Sunday, 14 December 2014

லிங்கா :

” மாற்றம் ஒன்றுதான் மாறாதது ” என்று யார் சொன்னார்கள்…!!?? நீங்கள் தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா..?? நாங்கள் இருபது ஆண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.. அவருடைய திரைப்படங்களில் கதாநாயகிகள், வில்லன்கள், இயக்குநர்கள் இந்த மூவரைத் தவிர எதுவுமே காலம் காலமாக மாறவில்லை.. அவருடைய நடிப்பு, அவருடைய ஸ்டைல், அவருடைய கோட்பாடு, அவருடைய கொள்கை, அவருடைய வாக்குறுதிகள், அவருடைய இராஜதந்திரங்கள், அவர் பேசும் அரசியல் வசனங்கள், கதை, திரைக்கதை என்று எதுவுமே மாறிவிடவில்லை.. மாறப் போவதும் இல்லை. மாற்றத்தை பற்றிய வாக்கியத்தைக் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இன்றுவரை உயிரோடு இருந்தால் வாக்கியத்தை இப்படி மாற்றியிருப்பார்கள் “ மாற்றம் ஒன்றுதான் மாறாதது ” ( ரஜினி திரைப்படங்கள் விதிவிலக்கு ).


கொஞ்சம் உற்று கவனித்தால், மேற்குறிப்பிட்ட வாக்கியத்தின் அடைப்புக் குறிக்குள் உட்பட்ட வாக்கியத்தை ”தமிழ் சினிமாவின் போற்றுதலுக்கு உட்பட்ட நடிகர்களின் திரைப்படங்கள் ” என்று கூட மாற்றலாம் என்று தோன்றும்.. இந்த போற்றுதலுக்கு உட்பட்ட வரிசை கிரகத்தில் கமல்ஹாசன் மற்றும் அவரது திரைப்படங்கள் அவ்வபோது மட்டும் தலைகாட்டுபவை என்பதால், அவரையும் அவரது திரைப்படங்களையும் அதிலிருந்து நீக்கத் துணியலாம்.. அவர் தவிர்த்து மிச்சமிருக்கும் அத்தனை (போற்றப்படும், துதிக்கப்படும்) நடிகர்களின்  திரைப்படங்களிலும் எப்போதும் இருக்கின்ற ஒரு மிகமுக்கியமான பிரச்சனை படம் தொடங்குகின்ற அதே புள்ளியில் படம் முடிவடைந்துவிடுவது தான்… படம் தொடங்கி, நாயகனுக்கு ஒரு மாஸ் ஓபனிங் ஷாங்கோ அல்லது ஸ்டண்டோ வைத்து, நாயகியை காட்டி அவளை நாயகன் பின்னால் ஓடவிட்டு, கிட்டத்தட்ட ஒரு நாற்பது நிமிடங்களுக்கு பிறகு திரைக்கதையில் அவர்கள் ஒரு பிரச்சனை காட்டத் தொடங்கும் போதே அந்தப் பிரச்சனை எப்படி முடியப்போகின்றது என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும்.. இது ஓரளவுக்கு எல்லாவிதமான திரைப்படங்களுக்குமே பொருந்தும் என்றாலும், இந்த பிரச்சனை தொடங்கும் புள்ளிக்கும் பிரச்சனை முடிகின்ற புள்ளிக்கும் இடைப்பட்ட பகுதிகளை நாம் எவ்வளவு சுவாரஸ்யமாக, புத்திசாலித்தனமாக, புதுமையாக உணர்ச்சி பெருக்குடன் கடக்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது..

இதில் இந்த சுவாரஸ்யம், புத்திசாலித்தனம், புதுமை இந்த மூன்றையுமே கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், உணர்ச்சிபெருக்கை மட்டுமே நம்பி எடுக்கப்படும் தமிழ்திரைப்படங்கள் எல்லாம், அது எவ்வளவு பெரிய நடிகர் நடித்த திரைப்படமாக இருந்தாலும், மண்ணைக் கவ்வும் சம்பவங்கள் சமீபகாலமாக தமிழ் திரைச்சூழலில் நிகழ்வதென்பது ஒரு சேர ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது. தமிழகத்தில் ஒரு காலம் இருந்தது.. இந்த திரைப்படம் எதற்காக ஓடியது என்ற காரணமே தெரியாமல் காட்டாற்று வெள்ளம் போல ஓடிய பல திரைப்படங்களை நம்மால் இங்கு நினைவுகூர முடியும்.. அத்தகைய திரைப்படங்களில் அடிநாதமாக பெரும்பாலும் இருந்தது உணர்ச்சிப்பெருக்கு மட்டுமே.. இப்படி முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக அவனது மேலதீகமான உணர்ச்சி கொந்தளிப்புகளை மட்டுமே பொங்கச் செய்ததால், போலித்தனமான உணர்ச்சிகள் வடிந்துபோன வெற்றுப் பாத்திரமாக அமர்ந்திருக்கிறான் தமிழ் ரசிகன்.. அதற்காக அவன் உணர்ச்சிகளற்ற ஜடமாக மாறிவிட்டான் என்று பொருளல்ல. போலித்தனமான உணர்ச்சிகள் எதுவுமே அவனுக்குள் மனக்கிளர்ச்சியை கொடுப்பதில்லை.. வெறுப்பையே ஏற்படுத்துகிறது.. அதற்கான சமீபத்திய உதாரணம்தான் இந்த லிங்கா..

