊடாக ஏதோ நடந்திருக்க வேண்டும்.. ஆக நடந்தது என்ன..?? கட்டி வைக்கப்பட்ட உங்கள் கற்பனை குதிரையின் கயிற்றை அவிழ்த்து அதை கொஞ்சம் ஓடவிடுங்கள்…. ரொம்ப தூரம் ஓடிவிடப் போகிறது.. இந்த பாராவின் முடிவில் மறக்காமல் மீண்டும் கட்டிப்போட்டுவிடுங்கள்.. ஓகே… ஓடவிடலாமா…?? சரி என்ன நடந்திருக்கும்.. நண்பர்கள் எதிரிகளாக ஆகியிருக்கிறார்கள்.. அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்திருக்கலாம்.. தனக்கு கிடைக்க வேண்டிய வேலை அவனுக்கு கிடைத்துவிட்டதால் பிரச்சனை, தன் வீட்டு நிலத்தை அவன் அபகரித்துக் கொண்டதால் பிரச்சனை, பொய் சொல்லியதால் பிரச்சனை, பொய் சொல்லாததால் பிரச்சனை, நம்பியதால் பிரச்சனை, நம்பாததால் பிரச்சனை, நம்பிக்கை துரோகத்தால் பிரச்சனை, பன்னாட்டு கம்பெனிகளை ஆதரித்ததால் பிரச்சனை, ஈழத்தை ஆதரிக்காததால் பிரச்சனை, மின்வெட்டால் பிரச்சனை, காவிரி, முல்லைக்கு ஆதரவாக பேசாததால் பிரச்சனை, விஜய் அஜித் ரசிகர்களாக இருந்ததால் பிரச்சனை, காதல் பிரச்சனை, காம பிரச்சனை, கலர் பிரச்சனை, பணப் பிரச்சனை, பதவி பிரச்சனை, படப் பிரச்சனை, பரிசு பிரச்சனை, பணிவு பிரச்சனை, பயம் பிரச்சனை, சாதிப் பிரச்சனை, சமயப் பிரச்சனை, சாமியார் பிரச்சனை, சாவதில் பிரச்சனை, வாழ்வதில் பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனை, வசதி பிரச்சனை, ஸ்டேட்டஸ் பார்த்ததில் பிரச்சனை, ஸ்டேட்டஸ் போட்டதில் பிரச்சனை… லைக்ஸ் பிரச்சனை, லைப் பிரச்சனை, அம்மாடி.. போதும் போதும் போதும்…… களைப்பாக இறுக்கிறது… கட்டிப் போடுங்கள் நம் கற்பனை குதிரைகளை…

ஆக இத்தனை பிரச்சனைகள் இருக்கலாம்…  இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால், காதல் பிரச்சனை தான்.. ஒரு வேளை இவன் காதலித்த பெண்ணையே அவனும் காதலித்திருப்பானோ..?? ஏனென்றால் படத்தில் இரண்டு நாயகர்கள் ஒரே ஒரு நாயகி.. நாம் சந்தேகம் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.. ஆனால் படத்தின் இயக்குநர் செல்வராகவன் இல்லையே… வேறு ஏதோ பேர் சொன்னார்கள்.. ஒரு வேளை நண்பனின் தங்கையை காதலித்திருப்பானோ… படத்தில் சசிக்குமாரும் இல்லை… பிரசாந்த்தின் பீரியடும் முடிந்துவிட்டதே… ஆக அதுவும் இல்லை.. பின்பு என்ன..?? ரொம்ப யோசிக்க வேண்டாம்.. காதல் பிரச்சனைதான்… ஆனால் காதலால் வந்த பிரச்சனை அல்ல… காதலுக்கு காவலாக இருந்ததால் வந்த பிரச்சனை.. நண்பன் கிருஷ்ணா மற்றும் சுனைனாவின் காதலுக்கு நண்பன் விஜய் சேதுபதி துணை.. சுனைனாவின் அண்ணன் அரிவாளைத் தூக்கிக் கொண்டு கிருஷ்ணாவை வெட்ட வர… அதிலிருந்து நண்பனை காக்க வந்த விஜய் சேதுபதி, எதிர்பாராத விதமாக சுனைனாவின் அண்ணன் சாவிற்கு காரணமாகிறார்… இது ஊரில் யாருக்குமே தெரியாது…. இவர்கள் இருவர், அது தவிர்த்து இன்னும் மூவர்… இவர்களுக்கு மட்டுமே தெரியும்… ஆனால் யாருமே அதை வெளியே சொல்லப் போவதில்லை… ஆக தன் உயிரைக் காக்க கொலையே செய்த நண்பன் மீது பாசம் கூடதானே வேண்டும்.. அப்படி ஆகாமல் ஏன் நட்பு முறிந்தது… மீண்டும் நண்பர்கள் சேர்ந்தார்களா…?? விஜய் சேதுபதி கொலை செய்ததை மற்றவர்கள் அறிந்தார்களா..?? இதெல்லாம் மீதிக் கதை…

(எனக்கு மேற்சொன்ன வரிகளை எழுதும் போது, ஏனோ ஐயா திரைப்படமும் நினைவுக்கு வருகிறது…) இப்படி செல்லும் கதையோட்டத்தில் சேதுபதி கிருஷ்ணா மீது கோபம் கொள்வதற்கு இருக்கும் நியாய தர்மங்களில், ஒரு சதவீதம் கூட கிருஷ்ணா சேதுபதி மீது கோபம் கொள்வதில் இல்லை என்பதே படத்தின் மிகப்பெரிய குறை.. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும், என்பதற்க்கு ஏற்ப, அவர்கள் நட்பை கொல்லும் ஒரு வார்த்தையை செல்லத்துரையாக வரும் கிருஷ்ணாவே கூறிவிட்டு, ராதாகிருஷ்ணனாக வரும் விஜய் சேதுபதியை தன் எதிரியாக அவனே பாவித்துக் கொள்ளும் இடத்தில் தலைகுப்புற கவிழ்கிறது திரைக்கதை.. இந்த இடத்தில் மேற்சொன்ன அருஞ்சொற்பொருளின் படி, கிருஷ்ணா சேதுபதியின் மீது வன்மம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்க.. இருந்தாலும் படத்தின் பெயர் வன்மம் தான்.. தன் காதலியை கைப்பிடிக்க.. தன் காதலி குடும்பத்தின் எதிரி குடும்பத்துடன் கைகோர்ப்பது தான் நல்லது என்று கிருஷ்ணா நம்பலாம்… புத்தியுள்ள எந்தப் பார்வையாளனும் அதை நம்ப மாட்டான் என்பதை ஏனோ இயக்குநர் யோசிக்கவே இல்லை போலும்…

மற்றொன்று இதுபோன்ற நண்பர்கள் நிமித்த கதைகளில், எங்கு நண்பர்கள் பிரிகிறார்கள் என்கின்ற காட்சிபடிவத்தை காட்டுகிறோமோ, அப்போதே பார்வையாளன் கடகடவென பல காட்சிபடிவங்களை கருத்தியல் ரீதியாக கடந்து, இறுதியில் அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்கின்ற கடைசி காட்சிப்படிவத்தை அடைந்து அங்கு காத்திருக்கத் தொடங்கிவிடுவான்… அவன் கடகடவென கடந்து செல்லும் காட்சிப்படிவங்களை எல்லாம், இயக்குநர் கற்பனைநயத்துடனோ அல்லது கலைரசனையுடனோ கடந்துவந்து கடைசி காட்சியை அடைந்தால் மட்டுமே அவனது காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்ததாக அவன் ஆசுவாசம் அடைவான்… அப்படி இல்லாமல் இயக்குநர் அந்த காட்சிகளை எல்லாம் கரடுமுரடான கற்பனை வறட்சியுடன், கச்சடாக்களை கொண்டு கடந்துவந்தால், ஏற்கனவே அங்கு இயக்குநரின் வருகைக்காக காத்திருக்கும் பார்வையாளன் இயக்குநரையும் திரைப்படத்தையும் வரவேற்பது பரிகாசமான புன்னகையுடனும் கேலியுடனும் தான்…. கடைசிக் காட்சியில் சேதுபதியும், கிருஷ்ணாவும் சேர்ந்துவிட்டு சிரிக்கும் காட்சியில் பரிசாக கிடைப்பது அந்த பரிகாசமான புன்னகை தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்..

