Tuesday, 7 October 2014

மெட்ராஸ்:

அட்டக்கத்தி இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் மெட்ராஸ்… எனக்கு மெட்ராஸ் படத்தின் ட்ரைலரே படம் பார்க்க வேண்டுமென்கின்ற ஆர்வத்தை தூண்டிவிட்டது… ஆனாலும் அவரது முந்தைய படமான அட்டகத்தியின் மீது எனக்கு சில விமர்சனங்கள் உண்டு.. அந்த திரைப்படத்தில் கதையாக அவர் எடுத்துக்கொண்டிருந்த விசயம் எனக்கு உவப்பானதாக யதார்த்தமானதாக இருந்தாலும் கூட.. அதற்கு கதைப்பிண்ணனியாக அவர் எடுத்துக் கொண்ட மாணவர்களின் பஸ் கொண்டாட்டங்களும், ரூட் தலை முதலான கேளிக்கைகளும் ஒருபக்கப் பார்வையாகவே அமைந்திருந்ததால் அது எனக்கு நிறைவை கொடுக்காத படமாகவே போய்விட்டது… ஆனால் மெட்ராஸ் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த போதே இது கண்டிப்பாக ஒரு காத்திரமான கதை சொல்லும் முறையை கொண்ட திரைப்படமாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது…. அதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது அந்த ட்ரைலரில் காட்டப்பட்ட அந்த சுவர் மற்றும் அந்த சுவர் தொடர்பான வசனம், இந்த இரண்டும் தான்….


வணிகத்தை முதன்மையாக பார்க்கைக்கூடிய கதாநாயக பிம்பத்தை பிண்ணனியாகக் கொண்ட ஒரு திரைப்படத்தின் திரையாக்கத்தில் ஒரு உயிரற்ற சுவர் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதனை சொல்லிய அந்த ட்ரைலரே இந்த திரைப்படத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றிவிடுகிறது… நமக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கதையும் தொடங்கிவிடுகிறது… கதை தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே அது அதன் மையப் பிரச்சனையையும் சந்தித்து விடுகின்ற யுக்தி தமிழ் சினிமாவுக்கு எப்போதாவது வந்து போகும் பண்டிகையை போன்றது.. அது இந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கைகூடி இருக்கிறது… திரைப்படத்தின் மையக்கதை அந்த சுவரை பிடிப்பதற்காக இரு கூட்டத்துக்கு இடையே நடக்கின்ற அதிகாரப் போட்டியே என்பதும், இந்த போட்டியும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற உயிரிழப்புகளும் இரண்டு தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்பதனையும் பார்வையாளனுக்கு உணர்த்தியபடியே திரைப்படம் தொடங்குகிறது….

திரைப்படத்தின் மொத்த கதையும் அந்த சுவருக்காக நடக்கின்ற அதிகாரப் போட்டியும், அந்த அதிகாரப் போட்டியால் ஏற்படும் உயிர்பலிகளில் இருந்து யார் யார் தப்பிக்கிறார்கள்… என்பதும்.. இறுதியாக அந்த சுவர் என்ன ஆனது என்பதும் தான்…. அந்த சுவரை மட்டும் எடுத்துவிட்டு பார்த்தால், இது இரு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதலும், அதில் மாட்டிக் கொள்ளும் நாயகன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் என்பதுமான வழக்கமான தமிழ் சினிமா கதைதான்…. இப்படி வழக்கமான தமிழ் சினிமா கதையாக இது இருந்தாலும், திரைப்படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது, இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களைத் தான்… ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்குரிய தனிப்பட்ட குணாதிசயத்துடன் உலா வருகிறது. நாயகனான காளி, அவனது நண்பன் அன்பு, நாயகியாக வரும் கலை, அன்புவின் மனைவியாக வரும் மேரி, நாயகனின் அம்மா, பாட்டி, மெட்ராஸ் பாஷையில் உதார் விட்ட படியே உலா வரும் ஜானி, நாயகியின் அப்பா, மாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக செதுக்கப்பட்டு இருக்கிறது…. இந்த தனித்துவமான கதாபாத்திரங்கள் தான் திரைப்படத்தின் சுவாரஸ்யம் கெடாமல் பார்த்துக் கொள்கின்றன…

நாயகனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில் படத்தில் வரும் முக்கியமான எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான பங்களிப்பை கொடுக்கும் இது போன்ற திரைப்படங்கள் வரவேற்கத்தக்கவை… ஏனென்றால் நாயகன் கார்த்தி-க்கு இணையான கதாபாத்திரம் அன்புவின் கதாபாத்திரம்… அது போலத்தான் நாயகி கேத்ரின் தெரஸாவிற்கு இணையான கதாபாத்திரமாக இருக்கிறது மேரியாக நடித்திருக்கும் ரித்விகாவின் கதாபாத்திரம்…. இப்படிப்பட்ட மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் பார்வையாளர்கள்  நாயகர்களின் பிம்பக் கட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதும் என் அசைக்க முடியாத நம்பிக்கை…. அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டி போல அமைந்திருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் தங்களை திணித்துக் கொண்டு குடியிருக்கும் வடசென்னை மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை பதிவு செய்த திரைப்படங்கள் தமிழ் சினிமா வரலாற்றிலே விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இருக்கிறது… அந்த வரிசையில் இந்த மெட்ராஸ் திரைப்படம் தனிக் கவனம் பெறுகிறது..


சரி… ஆக இத்திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லுகிறேன்… கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் சொல்லுகிறேன்.. அதே நேரத்தில் இத்திரைப்படம் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இல்லை என்பதனையும் சொல்லி விடுகிறேன்… நன்றாக இருக்கிறது என்று சொல்லுவதற்கான காரணங்கள்… படம் நம்மை எரிச்சல் அடையச் செய்வதில்லை…. பிரதான நடிகர்கள் முதற்கொண்டு, ப்ரேமில் அவ்வபோது வந்து போகும் நடிகர்கள் கூட மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. மிகச் சிறப்பான மேக்கிங் இருக்கிறது… மிகச்சிறப்பான பிண்ணனி இசையும், பொறுமையை சோதிக்காதவாறு பாடல்களும் இருக்கின்றன… அது தவிர்த்து இது நாயகனை மட்டுமே முன்னிலை படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமும் அல்ல…. மேலும் இப்படத்தில் வட சென்னை மக்களின் வாழ்வியலும் ஒர் சின்ன பதிவாக இடம் பெறுகிறது… இத்தனை காரணங்களுக்காகத் தான் இத்திரைப்படம் பார்க்க தகுதியான திரைப்படம் என்று கூறுகிறேன்… ஆனால் மேற்சொன்ன காரணிகள் மட்டுமே மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போதுமான காரணிகள் இல்லையே… நான் முந்தைய பதிவுகளில் சொன்னது போல் இந்தத் திரைப்படத்தில் தான் வாழ்வியல் இருக்கிறதே, இருந்தும் ஏன் அது தாக்கத்தை கொடுக்கவில்லை….??? என்று நீங்கள் கேட்டால், வாழ்வியல் இருக்கிறதுதான்… ஆனால் அந்த வாழ்வியலே கதையாக இல்லை… கதை நடக்கும் பிண்ணனியில் களனாக மட்டுமே அந்த வாழ்வியல் வருகிறது.. அதனால் தான் அது அந்த தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்று நினைக்கிறேன்…

