Thursday, 6 November 2014

கத்தி:

அஞ்சான், கதை திரைக்கதை, அரண்மனை, ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா என ஏகப்பட்ட படங்களைப் பற்றி எதுவுமே எழுதவில்லை.. வேலை பளுவில் சிக்கிக் கொண்டேன் என்றோ மன உளைச்சலில் இருந்தேன் என்றோ, சினிமாவைப் பற்றியே யோசிக்கவிடாத ஒரு உலகத்திற்குள் சிக்கிக் கொண்டு இருந்தேன் என்றோ, என்னை என் சுய இச்சையின்படி இயங்கவிடாமல் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்றோ, பல எஜமானர்களுக்கு ஒரே ஒரு விசுவாசமான வேலைக்காரனாக இருந்து கொண்டு இருக்கிறேன் என்றோ, ஏன் எழுத வேண்டும்….?? என்ற திமிரோடு சுற்றிக் கொண்டிருந்தேன் என்றோ, எந்த திரைப்படமுமே என்னை எழுதும்படி தூண்டவில்லை என்றோ எனக்கு நானே பதிவிட முடியாமல் போனதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறேன்… இதில் எது உண்மையான காரணம் என்று நீங்கள் கேட்டால், மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் அல்லது மேற்சொன்ன எல்லாமே கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லுவேன். ஆனால் இப்படி பதிவுகள் எழுதாமல் தள்ளிப் போட்டுவிட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு விமர்சனப் பதிவுகளை எழுதுவதிலும் ஒரு அனுகூலம் இருக்கின்றது என்பதை இந்த கத்தி திரைப்படம் எனக்கு உணர்த்தி இருக்கிறது..


ஒரு பத்து நாட்களுக்கு முன்னால், இதே திரைப்படத்தின் பதிவை நான் எழுதி இருந்தால், கத்தி திரைப்படத்தின் பிரதானமான சிறப்பம்சங்களை பிரஸ்தாபித்து கத்தி இருப்பேன் என்றே தோன்றுகிறது… ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த திரைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட விவாதங்களும், காணொலி காட்சிகளும், படம் குறித்த என் பார்வையை பெரிதாக மாற்றவில்லை என்றாலும் கூட, அந்த திரைப்படத்தின் சிறப்பம்சங்களை பாராட்டுவதற்காக உருவாகிவந்த ஒரு மனநிலையை முற்றிலுமாக தகர்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை… ஆக இத்திரைப்படம் சார்ந்த என் பதிவை இரண்டுவிதமான கோணங்களில் அணுகலாம் என்று இருக்கிறேன்… அதில் ஒன்று நம் முன்பு விமர்சனத்துக்காக வைக்கப்பட்ட ஒரு படைப்பு இது என்கின்ற கோணம்… இதில் படைப்பு யாருடையது என்பது சார்ந்த ஒரு சிக்கலை பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை… இரண்டாவது கோணம் இந்தப் படைப்பு யாருக்கு சொந்தமானது என்பதைப் பற்றியதாக இருக்கும்…

திரைப்படங்கள் என்பவை கேளிக்கைக்கானவை என்று சொல்லும் மனிதர்களை நான் கேலி செய்யும் மனோபாவத்துடன் பார்க்கக்கூடியவன்.. நான் என்னுடைய பதிவுகளில் பலமுறை சொல்லியபடி திரைப்படங்கள் என்பவை வெறும் கேளிக்கை மட்டுமே அல்ல…. அதிலும் குறிப்பாக நம் சமூகத்தில் அது வாழ்வியலோடு நேரடித் தொடர்பில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு கருவி.. ஒரு செய்தியை பத்திரிக்கைகளில் பிரசுரிப்பதை விட, அதனை புத்தகமாக அச்சிடுவதை விட, அதனை திரைப்படமாக கொடுக்கும் போது அது சென்று சேர்கின்ற மனிதர்களின் வீச்சு என்பது கணக்கிலடங்காத அளவில் இருக்கும் என்பது கண்கூடாக நாம் கண்ட உண்மை… அப்படி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஒரு கதைக்கருவை எடுத்துக் கொண்டு, அதில் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரிச்சயமான ஒரு நாயகனை நடிக்கவைத்து, விவசாயம் சார்ந்த, பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களுக்கு எதிரான ஒரு கருத்தை நம் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சென்றவிதத்தில் இந்தக் கத்தி கவனத்தை ஈர்க்கிறது…