ஒரு திரைப்படம் ஒன்று கேளிக்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்… இல்லை கேள்வி ஞானத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும்… ஆனால் திரைப்படம் பெரும்பாலான இடங்களில் கேலிக்கு உகந்ததாக மட்டுமே இருக்கிறது.. அதுவும் இன்றி முரட்டுத்தனமான மூர்க்கத்தையும், கொலை வெறி கொண்டு அலையும் குருட்டுத்தன்மை கொண்ட பரிதவிக்கும் மனதையுமே பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த திரைப்படம் எதனைச் சொல்ல வருகிறது என்கின்ற கேள்விக்கு எதிர்மறை தன்மையான பதிலே கிடைக்கிறது… கதையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு ஏற்படும் உளச்சிக்கல் தான் பிரதானமான அம்சமாக இருந்தாலும், அதை முன்னிலை படுத்துவது போல் காட்சிகளை அமைக்காததால், அந்த அம்சமும் எந்தவிதமான கவன ஈர்ப்பையும் சேகரிக்காமல் கடந்து சென்றுவிடுகிறது… தான் கொலை செய்த நபரின் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாக்க நினைக்கும் ஒருவன் என்பதே அந்த அம்சம்… மேலோட்டமாக பார்த்தால் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படமும் இதே உணர்வைதான் மிக அற்புதமாக திரைப்படுத்திக் காட்டியது.. ஆனால் வன்மம் அதில் சறுக்கி இருக்கிறது… சேதுபதியின் சிறப்பான நடிப்பு.. குமரி மாவட்டத்து பேச்சு வழக்கை சிறப்பாக கொண்டு வந்திருப்பது, குலம் சார்ந்த சம்பிரதாயங்கள் மற்றும் அதன் வாழ்விடம் சார்ந்த பதிவுகளை சிறப்பாக பட்டியலிட்டு இருப்பது போன்றவை பாராட்ட வேண்டிய அம்சங்கள்…..

மொத்தத்தில் இந்த வன்மம் ஒரு முட்டாள்தனமான, முரட்டுத்தனமான மூர்க்கத்தனமான மனங்களை வணிகத்திற்காக சந்தைப்படுத்தி இருக்கும் திரைப்படம்… மற்றபடி இதைப் பார்த்து புரியவோ தெளியவோ, மகிழவோ இந்த திரைப்படத்தில் எதுவுமே இல்லை என்பது உண்மை.. அதே நேரம் விஜய் சேதுபதியின் கதாபாத்திர அம்சத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் என்றாலும், இந்த வன்மத்தில் வறட்சி அதிகம்….Sunday, 16 November 2014

திருடன் போலீஸ்:

மூன்று விதமான படைப்புகள் இருக்கின்றன… வாழ்வியலின் நிகழ்வுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சமாக கற்பனைகளை கலந்து படைக்கப்படும் யதார்த்தமான படைப்புகள், (காதல், அங்காடித் தெரு, பரதேசி போல) யதார்த்தத்தின் சிறுதுளியான கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதனைச் சுற்றி கற்பனைகளை பின்னுகின்ற படைப்புகள். இதனை யதார்த்த பிரச்சனைகளுக்கு கற்பனையாக அல்லது கனவு நிலையில் இருந்து ஒரு தீர்வை சொல்லும் திரைப்படங்கள் என்றும் கொள்ளலாம். (அவதார், இண்டர்ஸ்டெல்லர், கத்தி, இந்தியன் போல) முழுக்க முழுக்க கற்பனைகளால் மட்டுமே கட்டப்படும் படைப்புகள்.. (இரண்டாம் உலகம், ஹாரி பாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ் போல) இதில் இந்த திருடன் போலீஸ் இரண்டாவது வகைப்பாட்டில் வருகிறது… திருடன் போலீஸ் மட்டும் அல்ல.. தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் வருவது இந்த இரண்டாவது வகைப்பாட்டின் கீழ்தான்…


என்னைப் பொறுத்தவரையில் இந்த மூன்றுவிதமான படைப்புகளிலும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன.. எதுவுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல… ஆனாலும் தமிழ்சூழலில் அதிகமான அளவு படைக்கப்படும் படைப்புகள் இந்த இரண்டாவது வகைப் படைப்புக்கள் தான் என்பதால் அது சார்ந்தே பேச விளைகிறேன்.. கற்பனை சார்ந்து படைக்கப்படும் படைப்புக்களில் அந்த கற்பனை எப்படிப்பட்டது என்பது மிகமிக முக்கியம்… அந்தக் கற்பனை அழகானதாகவோ, ஆச்சரியமானதாகவோ, சுவாரஸ்யமானதாகவோ, வசீகரமானதாகவோ அல்லது நம்மை யோசிக்க தூண்டி முன்நகர்த்தும் கற்பனையாகவோ இருக்க வேண்டியது மிகமிக முக்கியம்… அப்படி இல்லாமல் அர்த்தமற்ற, வறட்சியான கற்பனைகளை கொண்டு கட்டப்படும் திரைப்படங்கள் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் இன்றி நிராகரிக்கப்படும் என்பது நிதர்சனம்..

\திருடன் போலீஸ் திரைப்படத்தின் ஒருவரிக் கதையை இப்படிக் கூறலாம்.. நேர்மையான போலீஸ்காரராக இருந்த தன் தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நாயகன் சட்டத்தின் முன் நிறுத்துவது. இன்னும் ஒரு சாரார் இந்தப் படத்தின் ஒருவரிக் கதையை இப்படிச் சொல்லலாம்.. ”உயிரோடு இருக்கும் போது தன் தந்தையின் அன்பையும் அக்கறையையும் புரிந்துகொள்ளாத மகன், அவரது மரணத்துக்கு பின்னர் அதனை உணர்ந்து கொள்வது” ஆனால் இந்த இரண்டாவது ஒருவரிக் கதையில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஏனென்றால் ஒருவரிக் கதையென்பது படம் முடிவடையும் புள்ளிவரை தொடர்ந்து வருவதாக இருக்க வேண்டும்.. தன் தந்தையின் அன்பை அவன் உணர்ந்து கொள்வதுதான் ஒருவரிக் கதை என்றால், படத்தின் இறுதிக்காட்சியில் தான், அவன் தன் தந்தையின் அன்பை உணர்ந்திருப்பான்… இங்கு அந்த அன்பை அவன் உணர்வது என்பது படத்தின் பாதியிலேயே வந்துவிடுகிறது.. ஆக கதை அது அல்ல… முதலில் சொன்னது தான்… இரண்டாவது சொன்ன ஒருவரிக்கதை, அந்த மையக்கதையை விளக்க துணையாக வந்திருக்கும் ஒரு கிளைக்கதை. அவ்வளவே…

சரி.. மேற்சொன்ன கதையில் கற்பனை எங்கிருக்கிறது..? யதார்த்தம் எங்கிருக்கிறது என்று கேட்டால், காவல்துறையில் நேர்மையாக செயல்பட விரும்பும் காவலர்களுக்கு உண்டாகும் நெருக்கடிகளும், சமயங்களில் அந்த நேர்மையால் அவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தான் யதார்த்தம்…. அப்படி இறந்து போன தன் தந்தையின் இறப்புக்கு காரணமானவர்களை நாயகன் எப்படி சட்டத்துக்கு முன் நிறுத்துகிறான் என்பதில் தொடங்கி, அவர் தந்தை எப்படி யாரால் இறந்து போகிறார்..? அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள், என்ன மாதிரியான தொழில் செய்பவர்கள்..? என படத்தில் வரும் மற்ற எல்லா சம்பவங்களுமே கற்பனைதான்.. ஆனால் அந்தக் கற்பனை ஒரு அபத்தமான, அரை வேக்காட்டுத்தனமான கற்பனை என்பதால் படத்தின் இரண்டாம் பாதியில் நம்மால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து படம் பார்க்க முடியாமல் வெறுப்பை உமிழத் தொடங்குகிறோம்… ஆக இந்தப் படக் குழுவினர் இந்த கற்பனையில் தோற்றதால், படத்தின் கதைகூட படத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது..