மெட்ராஸின் கதை வட சென்னை மக்களின் வாழ்க்கை அல்ல… அவர்களது வாழ்க்கைக்கு மத்தியில் அதிகாரத்துக்காக அடித்துக் கொள்ளும் ஒரே அரசியல் கட்சியை சேர்ந்த இரண்டு கோஷ்டிகளைப் பற்றிய கதை… அந்த இரண்டு கோஷ்டிகளில் ஒரு கோஷ்டியில் இருப்பவன் நாயகனுக்கு மிக நெருக்கமான நண்பன்…. அவனுக்கு உதவப் போய் நாயகனும் முக்கிய கதையோடு தொடர்புடையவன் ஆகிறான்….. நாயகனின் நண்பனாக வருகின்ற அன்புவின் கதாபாத்திரம், நல்லதன்மை உடையதாக, சுயநலம் இல்லாததாக, மக்களின் நலனுக்காக அரசியல் செய்ய முயலும் ஒரு கதாபாத்திரமாக  வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கதாபாத்திரம் சாமானிய வாழ்க்கை வாழ்ந்துமுடித்து, அரசியல் பிம்பத்துக்குள் நுழைந்து ஒரு பிரமுகராக ஆகின்ற காலகட்டத்தில் இருந்து தான் திரைப்படம் தொடங்குகிறது… எனவே அந்த கதாபாத்திரத்தை கூட நம் சாமானிய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்த முடியாமல் போய்விடுவதால், அந்த கதாபாத்திரமும் அது ஏற்படுத்தி இருக்க வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் திரையில் வரும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நம் மனதில் இருந்து கலைந்து போய் விடுகிறது… அதுபோல நாயகனின் முன்கோபத்தால் தான் கதை நகரத் தொடங்குகிறது… அரசியல் நடவடிக்கைகளால் அல்ல என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்… இது அரசியல் படமாக இருந்திருக்குமானால் சில அரசியல் நடவடிக்கைகளால் அங்கு வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இது பேசியிருக்க வேண்டும்… அப்படி பேசாமல் ஒரு கட்டத்தில் நாயகனின் முன்கோபத்தால் நிகழ்ந்த ஒரு செயலுக்கு அவன் பரிகாரம் தேட முயலும் திரைப்படமாக மாறிவிடுவதால், தான் அந்த வாழ்வியலும், அரசியலும் கொடுத்திருக்க வேண்டிய தாக்கத்தை இத்திரைப்படம் கொடுக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்… ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம், மிக நளினமாக ஏதோவொரு புள்ளியில் சாமானியனின் வாழ்க்கைக்கு ஊடாக சென்று, மிக நுட்பமாக மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட எண்ணம்.. ஆனால் திரைக்கதையாசிரியராக சாமானிய வாழ்க்கைக்குள் கதை செல்லும் புள்ளியையும், மீண்டும் அது அரசியலுக்குள் பிரவேசிக்கும் புள்ளியையும் கண்டுகொள்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல…. இருப்பினும் இத்திரைப்படம் முழுக்கமுழுக்க ஒரு அரசியல் திரைப்படமாக எனக்கு தோற்றம் தராததால், இதுபோன்ற கட்டுமான குறைபாடுகளைப் பற்றி கவலைபடாமல் அதை ஒதுக்கி வைத்துவிட்டு திரைப்படத்தை பார்ப்பது நலம் என்று கருதுகிறேன்…

படத்தில் ஆங்காங்கே வரும் கம்யூனிசம் சார்ந்த வசனங்களும், சேகுவேராவின் உருவங்களும், கால் பந்தாட்ட போட்டிகளும், கடைசி காட்சியில் குழந்தைகளை கூட்டி வைத்து சமூக அரசியல் பாடம் எடுக்கும் காட்சிகளும் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதில் இயக்குநருக்கு இருக்கின்ற தெளிவை உணர்த்தும் காட்சிகள்…. இப்படி தனித்தனி காட்சிகளில் இருக்கின்ற உள்ளார்ந்த ஒரு அரசியல் மொத்த கதையில் இல்லை என்பதுதான் உண்மை….தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதனை தள்ளி வைத்துவிட்டு, பார்ப்பதற்கு தகுதியான படமா என்கின்ற ஒற்றைக் கேள்வியுடன் மட்டும் இந்த திரைப்படத்தை அணுகினால், அதற்கான தகுதிகளை அளவுக்கு அதிகமாக வைத்திருக்கிறது என்றே சொல்லுவேன்…


நாயகன் கார்த்திக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் படியான ஒரு திரைப்படம்…. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்போடு கார்த்தியை பார்த்த ஒரு திருப்தி…. நாயகி கேத்ரின் தெரஸாவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்…. ஆனால் என் அனுமானத்தின் அடிப்படையில் இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்றே எண்ணுகிறான்…. நாயகியை விட அதிகமான கவனத்தை ஈர்ப்பவர் மேரியாக வரும் ரித்விகா தான்… மிக இயல்பான யதார்த்தமான நடிப்பு…. இவரை முக்கியமான இயக்குநர்கள் பயன்படுத்திக் கொண்டால், தமிழுக்கு மற்றொரு நடிக்கத் தெரிந்த நடிகை கிடைப்பார்…. ஜானியாக நடித்திருக்கும் ஹரியின் உடல்மொழியில் வட சென்னையில் வாழ்க்கை தெறிக்கிறது… அதுபோல அன்புவாக நடித்திருக்கும் கலையரசனுக்கும் மதயானை கூட்டத்துக்கு அடுத்து மற்றொரு பேர் சொல்லும் படம்… வாழ்த்துக்கள்….