இப்படி ஒரு மிகப்பெரிய ஜனத்திரளை தன் பின்னால் ஒரு கலைஞன் வைத்திருக்கிறான் என்கின்ற எண்ணம் சந்தோசம் கொடுக்கிறது.. கூட்டம் கூட்டமாக பிள்ளை குட்டிகளை கூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வரும் பெண்கள் கூட்டத்தை ரஜினி திரைப்படங்களில் தான் பார்க்கமுடிகிறது.. ஆனால் இந்த ஜனத்திரளுக்கு கலைஞனாக அவர் என்ன கைமாறு செய்தார் என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளும் போது, வரும் வருத்தத்தையும் கோபத்தையும் தவிர்க்கமுடிவதில்லை. கலைஞனாக அவர் எல்லோரையும் சந்தோசப்படுத்தினார் என்று கூறக்கூடும்.. உண்மை.. மறுக்க முடியாத உண்மை.. எது சந்தோசம் என்றே தெரியாத ஒரு மாயமான உலகத்தில் ரசிகர்களின் கூட்டம் லயித்து இருந்த போது, ஒரு போலியான சந்தோசத்தை அவரது திரைப்படங்கள் கொடுத்தது.. இல்லையென்று சொல்லவில்லை.. அப்படி ஒரு போலியான சந்தோசத்தை பெற்றுக் கொண்ட பெருவாரியான கூட்டத்தில் நானுமொருவன்.. ஆனால் அப்படி சினிமா புனைந்து காட்டிய ஒரு வறட்சியமான, மாயமான, கற்பனைவாத உலகத்தில் இருந்து பெருவாரியான ரசிகர் பட்டாளம் வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. இன்னும் அந்த ரசிகர் கூட்டம் அதே இருட்டுக்குள் தான் இருக்கிறது என்று அவர்(ரஜினி) நம்பிக் கொண்டால் அது அவரது தவறு..


லிங்காவின் கதையைப் பற்றியே பேசாமல் சுற்றி சுற்றி வேறு எதையோ பேசுகிறேன் என்றால், கதையைப் பற்றி பேச ஒன்றுமே இல்லை என்று  தானே அர்த்தம்.. “ தண்ணீர் பஞ்சத்தால் கஷ்டப்படும் மக்களுக்கு தாத்தா அணை கட்டுகிறார்.. அந்த அணைக்கு ஒரு பிரச்சனை வரும் போது, பேரன் அணையை காப்பாற்றுகிறார்..” கதை அவ்வளவுதான்.. முழுக்க இதுவொரு புனைவுக்கதை அல்ல… தாத்தா அணை கட்டினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு… அதை பேரன் காப்பாற்றினார் என்பது புனைவு.. இப்படி யதார்த்தமான ஒரு வரலாற்று நிகழ்வைக் கூட, மாயமான ஒன்றாக மாற்றி, நம் தமிழக மக்களுக்கு தரிசிக்க கொடுப்பதில் தமிழ் இயக்குநர்கள் வல்லவர்கள்.. வரலாற்றை அப்படியே வடித்துக் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்றே தெரியவில்லை.. படம் பார்த்த எனக்கே முல்லை பெரியாறு அணையை திரு.பென்னி குயிக் அவர்கள் கட்டவில்லையோ என்று சந்தேகம் வந்து, வரலாற்றை புரட்டுகிறேன் என்றால், ஒரு சாதாரண ரஜினி ரசிகன், படத்தில் சொல்லியது தான் உண்மை, ரஜினியின் தாத்தா கட்டியது தான் அந்த அணை என்று நம்பத் தொடங்கினால் அதில் ஆச்சரியமே இல்லை.