படத்தின் முதல்பாதியில் ஓரளவுக்கு படத்தின் மீது இருந்த ஈடுபாடும், எதிர்பார்ப்பும், நல்ல அபிப்பிராயங்களும் பின்பாதி திரைப்படம் ஓடத் தொடங்கியதும், அவைகளும் ஒவ்வொன்றாக ஓடத் தொடங்கி ஒரு புள்ளியில் காணாமலே போய்விடுகின்றன.. படத்தின் ஒரு கிளைச் சரடாக வரும் தந்தை மகனுக்கு இடையிலான பாசம், ஒரு கட்டத்தில் உண்மையாகவே பகடி செய்யப்படும் பாவனையில் அரங்கேற்றப்பட்டு இருப்பதை எந்தக் கோணத்தில் இயக்குநர் நகைச்சுவை என்று கருதினார் என்பதை நம்பவே முடியவில்லை.. அதுதவிர்த்து தொடர்ச்சியாக முட்டாள்தனமான, கோமாளித்தனமான, பலவீனமான வில்லன்களை கொண்டு வெளிவந்திருக்கும் மூன்றாவது திரைப்படம் இந்த திருடன் போலீஸ்.. இதற்கு முந்தையை இரண்டு படங்கள் முறையே “ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவும், கத்தியும். ஆயிரக்கணக்கான வில்லன் ஹீரோ தமிழ் திரைப்படங்கள் எடுத்தப் பின்னரும், ஒரு வில்லனின் கதாபாத்திரத்தை எப்படி செதுக்குவது என்பதில் நம் இயக்குநர்களுக்கு இருக்கும் தெளிவின்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது..

நேர்மையான கண்டிப்பான அதிகாரி போன்று வேடம் போட்டுக் கொண்டே உள்குத்து வேலைகளில் ஈடுபடும் போலீஸ் உடையணிந்த திருடர்களை காட்டிய போதும், காவல்துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்த போலீஸ் மற்றும் வயதாகியும் வேலையை தொடர்ந்து கொண்டிருக்கும் போலீஸ் என அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அக்கறையோடு அட்டவணைப்படுத்திய போதும், நாம் நம் சிறுபிள்ளை பிராயத்தில் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றான இந்த திருடன் போலீஸ் ரொம்பவே பிடித்தது.. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தொடங்கி, திரைப்படம் நாம் விளையாடிய திருடன் போலீஸ் விளையாட்டைப் போலவே எப்போது மாறத் தொடங்கியதோ, அதற்குப் பின்னர் வந்த எந்தக் காட்சியிலும் மனம் லயிக்கவே இல்லை.. ஒரு புள்ளியில் வெறுப்பு மேலிட எழுந்து போய்விடலாமா…?? என்று  என்னும் அளவுக்கு படம் என்னை சோதித்தது என்று சொன்னால், அதில் மிகையில்லை..

தினேஷ்-க்கு குக்கூ திரைப்படத்துக்கு பிறகு வந்திருக்கும் திரைப்படம்.. இதுவும் சொல்லிக் கொள்ளும்படியான திரைப்படமாக அமையால் போனது துரதிஷ்டமே.. அவர் கதைத்தேர்வில் இன்னும் அதிக மெனக்கெடலுடன் கவனமாக இருப்பது நல்லது.. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் அவரது தோற்றமும் உடல்மொழியும் சாதாரண கதாபாத்திரத்துக்கு பொருந்திய அளவுக்கு போலீஸ் கதாபாத்திரத்துக்கு பொருந்தவே இல்லை என்பதையும் சொல்லியெ ஆக வேண்டும்… இந்தத் திரைப்படத்தில் நாயகன் தினேஷை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா… இவரைப் பற்றி சொல்லிக் கொள்ள இந்த ஒரு வரியை தவிர வேறு எதுவும் இல்லை.. விஜய் சேதுபதி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் தோன்றினால் படம் வெற்றி பெற்றுவிடும் என்கின்ற தப்பான அபிப்பிராயங்கள் இன்னும் வேறு ஏதேனும் இயக்குநர்களுக்கு இருந்தால், உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.. அவர் சிறப்புத் தோற்றத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடியும் படம் ஓடவில்லை.. இசை யுவன் சங்கர் ராஜா.. ஏதோ ஒப்புக்கு ட்யூன் போட்டுக் கொடுத்திருப்பதை போல் தெரிகிறது… எந்தப் பாடலிலும் பிண்ணனி இசையிலும் ஜீவனே இல்லை…


மொத்தத்தில் இந்த திருடன் போலீஸ் – சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு..

Wednesday, 12 November 2014

பூஜை:

இன்றைய மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு இயந்திரத்தனமாக, வேகமாக மாறிவிட்டது என்பதை ஒப்புமைப்படுத்திக் கூறுவதற்கு இயக்குநர் ஹரியின் திரைப்படங்கள் நல்ல எ.கா.வாக இருக்கும் என்று நம்புகிறேன்… ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசிப்பதற்கோ, ஒரு அழகான விசயத்தை ரசிப்பதற்கோ, மனம் உருகுவதற்கோ, மனம் விட்டு அழுவதற்கோ, நம் கோபங்களை தணித்து நம்மை சாந்தப்படுத்திக் கொள்வதற்கோ எதற்குமே இங்கு நேரம் இல்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய மனிதனின் வாழ்க்கை.. ஹரியின் திரைப்படங்களும் அப்படித்தான்… திரைப்படத்தின் காட்சிக் கோர்வைகளுக்குள் எதற்குமே நேரம் இருக்காது.. கதைமாந்தர்களும் யோசிக்க முடியாது, பார்வையாளனும் யோசிக்க முடியாது.. காதல் கனிந்து விட்டதா…?? உடனே கையை பிடித்துக் கொண்டு ஓடு, டூயட் பாட…. காதல் கசந்து விட்டதா…?? உடனே கையை உதறிக் கொண்டு ஓடு சோக கீதம் இசைக்க…?? அம்மா வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டாளா…?? உடனே வெளியேறு வீட்டை விட்டு, உன்னை ஒருவன் அடித்துவிட்டு அவமானப்படுத்திவிட்டு செல்கிறானா…?? யோசிக்காதே உடனே ஓடிச் சென்று அவன் கையை வெட்டு….. இப்படி எதைப்பற்றியும் யோசிக்காமல், நீயூட்டனின் மூன்றாம் விதியின்படி உடனுக்குடன் எதிர்வினை இருந்து கொண்டே இருந்தால் அந்த திரைப்படம் ஹரியின் திரைப்படம் என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லலாம்…


ஹரியின் திரைப்பட வரலாற்றில் பெரும்பாலும் ஒரே பார்முலா தான்…. அவரது திரைப்படங்களில் தமிழ், கோவில் என்ற இரண்டு திரைப்படங்களைத் தவிர்த்து பிற திரைப்படங்களான சாமி, அருள், சிங்கம், தாமிரபரணி, வேல், ஆறு, சேவல், பூஜை என எல்லாவற்றிலும் ஒரே கதைதான்…. நாயகனுக்கு வேலை வில்லனை ஜெயிப்பது, நாயகிக்கு வேலை நாயகனை காதலிப்பது, நாயகன் ரவுடியாக இருப்பான், சில படங்களில் போலீஸாக இருப்பான், சில படங்களில் பெரிய இடத்துப் பிள்ளையாக இருப்பான்… பெரும்பாலும் கதாநாயகனின் கதாபாத்திரத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் சுற்றி சுற்றி இவைகளுக்கு உள்ளாகவேதான் இருக்கும்… பெரும்பாலும் உச்சகட்ட காட்சியான க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்று வில்லனை நாயகன் கொன்றுவிடுவான்… அல்லது வில்லன் திருந்திவிடுவான்…. அதுபோலத்தான் முதல் பத்தியில் சொல்லியபடி காதல் சக்சஸா… அப்ப டூயட், காதல் தோல்வியா அப்ப சோலோ சாங்க், அம்மா திட்டிவிட்டாளா..?? வீட்டை விட்டு வெளியேறு… பிறகு அவர்கள் ஒரே அழுகாச்சி வடித்து வீட்டுக்கு கூப்பிடுகிறார்களா..?? வந்து சேர்ந்துகொள் என்பதும் கூட அச்சரம் பிசகாமல் அப்படியே இவரது படங்களில் இருக்கும்…. இவரது இந்தப் படத்தின் ஒருவரிக் கதை அல்ல.. எல்லாப் படத்து ஒருவரிக் கதையும் இதுதான்….. “ நல்லது ஜெயிக்கும், கெட்டது தோற்கும்..”