சந்தோஷ் நாராயணனின் இசையும் பிண்ணனி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுப்பதில் மேலும் மேலும் செம்மையடைந்து கொண்டே வருகிறது… இத்திரைப்படத்திலும் பாடல்கள் நம்மை வெறுப்படையச் செய்யும் வழக்கமான வேலையை செய்யாமல், நம்மை அறியாமலே அந்த வரிகளை முணுமுணுக்கச் செய்யும் மந்திரத்தை செய்து விடுகின்றன…. ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா, பாடலும் கானா பாலாவின் குரலில் வரும் “ இறந்திடவா நீ பிறந்தாய் “ பாடலும் நம் மனதை விட்டு அகல மறுக்கின்றது… இயக்குநராக பா.ரஞ்சித் அவர்கள் இரண்டாவது படத்திலும் தன் தனித்தன்மையை நிருபித்து இருப்பதால், தமிழ் சினிமா இயக்குநர்களுள் கவனிக்கப்பட வேண்டிய இடத்தை அடைந்திருக்கிறார்.. ஒரிரு குறைகள் மட்டுமே படத்தில்… வரும்காலங்களில் அதுபோன்ற குறைகளையும் களைத்து இன்னும் அதிகமாக பிரகாசிப்பார் என்று நம்பலாம்…

மொத்தத்தில் இந்த மெட்ராஸ் ஆச்சரியங்களை புதைத்து வைக்காத, திரைக்கதையில் பெரிதாக நம்மை ஈர்க்காத, அதே நேரத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் வணிக சினிமாக்களுக்கு இடையில், அந்த வணிக சிக்கலுக்கு ஏற்ப கொஞ்சமாய் வளைந்து கொடுத்து வந்திருக்கும் மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை….

Sunday, 5 October 2014

யான்:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்.. எனக்கு ரவி.கே.சந்திரன் என்ற பெயர் பரிச்சியமான அளவுக்கு அவரது முகமோ அல்லது அவர் சார்ந்த இன்னபிற தகவல்களோ பரிச்சயம் இல்லை… எனக்குத் தெரிந்த அளவில் அவர் ஒரு மிகச்சிறந்த அழகுணர்ச்சி சார்ந்த ஒளிப்பதிவாளர்… மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு திரையுலகில் மதிக்கப்படும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமே… அவரைப் பற்றிய குறிப்புகளை விக்கியில் தேடிக் கொண்டிருந்ததன் வாயிலாக, அவரது தொழில் அனுபவம் என் வயதுக்கு சமமானதாக இருக்கும் என்று கணிக்கிறேன்.. ஆனால் இப்படிப்பட்ட ஒரு அனுபவம் மட்டுமே ஒரு நல்ல திரைப்படத்தை கொடுப்பதற்கு போதாது என்பதும், வரிச்சலுகைக்காக சங்க கால நூல்களை துளைத்து ஒரு நல்ல தமிழ் பெயரை எடுத்துக் கொண்டு, ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருப்பது போல ஒரு கதாநாயகனையும் தேர்ந்தெடுத்து விட்டு, மப்பும் மந்தாரமுமான ஒரு கதாநாயகியை இடை அதிர ஓடிவர செய்து, கேமராவினை துடைத்து காட்சி பிம்பங்களை பளிச்சென காட்டுவதில் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் கைகூடி விடாது என்பதற்கான உதாரணம் தான் இந்த யான்…