இது இந்த திரைப்படம் பாராட்ட வேண்டிய திரைப்படமாக மாறி இருப்பதற்கான முதல் தகுதி… இரண்டாவதாக இந்திய தொழிலதிபர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி செய்த ஊழல்களையும், அரசியல்வாதிகள் செய்த ஊழலையும் மறைமுகமாக சுட்டிக் காட்டாமல், நேரடியாகவே சுட்டிக் காட்டிய முதல் தமிழ் திரைப்படமாக நான் கத்தியை மட்டுமே அடையாளம் காண்கிறேன்… இத்திரைப்படத்தில் அவர்கள் வசன ரீதியிலாக தொட்டுக் காட்டும் 2ஜி தொடர்பான ஊழல்களும், கிங் பிஷ்சர் நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையாவின் ஊழல்களையும் அப்பட்டமாகவும் நேரடியாகவும் பேசிய விதத்திலும் இந்த கத்தி சிறப்பு கவனம் பெறுகிறது… இது போன்ற அரசியல் சார்ந்த சில ஊழல்களை தமிழ் சினிமாவில் பேச முடியும் என்பதற்கான இந்த ஆரம்ப அறிகுறிகள் நிச்சயம் வரவேற்கத்தக்கவை… அதுபோல அத்தியாவசியமற்ற பொருட்களை கூட மோகிக்கும் மனநிலைக்கு நம் மக்களை பன்னாட்டு கம்பெனிகள் அடிமையாக்கி இருப்பதை வலியுடன் கேலி செய்யும் வசனமும் சிறப்பானது… இவைகள்தான் இந்த திரைப்படம் பாராட்டப்பட வேண்டிய திரைப்படமாக மாறி இருப்பதற்கான இரண்டாவது தகுதி…

இந்த இரண்டு தகுதிகளை தவிர்த்து இந்த திரைப்படத்தை பாராட்டுவதற்கான வேறு ஏதேனும் அறிகுறிகள் இருக்கின்றதா என்று கேட்டால் சத்தியமாக இல்லை… சரி திரைப்படம் விறுவிறுப்பானதாக இருக்கிறதா என்று கேட்டால், படம் விறுவிறுப்பாக இருக்கிறது தான், ஆனால் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது… அப்படி நம்மை சொல்ல முடியாமல் தடுப்பது எதுவென்றால் தமிழ்சினிமாவின் அடிப்படை குறைபாடுகளாக கூறப்படும் காதல், காமெடி, பாடல்கள் தொடர்பான குறைபாடுகள் தான்… படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிட்டது என்று நாம் சந்தோசம் கொள்வதற்குள், கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் முட்டி திணறத் தொடங்கிவிடுகிறது… முதல் காட்சியில் தொடங்கிய கதை அடுத்த காட்சிக்கு நகர்வதென்பது அடுத்த ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்னர்தான்…. இந்த ஒரு மணி நேரத்துக்கு முந்தைய எந்தக் காட்சிகளை நீங்கள் நீக்கினாலும் படத்தின் கதையில் எந்தக் குழப்பமும் ஏற்படாது…. அதுவே திரைக்கதை மிகவும் பலகீனமாக இருப்பதற்கான சான்று…