இந்த ஆரம்பகால அடிப்படை ஆகம விதிகளைத்தான் பெரும்பாலும் இவரது படங்கள் எடுத்து இயம்பும்…. அதற்கு அடுத்த வகையறாக்களான எது நல்லது எது கெட்டது என்கின்ற நுட்பமான கேள்விகளுக்கெல்லாம் இவரது திரைப்படங்களில் எந்த வேலையுமே இல்லை… இந்த ஆகம விதிகளுக்கும், ஒருவரிக் கதைக்கும் எந்தவித சேதாரமும் இல்லாமல் மீண்டும் ஒருமுறை வார்க்கப்பட்டிருக்கும் அச்சுரு தான் இந்த பூஜை… வழக்கம் போல பெரிய வீட்டுப் பிள்ளைதான் நாயகன்… தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார்.. வீட்டை விட்டு வெளியே வந்தவர், காதலியுடன் டூயட் பாடிக் கொண்டே தவறுகளை தட்டிக் கேட்டுக் கொண்டு இருக்க, இவர் குடும்பத்தில் ஒரு பிரச்சனை… அதே நேரம் நாயகன் மேல் தவறு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் குடும்பம் அவரை வீட்டுக்கு அழைக்க…. வீட்டுக்குள் நுழையும் விஷால் பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பதே மிச்சம் மீதிக் கதை…

ஹரியின் திரைப்படங்களை என்னைப் பொறுத்தவரையில் இரண்டு வகையாக வகைப்படுத்துவேன்… ஒன்று, அது சூதாட்ட வகை திரைப்படங்கள் என்று சொல்லலாம்… ஏனென்றால் சூதாட்டத்தின் இறுதியில் ஒன்றுமே கிடைக்காது என்பதைப் போல், இவரின் திரைப்படங்களை பார்த்து முடித்தப் பின்னர் நமக்கு என்ன கிடைத்தது என்று கேட்டால், ஒன்றுமேயில்லை என்பது தான் நம் பதிலாக இருக்கும்.. ஆனால் அந்த சூதாட்டம் ஆடப்படும் சூது நிமிடங்களின் போது இருக்கும் ஒரு பரபரப்பும், சுவாரஸ்யமும் பெரும்பாலும் இவரது திரைப்படங்களில் இருந்து கொண்டே இருக்கும்… பலவீனமான இருதயம் இருப்பவர்களுக்கெல்லாம் இவரது படங்கள் உகந்தவையல்ல என்றே எண்ணுகிறேன்… இவரது படங்களை சூதாட்டத்தோடு ஒப்பிட்டதால், இவரது படங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை கொண்டிருப்பதாக நான் சொல்லவருகிறேன் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்… அப்படி என்றால் இவரது திரைப்படங்களை எப்படி எடுத்துக் கொள்வது என்பதனை எனது இரண்டாவது வகைமை இன்னும் தெளிவாக உணர்த்தும் என்று நம்புகிறேன்..

நான் படித்த பள்ளி ஒரு கிறிஸ்துவ மிஷினரியின் ஆளுமையின் கீழ் இயங்கும் பள்ளி.. அங்கு கிறிஸ்துவ திருநாள் தோறும் ஆலயங்களில் தேவதுதி பாடல்கள் பாடச் சொல்லி நாங்கள் பணிக்கப்படுவோம்.. அதில் எனக்கு எப்போதும் பிடித்தமான ஒரு பாடல் உண்டு… “ பிரியமானவனே..” என்று தொடங்கும் அந்தப் பாடலில் ஒரு வரி வரும்…. “ ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்…. ஒழுங்கின்படி ஓடு மகனே…” என்று… இயக்குநர் ஹரியின் படங்கள் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த வரிகள் நினைவுக்கு வரும்… ஆம்… என்னைப் பொறுத்தவரை ஹரியின் திரைப்படங்களுக்கான இரண்டாவது வகைப்பாடு அவை “ ஒழுங்கின்படி ஓடப்படும் ஓட்டப்பந்தயம்..” என்பதே…. ஓட்டப்பந்தயத்தின் சிறப்பே யார் முந்துகிறார்கள் என்பது தானே… இவரது ஓட்டப்பந்தயத்தில் ஒரு கட்டத்தில் நாயகன் முந்துவான், மறுகட்டத்தில் வில்லன் முந்துவார்…. இப்படி மாறி மாறி நடக்க இறுதியில் நாயகன் ஜெயித்திடுவான்…. அந்த ஒழுங்கின்படி என்கின்ற வார்த்தைக்கும் இவரது படங்களில் அர்த்தம் இருக்கும்… தவறான விசயங்கள் போதிக்கப்படாது.. தண்ணியடிப்பது, தம் அடிப்பது, பெரியவர்களை கிண்டல் செய்வது, பெண்களை கேலி செய்வது, ஓடிப் போய் திருமணம் செய்வது, பெற்றோர்களை மரியாதை இல்லாமல் பேசுவது இப்படி வேல்யூ எஜுகேசனில் நாம் படித்த எல்லா வேல்யூஸையும் மதிப்பதைப் போல் தான் படக்காட்சிகள் இருக்கும்… ஆனால் அதீத அடிதடி வன்முறை இருப்பது போல் தோற்றம் இருக்கும்…. ஆனால் அந்த அதீத வன்முறை, அடிதடி இரண்டுமே ”தர்மத்தின் தலை காக்கத்தான்” என்பதே இயக்குநரின் தெளிவுரையாக இருக்கும்…. ( ஏற்கனவே சொல்லியது போல் எது தர்மம் எது அதர்மம் என்கின்ற நுண்ணிய கேள்விக்கெல்லாம் இங்கு இடமில்லை என்பதையும் நினைவில் கொள்க…)

ஆக இதுவும் வழக்கமான ஹரியின் மசாலா ஓட்டப்பந்தயம் தான்… ஓட்டப்பந்தயத்தின் ஓடும் நேர திக்திக் பரபரப்பு உண்டு, உணர்ச்சி வேகத்தில் ஆர்பரிக்கும் ஆரவாரம் உண்டு, ஆள் உயர பனைமரம் உண்டு, அது வழக்கம் போல் சாய்வதும் உண்டு, செல்போன், சிம்கார்டு சர்ச்சிங்க், டாட்டா சுமோ சேசிங், வீச்சரிவாள் விரட்டு, கோயில் திருவிழா, கூட்டம் கூட்டமாக சொந்த பந்தங்கள் என எல்லாமே உண்டு.. விஷாலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான படமா என்று சொல்லத் தெரியவில்லை… அழகாக இருக்கிறார் ஸ்ருதி என்று வேண்டுமானால் சொல்லலாம்… அழகாக நடிக்கிறார் என்றோ, அழகாக பேசுகிறார் என்றோ சொல்ல ஆசையாக இருக்கிறது…. ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா என்றுதான் தெரியவில்லை… சூரியும் பாண்டியும் சேர்ந்து அடிக்கும் இரண்டாம் பாதி காமெடியெல்லாம் சகிக்கவே முடியவில்லை… யுவனின் இசையில் எந்தப் பாடலுமே தேறவில்லை.. இயக்குநரின் ஆஸ்தான கேமராமேனின் ப்ரியனின் ஒளிப்பதிவில் ஆயிரத்துக்கும் அதிகமான ஷாட்களை அடுக்கி இருப்பார்களோ என்று அஞ்சப்படுகிறது… எடிட்டர் வி.டி விஜயனின் கத்தரிக்கு ஏகப்பட்ட வெட்டு வேலைகள் இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது…


ஆக பூஜை இயக்குநர் ஹரியின் பரபர திரைக்கதையில் எங்குமே நிற்காமல் வழக்கம் போல ஒழுங்கின்படி ஓடும் ஒரு ஓட்டப்பந்தயம் தான்….. ஓட்டப்பந்தயத்தின் பரபர நிமிடங்கள் ஆங்காங்கே உண்டு… ஆனாலும் ஒரு சந்தேகம்…!!?? ஓட்டப்பந்தயம் ஓடுபவர்களுக்கு நல்லது….. அதனைப் பார்ப்பவர்களுக்கு….??????