ஒரு திரைப்படம் எதன் அடிப்படையில் உருவாகிறது என்று என்னை கேட்டால், ஒன்று வாழ்வியலின் அடிப்படையிலோ, அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது கற்பனையின் அடிப்படையிலோ என்று கூறுவேன்… பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பவர் தான் இயக்குநர் ரவி கே. ஆகவே அவர் அனுபவத்தில் சறுக்குவதற்கு வாய்ப்பே இல்லை.. ஆயினும் அவர் சறுக்குகிறார் எனில், அவர் எதில் சறுக்குகிறார் என்பதை தெரிந்து கொள்வது மிகமுக்கியம்… அவர் எதில் சறுக்குகிறார் என்றால் வாழ்வியலிலும் கற்பனையிலும் தான்… இந்த வாழ்வியல் என்பது அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை குறிப்பது.. இது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் கைகொடுக்கும்.. கற்பனை என்பது என்ன என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.. ஆனால் இந்த வாழ்வியல், கற்பனை இரண்டுக்குமே ஒரு மறைமுக தொடர்பு உண்டு.. இந்த கற்பனை என்கின்ற வார்த்தைக்கு இன்னொரு சரியான பதம் கனவு… இந்த இடத்தில் கனவு என்ற வார்த்தையையே பயன்படுத்தலாம்… பெரும்பாலும் யார் கனவு காண்பார்கள்.. (தூக்கத்தில் வரும் கனவு அல்ல…) மிகச் சராசரியான ஆசைகள் கூட நிறைவேறாத மக்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும்.. அவை விசித்திரமானதாகவும், குரூரமானதாகவும், பயங்கரமானதாகவும் சில சமயங்களில் யதார்த்தமானதாகவும் கூட இருக்கும்… ஆனால் சிறு வயதில் இருந்து எல்லாவிதமான ஆசைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு கனவுகள் என்பவை பெரும்பாலும் தூக்கத்தில் வருபவையாக இருக்கும் அல்லது நகல் எடுக்கப்பட்ட கனவுகளாக இருக்கும்… இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.. அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அனுபவத்தின் மூலமாகவும், ஆர்வத்தின் மூலமாகவும் தங்களது கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள்…. ஆக ஆசைகள் பூர்த்தியாகும் போது கற்பனையின் கதவுகள் அடைத்துக் கொள்கின்றன… அதை நீங்கள் ஆர்வத்தாலோ அல்லது அனுபவத்தாலோ உடைத்து திறந்து புதிதாக கனவு காண வேண்டும்… ஆனால் இயக்குநர் ரவி.கே அவர்கள் தனது வாழ்வியலால் பூட்டிக்கொண்ட கற்பனையின் கதவுகளை அனுபவங்களைக் கொண்டு திறக்க முயற்சிக்கவே இல்லை… அதனால் தான் இப்படி ஒரு கற்பனை வறட்சி உடைய அல்லது நகல் எடுக்கப்பட்ட ஒரு கனவை படைப்பாக அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது…

யான் திரைப்படத்தில் இவருடைய கனவு என்ன தெரியுமா….? நாயகன், நாயகியை பார்த்த அடுத்த நிமிடத்தில் அவனுக்கு காதல் வருகிறது… நாயகிக்கு படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் காதல் வருகிறது… காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்.. காதல் நாயகியின் அப்பாவுக்கு தெரிய வருகிறது…. “ நீ என்ன வேலை பார்க்கிறாய்….?? என் மகளை எப்படி வைத்து காப்பாத்துவாய்…??” என்ற நியாயமான கேள்விக்கு நாயகனுக்கு நியாயமான…!!?? கோபம் வருகிறது… ”காதலிக்கும் வரை வேலை இல்லாதவன்னு தெரியல… கல்யாணம்னு வந்ததும் வேலை இல்லாதது பெரிய குறையாக தெரிகிறதோ..?? என்று வாதம் செய்யும் அவன் ரோசப்பட்டு வேலை தேடுகிறான்.. மும்பையிலோ அல்லது இந்திய நாட்டிலோ எந்த வேலையுமே நாயகனுக்கு இல்லை என்பதால் பஸிலிஸ்தான் செல்கிறார்…. இந்த இடத்திலேயே மூன்று டூயட்டுகளின் உதவியோடு இடைவேளை வந்துவிடுகிறது.. பிறகு போன இடத்தில் நாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள… அந்த அரசாங்கத்திடம் இருந்து நாயகனுக்கு தலை துண்டிக்கப்படும் தண்டனை கிடைக்கிறது… நாயகனின் நண்பர் வட்டாரம் “ அவனை ஏன் வேலைக்கு போகச் சொன்னாய்…?? உன்னால் தான் அவன் சாகப் போகிறான்…!!” என்று நாயகியின் வீட்டில் கல்லெறிந்து கலாட்டா செய்கிறது…. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்த வேலையை நாயகனுக்கு வாங்கிக் கொடுத்ததும், அந்த நண்பர் வட்டாரத்தில் உள்ள ஒருவன் தான்…. இறுதியில் அந்த தண்டனையில் நாயகன் உயிர் பிழைத்தானா…?? இல்லையா…?? என்பது தமிழ்படம் பார்க்கும் நம் எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான விசயம்…. இதுதான் இயக்குநர் ரவி.கே.சந்திரன் அவர்களின் கற்பனை, கனவு எல்லாமே…. இதே கனவு வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் வந்ததில்லை… ஓரிருவரைத் தவிர… அந்த ஓரிருவர் மரியான் இயக்குநரும், தாம்தூம் இயக்குநரும்…