மேற்சொன்ன மூன்று அடிப்படை தமிழ் சினிமா குறைகளை தவிர்த்து அதன் முக்கியமான மற்றொரு குறையாக இருப்பது அதன் ஹீரோயிசமும், அது தொடர்பான லாஜிக்குகளும் தான்… சிறையில் இருந்து தப்பி வந்து வீர தீர சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் நாயகனின் வீரத்தையும் கிரிமினல்தனத்தையும் பார்த்தெல்லாம் ஆச்சரியம் அடைய தேவை இல்லை என்றாலும் கூட, அவனுக்கு இருக்கும் புத்தி சாதுர்யம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பார்க்கும் போது அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது… அதுபோலத்தான் மல்டி நேஷ்னல் கம்பெனி அதிபராக வரும் அந்த வில்லன் கதாபாத்திர சித்தரிப்பும்.. அவ்வளவு பெரிய வலை பின்னலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனி நிறுவனத்தார், இப்படி இரண்டாம் தர அரசியல் தாதாக்களைப் போல் அடியாட்களை லோடு வண்டியில் அடைத்து அனுப்பிக் கொண்டே இருந்து பொறுமை காப்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும் என்பதையும் சொல்லத் தேவையில்லை…. இறுதியில் இவர் இறந்து வேறு போகிறார்…. இதை எல்லாம் பார்க்கும் போது சிறு குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டுகளை பார்க்கும் போது எப்படி எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் மென்மையாக சிரித்துக் கொண்டு மட்டுமே இருப்போமோ அப்படி இருக்கத் தோன்றுகிறது… இப்படி பல இடங்களில் லாஜிக்குகளைப் பற்றியே யோசிக்காமல் திரைப்படம் பார்த்துக் கொண்டே இருப்பதால், இது மக்கள் பிரச்சனைகளுக்கு சினிமாத்தனமாக பதில் சொல்லும் ஒரு சினிமாவாகவே இறுதியில் நிலைகொண்டுவிடுகிறது…. அதுபோல் இது போன்ற மக்களின் பிரச்சனைகளை பேச முயலும் ஒரு திரைப்படத்தை இது போன்ற கமர்ஸியல் தன்மையுடன் எடுத்தால் தான் படம் ஓடும் என்பதான ஒரு குருட்டு பிம்பத்தை மீண்டும் நிறுவ முற்படுகிறாரோ முருகதாஸ் என்றும் சந்தேகம் ஏற்படுகிறது…