Tuesday, 11 November 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா:

சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருக்கும் ஏதேனும் ஒரு சமூக பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு இனி படம் செய்தால் மட்டும்தான் பிழைக்க முடியும் என்பதனை ஓரளவுக்கு தமிழ் இயக்குநர்கள் உணரத் தொடங்கிவிட்டார்களா…?? அல்லது ஒரு குறிப்பிட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே மாதிரியான படங்களை வரிசையாக எடுத்துத் தள்ளும் வழக்கமான பார்முலா அடிப்படையில் தான் இது போன்ற படங்கள் வருகின்றதா…? என்று தெரியவில்லை.. ஜீவா, மெட்ராஸ், கத்தி என வஞ்சிக்கப்படும், ஏமாற்றப்படும் மக்களுக்கு எதிராக போராடும் தொனியில் அல்லது அப்படிப்பட்ட மக்களின் ஏமாற்றங்களை பதிவு செய்யும் தொனியில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் இந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… ஆனால் அந்த பதிவு தொடர்பான பத்து நிமிட வசனங்களையும் பனிரெண்டு நிமிட காட்சிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு, அதற்கு மேல் வழக்கமான காமெடி, பாடல், காதல் என கலர் கலர் ஜிகினா பேப்பர்களைச் சுற்றி நம்மை இம்சை செய்வதைத் தான் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை…


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இயங்கிவரும் ஒரு உருக்கு ஆலையில் 140 டெசிபல் ஒலிக்கும் அதிகமான அளவு ஒலி கொண்ட இயந்திரங்களை தொழிலாளர்கள் இயக்குகிறார்கள்.. மேலும் குரோமியம் போன்ற தடைசெய்யப்பட்ட வேதியியல் இரசாயனங்களையும் பாதுகாப்பற்ற சூழலில் கையாளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. இதனால் செவிட்டுதன்மை, கருக்கலைப்பு, மாரடைப்பு, கேன்சர் போன்ற பல நோய்களுக்கு தோற்றுவாயாக அவர்களது உடல் மாறுகிறது.. இதனை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது… இதனை தெரிந்து கொள்ளும் மருத்துவரான கதையின் நாயகி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுக்கிறாள்…. நாயகி வழக்கில் வெற்றி பெற்றாளா…?? இல்லை தோற்றாளா…?? இல்லை கொலை செய்யப்பட்டாளா…?? நாயகன் அவளுக்கு எப்படி உதவினான்…?? இதுதான் மீதி இருக்கும் கதை…. பிறந்ததில் இருந்தே தமிழ் சினிமா பார்த்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா ரசிகனுக்கு இந்தப் படம் எப்படி முடியும் என்பதை கணிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே நம்புகிறேன்…

கதைக்கரு கிடைத்துவிட்டாலே கதை முடிந்துவிட்டது என்று நினைத்து விடுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.. என் கணக்கு சரியென்றால், கண்டிப்பாக இது இயக்குநர் கண்ணன் அவர்களுக்கு ஐந்தாவது படமாக இருக்கும்… ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை இந்த வரிசையில் அடுத்ததாக வந்திருப்பதுதான் ஒரு ஊர்ல இரண்டு ராஜா என்று எண்ணுகிறேன்… ஐந்தாவது படத்தை இயக்கும் போது கூட ஒரு கதாபாத்திரத்தை எப்படி வடிவமைப்பது என்பதை இன்னும் இயக்குநர் முழுமையாக உணரவில்லையோ என்று தோன்றுகிறது…. இந்த கதாபாத்திர வடிவமைப்பு என்பது அவரது முதல்படமான ஜெயங்கொண்டானில் ஓரளவுக்கு இருந்தது.. அடுத்து வந்த திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு என்கின்ற அந்த வஸ்துவை கண்டுபிடிக்கவே முடியவில்லை… ரயில்வே போலீஸ், ஓடிப் போக உடன் வந்த நண்பன், உதவி கேட்டதற்காக லிப்ட் கொடுத்த தம்பி ராமையா, ஏன் உயிரைக் கொல்ல துரத்தி வந்த வில்லன் நாசர் முதற்கொண்டு எல்லோருமே நல்லவர்களாக மாறும் திரைக்கதை…. இப்படி தான்-தோன்றித்தனமான கதாபாத்திரங்களை சமீபத்தில் எந்தப் படங்களிலும் பார்த்ததே இல்லை.. கதை போகின்ற போக்கிற்கு ஏற்ப எல்லா கதாபாத்திரங்களும் தங்களை வளைத்துக் கொண்டே செல்கிறார்கள்…

கதை சொல்லும் முறையிலும் மிகப்பெரிய பின்னடைவு... இந்த மொத்த திரைப்படத்தில் இவர்கள் கதை சொல்லும் இடம் என்பது அந்த 20 நிமிட ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும்தான்… அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர்கள் மறந்தும் கூட கதை சொல்ல முயலவே இல்லை… இந்தக் கதையை இவர்கள் தொடங்குவதற்காக நீங்கள் இடைவேளை வரை காத்திருக்க வேண்டும்… மலையாளத் திரைப்படங்களில் கூட கதையை மிக மெதுவாகத்தான் தொடங்குவார்கள்… ஆனால் அந்தக் கதையை தொடங்கும் முன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதித்துவிடுவார்கள்… அதுவும் இங்கு இல்லை.. இடைவேளைக்கு இரண்டு நிமிடம் முன்னர் வரை இவர்கள் சொல்லும் கதை என்ன தெரியுமா…?? நாயகனின் நண்பனுக்கு ஒரு காதல், ஓடிப் போக முயலும் போது காதலி காதலையே கைகழுவி விடுகிறாள்… வேறு வழியின்றி நாயகனும் அவனது நண்பனும் அதே ரயிலில் ஓடிப் போகிறார்கள்…. அங்கு மற்றொரு காமெடியனுக்கு சரக்கு வாங்க நாயகன் உதவுகிறான்… நாயகியைப் பார்க்கிறான்… அவளை தவறான பெண்ணாக புரிந்து கொள்கிறான்…. பின்பு அவள் டாக்டர் என்று தெரிந்து கொண்டு காதலிக்கிறான்…. இவ்வளவே…. இந்தக் கதையை நீங்கள் முன்னே பின்னே என்று எப்படி வேண்டுமானும் மாற்றிக் கொள்ளலாம்… அல்லது மொத்தமாக தூக்கிவிடலாம்… படத்தில் எந்த மாற்றமும் இருக்காது… அப்படி ஒரு பலவீனமான திரைக்கதை…

இந்த சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் திரைப்படங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை… எதனை தீர்வாகச் சொல்வது என்பது… ஒன்று மக்கள் வென்றது போல் காட்ட வேண்டும், அல்லது தோற்றது போல் காட்ட வேண்டும்… தோற்பதைப் போல் காட்டினால் மக்களுக்கு பிடிக்காது, படமும் ஓடாது(என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்..) ஆக ஜெயிப்பது போல் தான் காட்ட வேண்டும்… இந்த ஜெயிப்பது போல் காட்டுவதில் எத்தனை வழிமுறைகள் என்பதைத்தான் பெரும்பாலான படங்கள் பின்பற்றுகின்றன.. சட்ட ரீதியாக வெல்வது, சண்டை ரீதியாக வெல்வது என்கின்ற வரிசை பதத்தில் வில்லன் திருந்தியதால், மக்களுக்கு நன்மை கிடைத்தது என்கின்ற அசோகன் காலத்து அதர பழசான பதத்தைக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்…


ப்ரேமில் இருப்பவர்கள் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லா ப்ரேமிலும் தெரிவது போல் அப்படி நடித்திருக்கிறார்கள் எல்லாருமே.. சீனியர் நடிகரான நாசர் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.. ரெண்டு ராஜா என்று வைத்ததாலோ என்னவோ நடிகர் சூரிக்கும் ஒரு காதல் உண்டு, காதல் தோல்வி உண்டு, சண்டைக் காட்சிகளில் பங்களிப்பு உண்டு… இவ்வளவு ஏன் க்ளைமாக்ஸ் காட்சியான கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட விமலை விட இவருக்குத்தான் முன்னுரிமை அதிகம்…. ஒரு நாயகன் உதயமாகிறார்… ????? நாயகி ப்ரியா ஆனந்த பல ப்ரேம்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் ஓரமாக நின்றுகொண்டு இருந்திருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது… விசாகா ப்ரியாவின் தோழியாக வந்து போகிறார்… யாரையோ காதலிப்பதாக சொல்லி, அதற்கு ஒரு பாட்டும் வைத்து கடைசி வரை அது யார் என்றே சொல்லவில்லை… இதுபோலத்தான் நாசரும் தீவிர விவாதத்தின் போது, கோர்ட்டு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையை சொல்லி, இப்படி ஒரு விசயம் இருப்பது தெரியுமா என்று வக்கீல்களையே வியக்க வைப்பார்… அது அப்படியென்ன ஒரு விசயம் என்பதையும் கூட இயக்குநர் சொல்லவே இல்லை… என்ன திரைக்கதையோ….!!?? இனியா தான் பாவம்… இதே விமலுடன் வாகை சூட வா திரைப்படத்தில் அவரைவிட சிறப்பாகவே நடித்தும் கூட, இன்று அதே விமல் ஹீரோவாகவே தொடர்ந்து கொண்டு இருக்க, இவரோ குத்துப்பாடலுக்கு ஆடும் அளவுக்கு இறங்கி வந்திருப்பதை நினைத்தால்…..?? என்ன சொல்வது என்றே தெரியவில்லை… தமிழ் சினிமாவின் சாபக் கேடு…??