படத்தில் ஐந்து பாடல்கள்…. ஐந்தும் டூயட் பாடல்கள்… இடைவேளை வரும் வரை படத்தின் கதை தொடங்குவதே இல்லை…  தவறான எமோஷ்னல் லாஜிக்குகள்.. கற்பனை வறட்சி நிலவும் காட்சிகளின் கோர்ப்புகள்… வெளிநாட்டின் ராணுவத்தினரிடம் இருந்து வெகு எளிதாக தப்பித்துச் செல்லும் ஹீரோ, எமோஷ்னலை பிடுங்குவதற்காக திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று ஏகப்பட்ட மைனஸ்… படத்தின் எந்தவொரு காட்சியிலும் எந்தவொரு உணர்வுமே வருவதில்லை.. ஒட்டு மொத்தமாக நமக்குக் கிடைப்பது எரிச்சல் மட்டுமே… ஒரு பழைய திரைப்படம்.. எம்.ஜி.ஆர் படமோ சிவாஜி படமோ…. எது என்று சரியாக நினைவில் இல்லை… சிவந்த மண் திரைப்படமாக இருக்கலாம்… சீன பார்டரில் இருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டும்… ஒரு குட்டையில் விழுந்து ஏறி இந்தப் பக்கம் வருவார் சிவாஜி…. ஒரு அட்டையில் ”இந்தியா” என்று தமிழில் ஒரு போர்ட்டு எழுதி வைத்திருப்பார்கள்… அவ்வளவு தான் பார்டரை கடந்தாகிவிட்டது…. இதற்கு ஈடான ஒரு காட்சி இந்தத் திரைப்படத்திலும் உண்டு… திறனிருந்தால் திரையில் கண்டு கொள்ளுங்கள்…

சரி… இயக்குநர்கள் இந்த கற்பனை வறட்சியை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது, அதிமுக அணியினரின் பதாகைகள் கண்ணில் தெரிந்தது…. அதில் ஒரு விளம்பரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்கிறது…. அதற்கு கீழே இந்த வாசகங்கள்… “ காவிரிய நீயே வச்சுக்க….. அம்மாவக் குடு…” இதை படித்தவுடன் அப்படி ஒரு சிரிப்பு வந்தது…. ( இது ஆனந்த சிரிப்பும் அல்ல…. ஆணவ சிரிப்பும் அல்ல…) இப்படி ஒரு சின்ன உணர்வை கூட இந்த திரைப்படம் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை… வரவர தமிழகத்தின் அரசியல் கட்சி உறுப்பினர்களில் பலர் திறமையான கற்பனாவாதிகளாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள்… இவர்களுக்கு இருக்கும் கற்பனை கூட நம் இயக்குநர்களுக்கு இல்லாமல் போனது தமிழக மக்கள் செய்த துரதிஷ்டம் தான்….

பார்வையாளர்கள் எல்லாம் மிகப்பெரிய கதை சொல்லிகளாக மாறி வருகிறார்கள்… இந்த யான் திரைப்படத்தில் இயக்குநர் மிகப்பெரிய திருப்பம் என்று வைத்திருக்கும் ஒரு விசயத்தை மிக எளிதாக கணித்துவிடுகிறார் என் அருகில் அமர்ந்து படம் பார்த்த ஒரு சாமானிய மனிதர்… அவ்வளவு பலவீனமாக இருக்கிறது திரைக்கதை.. நம் தமிழ் இயக்குநர்கள் எல்லாம் தங்களது மேதமைதனத்திலேயே திளைத்துக் கொண்டிருக்காமல் உடல் வருத்தி கதைக்காக மெனக்கெடாவிட்டால் தோல்விகளை தவிர்க்கவே முடியாது என்று தோன்றுகிறது…..

அஞ்சான், இரும்புக் குதிரை- யின் வரிசையில் யானும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறான் இந்த யான்… மொத்தத்தில் இந்த “ யான் “ வீண்…