இதுதவிர்த்து படம் தொடர்பான சில தவறான வாதங்களையும் பார்க்கிறேன்.. சில பதிவுகளில் விஜய் பேசும் அந்த பிரசித்தி பெற்ற கம்யூனிச வசனத்தையும், ஆரம்ப காலகட்டங்களில் கோக் நிறுவனத்தின் அம்பாஸிடராக இயங்கியதையும் கேலி செய்வதான வரிகளையும் பார்க்கிறேன்… அதுபோலத்தான் திமுகவின் ஊழலைப் பேசியவர்கள் ஏன் அதிமுகவின் ஊழலை பேசவில்லை என்பதான அதிபுத்திசாலித்தனமான கேள்விகளையும் பார்க்கிறேன்… இவைகளில் எல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு… கம்யூனிச சித்தாந்தங்களில் திளைத்துப் போன ஒரு பத்து நபர்களை தனித்தனி அறைகளில் அடைத்து அவர்களிடம் கம்யூனிசம் என்றால் என்ன என்று கேள்வியெழுப்பினால், அவர்கள் பெரும்பாலும் வேறு வேறு கோணங்களில் தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள் என்பது தான் உண்மை… கம்யூனிசம் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பதின் வயது சிறுமிக்கு நாயகன் அளிக்கும் பதிலான “ உன் வயிறு நிறைஞ்சதுக்கு பிறகு நீ சாப்பிடுற இட்லி இன்னொருத்தரோடது…” வசனம் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது…. இதனை முன் வைத்து சிலர் பகிர்ந்து உண்பது தானே கம்யூனிசம் என்றெல்லாம் வாதிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படுகிறேன்…. என் கேள்வி எல்லாம், பற்றாக்குறை உள்ள இடத்தில் தானே பகிர்ந்து உண்ண வேண்டும், ஒரு வேளை அந்த இடம் தன்னிறைவு பெற்ற இடமாக இருந்து (நான் கண்டிப்பாக தன்னூத்து கிராமத்தை சொல்லவில்லை), அந்த இடத்தில் ஒருவன் தன் தேவைக்கு அதிகமான அளவை எடுத்து பதுக்கி வைத்துக் கொள்வதாக எடுத்துக் கொண்டால், அதுவும் கம்யூனிச சித்தாந்தத்தில் குற்றம் தானே… அதைத்தானே நாயகனின் வரிகள் விளக்குகிறது.. அதுபோல கத்தி திரைப்படத்தின் மீதான எனது பிம்பம் பத்து நாட்களுக்கு முன்பு இருந்ததை போல் இன்று இல்லாமல் மாறி இருப்பதை போல், கோக்கின் அம்பாஸ்டராக இருந்த விஜய்க்கு இன்று கோக்கின் மீதான பிம்பம் மாறி இருக்கக் கூடாதா…?? அப்படி மாறி இருக்கிறதா இல்லையா என்பதையும் நாம் பொறுத்திருந்து தானே பார்க்க வேண்டும்… அதற்குள் நாமாகவே ஒரு முன்முடிவுக்கு வந்து ஏன் குற்றம் சாட்ட வேண்டும்… அல்லது இது போன்ற பெரிய நிறுவனத்தின் அம்பாஸ்டர்கள் இறுதிவரை அந்தக் கம்பெனிகளின் அம்பாஸ்டராக மட்டுமே இருப்பதைத்தான் நாம் விரும்புகிறோமா…??? அதுபோல அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்தினால் படம் வெளிவருமா…?? படம் வெளிவருவதற்காக அவர்கள் வளைந்து கொடுத்திருக்கிறார்கள் என்றே நாம் வைத்துக் கொள்வோம்.. அதில் என்ன தவறு இருக்கிறது என்பதே என் தரப்பு… நம்மை பொறுத்தவரை ஒன்று யாரையும் குற்றம் சொல்லக் கூடாது, அல்லது பராபட்சமின்றி எல்லோரது குற்றத்தையும் பேச வேண்டும்… நியாயமான எதிர்பார்ப்பு தான்… இல்லை என்று சொல்லவில்லை… ஆனால் எந்தவித அடையாளமும் இல்லாமல், பார்வையாளர்கள் என்ற கூட்டமான போர்வைக்குள் இருக்கும் நமக்கு அது சாத்தியம்.. ஆனால் திரைத்துறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் நம் சூழலில் இருக்கிறதா…?? ஒரு வேளை அடுத்த ஆட்சி திமுகவின் ஆட்சியாக இருந்தால், கத்தி படக் குழுவினருக்கு  கை மேல் கிடைக்கும் பலன் என்னவென்று நாம் அறிய மாட்டோமா…?? எந்தவித அடையாளமும் இல்லாத நம்மைப் போன்ற பார்வையாளர்கள் எல்லோரையும் குற்றம் சாட்டலாம்… அதனால் நமக்கு எந்தவிதமான நேரடியான பாதிப்புகளும் ஏற்படாது… ஆனால் சமூகத்தில் குறிப்பிட்ட அடையாளத்துடன் இயங்கும் ஒரு குழுவோ அல்லது ஒரு தனி நபரோ அரசியல் அல்லது தொழிலதிபர்கள் சார்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, அதனால் அவர்கள் அடையும் நேரடியான பாதிப்புகள் ஏராளமானவை.. இப்படி குற்றம் சாட்டுபவர்கள் திரைத்துறை சேர்ந்தவர்களாக இல்லாமல், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களின் நம்பகத்தன்மை மீது எழுப்பும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் சமூகத்துக்கு நன்மை பயக்கும்…. ஆனால் திரைத்துறை சார்ந்தவர்களோ ஆளும் கட்சியின் அடிவருடிகளாக இருந்து கொண்டே தான் எதிர்கட்சிகளின் ஊழல்களை பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்….. இதுவும் கண்டிப்பாக மாற வேண்டும் தான்.. ஆனால் அது மாறுவதற்கான சூழல் தற்போது இல்லை…. ஒரு வேளை ஆளும் கட்சியை எதிர்த்து கருத்துகளை பரப்பும் படத்தை பல கோடி செலவில் தயார் செய்து, அந்தத் திரைப்படம் தடை செய்யப்பட்டால், நம்மில் எத்தனை பேர் ரோட்டில் இறங்கி, அந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று போராடுவோம் என்று நினைத்துப் பாருங்கள்…. பெரும் கூட்டங்களுக்கு நடுவில் இயங்கிக் கொண்டு இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் திரை கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தான்… இதுபோல அத்தி பூத்தார் போல் திரைப்படங்கள் பேசும் நிகழ்வுகளை கூட கேலி பேசி கிள்ளி எறியத்தான் நாம் முயலுகிறோம்… இதுபோல் அவ்வபோது எடுக்கப்படும் சிறு முயற்சிகளைக் கூட சமூகத்தின் விழிப்புணர்ச்சியாக மாற்ற ஆர்வம் காட்டாமல், அந்த தனி நபரின் தாக்குதலுக்கு பயன்படுத்திக் கொள்வதிலேயே பெருத்த ஆர்வம் நாம் காட்டுவதால், ”நீ எதுவுமே பேசாமல், வாயை மூடிக் கொண்டு இரு…” என்று மறைமுக செய்தி தருகிறோமோ என்றுதான் எனக்கு கவலையாக இருக்கிறது….