இமானின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாகத்தான் இருக்கிறது…. ஆனால் அந்தப் பாடலின் அவசியம், தேவை என்ன என்பது தான் புரியவில்லை… பார்வையாளர்கள் கூட ஐந்து பாட்டு, நான்கு சண்டை என்னும் கட்டமைப்புக்குள் இருந்து வெளிவந்தாலும் கூட இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அந்த கட்டமைப்புக்குள் இருந்து வெளியே  வரவே மாட்டார்கள் போலத் தெரிகிறது….  படம் ஓடுவதற்கு இந்த சமாச்சாரங்கள் எந்தவிதத்திலும் உதவாது என்பது அப்பட்டமாக தெரிந்தபின்னரும் கூட இவர்கள் அதையே உடும்புபிடியாக பிடித்து இருப்பதைப் பார்த்தால், இந்த சமாச்சாரங்களில் வேறு ஏதோ சமாச்சாரம் இருக்குமோ என்று ஐயப்படத் தோன்றுகிறது…

மொத்தத்தில் இந்த “ ஒரு ஊர்ல இரண்டு ராஜா” ஒரு கங்கா ஸ்நானம் எடுப்பது போல…… ஆனால் அந்த ஸ்நானத்தில் நீங்கள் மூழ்க மூன்று முறை கூவத்திலும் குளிக்க வேண்டும்… தயாரா….??

கங்கா ஸ்நானம் – கதைக்கரு

கூவத்தில் குளியல் – காதல், காமெடி, பாடல்கள், பிரச்சனைக்கு தீர்வு, இன்னபிற மசாலாக்கள்….

Thursday, 6 November 2014

கத்தி:

அஞ்சான், கதை திரைக்கதை, அரண்மனை, ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா என ஏகப்பட்ட படங்களைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.. வேலை பளுவில் சிக்கிக் கொண்டேன் என்றோ மன உளைச்சலில் இருந்தேன் என்றோ, சினிமாவைப் பற்றியே யோசிக்கவிடாத ஒரு உலகத்திற்குள் சிக்கிக் கொண்டு இருந்தேன் என்றோ, என்னை என் சுய இச்சையின்படி இயங்கவிடாமல் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றோ, பல எஜமானர்களுக்கு ஒரே ஒரு விசுவாசமான வேலைக்காரனாக இருந்து கொண்டு இருக்கிறேன் என்றோ, ஏன் எழுத வேண்டும்….?? என்ற திமிரோடு சுற்றிக் கொண்டிருந்தேன் என்றோ, எந்த திரைப்படமுமே என்னை எழுதும்படி தூண்டவில்லை என்றோ எனக்கு நானே பதிவிட முடியாமல் போனதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறேன்… இதில் எது உண்மையான காரணம் என்று நீங்கள் கேட்டால், மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் அல்லது மேற்சொன்ன எல்லாமே கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லுவேன். ஆனால் இப்படி பதிவுகள் எழுதாமல் தள்ளிப் போட்டுவிட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு விமர்சனப் பதிவுகளை எழுதுவதிலும் ஒரு அனுகூலம் இருக்கின்றது என்பதை இந்த கத்தி திரைப்படம் எனக்கு உணர்த்தி இருக்கிறது..


ஒரு பத்து நாட்களுக்கு முன்னால், இதே திரைப்படத்தின் பதிவை நான் எழுதி இருந்தால், கத்தி திரைப்படத்தின் பிரதானமான சிறப்பம்சங்களை பிரஸ்தாபித்து கத்தி இருப்பேன் என்றே தோன்றுகிறது… ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த திரைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட விவாதங்களும், காணொலி காட்சிகளும், படம் குறித்த என் பார்வையை பெரிதாக மாற்றவில்லை என்றாலும் கூட, அந்த திரைப்படத்தின் சிறப்பம்சங்களை பாராட்டுவதற்காக உருவாகிவந்த ஒரு மனநிலையை முற்றிலுமாக தகர்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை… ஆக இத்திரைப்படம் சார்ந்த என் பதிவை இரண்டுவிதமான கோணங்களில் அணுகலாம் என்று இருக்கிறேன்… அதில் ஒன்று நம் முன்பு விமர்சனத்துக்காக வைக்கப்பட்ட ஒரு படைப்பு இது என்கின்ற கோணம்… இதில் படைப்பு யாருடையது என்பது சார்ந்த ஒரு சிக்கலை பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை… இரண்டாவது கோணம் இந்தப் படைப்பு யாருக்கு சொந்தமானது என்பதைப் பற்றியதாக இருக்கும்…

திரைப்படங்கள் என்பவை கேளிக்கைக்கானவை என்று சொல்லும் மனிதர்களை நான் கேலி செய்யும் மனோபாவத்துடன் பார்க்கக்கூடியவன்.. நான் என்னுடைய பதிவுகளில் பலமுறை சொல்லியபடி திரைப்படங்கள் என்பவை வெறும் கேளிக்கை மட்டுமே அல்ல…. அதிலும் குறிப்பாக நம் சமூகத்தில் அது வாழ்வியலோடு நேரடித் தொடர்பில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு கருவி.. ஒரு செய்தியை பத்திரிக்கைகளில் பிரசுரிப்பதை விட, அதனை புத்தகமாக அச்சிடுவதை விட, அதனை திரைப்படமாக கொடுக்கும் போது அது சென்று சேர்கின்ற மனிதர்களின் வீச்சு என்பது கணக்கிலடங்காத அளவில் இருக்கும் என்பது கண்கூடாக நாம் கண்ட உண்மை… அப்படி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு கதைக்கருவை எடுத்துக் கொண்டு, அதில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரிச்சயமான ஒரு நாயகனை நடிக்கவைத்து, விவசாயம் சார்ந்த, பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களுக்கு எதிரான ஒரு கருத்தை நம் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சென்றவிதத்தில் இந்தக் கத்தி கவனத்தை ஈர்க்கிறது…

இது இந்த திரைப்படம் பாராட்ட வேண்டிய திரைப்படமாக மாறி இருப்பதற்கான முதல் தகுதி… இரண்டாவதாக இந்திய தொழிலதிபர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி செய்த ஊழல்களையும், அரசியல்வாதிகள் செய்த ஊழலையும் மறைமுகமாக சுட்டிக் காட்டாமல், நேரடியாகவே சுட்டிக் காட்டிய முதல் தமிழ் திரைப்படமாக நான் கத்தியை மட்டுமே அடையாளம் காண்கிறேன்… இத்திரைப்படத்தில் அவர்கள் வசன ரீதியிலாக தொட்டுக் காட்டும் 2ஜி தொடர்பான ஊழல்களும், கிங் பிஷ்சர் நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையாவின் ஊழல்களையும் அப்பட்டமாகவும் நேரடியாகவும் பேசிய விதத்திலும் இந்த கத்தி சிறப்பு கவனம் பெறுகிறது… இது போன்ற அரசியல் சார்ந்த சில ஊழல்களை தமிழ் சினிமாவில் பேச முடியும் என்பதற்கான இந்த ஆரம்ப அறிகுறிகள் நிச்சயம் வரவேற்கத்தக்கவை… அதுபோல அத்தியாவசியமற்ற பொருட்களை கூட மோகிக்கும் மனநிலைக்கு நம் மக்களை பன்னாட்டு கம்பெனிகள் அடிமையாக்கி இருப்பதை வலியுடன் கேலி செய்யும் வசனமும் சிறப்பானது… இவைகள்தான் இந்த திரைப்படம் பாராட்டப்பட வேண்டிய திரைப்படமாக மாறி இருப்பதற்கான இரண்டாவது தகுதி…