மேலும் படத்தில் ரஜினியைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.. அவரது உடல்மொழியில் முன்பு இருந்த அந்த வேகம், சுறுசுறுப்பு, ஆளுமை என அத்தனையும் மிஸ்சிங்.. அதுவும் அவர் பாடல்களுக்கெல்லாம் நடனம் ஆடும் போதும், படுபயங்கரமாக சண்டை போடும் போதெல்லாம், இதெல்லாம் யாரை ஏமாற்ற என்ற எண்ணமே வருகிறது… ஒரு மிகப்பெரிய திரை ஆளுமையின் பிம்பங்கள் மெல்லமெல்ல சிதைந்து வருவதை லிங்காவில் இருந்து பார்க்கப் போகிறோமோ என்று பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது… ரஜினி மிகக் குறைவான காட்சிகளின் போது மட்டுமே ரஜினியாக காட்சி தருகிறார்… அது குறிப்பாக அவரது வயதுக்கு ஏற்ற பாத்திரமான அந்த சமையல்காரன் பாத்திரத்தின் போது மட்டுமே.. இது தவிர்த்து பிரிட்டிஷ் பீரியட் ரஜினியும் நம்மை கொஞ்சம் ஈர்க்கிறார்.. அது தவிர்த்து பிற எல்லா இடங்களிலும் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றம் தான்… முத்து, படையப்பா, அருணாச்சலம் என்று பல காலம் முன்பு நாம் பார்த்த அதே டெம்ப்ளட் சங்கதிகளும், அதே தாள கதியில் வந்து, நம் கதியை அதோகதி ஆக்குகிறது. இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகிறார்… ரஜினியின் திரைப்படங்களில் இப்படிப்பட்ட பாடல்களா என்று ஆச்சரியமாக இருந்தது… கோட்டைவிட்டது ரஜினியா, ஏ.ஆர்.ரஹ்மானா இல்லை கே.எஸ்.ரவிக்குமாரா என்று சந்தேகம் கிளம்புகிறது.. ரத்னவேலுவின் கேமரா, சாபு சிரிலின் செட் அலங்காரங்களை அங்கம் அங்கமாக காட்சிபடுத்தி இருக்கிறது… அந்த பிரம்மாண்டமான அணைக்கட்டின் டாப் ஆங்கிள் காட்சிகள் அதன் பின்னால் இருக்கும் தொழில் நுட்ப உத்திகளைப் பற்றி ஆச்சரியமாக கண்கள் விரியச் செய்கின்றன.. கதையின் களம் படுத்துவிடுவதால், அவர்களுக்கு அதைவிட பெரிதாக எதும் செய்து காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது..

தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, இந்திய திரையுலகிலும் ஒரு முக்கியமான ஐகானாக விளங்குபவர் ரஜினி. அவரிடம் தமிழ் திரையுலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பது ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு கலவையான வாக்கியம்.. அது இதுதான். “ வணிகத்தை, சுவாரஸ்யத்தை, புதுமையை..” இதில் வணிகத்தை எதிர்பார்ப்பவர்கள் திரைப்பட தயாரிப்பில் இருப்பவர்கள்.. சுவாரஸ்யத்தை எதிர்பார்ப்பவர்கள் ரஜினியின் மீது தீவிர ரசிக மனப்பான்மையுடன் இயங்குபவர்கள்.. புதுமையை எதிர்பார்ப்பவர்கள் சினிமாவின் மீதான தீவிர காதலுடன் இயங்குபவர்கள்.. இந்த மூன்றையுமே அவரால் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியாது என்பது நிதர்சனம்… ஆனால் இந்த மூன்று பிரிவுகளுக்கு இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தை அவர் புரிந்து கொண்டால், அப்படி ஒரு அதிசயம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு… வணிகமும் சுவாரஸ்யமும் கூட்டணி போட்டுக் கொண்ட காலத்தில் இருந்து, காலம் உருண்டு வந்து சுவாரஸ்யமும் புதுமையும் கூட்டணி போட்டுக் கொள்ளும் காலத்தில் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. புதுமைக்கும் சுவாரஸ்யத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. ஏற்கனவே நீங்கள் உங்கள் திரைப்படத்தில் காட்டிவந்த சுவாரஸ்யம் எல்லாம், பழமையாக போய்விட்டது.. நீங்கள் புதுமையான சுவாரஸ்யத்தை நோக்கி, அதாவது புதுமையை நோக்கி நகர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வணிகத்தை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.. ஏனென்றால் வணிகத்தை விரும்புபவர்கள் மட்டுமே அந்த மிகச்சிறிய வணிகப் பிரிவுக்குள் இயங்குபவர்கள்… ஆனால் அந்த வணிகத்தை சாத்தியப்படுத்துபவர்கள், தீர்மானிப்பவர்கள் புதுமையையும், சுவாரஸ்யத்தையும் (புதுமையான சுவாரஸ்யத்தை) விரும்பும் பெருவாரியான ரசிகர் பட்டாளம் தான்… இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால், பழைய அளவுப்படி தைத்த சட்டைக்குள் உங்கள் உடலைத் திணித்துக் கொண்டு, புதிதாக வந்திருக்கிறேன் என்று எங்களை மீண்டும் ஏமாற்ற எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறோம்…