மொத்தத்தில் கத்தி திரைப்படம் ஒரு நல்ல கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் மீது ஆக்சன், காதல், காமெடி என்கின்ற மட்டமான மசாலா கலவை தூவி பரபரவென படைக்கப்பட்டிருக்கும் அவசரமான படைப்பு… சாமானிய பார்வையாளனை பல இடங்களில் பரவசமடையச் செய்யும் காட்சி கோர்வைகளும், குறைந்தபட்சம் இடைவேளை பகுதியிலாவது கோக் வாங்கக் கூடாது என்பது போன்ற குறைந்தபட்ச விழிப்புணர்ச்சியையும் (ஐநாக்ஸில் அன்று கோக் விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே இருந்ததை கண்ணால் கண்டே எழுதுகிறேன்…) ஏற்படுத்திய விதத்தில் கத்தி ஜொலிக்கிறது….

கத்தி – ஏற்படுத்திய காயங்கள்:

பெயரே கத்தி என்று இருப்பதாலோ என்னவோ அது வாங்கிய குத்துக்களும் கவனம் பெற்றன…. அது குத்திக் கிழித்த நபர்களும் கவனம் பெறுகின்றனர்… லைக்கா நிறுவனத்தின் பங்கெடுப்பு அது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் திரைப்படத்தின் மீது தொடர்ந்த வழக்கு என முந்தைய விசயங்களை பெரும்பாலான மக்கள் அறிந்து இருப்பார்கள்… அப்படி அறியாதவர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இனி இல்லை…. அதை விட அனைவருமே கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்….. கத்தி கதை திருட்டு தொடர்பான செய்தி….