இந்த இரண்டு தகுதிகளை தவிர்த்து இந்த திரைப்படத்தை பாராட்டுவதற்கான வேறு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றதா என்று கேட்டால் சத்தியமாக இல்லை… சரி திரைப்படம் விறுவிறுப்பானதாக இருக்கிறதா என்று கேட்டால், படம் விறுவிறுப்பாக இருக்கிறது தான், ஆனால் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது… அப்படி நம்மை சொல்ல முடியாமல் தடுப்பது எதுவென்றால் தமிழ்சினிமாவின் அடிப்படை குறைபாடுகளாக கூறப்படும் காதல், காமெடி, பாடல்கள் தொடர்பான குறைபாடுகள் தான்… படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிட்டது என்று நாம் சந்தோசம் கொள்வதற்குள், கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் முட்டி திணறத் தொடங்கிவிடுகிறது… முதல் காட்சியில் தொடங்கிய கதை அடுத்த காட்சிக்கு நகர்வதென்பது அடுத்த ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்னர்தான்…. இந்த ஒரு மணி நேரத்துக்கு முந்தைய எந்தக் காட்சிகளை நீங்கள் நீக்கினாலும் படத்தின் கதையில் எந்தக் குழப்பமும் ஏற்படாது…. அதுவே திரைக்கதை மிகவும் பலகீனமாக இருப்பதற்கான சான்று…


மேற்சொன்ன மூன்று அடிப்படை தமிழ் சினிமா குறைகளை தவிர்த்து அதன் முக்கியமான மற்றொரு குறையாக இருப்பது அதன் ஹீரோயிசமும், அது தொடர்பான லாஜிக்குகளும் தான்… சிறையில் இருந்து தப்பி வந்து வீர தீர சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் நாயகனின் வீரத்தையும் கிரிமினல்தனத்தையும் பார்த்தெல்லாம் ஆச்சரியம் அடைய தேவை இல்லை என்றாலும் கூட, அவனுக்கு இருக்கும் புத்தி சாதுர்யம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பார்க்கும் போது அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது… அதுபோலத்தான் மல்டி நேஷ்னல் கம்பெனி அதிபராக வரும் அந்த வில்லன் கதாபாத்திர சித்தரிப்பும்.. அவ்வளவு பெரிய வலை பின்னலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனி நிறுவனத்தார், இப்படி இரண்டாம் தர அரசியல் தாதாக்களைப் போல் அடியாட்களை லோடு வண்டியில் அடைத்து அனுப்பிக் கொண்டே இருந்து பொறுமை காப்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்பதையும் சொல்லத் தேவையில்லை…. இறுதியில் இவர் இறந்து வேறு போகிறார்…. இதை எல்லாம் பார்க்கும் போது சிறு குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டுகளை பார்க்கும் போது எப்படி எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் மென்மையாக சிரித்துக் கொண்டு மட்டுமே இருப்போமோ அப்படி இருக்கத் தோன்றுகிறது… இப்படி பல இடங்களில் லாஜிக்குகளைப் பற்றியே யோசிக்காமல் திரைப்படம் பார்த்துக் கொண்டே இருப்பதால், இது மக்கள் பிரச்சனைகளுக்கு சினிமாத்தனமாக பதில் சொல்லும் ஒரு சினிமாவாகவே இறுதியில் நிலைகொண்டுவிடுகிறது…. அதுபோல் இது போன்ற மக்களின் பிரச்சனைகளை பேச முயலும் ஒரு திரைப்படத்தை இது போன்ற கமர்ஸியல் தன்மையுடன் எடுத்தால் தான் படம் ஓடும் என்பதான ஒரு குருட்டு பிம்பத்தை மீண்டும் நிறுவ முற்படுகிறாரோ முருகதாஸ் என்றும் சந்தேகம் ஏற்படுகிறது…

இதுதவிர்த்து படம் தொடர்பான சில தவறான வாதங்களையும் பார்க்கிறேன்.. சில பதிவுகளில் விஜய் பேசும் அந்த பிரசித்தி பெற்ற கம்யூனிச வசனத்தையும், ஆரம்ப காலகட்டங்களில் கோக் நிறுவனத்தின் அம்பாஸிடராக இயங்கியதையும் கேலி செய்வதான வரிகளையும் பார்க்கிறேன்… அதுபோலத்தான் திமுகவின் ஊழலைப் பேசியவர்கள் ஏன் அதிமுகவின் ஊழலை பேசவில்லை என்பதான அதிபுத்திசாலித்தனமான கேள்விகளையும் பார்க்கிறேன்… இவைகளில் எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு… கம்யூனிச சித்தாந்தங்களில் திளைத்துப் போன ஒரு பத்து நபர்களை தனித்தனி அறைகளில் அடைத்து அவர்களிடம் கம்யூனிசம் என்றால் என்ன என்று கேள்வியெழுப்பினால், அவர்கள் பெரும்பாலும் வேறு வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள் என்பது தான் உண்மை… கம்யூனிசம் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பதின் வயது சிறுமிக்கு நாயகன் அளிக்கும் பதிலான “ உன் வயிறு நிறைஞ்சதுக்கு பிறகு நீ சாப்பிடுற இட்லி இன்னொருத்தரோடது…” வசனம் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது…. இதனை முன் வைத்து சிலர் பகிர்ந்து உண்பது தானே கம்யூனிசம் என்றெல்லாம் வாதிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படுகிறேன்…. என் கேள்வி எல்லாம், பற்றாக்குறை உள்ள இடத்தில் தானே பகிர்ந்து உண்ண வேண்டும், ஒரு வேளை அந்த இடம் தன்னிறைவு பெற்ற இடமாக இருந்து (நான் கண்டிப்பாக தன்னூத்து கிராமத்தை சொல்லவில்லை), அந்த இடத்தில் ஒருவன் தன் தேவைக்கு அதிகமான அளவை எடுத்து பதுக்கி வைத்துக் கொள்வதாக எடுத்துக் கொண்டால், அதுவும் கம்யூனிச சித்தாந்தத்தில் குற்றம் தானே… அதைத்தானே நாயகனின் வரிகள் விளக்குகிறது.. அதுபோல கத்தி திரைப்படத்தின் மீதான எனது பிம்பம் பத்து நாட்களுக்கு முன்பு இருந்ததை போல் இன்று இல்லாமல் மாறி இருப்பதை போல், கோக்கின் அம்பாஸ்டராக இருந்த விஜய்க்கு இன்று கோக்கின் மீதான பிம்பம் மாறி இருக்கக் கூடாதா…?? அப்படி மாறி இருக்கிறதா இல்லையா என்பதையும் நாம் பொறுத்திருந்து தானே பார்க்க வேண்டும்… அதற்குள் நாமாகவே ஒரு முன்முடிவுக்கு வந்து ஏன் குற்றம் சாட்ட வேண்டும்… அல்லது இது போன்ற பெரிய நிறுவனத்தின் அம்பாஸ்டர்கள் இறுதிவரை அந்தக் கம்பெனிகளின் அம்பாஸ்டராக மட்டுமே இருப்பதைத்தான் நாம் விரும்புகிறோமா…??? அதுபோல அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்தினால் படம் வெளிவருமா…?? படம் வெளிவருவதற்காக அவர்கள் வளைந்து கொடுத்திருக்கிறார்கள் என்றே நாம் வைத்துக் கொள்வோம்.. அதில் என்ன தவறு இருக்கிறது என்பதே என் தரப்பு… நம்மை பொறுத்தவரை ஒன்று யாரையும் குற்றம் சொல்லக் கூடாது, அல்லது பராபட்சமின்றி எல்லோரது குற்றத்தையும் பேச வேண்டும்… நியாயமான எதிர்பார்ப்பு தான்… இல்லை என்று சொல்லவில்லை… ஆனால் எந்தவித அடையாளமும் இல்லாமல், பார்வையாளர்கள் என்ற கூட்டமான போர்வைக்குள் இருக்கும் நமக்கு அது சாத்தியம்.. ஆனால் திரைத்துறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் நம் சூழலில் இருக்கிறதா…?? ஒரு வேளை அடுத்த ஆட்சி திமுகவின் ஆட்சியாக இருந்தால், கத்தி படக் குழுவினருக்கு  கை மேல் கிடைக்கும் பலன் என்னவென்று நாம் அறிய மாட்டோமா…?? எந்தவித அடையாளமும் இல்லாத நம்மைப் போன்ற பார்வையாளர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டலாம்… அதனால் நமக்கு எந்தவிதமான நேரடியான பாதிப்புகளும் ஏற்படாது… ஆனால் சமூகத்தில் குறிப்பிட்ட அடையாளத்துடன் இயங்கும் ஒரு குழுவோ அல்லது ஒரு தனி நபரோ அரசியல் அல்லது தொழிலதிபர்கள் சார்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, அதனால் அவர்கள் அடையும் நேரடியான பாதிப்புகள் ஏராளமானவை.. இப்படி குற்றம் சாட்டுபவர்கள் திரைத்துறை சேர்ந்தவர்களாக இல்லாமல், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களின் நம்பகத்தன்மை மீது எழுப்பும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் சமூகத்துக்கு நன்மை பயக்கும்…. ஆனால் திரைத்துறை சார்ந்தவர்களோ ஆளும் கட்சியின் அடிவருடிகளாக இருந்து கொண்டே தான் எதிர்கட்சிகளின் ஊழல்களை பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்….. இதுவும் கண்டிப்பாக மாற வேண்டும் தான்.. ஆனால் அது மாறுவதற்கான சூழல் தற்போது இல்லை…. ஒரு வேளை ஆளும் கட்சியை எதிர்த்து கருத்துகளை பரப்பும் படத்தை பல கோடி செலவில் தயார் செய்து, அந்தத் திரைப்படம் தடை செய்யப்பட்டால், நம்மில் எத்தனை பேர் ரோட்டில் இறங்கி, அந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று போராடுவோம் என்று நினைத்துப் பாருங்கள்…. பெரும் கூட்டங்களுக்கு நடுவில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் திரை கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தான்… இதுபோல அத்தி பூத்தார் போல் திரைப்படங்கள் பேசும் நிகழ்வுகளை கூட கேலி பேசி கிள்ளி எறியத்தான் நாம் முயலுகிறோம்… இதுபோல் அவ்வபோது எடுக்கப்படும் சிறு முயற்சிகளைக் கூட சமூகத்தின் விழிப்புணர்ச்சியாக மாற்ற ஆர்வம் காட்டாமல், அந்த தனி நபரின் தாக்குதலுக்கு பயன்படுத்திக் கொள்வதிலேயே பெருத்த ஆர்வம் நாம் காட்டுவதால், ”நீ எதுவுமே பேசாமல், வாயை மூடிக் கொண்டு இரு…” என்று மறைமுக செய்தி தருகிறோமோ என்றுதான் எனக்கு கவலையாக இருக்கிறது….