இந்த விமர்சனத்தைப் பற்றி எழுதும் போது இரண்டு பேட்டிகள் நினைவுக்கு வருகிறது… ஒன்று இந்த திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அவர்கள் விகடனுக்கு கொடுத்த பேட்டி.. அதில் சொல்லி இருப்பார்.. “ ரஜினி அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவரை 10 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் போதும் என்று சொல்லிவிட்டேன், ஆனாலும் அவர் 9 மணிக்கே வந்துவிடுவார்..” என்று சொல்லியிருந்தார்.. அவரிடம் ஒரு கேள்வி. உங்களுக்கு மட்டும்தான் ரஜினியின் உடல்நிலை பற்றித் தெரியுமா…? அவரது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன..?? அந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு, படத்தில் வருவது போன்ற க்ளைமாக்ஸ் காட்சியில் அவரால் எப்படி நடிக்க முடியும் என்று எண்ணும் போதே ரசிகர்கள் சிரித்துவிடக் கூடும் என்றுகூடவா உங்களுக்கு தோன்றாமல் போய்விட்டது… எப்படி உங்களது கற்பனையில் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி உதித்தது.. படப்பிடிப்பு தளத்தில் அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு இயங்கிய நீங்கள், திரைக்கதையிலும் அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு இயங்கி, இயக்கி, இருந்தால் லிங்காவிற்கு இந்த நிலை வந்திருக்காது…

இரண்டாவது பேட்டி, பாலிவுட் இயக்குநர் பால்கியிடம் விகடன் கேட்டது.. ரஜினியை இயக்குவது பற்றி அவர் கூற, ரஜினி மசாலா படங்களில் தானே நடிப்பார் என்று விகடன் மடக்க.. அதற்கு அவரது மறுமொழி இது.. “ அவரை இன்ச் இன்சா ரசிக்கிற ரசிகர்களை எப்படித் திருப்திப்படுத்தணும், அவுங்க மூடுக்கு ஏத்த மாதிரி எப்படி அவுங்களை விசிலடிக்க வைக்கணும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.. எவ்வளவோ உணர்ச்சிபூர்வமான சினிமா பாக்குறோம்.. அதுக்கு நடுவுல ஜாலியா ஒரு ரஜினிபடம் பாக்கலாமே… ஒரு ரஜினியை உருவாக்க இத்தனை வருசம் ஆயிருச்சே… அவரை ஏன் மாத்தணும்..??” இதைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது இதுதான்.. ”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்.. ஆனால் அது ரசிகர்கள் தங்கள் ரசனையில் மாறாமல் அதே நிலையில் இருக்கும் போது.. இப்போது அவர்கள் கொஞ்சமேனும் மாறிவிட்டார்கள்.. எங்கள் தமிழ் ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட மனப்பக்குவத்தை உருவாக்க எங்களுக்கும் இத்தனை வருசம் ஆகிருச்சே… அவுங்கள ஏன் மறுபடி மாத்தணும்.. அந்த அஞ்சு கோடி மக்கள மாத்துறதுக்கு, ஒத்த ஆள் ரஜினி.. அவரை மாறச் சொல்லிரலாமே…!!!??” என்பதுதான்..

படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்கின்ற வார்த்தை எந்த ரஜினி ரசிகனையும் படம் பார்க்காமல் தடுத்துவிட முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எனது பார்வையில்…


லிங்கா (கூட்டத்தைப் பார்க்கும் போது) வெற்றிபெற்ற ரஜினியையும், தோற்றுப் போன ரஜினி திரைப்படத்தையும் பார்க்கின்ற அனுபவம்..

1 comment:

  1. //”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்.. ஆனால் அது ரசிகர்கள் தங்கள் ரசனையில் மாறாமல் அதே நிலையில் இருக்கும் போது.. இப்போது அவர்கள் கொஞ்சமேனும் மாறிவிட்டார்கள்.. எங்கள் தமிழ் ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட மனப்பக்குவத்தை உருவாக்க எங்களுக்கும் இத்தனை வருசம் ஆகிருச்சே… அவுங்கள ஏன் மறுபடி மாத்தணும்.. அந்த அஞ்சு கோடி மக்கள மாத்துறதுக்கு, ஒத்த ஆள் ரஜினி.. அவரை மாறச் சொல்லிரலாமே…!!!??” என்பதுதான்..//

    Super punch!

    ReplyDelete