கத்தி- கதை திரைக்கதை, வசனம் இயக்கம் – முருகதாஸ் என்று அவர் போட்டுக் கொண்டாலும், அது தன்னுடைய கதை என்றும், முருகதாஸ் தன்னுடைய பேனரில் அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தன்னிடம் ஷாட் பை ஷாட் கதை கேட்டார் என்றும், இந்த கதை தொடர்பான விவாதம் ஒன்றரை வருடங்களுக்கு தொடர்ந்தது என்றும், இது தொடர்பான வழக்கில் படம் வெளிவருவதற்கு முன்பே தன் ஸ்கிரிப்டை திரு. மீஞ்சூர் கோபி அவர்கள் கோர்ட்டில் சமர்பித்து இருக்கிறார் என்ற செய்தியும் அதே நேரத்தில் இயக்குநர் முருகதாஸை ஸ்கிரிப்டை சமர்பிக்க சொன்னதற்கு, அவர் ஏதேதோ காரணம் காட்டி ஸ்கிரிப்டை சமர்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது…. இதுதொடர்பாக மீஞ்சூர் கோபி அளித்திருக்கும் வீடியோ பேட்டியும் அவர்தரப்பு நியாயத்தை நம்பகத்தன்மையுடன் எடுத்து வைக்கிறது… ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கூட முருகதாஸ் எதுவும் பேசாமல் இருப்பதும், அப்படி உண்மையாகவே அவர் கதையை திருடாமல் இருந்திருந்தால், இன்றுவரை ஏன் மீஞ்சூர் கோபியின் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை என்பதும் முருகதாஸ் மீதான சந்தேகத்தை வழுப்படுத்துகிறது… இது தொடர்பாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வரும் செய்தியும் மீஞ்சூர் கோபி தரப்பில் உண்மை இருப்பதை உறுதிபடுத்தும் விதமாகவே இருக்கிறது…..


மேலும் இந்த உண்மைகள் தெரிவதற்கு முன்பாக நான் படம் பார்க்கும் போதே ரசித்த பல காட்சிகள் வெவ்வேறு படங்களில் இருந்தும் சீரியல்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை என்பதற்கு ஆதாரமான வீடியோக்களும் காணக் கிடைப்பதால், காட்சிகளின் நம்பகத்தன்மை மேலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது… அதனால் தான் எந்தக் காட்சியையும் விரிவாக பேச முனையவில்லை.. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இயக்குநர் முருகதாஸ் அவர்களின் செயல் மிகவும் கீழ்தரமானது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது….

நியாயமாக அவரது கதையை விலை பேசி வாங்கி, இவர் இயக்கி இருந்தால் கூட முருகதாஸின் பெயர் இன்னும் பிரசித்தி பெற்றிருக்கும்… ஆனால் இது போன்ற கண்ணியக்குறைவான செயலால், தன் மீதான நற்பெயருக்கு அவரே களங்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.. பசிக்காக திருடுபவனைக் கூட ஏதோ ஒரு காரணத்தால் விட்டுவிடலாம்… ஆனால் பெயர் சம்பாதிக்க வேண்டும் என்ற மோகத்தில் திருடுபவர்களை எல்லாம் அப்படியே விட்டுவிடக் கூடாது…

அந்த இட்லி வசனம் நீங்கள் எழுதியதாக இருந்திருந்தால் உங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கும்…. நீங்கள் விழுங்கியது அடுத்தவரின் இட்லியை அல்ல…. அடுத்தவரின் வாழ்க்கையை… எது எப்படியோ உங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை நிரூபிக்கப்பட்டால், வரலாற்றில் நீங்காத இடம் பிடிப்பீர்கள்… “ நூறு கோடி வசூல் சாதனை புரிந்த ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்த ஒரு மோசமான இயக்குநர்” என்று…. வாழ்த்துக்கள்..

1 comment:

 1. அரம்பத்தில் தடுமாறினாலும் நடுவில் நன்றாக உள்ளே நுழைந்து நன்றாக முடித்திருக்கிறீகள். நல்ல
  விமர்சினம். ஆனால் ஒரே ஒரு கேள்வி?

  உங்கள் காவியத் தலைவன் விமர்சினம்

  //ஆக நாடகக் கலைஞர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்கின்ற புதிய முயற்சிக்காகவோ, வணிக சினிமா இல்லை என்கின்ற ஒற்றை காரணத்துக்காகவோ காவியத் தலைவனை பாராட்ட நான் தயாராக இல்லை..//

  மேலு உள்ளது போல "துணிச்சலாக கேள்வி கேட்பதாலும், கருத்து சொல்வதாலும் ஒரு படத்தை பாராட்ட முடியாது" என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரியான போலி படங்கள் வெற்றி பெறுவது இந்த காரணங்களால்தான்.

  ReplyDelete