மொத்தத்தில் கத்தி திரைப்படம் ஒரு நல்ல கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் மீது ஆக்சன், காதல், காமெடி என்கின்ற மட்டமான மசாலா கலவை தூவி பரபரவென படைக்கப்பட்டிருக்கும் அவசரமான படைப்பு… சாமானிய பார்வையாளனை பல இடங்களில் பரவசமடையச் செய்யும் காட்சி கோர்வைகளும், குறைந்தபட்சம் இடைவேளை பகுதியிலாவது கோக் வாங்கக் கூடாது என்பது போன்ற குறைந்தபட்ச விழிப்புணர்ச்சியையும் (ஐநாக்ஸில் அன்று கோக் விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே இருந்ததை கண்ணால் கண்டே எழுதுகிறேன்…) ஏற்படுத்திய விதத்தில் கத்தி ஜொலிக்கிறது….

கத்தி – ஏற்படுத்திய காயங்கள்:

பெயரே கத்தி என்று இருப்பதாலோ என்னவோ அது வாங்கிய குத்துக்களும் கவனம் பெற்றன…. அது குத்திக் கிழித்த நபர்களும் கவனம் பெறுகின்றனர்… லைக்கா நிறுவனத்தின் பங்கெடுப்பு அது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் திரைப்படத்தின் மீது தொடர்ந்த வழக்கு என முந்தைய விசயங்களை பெரும்பாலான மக்கள் அறிந்து இருப்பார்கள்… அப்படி அறியாதவர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இனி இல்லை…. அதை விட அனைவருமே கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்….. கத்தி கதை திருட்டு தொடர்பான செய்தி….

கத்தி- கதை திரைக்கதை, வசனம் இயக்கம் – முருகதாஸ் என்று அவர் போட்டுக் கொண்டாலும், அது தன்னுடைய கதை என்றும், முருகதாஸ் தன்னுடைய பேனரில் அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தன்னிடம் ஷாட் பை ஷாட் கதை கேட்டார் என்றும், இந்த கதை தொடர்பான விவாதம் ஒன்றரை வருடங்களுக்கு தொடர்ந்தது என்றும், இது தொடர்பான வழக்கில் படம் வெளிவருவதற்கு முன்பே தன் ஸ்கிரிப்டை திரு. மீஞ்சூர் கோபி அவர்கள் கோர்ட்டில் சமர்பித்து இருக்கிறார் என்ற செய்தியும் அதே நேரத்தில் இயக்குநர் முருகதாஸை ஸ்கிரிப்டை சமர்பிக்க சொன்னதற்கு, அவர் ஏதேதோ காரணம் காட்டி ஸ்கிரிப்டை சமர்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது…. இதுதொடர்பாக மீஞ்சூர் கோபி அளித்திருக்கும் வீடியோ பேட்டியும் அவர்தரப்பு நியாயத்தை நம்பகத்தன்மையுடன் எடுத்து வைக்கிறது… ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கூட முருகதாஸ் எதுவும் பேசாமல் இருப்பதும், அப்படி உண்மையாகவே அவர் கதையை திருடாமல் இருந்திருந்தால், இன்றுவரை ஏன் மீஞ்சூர் கோபியின் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை என்பதும் முருகதாஸ் மீதான சந்தேகத்தை வழுப்படுத்துகிறது… இது தொடர்பாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வரும் செய்தியும் மீஞ்சூர் கோபி தரப்பில் உண்மை இருப்பதை உறுதிபடுத்தும் விதமாகவே இருக்கிறது…..


மேலும் இந்த உண்மைகள் தெரிவதற்கு முன்பாக நான் படம் பார்க்கும் போதே ரசித்த பல காட்சிகள் வெவ்வேறு படங்களில் இருந்தும் சீரியல்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை என்பதற்கு ஆதாரமான வீடியோக்களும் காணக் கிடைப்பதால், காட்சிகளின் நம்பகத்தன்மை மேலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது… அதனால் தான் எந்தக் காட்சியையும் விரிவாக பேச முனையவில்லை.. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இயக்குநர் முருகதாஸ் அவர்களின் செயல் மிகவும் கீழ்தரமானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது….

நியாயமாக அவரது கதையை விலை பேசி வாங்கி, இவர் இயக்கி இருந்தால் கூட முருகதாஸின் பெயர் இன்னும் பிரசித்தி பெற்றிருக்கும்… ஆனால் இது போன்ற கண்ணியக்குறைவான செயலால், தன் மீதான நற்பெயருக்கு அவரே களங்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.. பசிக்காக திருடுபவனைக் கூட ஏதோ ஒரு காரணத்தால் விட்டுவிடலாம்… ஆனால் பெயர் சம்பாதிக்க வேண்டும் என்ற மோகத்தில் திருடுபவர்களை எல்லாம் அப்படியே விட்டுவிடக் கூடாது…

அந்த இட்லி வசனம் நீங்கள் எழுதியதாக இருந்திருந்தால் உங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கும்…. நீங்கள் விழுங்கியது அடுத்தவரின் இட்லியை அல்ல…. அடுத்தவரின் வாழ்க்கையை… எது எப்படியோ உங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை நிரூபிக்கப்பட்டால், வரலாற்றில் நீங்காத இடம் பிடிப்பீர்கள்… “ நூறு கோடி வசூல் சாதனை புரிந்த ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்த ஒரு மோசமான இயக்குநர்” என்று…. வாழ்த்துக்கள்..